‘சாமி! இந்தத் தராசைப் பார்த்து இப்படிச் சொல்றீங்களே..’

மகளிர் தினமாதலால் அஸ்மா பற்றி எழுதமுடியாது இன்று! தமிழின் உன்னத படைப்பாளியான தி. ஜானகிராமனின் கோதாவரிக் குண்டு’ சிறுகதையிலிருந்து சில பகுதிகளைத் தருகிறேன்…

***

பழைய பேப்பர்காரன் தராசு தெய்வீகக் கொல்லன் கைவேலை. ஆனையை வைத்தால் ஆறு பலம் காட்டும். ஆறுமாச தினசரிக் காகிதம் எந்த மூலை?

கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக் கொண்டு இப்பால் அப்பால் திரும்பாமல் தவம் புரிந்து முள்ளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“அம்மா இருக்காளோ?” என்று அந்தச் சமயம் பார்த்துக் குரல் கேட்டது. நிமிர்ந்தேன். காதுக்குக் காது புன்னகை நீள் அந்த அம்மாள் நின்று கொண்டிருந்தாள். பெயர் கங்காவோ, கோதாவரியோ – சரியாக ஞாபகம் இல்லை. ஏதோ நதியின் பெயர்தான். இடுப்பில் எதையோ இடுக்கி, அதை முந்தானையால் மறைத்துக் கொண்டிருந்தாள்.

“ஊள்ளே இருக்கா – போங்கோ” என்றேன். கச்சம் ஆட, கூடத்தைக் கடந்து உள்ளே போனாள் அம்மாள்.

தராசு முள்ளைப் பார்த்தேன். தெய்வீக முள்ளாயிற்றே அது! அறுபது காகிதமானால் என்ன? அரைக் காகிதமானால் என்ன? நடுநிலை பிசகுமோ! – ஹூம் , நமக்கென்று சொந்தமாகத் தராசு வைத்துக்கொள்ள எப்போது காலம் வரப்போகிறதோ, கை வரப்போகிறதோ, ஈசுவரா!

கடைசி வாக்கியத்தை வாயைவிட்டே சொல்லி விட்டேன். இப்படி ஏமாறுவதை எந்தப் புழுதான் சகிக்கும்?

“சாமி! இந்தத் தராசைப் பார்த்து இப்படிச் சொல்றீங்களே. எளுதின கார்டுக்கும் எழுதாத கார்டுக்கும் வித்தியாசம் காட்டும் சாமி. உங்களுக்குச் சந்தேகமா இருந்தா கடையிலே போய் ஒரு தராசை வாங்கிட்டு வாங்க.. என்னாத்துக்குப் பொல்லாப்பு?”

கடைக்குப் போக ஏது நேரம்? அதுவும் காலையில் ஒன்பதரை மணிக்கு வியாபாரத்தை கவனிப்பானா, தராசைக் கடன் கொடுப்பானா கடைக்காரன்? இன்னும் அரைமணிகூட இல்லை, ஆபீசுக்குக் கிளம்ப. குளித்துச் சாப்பிட்டாக வேண்டும்! ஏதாவது காசைக் கண்ணால் பார்த்தால் போதும் போலிருக்கிறது. இல்லாவிட்டால் ஞாயிற்றுக் கிழமையை விட்டு ‘வீடு போ போ, ஆபீஸ் வா வா’ என்கிற வியாழக்கிழமையாகப் பார்த்துப் பழைய காகிதம் விற்க உட்காருவானேன்! இருள் இரண்டு மூன்று உருவத்தில் பயமுறுத்துகிறது. மின்சார பில் கட்டும் கடைசித் தேதி கடந்து இரண்டு மாதங்களாகிவிட்டன. இன்று கட்டாவிட்டால் இருள் கவிந்துவிடும். ‘தக் தக் தக்’கென்று குதித்து , ஏற்றின ஒரு நிமிஷத்தில் அணைந்து விடுகிற அரிக்கேன் விளக்கோடு போராட முடியாது. பெண் முகத்தைத் தூக்கிக்கொண்டு உள்ளே உட்கார்ந்திருக்கிறாள். பள்ளிக்கூடம் போக மாட்டாளாம். ஏதோ சாமியாருக்கு எட்டணாக் கொடுக்க வேண்டுமாம். இது வாரப்பிடுங்கல், கொடுக்கிற சம்பளம் பற்றாதென்று, போன மகான்களின் பேரையெல்லாம் சொல்லிக்கொண்டு வரி வைக்கிற கான்வென்ட் பள்ளிக்கூடத்துப் பிடுங்கல். எட்டணா இல்லாமல் இன்று அவள் அமைதியைக் காண முடியாது.

