‘பாவிமட்டை, இப்படி எழுதிவிட்டாரே!’ – கி.ரா

அன்புடன்
வாசகர்களுக்கு….

உங்களுக்கு
கி.ரா.வைப் பற்றிய அறிமுகம்
தேவை இருக்காது.

அவரை அறியாத வாசகர்கள்
இலக்கியம் அறிய வருகிறேன்
என்று வருவதும் வீண்!

‘தேவாமிருதம்’ என்று
புராணக்கதைகளில்
நீங்கள் வாசித்து உணர்ந்திருக்கக் கூடும்.
அப்படி ஒன்றை
நவீன தமிழ் இலக்கியத்தில்
நான் உணர்ந்திருக்கிறேன்.
அது….
பெரியவர் ‘கி.ரா.’வின் எழுத்து!

இடதுசாரித் தோழரும்-
முற்போக்கு இலக்கியத்தின்
போஷகரும்-
’தாமரை’ இதழின்
ஆசிரியராகவும் இருந்த-
திரு.தி.க.சி.யைப் பற்றி
கி.ரா. எழுதிய கட்டுரை ஒன்றை
பழைய தீராநதியில் (மார்ச்-2005) வாசித்தேன்!

அந்தக் கட்டுரையின்
பிற்பாதியை மட்டுமே
தட்டச்சு செய்து தந்திருக்கிறேன்.

கட்டுரையின் முதல் பாதி
தி.க.சி.யின்
இனிமைகளையும் பெருமைகளையும்
தீரப் பேசுகிறது.
அதில் யாருக்கும்
இரண்டு கருத்து இருக்க முடியாது.

வாழ்வை இயக்கத்திற்காகச் செலவிட்ட
தன்னலம் கருதாதவர்களின்
கையடக்கமான ஓர் சின்னப் பட்டியலில்
தி.க.சி. உண்டு!

பிற்பகுதி
தி.க.சி.யோடு
கி.ரா.
இலக்கியப் பிணக்கு கொள்ளும்
வளமான பகுதி.
ரசனை கொண்ட அதனையே
இங்கே தட்டச்சு செய்திருக்கிறேன்.

தவிர,
அந்தப் பகுதியை தட்டச்சு செய்து
வாசகர்கள் முன்வைக்க நினைத்ததில்
வேறு ஒரு சுவாரசியமான சங்கதியும் உண்டு.

கி.ரா. தனது கதையொன்றில்
‘உயிர்த்தலம்’ என்கிற
வார்த்தையை உபயோகிக்க
அதனை…
ஆபாசம் என்றிருக்கிறார் தி.க.சி.
இல்லையெனப் பிணங்குகிறார் கி.ரா.

நம்ம ஆபிதீன் எழுதிய
கதையொன்றின் பெயர் ‘உயிர்த்தலம்‘ !
அந்தப் பெயரை தாங்கி வந்த
அவரது அந்தத் தொகுப்பும்
விற்றுத் தீர்ந்து
அவர் ’ராயல்டி’யும் வாங்கிவிட்டார்!

இப்போ.
விசயத்திற்குப் போவோம்.

ஆபிதீன்..
வாசகர்கள் கேட்பது விழுகிறதா?

“உயிர்த்தலம் எழுதிய அண்ணாச்சி….
ஆபாசத்திற்கு பதில் என்னாச்சி….?”

*
 கநாசு. தாஜ் 

***

‘உயிர்த்தலம்’ என்பது ஆபாசமா?

 கி. ராஜநாராயணன்
தாமரை இதழுக்கு தி.க.சி. பொறுப்பாக இருந்தபோது என்னோடு இவருக்கு ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆரம்பம் இப்படித் தொடங்கியது.

