ஆத்திக நாத்திக ஹம்பக் – நூருல் அமீன்

‘ஓசைகளின் மூலம் உங்களை சந்திக்கின்றேன்- என்னை வாசிக்கும் உதடுகளுக்கு நன்றியுடன்’ எனும் புல்லாங்குழல் , குளிக்கவும் சொல்கிறது கூடவே. ‘சிலருக்கு’ கஷ்டம்தான்!

***

ஆத்திக நாத்திக ஹம்பக்

முந்தைய பதிவில் வந்த மறுமொழிகளுக்கு எதிர்வினை அல்ல இது. முன்பே நான் எழுதி வைத்திருந்த , இன்னும் முழுமைபடுத்த எண்ணியிருந்த கட்டுரை. ஆனால் சிலரின் ஆன்மீக புரிதல் பற்றிய கருத்தைப் படித்ததும் , அறியாததை மறுக்கும் அறிவை/ அறியாமையைக் கண்டு அதற்கு விரிவான பதில் எழுத விரும்பினாலும், நேரமின்மையால் இப்போதைக்கு இதையாவது அனுப்பி வைப்போம் என அனுப்புகின்றேன்.

ஆத்திகம்  அல்லது ஆன்மீகம் என்பது ஹம்பக் என்கிறது ஒரு கூட்டம்.

நாத்திகம் என்பது ஹம்பக் என்கிறது ஒரு கூட்டம்.

’ஹம்பக்’ என்றால் என்ன என்று சும்மா புரியாதவர் போல் கேட்கின்றீர்களா? இந்த ஹம்பக்கெல்லாம் நம்ம கிட்ட வேணாம் சாரே!  சரி! சரி! கோபம் வேண்டாம் விஷயத்துக்கு வருவோம்.

நீங்கள் கடவுளின் இருப்பை ஏற்பவரா? மறுப்பவரா? என்ற அடிப்படை பிரச்சனையை பிறகு பார்க்கலாம். ஆத்திகரானாலும், நாத்திகரானாலும் இருவருமே பொதுவாக விரும்பும் ஒரு விசயம் ‘நல்வாழ்வு’. சற்றே விரிவாக சொன்னால் தனிமனித மற்றும் சமுதாய நல்வாழ்வு.

‘எல்லோரும் இன்புற்றிருக்கவேயல்லாது
யானொன்றும் அறியேன் பராபரமே!’ என்பது முது மொழி

இது ஆனந்த விகடனில் வரும் வாசகம் மட்டுமல்ல நம் அனைவரின் அடிப்படை தேவையும் கூட.

ஆனால் , சொல்வதற்கு வெட்கப்பட்டாலும் கூட அடிப்படையில் நாம் அனைவருமே சுய நலவாதிகள் தான். இந்த நல்வாழ்வு என்பது கூட நான், என் குடும்பம் எனது உறவு என தன்னலமாக ஆரம்பித்து ஊர், நாடு, உலகம் என பொது நலமாக விரியும் விசயம் தான். இது மனித இயற்கை. தவறல்ல!

ஆனால் , பொது நலம் அல்லது சமுதாய நலனின்றி நாம் சுயமாக நலமாய் இருக்க முடியாது என்ற இன்னொரு அடிப்படை விசயத்தை நாம் எளிதாக மறந்து விடுவது தான் ஒரு மகத்தான சோகம்.

யாருடைய தயவும் இல்லாமல் ஒரு கோப்பை தேநீர் கூட குடிக்க நம்மால் முடியாது. எனக்கு சுயமாக தேநீர் போட்டு கொள்ள தெரியுமே என அவசரப்படாதீர்கள். தேநீர் என்பது தேயிலை, பால், தண்ணீர், சீனி என்ற நான்கு பொருள்களின் கலவை.  நாமே சுயமாக தேயிலையை பயிர் செய்து, மாடுவளர்த்து பால் கறந்து, கரும்பு வளர்த்து சீனியாக்கி தண்ணீரில் கலந்து அதற்கு மேல் அடுப்பில் வைத்து சூடுபண்ணி தேநீர் தயாரித்து அருந்த வேண்டும் என்றால் ஒரு தேநீராவது அருந்த முடியுமா?

’பட்டோடு பருத்தியை பின்னி எடுத்து
உங்கள் பகட்டுக்கு புத்தாடை யார் கொடுத்தார்?
காட்டாந்தரையிலே கல்லை உடைத்து
இந்த கண்ணாடி மாளிகையை யார் படைத்தார்?’

– என்ற பழைய சினிமா பாடல் ஒன்று இங்கே எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. நம் புத்தாடையும், சுக வாழ்வும் எத்தனையோ மக்களின் நலவாழ்வை வேண்டி நிற்கிறது. ஆக பொது நலம் என்பது தவிர்க்க முடியாத நம் சுய நலம் என்பதை மறந்துவிட கூடாது.