ஆறு மாசத் தினசரித் தாள்கள் வாரப்பத்திரிக்கைகள் எல்லாமாகப் போட்டு ஆறரை ரூபாய் வந்தது.

“எத்தனைக் கொடுத்தான்” என்று பேப்பார்காரன் போன கையோடு வந்தாள் கௌரி.

“ஆறரை ரூபாய்.”

“ஆறுமாசப் பேப்பருக்கா?”

“இப்ப ஏன் பதர்றே! அவன் இருக்கிற போதுனா பதறியிருக்கணும்”

“நான் உள்ளே பேசிண்டிருந்தேன்!”

“அப்ப இங்கே வந்து பேசாதே.”

“பேசலே. எனக்கு இரண்டு ரூபாய் வேணும்.”

“இரண்டு ரூபாயா! என்னத்துக்கு?”

“வேணும்.”

“எலெக்ட்ரிக் பில் மூணே கால் ரூபாய்; உன் பொண்ணுக்கு எட்டணா. உனக்கு இரண்டு ரூவா. மீதி முக்கால் ரூபா வச்சிண்டு நான் என்ன பண்ணுவேன்? டிபன், வெத்திலை, சீவல், பஸ்ஸு!”

“டிபன் கட்டி வைச்சிருக்கேன் – மிளகு அவல் பண்ணி”

“காப்பி?”

“தர்மாஸ் பிளாஸ்கிலே போட்டு வைச்சிருக்கேன்.”

‘வெத்திலை பாக்கு?”

“அதுவும் மடிச்சு வைச்சிருக்கேன்.”

“சரி, வியாழன், வெள்ளி, சனி, மூன்று நாட்கள் பஸ்ஸூக்கு ஆச்சு. திங்கட்கிழமை என்ன பண்றது?”

“அதுக்கு இப்ப என்ன? அப்புறம் பார்த்துக்கலாம்.”

“எப்படி பார்த்துக்கிறது?”

“பாட்டுக்கார சுப்பிரமண்யய்யரைப் போய்க் கேட்கிறது.”

ஸப்த நாடியும் ஒடுங்கிவிட்டது எனக்கு. என் வாயை மூடி முத்திரையிடப் பாட்டுக்கார சுப்பிரமண்யய்யரின் பெயரை கௌரி உபயோகிக்கிற வழக்கம் இரண்டு வருஷங்களாக வலுத்து வருகிறது. பாட்டுக்கார சுப்பிரமண்யய்யர் தொள்ளாயிரத்து ஐம்பத்தாறாம் வருஷம் பத்து ரூபாய் நாளைக்கு என்று மனச்சுவரில் செதுக்கிவிட்டுப் போய்விட்டார். கடன் கேட்காது போச்சு என்பார்களே என்று தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்பதாம் வருஷத்திலிருந்து அவரைக் கேட்கத் தொடங்கினேன். ஓடி ஒளிந்தார், குழைந்தார், கெஞ்சினார், காசை மட்டும் இளக்கினபாடில்லை.

கடைசியில் ஒருநாள் வந்தார். ’தலைவாசல்’ ஆபீஸில் மானேஜர் உங்களுக்கு வேண்டியாவளாமே. என் பையன் படிப்பை முடிச்சிட்டான். ஒரு வருஷமாச்சு. நூறு மனுப் போட்டாச்சு. வேலை கிடைக்கலே.. நீங்க அவர்களைப் பார்த்து..” என்று கெஞ்சினார். ‘சரி’ என்றேன். இப்போது நான் அவரைக் கண்டு ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறேன். ”இந்தத் தலைவாசல் மானேஜரை..” என்று என் தலையைக் கண்டதுமே ஆரம்பித்துவிடுகிறார். அவருடைய குடுமியையும், பச்சை சைக்கிளையும் ஒரு மைலுக்கு அப்பாலே அடையாளம் கண்டு என் கால் மிக அருகேயுள்ள சந்தில் பதுங்கி விடுகிறது. “அந்த..தலைவாசல் மானேஜரை” என்று மனசில் குரல் எழுந்து விரட்டுகிறது.

