‘கஜானா மூலம் கட்சி வளர்க்கும் கலை’யுடன்…!
***
‘துக்ளக்’ ஆரம்பிக்கப்பட்ட போது, சத்யா அதில் இல்லை. ஆரம்ப துக்ளக் இதழ்களின் பெரும்பாலான பக்கங்கள் சோவின் கைவண்ணமாகத்தான் இருந்தது. சில நேரம், அச்சடிக்காத வெள்ளைப் பக்கங்களோடும், ‘எழுதுவதற்கு விசயம் இல்லை’ என்கிற குறிப்பேந்தியபடியும் வரும்! அப்போது துக்ளக் இதழை பரப்பரப்பாக வாசிக்கும் என்னையொத்த வாசகர்கள், அந்த வெள்ளைப் பக்கத்தையும் ஆர்வமுடன் வாசித்து – ‘ஸாரி…’ , பார்த்து…- ‘சோ…ன்னா சோ…தான்’ யென புளகாங்கிதத்தோடு மெச்சியபடி அவர் புகழ் பாடித் திரிந்தோம். சோவின் இந்த மாதிரியான தான்தோன்றித்தனத்தையெல்லாம் என்னை ஒத்தவர்கள் மாதிரி எல்லோரும் ஏற்கவில்லை. அதையொட்டி அந்த இதழில் மாற்றங்கள் தெரியத் துவங்கியது.
அவர் மட்டுமே ஆதிக்கம் செய்த இதழில் போனா போகிறது என்று இன்னும் ஓரிருவர் எழுதத் துவங்கினார்கள். அதில் ஒருவராக தலை காண்பித்தவர்தான் சத்யா. இன்னொருவர் ஜெயலலிதா! புனைப்பெயரில் எழுதினார். உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, ஜெயலலிதாவுக்கு எழுத வரும்! எம்.ஜி.ஆரை சீண்டி, கல்கி இதழில் அவர் எழுதிய தொடர் கதையை ‘கிசுகிசு’ படிக்கும் ஆர்வத்தோடு படித்தவன் நான்.
சத்யா துக்ளக்கில் வளர்ந்தபோது அவரை நான் பெரிதாகப் பொருட்படுத்தியது இல்லை. எனக்கு சோ போதும். அவரது கேலி / கிண்டல்/ சட்டயர் / தர்க்கம்/ குதர்க்கம் போதும் . அதைவிட அவரது தைரியம்..! அரசியலில் உலா வந்த பெரிய தலைகளை மதிக்காமல் அவர் வீசி எறியும் தைரியம் அது! எனக்கு. ‘சோ’தான் எத்தனைப் பெரிய ஆள்! பாருங்கள், நான் எத்தனைக்குப் பைத்தியக்காரனாக இருந்திருக்கிறேன் என்று! அப்போதெல்லாம் சத்யா ‘சோ’வின் நகலாகத்தான் எழுதினார். ‘துப்பறியும் சாம்பு’ எழுதிய தேவன்தான், சோவுக்கு ஆதர்சம். (சோ சொல்லிக் கொண்டது) அந்த நேரத்தில் சத்தியாவின் ஆதர்சம் சோவாக இருந்திருக்கக் கூடும். அப்படிதான் பட்டது. சோ சுற்றிவரும் அதே வட்டத்திற்குள் அப்படியேதான் எழுதுவார். சத்யாவின் தனித்துவம் அன்றைக்கு விரிவடையவில்லை.
துக்ளக்கின் அடுத்தக்கட்ட சீரமைப்பில், சோவைத்தாண்டி துக்ளக் பெரிதாக தெரியத் தொடங்கியது. அதில் எழுதுபவர்கள் சுதந்திரம் கொண்டார்கள். வெளியில் இருந்து, அதாவது… அவரது நிறம் மணம் கொள்ளாத மூன்று ஆளுமைகளின் எழுத்தும் அந்த இதழில் இடம் பெற்றது. குல்தீப்நய்யார், ஜெயகாந்தன். வண்ண நிலவன் எழுத்துகள் அந்த இதழுக்கு புதிய முகத்தைத் தந்தது. இந்தக் காலக்கட்டத்தில்தான் சத்யாவின் எழுத்து அவருக்கு ஒதுக்கப்பட்டப் பக்கங்களில் இறக்கைக் கட்டிப் பறக்கத் துவங்கியது.