நாத்திகம் பேசினாலும் இதைத் தான் சுயமரியாதை இயக்கங்கள் போதிக்கின்றது.

இதைத்தான் பொதுவுடமை இயக்கங்களும் போதிக்கின்றது.

ஆத்திகம் பேசும் அத்தனை மதங்களும் போதிக்கின்றன.

இயக்கங்கள், மதங்களின் இந்த நல்ல பகுதியைத்தான் நான் ஆன்மீகத்தின் அடிப்படை என்கின்றேன்.

இந்த அடிப்படை ஆன்மீகத் தன்மையை இழந்த இயக்கத்தாராலும், மதத்தாராலும் மனித இனம் ஒருவித மிருக வாழ்க்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம். இப்படிச் சொல்வதனால் எந்த மனிதரும் கோபித்துக் கொள்வாரோ என்பதை விட மிருகங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாதே என்ற கவலையும், நல்ல வேளை மிருகங்கள் என் கட்டுரைகளை படிப்பதில்லை என்ற ஆறுதலும் வருகின்றது.

ஆன்மீகம் வந்ததற்கான அடையாளமே எல்லா உயிர்களையும் அன்பான கண் கொண்டு நோக்குவது தான் என்றார்கள் என் கண்களை விட்டு மறைந்தாலும் கருத்தில் நிறைந்திருக்கும் ஆன்மிக குரு நாதர் ஃபைஜிஷாஹ் நூரி என்ற அற்புத மகான். மேலே குறிப்பிட்ட தேநீர் உதாரணம் கூட அவர்கள் சொல்லிக் காட்டியது தான். மோகன் ஐயரும், குஞ்சு பிள்ளை அண்ணனும், என் போன்ற பலரும் அவர்களின் இல்லத்தில் இறைவேத வெளிச்சத்தில் ஏகத்துவ மெய்ஞானம் பயின்ற அந்த காலம் என் வாழ்வில் என்றும் மறவா பொற்காலம்.

குளிப்பதனால் அழுக்கு நிரந்தரமாக நீங்கி விடுவதில்லை. அதற்கு மீண்டும்  மீண்டும் குளிக்க வேண்டியது அவசியமாகிறது.ஆன்மிகம் என்பது ஒரு குளியலைப் போல அனுதினமும் தொடர வேண்டிய ஒன்று. குளிப்பதைத் தவிர அழுக்கு தீர வழியில்லை.

அன்புடன்

நூருல் அமீன்  |  http://onameen.blogspot.com/

***

நன்றி : நூருல் அமீன் | onoorulameen@gmail.com

***

தொடர்புடைய பதிவு :  படைக்கும் படைப்பினம் – நூருல் அமீன்

26 பின்னூட்டங்கள்

 1. 18/04/2011 இல் 14:40

  ‘ஹம்பக்’ னா என்னன்னு கேக்க முடியாததுல எனது சுதந்திரம் பறிபோனது வாஸ்தவம்!!!

  //ஆத்திகம் அல்லது ஆன்மீகம் என்பது ஹம்பக்…. // ஆக இரண்டும் ஒன்றுதான் என்கிறீர்கள். சரி.

  ஆனாலும்,

  1. அப்புறம் அதில் மதங்கள் புகுவது?
  அவற்றுக்குள் வரும் வேறுபாடுகள்?
  அவையெல்லாம் ஒன்றை மற்றொன்று தவறென்பது?
  ஒரே மதத்தின் உட்பிரிவுகள் வெட்டிக்கொள்வது?

  2. //ஆன்மீகம் வந்ததற்கான அடையாளமே எல்லா உயிர்களையும்
  அன்பான கண் கொண்டு நோக்குவது தான்……// சரி.
  ஆன்மீகவாதி அல்லது ஆத்திகவாதி அல்லாத ஒருவர் எல்லா
  உயிர்களையும் அன்பான கண்கொண்டு நோக்கமுடியுமே?

  தேநீர் விவகாரம்: இயற்கை நமக்கு (அதாவது மிருகங்களுக்கு) அளித்தது காற்றும் தண்ணீருமே.
  உணவை நாம் தாவரங்களையோ அல்லது மற்ற மிருகங்களையோ ‘கொடுமை’ப்படுத்தித்தான் பெறவேண்டும்.
  (பால் ஒன்றும் அருட்கொடை அல்ல. இயற்கையாக அரைப்படி கறந்த மாடுகளை ஆறுபடி கறக்க வைக்கிறோம் நாம்)

  எனினும் இதை மேலும் விவாதித்தால் வழக்கமான, முடிவற்ற, பயனற்ற வெட்டி விவாதத்தில்தான் முடிவடையும். காரணம் நாம் எல்லோரும் தத்தம் நிலையிலிருந்து மாறப்போவதில்லை.