….

ஆபிதீன் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும், ’நாலு மணிக்கு ஒரு டீ சாப்பிடுவோம்னா வெறும் பையிலே கையைவிட்டு ஆட்டவேண்டியிருக்கு. இதில் கடன் கொடுக்கனுமோ?’ என்ற சலிப்போடு ஆனால் மனைவியின் நச்சரிப்பு தாளாமல் ஒரு ரூபாய் கொடுக்கிறார் கதைநாயகன் (கவனிக்கவும், ஜானகிராமன் அல்ல!) . கங்காபாயிடமிருந்து கோதாவரிக் குண்டு வாங்கப்படுகிறது. புளிபோட்டு தேய்த்து பளபளத்தது. கங்காபாயின் கணவர் தத்தோஜி ராவ் பற்றி அற்புதமாக ஓரிரு பக்கங்கள் எழுதும் ஜானகிராமன்,‘அச்சாரம் கொடுத்துப் பண்ணினாற் போலப் படைத்துவிட்டு, அதிர்ஷ்டத்தையும் புத்தியையும் கழித்துவிட்டு..சை! கடவுள் இவ்வளவு சராசரிக்குக் குறைவான படைப்பாளியா?’ என்று நொந்து கொண்டு உட்காரவைக்கிறார் கதைநாயகனை. அப்புறம்? தராசு விசயம் இன்னும் இருக்கிறது :

…..

‘என்னய்யா! பிரமாத யோசனையா இருக்கு இன்னிக்கு! என்னமோ சுவரைப் பார்க்கிறீர்! தரையைப் பார்க்கிறீர்! கொஞ்சம் எழுதறீர்! நிற்கிறீர்!” என்று கத்தினான் சிரஸ்தார் பக்கிரிசாமி.

“ஒன்றுமில்லை. நீ உன்னுடைய வேலையைப் பாரு!”

“என்ன சொல்லேன்! நானும் தெரிஞ்சுக்கறேன்!”

“தெரிஞ்சு என்ன பண்ணப் போறே? இந்தாடாப்பா கஷ்டப்படாதேன்னு பத்து ரூபாயைத் தூக்கிக் கொடுத்துடப் போறியா?”

”ஓகோ- அப்படியா சமாசாரம்! என்ன இப்படி? தேதி பத்துதானே ஆச்சு! அதுக்குள்ளியும் அள ஆரம்பிச்சிட்டியே.. ஏனப்பா! எனக்குப் பத்தும் அஞ்சும் கொடுக்க இயலாது. இரண்டு நாள் பொறுத்துக்க! நானும் அப்ப உன்னோட சேர்ந்து அளுவறேன்!”

“ஏன்! நீ நீயூஸ் பேப்பர் எல்லாம் மாசா மாசம் போட்டுடறியோ?”

“ஓகோ அதுவும் ஆயிடிச்சா? பலே ஆளுடாய்யா!”

***

[அவ்வளவுதான் இந்தக் கதையில் வரும் ‘தராசு’ சமாச்சாரம். முழுக் கதையையும் – நேரமிருந்தால் – பிறகு பதிவிடுகிறேன். அதுவரை பொறுக்க இயலாத நண்பர்கள் அம்ருதா பதிப்பகத்தை நாடலாம். நன்றி]

1 பின்னூட்டம்

  1. Jeyakumar said,

    08/03/2011 இல் 18:06

    நன்றி அண்ணாச்சி.. நீங்க தட்டச்சிப் போடுங்க. இப்போதைக்கு ஆர்டர் செஞ்சு கைக்கு கிடைக்குறதுக்குள்ள படிக்கிற ஆசையெல்லாம் போயிரும்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s