ஹிஜ்ரி அல்லாஹ் வழங்கிய காலண்டரா?

பீம்ஷென் ஜோஷியின் மரணம் – ஹிஜ்ரியில் – 1431-ம் வருடம் சஃபர் மாதம் 9ஆம் தேதி, குழம்பிட்டேன், 1432-ம் வருடம் சஃபர் மாதம் 19ஆம் தேதி…

***

ஹமீது ஜாஃபர்  அனுப்பிய ‘ஹிஜ்ரி’ கட்டுரை :

என்னுடன் வசிக்கும் நண்பர் அஷ்ரஃப் , ‘சமுதாய ஒற்றுமை’ என்ற பத்திரிக்கையைக் காண்பித்து, ”அண்ணே!  நாம் எவ்வளவு தப்பு பண்றோம், அழகான அரபி காலண்டரை நாம் சரியாகப் பின்பத்துறதில்லை, இதிலெ எழுதியிருக்காங்க பாருங்க ஹிஜ்ரி காலண்டரைப் பத்தி” என்றார்.  சமுதாய ஒற்றுமை பத்திரிக்கை த.மு.மு.க வின் மாத இதழ் என்று எனக்குத் தெரியும். அதில் நல்ல பல கருத்துக்கள், வரலாற்று நிகழ்வுகள் வந்து கொண்டிருக்கின்றன. இஸ்லாமியப் பத்திரிக்கைகளில் இதுவும் ஒன்று என்பதைத் தவிர வேறு எந்த முக்கியத்துவமும் நான் கொடுப்பதைல்லை. நண்பர் அஷ்ரஃப் கொடுத்த டிச 2010 இதழில்  ‘வரலாற்றுப் பின்னணியில் ஹிஜ்ரா காலண்டர்’  என்ற கட்டுரையைப் படித்தபோது முஸ்லிம் வெறித்துவம் புகட்டப்படுவதை உணரமுடிந்தது. இதை வேறு யாரும் எழுதியிருந்தால் மன்னித்து விடலாம் ஆனால் அந்த பத்திரிக்கையின் ஆசிரியரே எழுதியிருப்பது வேதனைக்குரியது.

உலகளவில் முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற மாயை பல்முனைகளில் தாக்குதல் நடந்துக்கொண்டிருக்கும் சமயத்தில் எண்ணெய் ஊற்றுவதுபோல் இச்செய்தி அமைந்துள்ளது. கட்டுரையில் ஹிஜ்ரி, கிருத்துவம், தமிழ் காலண்டர்களை அலசிப்பார்த்து அவைகள் சரியில்லை குழப்பம் நிறைந்தது ‘அல்லாஹ் வழங்கிய சந்திரக் காலண்டர்தான் சரியானது’ என்ற கருத்தை வலியுறுத்துகிறார் இந்த ஆலிம்சா.

அல்லாஹ் வழங்கியதா இல்லையா என்று பார்ப்பதற்குமுன் சில விசயங்களைப் பார்க்கவேண்டும். 1985/86 களில் எங்க ஹஜ்ரத் ஹிஜ்ரியையும் கிரிகோரியன் காலண்டரையும் ஒன்று படுத்தி perpetual calendar ஒன்றை CASIO FX-801P  Programmable Calculator ல் BASIC language ல் ப்ரோக்ராம் பண்ணிக்கொண்டிருந்தபோதுதான் உலகத்தில் எத்தனை வகையான காலண்டர்கள் இருக்கின்றன என்ற செய்தி எனக்கு தெரியவந்தது. அதில் memory போதவில்லை தவிர டிஸ்ப்ளே ஸ்கிரீன் சின்னதாக இருந்ததால் ஒவ்வொரு முறையும் பிரிண்ட் எடுக்கவேண்டியதாக இருந்தது. 1987 ல் Casio PB1000  என்ற பாக்கட் கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கிச் சென்றேன். புரோகிராமிலுள்ள சில குறைபாடுகளை நீக்கி அதில் மிகவும் சரியாக வரத்தக்க ரீதியில் வடிவமைத்தார்கள். 1-1-1 தேதியிலிருந்து infinite date வரை எந்த தேதியை தட்டினாலும் சந்திரத் தேதி (ஹிஜ்ரிக்கு முந்திய தேதி உட்பட) கிடைக்கும். வேலூர் பாக்கிஹாத்து சாலிஹாத்து மதரஸாவில் ஓதிய ஒரு மௌலவி, இண்டர்நெட் போன்ற எந்த வசதியும் இல்லாத காலத்தில் வீட்டில் இருந்துக் கொண்டே இப்படி ஒரு காலண்டரை உருவாக்கியது என்னைப் பொருத்தவரை பெரும் ஆச்சரியமாக இருந்தது. அவர்களின் மரணத்திற்கு பிறகு எனக்கு அதில் ஆர்வம் ஏற்படவில்லை தவிர இப்போது பொத்தானைத் தட்டினால் போதும் காலண்டர் கொட்டுகிறது. அந்த அளவுக்கு பல்வேறு அமைப்புக்களின் ப்ரோக்ராம் இருக்கின்றன. ஆனால் இந்த கட்டுரையைப் படித்தபின் கை அரிக்க ஆரம்பித்தது, பழைய ஆவணங்கள் இல்லாததால் நேராக இணையத்துக்குள் மூக்கை நுழைத்து மோப்பம் பிடித்தேன். அவைகளில் கிடைத்தவற்றை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