  யார் என்ன நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும் ஒருவருக்கொருவர் வெறுப்பை உமிழாமல்
  மகிழ்வாக வாழ்ந்தாலே போதுமே!!
  செய்வோமா????
  நன்றாகக் குளித்துவிட்டுத்தான்….

  • 19/04/2011 இல் 12:22

   உடனுக்குடன் பதில் எழுதும் உங்கள் வேகம் பாராட்டுகுரியது. உங்கள்//யார் என்ன நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும் ஒருவருக்கொருவர் வெறுப்பை உமிழாமல்
   மகிழ்வாக வாழ்ந்தாலே போதுமே!!
   செய்வோமா????
   நன்றாகக் குளித்துவிட்டுத்தான்…/ என்ற வார்த்தைகளில் எனக்கு முரண்பாடில்லை. தாஜுக்கு அளித்திருக்கும் பதிலில் உங்களுக்கும் துளியூண்டு சேர்திருக்கிறது.

   • 19/04/2011 இல் 13:09

    அமீன்பாய், எங்கள் அறிவுக்கண்களுக்கு ஏதும் தெரியவில்லையே என்ற உங்கள் கோபம் எங்களுக்கும் உண்டு, எங்கள் மீதே.

    என்ன செய்ய?

    வாயிலிருந்து ஒரு அடி தூரத்தில் தட்டிலிருப்பது மலமா அல்லது ஆசனவாயிலிருந்து அரை அடி தூரத்தில் விழுந்துகிடப்பது பிரியாணியா என்பதல்லவே எமது சந்தேகம்?

    புறப்பார்வையின் எல்லைக்கப்பால், இருப்பதுபோலத் தோன்றும் வானத்திற்கப்பால் இருப்பதாக சொல்லப்படும் மேன்மைகளைக் காண தங்களுக்குக் கிடைத்திருக்கும் டெலஸ்கோப் அகப்பார்வை எங்களுக்குக் கிடைக்கவில்லையே? அப்படியே கிடைத்தாலும் அதை ஆப்பரேட் பண்ணும் அறிவும் எங்களுக்கில்லை.

    இருக்கும் ஒரே ஆறுதல் கீழே உள்ள உங்கள் நம்பிக்கைதான்!

    //அடிப்படையில் என் நணபர்கள் தங்கமானவர்கள் அதனால்
    என்றாவது ஒரு நாள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இறைவனை வேண்டியவனாய் காத்திருக்கின்றேன்.//

 2. 18/04/2011 இல் 18:21

  ”இயற்கை நமக்கு (அதாவது மிருகங்களுக்கு) அளித்தது காற்றும் தண்ணீருமே.”

  ”இயற்கையாக அரைப்படி கறந்த மாடுகளை …..”

  அப்படி பார்த்தா இயற்கை நமக்கு (அதான் அதே மிருகங்களுக்கு தான்) அளித்தது காற்றும் தண்ணீரும் அரைப்படி கறக்கின்ற பாலும்… அப்படியா…?

  • 18/04/2011 இல் 21:49

   அப்படித்தான். ஆனா, அந்த அரைப்படி பாலும் கன்னுக்குட்டிக்கு, நமக்கு இல்ல!

   • 19/04/2011 இல் 05:09

    ”…அந்த அரைப்படி பாலும் கன்னுக்குட்டிக்கு,…” – ஓ! அந்த மிருகத்துக்கா..?

 3. 18/04/2011 இல் 18:24

  ”யார் என்ன நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும் ஒருவருக்கொருவர் வெறுப்பை உமிழாமல்
  மகிழ்வாக வாழ்ந்தாலே போதுமே!!
  செய்வோமா????
  நன்றாகக் குளித்துவிட்டுத்தான்….”

  – அடடா..! இது தானே ஆன்மீகம்..
  இல்லையோ..?
  அப்போ நாத்திகம்..?
  அதுவும் இல்லையோ..?
  அப்போ இதுவும் ஹம்பக் தானா..??!!

  • 19/04/2011 இல் 10:24

   ஒருமுறை நண்பர் ஒருத்தர்ட்ட சீரியஸா கேட்டேன், ரெண்டுல எது சரின்னு. என்னய பரிதாபமா ஒரு பார்வை பாத்துட்டு சொன்னது: ‘ ..க்கலி ரெண்டும் ஹம்பக்தான், போயி வேலயப் பாப்பியா’

 4. 18/04/2011 இல் 20:55

  ஐயய்ய……..! எல்லோருமே சிம்ப்ளான மேட்டரை இப்படிப் போட்டு கொழப்புறீங்களே…!!

