எ(அ)ருமையான ஒரு திட்டம்…! – ஹமீது ஜாஃபர்

ஒரு மாசம் ஓய்வு ஒழிச்சல் இல்லை. ஒரே நேரத்தில் ரெண்டு கப்பல். ரெண்டையும் ஒரே நேரத்தில் முடிச்சு கொடுக்கணும். மலையாளத்துலெ ’கப்பல்’னு சொன்னா மேப்படி வியாதின்னு அர்த்தம். ஒண்ணும் பயந்துடாதீங்க இது ஒரிஜினல் கப்பல்; ஈரான் கம்பெனிக்கு சொந்தமானது, ஏசி ரிப்பேரிங் ஒர்க், ஓவர் ஹால் பண்ணி புது யுனிட் மாதிரி ஆக்கி கொடுக்கணும். ஒரு மாதிரியா கிழவியை குமரியாக்கி கொடுத்தாச்சு. இன்னும் ஒருத்தி பாக்கி இருக்கா. இதுக்கிடையில் வேறே எவளும் வராம இருந்தா சரி.

காலையிலெ 7 மணிக்குப் போனா ராத்திரி 9 மணிக்குத்தான் ரூமுக்கு வரமுடியுது, அதனாலெ எதுவும் செய்ய முடியலை. இதுக்கிடையிலெ நம்ம ஆபிதீன் வேறே  – அவர் டவுன்லோடு பண்றது போதாதுன்னு – ‘அந்த சினிமா வேணும் , இந்த டாகுமெண்ட்ரி வேணும்’டு கெஞ்சுறார். அவர் மனசும் புண்படக்கூடாது பாருங்க.. அதனாலெ இடையிடையே அந்த வேலையையும் சேர்த்து செஞ்சதுனாலெ சொந்த வேலை… ’அம்போ’.

“நானா மாட்டை பாத்தீங்களா?”ன்னார் போனவாரம்.

“எந்த மாடுங்க?”

“அட , என் பக்கத்துலெ இருக்கிற மாடு- வீடியோ க்ளிப்

“டைம் இல்லைங்க.”

“சரி சரி , டைம் கிடைக்கும்போது பாருங்க..”

நேத்துதான் பார்த்தேன். அதுக்கிடையிலெயே ரெண்டுமூணு போட்டுட்டார். நோண்டிவுட்டு படத்தை மட்டுமல்ல மறுமொழியையும் சேர்த்துப் பார்த்தேன். எனக்கு பழைய பாட்டு ஒண்ணு ஞாபகத்துக்கு வந்துச்சு. ’ஒண்ணா இருக்க கத்துக்கணும், அந்த உண்மையெ சொன்னா ஒத்துக்கணும் –  காக்கா கூட்டத்தெ பாருங்க…’ பாட்டு. இனிமே காக்கா கூட்டம்னு சொல்லக்கூடாது எருமை கூட்டம்னு சொல்லணும். அதான் அருமையா இருக்கு. காக்கா கூட்டத்தை கல்லெறிஞ்சா பறந்துடும், ஆனா எருமை…? அதான் பாத்திருப்பீங்களே…

என்ன எருமை, ச்சே.. என்ன அருமை ! நம்மள்ட்டெ இல்லாத ஒண்ணு அதுங்கள்ட்டெ இருக்கு..! ’ஏண்டா எருமை’ன்னு இனிமே வாத்தியாருங்க திட்டக்கூடாது. உழவுக்குக்குப் வருதோ இல்லையோ ஒத்துமைக்கு ஒதுவுது. ’போத்தெறச்சி’ மலையாளிகளுக்கு ஏன் ரொம்ப புடிக்குதுன்னு இப்பத்தான் தெரியுது. எடுத்த வாய்க்கு , ‘மலையாளியானோ’ ன்னு கேட்பாங்க. அந்த அளவுக்கு அவங்களுக்குள்ளே பாசமும் நேசமும்.

என் ரூமிலெ இருந்த ஜெயிண்ட் மங்களம் சபுருல்லாபாய்தான் சொல்வார், “மலையாள சம்சாரம் ரொம்ப புடிக்கும் ஜாபர்பாய்” என்பார். ஏன் புடிக்காது? தேங்கெண்ணையோட மகிமைங்க அதனால்தான் பாரதியார்லேந்து கண்ணதாசன் வரை ‘சேர நன்நாட்டின்….’ ன்னு பாடியிருக்கிறாங்க என்றேன்.