காலண்டர் முதன் முதலில் பண்டை காலத்து மனிதர்கள் (bronze age) இரவு பகல் மாறிவருவதை வைத்து நாட்களை வகைப் படுத்தினாலும் சந்திரனின் சுழற்சியை வைத்து மாதங்களை எலும்புகளில் குறித்து வந்தார்கள் என்று அறியமுடிகிறது. சந்திரக் காலண்டரை முறையாகப் பயன்பாட்டுக்கு முதலில் கொண்டுவந்தது மெஸபடோமியர்கள் (கி.மு.2800) என்றும் பண்டைய எகிப்தியர்கள் என்றும், ரோமானியர்கள் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலம் 27.321582 நாட்கள்(27D 7Hr 43.1Min) என்று கணக்கிடப்பட்டுள்ளது. என்றாலும் பூமியுடைய சுழற்சி, பூமியின் சுற்றுப்பாதை இவைகளினால் சந்திரன் ஒரு முழு சுற்று பெற (The synodic month) 29.530589 நாட்கள் (29D 12Hr 44min 2.9 s) ஆகின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு வருடம் முழுமைபெற அது எடுத்துக்கொள்ளும் காலம் 354.375 நாட்கள். இதெல்லாம் வானவியல் கணக்கு, இது நமக்கு தேவையில்லை. ஒரு பிறைக்கும் மறு பிறைக்கும் இடைப்பட்ட காலம் சரியாக 29/30 நாட்கள் வராததால் ஒரு மாதம் 29 ஆகவும் மறு மாதம் 30 ஆகவும் கணக்கிடப்படுகிறது. ஆக ஒரு வருடத்துக்கு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது

ரோமானிய சக்ரவர்த்தி ஜுலியஸ் சீசர் (45 கி.மு.) வானவியல் நிபுணர்களை வைத்து ஜுலியன் காலண்டரை உருவாக்கினார். இதில் 12 மாதங்களும் 365.25 நாட்கள் கொண்ட ஒரு வருடமும் வருவதால் 365 நாட்கள் கொண்டது ஒரு வருடமாகவும் துண்டு விழும் பகுதியை நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஆக்கி 366 நாட்களாகவும் கணக்கிட்டார்கள். இதை அடிப்படையாக வைத்து போப் கிரிகோரி XIII  என்பவரால் இப்போது புழக்கத்திலிருக்கும் ஆங்கிலக் காலண்டர் கண்டுபிடிக்கப்பட்டது 24 பிப்ரவரி 1582 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜூலியன் காலண்டரில் இருந்த சில தவறுகள் இதிலும் தொடர்ந்து வந்ததால் அவ்வருடமே திருத்தப்பட்டது 1582 அக்டோபர் 4ம் தேதி வியாழக்கிழமைக்குப் பிறகு மறு நாள் வெள்ளிக்கிழமை 15ம் தேதி வருகிறது.

ஜூலியன் காலண்டரும் கிரிகோரியன் காலண்டரும் பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றி வரும் காலத்தை வைத்தே கணக்கிடப்பட்டுள்ளது. ஆய்வின்படி எடுக்கும் காலம் 365.2564 நாட்கள். இதை அடிப்படையாக வைத்து நான்காண்டுகளுக்கு ஒரு நாள் கூடுதலாக எடுத்து 366 நாட்கள் கொண்ட லீப் ஆண்டாக எடுக்கப்பட்டுள்ளது. (Gregorian solar calendar is an arithmetical calendar. It counts days as the basic unit of time, grouping them into years of 365 or 366 days; and repeats completely every 146,097 days, which fill 400 years, and which also happens to be 20,871 seven-day weeks.[10] Of these 400 years, 303 (the “common years”) have 365 days, and 97 (the leap years) have 366 days. This gives an average calendar-year length of exactly 365.2425 days, or 365 days, 5 hours, 49 minutes and 12 seconds.)

