பூமியில் உலவிய புல்லாங்குழல்

எங்கள் ’எழுத்தும் எண்ணமும்’ குழுமத்தின் எழில்வேந்தரான கலைமாமணி ‘மரபின்மைந்தன்’ முத்தையா அவர்கள் 2011 பிப்ரவரி 16&25 தேதிகளில் கும்பகோணத்திலும் தஞ்சையிலும் நடைபெற்ற மீலாது நபி விழாவில் ஆற்றிய உரைகளின் சில பகுதிகளைப் பதிவிடுகிறேன்.  அனுமதி கேட்டதுமே ‘நன்றாகப் போடுங்கள்’ என்று ஐயா சொன்னதற்கு அளப்பரிய நன்றிகள். நம்ம முஸ்லிம் மக்க சந்தோசமா இருக்கனும்; அதான் முக்கியம்!

***

பூமியில் உலவிய புல்லாஙகுழல்

‘மரபின்மைந்தன்’ முத்தையா

நபிகள் நாயகம் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்றும்,அவர் வழியே இறைவாசகங்கள் அருளப்பட்டன என்றும் இசுலாம் சொல்கிறது. கோடிக்கணக்கானவர்கள் பின்பற்றும் ஒரு மார்க்கத்தின் மறைநூலை வெளிப்படுத்தியவர் எழுதப்படிக்க அறியாதவர் என்பதில் முக்கியமான ஓர் அம்சம் இருக்கிறது. புல்லாங்குழல் இசையின் பிறப்பிடமாக இருப்பதற்குக் காரணமே அதிலுள்ள வெற்றிடம்தான்.

தன்னுள் இருக்கும் அந்த வெளியினால்தான் உள்நுழையும் வளியை புல்லாங்குழல் இசையாக்குகிறது.”வண்டு துளைத்த மூங்கிலாக வாழ்க்கை வேண்டிப் பிரார்த்தனை!வந்து புகுந்து போகும் காற்று வானில் கலக்கும் கீர்த்தனை”என்று நான் முன்பொரு முறை எழுதிய பாடல் நினைவுக்கு வருகிறது.

ஓஷோவின் புத்தகங்களில் ஒன்று,மூங்கில்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும்.Dedicated to the bamboos for their inner emptiness என்ற குறிப்புடன் வந்த அந்தப் புத்தகத்தின் தலைப்பு இப்போது எனக்கு நினைவிலில்லை.தன்னை இறைவனிடம் ஒரு புல்லாங்குழலாக நபிகள் ஒப்படைத்ததாலேயே அவர் வழியாக இறைவசனம் இறங்கியிருக்க வேண்டும். “எனதுரை தனதுரையாக் கொண்டு” என்று திருஞானசம்பந்தர் பாடியதும்,”நானுரைக்கும் வார்த்தையெலாம் நாயகன்தன் வார்த்தை” என்று வள்ளலார் பாடியதும் இங்கே ஒப்புநோக்கத்தக்கவை.

நபிகள் நாயகம் இறைத்தூதராகவும் ஆட்சியாளராகவும் இருந்திருக்கிறார்.தூதருக்கான இலக்கணம் தமிழிலக்கியப் பரப்பில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. தூதர் என்பவர் கிளிபோல் இருக்க வேண்டும்.சொல்லப்பட்டதைச் சொல்ல வேண்டுமே தவிர தன் கருத்தை அதில் ஏற்றக்கூடாது என்பதே இதன் பொருள்.இது அரசியல் தூதர்களுக்கு மட்டுமின்றி ஆன்மீகத் தூதர்களுக்கும் பொருந்தும்.

தனக்கு முருகன் தந்த அனுபவத்தை,அருணகிரிநாதர், “கந்தரனுபூதி” என்ற நூலாகப் பாடினார்.அப்போது அவர் கிளிரூபத்தில் இருந்தார் என்று சொல்வார்கள். இறைவன் தனக்கு சொன்னதை அப்படியே வெளிப்படுத்தினார் என்பதுதான் இதன் பொருள்.

