அழகிய மார்க்கமா..? அழுகிய மார்க்கமா…?

நண்பர் நாகூர் ரூமி ‘ மார்க்கமா மூர்க்கமா?‘ என்று பதிவு செய்தார், சென்ற மாதம்.  இந்த மாதம் ஜாஃபர் நானா. ஒரு மார்க்கமாகத்தான் அலைகிறார்கள்…

***

அழகிய மார்க்கமா..? அழுகிய மார்க்கமா…?

ஹமீது ஜாஃபர்

நான் ஒரு இஸ்லாமியன் என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கமாக இருக்கிறது. ஆம் இப்போது பத்திரிக்கைகளில் வருகிற செய்திகளைப் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. புது வருட வாழ்த்தாக முஸ்லிம் உலகு அளித்தது இதுதான் : பாகிஸ்தானில் பஞ்சாப் கவர்னர் சல்மான் தஸீர்  சுட்டுக்கொல்லப்பட்டது. அதுவும் சொந்த பாடிகார்டே சுட்டது. காரணம் ஆஷியா பீபியுடைய தண்டனையைக் குறைக்க முயற்சி செய்கிறேன் என்று சொன்னதும், ‘blasphemy act  is a black law’ என்று தன் கருத்தை வெளியிட்டதும். நாம் ரொம்ப ரொம்ப வெட்கப் படவேண்டிய விஷயம்.

ஆஷியா பீபி என்ற கிருஸ்துவப் பெண் பெருமானார் அவர்களைப் பற்றி தவறாக எழுதியதாக கைது செய்யப்பட்டு அந்த நாட்டு சட்டப்படி மரண தண்டனைக் கைதியாக இருக்கிறார். மனித நேய அமைப்புகள் மரண தண்டனைக் கொடுக்கக்கூடாது என்று சொல்லும் அதே நேரத்தில் இஸ்லாமிய அடிப்படை வாதிகள் மரண தண்டனைக் கொடுத்தே ஆகவேண்டும் என்று குரல் கொடுக்கின்றார்கள்.

இது இப்படியிருக்க கவர்னர் சல்மான் தஸீர் , ஜனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரிக்கு நெருக்கமானவ மட்டுமல்ல ராணுவ ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்தவர். அவர் ஆஷியா பீபியை மனித அபிமான அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் ஷேக்புரா சிறையில் சந்தித்து மரண தண்டனையைக் குறைக்க தான் ஆவண செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். அவ்விருவர்களுக்கும் இடையே நடந்த உரையாடலின் போது செக்யூரிட்டி கார்டாக பணியாற்றிய மாலிக் மும்தாஜ் ஹுசைன் காதிரியும் கூட இருந்திருக்கிறான். இதை காரணமாக வைத்து கவர்னரை சுட்டுத்தள்ளிவிட்டான்.

“யூதர்களையும் கிறுஸ்தவர்களையும் உங்களுக்கு பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” (அல் குர்ஆன் 5:51) என்று அல்லாஹ் கூறுகிறான். ஒரு முஸ்லிமை வைத்துக்கொண்டால் உயிருக்கே ஆபத்தாக இருக்கிறதே! அப்படி இருக்கும்போது இறைவாக்கை நம்புவதா இல்லை உன்னை நம்புவதா? ஏ, இஸ்லாமிய சமுதாயமே பதில் சொல்.

