’டெண்ட்’ அடிச்சு தூங்காதீங்க! – நானா

ஹமீது ஜாஃபர்நானா எதும் எழுதலையா? அப்டீன்னு முன்கர் நக்கிர் வந்து கேள்வி கேட்கிறாராம், எதாவது எழுதுனீங்களான்னு ரெண்டுதடவை கேட்டுபுட்டார் ஆபிதீன். எழுதற மூடு இல்லைங்கன்னு சொன்னேன். சரி சரி மெதுவா எழுதுங்கன்னு வேண்டாத குறையா சொன்னார். உண்மையிலேயே மூடு வரமாட்டேங்குது. ஊர் மண்ணை மோந்தால்தான் வரும்போல இருக்கு. அதனாலெ innocent வஹாபு ’டெண்ட்’  அடிச்சதை எழுதியிருக்கேன். கொஞ்சம் போர் அடிக்கும். பதியிறது ஆபிதீன் தலை எழுத்து; படிக்கிறது உங்க தலை எழுத்து.

இனிக்கும் பழமை…!

அப்பவும் சரி, இப்பவும் சரி, எப்பவும் சரி கிராமத்து வாழ்க்கைதான் என்னை பொருத்தவரை பிடிக்கும். ஏன்னா அந்த மக்களுடைய கபடமில்லாத பேச்சு, எல்லோரிடமும் இருக்கும் ஒற்றுமை, மரியாதை இதெல்லாம் எனக்குப் பிடிக்கும். அதல்லாமல் அந்த இயற்கையான சூழல், சுத்தமான காற்று, இரைச்சலில்லாத அமைதி இதுவும் பிடிக்கும். இப்போது…..? அல்லாஹூ அஃலம்.

குளத்தடியிலேயோ அல்லது ஆற்றாங்கரையிலேயோ மர நிழலில் துண்டை விரிச்சுப் படுத்துக்கொண்டு குளுமையான காற்றை சுவாசித்துக்கொண்டு மரத்தின் கிளைகளையும் இலைகளையும் பார்க்கும்போது சின்னச் சின்ன குருவிகள், மைனாக்கள் பறந்து வந்து அமர்ந்து அவைகள் கொஞ்சிக் குலாவுவதும், சவுந்தர்ய சண்டை இட்டுக்கொள்வதும், அணில்கள்  ஒன்றையொன்று துரத்திக்கொண்டு கிளைக்குக் கிளை பாய்வதும், அவை கொஞ்சிக்கொண்டு முத்தமிட்டுக் கொள்வதும், காக்கா மேல் கிளையில் அமர்ந்துக்கொண்டு ப்ளிச்ண்டு ’யே’ இடும்போது நம்மீது படாமல் ஒதுங்கிக்கொள்வதும், ஆஹா………. அந்த இன்பமே அலாதி..!

குளக்கரையில் மர நிழலில் கெண்டை குஞ்சுகள் ஆயிரக்கணக்கில் மேய்ந்துக்கொண்டிருக்கும்போது ஒரு ஆபத்து வந்தால் பட்டென்று ஒரு U டர்ன், பட்டென்று ஒரு லெஃப்ட் டர்ன், ஒரு ரைட் டர்ன் – ஒரு செகண்ட் வித்தியாசம் இல்லாமல் எல்லாம் சொல்லிவச்ச மாதிரி திரும்பி மறைந்து மீண்டும் காட்சி அளிப்பது…. அவைகளுக்குள் அந்த synchronization, அந்த communication அவிழ்க்க முடியாத புதிராக இருக்கிறது.

காலங்காலமாக நடந்துவரும் இந்நிகழ்வுகள், எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுவதில்லை. ஆனால் உலகத்திலேயே மிகப் பெரிய இன்பம் என்று சொல்லக்கூடிய ‘அதை’ நாலு தடவை தொடர்ந்தால் ‘ச்சீ’ என்றாகிவிடுகிறது! இது பொதுவானது. என்றாலும் அமைதியைச் சுவைப்பதும், இரைச்சலில் வாழ்வதும், பகலை இரவாக்குவதும் இரவை உயிர்ப்பிப்பதும் அவரவர் மனப்பான்மை. ஆகவே எதுவும் எதற்கும் உயர்ந்ததுமல்ல அல்லது தாழ்ந்ததுமல்ல.

