தரிசனம் – ஹமீது ஜாஃபர்

ஹமீது ஜாஃபர்ஹைஸ்கூல் முடிந்தது எஸ்.எஸ்.எல்.ஸி ஃபைனல் எக்ஸாம் எழுதிவிட்டு ரிஸல்ட்டுக்காக காத்துக்கொண்டிருந்தேன். எதிர்த்த வீட்டு வஹது நானா , “ஏம்பா என்ன செய்யப்போறாய்?” என்று கேட்டார். ”ரிஸல்ட் வரட்டும் நானா பிறகு யோசிப்போம்” என்று சொன்னேன். “இதோ பார், நிச்சயமா நீ பாஸ் பண்ணிவிடுவே, நீ எப்படி படிச்சேன்கிறது எனக்குத் தெரியும் அதனாலெ இப்பவே ப்ளான் பண்ணு” என்றார். ஆம், பரீட்சைக்கு மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே இரவு பதினோரு மணி வரை படித்து விட்டு மறுநாள் அதிகாலை மூன்றுக்கு எழுந்து படித்துக்கொண்டிருப்பேன். இது அவருக்குத் தெரியும் அதனால்தான் என் மீது அக்கறை கொண்டு அப்படி கேட்டார்.

நான் சொன்னேன், “நானா, பி.யு.சி முடிச்சுட்டு பி. எஸ்ஸி எடுக்கலாம்னு இருக்கிறேன்” என்று. “இந்தா எல்லோரும் பி.எஸ்.ஸி., பி.ஏன்னு  போனா எப்படி? எங்கேயாவது ஒரு ஆபிஸ்லெ உட்கார்ந்துக்கிட்டு கிறுக்கிக்கிட்டு இருக்கலாம். அதெல்லாம் வேலைக்கு ஆவுமா? பேசாம டெக்னிக்கல் கோர்ஸ் போ” என்றார். அன்று ரிசல்ட் மாலை முரசு பத்திரிக்கையில் வந்தபோது “நீ பாஸ் பண்ணிட்டே” என்று முதல் தகவல் அறிக்கை சொன்னவரும் அவர்தான்.

அவருடைய ஆலோசனைப்படியே மெக்கானிக்கல் டிப்ளோமா முடிச்சுட்டு வேலை தேடிக்கொண்டிருந்த காலம். ‘நாயா பேயா’ அலைந்துக்கொண்டிருந்தேன். வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்கவில்லை. “சோம்பல் வறுமைக்குத் தாய் தகப்பன்” என்று எங்க மதரஸாவில் ‘அண்ணன் பாய்’(இரண்டும் ஒரே பொருள்தான் என்றாலும் எல்லோமே அண்ணம்பாய் என்றுதான் கூப்பிடுவோம்) எழுதி வைத்திருந்தார்.

என் சொந்தச் செலவுக்கு வாப்பாவிடம் காசு கேட்பது வெட்கமாய் இருந்தது. ஆகவே என் செலவுக்கு எதாவது ஒரு வழி செய்தாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன். தள்ளப்பட்டேன் என்று சொல்வதைவிட விரும்பினேன். என்று சொன்னால் சரியாக இருக்கும். ஆகவே முடியாதவர்களுக்கு சின்னச் சின்ன வேலைகளை முடித்துக் கொடுத்து என் செலவுகளை சமாளித்து வந்தேன். ஆனால் இதெல்லாம் நிறைவைத் தருமா? வேலையில்லாத பெரும்பாலான நேரங்களில் மகிழ மரம், நூலகம், பள்ளிவாசலுக்கு சொந்தமான தென்னங்கொல்லையில் காற்று வாங்குவது இப்படி பொழுது போய்க்கொண்டிருந்தது.

கோடை விடுமுறை நெருங்கிக்கொண்டிருந்த காலம். விடுமுறை எனக்கல்ல , பள்ளிக்கூடத்துக்கு. ஒரு நாள் நான், வஹது நானா, ஹாஜா மெய்தீன் மூன்று பேரும் மகிழ மரத்தடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம், “ஏம்பா அடுத்த மாசம் டூர் யாராவது போடுவாங்க ; நாம அதுலெ குற்றாலம் போயிட்டு வரலாமா” என்று வஹது நானா கேட்டார். டூர் போற அளவுக்கு என்னிடம் காசுகீசு கிடையாது எனவே “யோசனைப் பண்ணி சொல்றேன்” என்றேன். அடுத்த ஐந்தாவது நிமிஷம் அவரே சொன்னார், “ஏன் நாமளே போட்டா என்ன? என்ன சொல்றே?” பக்கத்திலிருந்த ஹாஜா மெய்தீன், “நல்ல ஐடியா நானா, நாமளே போடுவோம்!” எனக்கென்னவோ அது உதைத்தது. “நானா, டூர் போகவே பணமில்லாமலிருக்கும்போது ஆர்கனைஸ் பண்ண எங்கே போவேன்?” என்றேன். “எல்லா பொறுப்பும் நாம மூணு பேருதான், செய்யலாமா வேணாமான்னு மட்டும் சொல்லு” என்றார். ஹாஜா மெய்தீன் ரெடியாயிட்டான் அப்புறம் நான் மட்டும்தான், குருட்டு புத்தி முன் பின் யோசிக்காமல் செய்வோம் என்று சொல்லிவிட்டு ஆனால்……. என்று இழுத்தேன்.