இறைவன் நபிகள் வழியே சொன்னதை ஓரெழுத்தும் மாற்றாமல் திருக்குரான் என்று இசுலாம் பதிவு செய்து கொண்டது. நபிகளின் வாசகங்கள் ஹதீஸ் என்ற பெயரில் பதிவாகியிருக்கின்றன. அடுத்து நம்மை வியப்பிலாழ்த்துவது நபிகள் ஏற்படுத்திய தாக்கம்.அவர் வாழ்ந்த காலத்திலும் , அதைவிடக்கூடுதலாக அவர் காலத்துக்குப் பிறகும் மிகப்பெரிய தாக்கத்தை நபிகள் மனித சமூகத்தில் தன் வாழ்க்கைமுறையால் ஏற்படுத்தியிருக்கிறார். அவர் நடையுடை பாவனைகள் பற்றி ,இயல்புகள் பற்றி,அவருக்கிருந்த நரைமுடிகளின் தோராயமான எண்ணிக்கை பற்றிக் கூட விவரணைகள் கிடைக்கின்றன.

உஹது போரில் நபிகளுக்கு பல் உடைந்ததாக ஒருவர் அறிகிறார்.எந்தப்பல் உடைந்ததென்று தெரியவில்லை.உடனே தன்னுடைய எல்லாப் பற்களையும் உடைத்துக் கொள்கிறார். இந்தச் செய்தி கண்ணப்ப நாயனாரின் வரலாற்றை நினைவுபடுத்துகிறது. அன்பின் அடிப்படையில் செய்யப்படும் இந்தத் தியாகத்தைத்தான் பல்லுக்குப் பல்,கண்ணுக்குக் கண் என்று சொன்னார்கள் போலும்!!

நபிகள் வாழும் காலத்தில் நடந்த சில சம்பவங்கள் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.நபிகள் மதீனாவில் வாழ்ந்த போது ஒரு குதிரையை வாங்க முற்படுகிறார். விலை பேசி முடிவாகிறது.கையில் பணமில்லை.தன்னுடன் வீட்டுக்கு வருமாறும் உரிய தொகையைத் தந்துவிடுவதாகவும் நபிகள் சொல்கிறார்.வரும் வழியிலேயே வேறொருவர் கூடுதல் பணம் தருவதாகச் சொல்ல அந்தக் குதிரைக்காரன் விற்பதற்கு இசைகிறான்.வாய்மொழி ஒப்பந்தத்தை மீறுவது முறையில்லை என்று நபிகள் வாதாடுகிறபோது அவருடைய நண்பர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள்.”ஒப்பந்தம் நடந்தபோது யாரும் சாட்சிகள் இருந்தனரா?”என்று கேட்கிறார்கள்.இல்லையென்றதும் நபிகள் சார்பாக யாரும் வாதாடவில்லை. அப்போது நபிகளின் மற்றுமொரு தோழர் அந்த இடத்திற்கு வந்து சேர்கிறார்.விஷயம் தெரிந்ததுமே,”நீ ஒப்பந்தத்தை முறிப்பது தவறு”என்று குதிரைக்காரனிடம் வாதிட்டார்.”சாட்சிகள் யாருமேயில்லாத உரையாடலில் என்னை நீ எப்படி நம்புகிறாய்?’ என்று நபிகள் கேட்டார்.”நபியே ! இறைவன் இருக்கிறார் என்று நீங்கள்
சொன்னீர்கள்.நம்பினோம்.இறைவசனங்கள் என்று நீங்கள் சொன்னவற்றை இறைவசனங்கள் என்று நம்பினோம்.அதேபோல இப்போது நீங்கள் சொல்வதை முழுமனதோடு நாங்கள் நம்ப வேண்டும்” என்றார்.ஒரு தலைவர் சமூகத்தில் ஏற்படுத்தக் கூடிய அழுத்தமான நம்பிக்கைக்கு இது ஓர் அடையாளம்.

நபிகள் அற்புதங்கள் சாராமல் வாழ்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம்.அவர் காய்ச்சலில் துன்புற்ற போது,இந்த சிரமத்தை நீங்கள் தாங்கிக் கொள்வதால் என்ன பயன் என்றொருவர் கேட்டார். துன்பத்தை நான் முழுமனதுடன் சகித்துக் கொள்கிறபோது “மரங்களில் இருந்து இலைகள் உதிர்வதுபோல என் பாவங்களை இறைவன் உதிர்ந்துவிடச் செய்கிறான்” என்றார்.