ஒரு சூரிய வருடத்துக்கும் ஒரு சந்திர வருடத்துக்கும் இடையில் வித்தியாசப்படும் நாட்கள் 11. இது 3 வருடங்களில் ஒரு மாதம் மூன்று நாட்கள் அதிகமாகி 300 சூரிய வருடங்களில் 11 வருடங்கள் அதிகமாகி 311 சந்திர வருடங்கள் ஆகின்றன. எப்படி இருந்தாலும் -சூரிய காலண்டரும் சரி சந்திர காலண்டரும் சரி – சூரியன், பூமி, சந்திரன் இவைகளின் சுழற்சி(spinning), ஓட்டம் (orbiting) இவைகளை வைத்து துல்லியமாக நாட்களை கணக்கிட முடியாததால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நேரத்தில் மாற்றம் செய்து சரிசெய்ய வேண்டியுள்ளது. இது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாது ஜனாப் முஜிப் ரஹ்மான் உமரி அவர்கள் ’சந்திரக் காலண்டருக்கு நிகராக சூரிய காலண்டரை உருவாக்கவேண்டும் என்பதற்காக கி.மு.700 காலகட்டங்களில்..’ என்று தொடங்கி அதிலுள்ள குறைபாடுகளை வரிசைப்படுத்தி  ‘ஒவ்வொரு மாதத்துக்கும் அவர்களின் கடவுள் பெயரையும் தங்கள் பெயர்களையும் வைத்துக்கொண்டனர். துண்டு விழும் கால் நாளை பிப்ரவரியில் சேர்த்து லீப் வருடமாக்கிக் கொண்டனர், இப்படி குழப்பம் நிறைந்த கிருஸ்துவ காலண்டர் உலகை ஆண்டுக்கொண்டிருக்கிறது’  என்று எழுதியுள்ளார். (பக்கம் 20)

ஒருவர் புதிதாக ஒன்றை கண்டுபிடித்தால் தன் பெயரை வைத்துக்கொள்வது இயல்பு. சர் ஐசக் நியூட்டன் கண்டுபிடிப்பு ‘நியூட்டன் லா’; சர் சி.வி.ராமனுடையது ‘ராமன் எஃபக்ட்’; பிதாகரஸின் கணதவியலுக்கு ‘பிதாகரஸ் தேற்றம்’ அதுபோல  மாதங்களுக்கு ஜூலை ஆகஸ்ட் என்று அவர்கள் பெயரை வைத்துக்கொண்டதில் தவறு என்று சொன்னால் அப்துல் வஹாப் நஜ்தி என்ற சட்டாம்பிள்ளையுடன் சேர்ந்து குறு நில மன்னர்களை மண்டியிடச் செய்து நாட்டைப் பிடித்த முஹம்மது பின் சவுது  தன் பெயரை (சவுது) சவுதி அரேபியா என்று தன் நாட்டுக்குப் பெயர் சூட்டிக்கொண்டது தவறாகாமல் எப்படி இருக்கமுடியும்? (நஜ்தி எப்போதாவது கட்சி மாறிவிடுவானோ என்று பயந்து அவர்களுக்குள் சம்மந்தம் பண்ணிக்கொண்டது வேறு விஷயம்)

பெருமானார் அவர்கள் காலத்துக்கு முன்பிருந்தே சந்திரக் காலண்டரை அரேபியர்கள் பின்பற்றி வந்துள்ளனர். அந்த அடிப்படையிலேயே ஹஜ் உள்பட அவர்களுடைய எல்லா செயல்களும் நடைபெற்று வந்தன. இதில் எந்த மாற்றம் ஏற்படாமல் இஸ்லாத்தின் எல்லா செயல்களும் இறை உத்திரவுகளும் அமையப் பெற்றுள்ளன. பெருமானார் அவர்களும் அப்படித்தான் செயல்பட்டு வந்தார்கள். இன்று வரை அனைத்து முஸ்லிம்களும் மார்க்க சம்பந்தப்பட்ட அனைத்துக் காரியங்களையும் ஹிஜ்ரி காலண்டரை பின்பற்றியே செயல்பட்டு வருகிறார்கள். இது ஆலிம்சாவின் கண்ணுக்குப் புலப்படவில்லை

சந்திரக் காலண்டர் அல்லா வழங்கியதா?