“என்ன ஆனால்?”

“நானா, நமக்கு முன்பின் பழக்கமில்லை, அப்புறம் எந்தெந்த ஊருக்கு டூர் போடுறது, எப்படி செய்யிறது” என்றேன்.

“காலை வச்சாச்சுல்ல? எல்லாம் தானே வரும், சரி இப்பொ உன் கையிலெ எவ்வளவு பணமிருக்கு?”

“என் கையிலெ அம்பது ரூபா இருக்கு. உம்மாட்டே கேட்டு நூறா தேத்திடலாம்.”

ஹாஜா மெய்தீன் வாப்பாகூட இருந்து விவசாயம் பண்ணிக்கிட்டுருக்கான், அதனால் நெல் விற்ற பணம் இருக்கும். வஹது நானா பாலிடெக்னிக்கிலெ ஒர்க்‌ஷாப் இன்சார்ஜ். அதனால் அவருக்குப் பிரச்சினை இல்லை. நான் ஒரு ஆள்தான் பாவப்பட்ட மிஸ்கீன். பிளான் தயாரானது, அவர்தான் பேச ஆரம்பிச்சார். “சனி, ஞாயிறு போனா நமக்கு வேலை ஆகாது, அதனாலெ நாளைக்கு புறப்படுவோம்.

காரைக்கால் பொறையாறு பக்கம் பஸ் கிடையாது, திருவாரூர், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் இந்த மூணு ஊர்லெதான் பஸ் இருக்கு, காலையிலெ திருவாரூர் போவோம்”. மகிழ மரத்தடி கூட்டம் தீர்மானத்துடன் இனிதே முடிந்தது.

நான் அங்கே இங்கே பணம் தோது பண்ணிக்கொண்டு , மும்மூர்த்திகளும் புறப்பட்டோம். முதலில் திருவாரூர் சென்று பார்த்ததில் அந்த கம்பெனி ஒரேயொரு பஸ்ஸை வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கிறான் சரியாக வராது என்று பட்டுக்கோட்டை விட்டோம்.

எங்களிடம் பஸ் இல்லை என்று கையை விரித்துவிடவே அங்கிருந்து நேராக தஞ்சாவூர் வந்தோம். ஒரு பஸ் கம்பெனியில் விசாரித்தோம். ரேட் அதிகமாக இருந்தது, பேச்சும் கறாராக இருந்தது. அடுத்த கம்பெனிக்குப் போனோம். அது ‘சக்தி விலாஸ் பஸ் சர்வீஸ்’ என்று நினைக்கிறேன். அவர்களிடம் டூர் போவதற்காகவே நல்ல பஸ் இரண்டு மூன்று வைத்திருந்தார்கள். ஒரு பெரியவர் எங்களை அமர வைத்து பேச ஆரம்பித்தார், அவர்தான் முதலாளி என்று பிறகு தெரிந்தது.

ஒன்னும் தெரியாத ‘மாக்கன்கள்’ என்று எங்கள் முகத்தில் எழுதி இருந்ததுபோலும், ”டூர் போட்டு பழக்கம் இருக்கா” என்றார் எடுத்த எடுப்பிலேயே. நானும் ஹாஜாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தோம். வஹது நானா பேச ஆரம்பிச்சார்.

“இல்லை சார், இதுதான் முதல் முறை.”

“எந்த வூருக்குப் போடலாமென்று இருக்கீங்க?”

“குற்றாலம், இன்னும் அந்த வழிலெ போற ஊரு.”

“எத்தனை நாளைக்கு பஸ் வேணும்?”

”ஒரு மூணு நாள்.” அந்த சமயம் ஒரு டிரைவர் எதோ சொல்ல வந்தவர் நாங்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டுவிட்டு, “ஐயா, நம்மிடமுள்ள அந்த இரண்டு லிஸ்டை கொடுங்க பார்த்துக்கிட்டு அவங்களே டிசைடு பண்ணட்டும்” என்றார்.

லிஸ்டை வாங்கிப் பார்த்துக்கொண்டிருந்தபோது அந்த டிரைவரே சொன்னார். “சார், இந்த லிஸ்டிலெ உள்ள ஊர்களைப்  போடுங்க அஞ்சு நாள் இந்த டூர்லெ நான்தான் போறேன், போட்டீங்கன்னா நானே வந்து உங்களுக்கு சிரமமில்லாம பார்த்துக்கிறேன்” என்றார்.