எதிர்வரும் – குறிப்பிட்ட மாதத்தின் – தாமரை இதழை சிறந்த சிறுகதைகள் கொண்ட மலராகக் கொண்டுவரப் போவதாகவும்,பேர் சொல்லும்படியாக வித்தியாசமான ஒரு அருமையான சிறுகதை ஒன்றை எழுதி அனுப்ப வேண்டும் என்றும்

எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

எனக்கு உள்ள வழக்கப்படி, கேட்டதுக்குப் பிறகுதான் யோசித்துக் கதை எழுத உட்காருகிறது. வித்தியாசமான, பெயர்சொல்லும்படியாகவா இருக்கணும், சரி; என்று ரொம்பவும் யோசித்து ஒரு கதை எழுத ஆரம்பித்தேன். எதிர்ப்பார்த்ததுக்கும்

மேலாகவே வித்தியாசமான கதையாகவே அமைந்துவிட்டது. ‘பேதை’ என்று தலைப்பிட்டு தி.க.சி.க்கு அனுப்பி விட்டேன்.

வழக்கமாக அவரிடமிருந்து பாராட்டி அல்லவா கடிதம் வரணும். “ரொம்பவும் ஆபாசம்” என்று சொல்லி, “ஆணின் உயிர்த்தலத்தை ஒரு பெண் பிடித்தாள் என்று எழுதியிருக்கிறீர்களே; என்ன இது?” என்று எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

பாவிமட்டை, இப்படி எழுதிவிட்டாரே என்று திகைத்துப் போனேன். சோர்ந்து உட்கார்ந்துவிட்டேன். ரெண்டு மூணுநாட்கள் கழித்து அவருக்கு பதில் எழுதினேன்.

‘உயிர்த்தலம்’ என்பது ஆபாசமான சொல் இல்லை. ஆண்களும் பெண்களும் கூடியிருக்கும் ஒரு சபையில் சொல்லப்படும் பொதுவான வார்த்தைதான். “பிள்ளைக்கு உயிர்த்தலத்தில் பலமான அடிப்பட்டிருக்கு” என்பார்கள். அதோடு, கதையில் வரும் அந்த இளவட்டத்தை – நில வெளிச்சத்தில் தூங்கிக் கொண்டிருந்தவனைக் கொல்வதற்காகவே பிடிக்கிறாள் என்று சமாதானம் சொல்லி, கதையில் ஆபாசம் என்று எதுவும் இல்லை என்று பதில் எழுதினேன்.

அவர் தனது மறுகடிதத்தில், ‘இது ஆபாசமேதான்; வேண்டுமென்றால் பேரா.நா.வானமாமலை, அட்வகேட் என்.டி.வானமாமலை, சாந்தி இதழின் ஆசிரியர் எள்.ஏ.முருகானந்தம் இவர்கள் மூவர் கொண்ட கமிட்டியில் வைத்துக் கருத்துக் கேட்போம். அவர்கள் இதை ஆபாசம்தான் என்று சொல்லிவிட்டால், பிறகாவது நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? என்று கேட்டு எழுதியிருந்தார்.

இதை எப்படி நிரூபணம் பண்ணுகிறது. ‘கமிட்டி’ என்று வந்துவிட்டால் எனக்கு நீதி கிடைக்காது என்று என் புத்தி சொல்லியது. வேறு முறையில்தான் இதை  அணுகவேண்டும் என்று நினைத்து, கதையின் கையெழுத்துப் பிரதியை எடுத்துக் கொண்டு நேராக அதிகாலை நேரத்திலேயே பாளையங்கோட்டை ராமசாமி கோவில் தெருவில் இருந்த அட்வகேட் வானமாமலையிடம் போய் நின்றேன்.

”என்ன, காலம்பற இவ்வளவு சீக்கிரம்!” என்று கேட்டுக் கொண்டே என்னையும் உட்காரச்சொல்லி எதிரே அவரும் உட்கார்ந்தார்.