மா. தென்னைத் தோப்புகளும், நெல் கழனிகளும் நிறைந்த பகுதிக்குச் சென்றால் அதன் சூழலே வேறு மாதிரியாக இருக்கும். சுற்றிலும் தென்னை மரங்கள் அல்லது மா மரங்கள் நடுவிலோ அல்லது ஒரு மூலையிலோ பொய்கை; தூரத்தே நெல் வயல்கள்; அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களைக் கொண்டுவந்து போரடிக்க தோப்புக்குள்ளேயே கலத்து மேடு, கலத்து மேட்டை ஒட்டி சிறிய பங்களா போன்ற குடில்; அந்த குடிலுக்குப் பக்கத்தில் தோப்பை பராமரிப்பாளரின் குடிசை.

இப்படிப்பட்ட இடங்களில் மர நிழலில் அமர்ந்து தென்றல் காற்றை சுவாசித்தவாறே மரத்திலிருந்து பறித்த இளநீரை அருந்தும்போது ஏற்படும் இன்பம்…ஆகா இன்னும் மறக்க முடியவில்லை.

என்னதான் அடுக்குமாடி கட்டி, கிரானைட் / மார்பிள் அல்லது பளபளக்கும் செராமிக் டைல்ஸ் போட்டு ஏசி வைத்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்தாலும் தென்னை ஓலையினால் வேயப்பட்ட மண்குடிசை வீட்டில் வசிக்கும் சுகம் வராது. எவ்வளவுதான் வெயில் அடித்தாலும் வெயிலின் வெம்மை உள்ளே இருக்காது என்னதான் குளிர் வெளியில் இருந்தாலும் உள்ளே குளிரும் இருக்காது. அதேபோல் மண் பானை சமையலின் ருசி இப்போதுள்ள ’நான்ஸ்டிக்’ சமையலில் கிடைக்குமா?

கோடை காலத்தில் தோப்புகளில் வாசமும், மழை காலத்தில் கொக்கு, மடையான் வேட்டையிலும் பொழுதைக் கழிப்பவனுக்கு எப்படி சுகமாக அமையும் நகர வாழ்க்கை? முற்றிலுமே மாறுபட்ட இயந்திரகதியான பெரு நகரத்தின் வாழ்க்கை அமைந்தது எனக்கு. ஆம் மதுரையில் வேலை. அதுவும் நகரத்தில் மிக பிஸியாக இருக்கும் கீழ மாசி வீதியில்.  சோம்பேறித்தனமான கிராம வாழ்க்கையிலிருந்து சுறுசுறுப்பான நகர வாழ்க்கைக்கு வருவதற்கு சில நாட்கள் பிடித்தாலும் அதை பொருத்திக்கொண்டேன்.

பள்ளப்பட்டி ஹாஜியார் கடை. ஜவுளி மொத்த வியாபாரம். காலை எட்டு மணிக்குப் போனால் இரவு ஒன்பது மணிக்குதான் வீடு திரும்பணும். இடையில் லுஹருக்குப் பிறகு சாப்பாடு. சாப்பிட்ட பிறகு உடனே கடைக்கு வந்துவிட வேண்டும். இது எங்களுக்கு மட்டுமல்ல ஹாஜியாரும் அப்படித்தான். காலையில் வந்தால் இரவு கடை அடைத்த பிறகுதான் வீடு திரும்புவார். என்ன ஒரே கண்டிஷன் , தொப்பி போட்டுக்கொள்ள வேண்டும், ஐந்து வேளையும் தொழ வேண்டும். அந்த வேலை ஜாலியாதான் இருந்தது. இருந்தது என்பதைவிட ஜாலியாக மாற்றிக்கொண்டேன்.  அதுகளின் தலையில் சூடியிருக்கும் அந்த மதுரை குண்டு மல்லிகையின் சுகந்தத்தை மோப்பம் பிடிப்பதற்காகவே தொழுகையை கட் பண்ணிவிட்டு கோவில் வரை போவதும் ஒரு ஜாலி. பேசிக்கிட்டுப் போனா இன்னும் ஜாலி.