ஏ, சமுதாயமே! ரசூல்(சல்) அவர்கள் மனித சமுதாயத்திற்காகவே வாழ்ந்து காட்டியவர்கள். அவர்கள் ஒரு அழகிய முன்மாதிரி. அவர்கள் இஸ்லாமியர் ஒவ்வொருவராலும் தன் தாயினும், தன் தந்தையினும் மேலாக ஏன் அனைத்தினும் மேலாக விரும்பப்படுபவர்கள். இதில் எந்த மாற்று கருத்தும் இருக்கமுடியாது. அவர்களைப் பற்றி யாராவது தவறாகச் சொன்னால் அதை பொறுத்துக்கொள்ளமுடியது உன்னால் என்பதும் உண்மை. அவர்களைப் பற்றி உலகில் எந்த பாகத்தில் சித்திரம் வரைந்தாலும் நீ வெகுண்டெழுகிறாய். அவர்களைப் பற்றி தவறாக கருத்து கூறுபவருக்கு இறை வசனத்தை (5:33) மட்டும் கையிலெடுத்துக்கொண்டு தீர்ப்பு வழங்குவது எந்த முறையில் நியாயம்? அவர்களுடைய சொல், செயல் இரண்டையும் எடுத்துப் பார்த்தாயா? உன் மதியில் மறைந்திருந்தால் இதோ சொல்கிறேன்; தாயிஃப் மக்கள் கல்லால் அடித்து இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தபோது “உம் என்று சொல்லுங்கள் இந்த ஊரையே அழித்துவிடுகிறேன்” என்று வானவர் தலைவர் ஜிப்ரீல்(அலை) சொன்னபோது என்ன சொன்னார்கள்? “வேண்டாம் அவர்கள் தெரியாமல் செய்யும் தவறுக்கு தண்டிக்காதீர்கள். இன்று இல்லாவிட்டாலும் நாளை அவர்கள் என் பக்கம் வருவார்கள்” என்று கருணைக் காட்டவில்லையா? தன் சிறிய தந்தை ஹம்ஜா (ரலி) அவர்கள் உஹது யுத்தத்தில் கொல்லப்பட்டதும் அவர்கள் உடலைத் தேடி எடுத்து நெஞ்சைக் கீறி ஈரலை தின்ற ஹிந்தாவை அந்த கருணை நபி மன்னித்து விடவில்லையா? அதைவிட ஒரு கொடுமையான செயல் வேறு எதும் உண்டா? அந்த கொடுமையை விடவா Blasphemy? அதற்கு மரண தண்டனைதான் தீர்வா? சொல்.

நிச்சயமாக உன்னால் சொல்லமுடியாது. உன்னில், தலைப்பாகையை  தலைக்கு என்று நினைத்து அறிவையும் சேர்த்துக் கட்டி வைத்திருக்கிற முல்லாக்கள் நிறைய இருக்கிறார்கள். அதனால்தானே சுட்டுக்கொன்ற அந்த கயவனுக்கு மலர் தூவி வாழ்த்தி இருப்பதோடு நின்றுவிடாமல் கவர்னரின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்பவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்கள். இதல்லாமல் Blasphemy செய்பவர்களுக்கு இக்கதிதான் ஏற்படுமாம்.

இது ஒரு பக்கம் என்றால் ஒரு வாரத்துக்கு முன் தனியார் பெண்கள் பள்ளிக்கூடத்தில் inter school sport நடத்தியதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இது அரசாங்கத்துக்கு எதிரானது என்று ஒரு இஸ்லாமிய அரசு கூறியுள்ளது. அந்நாட்டில் பெண்களுக்கு ஸ்போர்ட் தடை செய்யப்பட்டுள்ளதாம். – பத்திரிக்கை செய்தி.

பெண்களுக்கு கல்வி அளிக்கும் அரசு விளையாட்டு பயிற்சி செய்யக்கூடாது. கல்வி பயின்றுவிட்டு நேராக அடுப்படிக்கு சென்றுவிட வேண்டும்? 1400 வருடங்களுக்கு முன்பே நாங்கள் பெண்ணுரிமை கொடுத்துவிட்டோம் என்று பெருமை அடித்துக்கொள்ளும் இஸ்லாம் இதில் ஏன் பாரபட்சம்? இது புனித நாட்டில் என்றால் இதற்கு ஒரு படி மேலாக ஆப்கானில் பெண்கள் பள்ளிக்கூடமாகப் பார்த்து ‘பாம்’ வைத்து தகர்த்துக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள் அறவே கல்வி பயிலக்கூடாது என்பதற்காக. இதற்கெல்லாம் காரணம் தலைப்பாகை கட்டிய பழமை வாதிகள். அவர்கள்தானே தீர்ப்பு வழங்குபவர்கள்?

“நான் உங்களுக்கு, உங்களுடைய மார்க்கத்தை இன்றைய தினம், பரிபூரணமாக்கி வைத்து விட்டேன். உங்களுக்காக இஸ்லாம் மார்க்கத்தையும் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்” (அல் குர்ஆன் 5:3) என்று அல்லாஹ் பகிரங்கப் படுத்துகிறான். அம் மார்க்கத்தில் இருக்கிற அனைவரையும் சேர்த்துதானே அவன் அங்கீகரிக்கிறான். அழகிய மார்க்கம் என்று சொன்னால் அதிலிருக்கும் அனைவருமே அழகானவர்கள்தான். அழகானவர்கள் என்றால் உருவத்தில் அல்ல , உள்ளத்திலும் எண்ணத்திலும் செயலிலும் அழகானவர்களே. இதை உணர்ந்தால் மட்டுமே தெளிவு பெறமுடியும்.