“ஒரு கதை எழுதினேன்; இதைப் படிச்சுப் பார்த்து நீங்க அபிப்ராயம் சொல்லணும்” என்று அவரிடம் தந்தேன். சந்தோசமாக வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு, ’நல்லா இருக்கு; வித்தியாசமா எழுதியிருக்கீங்க’ என்றார். ’நல்லா இருக்குங்கிறது இருக்கட்டும். கதையில் ஆபாசம் என்று ஏதாவது தெரியுதா?”

அட்வகேட் கொஞ்சம் உஷாரானார்.

“இப்படி ஒரு கருத்தை யாராவது தெரிவிச்சாங்களா?” என்று கேட்டுவுட்டு திரும்பவும் கவனமாகப் படித்துப் பார்த்துவிட்டு, “ஆபாசம்ன்னு சொல்ல முடியாது; கொஞ்சம் அருவருப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம். பசி தாங்காமல், சுடுகாட்டில் வெந்த பிணத்தின் மாமிசத்தைத் தின்பதைப் படிக்கிறப்ப….” என்றார்.

“சரி போயிட்டுவர்றேம்” என்று சொல்லிவிட்டு, திரௌபதி அம்மன் கோயில் தெருவுக்குப் போனேன். “அட” என்று சொல்லி நா.வனமாமலை வரவேற்றார். ’ராத்திரியே வந்திட்டீங்களா?’ என்று கேட்டார்.

“இந்தக் கதையை வாசித்துப் பாருங்க” என்று தந்தேன்.

சிகரெட்டைக் கடேசியாக ஒரு இழுப்பு இழுத்தார். (ரொம்ப அனுபவிச்சிக் குடிப்பார்) வீசிவிட்டு, கதையைப் படிக்க ஆரம்பித்தார்.

அவருடைய கருவிழிகள் இடதும் வலதுமாக தறியில் ‘ஓடம்’ ஓடுவது போல வேகமாக இயங்கிக் கதையை படிக்க ஆரம்பித்தார்.

“ரொம்ப வித்தியாசமா இருக்கு; வழக்கமான உங்க கதையில்லெ” என்று சொல்லிவிட்டு, சில இடங்களை மறுபடியும் வாசித்தார். என்ன வித்தியாசம்? என்று கேட்டதற்கு, “தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை கயவன் ஒருவன் கற்பழிக்கும் செயலை ஆபாசமில்லாமல் கலைநயத்தோடு எழுதி இருப்பது வித்தியாசம்தானே?” (இதை நான் எதிர்பார்க்கவில்லை!) இன்னொன்றையும் சொன்னார்.

இந்தப் பேதைக்கு நேர்ந்த கொடுமைகள் எல்லாத்தையுமே, ஒன்று அல்லது இரு நபர்கள் பேரில் மட்டும் வைத்துக் காண்பிக்காததினால், காரணங்கள் அனைத்துக்குமே சமூதாயம்தான் முழுப் பொறுப்பை ஏற்க வேண்டியதிருக்கிறது என்பதுதான் சரியான பார்வையாக இருக்கும்.” (இதுவும் நான் எதிர்பார்க்காததே) “அருவருப்பு போல ஏதாவது தெரியுதா?” என்று கேட்டேன்.

“சுடலையில் எரியும் பிணங்களை இந்தக் கோட்டிக்காரி தின்பதைப் போல ஒரு காட்சி வருதே.. அதை வைத்துக் கேட்கிறீர்களா?”  என்று கேட்டு, அவரே பேசினார்.

“இடித்துரைத்தல் என்பது இலக்கியங்களில் உண்டுதானே. அந்தப் பார்வை இல்லாதவர்களுக்கு இது ஒரு அருவருப்புதான். அப்படிப் பார்த்தால், கோட்டியப்பன் என்னும் பெயருடைய சிவனைப் பற்றி நமது புராணங்களில் இப்படியானவை சொல்லியிருப்பதெல்லாம் வேறு என்ன?” என்று கேட்டார்.

எனக்கு உடனே மனக்கண்ணில் கவிராயன் எட்டயபுரத்தான் பற்களை நெறுநெறுவென்று கடித்துக் கொண்டு “பிணந்தின்னும் சாத்திரங்கள்” என்று சொல்லுவது தெரிந்தது.