அண்டை வீட்டுக்காரர்களுடன் உறவு பெரும்பாலும் அற்றுப்போன நிலையிலேயே பெருநகரங்களில் பலரும் வாழ்கிறார்கள். பக்கத்துவீட்டுக்காரருக்குசொல்வதுபோல ஒரு கவிதையை பல்லாண்டுகளுக்கு முன்னர்எழுதியிருந்தேன்..

“விரிந்த கரம்போல் நகரம்-கரத்தில்
 பிரிந்த விரல்களாய் வீதிகள்-விரலில்
 ஒதுங்கிய நகம்போல் வீடுகள்-அப்புறம்
 நகங்களில் அழுக்காய் நீயும் நானும்”

இறைவனுக்குப் பிரியமானவனாக ஒருவன் இருக்க வேண்டுமென்றால் அண்டைவீட்டுக்காரனிடம் அன்பாக இருக்க வேண்டும் என்ற இஸ்லாத்தின் கொள்கை பெரும் ஆசுவாசம் தருவதாக இருக்கிறது.

அன்னையின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது என்கிறது இஸ்லாம். நபிகளிடம் ஒருவர் கேட்டார்,”என் அன்னை என்னை இருபது வயது வரை கண்ணும் கருத்துமாக வளர்த்தாள். அவளுடைய முதுமைக்காலத்தில் நானும் இருபது வருடங்கள் அதேபோல கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டேன். இரண்டுக்கும் சரியாகி விட்டதல்லவா?” நபிகள் தந்த பதில் அழகானது.அவர் சொன்னார்,”ஒருபோதும் அது இணையாகாது.அன்னை உன்னை வளர்க்கிறபோது,நீ வளர்ந்து வாலிபனாகி வாழ வேண்டும் என்ற கண்ணோட்டத்திலேயே வளர்க்கிறாள்.ஆனால் நீயோ அவளை கடைசிவரை நன்றாகப் பார்த்துக் கொள்ளும் எண்ணத்தில் பார்த்துக் கொள்கிறாய்.அவள் காத்திருந்தது உன் வாழ்வுக்காக.நீ காத்திருந்தது அவள் சாவுக்காக.இரண்டும் எப்படி நிகராகும்?”என்றாராம் நபிகள்.

எல்லாவற்றையும் விட அறிவுக்கு நபிகள் தந்த முக்கியத்துவம் நம்மைக் கவர்கிறது.”நூறு வணக்கவாளிகளை விட ஓர் அறிவாளி மேலானவன்.ஓர் அறிவாளிக்காக மலக்குகள் எனப்படும் தேவதைகள் தம் சிறகுகளை விரிக்கின்றன.ஓர் அறிவாளிக்காக வானம்,பூமி,தண்ணீர்,அனைத்துமே பாவமன்னிப்பு கேட்கின்றன ” என்றார் நபிகள்.மனிதகுலத்தின் மீது மகத்தான  தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமைகளில் அவர் முக்கியமானவர். தானோர் ஆளுமை என்ற எண்ணமே இல்லாத ஆளுமை என்பது அவரது பெருமைகளைப் பெருக்குகிறது.

***

நன்றி : கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா , ’எழுத்தும் எண்ணமும்’ குழுமம் |முத்தையா ஐயாவின் மின்னஞ்சல் :  marabinmaindan@gmail.com

11 பின்னூட்டங்கள்

 1. 28/02/2011 இல் 16:10

  கட்டுரையும் அழகு. அதில் அவர் மேற்கோள் காட்டியிருக்கும் அவருடைய நகரம் பற்றிய கவிதை அற்புதம்.

 2. 28/02/2011 இல் 17:36

  விழாவுக்குப் பொருத்தமான அருமையான பேச்சு.

  //எல்லாவற்றையும் விட அறிவுக்கு நபிகள் தந்த முக்கியத்துவம் நம்மைக் கவர்கிறது.”நூறு வணக்கவாளிகளை விட ஓர் அறிவாளி மேலானவன்.ஓர் அறிவாளிக்காக மலக்குகள் எனப்படும் தேவதைகள் தம் சிறகுகளை விரிக்கின்றன.ஓர் அறிவாளிக்காக வானம்,பூமி,தண்ணீர்,அனைத்துமே பாவமன்னிப்பு கேட்கின்றன ” என்றார் நபிகள்.//

  இது ஆதாரபூர்வமானதா நானா?