’எண்ணிலடங்கா பிரச்சனைகளுக்கு மத்தியில் உள்ள கிருத்துவ காலண்டரை மனித இனம் முழுமையாக ஏற்கத் தக்க வகையில் கிருத்துவ உலகம் திணித்துக் கொண்டிருக்கும்போது மிகவும் துல்லியமாக, நாட்களைக் காட்டவே அல்லாஹ்வால் படைக்கப்பட்டுள்ள சந்திரக் காலண்டரில் BOLD முஸ்லிம் உலகம் அக்கரை செலுத்தாமல் இருப்பதுதான் மிகவும் வேதனைக்குரிய விஷயம்என்று ஆசிரியர் அங்காலாய்க்கிறார். (பக் 21)

சந்திரக் காலண்டரை அல்லாஹ் படைத்தான் என்றால் சூரியனை யார் படைத்தார்? அவைகளின் ஓட்டத்தை யார் நிர்ணயித்தார்? “தன்னுடைய வரையரைக்குள் (தவறாமல்) செல்லும் சூரியனும் (ஓர் அத்தாட்சியாகும்)” (அல் குர்ஆன்36:38); “சூரியன் சந்திரனை அணுகமுடியாது; இரவு பகலை முந்த முடியாது. (இவ்வாறே கிரகங்களும் நட்சத்திரங்களும்) ஒவ்வொன்றும் (தன்னுடைய) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.” (அல் குர்ஆன்36:40)

சூரியன் இல்லாமல் சந்திரனுக்கு ஒளி ஏது? ஓளி இல்லாவிட்டால் பிறை ஏது? பிறை இல்லாவிட்டால் காலண்டர் ஏது? “(தவறாது)ஒழுங்காக நடைபெற்றுவருமாறு சூரியனையும் சந்திரனையும் உங்களுக்கு பயனளிக்கக்கூடிய விதத்தில் (படைத்து)அமைத்தான், (மாறிமாறி வரக்கூடிய) இரவு பகலையும் உங்களுக்காக (அமைத்து அதில்) பயனடைய வகை செய்தான்.” (அல் குர்ஆன்14:33)

ஒரு முறை நபி(சல்) அவர்களிடம் சில யூதர்கள் வந்து, “ஒ முஹம்மதே, குகை மனிதர்கள் 300 ஆண்டுகள் இருந்ததாக இன்ஜீல் கூறுகிறது. உங்கள் குர் ஆனில் 300ம் பின் ஒரு 9 வருடங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. குர்ஆன் அல்லாஹ் இறக்கியதாக சொல்கிறீர்கள். இன்ஜீலும் அல்லாஹ் இறக்கியிருக்கும்போது உங்களுக்கு ஒரு மாதிரியாகவும் எங்களுக்கு ஒரு மாதிரியாகவும் எப்படி சொல்ல முடியும்? இதில் எது உண்மை? என்ற வினாவை வைத்தனர். அப்போது அருகிலிருந்த அலி (ரலி) அவர்கள் பெருமானார் அவர்களிடம் அனுமதிபெற்று “சூரியனைப் படைத்தவனும் அல்லாஹ்தான் சந்திரனைப் படைத்தவனும் அல்லாஹ்தான், உங்களுக்கு சூரிய கணக்குப்படி சொல்லியிருக்கிறான் எங்களுக்கு சந்திர கணக்குப்படி சொல்லியிருக்கிறான்” என யாருடைய மனமும் புண்படாதவாறு சரியான விளக்கத்தை அளித்தார்கள்.

ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை மிக எளிமையாக பதிலுரைத்து தெளிவுபடுத்தியுள்ளார்கள் அலி (ரலி) அவர்கள். இதையே நம்ம ஆலிம்சாவிடம் கேட்டால்..  “உங்க இன்ஜீல் மனுஷன் எழுதினது எங்க குர்ஆன்தான் அல்லாஹ் இறக்கியது அது சொல்றதுதான் சரி” என்று சண்டைக்கு வந்துவிடுவார்கள்.  

துல்லியமானதா?

‘மாத நாட்கள் 29 ஆகவும் 30 ஆகவும் கொண்ட சந்திரக் காலண்டர் வருட நாட்களாக 354-355 நாட்களைக் கொண்டதாக
மிகத்துல்லியமாக அமைந்துள்ளது. இந்த காலண்டர் மனித திருத்தங்களுக்கு அப்பாற்பட்டது.’ எதிர்வரும் பல நூறு வருடங்களுக்கு சந்திரனின் மிகத்துல்லியமான ஓட்டத்தை கணித்து ‘உம்முல் குரா’ காலண்டரை சவுதி அரேபியா பின் பற்றிவரும்போது (பக் 22) பிறை பார்ப்பதில் குழப்பம் எதற்கு? பிறை கமிட்டி  எதற்கு?