”பஸ் வாடகை என்ன?” என்று கேட்டோம்.

அவர் கண்டிஷன் முழுவதையும் சொல்ல ஆரம்பித்து விட்டார். “ஒரு நாளைக்கு 900 ரூபாய். பஸ்ஸில் டிரைவர் கூட கண்டக்டரும் வருவார் அவர்களுக்குப் படி ஒரு ஆளுக்கு 25 ரூபாய் நீங்கள் கொடுக்கனும், அட்வான்ஸ் ஆயிரம் கொடுக்கணும், புறப்படும் தேதிக்கு பத்து நாள் முன்பாக எல்லா பணமும் கட்டணும், அப்படி கட்டத் தவறினால் அட்வான்ஸ் திரும்ப கிடைக்காது, பஸ்ஸும் கிடைக்காது” என்றார்.

இதில் எதாவது குறைக்கமுடியுமா என்று பேரம் பேசிப்பார்த்தோம் ஒன்றும் நடக்கவில்லை. நாங்கள் தேதி எதுவும் நிச்சயிக்காததால் அங்கிருந்துக்கொண்டு எந்த முடிவும் எடுக்க முடியவில்லை இதற்கிடையில் நேரம் இரவு ஏழு மணியாகி விட்டது. “ஐயா, பஸ் அடுத்த மாசம் தேவைப்படும் நாங்கள் தேதியை முடிவு பண்ணிக்கிட்டு இரண்டு நாளில் அட்வான்ஸுடன் வாறோம்” என்று சொல்லிவிட்டு ஊர் புறப்பட்டோம்.

பஸ்ஸில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தோமே தவிர யாரும் யார்கூட பேசவில்லை. மூவருக்குமே சிந்தனை வட்டமடித்துக்கொண்டிருந்தது.

மறு நாள் எங்கள் ஆலோசனைக் கூட்டம் – இது மரத்தடியிலல்ல வீட்டில் நடந்தது. அடுத்த மாதம் எந்த தேதி, சிங்கப்பூரிலிருந்து யார் யார் வருகிறார்கள் யார் யார் போகவிருக்கிறார்கள்; ஒரு ஆளுக்கு எவ்வளவு வாங்குவது; எப்படி டிக்கட் விற்பது; இப்படி எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தோம். டிக்கட் விலையும் நிர்ணயித்தோம், ஒரு டிக்கட் ரூ 125. ஒரு நாளைக்கு ஒரு ஆளுக்கு 25 என்று கணக்கு வைத்தோம்.

நாங்கள் மெயின் குறிக்கோள் வைத்தது சிங்கப்பூர் பயணக்காரர்களை. அவர்கள் டூர் வரத் தயங்கமாட்டார்கள், தவிர டூரை ரசித்து சுவைப்பவர்கள். அடுத்து யாரெல்லாம் அடிக்கடி டூர் போகிறவர்கள்; அடுத்து டூர் போகும் சமயம் ஊரில் யார் வீட்டிலாவது கல்யாணம், சடங்கு இவைகள் இருக்கின்றனவா இப்படி எல்லாவற்றையும் ஆராய்ந்து தேதியை நிச்சயித்தோம். அடுத்து நோட்டீஸ் அடிப்பது, டிக்கட் அடிப்பது, விளம்பரம் செய்வது இவைகள் எப்படி..? ஆளுக்கொரு விதமாக பேசினோம், கடைசியில் வஹது நானாவே சொன்னார்: “நாம செய்யிறாதா இருந்தா பக்காவா செய்யணும், மொதல்லெ நம்ம டிராவல்ஸுக்கு பேரு செலக்ட் பண்ணு” என்றார். நாங்கள் ஆளுக்கொரு பேராக சொன்னோம், ஒன்றும் சரியாக வரவில்லை. முடிவாக எல்லோருக்கும் ஈஸியா புரிகிற மாதிரி ஒரு பெயர், “ஜூப்ளி டிராவல்ஸ்”

என்று பெயர் வைத்தோம். உடனே விளம்பரம், நோட்டிஸ், டிக்கட் புக், லட்டர் பேட் பிரிண்ட் பண்ண எங்களுக்காகவே குறைந்த செலவில் அச்சடித்துத் தரும் ‘மறைமலை அச்சக’த்துக்கு சென்று ஆர்டர் கொடுத்துவிட்டோம். மிக முக்கியமான வேலை பஸ்ஸுக்கு அட்வான்ஸ் கொடுப்பது. ஆயிரம் ரூபாய் அப்போது பெரிய காசு, ஹாஜா மெய்தீனிடமிருந்த நெல் விற்ற காசு, இரண்டாம் நாளே மீண்டும் தஞ்சை சென்று அட்வான்ஸ் கொடுத்து தேதியும் சொல்லி பஸ்ஸையும் புக் பண்ணிவிட்டோம்.

