தாஜ்… இதெல்லாம் ஒமக்குப் புரிஞ்சிச்சா?

இன்றையக் கோட்டா : தாஜின் இரு கவிதைகள் (தாஜின் விளக்கத்தோடு!) . நாளைக்கு  ஆதவனின் ’புகைச்சல்கள்’ (சிறுகதை). நாளன்னைக்கு , ஜம்ப் பண்ணி அடிக்கும் ஜாஃபர்நானாவின் ஜாலியான ‘நபிதினம்’, இன்ஷா அல்லாஹ் (இதெல்லாம் கரெக்டா சொல்லிடுவேன்). நான் மட்டும் எழுதமாட்டேன். இலக்கியம் பிழைத்துப் போகட்டும்.

***

அன்புடன்
ஆபிதீன்…..

கவிதையோடு வந்திருக்கிறேன்.
உரைநடையைப் படிக்க
நம் வாசகர்கள்
ரொம்ப சிரமம் கொள்கிறார்கள் என்பதால்
இந்த எளிய ஏற்பாடு.
இன்றையக் ‘கோட்டாவை’
பார்த்த நாழிக்கு முடித்துக் கொள்வார்கள்.
இதைவிட எளிய ஏற்பாடு
இன்னொன்று உண்டா என்ன?

*

‘நிழல் மனம்’/ ‘உயிரிசை’ என்று
இரண்டு கவிதைகள்..
ஒன்று, மனம் சார்ந்தது
இன்னொன்று
தொலைந்து போன
கவிதைவயமான நட்பு சார்ந்தது.

*

மனம் என்கிற மனசாட்சி
மனிதனை
சதா சர்வகாலமும்
பின் தொடர்வதாகவே இருக்கிறது..

வளர்ப்பின் வழியே…
நீதி, நேர்மைகளின் போதிப்பால்… 
மனிதன் அதற்கு பயந்தவனாகவே
வடிவமைக்கப் படுகிறான்.

துரதிர்ஷ்டவசமாய்
மனிதன் கற்றுத் தேறும் காலத்தில்
மூளையின் பலத்தால்
மனதையும் மனசாட்சியையும்
தனக்கு அடக்கமாக
வடிவமைத்துக் கொள்கிறான்.
இருள் சார்ந்த நிலையில்
அதாவது,
அவன் மறைவான நிலையில்
தப்புகளுக்கும்/ தவறுகளுக்கும்
உட்படும்போது
மனசாட்சியை
தூர ஒதுக்கிவைத்தவனாக
எல்லாவற்றையும் மீறுகிறான்.
ஆனாலும்….
மனசாட்சியோடு இருப்பதாக
நித்தம் அவன் கட்டும் நாடகம்
அலாதியானது.
அடுத்தவர்களை மிரள வைப்பது.

மனதிற்கும் மனசாட்சிக்கும் பயந்து சாகும்
சிலரைக் கண்டு உள்ளார்ந்து நகைத்தவனாகவும்
தனது பாதையினையே
வெற்றியின் இலக்காகவும் காணும் அவன்
தடங்களின்றி அதன் வழியே
பயணமும் தொடர்கிறான்.

இங்கே…
கவிதையில் சுட்டப்படும் ‘நிழல்’
குறியீடு மட்டுமே.

இதுதான்
இவ்வளவுதான்
‘நிழல் மனம்’
 
*

தொலைந்து போன கவிதைவயமான நட்பை/
அதன் உள்ளார்ந்த தன்மைகளை/
அதன் கீர்த்திகளை/
தீர்மானமாய் பேசும்….
மனம் கசியும்…
இழப்பின் கவிதையாக
விரிவதுதான்….
‘உயிரிசை’

*

மற்றப்படிக்கு….
இக் கவிதைகளின்
உக்ரம் குறித்தும்/
கட்டுமானம் குறித்தும்/
அழகியல் குறித்தும்/
இன்னுமான….
இக் கவிதைகளின் எளிமை குறித்தும்
நம் வாசகர்கள் பேசுவார்களென
நம்புவோம் ஆபிதீன்.

“யோவ்…
இதெல்லாம் உனக்குப் புரிஞ்சிச்சா?”ன்னு
கேட்டுடாதீங்க.
பதில் சொல்வது கஷ்டம்.
புரிஞ்சா நான் ஏன்
இத்தனை இழுப்பு இழுத்துக்கிட்டு இருக்கேன்.
என்ன செய்ய…
எழுதியவன் என்கிற முறையில்
எதையாவது
எழுதினால்தானே மரியாதை!