பேச்சி என்ற பெண்ணை பிணம் தின்னும் அளவுக்குக் கொண்டு போனது எது?

“என் நினைவைக் கலைத்தது நா.வா.வின். குரல். இது ஒரு பெண்ணியக் கதையும் கூட” என்றார்.

(ஒரு அப்பிராணிப் பெண்ணை அநியாயமாக இப்படி ஏமாற்றிவிட்டார்களே என்று மட்டும்தான் தெரிந்தது எனக்கு)

அவரிடம் கேட்டேன்,

“உயித்தலம் என்ற சொல்லோ, அதை அவள் பிடித்தாள் என்பதோ ஆபாசமாகத் தெரிகிறதா?”

அவர் சொன்னார்:

“சொற்களும் செய்கையும் எதை விளைவிக்கிறது என்றுதான் பார்க்கவேண்டும். வாசகனிடம் இவை காமத்தைத் தூண்டவில்லை. ஒரு அச்சத்தைத் தருவதுபோல் இருக்கிறது. கதை முடிவு சோகத்தின் உச்சம்; நெஞ்சில் அறைவதுபோல” என்றார்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் அவர் சொன்ன வார்த்தைகளை என் மொழியில் இங்கே தந்திருக்கிறேன்.

‘சாந்தி’ ஆசிரியர் முருகானந்தத்தைப் பார்க்க தூத்துக்குடி போக முடியவில்லை என்பதால், விசயத்தை இதேபோல தெரிவித்து கடிதம் வைத்து அனுப்பிவிட்டே இடைசெவல் வந்து சேர்ந்தேன்.

முருகானந்தத்திடமிருந்து பதிலை எதிர்பார்த்துக்கொண்டே இருந்த எனக்கு ‘சாந்தி’ இதழ் மட்டுமே வந்தது. பிரித்துப் பார்த்தால் ‘பேதை’ கதையின் முதல்பாதி பிரசுரமாகி இருந்தது!

“என்னய்யா இப்படிச் செய்து போட்டீகளே?” என்று கேட்டதுக்கு,

“அதனாலென்ன; கதையை எல்லோரும் படிக்கட்டுமே. ஒரு விவாதமே – பட்டிமன்றம்போல – ஏற்பாடு பண்ணி அதையும் சாந்தியிலேயே போடுவோம்.” என்று சொல்லிவிட்டார்!

இப்போது விசயம் தி.க.சி.யின் கருத்து சரியா, கி.ரா.வின் கருத்து சரியா என்பதல்ல; இப்படி நடந்தது எங்கள் விசயங்கள் என்பதுதான்.

அதன்பிறகு தி.க.சி. நேராகவே இடைசெவல் வந்தார். என் கைகளைப் பற்றியதும், நாங்கள் எல்லாத்தையும் மறந்துவிட்டோம். பழைய கலகலப்பை உண்டாக்கிவிட்டார்.

அதுதான் தி.க.சி. இதுதான் கி.ரா.

நான் இதுவரை சொத்து என்று சேர்த்ததில்லை. நான் சேர்த்ததெல்லாம் நண்பர்கள் என்ற சம்பளத்தைத்தான்; இவர்கள்தான் எனது சொத்து.

வால்மீகத்தில் ஒரு சுலோகம் இருப்பதாகச் சொல்லுவார்கள்; நட்புக் கொண்டாடுவது லேசு – அதைப் பரிபாலனம் பண்ணுவது அவ்வளவு சுலபம் இல்லை.

மூத்தப்பிள்ளை என்று (எங்களுக்குள் நாங்கள்) பிரியமாக அழைத்திக் கொள்கிற நண்பர் தி.க.சி. ஒரு சுக்குபோல என்று சொல்லத் தோன்றுகிறது.