  ஆத்தீகம் நாத்திகம் ரெண்டுமே ஒன்னுதான் சார்ஸ்(ப்ளூரள்). முன்னதில் ‘உண்டு’ என்ற நிலையில் கடவுளாக இருக்கிறார். பின்னதில் ‘இல்லை’ என்ற நிலையில் இயற்கையாக இருக்கிறது.

  (கலிமாவைப் படிச்சுப் பாருங்க இல்லைன்னு ஆரம்பிச்சு உண்டுன்னு முடியும்.)

  ஹம்பக்
  இரண்டாம் உலகப்போர் நடந்துக்கொண்டிருக்கும்போது சென்னையைத் தாக்க “ஹம்பர்க்” என்ற போர் கப்பல் வருவதாகப் பீதியை கிளப்பிவிட்டார்கள். கடைசியில் கப்பலும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை. அதாவது யானை குசுவுட்டக் கதை. இதைத்தான் ‘ஹம்பக்’ என்கிறார்கள்.
  நன்றி: N.Gopala Krishna Iyer (My English+Maths Teacher)

  • 19/04/2011 இல் 05:08

   ஸலாம் ஹமீது ஜாஃபர் நானா, யானை குசு வுட்ட கதையா? interesting..! அதை (குசுவை அல்ல அந்த கதையை) படிக்க தர முடியுமா?

   • 19/04/2011 இல் 13:11

    நம்மகிட்டயும் அந்தக் கதையின்
    ஒரு வெர்சன் உண்டு.

  • 19/04/2011 இல் 12:25

   விளக்குவதற்கு கலைக்களஞ்சியம் ஹமீது ஜெஹபர் நானா இருப்பதால் எதையும் தைரியமாய் எழுதலாம் போல இருக்குதே!!!
   நன்றி நானா!

 5. தாஜ் said,

  18/04/2011 இல் 23:25

  அன்புள்ள
  நூருல் அமீன்

  உங்களது கட்டுரையினை
  நீங்கள்
  முழுமையான
  வடிவிலேயே தந்திருக்கலாம்.
  என்ன வேண்டிக் கிடக்கிறது அவசரம்?
  ஆன்மீகத்தை விமர்சிப்பவர்கள்
  விமர்சித்துவிட்டுப் போகட்டுமே?
  அதுயென்ன அத்தனை பலஹீனமா?

  நீங்கள் தேடிக் கொண்டிருக்கிற
  உங்களதுகல்வித் தகுதி
  என்னை மலைக்க வைத்ததுண்டு.
  இந்த அவசர
  அரைக்குறைக் கட்டுரை
  அந்த மலைப்பை
  கேள்விக்குள்ளாக்கிவிட்டது!

  அறியாததை மறுக்கும் அறிவை
  நீங்கள் சாடுகின்றீர்கள்.
  அதனை அறியாமையென
  சொல்லவும் செய்திருக்கின்றீர்கள்

  அப்படியெனில்…
  ஒருவன் தான் அறியாதது குறித்து
  மௌனம் காக்கவேண்டுமா என்ன?
  மௌனம் நல்ல விசயம்தான்
  தப்பில்லை.
  ஆனால்….
  ஆன்மீகவாதிகள்
  அறியாததை
  (அதாவது… அறியமுடியாததை)
  தீர அறிந்தது மாதிரி
  பேசுகிறார்களே அது என்ன நியாயம்?

  நாங்கள்
  அகப்பார்வைக் கொண்டு
  பார்க்கிற மக்கள் என்பார்
  நூருல் அமீன்!

  அதுயென்ன அகப்பார்வை?
  அகம் என்றால் மனம்
  அதாவது…
  மனப்பார்வை என்று பொருள்!

  உங்களுக்குத் தெரியுமா நூருல்…
  உடல் அவையங்களில்
  மனம் என்ற அவையமே இல்லை தெரியுமா?
  எல்லாம் மூளையின் செயல்பாடுகள்தான்!

  நுட்பமாக யூகிப்பதையே
  நீங்கள்
  அகப்பார்வையென
  குறிப்பிடுவதாக உணர்கிறேன்.

  நுட்பமாக யூகியுங்கள்.
  வாழ்வில் சாதனைப் பண்ணுங்கள்
  உலகம் உய்யட்டும்
  மக்கள் மகிழட்டும்
  சந்தோஷமான விசயம் அது.

  அதை விட்டு…
  ஆள் அரவமற்ற
  கற்பனைப் பெருவெளியில்
  மதத்தின் கூறுகளை சுமந்தப்படி
  திரியோ திரியென திரிந்து
  நொடிக்கிற இடத்திலெல்லாம்
  இறைவசனத்தை
  ஊன்றுகோளாக்கியப்படி
  நீங்கள் பார்த்திருக்கிறப் பார்வையை
  அகப்பார்வை என்கின்றீர்கள்!
  என்னத்தை சொல்ல?