அந்த காலத்தில் டூர் வருகிற பஸ்கள் இடையில் நிற்பதை நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன் எனவே ”ப்ரேக் டவுன் ஆகாத பஸ்ஸாக கொடுங்கள்” என்று சொன்னதற்கு ”ரூட் பஸ்ஸை டூருக்கு கொடுப்பதில்லை அதுக்காகத் தனி பஸ், புது பஸ் ரெண்டு வச்சிருக்கோம்” என்றார்.

பிரஸ்ஸிலிருந்து நோட்டிஸ் கிடைத்த அன்றே நாங்கள் மூவரும் கேன்வாஸிங்கை தொடங்கி விட்டோம். நானும் ஹாஜா மெய்தீனும் காலையில் பசியாறிவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினால் இரவு ஏழு எட்டு மணிக்குதான் வீடு திரும்புவோம். பகல் சாப்பாடெல்லாம் கிடையாது நாயா பேயா அலைந்தோம். புறப்பட பத்து நாள் இருக்கும்வரை சரியாக டிக்கட் விற்கவில்லை இன்னும் இருபது இருபத்தைந்து டிக்கட் பாக்கி இருந்தது. எங்களுக்கு தலை சுற்றியது. இரண்டு சிங்கப்பூர் பார்ட்டி  மொத்தமாக பதினைந்து டிக்கட் வாங்கினார்கள், எங்களுக்கு முன் சீட்டு வேண்டும் என்ற கண்டிஷனோடு. அப்புறம் நாள் நெருங்க நெருங்க எல்லாம் விற்றுத் தீர்ந்து ‘ஒவர் புக்கிங்’ கூட ஆனது. நாங்கள் நிம்மதியாகப் புறப்படுவதற்கான ஆயத்தங்கள் செய்தோம்.  

இதில் பெரிய குறை என்னவென்றால் , எனக்கு ஏன் டிக்கட் தரலை உனக்கு ஏன் தரலை என்று கடைசி நேரத்தில் தகராறு பண்ண ஆரம்பித்து விட்டார்கள் தெரிந்தவர்களும், உறவினர்களும். அவர்களை சமாதானப் படுத்துவது பெரிய கஷ்டமாகப் போய்விட்டது.

குறிப்பிட்ட நாள் காலை ஆறு மணிக்கே பஸ் எங்கள் ஊருக்கு வந்துவிட்டது. வெளியூர்க்காரர்களை முன்னதாகவே அழைத்து வந்துவிட்டோம். எந்த பிரச்சினையுமில்லாமல் பயணத்தைத் தொடங்கினோம். எங்கள் ரூட் முதலில் அதிராம்பட்டினம் வழியாக தூத்துக்குடி, அங்கிருந்து திருச்செந்தூர்; திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி; அங்கிருந்து தக்கலை வழியாக திருவனந்தபுரம். திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு திருநெல்வேலி வழியாக குற்றாலம், மதுரை, அழகர்மலை, திருச்சி, பிறகு ஊர் வந்தடைதல்.

புறப்பட்ட முதல் நாள் வெள்ளிக் கிழமையாதலால் ஜும்ஆ தொழுகையை அதிராம்பட்டினத்தில் நிறைவேற்றிவிட்டு பகல் உணவை முடித்துக்கொண்டு பக்கத்திலுள்ள மல்லிப்பட்டணம் வந்தடைந்தோம். அங்கு சரபோஜி மன்னர் கட்டிய மினாரா அதன் கீழே ஒளியுமிடம் (Bunker) ஒன்று இருக்கிறது அதைப் பார்த்துவிட்டு நேராக தூத்துக்குடி. வரும் வழியில் சின்னச் சின்ன ஊர்களில் உள்ள சில விஷேசமாக அறியப்படும் தர்ஹாக்களில் ஜியாரத்தும் நடத்தினோம். தூத்துக்குடியில் இரவு தங்கிவிட்டு மறு நாள் காலை திருச்செந்தூர் புறப்பட்டோம்.

அப்போதுதான் தூத்துக்குடியில் சதர்ன் பெட்ரோ கெமிகல்ஸ்(ஸ்பிக்) நிலம் ஒதுக்கப்பட்டு Site for SPIC என்ற போர்டு வைக்கப்பட்டிருந்தது. துறைமுகம் விரிவாக்கப் பணி நடந்துக் கொண்டிருந்தது. ஆகவே அங்கு எதையும் காண்பதற்கு ஒன்றுமில்லை. எங்கள் பஸ் திருச்செந்தூர் வந்தடையும் போது காலை பத்து அல்லது பதினோரு மணி இருக்கலாம். எங்கள் டூரில் வந்த ஹிந்து குடும்பங்கள் கோயிலுக்கு சென்றுவிட்டனர். முஸ்லிம் குடும்பத்தினர் என்ன கோயிலில் கொண்டு வந்து விட்டுவிட்டாய்.. என்று முணுமுணுத்தனர்.