சுக்கு நாக்குக்குத்தான் காரம்; வயிற்றிற்கு இதம். சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் உண்டா?

***   
நன்றி : தீராநதி , திரு. கி.ரா ஐயா, திரு.தி.க.சி ஐயா

வடி(வமை)த்து  தட்டச்சு செய்த தாஜூக்கும் சுக்ரியா!

***

தி.க.சி பற்றிய ‘கி.ரா’வின் முழுக்கட்டுரை பார்க்க :

***

மகனார் நதீமுக்கு அம்மை போட்டிருக்கிறது (இந்த வரியை கி.ரா எழுதவில்லை!). எனவே மூட் அவுட். இருந்தாலும் நேற்று பிராமிஸ் செய்ததற்காக இன்று பதிவைப் போட்டு விட்டேன். எங்களுடைய இலக்கிய ஆர்வத்தை மதித்து எங்கிருந்தாலும் ‘பேதை’யை தட்டச்சு செய்து அனுப்புமாறு நண்பர் சென்ஷி கேட்டுக்கொள்ளப்படுகிறார். நன்றி! – ஆபிதீன்

15 பின்னூட்டங்கள்

 1. 25/04/2011 இல் 10:57

  ஆஹா.. தன்யனானேன் அண்ணா :))

 2. 25/04/2011 இல் 11:36

  தாஜ் அவர்களின் கட்டுரைகளுக்கு பதிலே இல்லாதது ”ஆபாசம்” பற்றி நம்மை சிந்திக்க வைத்திருக்கிறதா?

  இல்லை பதிலே இல்லாதது கூட ஒரு பதில் தானோ!

  அன்பு தாஜ்! உங்கள் இதயத்தின் அடித்தளத்தில் மனபரிசுத்தத்தை நாடும் ஆன்மீக தேட்டம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பது எனக்கு மிகவும் மகிழ்வை தந்தது. உங்கள் ‘பாட்டியா’வின் (பாட்டியை எங்கள் ஊரில் அப்படித் தான் அழைப்பார்கள்) துவாவில் ஆதரவு வைக்கின்றேன்.

  • 25/04/2011 இல் 12:58

   கீழே உள்ளதைப் படிக்குமுன், எனக்கும் கொஞ்சம் ஆதரவை சேத்துக்கிங்க அமீன்!

 3. 25/04/2011 இல் 12:07

  மருமகனை தேள் கொட்டிவிட, வலியில் துடிக்கும் அவருக்கு உதவும் நோக்கில் மாமியார் எங்கே எங்கே எனப்பதற, அவர் சொல்லமாட்டேனென்கிறார்.

  இப்ப சொல்லப்போறீங்களா இல்லையான்னு அதட்டவும், வலியோடு வலியாக, “அய்….. யீத்….. தே, காணாத்..தல…த்து…லேல்ல கடிச்சிருச்சு”ன்னு நடுங்கும் குரலில் சொல்ல சுற்றியிருந்த அனைவரும் ‘அவரது’ வேதனையை மறந்து சிரித்துவிட, மாமியார் இடத்தைக் காலிசெய்தாராம்.

  (என் பாட்டி அவரது சிறுவயதில் நடந்த ஒரு உண்மைச் சம்பவமாக என்னிடம்-என் சிறுவயதில்-சொல்லிச்சிரித்தது)

  ஒவ்வொரு பகுதியிலும் இப்படி சில வழக்குகள் உண்டு. உயிர்த்தலம், காணாத்தலம், குஞ்சாமணி, குஞ்சுமணி, குஞ்சு, நீர்த்தாரை, சாமான், கொஞ்சம் கேலியாக கல்யாணச்சாமான், ஐட்டம்,
  இதுபோல நிறைய…

  • 25/04/2011 இல் 12:17

   ’அதுக்குத்தானே கல்யாணமே’ என்பதால் ‘கல்யாணச்சாமான்’ என்ற வார்த்தைப் பிரயோகம் பிடித்திருக்கிறது. ஆபாசத்திற்கு பதில் சொல்லிவிட்டதாக நினைக்கிறேன்!