  மன்னிக்கனும்….
  உங்களது அகப்பார்வை
  இந்த சமூகத்திற்கு
  எந்தப் புதிய செய்தியை
  சொல்லியிருக்கிறது?
  ஏன் உங்களை நீங்கள்
  இத்தனை வலுக்கட்டாயமாய்
  இப்படி ஏமாற்றிக் கொள்கின்றீர்கள்?

  கட்டுரையில் இரண்டு விசயங்கள்
  எனக்குப் பிடிப்படவில்லை!
  1,சுயநலமே பொதுநலம் என்கிற
  உங்களின் விளக்கமும்….
  2.யாருடைய தயவும் இல்லாமல்
  ஒரு கோப்பை தேநீர் கூட குடிக்க
  நம்மால் முடியாது என்கிற உதாரணமும்
  இந்தக் கட்டுரையில்
  ஏன் சுட்டப்பட்டிருக்கிறதுயென
  நிஜமாகவே எனக்குப் பிடிப்படவில்லை.
  ஆன்மீக சங்கதிகளுக்கும்
  இந்த சுட்டலுக்கும்
  என்ன சம்மந்தம்? என்று
  விளங்கவே மாட்டேன் என்கிறது,

  யாருடைய தயவும் இல்லாமல்
  ஒரு கோப்பை தேநீர் கூட குடிக்க
  நம்மால் முடியாது என்கிற உதாரணத்தை
  நீங்கள் ஏகத்திற்கும் சிலாகித்திருக்கின்றீர்கள்!
  நிஜமாலுமே அதை ரசித்து வியந்துதான்
  சிலாகித்தீர்களா?
  அல்லது
  உங்கள் குரு சொன்ன வார்த்தை என்பதற்காக
  அதற்கு
  அத்தனை முக்கியத்துவம் தந்திருகின்றீர்களா?

  இன்றைக்கு
  ஊருக்கு ஊர் வளர்ந்து தளைத்திருக்கும்
  பலமாதிரி ஆன்மீகங்கள் குறித்த
  யதார்த்தக் கூத்தை
  பின் ஒரு சமயம் எழுதணும்.

  இத்தனைக்கு எழுத
  வாய்ப்பளித்த
  அன்புள்ள நூருல் அமீனுக்கு
  நன்றி.
  -தாஜ்

  • 19/04/2011 இல் 05:49

   ”அறியாததை மறுக்கும் அறிவை
   நீங்கள் சாடுகின்றீர்கள்…”

   – உண்மையில் அறியாததை அறியாதது என்று அறியாதிருப்பதை தான் சாட வேண்டும்..

   ——————-

   அகப்பார்வை என்பதை ஆங்கிலத்தில் Perception என்று சொல்லப்படுகிறது. அதாவது உதாரணமாக ஒரு பத்து பேர் ஒரு situationஐ பார்க்கிறார்கள் என்று வையுங்கள். பத்து பேரும் பத்து விதமாக புரிந்து (recognize) கொள்வார்கள்.

   ஆனால் உண்மையாக அந்த situation எப்படி உள்ளதோ அல்லது அதை எப்படி புரிய வேண்டுமோ அப்படி புரியாமல் போனால் அதை perception distortion என்பார்கள்.

   (அப்படி புரியாமல் போவதற்கு நம்முடைய மூளையை பயன்படுத்தாமல் போவது கூட ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது நம் மூளையை overload செய்வது கூட ஒரு காரணமாக இருக்கலாம்)

   அகப்பார்வை புதிய செய்தியை தருவது அல்ல, (அப்படியே புதிய செய்தியை தந்தாலும் எல்லா பயனும் பெற்று விடலாம் என்று அர்த்தம் கொள்ள முடியாது என்பது ஒரு அகப்பார்வையாக இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்) ஏற்கனவே உள்ள செய்தியை அதை எப்படி புரிந்து கொள்ள வேண்டுமோ அப்படி புரிந்து கொள்வதை தான் அகப்பார்வை என்பது.

   ஆங்கிலத்தில் சொல்வதாக இருந்தால், “the way having to percieve things as they actually are”

   • 19/04/2011 இல் 10:10

    அருமை, அருமை இஸ்மாயில்!
    எளிய விளக்கம்.
    மொத்தத்தில், அகப்பார்வை என்பது புரிந்துகொள்ளலின் ஒரு வடிவம்.
    நூருல்அமீன் பாய் கருத்தும் அதுதானா?