’ஹி…….ஹி’.ன்னு நமட்டு சிரிப்பு சிரிச்சிக்கிட்டு ”நான் பாஷையெ சொன்னேன்” என்றார்.

“நானும் அதெதான் சொல்றேன், ரெண்டுமெ வழுக்கிகிட்டுப் போவும்” என்றேன்.

பாக்கி இருந்த ஒண்ணையும் முடிச்சு கொடுத்தாச்சு. இதுவும் ஏர் கண்டிஷன் வேலைதான் ஆனால் கொஞ்சம் காம்ப்ளிகேஷன்,. ஒரு வகையா 90% success; இப்பொ ஐயா ஃப்ரீ. சரி , விசயத்துக்கு வாரேன்.

துபாய் வந்து , சில்வர் ஜூபிளி கொண்டாடி , மேலே ஓடிக்கிட்டிருக்கு இன்னும்.  எவ்வளவு நாளைக்குத்தான் இங்கேயே ரோட்டை அளந்துக்கிட்டிருக்கிறது? தாயோடப் புள்ளையா போயிடலாம்னு பார்த்தா….? பயமா இருக்கு.  ஊருக்குப் போயி ‘புவா’ (buva) வுக்கு என்ன செய்யிறது? பொட்டிக்கடையெல்லாம் வச்சா சரியா வராது. இத்தனை வருஷம் இங்கே இருந்ததுக்கு சிங்கப்பூர் மலேசியாவா இருந்தா தன் சொந்த புள்ளையா தத்தெடுத்திருப்பான். அட ஃபிரான்ஸா இருந்தாக்கூட பென்ஷன் வரும். ஆனால் இங்கே….?  என் மலையாளி கூட்டாளி ஜோஸப் ஒலிவர் சொல்வான், “இக்கா,  இவடெ நூறு ப்ரவாசம் ooom……பியாலும் சரி ; நூத்தியொன்னாவது ப்ரவாசம் பல்லு பட்டா கவ்வாத்(தேவடியா மவன்)ன்னு காலுமடக்கிச் சவட்டுற நன்னியில்லா நாயிண்ட மக்க.” என்று; அது உண்மைதான்.

இந்த நாட்டை வுட்டுட்டு சொந்த நாட்டுக்குப் போயி நொந்துப் போனா…? எங்க ஜபருல்லா நானாட்டெ கேட்டா, “அல்லா இக்கிறான் வந்துடுங்க தம்பி” என்கிறார். அந்த அல்லாதானே இங்கே இக்கிறான். ஆபிதீனிடம் கேட்கமுடியாது, அவரு என்னைவிட ரொம்பக் கொளம்பிப் போயிருக்கிறாரு. நம்ம காக்காசு தாஜு “அல்லா கூறையெ பிச்சிக்கிட்டு கொடுப்பான்” அப்டீன்கிறார். கூறை இருந்தாதானே அவரு பிய்ப்பாரு; கூறையே இல்லை எதை பிய்ப்பார்? இப்படி யோசனைப் பண்ணிக்கிட்டிருந்தபோதுதான் அந்த நோட்டீஸ் கெடச்சுது. எலக்சன் நோட்டீஸ், நேசக் கட்சியோட முக்கியமான ஆள் இங்கே வந்திருந்தார் வசூலுக்கு. அவர்ட்டெ ஒரு அட்ரஸ் இல்லாத நிருபர் கேள்வி கேட்கிறார், “ஒற்றுமை ஒற்றுமை என்று வாய் கிழியப் பேசும் இயக்கங்களும் சமுதாய அமைப்புகளும் எதைச் சாதித்தன?”

பதில்: ‘சமுதாய ஒற்றுமை அவசியம், சமுதாய ஒற்றுமை தேவை என்ற கருத்து நமது சமூகத்திலே பெரும்பான்மையாக இருக்கிறது…. இப்போதுகூட பிற சகோதர அமைப்பின் தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறோம், அரசியலிலே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி எடுத்து வருகிறோம். இவைகளெல்லாம் ஒற்றுமைக்கான அடித்தளங்கள் என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். தேர்தலுக்குப் பிறகு இதனை மேலும் வலுவூட்டுவோம்…..”