‘ஒன்னரைப் பக்க நாளிதழ்’ என்றும் அரசியல் தலைவர்களின் கற்பனை உரையாடல்கள் என்றும் பிரமாதப்படுத்தத் துவங்கினார்! பல இதழ்களில் சோவின் எழுத்தை ஒன்றுமில்லை என்றும் ஆக்கினார். சோவை விஞ்சிய கேலியும் கிண்டலும் சடையரும் தர்க்கமும் சத்யாவுக்கு எளிதாக கைகூடிவந்தது. இன்றைக்குவரை அது ஓயவில்லை. வாரம் தவராமல் பக்கம் பக்கமாக எழுதப்படும் வெறும் எழுத்தால் வாசகர்களை சிரிக்க வைப்பது சாதாரணமானதல்ல! இது ஒரு மிகப் பெரிய எழுத்துச் சாதனை. ஆனால், இன்றைய சத்யவின் எழுத்தில் முன்பு அவரிடம் இருந்த சத்யம் மட்டும் மிஸ்ஸிங்!
முன்பெல்லாம் எல்லா அரசியல் கட்சிகளையும், எல்லா தலைவர்களையும் தன் எழுத்தில் இழுத்துவைத்து அவருக்கே உரிய பாணியில் விமர்சனத்திற்கு உட்படுத்துவார். சில நேரம் சோவையும் இழுத்து நிறுத்தி கேலி செய்வார்! இப்போது சத்யா பாவம். ஆசிரியர் சோ கைகாட்டும் திசையில் மட்டுமே அந்த இதழில் அவரது கேலியும் கிண்டலும் போய்கொண்டிருக்கிறது.
இது துக்ளக் இதழ் கொண்ட மற்றொரு மாற்றத்தின் விழைவால் நிகழ்ந்தது. ஆரம்பம் தொட்டு ஆனந்தவிடனின் துணை இதழாக இருந்த துக்ளக்கை, சோ தன் பெயருக்கு கைமாற்றிக் கொண்ட நிலையில், அதனை இந்துத்துவாவின் காலடியில் வைத்து ஆசுவாசம் கொண்டார். அந்த இதழில் எழுதிய எழுத்தாளர்களுக்கு முன்பு இருந்த சுதந்திரம் தேவையில்லை என்கிறு சோ தீர்மானிக்க, ஆளுமைகொண்ட வெளி எழுத்தாளர்கள் அந்த இதழில் எழுதுவது நின்று போனது. வண்ண நிலவன் மட்டும் சில காலம் வேறு இதழ்களில் பணியாற்றிவிட்டு துக்ளக் இதழுக்கு திரும்பினார். சத்யா தன்னைச் சுருக்கிக் கொண்டார்.
தமிழக அரசியல்வாதிகளில் கருணாநிதி மட்டுமே தவறானவர்! குஜராத் முதல்வர் மோடி உலக மஹா யோக்கியர். பாரதிய ஜனதா இந்திய மக்களை வாழ்விக்க வந்த கட்சி. அது தவறே செய்யாது. அப்படியே அது செய்து சந்தி சிரித்தலும் சிணுங்கலாக கண்டித்து, மறக்காமல் தட்டிக் கொடுத்துவிட வேண்டும். சங்கராச்சாரி, வாடகை கொலைகாரர்களை கொண்டு, கோவிலில் பிரகாரத்தில் குருக்களை கொன்றாலும் அதைப் பற்றியெல்லாம் விமர்சிக்கக் கூடாது. அத்தனைக்கும் கட்டுப்பட்டவராக கடன் பட்டவராக சத்யா, இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கிறார். அவரது அசாத்திய திறமைகளின் இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையிலும் எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் சோகம்.