   • தாஜ் said,

    19/04/2011 இல் 10:13

    அன்புடன்
    முகம்மது இஸ்மாயில்…
    இரண்டும் இரண்டும் நாலு என்கிற
    பழையச் செய்தியை
    அகப்பார்வை கண்டு சொல்வதில்
    என்ன விசேசம் இருக்கிறது!?
    எல்லோருக்கும் அது தெரியுமே!

    கண்களைத் திறந்து
    பாதைப்பார்த்து
    கால்கள் பதிய
    மண்ணில் நடைநடந்து
    வாழப் பழகுங்கள்!

    அதீதம் கற்பதோ
    அந்தரத்தில் பறப்பதோ
    வாழ்க்கையாகாது!
    நன்றி.
    -தாஜ்

   • 19/04/2011 இல் 12:27

    நல்ல விளக்கம். நன்றி இஸ்லமாயில் பாய்.

  • 19/04/2011 இல் 12:17

   Ayn Rond ன் Virtue of Selfishness படித்திருக்கின்றீர்களா தாஜ். உங்களுக்கு என் பதில் கீழே
   அன்புடன்,
   அமீன்

 6. 19/04/2011 இல் 11:43

  அன்பு தாஜ்,
  ஆன்மிகம் என்பது உள்ளதை உள்ளபடி பார்க்க காட்டித் தரும் சங்கதி. பிறப்பின் இயல்பான பரிசுத்த மனோ நிலையில் நம் அகவளர்சிக்கு உதவும் வழிகாட்டல்கள்.

  அப்படி ஒரு நல்ல விசயத்தை சிறிது பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் அன்பு தாஜ், மஜீத் போன்றவர்களுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது என் ஆவல். தேன் என்பதன் சுவை இனிப்பு என்பது போல் ஆன்மீகம் என்பது அன்பு மனமாய் பரிணமிக்கும் அகமலர்ச்சி. மானுடம் மொத்தமும் ஓர் உடலின் பல் வேறு அங்கங்களாய் காட்டி தரும் ஆன்மீகம் பொது நலனையும் நம் சுயநலக்கிவிடும் ரஸவாதம் என்பது என் கட்டுரையின் செய்தி.

  அதே நேரத்தில் நான் கற்ற ஆன்மிகம் எல்லா உயிர்களிடமும் அன்பு என்பதால் கொல்ல வரும் பாம்பை கொஞ்ச சொல்லவில்லை. எல்லோருக்கும் அது சாத்தியமில்லை என்பதால். ஜீவகாருண்யம் என பால், காய்கறிகள், விலங்கினங்களை புசிப்பதை தடுக்கவில்லை. நாம் நல்ல முறையில் உயிர் வாழ ஆன்மீக வழிகாட்டல் வழங்கிய அனுமதியது.

  நீங்கள் புத்தகம் எழுதி என்ன சாதித்து விட்டீர்கள் என நீங்கள் கேட்டிருக்கின்றீர்கள். நான் எதை மனப்பூர்வமாக உண்மை என உணர்திருக்கின்றோனோ அந்த நல்ல விசயத்தை பிறருக்கும் பயன்படும் நோக்கில் நேர்மையான முறையில் பதிவு செய்தது மட்டுமே அகப்பார்வை புத்தகம் எழுதியதில் என் அடிப்படை நோக்கம். அதே நேரத்தில் அகப்பார்வை புத்தகம் அப்படி யாருக்குமே பயன்படாமல் போய் விடவில்லை என்பதற்கு ஒரு செய்தி . சென்ற வாரம் கூட ஒரு பிராமண சகோதரி உங்கள் அகப்பார்வை புத்தகம் படித்தேன். எனக்கு ஒரு புதிய கதவு திறந்தது போல் இருக்கிறது என் தாயருக்கு படிக்க கொடுத்துள்ளேன் என்றார். கண்களில் நீர் பணிக்க மனதால் இறைவனுக்கு நன்றி சொன்னேன். இது போல் பல சம்பவங்கள் விவரிக்க முனைந்தால் விளம்பரமாகி விடுமோ என அஞ்சுகின்றேன். (புதிய பார்வையைத் தரும்) அப்படி ஒரு கதவே இல்லை என கூற நீங்கள் கூற முனைந்தால் என்னிடம் பதில் இல்லை தாஜ்.

  இந்த சுட்டி உங்களுக்கல்ல தாஜ் நீங்கள் ஏற்கனவே படித்திருப்பீர்கள் நம் ஆபிதின்ன் பக்கங்களை வாசிக்கும் வேறு யாருக்காவது பயன்படலாம்.
  http://onameen.blogspot.com/2010/08/blog-post_7253.html

  முடிக்கும் முன் ஒரு வார்த்தை.