ரமலானையும் நோன்புப் பெருநாளையும் இரவு 11 மணிக்கும் 12 மணிக்கும் கொண்டுவருவது ஏன்?. பிறை மஃக்ரிபில் தோன்றி ஒரு சில  நிமிடங்களில் மறைந்துவிடும், பிறை பார்த்தாகிவிட்டது என்று பல குழப்பத்துக்கிடையில் பத்து மணிக்குமேல் அறிவிக்கிறார்கள். துல்லியத்தில் ஏன் இந்த குழப்பம்?

தமிழ் பஞ்சாங்கம்

பௌர்ணமி அன்று பிறை 13 ஆகவும் அமாவாசை அன்று பிறை 27 ஆகவும் இருக்கும் சிவகாசி காலண்டரையே நம்முடைய மதரஸாக்களும் இஸ்லாமிய நிறுவனங்கள் பின்பற்றுவது வேதனையான விஷயமாக (பக் 22) ஆலிம்சாவுக்குப் படுவது வேதனையானது.

பாவம் அவருக்குத் தெரியாது, நாம் எடுக்கும் முதல் பிறையை ஹிந்துக்கள் மூன்றாம் பிறையாக கணக்கிடுவார்கள் என்று. இன்னும் சொல்லப் போனால் நம்மைவிட ஆச்சாரங்களை அனுசரிக்கும் ஹிந்து மக்கள் சந்திர ஓட்டத்தை மிகத் துல்லியமாகப் பார்க்கிறார்கள். மத சடங்குகளுக்கும் சோதிட முறைகளுக்கும் சந்திர ஓட்டத்தை 30 பாகங்களாகப் பிரிக்கப்பட்ட ‘திதி’  முக்கியமாக கருதப்படுகிறது, எனவே அவர்களுடைய பஞ்சாங்கத்தில் பிறை எந்த நாழிகையிலிருந்து எந்த நாழிகை வரை தெரியும்; எந்த பருவத்தில்(கோணம்) தெரியும்; வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்வானதா இல்லை தெற்கு உயர்ந்து வடக்கு தாழ்வானதா இல்லை சமமாகத் தெரியுமா என்பதையெல்லாம்
குறிப்பிட்டிருப்பார்கள். (வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்வு என்றால் பிறை சற்றே வடக்கு திசையில் உயர்வாகவும் தெற்கு திசையில் தாழ்வாகவும் இருக்கும்; சமம் என்றால் சந்திரனின் இரண்டு முனைகளும் சமமாக இருக்கும்). கிரிதாரிலால் சியால்கோட்டி என்பவரால் கணிக்கப்பட்ட ‘ஜன்த்ரி’ என்ற உருது பஞ்சாங்கத்தில் இன்னும் துல்லியமாக சொல்லப்பட்டிருக்கிறது. 

‘ஹிஜ்ரா காலண்டர் என்பது பெரும்பாலான முஸ்லிம்களிடம் அன்னியமாகி விட்டது; ஹிஜ்ரா காலண்டரை பின்பற்றுமாறும் கிருத்துவக் காலண்டரை புறக்கணிக்குமாறும் முஸ்லிம்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது முஸ்லிம் அறிஞர்களின் கடமையாகும். மார்க்க அறிஞர்களும் முஸ்லிம் சமுதாயத் தலைவர்களும் ஹிஜ்ரா காலண்டர் தொடர்பாக பொடுபோக்காக இருப்பது வேதனைக்குரிய விஷயம்.’ என்கிறார். (பக்கம் 18/19)

இவ்வளவு வேதனைப் படும் ஆலிம்சா முதலில் தான் நடக்கிறாரா என்று உணர்ந்து பார்க்கவேண்டும். அவர் நடத்தும் பத்திரிக்கை எந்த காலண்டரை பின்பற்றுகிறது? அவருடைய சொந்த கணக்கு வழக்குகளை கிருத்துவ காலண்டரைப் புறக்கணித்துவிட்டு ஹிஜ்ரிக்கு மாற்ற  முடியுமா? இது என்ன ஊருக்கு உபதேசமோ? பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவை வைத்து கணிக்கப்பட்டுள்ள கிருத்துவ காலண்டரை எப்படி புறக்கணிக்க முடியும்? தவிர நம்முடைய தொழுகை நேரம் சூரிய ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டல்லவா இருக்கிறது. அப்படி இருக்க வாழ்க்கை முறைக்கு கிருத்துவ காலண்டரை பயன் படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது? “ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும் சந்திரனை ஒளியாகவும் அமைத்தான்.” (அல்குர்ஆன் 10 : 5)