*
இந்தப் பதிவில், பெருமழைப் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு நிவாரணம் தர முனைப்பு காட்டுகிற தமிழக முதல்வர் கருணாநிதியை/ ஆளும் திமுகவை முன் நிறுத்தி கேலி விமர்சனம் செய்திருக்கிறார் சத்யா. அந்தக் கேலிக் கட்டுரை மிக நேர்த்தியாக, கூரிய மதி நுட்பம்கொண்டு நம்மை சிரிக்கவும் வைக்கிறது.
ஆனால், சோ கைகாட்டுதலுக்கு சத்யா உட்படுவதால் யதார்த்த நிகழ்வுகளை மறந்த மாதிரி/ மறைத்த மாதிரி எழுதி இருக்கிறார். குறிப்பாய்… இந்த நிவாரணத் தொகையை ‘உடனே வழங்குமாறு’ தமிழகத்தில் இல்லாத பி.ஜே.பி.யில் இருந்து, கம்யூனிஸ்ட் முதலாக அண்ணாதிமுக வரை போராட்டம் நடத்தாதக் குறையாக குரல் கொடுத்தனர். இந்த நிஜத்தை சத்யா நன்றாகவே அறிவார். என்னசெய்ய. மறைத்து எழுதியிருக்கிறார். தவிர, இது மாதிரியான அவர் மறைத்திருக்கிற பிழைகள் இந்தக் கட்டுரையில் நிறைய உண்டு.
மக்கள் நல உதவிகளை முன்வந்து தராத அரசு என்று இந்தியாவில் உண்டா என்ன? பிஜேபி அரசு, இந்தியா தழுவி, ஹஜ் யாத்திரை போகும் முஸ்லிம்களுக்கு, உதவி தொகை வழங்கியதைவிட மலிவான/ வெளிப்படையான ஓட்டுக்கான சலுகை வேறு ஏதேனும் உண்டா என்ன? ஜெயலலிதா,கோட்டையில் ஆளுவதைவிட்டு ஊருக்கு ஊர் போய் நூற்றுக்கணக்கானோருக்கு திருமணங்களை செய்தபடி ‘காக்கவந்த கடவுளாக… மா மாதாவாக’ எல்லோரையும் காலில் விழவைத்து மகிழ்ந்தபடிக்கு வலம் வந்த போக்கு , ஓட்டுக்காக இல்லையா?
கருணாநிதியையும் திமுகவையும் தாக்கி எழுதினால்தான் சம்பளம் என்கிறபோது அவர்தான் என்ன செய்வார்! பொதுத்தேர்தல் வரப் போகிறது. அதையொட்டி தமிழக முதல்வர், தேர்தல் அறிக்கையின் வழியே நம் ஏழை மக்களின் உபயோகத்திற்கென்று வாஷிங் மிஷின், ஃபிரிஜ், ஏ.சி, ஹெலிகாப்டர், வீட்டுக்கு ஒரு ரோபோ போன்ற பொருட்களை தர முன்வரலாம்! சில நேரம் நோட்டடிக்கும் கையடக்க மிஷினைக் கூட தாராள மனதுடன் தர முன்வரலாம்! ஆச்சரியப்படுவதற்கில்லை. அரசின் மக்கள் நலன்கள், வேகமும்/ முன்னேற்றமும் கொள்ள வேண்டாமா? பாவம் சத்யா!