இந்த டூரில் நீங்களும் வந்திருக்கிறீர்கள் அவர்களும் வந்திருக்கிறார்கள், நீங்கள் தர்காவுக்குப் போகும்போது அவர்கள் யாராவது எதும் சொன்னார்களா? அதுபோல் நீங்களும் எதுவும் சொல்லக்கூடாது. கோயிலைப் பார்க்க விரும்பாதவர்கள் கடைத்தெரு, கடற்கரைக்குப் போங்கள் என்றோம். எல்லா இடத்தையும்தான் பார்க்கணும் என்றார்கள் சிங்கப்பூர் பயணக்காரர்கள். மதிவாணனை அழைத்துக்கொண்டு நானும் ஹாஜாவும் கோயிலுக்குப் போய்விட்டோம். மதிவாணன் என் கூட படித்தவன், மகா ஹராத்து. வயத்துலெ பூந்து வாயாலெ வருவான்; ஒரு கால் கொஞ்சம் கட்டை, தெத்தித் தெத்தி நடப்பான் அதனால் ‘108ம்’ இருந்தது. ‘முல்லைக்கு இடை கொறஞ்சா எப்படி சார் இருக்கும்?’னு கேட்டு “இப்படி இருக்கும்”னு அறை வாங்கினவன். கோயிலுக்கு போக மாட்டான், அப்படி வற்புறுத்தி யாராவது அழைத்துக் கொண்டு போனால் சாமி கும்பிடாமல் சைட் அடிச்சிட்டு வருபவன்.  அவனது உறவினர்கள் நான்கைந்து பேர் வந்திருந்தனர்.

அன்று என்னவோ நிறையவே டூரிஸ்ட் பஸ் வந்திருந்தது, கூட்டமும் அதிகமாக இருந்தது. நாங்கள் சென்று கொண்டிருக்கும்போது மாமா (மாமா என்றால் சொந்த மாமா இல்லை .யூசுஃப் மாமா. அவரை ‘மாமா’ என்றுதான் நாங்கள் அழைப்போம். சிங்கப்பூர் வாசி, பக்கா தி.க., கருப்பு சட்டைக்காரர், சிங்கப்பூரில் ஏரியா பிரதிநிதி (கவுன்சிலர்). கிருஸ்துவ பாதிரியார்கள் கூப்பிடுவது ஜோசஃப்) நெற்றி நிறைய விபூதி அணிந்து பக்திப் பரவசத்தில் வந்துக்கொண்டிருந்தார். “என்ன மாமா” என்று ஆச்சரியத்தோடு பார்த்தபோது, “இந்தா ப்ரசாதம், இதை நெற்றியில் தடவிக்கிட்டு பேசாமல் சட்டையெ கழட்டிட்டு போ” என்று திருநீறை நீட்டினார். நாங்களும் அப்பிக்கொண்டு சாமி கும்பிடாத போகாத மதிவாணனுக்கும் அப்பிவிட்டோம்.

அப்போதெல்லாம் ஆண்களுக்கென்று ஒரு வரிசை பெண்களுக்கென்று ஒரு வரிசை என்று கம்பி போட்டிருக்கவில்லை, கர்ப்பகிரகத்தருகில் அவர்களாகவே தனித்தனியாக நின்று கொண்டார்கள். ஆனால் ஆண்கள் சட்டை இல்லாமல் வெற்றுடம்புடன் செல்லவேண்டும். வேறு எந்த நிபந்தனைகளுமில்லை. இப்படிதான் மதுரை கோயிலிலும் இருந்தது. ஆனால் இப்போ மூலவருக்கே மெட்டல் டெடக்டர் வச்சுப் பார்க்கவேண்டிய நிலை. Freedom with harmony flown away in all religious holy places…

சட்டை பனியனை கழற்றிவிட்டு போகும் சமயம் “அம்பி….” என்று குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தோம். சுமார் 40/45 வயது மதிக்கத்தக்க ஒரு மாமி கூப்பிட்டார். கூட அவருடைய புருஷன். கையில் பை நிறைய சாமான்களுடன் மாமி கையில் பூஜைத் தட்டுடன் எங்களைப் பார்த்து வழி வழி கேட்டனர். நாங்களும் சாமி கும்பிடத்தான் போறோம் எங்க கூட வாங்க என்று அழைத்துக்கொண்டு நடந்தோம்.

வரும்போதே அவர்களைப் பற்றி விசாரித்தோம். சின்னச் சேலத்திலிருந்து காரில் வருகிறார்களாம், எதோ நீண்ட நாளைய வேண்டுதலாம், எதோ முருகபெருமான் புண்ணியத்துலே இப்பதான் வர முடிஞ்சது என்றார்கள் மாமி. மாமா ஒரு பேச்சும் பேசவில்லை, எல்லாம் மாமிதான் போலும்.