  பல்வேறு பிரச்சனைகளின் போது தெளிவும், அமைதியும், நிம்மதியும் நான் பெற்றுக் கொண்ட ஆன்மீக உணர்வுகளின் அளவுக்கு ஏற்ப எனக்கு கிடைக்கிறது. என் பல்வேறு நண்பர்களும் இதே நிலையில் இருப்பதை வாரம் வாரம் நாங்கள் கூடும் இருப்புகளில் என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

  இதெல்லாம் அதீத கற்பனை, மாயை என்னை நானே ஏமாற்றி கொள்கின்றேன் என்று நீங்கள் நினைத்தால்…..

  நான் சாப்பிடுவது பிரியாணி என எனக்கு தெரியும். மஞ்சளாய் இருப்பதெல்லாம் மலமென்று நீங்கள் நினைத்தால்…..

  அடிப்படையில் என் நணபர்கள் தங்கமானவர்கள் அதனால்
  என்றாவது ஒரு நாள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இறைவனை வேண்டியவனாய் காத்திருக்கின்றேன்.

  என்றென்றும் அன்புடன்
  ஒ.நூருல் அமீன்

  • 19/04/2011 இல் 14:10

   //பல்வேறு பிரச்சனைகளின் போது தெளிவும், அமைதியும், நிம்மதியும் நான் பெற்றுக் கொண்ட ஆன்மீக உணர்வுகளின் அளவுக்கு ஏற்ப எனக்கு கிடைக்கிறது//

   இது 100% சரிஎன்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்.

   என் கதை நீங்கள் அறியாதது. காலம் என்னை முதலில் தலையைப் பிடித்தும், பின்பு பாதங்களைப் பிடித்தும் தூக்கியடித்து, துவைத்திருக்கிறது. அதன்பிறகும் கூட ஆன்மிகம் உதவாமலே எனக்கு தெளிவு, அமைதி, நிம்மதி எல்லாமே கிடைத்திருக்கிறது. (எந்த குருவையும் நான் அண்டவில்லை.) நான் வாழும் சாட்சி.

   இதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? முடியாதேன்றே நினைக்கிறேன். ஏற்றுக்கொண்டால் ‘அகப்பார்வை’ அர்த்தமில்லாதுகூட போகலாம்.

   வேண்டாம்.
   நீங்கள் இப்படியே நிம்மதியாக இருங்கள்.

   மேலும்,

   நீங்கள் கண்டுகொண்டதாக கூறும் மேன்மைக்கு நீங்கள் அளித்திருக்கும் உருவகம் (உருவமல்ல) எத்தனை பெரிதோ, அதைவிட மிகமிக பெரிது – ‘இன்னும் முழுதாக கண்டுகொள்ளவில்லை’ என்று நாங்கள் நினைக்கும், அதே மேன்மைக்கு – நாங்கள் அளித்திருக்கும் உருவகம்.

   (பி.கு.: நாங்கள் = என் போன்றோர்கள்)

   • 19/04/2011 இல் 15:01

    தமயமான இறைவனை எப்படி அறிந்து கொள்ள வேண்டுமோ அந்த அளவுக்கு அறிய முடியாது என்பது தான் இறைஞானத்தின் உச்சம். ஒரு வகையில் எல்லா உருவகங்களையும் கடப்பது.

    “சுத்த பரிபூரண சுகவாரி தன்னிலோர்
    சொட்டாகிலும் தொட்டபேர் நல்லவர்கள்.
    நல்லவர்கள் நல்லவர்கள் நல்லவர்கள்
    நானென்றைக்கு அந்த நல்லவன் ஆவேனோ?” என குடம் குடமாய் பருகிய குணங்குடி அப்பா பாடும் போது வெறும் வாசனையை முகர்ந்து கொண்டு வாசலில் காத்து கிடக்கும் என் போன்றோர் நிலை என்ன சொல்ல!

    நான் கண்டு கொண்டதாக நீங்கள் கூறுவதை என் நிலையாக நான் கருதவில்லை. உங்கள் ஆசியாக எடுத்துக் கொள்கின்றேன்.

 7. தாஜ் said,

  19/04/2011 இல் 13:36

  அன்புள்ள
  நூருல் அமீன்

  என்னை
  தவறாக நினைக்காதீர்கள்!

  நிஜமாகவே
  ஆன்மீகத்தின்
  தனித்துவம் மிக்க மகத்துவம்
  புரியத்தான் மாட்டேன் என்கிறது.

  நான் அறிந்தவரை
  பல்வேறு ஆன்மீக குருக்கள்
  தங்களது ஆன்மீக வழியை
  பல்வேறு தினிசில்
  வெளிப்படுத்தக் கண்டிருக்கிறேன்.
  ஆன்மீகம் பிடிப்படாமல் போனதின்
  முதல் காரணமே அதனால்தான்.