இலக்கணப்படிக்கு அரசியல்வாதியை எழுத்தாளன் ஜெயிக்க முடியாது. நாற்பது வருஷமாக துக்ளக் சோ, கருணாநிதியை பந்தாய் உருட்டி, பம்பரமாக சுற்றி, செக்கில் போட்டு அரைத்தெடுக்கிறார். என்ன ஆனது? இன்றைய நிலவரப்படி, அவர் ஆறாவது முறையாக முதல்வர்! மத்திய அரசின் பங்குதாரர்! தவிர, பொதுக் கணிப்பில், ‘ஸ்பெக்ட்ரம் யானை மாலை போட’ கருணாநிதியே திரும்பவும் முதல்வராக வருவார் என்பதுதான்! ‘வைய வைய வைரக்கல்’லாகிக் கொண்டிருக்கிறார் கலைஞர்! ஆக, நாற்பது வருடங்களாய் தோற்றுக் கொண்டிருக்கும் சோவின் வழிக்காட்டலில் சத்யா என்கிற மிகப் பெரிய திறமை மங்கிக் கொண்டிருப்பது வெளிப்படை. நிஜமாகவே… பாவம்தான் சத்யா!
*
அரசியல்வாதிகளையும்/ மதவாதிகளையும்
தள்ளிவைத்துப் பார்க்கத் தெரிந்த
ஆபிதீன் பக்கத்து வாசகர்கள் அனைவருக்கும்
என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வெல்லுங்கள்.
வெல்வீர்கள்.
மீண்டும் வாழ்த்துக்கள்.
– தாஜ்
***
‘துக்ளக்’ சத்யா
ஆற்காடு வீராசாமி: காங்கிரஸ் மாநாட்டிலே சோனியா பேசியதை கவனிச்சீங்களா? ‘ஊழலுக்கு எதிராக போர் தொடங்கி விட்டது’ன்னு பேசியிருக்காங்க. கழகத்தோட மோதத் தயாராயிட்டாங்களோன்னு சந்தேகம் வரலை? இதைச் சும்மாவிடக் கூடாதுங்க.
கருணாநிதி: அனாவசியமா நீங்களும் பயந்து என்னையும் பயமுறுத்தாதீங்க. ஊழலுக்கு எதிரான போர்னா, கர்நாடக பா.ஜ.க. ஊழலுக்கு எதிரான போர்னுதான் அர்த்தம். நம்ம கூட்டணி இன்னும் உடையலைன்னுதான் நினைக்கிறேன். அதுக்குள்ளே குழப்பாதீங்க.
அன்பழகன்: இருந்தாலும் அம்மையார் – அதாவது சோனியா அம்மையார் – போற போக்கே சரியில்லைங்க. ஸி.பி.ஐ. ரெய்டு, சம்மன், விசாரணைன்னு நடக்கிறதைப் பார்த்தா, வில்லங்கமா ஏதாவது திட்டம் போடுறாங்களோன்னு ஒரு பயம் வரத்தான் செய்யுது. சுயமரியாதைக் கொள்கைப்படி, கழகம் எந்த அளவுக்கு அடங்கிக் கிடக்கலாம்னு ஒரு முடிவெடுக்கிறது நல்லதுதான்.
கருணாநிதி: நாம அவசரப்பட்டு எடுக்கிற எந்த நடவடிக்கையும் அம்மையார்கள் இணைப்புக்குக் காரணமா இருந்துடக் கூடாது. நம்ம அணியிலே எந்தக் கட்சி இருந்தாலும், இல்லைன்னாலும், கழகம் மறுபடியும் அரியணை ஏறணும். பதவி முக்கியமில்லை. ஆனா முக்கியமான பல விஷயங்கள் பதவி இருந்தாதான் கிடைக்கும். பதவியை வெறுக்கணும். ஆனா பதவியிலே இருந்தாத்தான் பதவியை வெறுக்க முடியும்.
துரைமுருகன்: மறுபடியும் நமக்கு இன்னொரு சான்ஸ் கிடைக்கும்ங்களா? மக்கள் ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை மறக்கணும். மின்வெட்டை மறக்கணும். விலைவாசி உயர்வு, சட்டம் – ஒழுங்கு சீர்கேடுன்னு ஏராளமான விஷயங்களை மறக்கணுமே. எப்படி முடியும்?