தாஜ்.

*
நிழல் மனம்

உதயத்தின் சுடரொளி பின் தொடர
முன்னேறும் விரைவில்
என்னைவிட நீளும் அது
திருப்பத்தில்
முன்னே பாய்ந்தும் வழிநடத்தும்
சூல்கொண்ட காலமாய்
அது காட்டும் வண்ணம்
பிடிபடாத கலவை!
ஒவ்வொரு அடியிலும்
அது இல்லாமல் நானில்லை
தகிப்பின் உச்சத்தில்
அடிமையின் மௌனமாய்
காலடியில் கிடையாய் கிடக்கும்
ஒளிவெளி தாழும் காலம்
திரும்புகையில் பின் தொடர அது
கையிலந்தக் கதையை
வாய்மூடிக் கதைத்து வரும்.
 
தீண்டும் துரும்பும் ஆகாத
கண் மறையும் இருள் பெருக்கில்
எதிர்படுவதில்லை அதுவும்
தேடுவதில்லை நானும்
பழக்கப்படுத்தப்பட்ட
அதன் பெருமூச்சு
உறுமலாய் எனதுள் நெருட
எழும் பயம் மூடிருளில் கறைந்துவிடும்.

வளர்ப்பை நாளும் பேணாது
தொலைத்ததை
தினைக்கும் தேடித் திரிபவர்களையும்
அதே கதியென உளம் மருக அதனுள்
புதையுண்டுப் போவோர்களையும் நகைத்து
வித்தைக்காரனின்
தடுமாறா வெற்றி மிதப்பில்
விடியல் தோறும் தொடர்கிறது
அதனோடிழைந்தப் பயணம்.

***

உயிரிசை

காற்றின் மிதந்து வரும்
பேரிரைச்சல்களுக்கிடையே
கண்டுணர்ந்ததோர் கானயிழை
எங்கோ அறுபட்டுவிட்டது

பூக்களை மொய்க்கும்
வண்டுகளின் ரீங்காரமல்ல
தத்தித் தாவும் சிட்டுக்களின்
கொஞ்சிக்குழாவலுமல்ல
மரங்களின் ஆட்டமெழுப்பும்
ஆனந்த ரிதமோ
இலைகளின் படபடப்படக்கும்
சந்தோஷ தாளமோ
அங்கே மறைந்து கேட்கும்
கிளிகளின் காதல் மொழியோ
குயிலின் குதூகல ஆவர்த்தனமோ அல்ல
கவிதை வயமானது அது.
மரக்கிளையில் கட்டிவிடப்பட்ட தொட்டி
காற்றில் நிதானமற ஆடுகையின்
பிடிபடாத மொழி
குழந்தை பேசும் குதூகல மழலை!

நித்தம் பொசுங்கும்
ரணங்களின் வலியோடு
செத்துச் சரிகிற போதெல்லாம்
காற்றில் மிதந்து வரும் அது
மெல்ல காதோடு வருடி
ஹிருதயத்தை தட்டி
உயிர்ப்பித்து எழுப்பும்
பறக்க இறக்கைகள் தரும்
இன்னொரு லோகத்து
ஒளிப் பிரதேசத்தில்
இன்னொரு சுடராய் என்னை
எனக்கு காட்டித் தரும்
மந்திரமொழி அது.
வறண்ட காலப் பக்கங்களில்
உதிர்ந்து கிடக்கும் மலர்களிடையே
இன்றைக்கும் அதைத் தேடித் திரிகிறேன்.

***

நன்றி : கநாசு. தாஜ்  | satajdeen@gmail.com

3 பின்னூட்டங்கள்

 1. 15/02/2011 இல் 09:23

  தாஜ்:
  //கவிதையோடு வந்திருக்கிறேன்.
  உரைநடையைப் படிக்க
  நம் வாசகர்கள்
  ரொம்ப சிரமம் கொள்கிறார்கள் என்பதால்
  இந்த எளிய ஏற்பாடு.//

  ஆஹா, பேஷ்! பேஷ்!!

  கநாசு. தாஜ்: இனிமே தான் படிக்கணும். (ஹிஹி)

 2. kimberly said,

  22/02/2011 இல் 02:09

  as if!

 3. Jeyakumar said,

  24/02/2011 இல் 19:37

  இந்தக் கவிதை எழுதுறவங்களையெல்லாம் நாடு கடத்தனும்னு சொன்னா எவ்வளவு நல்லா இருக்கும்..

  🙂


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s