கர்ப்பகிரகத்தை நெருங்க நெருங்க கூட்டம் அதிகமாக இருந்தது. ”கூட்டம் ஜாஸ்தியா இருக்குண்ணோ பாத்துப் போங்கோ” என்றான் மதி. “இந்த பூஜைத் தட்டை வச்சுண்டு என் பின்னால் வாடா அம்பி” என்றார்கள் மாமி. பளிச்சென்னு பூஜை தட்டை வாங்கிக்கொண்ட மதி , மாமியை முன்னால் விட்டு பின்னால் அவனும், அவனுக்குப் பக்கவாட்டில் நாங்களும் போக ஆரம்பித்தோம். நெரிசல் அதிகமாக பின்னாலிருந்து தள்ள ஆரம்பித்துவிட்டார்கள். கூட்ட நெரிசலில் மாமி மீது சாய்ந்த மதி, “மாமி, கூட்டம் ஜாஸ்தியா இருக்கு, பின்னாலேந்து தள்றாள் மாமாவைப் புடிச்சுண்டு ஜாக்கிரதையா போங்கோ” என்றான் நல்ல பிள்ளையாட்டம். “எனக்கு தெரியும்டா அம்பி, என்னை விட்டுண்டு போயிடாதே , பூஜை தட்டை பத்திரமா வச்சுண்டு என் பின்னாலே வா” என்றார்கள் மாமி. நெரிசலில் மாமியை பற்றிக்கொண்டு கிட்ட நெருங்கியதும் மிக அருகில் சாமி தரிசனம் கிடைத்தது. அவங்களுடைய பூஜை நேர்த்திக்கடன் எல்லாம் முடிந்ததும், தேங்க்ஸ்டா அம்பி ரொம்ப நன்னா இருந்துச்சுடா பிரார்த்தனை. வாயெ காட்டுன்னு சொல்லி அவன் வாயிலும் எங்கள் வாயிலும் ப்ரசாதத்தைப் போட்டார்கள். சுவைத்தபடியே மாமியை அழைத்துக்கொண்டு கடற்கரைக்கு போனோம். மதி மாமியோடு ஒட்டிக்கொண்டான். நானும் ஹாஜாவும் கடலில் காலை நனைத்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்து மாமிக்கு டாட்டா காண்பித்துவிட்டு புறப்பட்டோம்.

”ஹூ……..ம்” என்று பெருமூச்சு விட்டான் ஹாஜா,

“ஏண்டா….?”

“மாமி தரிசனம்  இவனுக்கு மட்டும் கெடச்சுதுபாரு, எதுக்கும் கொடுப்புனை வேணும்” என்றான்.

“எலெ! அவன் கோயில் குளமெல்லாம் போவாதவன். அவனே வந்துட்டான் நமக்காக. ஒனக்கு ப்ரசாதம் கெடச்சுதல்ல, திண்டீல்ல , பேசாம வா, ஏங்காதே!” என்று ஒரு கடி கடிச்சுட்டு பஸ்ஸுக்கு வந்தோம்.

திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு கடற்கரை சாலை வழியாக சூரியன் மறைவதற்குள் கன்னியாகுமரி வந்தடைந்தோம். சூரியன் மறைவதைப் பார்த்துவிட்டு அன்று இரவு தங்கி மறு நாள் சூரியோதயத்தையும் பார்த்தோம். சித்திரா பௌர்ணமி அன்றுதான் சூரியன் மறைவதையும் சந்திரன் எழுவதையும் ஒரே நேரத்தில் பார்க்கலாம் என்று சொன்னார்கள். நாங்கள் போனது சித்திரையுமல்ல பௌர்ணமியுமல்ல. அங்கு விவேகானந்தர் பாறை – மிக அழகான வடிவமைப்பு எல்லோரும் நன்றாக சுற்றி பார்த்தனர். தியான மண்டபம் – மிக மிக அமைதியான இடம், இருட்டுள்ள வெளிச்சம், எங்கும் நிசப்தம், சமஸ்கிருதத்தில் எழுதிய ஓம் என்ற சொல் நியான் ஒளியில் reflect ஆகிக்கொண்டிருந்தது. நானும் வஹது நானாவும் ஓரிடத்தில் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்தோம். மனதில் அமைதி ஏற்படுவதை என்னால் உணரமுடிந்தது. வரக்கூடிய சுற்றுலா பயணிகள் சத்தமில்லாமல் செல்கிறார்களே ஒழிய எங்கள் இருவரைத் தவிர வேறு யாரும் தியானம் செய்ததாகத் தெரியவில்லை நாங்கள் இருந்தவரை. இப்படில்லாம் இருக்கீங்களே என்று மதி எங்களைப் பார்த்து கிண்டல் செய்தான்.