  • 25/04/2011 இல் 13:36

   உங்கள் நினைவில் நின்றவை இது தானா மஜீத் பாய்.. ஏன் நல்ல பாட்டியா பேரை கெடுக்குறிங்க. பாட்டியா சொன்ன நல்லதெல்லாம் force-full forgetfulness ல் மறந்துடுச்சா?.

   ‘உயிர்தலம்’ என்னும் இலை மறை காயான வார்த்தை பிரயோகம் ஒர் அழகிய சொல்லாகவே கருதுகின்றேன். கதையின் ஊடே தேவையான இடத்தில் நாசுக்காக வந்திருந்தால். அதே வார்த்தையை அண்ணாசாலையில் பேனராக வைத்தால்???

   அபிதீன் நானா கெள்வி உங்களுக்கல்ல! பொதுவாக சொல்கின்றேன்.

   • 26/04/2011 இல் 14:59

    அமீன்பாய்,

    இதில் பெயரைக் கெடுக்க ஒன்றுமில்லை. உயிர்த்தலம் என்பது இலைமறை காயான வார்த்தையில்லை.

    அது நாகரிகமான ஆண்பெண் இருக்கும் சபையில் சொல்லக்கூடிய வார்த்தைதான், என அய்யா கி.ரா. அவர்கள் சொன்னதை ஒப்புக்கொள்ளும் முகமாக ஒரு சம்பவத்தோடு சொன்னேன்.

    நான் குறிப்பிட்டிருக்கும் மற்ற வார்த்தைகளும் மரியாதையான குறியீடுகள்தான். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு வார்த்தை பிரபலம்.

    ஆபாசம் எனக்கும் பிடிக்காது!!

    பாட்டியா சொன்ன பிரமிப்புகள் எல்லாம் இருக்கு. அப்பப்ப வெளிவரும்.

    இதை அண்ணா சாலையில் பேனராக வைக்கலாம், தாராளமாக – அவசியமேற்படின்.

    எப்போதும் இருக்கும் ஆபாச போஸ்டர்களைவிட ஆபாசமாக, சிம்பு நயன்தாராவின் உதட்டைக் கவ்வி இழுத்துக் கொண்டிருக்கும் பேனர் மவுண்ட்ரோடில் இருந்தது, பல நாட்களுக்குப் பிறகுதான் எடுத்தார்கள்!

    ஆபாசம் எனக்கும் பிடிக்காது!!

    பாட்டியா சொன்ன பிரமிப்புகள் எல்லாம் இருக்கு. அப்பப்ப வெளிவரும்.

 4. தாஜ் said,

  25/04/2011 இல் 17:28

  அன்பு வாசகர்களுக்கு…

  கிராவின்
  இந்தக் கட்டுரையில்
  அவரது தார்மீக கோபம்
  கிளர்த்தெழுவதும்,

  தனது கதையில்
  வரம்பு மீறிய
  வார்த்தைகள் இருக்கிறதா என்பது அறிய
  தனது கதையைத் தூக்கிக் கொண்டு
  விடிக்காலைக்கெல்லாம்
  இடைசெவல் கிராமத்திலிருந்து
  பாளைங்கோட்டக்குப் போய்
  சந்திக்க வேண்டியவர்களைச் சந்தித்து
  அவர் நடத்தும் ஆய்வின் நுட்பம்
  அபாரமானது.
  அந்த ஆய்வில்
  அவர் எதிர்ப் பார்க்காத
  விடைகள் கிடைத்ததை
  அவர் எழுதிக் காட்டியிருக்கும்
  அழகு விசேசமானது.

  ஒரு சொல்லென்றாலும்
  சென்ஷியைத்தவிர
  மேற்கண்ட கிராவின் வளனையை
  யாரும் உள்வாங்கிக்
  கொண்டதாக தெரியவில்லை.