சட்ட சபை உள்ளே போயி உரிமைக்கு குரல் கொடுத்து வலுவூட்டுவார்களோ?! (ரொம்ப ஜாஸ்தி கத்தினா செக்யூரிட்டி அலக்கா தூக்கி வெளியே கொண்டு வந்து போட்டுடுவான்கிறதை ஞாபகத்துலெ வச்சுக்குங்க.) ஆக ஓட்டு வாங்க யார் காலுலேயும் விழுவோம். அது அரசியல் ஒத்துமையே தவிர சமூக ஒத்துமை அல்ல. (ஒத்துமை நமக்குள்ளதல்லவே அது எருமை மாட்டுக்குள்ளதல்லவா? நாம மனுச கூட்டங்களாச்சே.) எங்க ஜபருல்லா நானா சொன்னார் : “ஊர்லெ நாலு ஜமாத்து, நாலு பள்ளி, எல்லாத்திலேயும் தொழுகை, ஆனால் இங்கே உள்ளவங்க அங்கே போகமாட்டாங்க எனவே நீ நாலு அல்லாவா?” என்று. இதை படிச்ச பிறகுதான் தெரியுது நாலல்ல நாற்பது இருக்குன்னு. ஜக்கு, டமிள் நாடு தலகீது, இண்டியா தலகீது, பர்ளு சுன்னத்து, அஹ்லோ குரான், ஹலோ ஹதீசு etc., etc.,  இதெல்லாம் காப்பி ரைட் உள்ள ஜமாத்து. அதனாலெ பேரும் ஜமாத்தும் அந்தந்த தலைவருக்கு சொந்தம்.

இதெ பார்த்தபிறகு நான் ஒரு முடிவுக்கு வந்தேன். ஊருக்குப் போனா வண்டி ஒட்ட முடியும்னு. நல்லா யோசனைப் பண்ணிதான் இந்த முடிவு. ‘தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்  என்று ஒரு பழமொழி இருக்கு. அந்த மாதிரித்தான் ஆளொக்கொரு ஜமாத்தை ரிஜிஸ்டர் பண்ணிக்கிட்டு ஏகபோக உரிமை கொண்டாடிக்கிட்டிருக்காங்க. அப்படி இருக்கும்போது நாம ஏன் ஒரு கட்சி ஆரம்பிக்கக்கூடாது? பேர் என்ன வைக்கலாம்? மீண்டும் யோசனை. அப்பதான் எதிர்த்த மலையாளி ச்சாயா கடையிலெ போட்ட ஹிந்தி பாட்டுலெ ‘இண்டர்நேஷனல் பக்கீர் ஆயாஹுவே…’ என்ற வார்த்தை கேட்டுச்சு. உடனே என் மண்டையிலெ ஸ்ட்ரைக் ஆயிடுச்சு பேரும்.

அதி விரைவில் ‘இண்டர்நேஷனல் இஸ்லாமிய தலகீலெ ஜமாத்து பிரைவேட் லிமிட்டட்’ என்ற பெயரில்  புதிய பேரவை உதயமாகப் போகிறது. அதன் ஏகபோக உரிமையாளன்+தலைவன்+ஹை கமாண்ட் எல்லாம் நான் தான். உலகப் போலிஸ் ஐ ஜி யா உப்பம்மா இருக்கும்போது நான் ஏன் இருக்கக்கூடாது? இருக்கலாம்; இருக்கணும்.