கருணாநிதி: அதுக்கான நடவடிக்கைளை நான் எடுக்க ஆரம்பிச்சுட்டேன். வெள்ளத்தால் பயிர்சேதமடைஞ்சா எவ்வளவு, குடிசைகள் சேதம் அடைஞ்சா எவ்வளவு, ஆடு மாடுகள் செத்தா எவ்வளவுன்னு யாரும் கேட்காமலேயே அறிவிச்சிட்டேனே. அதுலே எப்படியும் அஞ்சு சதவிகித ஓட்டாவது ஏறியிருக்கும். ஆனா இது போதாது. இப்படி இன்னும் பல வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டணும்.
பொன்முடி: பயிர் சேதம், குடிசை சேதம் மாதிரியே பல சாலைகளும் சேதம் அடைஞ்சிருக்குதுங்க. சேதம் அடைஞ்ச சாலைகளிலே இருக்கிற ஓவ்வொரு வீட்டுக்கும் தலா ரெண்டாயிரம் கொடுத்திடலாம். கவர்ன்மெண்ட் பணத்தை கையிலே வெச்சுக்கிட்டு ஏன் கஞ்சத்தனம் பண்ணனும்?
துரைமுருகன்: கரெக்ட், தேர்தல் கமிஷன் கெடுபிடியாலே, ஓட்டுக்கு பணம் தர முடியாத சூழ்நிலை வந்துட்டா, ஆபத்தாப் போயிடும். அதுக்குப் பதில் இப்படிக் கொடுத்துடலாம்.
எ.வ.வேலு: அதே மாதிரி, ஏப்ரல், மே, சமயத்திலே மக்கள் வெயிலால் கஷ்டப்படுவாங்க. வெள்ள நிவாரண நிதி மாதிரி, வெயில் நிவாரண நிதியும் அறிவிச்சுடலாம். ரேஷன் கார்டு இருக்கிற எல்லா குடும்பத்துக்கும் கலைஞர் படம் போட்ட இலவச குடையும் கொடுக்கலாம்.
ஆற்காடு வீராசாமி: வெங்காய விலை ஏற்றத்துக்கும் ஏதாவது செய்யணும்.
கருணாநிதி: விலையைக் குறைக்கிறதெல்லாம் கஷ்டம். அதற்குப் பதிலா, அந்த 50 ரூபாய் பாக்கெட்டிலே இலவசமா ஒரு வெங்காயத்தைப் போட்டுருவோம். அதே அம்பது ரூபாய்தான். கூடுதலா ஒரு வெங்காயம். பல லட்சம் தாய்மார்களும், கழகமும் பயன் அடையற திட்டம்.
அன்பழகன்: திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் வெச்சா கேளிக்கை வரி ரத்துன்னு ஒரு தமிழ் வளர்ச்சித் திட்டம் கொண்டு வந்தோமே….
கருணாநிதி: அதைப் பத்திதான் நானும் சிந்திச்சுக்கிட்டிருந்தேன். தமிழ் பேர் வெக்க முடியாம திரையுலகத்தினர் கஷ்டப்படறதாலே, ‘தமிழ் திரைப்படத்திற்கு எந்த மொழியிலேயும் பேர் வெக்கலாம். ஆனா, அந்த பேர்லே ஒரே ஒரு தமிழ் எழுத்தாவது இருந்தாத்தான் வரிச் சலுகை’ன்னு ஆணை வழங்கி திரையுலகத்தினர் ஓட்டைத் திரட்டிடறேன்.
துரைமுருகன்: அருமையான ஐடியாங்க. திரையுலகத்தினர் வசமா மாட்டிக்கிட்டாங்க. பாராட்டு விழா நடத்தாம தப்பிக்கவே முடியாது.