  இப்படியெல்லாம்
  நேரம் எடுத்துக் கொண்டு
  இலக்கிய வாசனைகளை
  உங்கள்மேல் பூசுவது…
  இலக்கியம்
  கலை ரசனைக் கொண்டது
  வாசகர்கள் உள்ளார்ந்து
  சுகந்தத்தை அனுபவிப்பார்கள்
  என்பதற்காகத்தான்!

  நமக்கு மகிழ்வைத் தருகிறேன் என்று
  வரிசைக்கட்டிவரும்
  சினிமாவும்
  பத்திரிகைகளும்
  டிவி எழவும்
  நமது மகிழ்ச்சியை
  பறித்துக் கொள்வதாக இருக்க…
  நல்ல இலக்கியம் நிச்சயம்
  சுகந்தம் தரும் என்று
  நம்பித்தான்
  ஆபிதீன் முயற்சிக்கிறார்.
  எனக்கும் அதே சிந்தைதான்.
  வாசகர்கள்
  நல்லதை ரசனைக் கொண்டு
  நுகர வேண்டாமோ!
  வாசகர்களின் கடிதங்கள்
  அதனை வெளிப்படுத்துவதாகத் தெரியவில்லை.
  மாறாய்..
  வம்புகளுக்கே குஞ்சம் கட்டுகின்றன.

  அன்பு நூருல் அமீன்
  என் பாட்டியை
  அடிக்கடி நினைவூட்டும்
  உங்களது இனம் புரியாத பாசம்
  என்னை திக்கு முக்காட வைக்கிறது.
  நன்றி!
  நான், ஆன்மீகத்தை விமர்சித்தாலும்
  அடிப்படையில் நல்லவன்.
  ஆபிதீனை கேட்டுப் பாருங்கள்!

  ஆன்மீகத்தை நீங்கள் வளர்ப்பதுக் குறித்தோ
  அது உங்களை வளர்ப்பதுக் குறித்தோ
  எனக்கு ஆட்சேபனை எழாது.
  விவாதத்திற்கு முன் வருகிறபோது மட்டுமே
  நான் என் கருத்தை
  முன்வைக்கத் தவறுவதில்லை.

  எல்லோருக்கும்
  சந்தோஷம்
  நன்றி.
  -தாஜ்

 5. 25/04/2011 இல் 17:51

  தாஜ்,

  //இலக்கியம்
  கலை ரசனைக் கொண்டது
  வாசகர்கள் உள்ளார்ந்து
  சுகந்தத்தை அனுபவிப்பார்கள்
  என்பதற்காகத்தான்!//

  அதெல்லாம் அனுபவிச்சாச்சு! (இப்பத்தான் )
  இஸ்ராயீல்ஸ் (plural) போனப்புறந்தான்,
  முழுசையும் அனுபவிச்சு, நான் எழுதலாம்.
  அதுவரை துக்கடாதான்.

  இன்னொரு ரகசியம்:
  ரொம்பப் பேரு அனுபவிக்கிறாங்க,
  எல்லாரும் எல்லா சமயத்துலயும் இங்க எழுதுறது இல்ல!

  இருந்தாலும், இப்பல்லாம் நீங்க ரொம்ப வேகம்.
  முன்னெல்லாம் மூணு நாளாகும் நீங்க திரும்பி வரவே!!

 6. ஒ.நூருல் அமீன் said,

  25/04/2011 இல் 18:21

  அன்பு தாஜ்,
  வம்புக்கு குஞ்சம் கட்டுவது எனது நோக்கமல்ல.வேண்டுமானால் அன்புக்கு தோரணம் கட்டுவேன்.
  ஆமா அது என்ன குஞ்சம் கட்டுவது என்றால் என்ன?

  தனது கதையில் வரம்பு மீறிய வார்த்தைகள் இருக்கிறதா என தேடி அழைந்த கி.ரா.வின் முயற்சியினால். எது ஆபாசம், எது வரம்பு மீறல் என்ற விளக்கத்தை யாராவது முன் வைக்க மாட்டார்களா எனத் தான் கொஞ்சம் கேள்வி எழுப்பினேன்.