சந்திரனின் வளர்பிறையையும் தேய்பிறையையும் முறையாக தொடர்ந்து பார்க்கக் கூடிய ஒருவரால் அதன் தோற்றத்தை வைத்தே தேதியை கூறிவிட முடியும் எனும் அளவிற்கு எளிதான நாட்காட்டி அது. படகோட்டிகளும் விவசாயிகளும் இன்றும் இதற்கு சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட எளிதான சந்திரக் காலண்டர் இன்று முஸ்லிம்களிடம் அந்நியமாகி வருவது பெரும் வேதனைக்குரியதும் ஆபத்தானதுமாகும்’. என்கிறார். (பக் 21/22)

சந்திரனை மட்டும் அவர்கள் பார்ப்பதில்லை, பகல் நேரத்தில் சூரியனையும் இரவு நேரத்தில் சந்திரனையும் நட்சத்திரங்களையும் வைத்து நேர காலத்தையும் கடல் பாதைகளையும் தெரிந்துகொள்கிறார்கள். ஹிஜ்ரி காலண்டர் முஸ்லிம்களிடமிருந்து அந்நியமாகவுமில்லை,  மறக்கவுமில்லை. இப்போதுள்ளவர்களில் குறிப்பாக பெண்கள் அரபி மாசத்தை சரிவர புரிந்து வைத்திருந்தாலும் வயதானப் பெண்களுக்கு மாதங்களின் பெயர் தெரியாவிட்டாலும் அந்தந்த பகுதியில் நடக்கும் கந்தூரியை வைத்து மாதங்களின் பெயர்களைத் அறிந்து வைத்திருந்தார்கள்.

1 முஹர்ரம்  – ஆஷுரா மாசம் 
2 சஃபர்  – அப்பா கந்தூரி(சதக்கத்துல்லாஹ் அப்பா கந்தூரி)/சபர் மாசம்
3 ரபியுல் அவ்வல் – ரசூலுல்லாஹ் மவுலிது மாசம்
4 ரபியுல் ஆகிர் – முஹைதீன் ஆண்டவர் மாசம்
5 ஜமாத்துல் அவ்வல் – முத்துப்பேட்டை கந்தூரி மாசம்
6 ஜமாத்துல் ஆகிர்  – நாகூர் கந்தூரி மாசம்
7. ரஜப்  – மெஹ்ராஜ் மாசம்
8 ஷஹ்பான்  – பராத்து /வராத்து மாசம்
9 ரமலான்  –  நோன்பு மாசம்
10ஷவ்வால்  – நோன்புப் பெருநாள் மாசம்
11துல் கஃதா  –  ஏர்வாடி கந்தூரி மாசம்
12துல் ஹஜ்ஜு – ஹஜ்ஜுப் பெருநாள் மாசம்

இம்மாதங்களை வைத்து அந்தந்த மாதங்களில் ஹத்தம் ஃபாத்திஹா ஓதி இரண்டுமூன்று ஏழைகளுக்கு சோறு கொடுத்துவந்தார்கள்.  பெட்ரோலிய  வஹாபிசம் வந்தபிறகு இது மறையத் தொடங்கியுள்ளதால் ஏழைகளுக்கு கிடைத்துக்கொண்டிருந்த இறைச்சிக் கறி நெய் சோறு CUT.

பெட்ரோலிய டாலர்களால் வரும் குழப்பம்

சென்ற முப்பதாண்டுகளுக்கு முன் வரை இஸ்லாத்தில் குழப்பம் எதுவும் இல்லை பிறை பார்ப்பதைத் தவிர. பெட்ரோலிய டாலர் வந்தது, இஸ்லாத்தை நாங்கள்தான் தூயவடிவில் கொண்டுச்செல்கிறோம் என்று பறை சாற்றிகொண்டு (தொழும்போது) தொப்பியை தூக்கினார்கள்; நேராக இருந்த விரலை துடிக்க வைத்தார்கள்; இருபதை எட்டாக சுருக்கினார்கள்; இறைவன் அருவ நிலைக்கும் அப்பாற்பட்டு தூய நிலையில் உள்ளவன் என்ற இஸ்லாத்தின் கொள்கைக்கு வேட்டு வைக்கும் வகையில் இறைவனுக்கு கால் இருக்கிறது என்று புதிய கண்டுபிடிப்பை புகுத்தியிருக்கிறார்கள்; நபி வழி என்று சொல்லிக்கொண்டு போட்டுத்தள்ளுகிறார்கள். ஹஜ்ரத் உமர் கத்தாப் (ரலி) அவர்கள்
கொண்டுவந்த ஹிஜ்ரி காலண்டரை நாங்கள் பின்பற்றுவோம் ஆனால் அவர்கள் முறைபடுத்திய திராவிஹ் 20 ரக்அத்தை ஏற்றுகொள்ள மாட்டோம் என்று அடம்பிடிக்கிறவர்களுக்கு நபி (சல்) அவர்கள் தொழுதது தஹஜ்ஜத்தா இல்லை திராவிஹா (புஹாரி 2013) என்ற வித்தியாசம் இன்னும் தெரியவில்லை. ஆனால் நம்மிடம் பெருமைப் படும் விஷயம் ஒன்று இருக்கிறது, யாராவது புதிதாக எதையாவது கண்டுபிடித்தால் எங்கள் குர்ஆனில் 1400 வருடத்துக்கு முந்தியே அல்லாஹ் சொல்லிவிட்டான், இப்போதுதான் நீங்கள் சொல்கிறீர்கள் என்று பெருந்தன்மையாக பீற்றிக்கொள்வதிகள் முன்னோடிகளாக இருக்கிறோம்.