அன்பழகன்: வியாபாரிகள் ஓட்டும் முக்கியம். வணிக நிறுவனங்கள் தமிழில் போர்டு வெச்சா விற்பனைவரி ரத்துன்னு அறிவிச்சுடலாம். கணிசமா நஷ்டப்பட்டாத்தான் தமிழ் வளரும். இதன் மூலம் அரசுக்கு 4858 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டாலும், நமக்கு லாபம்தான். கழகத்துக்கு பல லட்சம் ஓட்டுக்கள் குவியும்.
ஸ்டாலின்: தமிழ் மூலம் கட்சியை வளர்க்க இன்னொரு வழியும் இருக்குது. குழந்தைகளுக்கு தமிழ் பேர் வெச்சா, பிரவசச் செலவை அரசே ஏற்கும்னு உத்தரவு போட்டுடலாம். ஏற்கனவே இருக்கிற வேற்று மொழிப் பெயரை தமிழ்லே மாத்திக்கிற ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கிடுவோம்.
எ.வ.வேலு: குழந்தைகள்னதும் ஞாபகத்துக்கு வருது. இப்ப தினமும் ஒரு முட்டை போடறோம். இனிமே மூணு வேளையும் முட்டை போட்டுருவோம். முட்டை காண்ட்ராக்டருக்கும் நல்லது, கழகத்துக்கும் நல்லது.
ஆற்காடு வீராசாமி: வேலை இல்லாத இளைஞர்கள், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு உதவித் தொகை கொடுக்கிறோம். தேர்தல் நெருங்கற சமயத்திலே கூடுதலா ஏதாவது எதிர்பார்ப்பாங்க. இந்த ஆண்டு முதல், வேலையில்லாதவர்களுக்கும் இன்க்ரிமெண்ட், பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும்போது ‘ப்ரமோஷன்’னு அறிவிச்சா இளைஞர்கள் ஓட்டு வேறே எங்கேயும் போகாது.
துரைமுருகன். தை முதல் நாள் கழகத்துக்கு தனியா புத்தாண்டு பிறக்கிறதை முன்னிட்டு, சிறையில் இருக்கிற 2011 கைதிகளை விடுதலை பண்ணி, அவர்களுக்கு ஊக்கத் தொகையா இறுதிக் காலம் வரை ஓய்வூதியம் வழங்கிடலாம். எப்படியும் தேர்தல் பணியாற்ற நமக்கு ஆட்கள் தேவைப்படும். இதன் மூலம் அந்த கைதிகள் குடும்பத்து ஓட்டும் கிடைக்கும்.
பொன்முடி: வழக்கமா பொங்கலுக்கு இலவச வேஷ்டி, சேலை கொடுக்கிறோம். அது மட்டும் எப்படிப் போதும்? உள்ளாடைகளுக்கு மக்கள் சொந்தப் பணத்தை செலவு பண்ண முடியுமா? தேர்தல் நெருங்கும்போது நாம செலவைப் பார்க்க கூடாது. இந்த வருஷம் வேஷ்டி, சேலையோட உள்ளாடைகளையும் இலவசமா கொடுத்துடுவோம்.
ஸ்டாலின்: விவசாயிகளுக்கு இலவச பம்ப் செட் கொடுத்து இலவச மின்சாரமும் கொடுக்கிறோம். மின்சாரம் வராம பம்ப் செட்டை எப்படி பயன்படுத்தறதுன்னு அடாவடியா கேக்கறாங்க. அதனாலே, விவசாயிகள் ஓட்டை வாங்க ஏதாவது செய்யணும்.
கருணாநிதி: மின்வெட்டுப் பிரச்சனை நான் எட்டாவது முறை முதல்வராகும்போதுதான் தீரும். அதனாலே, விவசாயிகளுக்கு இலவச ஜெனரேட்டர் கொடுத்துத் தொலைக்கிறேன்.
எ.வ.வேலு: போலி மருத்துங்கள் புழக்கத்தைத் தடுக்கிறதும் கஷ்டம்தான். அதனாலே போலி மருந்துகளால் உயிரிழப்பவர்களின் ஈமச் சடங்கை அரசே ஏற்கும்னு அறிவிச்சுடலாம். ஏதோ, நம்மலான உதவி.