அங்கிருந்து காந்தி மண்டபம். மண்டபத்தில் நடுவில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் அக்டோபர் 2 ம் தேதி அன்று பகல் 12 மணிக்கு சூரிய ஒளி படுமாம். மேடைக்கு நேர் மேலே சற்று பக்கவாட்டில் சிறிய ஓட்டை அமைந்துள்ளது அதன் வழியாக ஓளி வரும் என்று சொன்னார்கள். ஆம், தாஜ்மஹாலில் மும்தாஜ் கல்லறை மீது மழை நீர் சொட்டுமாம், அந்த கசிவு எங்கிருந்து வருகிறது என்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்கிறார்கள். காந்தி மண்டபத்தை சுற்றி பார்த்துவிட்டு வரும்போது சிலர் கடலில் குளிக்கவேண்டும் என்றார்கள். குளியலும் நடந்தது. குளியலை முடித்துவிட்டு வரும்போது ஒரு செய்தி நினைவுக்கு வந்தது.

இங்குள்ள அம்மனின் மூக்கில் பதிந்துள்ள வைர மூக்குத்தியின் ஒளியை வைத்து தம் இலக்கை கடலில் இருக்கும் மீனவர்கள் தெரிந்துக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருந்தேன். எனவே அதைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் மதிவாணனை அழைத்துக்கொண்டு கோயில் இருக்குமிடத்தை விசாரித்துக்கொண்டு போனேன். சட்டையை கழட்டிவிட்டு வெற்றுடம்புடன்தான் அங்கேயும் போகவேண்டும்.

அம்மன் இருக்குமிடத்தில் அகல் விளக்குகளைத் தவிர வேறு விளக்குகள் எதுவும் இல்லை. இருட்டுக்கு வெளிச்சம் அடிமைப்பட்டுக்கொண்டிருந்தது. கேரளாவிலிருந்து வந்த டூரிஸ்டுகளைத் தவிர வேறு யாருமில்லை. அகல் விளக்கு வெளிச்சத்திலும் அம்மன் தெளிவாகக் காட்சியளித்தாள் ஆனால் வைர மூக்குத்தியோ வேறு மாணிக்கமோ மரகதமோ இல்லை. ஒரு வேலை இருந்திருந்தால் கோஹினூர் வைரத்தைக் கொண்டுபோனதுபோல இதையும் கொண்டுபோயிருப்பார்கள். மந்தகாசமான அந்த வெளிச்சம் அந்த சூழல்.. எனக்கு வெளியே போக மனமில்லை; அஞ்சு நிமிஷம் அம்மனையே தரிசித்துக் கொண்டிருந்தேன் மலையாளிகளில் ஒருவனாக. போதும்டா என்று  மதி கிசுகிசுத்த பிறகுதான் தன்நிலை அடைந்தேன்.

மூன்றாம் நாள் தக்கலை பீர் முஹம்மது அப்பா தர்கா சென்று ஜியாரத் செய்தோமே ஒழிய சற்று தூரத்தில் பத்மநாப ராஜாவின் முற்றிலும் மரத்தினாலான கோட்டை ஒன்று இருப்பது தெரியாமல் போய்விட்டது. பின் அங்கிருந்து திருவனந்தபுரம். அங்கு பீமா பள்ளி, கோவளம் கடற்கரை, இயற்கையாக அமைக்கப்பட்டிருந்த மிருகக் காட்சி சாலை இவைகளைப் பார்த்து விட்டு பத்மநாபசாமி ஆலயம்.

ஆலயத்தில் பெரிதாக இருந்தது கூட்டம் இல்லை, நடை அடைக்கப் பட்டிருந்தது. பல்வேறு ஒலி எழுப்பக்கூடிய தூண்களையுடைய ஒரு மண்டபத்தில் அமர்ந்தோம். அப்பதான் என் தாயார் கேட்டார்கள், “ஏம்பா, இப்படி கோயில் கோயிலா கூட்டிக்கிட்டுப் போறியே, ஒனக்கே நல்லா இருக்கா?”

“கோயிலுக்குப் போறது சாமி கும்பிட அல்லவே, சுத்திப்பார்க்கத்தானே போறோம், இப்பொ தர்காவுக்குப் போறோம் ஜியாரத் பண்ண, பள்ளிவாசலுக்குப் போறோம் தொழுவதற்கு. இப்பொ இங்கே உட்கார்ந்திருக்கீங்களே இந்த மண்டபம், இதிலுள்ள தூண்களைப் பார்த்தீங்களா? பார்க்கிறதுக்கு ஒரே மாதிரி தெரியுது. ஆனால் ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு விதமான சப்தம் வரும் தட்டினால். இதையெல்லாம் வேறு எங்கேயும் பார்க்கமுடியாது. இதை செதுக்கிய சிற்பியின் மூளை எப்படி வேலை செஞ்சிருக்கும், அவனோட கற்பனை, அவனோடய எதிர்பார்ப்பு, அவனோட உழைப்பு இதெல்லாம் இதுலெ ஒளிஞ்சுக்கிட்டு இருக்கும்மா.”