நம்முடைய manifesto இதாங்க: மத்த மத்த தலகீது ஜமாத்து மாதிரி செய்யக்கூடாது. நம்முடைய பேருக்குப் பொருத்தமா இருக்கணும். அதனால் ஊரை ரெண்டாக்கக் கூடாது அது அவங்க ஏக்கனவே செஞ்சிட்டாங்க; நாம குடும்பத்தை ரெண்டாக்கணும். எப்படின்னு கேக்குறீங்களா? அது ரொம்ப ஈஸி. குடும்பத்துலெ குழப்பத்தை உண்டாக்கவேண்டியது எப்படி தனக்குப் பிடிக்காத நாட்டுலெ நாலு பேரை பிடிச்சு குழப்பத்தை உண்டாக்கி நாங்க ஜனங்களை காப்பாத்துற ரட்சகன்னு சொல்லிக்கிட்டு கூட்டுக்கு இன்னும் ரெண்டுபேரை சேர்த்துக்கிட்டு அந்த சாக்குலெ புதுசா தயாரிச்ச  ஆயுதத்தை டெஸ்ட்டும் பண்ணலாம் கூடவே கொள்ளையும் அடிக்கலாமில்லையா? அதே பாலிஸிதான் நம்முடையதும். பக்கத்துலெ இருக்கிற ஏ ஆர் பி காறங்க யாராச்சும் ஏன்னு கேக்கிறாங்களா? மாட்டாங்க. அதேமாதிரி பக்கத்து வூட்டுக்காரங்களும் கேக்கமாட்டாங்க. அப்படி மீறி கேட்டா மெரட்டி அடக்கி வக்கணும்.

ஆனால் இதுலெ ஒரு முக்கியமான ரகசியம் இருக்கு. அவனோட பர்ஸைப் பார்க்கணும். ஏழைபட்டவனா… எக்கேடு கெட்டும் தொலையட்டும்னு வுட்டுடணும். சோத்துக்கு லாட்டரி அடிக்கிற சூடான ஆப்புரிச்சாவுலெ எதாச்சும் கொழப்பத்தை உண்டாக்குறோமா? அட இந்த  அய்புவான் தேசத்துலெ பத்திருவது வருசமா அடிச்சிக்கிட்டு உளுந்தப்ப நாங்க எதாச்சும் சொன்னோமா? இல்லையே! கருத்தெண்ணெய் கெடக்கிற தேசத்து ஆடு நனைஞ்சாதான் நாம கத்தணும். ஆடு நனையலேன்னா நனைய வச்சு கத்தணும். அப்பத்தான் நாம உள்ளே பூற முடியும் பூந்தா ஜோப்பு நெறையும். எடஞ்சலா இருக்கிற சடையாபி போவணும்னு உப்பமாவுக்கு ஆசை இருக்கும்போது நமக்கு ஆசை இருக்கக்கூடாது?

இப்பொ எலக்சன் நெருங்கிடுச்சு டைமில்லை அதனாலெ அடுத்த எலக்சனுக்குள்ளே பல அந்தர் பள்டி அடிச்சு திருவாளரோ திருமதியோ செல்வமான செல்விகளோ ஹயாத்து பாக்கியா இருந்தா அவங்க துண்டோட மொனையெ புடிச்சிக்கிட்டா அல்லாமிஞ்சி ரெண்டாவது  நிச்சயமா ஜெயிச்சடலாம்.

எப்படின்னு கேட்காதீங்க. கைவசம் ஒப்பம்மா ஸ்டைல். அப்புறம் நம்ம சின்னம் அருமையான ‘எருமை’.

வாள்க நம்ம தீன்குலம்…..!
வளர்க நம்ம இ த சமாத்து……!!
உயர்க நம்ம எருமை சின்னம்….!!!

சிறப்பு செய்தி : (5-4-2011)

அப்பத்தான் ரூமில் வந்து பூந்தேன். ஒரே சத்தம். “அந்த kooooo…யான் எப்படி ’வணக்கம்’ சொல்லலாம்? நம்மளையெல்லாம் வணக்கம் சொல்லக் கூடாதுன்னு சொல்லிப்புட்டு அவன் மாத்திரம் எப்படி சொல்லலாம்.”  –  எனக்கு சில வினாடி புரியவில்லை. பேசினவர் ஒடனே ’வணக்கம்’ சொன்ன தலைவருக்கு ஃபோனைப் போட்டார். எதிர் முனை சுவிட்ச்டு ஆஃப். இவர், “ஆமா இந்த வெண்ணெ பெரிய ப்ரைம் மினிஸ்டர். அஞ்சு டூ ஏளுத்தான் பேசுவார்.” அப்டீன்னு ஆத்திரம் பொங்க டின்டிஜெ ஆபிஸுக்கு போனைப் போட்டு “எப்படி வணக்கம் சொல்லாம்?” என்று இவர் கேள்விக் கணையை தொடுக்க, மறுமுனையில் அப்படி எல்லாம் இல்லைங்கன்னு சொல்ல, நாங்க இங்கே கலைஞர் டிவிலெ பார்த்தோம்னு இவர் சொல்ல அவங்க, “வணக்கம் சொன்ன விஷயத்தை கேக்கிறாங்க ஜீ” ன்னு சொல்லிபுட்டு ஹோல்டு பண்ணி வச்சுட்டு போயிட்டாங்க. இவர் கடுப்போட கத்திக்கிட்டிருந்தார்.