என் கூட வேலை செய்தவர்களில் மறக்க முடியாதவர்கள் பலர் இருந்தாலும் பிடித்தவர்கள் இரண்டுபேர். ஒருவர் மேலப்பாளையம் அப்துல் காதர், ஆடிட்டர் முதல் இன்கம் டாக்ஸ்காரர்கள் வரை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கணக்கில் விளையாடுவதில் வில்லன். மகா எத்தன். நான் தற்காலிக கேஷியரா இருந்தபோது ஒரு முறை என்னிடம் மாட்டிக்கொண்டதிலிருந்து கம்பெனி கணக்கில் பன் பால் வாங்கிக்கொடுத்தே சமாளித்த நண்பர். என்னைவிட இருபத்தைந்து வயசு மூத்தவர், இளமை முதலே கல்கத்தாவில் இருந்தவர். பெரிய குடும்பம், பல முறை அவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன்.

மற்றவர் முஹம்மது முஸ்தபா, பரமக்குடிக்காரர் அப்போதே அறுபது வயது இருக்கும். பெரிய மனிதர், சாந்தமானவர், பர்மா சஃபர், எல்லாம் போனபிறகு ஹாஜியாரிடம் மாட்டிக்கொண்டார். அவரிடம் எனக்குப் பிடித்தது கோபமே வராத குணம். ஆனால் நல்ல பாடகர், தியாகராஜ பாகவதர் பாடல்கள் அனைத்தும் மனப்பாடம், அவர் பாடினால் MKT தான் பாடுகிறார் என்றுதான் சொல்வார்கள், அதே குரல், அதே நயம், அதே லயம். ஒரு முறை ரசூலுல்லாஹ் பேரால் கீர்த்தனைப் பாடி எங்களை அசத்திவிட்டார். சங்கீதம் என்னவென்றே தெரியாத அந்த வயதில் கேட்ட அவர் குரல் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

எங்க கடை ஞாயிற்று கிழமை அரை பள்ளிக்கூடம்தான். பகல் வரை திறந்திருக்கும். எவனாவது ஒரு கிராமத்துக் காட்டான் ஜவுளி எடுத்துக்கொண்டுபோவான். இந்த மாதிரி கிராக்கிகளுக்காகவே ஹாஜியார் கடையை திறக்கச் சொல்வார்.  சாயந்திரம் யாராவது துணை இருந்தால் சினிமா , இல்லாவிட்டால் பஸ்ஸைப் பிடித்து திருப்பரங்குன்றம் – சிக்கந்தர் மலைக்குச் சென்று குறைந்தது ஒரு மணி நேரமாவது தங்கிவிட்டு வருவேன். ஏன் தங்கினேன்? எதற்காக என்ற கேள்விக்கு விடை தெரியாமலே தங்கினேன். எதோ ஒன்று என்னை இழுத்துச் சென்றது.

ஹாஜியாருக்கு ஒரு சூட்கேஸ் ஃபாக்டரி உண்டு. அங்கே வேலை செய்பவர்கள் சிலர் அங்கேயே தங்குவார்கள். ஃபக்டரிக்கு அலீம் என்பவர் இன்சார்ஜ், வஹாபு ஸ்டோர் கீப்பர், நல்ல பலசாலி. கனமான ப்ளாஸ்டிக் ரோல்களை அனாயசமா தூக்குபவர். நான் சில நாட்கள் அங்கு பொழுதைக் கழித்தேன்.

ஒரு நாள் சுபுஹு தொழுதுவிட்டு ஹாஜியார் வாக்கிங் வந்தவர் ஃபாக்டரிக்கு வந்தார். சும்மா சொல்லக்கூடாது வஹாபு கொஞ்சம் நீளமான ஆசாமிதான். முழுசா இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்குவதைப் பார்த்துவிட்டு, “யப்பா…,யப்பா…யப்பா, யாருப்பா டெண்ட் அடிச்சு தூங்கிக்கிட்டிருக்கிறது? எளுப்பு, எளுப்பு.. காலங்காத்தாலெ ’அதுட’ முகத்துலெ….” அப்டீன்னுகிட்டே திரும்பினார். இதை கேட்ட அலீம் ஓடிப்போய் ஒரே அமுக்கு கோழிக்குஞ்சை அமுக்குவதுபோல அமுக்க வஹாபு அலறியடிக்க , போன ஹாஜியார் திரும்பி என்னப்பான்னு பதற , ஒன்னுமில்லெ அலீமு வஹாபை எளுப்பி விட்டார்னு சொன்னேன். இப்போது அந்த டெண்ட் வஹாபு எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.