நான் விளக்கியதை அவர்களால் ஏற்றுகொள்ள முடியவில்ல “ஒன்னை திருத்தமுடியாது” என்றார்கள்.

திருவனந்தபுரத்திலிருந்து நேராக குற்றாலம் வழியில் எங்கும் நிற்காமல் இரவு ஒரு மணிக்கு வந்து சேர்ந்தோம். பஸ் டிரைவருக்கு எல்லா இடங்களிலும் பரிச்சயம் இருந்ததினால் தங்குவதற்கு எங்களுக்கு எந்த சிரமும் ஏற்படவில்லை. சீசன் இல்லாத காலமாக இருந்ததால் அந்த அகால நேரத்திலும் நாங்கள் தங்குவதற்கு நல்ல இடம் கிடைத்தது. எங்கள் உடைமைகளை வைத்தவிட்டு உடனே சிலர் குளிக்க சென்றனர். அதை பார்த்த வாட்ச்மேன் “உங்க பொம்பளைங்க குளிக்கப் போறாங்க, திருட்டு பயம் இருக்கு சாமான்களை நகைகளை கிளப்பிக்கிட்டு போயிடுவானுங்க போய் கூட்டிகிட்டு வாங்க” என்று எங்களிடம் எச்சரிக்கவே நாங்கள் நாலைந்து பேர் அவர்களை அழைத்துவரச் சென்றோம்.

ஆனால் எங்களுடன் வந்த மட்டையடி மாஜித், திடீரென மாயமாயிட்டான். கொஞ்ச நேரத்தில் அருவியிலிருந்து வருவதைப் பார்த்ததும் சந்தேகத்துடன் விசாரித்தால் குளிக்க என்று மழுப்பினான். புரிந்துவிட்டது எதோ ஜலகிரீடை மாட்டிடுச்சு என்று.

குற்றாலத்தைப் பார்த்ததும் இரண்டு நாள் இங்கேயே தங்கிவிட்டு நேராக ஊருக்குப் போகலாம் என்று ஒரே குரலில் எல்லோரும் கோரஸாக  சொல்ல மதுரை கேன்ஸல் ஆகியது. பழைய குற்றாலம் முதல் எல்லா அருவிகளிலும் ஜனங்கள் குளித்தாலும் மாஜித் மட்டும் அப்பப்ப எஸ்கேப் ஆனான் குற்றாலகிரீடைக்காக.

ஆக ஐந்து நாள் டூர் எந்த சிரமுமில்லாமல் போய்வந்தோம். இதில் எங்களுக்கு கனிசமான லாபம் கிட்டியது. விடுவோமா? அடுத்த வருடம் ஊட்டி மைசூர் பெங்களூர், ஹொகேனக்கல் என்று அடுத்த டூர். அப்புறம் மதுரை வைகை கொடைக்கானல் தேக்கடி என்று அதற்கடுத்த டூர்.

இடையிலடையில் எங்கேயாவது கூடு கொடியேற்றம் வந்தால் இரண்டு நாள் டூர் என்று அமர்க்களப் படுத்தினோம். 

இப்பொ நினைச்சாலும் த்ரில்லிங்காத்தான் இருக்குது டூர் மேட்டர். டூர் போனதைவிட அதை நிர்வாகித்ததில்தான் இருந்தது த்ரில்லிங். அதுக்கு மனம் இடம் கொடுத்தாலும் வயசு இடம் கொடுக்கலையே? அன்று கிடைத்த அமைதியும் ஆன்மீகமும் இன்று தேடினால் கிடைக்குமா அங்கு?

***

நன்றி: ஹமீது ஜாஃபர் | manjaijaffer@gmail.com

3 பின்னூட்டங்கள்

 1. 11/01/2011 இல் 17:13

  நல்ல இடுகை நானா!

  அங்கே இன்று அமைதியும் ஆன்மீகமும் கிடைத்தாலும், இனிமே ‘அதெல்லாம்’ நடக்காது. வயசாயிடுச்சுல்ல?

  இன்னும் என்னென்ன இக்கிது? எடுத்து உடுங்க எல்லாத்தையும்!

 2. ரியாஸ் said,

  11/01/2011 இல் 19:34

  குற்றாலத்திற்கு சென்று குளித்தது போல் இருந்தது உங்களின் இன்ப சுற்றுலா.

 3. 11/01/2011 இல் 20:44

  அன்று கிடைத்த இன்பம்தான் இன்று என்னை ஆன்மீகத்தின் பக்கம் இழுத்துக்கொண்டு ஓடுகிறது. எனவே அது இல்லாமல் இது இல்லை. இது வேண்டுமானால் அதுவும் வேண்டும். ஆக ஒன்றுக்குள் ஒன்று. குற்றாலத்துக்காரர்தான் பீர்முஹம்மது அப்பபவும். மஜீது காக்காவுடன் சேர்த்து ரியாஸுக்கும் நன்றி.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s