  1.மௌனமாக இருத்தல்/
  2.சதா மந்திர உச்சாடணம் செய்தல்/
  3.விரமிருத்தல்/
  4.இசையில் திளைத்தல்/
  5.நடனமாடி திளைத்தல்/
  5.கலவி நிலையில் திளைத்தல்/
  6.கஞ்சா, அபீன் வஸ்துகளை உபயோகித்து திளைத்தல்/
  7.சொர்க்க பெருவாழ்வை மனதில் கொண்டு திளைத்தல்/
  8.யாகம் வளர்த்து மனநிறைவில் திளைத்தல்/
  9.சன்னியாசியாக திரிந்து திலைத்தல்/
  10.புன்னிய ஸ்தலங்கள் வலம்வந்து திளைத்தல்….
  – இப்படி பலவேறு நிலைகளில்
  ஆன்மீகம் நம்மைச் சுற்றி
  பெருக்கெடுத்து வளைய வருகிறது!

  சமீப காலமாக
  தினுசு தினுசான வடிவில்
  ஆன்மீக அமைப்புகள்
  ஊருக்கு ஊர்
  விளம்பர சகிதமாய்
  வெற்றிக்கரமாக
  நடந்தேறிக் கொண்டு இருக்கிறது.
  இரண்டு வருடம் கழித்துப்பார்த்தால்
  மேலை நாடுகளில் அதன் கிளைகள்
  துவங்கப்பட்டதாக செய்தி கிடைக்கிறது.
  அவர்களின் சொத்து மதிப்பை
  அறிய வருகிறபோது…
  வியப்பால் தலைச்சுற்றுகிறது!

  அல்லது
  ஆன்மீக அமைப்பாளர்கள்
  ஏதேதோ காரணத்திற்காக
  சிறையில் இருக்கிறார்கள்!

  இதனையெல்லாம் நோக்கும் போது
  ஆன்மீகப் பரப்பாளரை பார்த்து
  கேள்விகள் எழுப்புவதை
  நீங்கள் தவறு காண முடியாது.

  எல்லோரும்
  நன்றாக/ சந்தோஷமாக
  இருக்கச் சொல்வதுதான்
  நீங்கள் சார்ந்த ஆன்மீகமாக
  உங்களது சொல் மூலம்
  அறிந்து உணர முடிகிறது.
  தொடருங்கள்.
  சந்தோஷம்.
  வாழ்த்துக்கள்.

  இதனைவிட
  ஏழைகளுக்கு
  கல்வி கொடுப்பது குறித்து
  நீங்களும் உங்களது நண்பர்களும்
  யோசித்தால் என்ன?
  அது இன்னும் சந்தோஷம் தருகிற
  விசயமாக இருக்குமே?
  என் சொல்லையும் யோசியுங்கள்.
  நன்றி
  -தாஜ்
  3:04 PM 4/19/2011

  • 19/04/2011 இல் 14:05

   அசோகர் சாலையின் இருபுறமும் மரங்களை நட்டார், குளம் குட்டைகளை வெட்டினார்.சத்திரம் சாவடிகளை கட்டினார். நாமும் நம்மால் முடிந்த அளவு அந்த உதவிகள் செய்ய வேண்டும் என்ற உங்கள் ஆசை வரவேற்க தக்கது.

   ஆனால் அசோகருக்கு பின் நீங்கள் கூறும் ஆன்மீக ( வசதியாக மறந்து விட்ட நாத்திக ) “நிறுவனங்களும்” தான் பெரிய அளவில் கல்வி முதற் கொண்டு பல அறப்பணிகளை மெகா சைசில் செய்கின்றன.

   இதனை விட …என்ற வார்த்தைகளின் உங்கள் பிடிவாதம் பல்லிழுக்கிறது.

   ஆன்மீக ஏழைகளுக்கு கல்வி கொடுப்பதும் ஒரு சேவை தான் நண்பரே!

 8. 19/04/2011 இல் 14:17

  //ஆன்மீக ஏழைகளுக்கு// – இதில் பிடிவாதம் இல்லையோ?

 9. 19/04/2011 இல் 15:27

  நானே ஒரு ஆன்மீக ஏழை தான் சாமி!

  • 19/04/2011 இல் 17:52

   அட போங்க சார், கைவசம் இம்புட்டு ஆன்மீகத்தை வச்சுக்கிட்டு ஆன்மிக ஏழைங்கிறீங்க!

   அப்ப பாவப்பட்ட நாங்கள்லாம் என்னவாம்??

   ரொம்ப நன்றி, இத்தனை பொறுமையா காதுகொடுத்ததுக்கு!
   மறுபடி எப்பவாவது முட்டிக்குவோம், அடச்சே, விவாதிப்போம், இன்ஷா அல்லாஹ்!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s