மதுரையில் இருக்கும்போதுதான் தென் தமிழத்தில் அனேக இடங்களுக்கும் கேரளாவில் கோட்டயம் வரையுள்ள ஹைரேஞ்சு பக்கம் சுற்றுவதற்கு வாய்ப்பு நிறைய கிடைத்தது. கம்பத்திலிருந்து மேலே போனால் குமுளி, தேக்கடி, வண்டிப் பெரியார், பீர்மேடு, முண்டக்காயம் இப்படி பல ஊர்கள், வண்டிப் பெரியார், பீர்மேடு, கட்டப்பனெ இங்கேதான் டீ எஸ்டேட்டுக்கள் அதிகம், பசுமை மாறாத தேயிலை செடிகளும் சிலு சிலுவென வீசும் குளிர்ந்த காற்றும் அந்த இடத்தை விட்டுப் பிரிய மனம் வராது. எங்கு பார்த்தாலும் பச்சைப் படர்ந்திருக்கும் மலைகள், தேயிலைப் பறிக்க வரிசை வரிசையாக செல்லும் பெண்கள், நடுங்கும் குளிரில் போர்த்திகொண்டு டீ யை உறிஞ்சிக்கொண்டே புகைக்கும் முதியவர்கள், ஸ்கூல் செல்வதற்காக யுனிஃபார்மில் பஸ்ஸுக்கு நிற்கும் சிறுவர்கள் கூடவே சிறுமிகள், கடைத்தெரு தவிர மற்ற இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வீடுகள், இப்படி இயற்கையை அனுபவிக்கும் வாய்ப்பு அமைந்தது உண்மையிலே நான் கொடுத்து வைத்தவன் என்றே நினைத்தேன்.

ஒரு முறை கட்டப்பனெக்கு சென்ற நான் இரவாகி விட்டதால் திரும்ப பஸ் கிடையாது எனவே இரவு அங்கேயே தங்கவேண்டியதாகி விட்டது. ஜனவரி மாதம் நல்ல குளிர். தங்கியது எங்க வாடிக்கைக்காரர் கடை/வீடு. கடைக்காரர் சொன்னார், “தம்பி ராத்திரிலெ நல்ல குளிரா இருக்கும் ரெண்டுமூணு போர்வை போத்திக்கிட்டு படுங்க, காலையிலெ குளிக்கிறதா இருந்தா பக்கத்துலெ பம்பை ஆறு ஓடுது வெயில் வர்ரதுக்கு முந்தி குளிச்சுடுங்க தண்ணி சூடா இருக்கும்; சூரியன் வந்துடுச்சுன்னா தண்ணி ஜில்லின்னு ஆயிடும் குளிக்க முடியாது. வெளியெ போறதா இருந்தாலும் தேயிலை தோட்டப் பக்கம்தான்” அப்டீன்னார். அவர் சொன்னபடிதான் நல்ல குளிரு, காலையிலேயே அஞ்சு அஞ்சரை மணிக்கு எளுப்பி வுட்டுடுச்சு வயிறு. தேயிலை செடிக்கு எரு – ஓரு செடியெ புடிச்சிக்கிட்டு உட்காந்துட்டேன். வைகறை நேரம்,  நான் இருப்பது தெரியாமெ ரெண்டு செடிக்கு எதுத்தாப்லெ ஒரு பொ……. நான் சரேள்னு எந்திரிக்க அது மலையாளத்துலெ எதோ சுப்ரபாதம் சொன்னுச்சு எனக்கு புரியலெ, நிச்சயமா வாழ்த்தாதான் இருக்கும்.