விஷயம் இதான்:  PJ கலைஞர் டிவிக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் அதில் பேட்டியாளர் சம்பிரதாயப்படி வணக்கம் சொன்னார். இவர் பதிலுக்கு “வணக்கம் சார்” என்று பதில் சொன்னார். அவ்வளவுதான் மேட்டர். இதை நம்மாளுக்கு அவர் ஃப்ரண்டு மெயில்லெ அனுப்ப அதைப் பார்த்துட்டு தலை கீழ் கால் மேல் குதிக்க நான் ரூமுக்கு வரவும் சரியாக இருந்தது.

ஷைத்தானுக்கு குலாப்ஜான் கெடச்சமாதிரி இருந்தது எனக்கு. நான் சொன்னேன், நெய்னா சார் அது தமிழ் அஸ்ஸலாமு அலைக்கும்; Good Morning னு சொன்னா அது இங்கிலீஷ் அஸ்ஸலாமு அலைக்கும், இதெப்போய் பெரிசா எடுத்துக்கிட்டு அப்டீன்னு சொல்லி சமாதானப் படுத்தினேன். இருந்தாலும் கோபம் அடங்காம சலவாத்து சொல்லிக்கிட்டே face book லெ தள்ளிவிட்டுக்கிட்டிருந்தார்!

அந்த வீடியோ பார்க்க இங்கே க்ளிக் செய்ங்க.

***

ஹமீது ஜாஃபர்

நன்றி : ஹமீது ஜாஃபர் | manjaijaffer@gmail.com

***

தொடர்புடைய பழைய ’விவாதம்’ :

//அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும், வணக்கம்.// இவ்வளவு கருத்தாழமிக்க சிந்தனையைத் தந்த சகோதரர் நாகூர் ரூமி அவர்களிடமிருந்து அர்த்தமில்லா //வணக்கம்// இந்த வார்த்தையை எதிர்பார்க்கவில்லை. இறைவனை மட்டுமே வணங்க வேண்டிய ஒரு முஸ்லிம் வெறும் வார்த்தையினால் கூறும் சாதாரண ஒரு முகமன் என்ற அர்த்தத்தில் கூட இவ்வார்த்தையை மற்றொரு இறைவனின் படைப்புக்குக் கூறக்கூடாது என்பதை அறியாதவரா சகோதரர் நாகூர் ரூமி அவர்கள்? – அபூ ஃபாத்திமா.

விவாதத்தின் தொடர்ச்சிக்கு இங்கே க்ளிக் செய்யவும். 

வணக்கம்!

2 பின்னூட்டங்கள்

 1. 06/04/2011 இல் 15:33

  ரொம்ப நாளைக்கபுறம் ஊர் போயி செட்டில் ஆகுறமாதிரி ஒரு நல்ல ‘தொழிலை’க் கண்டுபிடிச்சிருக்கார் நானா.
  வாழ்த்துக்கள்.

  (நடுராத்திரியில் எந்திருச்சு சுவத்த பாத்துக் கத்துறமாதிரி இப்டி எழுதி ஆத்துறதும் ஒரு வகை)

  ரெண்டு கப்பல்களை ஒரே நேரத்துல ஒட்டுற நமக்கு, இதெல்லாம் ஜுஜுபி. என்ன, கொஞ்சம் ‘ஸ்டார்ட்டிங் ட்ரபுள்’ அவ்வளவுதான். வணக்கம்.
  (ரெட்டை அர்த்தத்தோடு படிக்கவேணாம்)

 2. maleek said,

  07/04/2011 இல் 20:51

  ” இதெல்லாம் அரசியல்லே சகஜம்பா ” இதுக்குபோயி ..அலட்டிக்கலாமா ?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s