 3. மரபின் மைந்தன் said,

  28/02/2011 இல் 19:30

  மஜீத் அய்யா
  இந்தப் பேச்சுக்காக இணையத்திலும் ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்ட திருக்குரான் நூல்களிலிருந்தும் தரவுகள் திரட்டினேன்.
  என் மிகுந்த அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய நாகூர் ரூமி அவர்களின் “இஸ்லாம் -ஓர் எளிய அறிமுகம்”என்ற நூலும் பெரிதும் கை கொடுத்தது.அறிவாளிகள் பற்றிய அவர்தம் கருத்துக்கள் ரூமி அவர்கள் நூலில் 446-448 பக்கங்கள் வழியும் அறிந்தேன்.

 4. 28/02/2011 இல் 20:19

  மஜீது நானா, அறிவாளி; அறி+வாளி அல்ல தன்னலம் காணா ஒருவன்; தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று கருதுகிறானே அவன்; பிரதிபலன் எதிர்பாராமல் தான் பெற்ற நல்லறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கிறானே அவன்தான் உண்மையான அறிவாளி.

  நூறு வணக்கவாளிகள் என்றால், அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கட்டிவிட்டு அப்புறம் அப்பா கடையிலெ சாப்பிடலாமா இல்லை மதுக்கூர் கடையிலெ சாப்பிடலாமா? இல்லை ஆலிம்சா சொன்ன ஹதீஸுக்கு ஆதாராம் கேட்கலாமா? அப்புறம் அஸ்ஸலாமு அலலக்கும் என்று தொழுகிறானே அவனை மாதிரி நூறல்ல ஆயிரம் பேரைவிட ஒரு அறிவாளி சிறந்தவன். – இதுதான் ரஸுலுல்லாஹ்வின் கருத்து. இதுக்கெல்லாம் ஆதாரம் தேடாதீங்க.

 5. maleek said,

  28/02/2011 இல் 21:47

  முத்து அய்யா

 6. 28/02/2011 இல் 23:14

  அருமை அய்யா உங்கள் அன்பான வாசகங்கள். கவிதை வரிகளும் அற்புதமாக உள்ளது.

  நாம் அனைவருமே புல்லாங்குழல் தான். நம் சுயத்தின் அந்த நிலையை நபிகள் உணர்ந்து வாசிப்பவனிடம் முழுமையாக ஒப்படைத்து விட்டார். நாமோ அகப்பெருமை என்னும் அழுக்கை சேர்த்து புல்லாங்குழலின் அகத்தை அடைத்து விட்டோம் பின் நாதம் எங்கே வரும். நம் நாற்றம் தான் வருகின்றது.

 7. Jeyakumar said,

  03/03/2011 இல் 10:52

  அருமையான, இன்றைய தேதிக்கு தேவையான பேச்சு. நல்ல நல்ல உதாரனங்கள். இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம் நானும் வைத்திருக்கிறேன். முழுதும் படித்திருக்கிறேன். (கிழக்கு எனக்கு இலவசமாக அனுப்பி வைத்த புத்தகம்) கல்லூரியில் படித்தபோது எனது நண்பன் இஷ்ஹாக் ”நபிமொழி நானூறு” என்ற ஒரு புத்தகம் வைத்திருந்தான். அதுதான் நான் படித்ததிலேயே இஸ்லாமிய புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்தது. இப்போது அந்தப் புத்தகம் கிடைக்கிறதா? ஆமெனில் எங்கு என்ற தகவல் கிடைத்தால் நல்லது.

 8. 02/08/2011 இல் 20:31

  Happy Birthday Sir!!!!

 9. Malik said,

  18/05/2012 இல் 09:16

  “புல்லாங்குழல் இசையின் பிறப்பிடமாக இருப்பதற்குக் காரணமே அதிலுள்ள வெற்றிடம்தான்.”

  அருமையான உதாரணம்.

  இதே உதாரணத்தினை ரூமி அவர்களும் நோன்பினைப் பற்றிக் கூறும்போது கையாண்டிருப்பார்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s