நாம் பெருமைப் படுவதற்காக ஒரு விசயம் காத்திருக்கிறது. அது வெகு விரைவில் நடந்தேறும் என்று நம்புவோமாக. பிரபஞ்சம் உருவானது பெரு வெடிப்பிலா (Big Bang) இல்லையா என்று விஞ்ஞானிகளுக்குள்ளே குடுமிப்பிடி சண்டை இருந்துவருகிறது. என்றாலும் நாற்பத்தெட்டாண்டுகளுக்கு மேலாக தன் வாழ்க்கையுடன் போராடிக்கொண்டிருக்கும் ஸ்டீஃபன் ஹாக்கிங் பேசமுடியாமல் சக்கர நாற்காலியில் இருந்துக்கொண்டே அல்லாஹ்வுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அல்லாஹ்வின் குரல் கேட்ட நாளிலிருந்து அவருக்கு ஓர் ஆசை வந்துவிட்டது. தாத்துல் கிப்ரியாவில் கன்ஜு மக்ஃபியாக இருக்கும் அல்லாஹ்வை சந்தித்துவிட வேண்டும் என்ற ஆசையில் பயணித்துக்கொண்டிருக்கிறார். ஒரு வேளை சந்தித்துவிட்டால் “ஆண்டவரிடத்திலிருந்து முதலில் சப்தம் வந்தது, அச்சப்தத்திலிருந்து வெளிச்சம் பிரகாசித்தது” என்ற பழைய ஏற்பாட்டின் (இன்ஜீல்) வசனமும், “விந்து நாதம்” என்று சொல்லும் ஹிந்து மத அத்துவைதமும், “அவ்வல ஃகலக்கல்லாஹு நூருன்நபிய்யி யா ஜாபிர்” (ஓ ஜாபிரே! அல்லாஹ்வின் முதல் படைப்பு உம்முடைய நபியின் ஒளியாகும்) என்ற ஹதீஸும் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிடும். பின்பு,  நீங்கள் இப்போதுதானே சொல்கிறீர்கள் எங்கள் குர்ஆனில் “ஆரம்பத்தில் ஒன்றாகச் சேர்ந்திருந்த வானங்களையும் பூமியையும் நாமே பிரித்தமைத்தோம்….”  (21:30) என்று 1400 வருடங்களுக்கு முன்பே அல்லாஹ் சொல்லிவிட்டான் என நாம் சொல்லி பெருமிதம் அடைவோமாக…! ஆமீன்.. யாரப்பல் ஆலமீன்…!!

***

ஹமீது ஜாஃபர்

நன்றி: ஹமீது ஜாஃபர் | manjaijaffer@gmail.com

9 பின்னூட்டங்கள்

 1. நாகூர் ரூமி said,

  24/01/2011 இல் 17:06

  அன்புச் சகோதரர் ஹமீது ஜாஃபர், ஆஹா, இதுபோன்ற அருமையான கட்டுரையை நான் படித்ததில்லை. பிரம்மாதம். மனதார உங்களுக்காக துஆ செய்கிறேன். ஹஜ்ரத் மாமாவின் பெர்பெச்சுவல் காலண்டர் பற்றியும், ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றியும் சொல்லியிருப்பது நெகிழ்வூட்டுவதாக இருந்தது. தொடர்ந்து இதுபோன்று எழுதுங்கள். பெட்ரோலிய வஹாபிசம் என்பது அருமையான பிரயோகம். ஏழைகள் வயிற்றில் அடித்ததுதான் அவர்கள் செய்த ஆகச்சிறந்த சேவையாக இருக்கிறது. சரியாகச் சொன்னீர்கள். அன்புடன்
  ரூமி

 2. 24/01/2011 இல் 17:36

  நம்ம ஹஜ்ரத் அவர்கள் தயாரித்த காலண்டரை நம்ம கவிக்குரிசில் இஜட்.நானா அவர்கள் முதலில் இது தேவையே இல்லை என்றும் கடைசியில் அவர்களே அருமை என்றும் பாராட்டியதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

 3. ரியாஸ் said,

  24/01/2011 இல் 21:13

  வாழ்த்துக்கள் ஹமீது ஜாஃபர் நானா ,

  ஒரே பதிவில் அத்தனை தகவல்களும் (பதில்களும்) மிக அருமை.