அன்பழகன்: சட்டம் – ஒழுங்கு பிரச்சனையையும் நம்மாலே சரிபண்ண முடியலை. கொலை, கொள்ளைகள் நடக்காத நாளே இல்லை. யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தா இந்தப் பிரச்சனை தீரும்னு நாம கண்டு பிடிக்கணும்.
கருணாநிதி: அதுக்கு ஒரு வழி இருக்குது. கலைஞர் மருத்துவக் காப்பீட்டு திட்டம் மாதிரி, கலைஞர் சட்டம் ஒழுங்கு ஆயூள் காப்பீடு திட்டத்தையும் கொண்டு வந்து, மக்களுக்கு இன்ஷ்யூரன்ஸ் பாலிஸி எடுத்துக் கொடுத்துருவோம். சட்டம் – ஒழுங்கு பாதிப்பால் உயிர் இழப்பவர் குடும்பங்களுக்கு இன்ஷ்யூரன்ஸ் நிறுவனமே பணம் வழங்கிடும். பலன் அடையறவங்க எனக்கு நன்றி தெரிவிப்பாங்க.
துரைமுருகன்: ஏங்க, ஒரே ஒரு சந்தேகம். பணத்தைப் பற்றிக் கவலையே படாம கருணை உள்ளத்தோட எவ்வளவோ இலவசங்களை அறிவிக்கறீங்க. இந்த கேபிள் இணைப்பையும் இலவசமா கொடுத்தா, மக்கள் ஓட்டை அப்படியே அள்ளிடலாமே?
கருணாநிதி: ஏன் இப்படி விவரமில்லாம பேசுறீங்க? என் குடும்ப உறுப்பினர்கள் வருமானத்திலே நஷ்டத்தை ஏற்படுத்த எனக்கு என்ன உரிமை இருக்குது? நம்ம இஷ்டத்துக்கு ஆட்டம் போட அது என்ன அரசு கஜானாவா? குடும்ப கஜானாவை, அரசு கஜானாவா நினைக்கிறவன் நான் இல்லை.
***
பின் குறிப்பு (தாஜ்): மீண்டும் சத்யா!
அவரது கட்டுரையின் முடிவு வரிகளில், முதல்வர் மீது கத்திப் பாய்ச்சலை நிகழ்த்தியவராக முடித்திருக்கிறார்! சோவை திருப்திப் படுத்த வேண்டாமா? அதனால்தான் அந்தக் கத்திப் பாய்ச்சல். கேபிள் இணைப்பு இனாமுக்கு முதல்வர் ஏன் தன் குடும்ப கஜானாவில் கைவைக்க வேண்டும்? அரசு , தனியாரை எப்படி நஷ்டப்படுத்த முடியும்? அதற்கு ஒரு அரசு தீர்மானம் செய்து, அரசு பணத்திலேயே வழங்கலாமே! அநியாயத்திற்கு சிந்திக்கிறார் சத்யா!
***
நன்றி: துக்ளக் ( 5.01.2011) , சத்யா
தட்டச்சு & வடிவம் : தாஜ் | satajdeen@gmail.com
மஜீத் said,
03/01/2011 இல் 17:38
அதிகப்படியான வெளி அழுத்தம் (external pressure) ஒரு நல்ல படைப்பாளியையும் இப்படிப் பாதிக்கும். தாஜின் பின்குறிப்பு படிக்கும் முன்னரே, விளங்கி விடுகிறது சத்யாவின் தடுமாற்றம். பாவம் சத்யா! வேறு என்ன சொல்ல? இதே சோ, முன்னொரு தேர்தலில் கருணாநிதியைப் போற்றி, ஜெயாவைத் தூற்றித் தேர்தல் பணியாற்றியதும் வாசகர்கள் அறிந்ததே.