  கி.ரா.வின் கோபல்ல கிராமம் எனக்கு மிகவும் பிடித்த நாவல். அவரது கடிதங்களும், கொஞ்சம் கடிதங்களும் படித்திருக்கின்றேன்.
  தி.க.சியின் திறனாய்வுகளை மிகவும் விரும்பி படிப்பேன். நீங்கள் அவற்றை சுவையுடன் நீங்கள் எடுத்துத் தருவதை நன்றியுடன் ரசிக்கின்றேன்.

  நீங்கள் அடிப்படையில் நல்லவர் என்பதை நான் மனதாற நம்புகின்றேன். ஆனால் நீங்கள்

  //ஆன்மீகத்தை நீங்கள் வளர்ப்பதுக் குறித்தோ அது உங்களை வளர்ப்பதுக் குறித்தோ எனக்கு ஆட்சேபனை எழாது.// என்று கருத்து தெரிவித்ததை பார்க்கும் போது உங்கள் பாட்டியைப் போல புகைப் போட்டு ஓதி விட தோணுகிறது. என்ன செய்வது அதையெல்லாம் நான் தெரிந்து கொள்ளவில்லையே!!!!!

  என்றென்றும் அன்புடன்,
  அமீன்

 7. நாகூர் ரூமி said,

  26/04/2011 இல் 00:20

  உயிர்த்தலம் பற்றிய வாதப் பிரதி வாதங்களைப் படித்து எழுந்தது என்…(இங்கே விடுபட்ட வார்த்தைக்கு ஆபிதீன் ’உயிர்’ கொடுப்பார்)! ‘தல புராணம்’ என்பது இதுதானோ?!

 8. தாஜ் said,

  26/04/2011 இல் 09:16

  //எழுந்தது//

  ரூமி…..
  நெஜமா சொல்றீங்க!!
  அதிஸ்டசாலிதான் நீங்கள்.
  -தாஜ்

  • 26/04/2011 இல் 09:22

   அமீன்பாய், தாஜின் பொறாமையைக் கவனியுங்கள்!

   • தாஜ் said,

    26/04/2011 இல் 10:21

    பொறாமை இல்லை ஆபிதீன்….
    சந்தோஷம்!
    கொஞ்சம் வியப்பு கலந்த சந்தோஷம்!
    அந்த பாக்கியம்
    நமக்கு கிடைச்சா என்ன?
    நண்பருக்கு கிடைச்சா என்ன?
    *

    ஆபிதீன்
    என்ன நான் இப்படி சட்டுச்சட்டுன்னு
    எழுதுறேன்னு பார்க்கிறீங்களா?
    ஊர்ல
    இந்த வருடத்து
    அக்னி நட்சத்திர வீச்சு ஆரம்பித்ததில் இருந்து
    மழையின் முகாந்திரம்!
    அப்பப்ப மழைத்தூறல்!
    ஊரெல்லாம் மோகத் திட்டு
    அழகான இருட்டு
    கோடைவாசத்தலம் தோற்கும் இதம்
    இன்றைக்குப் பாருங்கள்
    திடெலடியா
    கொட்டித்தீர்க்கிறது மழை!
    வியாபாரத்துக்கு வெளியே போகமுடியாத
    நிலை தகித்துவிட்டாலும்….
    இயற்கை
    என்னைப் பார் பார் என்று
    சாந்தப்படுத்தி
    இதமோ இதம் தருகிறது.

    யாராவது
    இலக்கியம் பேச தெரிஞ்சவங்க
    இப்பக் கிடைச்சா…
    இன்னும் சுகமா
    மழையை இன்னும் ரசித்தப்படி
    மணிக்கணக்கில
    புதுப் பிறப்பு எடுக்கலாம்!

    -தாஜ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s