நோன்பு, பெருநாள் எல்லாம் அங்கேதான். ஹாஜியாருக்கு ரொம்ப நல்ல மனசு, பெருநாளான்று அவர் வீட்டில்தான் எல்லோருக்கும் சாப்பாடு. Baghair Ghoshth Briyani அதாவது பிரியாணி, அதுலெ கறியை தேடணும். கெடச்சுதுன்னா அவன் அதிர்ஷ்டம். அறிவாளி படத்துலெதான் தங்கவேலு முத்துலட்சுமியெ பார்த்து சொல்வார், “நேத்து போட்டியே மசாலாதோசை, தோசைதான் இருந்துச்சு மசாலாவை எவனோ லாவிக்கிட்டு போயிட்டான்”னு அப்படித்தான் அங்கேயும் கறியெ எவனோ லாவிட்டான். ஊர்லெ இருக்கும்போது பெருநாளை சினிமா கொட்டகையில் விட்ட நான் அங்கே மீனாட்சி அம்மன் கோயில்லெ விடுவேன்.

இரண்டு வருடங்கள் ஒரு வகையான ஜாலி லைஃபை அனுபவிச்சுட்டு புண்ணியபூமி, நிறைய சம்பாதிக்கலாம் என்ற கற்பனையோடு அரபு நாட்டில் காலடி எடுத்து வச்சேன். இது நரகமா சொர்கமா இல்லை நரகத்தின் சொர்க்கமா என்று தெரியாமலே இன்று வரை வண்டிஓடிக்கிட்டிருக்கிது. புண்ணியமாவது கிடைக்குமான்னு தேடித்தேடிப் பாக்கிறேன், கெடைக்கலை. யார் கண்ணிலாவது பட்டுச்சுன்னா சொல்லுங்க.

manjaijaffer@gmail.com

***

நன்றி : டெண்ட் அடித்த டெர்ரரிஸ்ட்டுக்கு! இவருடைய ‘ஊ(ஞ்)சலாடும் இளமை’யையும் அவசியம் பார்க்கவும். அறுவது வயசு தாண்டியும் அப்படி ஆடுது!

5 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  10/05/2011 இல் 11:48

  பிரமாதம்.
  மெச்ச தகுந்த சொல் கிட்டவில்லை.
  கிடைத்திருந்தால்
  இன்னும் இன்னும் எழுதியிருப்பேன்.
  -தாஜ்

 2. மஜீத் said,

  10/05/2011 இல் 14:46

  ‘தேரா’வுல கிடைக்காத புண்ணியமா?
  அதுதான் ராத்திரிபூரா பலரூபத்துல அலயுதே?
  எல்லாத்தையும் புடிக்கிறீங்க, புண்ணியத்தையும்
  புடிச்சிறலாம் நானா!
  ரொம்ப நல்லாருக்கு உங்க டெண்ட்.

 3. 10/05/2011 இல் 19:03

  ஆபிதீன்.. ஆசைக்கும் வயசுக்கும் சம்மந்தமில்லை. அது ஒரு பக்கம் கூடும் இது ஒரு பக்கம் கூடும். ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது அல்ல. அதனாலெத்தான் அந்த பக்கம் மட்டும் போயிடாதீங்கன்னு நம்ம மூத்த அப்பாவுக்கு அல்லா one forty four போட்டு வச்சிருந்தான். ஷைத்தான் அதெ ஒடைக்க வச்சுட்டான். அஹ பண்ணின தப்புக்கு நாம அவதிப்பட்டுக்கிட்டிருக்கோம்.

  • தாஜ் said,

   10/05/2011 இல் 20:48

   அப்போ சைத்தான்தான்
   நம்மத் தலைவரு!

   பாருங்க மக்களா…
   தப்பை இவங்க செய்வாங்களாம்.
   அதுக்கு காரணம் சைத்தானாம்!
   எப்படியெல்லாம்
   கதை போறதுப் பாருங்க!
   -தாஜ்

   • abedheen said,

    11/05/2011 இல் 12:14

    //அப்போ சைத்தான்தான் நம்மத் தலைவரு // ஆமாங்யா, நீதான் தலைவரு!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s