Ramesh.R said,
07/01/2011 இல் 08:48
நண்பரே!.. துக்ளக் இதழ் பற்றியும் சோ அவர்கள் கருணாநிதி பற்றியும் விமர்சிப்பது இருக்கட்டும்.. இலவசங்களை நீங்கள் ஆதரிக்கிறீரா? கலைஞர் அவர்கள் ஓட்டுக்காக இலவசங்களை அள்ளித் தந்து தமிழகத்தின் நலனை நிர்மூலமக்குகிறார் என்பது நிதர்சன உண்மை., அதேசமயம் குஜராத் பற்றியும் மோடியைப் பற்றியும் சோ புகழ்கிறார் என்கிறீர்கள். மதவாதம் என்ற ஊடகங்களின் அபவாதமான வீண் குற்றச்சாட்டைத் தவிர மற்றபடி நிர்வாகத்தில் திரு.மோடியின் செயல்பாடு அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டுள்ளது. விவசாயத்தில், தொழில்துறையில், ஜவுளித்துறையில் குஜராத் இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளதாக இந்திய தொழில் மேம்பாட்டு சர்வே தெரிவித்துள்ளது.. அது மத்திய அரசு நிறுவனம். எனவே பாரபட்சமின்றி நிதர்சனமான உண்மையை உணர்ந்து ஒப்புக்கொள்ளுங்கள். மதவாதம் எந்த மதமாயினும் தவறுதான்.. கண்டிக்கத்தக்கதுதான். அது இஸ்லாமாக இருந்தாலும் சரி. இந்துவாக இருந்தாலும் சரி. ஆனால் ஒருதலைபட்சமாக இந்துக்களை அவமதிப்பதை விட்டுவிடுங்கள் சகோதரரே!.
மஜீத் said,
10/01/2011 இல் 18:07
சகோதரர் ரமேஷ், மோடி என்ன குற்றம் சாட்டுபவர்களுக்கு பூர்வஜென்ம பகையா?
மற்ற BJP முன்னாள்/இந்நாள் முதல்வர்களான ஷெகாவத், வசுந்தரா, ஷிவ்ராஜ் சிங் சௌகான், ராமன் சிங், பிரேம்குமார் தூமல், ரமேஷ் போக்ரியால், எட்டியூரப்பா இவர்களுக்கு எதிராக இப்படி குற்றச்சாட்டு இருக்கிறதா? BJP கூட்டணி நிதிஷ் குமார்????? யோசிங்க.
ஒருதலைப்பட்சம் உங்களிடமே இருக்கிறதல்லவா?
வாருங்கள்! எல்லோரும் சேர்ந்து மதவாதத்தை எதிர்ப்போம். அது எங்கிருந்தாலும்.
மனித ரத்தத்தால்தான் முதலிடம் வருமென்றால், அது எதற்கு?
மஜீத் said,
10/01/2011 இல் 18:10
தவிரவும் தாஜ் எங்கே இந்துக்களை அவமதித்தார்?
ஆபிதீன் said,
08/01/2011 இல் 09:43
அன்பு ரமேஷ்..
//மதவாதம் எந்த மதமாயினும் தவறுதான்.. // இது ஒண்ணுபோதும் எனக்கு. உங்களின் மற்ற வரிகளுக்கு தாஜ் பதில் சொல்லட்டும். முஸ்லிம்கள் என்னவென்றால் அவர் தங்களை தாக்குவதாகச் சொல்கிறார்கள், ஒருதலைபட்சமாக. பாவம் தாஜ்!
ஹமீது ஜாஃபர் said,
11/01/2011 இல் 21:23
சகோதரரே! மோடி, குஜராத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறார் என்ற உண்மை ஒருபுறம் இருந்தாலும் அவருடைய வேறொரு முகம் இப்படி இருக்கிறதே? இந்த முகம் அவருக்கு மட்டும்தானே. அதையும் சற்று யோசியுங்கள்.