ஓ இஸ்லாமே! நீ அழகிய மார்க்கமாக இரு. அழுகிய மார்க்கமாக ஆகிவிடாதே!

**

ஹமீது ஜாஃபர்

நன்றி: ஹமீது ஜாஃபர் | manjaijaffer@gmail.com

7 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  08/01/2011 இல் 18:53

  ஜகஃபர் நாநா….
  கை கொடுங்கள்.
  மேலே ஒன்றும் சொல்வதற்கில்லை.
  ஆனாலும் ஒன்றே ஒன்று மட்டும் சொல்ல நினைக்கிறேன்.
  நீதியின் பார்வை என்பது இப்படித்தான்
  நாலா பக்கப் பார்வை கொண்டதாக விளங்கவேண்டும்.
  நன்றி
  – தாஜ்

 2. 08/01/2011 இல் 21:05

  நன்றி தாஜ். எதோ அவர்கள் உணர்ந்தால் சரி.

 3. 09/01/2011 இல் 06:50

  பாகிஸ்தான் நாட்ல பஞ்சாப் மாநிலத்துல ஒரு எடத்துல தெஹ்ரிக் கதம்மே நுபுவ்வத் காரங்க பெரிய கலவரத்துல ஈடுபட்டாங்களாம். அதை தொடர்ந்து முனீர் கமிட்டி ன்னு ஒரு கமிட்டிய அமைச்சு விசாரனை பண்ணுனாங்களாம்.
  அப்போ இஸ்லாத்தின் பேரால நெறய இயக்கங்கள் இருக்கும் அதுக்கெல்லாம் தலைவர்ன்னு இருப்பாங்க இல்லையா.. அவங்கள்ட்ட போய் ‘முஸ்லீம்’ னா எப்படி டிஃபைன் பண்ணுவீங்கன்னு கேட்டிருக்காங்க.. அதுக்கு நெறய பேரு ’பே பே’ நன்னு முழிச்சிருக்காஹல்வோ, இன்னும் செல பேரு அத பத்தி சொல்றதுன்னா நெறய நேரமும் தாளும் வேணும் எழுதி காட்டன்னு சொல்லியிருக்காஹல்வோ, இதுல செல பேரு சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டஹல்வோ, இன்னும் பல பேரு சொன்ன கருத்த எடுத்து பார்த்தா ஒரு ரெண்டு பேரு கூட ஒத்துமையா ஒரே பதில சொல்லலயாம்.
  அந்த அளவுல தான் இருக்கு இஸ்லாம் இஸ்லாமாபாத்திலே..
  இவங்களுக்கு உணர்ந்தால் சரி ன்னு ஜாபர் நானா எழுதியிருக்கிறது எனக்கு என்னவோ squeezing water out of stone மாதிரி தான் இருக்கிறது.

 4. 09/01/2011 இல் 06:51

  சொல்ல மறந்துட்டேனே, மேற்படி கலகம் நடந்தது 1953ம் வருஷத்துலயாம்..

 5. sgvaradan said,

  09/01/2011 இல் 08:36

  மிக நல்ல பதிவு. ம(னி)தத்தில் இருந்து நீ போய்விட்டால் மதம் வருகிறது.
  மனிதம்தான் வெல்லவேண்டும். மதம் வெல்லக்கூடாது.


  SGVaradan.

 6. 09/01/2011 இல் 17:58

  ஹமீத் ஜாஃபர் நானாவின் பார்வை மிகக்கூர்மை.
  குத்துப்பட்டவர்கள் உணரவேண்டும்.

  முதலில் நம்மை நாம் உணரவேண்டும்

 7. maleek said,

  09/01/2011 இல் 20:38

  இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது இஸ்லாமிய உலகில் புதிதில்லையே.எவரோ யாரையோ சுட்டதற்கு
  தலைப்பாகை கட்டிய பழமைவாதிகள் தான் காரணம் என்று தெரிந்த பிறகும் அழகியதா அழுகியதா என்று
  மார்க்கத்தை சந்தேகிப்பானேன்?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s