  உங்களுடைய எண்ணத்தையும் எழுத்தையும் அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பானாக.

 4. Colachel ஜாகிர் உசேன் said,

  25/01/2011 இல் 13:23

  அருமையான் பதில் கட்டுரை !
  மிகவும் பயன்தரதக்கது
  தொடர்ந்து தாருங்கள் ஹமீது ஜாஃபர் நானா

 5. 25/01/2011 இல் 14:07

  ஒரு சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரை.
  சாதாரண வலைப்பதிவாக இதை எடுத்துக்கொள்ள முடியாது; கூடாது.

  யாராவது “ஒருவருட” ஆராய்ச்சியாளர்கள் தான் மறுக்க முடியும்.
  மறுப்பார்கள்! (அறிவுபூர்வமானதை மறுக்காமல் இருக்க முடியாதே?)
  Go Ahead நானா!! Keep Going!!

 6. தாஜ் said,

  25/01/2011 இல் 18:02

  நாநா…
  என்னாப் போங்க…
  துபாயில இருந்த போது
  இதைப்பற்றியெல்லாம்
  பேசி இருந்திங்கன்னா
  ராத்திரிப் பகலா கேட்டுகிட்டு இருந்திருப்பேனே!

  கட்டுரை படித்தேன்.
  கட்டுரை சார்ந்தவிசயம், எனக்குப் புதுசு.
  சௌதியில் இருந்தப்போது
  அரசு சார்ந்த,
  அந்த அரசும் அமெரிக்க கம்பெனியும் சார்ந்த
  கம்பெனிகளில்
  அரபிக் காலண்டர் பிரகாரம் சம்பளம் தருவதும்,
  அந்த வகைச் சம்பளம்
  இரண்டு ஆண்டுகளுக்கு
  ஒரு மாதம் சம்பளம் கூடுதலாக தருவதும் மட்டும்
  கவனத்தை உறுத்தும் .
  மற்றப்படி நீங்கள் முன் வைத்திருக்கும்
  காலத்தின்/ காலண்டர்களின்
  பல கணக்குகள் கொண்ட செய்திகளை
  நான் அறியேன்.
  இதைப் படித்தவுடனும்
  இது புரிந்துப் போனது என சொல்ல மாட்டேன்.
  முடியவும் முடியாது.
  கட்டுரையை ‘பென் டிரைவில்’ எடுத்துச் சென்று, தீரப்படித்து
  நாளை அல்லது நாளைமறுநாள் மெயில் செய்கிறேன்.
  பொதுவில் ஒன்று.
  கலக்குறீங்க நாநா!!
  வாழ்த்துக்கள்.
  சந்தோசம்
  – தாஜ்

 7. 25/01/2011 இல் 19:35

  தாஜ் அண்ணே! அப்டியே நாம ஏன் அல்லாவை அவன் இவன் என்று ஏகவசனத்தில் சொல்றோம்னும் பாருங்க.

  அல்லா காப்பாத்துவார்னு யாராவது மரியாதையா சொன்னா அவர் non-muslim னு பக்காவா சொல்லலாம்.

  பயங்கரமா ஒதைக்குது!

 8. 25/01/2011 இல் 20:00

  என்னுடை இந்த சிறிய பணியைப் பாராட்டிய எல்லோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  மஜீத் அண்ணே! நீங்க சொன்னது சரிதான். ஆனால் ஒரு சின்ன திருத்தம்… எப்போவோ படிச்சது. அல்லாஹ்வை ‘அவன்’ என்றுதான் சொல்லணும். அவன் என்ற வார்த்தைக்கு பன்மை கிடையாது; அது உயர்திணை. அந்த காலத்து இத்துப் போன லிஃப்கோ தமிழ்-தமிழ் அகராதியில் பார்த்த ஞாபகம். இனிமே ஒதைக்காது!!

 9. 26/01/2011 இல் 21:50

  தகவல் களஞ்சியமாக அருமையான அலசல் வெல்டன் நானா!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s