சங்கமித்திரை

தமிழ்பேப்பரில் பத்மா எழுதும் ‘ஜென்வழி’ கதைகளைப் படிக்கிறேன் – என் வழி ஜின்வழியாக இருந்தாலும்! ‘துறவியின் மனைவியும் துளி தங்கமும்‘ என்று ஒரு கதை. ஆசிபெறுவதற்காக துறவியிடம் ஏராளமான தங்கத்தைக் கொடுக்க முயற்சிக்கிறான் ராஜா. ‘உடனே எடுத்துச் சென்றுவிடு’ என்று மறுக்கும் துறவி, ’மகனே, நான் ஆசைகளைக் கடந்துவிட்டேன். ஆனால் என் மனைவி அப்படி இல்லை. இத்தனை தங்கத்தைப் பார்த்ததும் அவள் சபலப்பட்டுவிடுவாளோ என்றுதான் எனக்குக் கவலை.’ என்கிறார்.  அடுத்த நிமிடம் உள்ளே இருந்து அவருடைய மனைவியின் குரல் கேட்கிறது, ’நீங்க பெரிய துறவிதான். தங்கத்துமேல உள்ள ஆசையைத் துறந்துட்டீங்க. ஆனா அடுத்தவங்களுக்கு அந்த ஆசை இருக்குமோங்கற கவலையை உங்களால விடமுடியலையே! அப்படீன்னா நீங்க இன்னும் தங்கத்தை ஒரு பெரிய விஷயமா நினைக்கறீங்கன்னுதானே அர்த்தம்?’ என்று. ஆஹா!

‘காந்தி மஹான் சிரிக்கிறார்’ என்று ஜபருல்லாநானா அனுப்பிய எஸ்.எம்.எஸ்தான் ஞாபகம் வந்தது. ‘பேப்பரை கொடுத்துட்டு மண்ணை வாங்குறான், மண்ணுக்கு கீழே உள்ளதயும் வாங்குறான். பிறகு அதையும் கொடுத்துட்டு மறுபடி பேப்பரை வாங்குறான். அதான் நோட்டுலெ காந்தி சிரிக்கிறாரு’ என்று சொல்லிவிட்டு அதை அனுப்பிவைத்தார். பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு மனதை இழந்துவிட்ட பணக்காரர்களைப் பார்த்து காந்தி சிரிப்பதாக அந்தக் ‘கவிதை’ வரும். சிரிக்கட்டும் சிரிக்கட்டும், அவருக்கென்ன?  இந்த ஜபருல்லா நானாவுக்கு 1500 ரூபாய் நேற்று கிடைத்திருக்கிறது. தன் உம்மாவிடம் 500 கொடுத்துவிட்டு மீதி 1000த்தில் இவர் 250 எடுத்துக்கொண்டு (இடிந்த வீட்டுக்கான செலவாம்!) மீதியை தர்ஹாவில் மழையால் வாடிக்கொண்டிருக்கும் ஏழைகளுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

‘நானோ சுமக்க நாற்றப் பொன்னை?’ என்று ஒரு பெண் சொல்லும் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது இப்போது. அவள் சங்கமித்திரை. புலவர் ஆபிதீனின் ‘சங்கமித்திரை’. ‘அழகின் முன் அறிவு’ நூலில் அந்த அழகான பாடல் வருகிறது. ஊரிலிருந்தபோது , ஏதோ ஒரு உற்சாகத்தில் , அந்தப் பாடலை (‘நானோ சுமக்க நாற்றப் பொன்னை? மட்டும் இருமுறை) இந்த புண்ணாக்கு ஆபிதீன் உற்சாகமாக உரக்கப் பாடி முடித்த அன்று ‘அது’ கிட்டவில்லை. சாப்பாட்டைச் சொல்கிறேன்! ‘ஹூம்.., நீங்களும் ஒங்க சபரும்..’ என்று ஒரே சத்தம்!

அஸ்மாக்கள் அமைவதெல்லாம் ஆண்டவன் கொடுத்த வரம்!

ஆபிதீன்

***

சங்கமித்திரை

புலவர் ஆபிதீன்

கீ.மூ இருநூ றாண்டுகள் முன்னர்
கோமா னசோகச் சக்கர வர்த்தி
ஒரிஸா என்னுங் கலிங்க நாட்டை
முறியடித் திடவே கருதிய போது
படைகள் புறப்படப் பணித்தார் ராணுவம்
நடைகள் போட்டுக் கெடுபிடி செய்ய
வானும் தெரியா வண்ணந் தூசுகள்
காணும் பரிதிக் கதிரை மூடின
திடுதிடு வெனவே முரசு முழங்கின
தடபுடல் செய்தார் இருதரப் பாரும்
வில்லும் வாளும்  வேலும் தத்தம்
கொல்லுந் தொழிலைச் செய்தன மின்னி
தார்க்குலை போலும் குடல்கள் சிதையப்
போர்க்கள முடிவு பிணக்கா டாயது!
முக்கல் முனகல் மெல்லொலி யார்ப்ப
மக்கள் புழுவாய் மடிந்து போயினர்
தாவின பரிசுகள் கரிகள் நகருள்
ஆவிகள் அமரர் உலகிற் கேகின!
நாற்றம் நுகர்ந்த கழுகுக் கூட்டம்
காற்றாய் மேலே வட்டம் இட்டது
கணவன் பிரிவால் கண்ணீர் சிந்திப்
பிணத்தைப் புரட்டினர் பெண்டி ரனேகர்
லக்ஷக் கணக்கில் சேதம் செய்த
தக்ஷத் தவரால் தோற்றது கலிங்கம்
பொன்னும் பொருளும் சூறை யாடி
இன்னம் பலரைச் சிறையாய்க் கொண்டு
சென்றனர் வெற்றி முரசுகள் கொட்டி
நன்றெனத் தக்ஷ சீலம் நோக்கி
பின்னர் ஒருநாள் சங்க மித்திரை
என்னும் மகளை அருகில் அழைத்து
‘வலிமை செறுக்கில் வீழ்ந்து சிதைந்த
கலிங்க மளித்த காணிக் கையிவை
ஈண்டுள தங்கக் குவியலில் நீயும்
வேண்டிய மட்டும் வாரிக் கொள்க’
என்றார் அசோகர் அம்மொழி கேட்டு
நின்றாள் மலைத்துப் பிறகு சொன்னாள்:
‘கூரிய மதிசேர் குரிசிற் பெரும்!
மௌரிய மரபின் மன்னர் மன்ன!
மன்னித் தருள்க மாற்றம் உண்டேல்
பொன்னோ நமது பிறவியின் நோக்கம்?
ஏனோ இந்த எளியோர் ஊனம்?
நானோ சுமக்க நாற்றப் பொன்னை?
எத்தனை மக்கள் உயிரை மாய்த்து
இத்தனை செல்வம் சேர்த்தீ ரிங்கு?
உதிரம் என்னும் ஆற்றில் தோய்ந்த
உதவா நகைக ளெனக்கு எதற்கு?
மாண்டா ருயிரில் ஒன்றை யேனும்
மீண்டும் அளிக்க முடியுமோ நம்மால்?
குருதியின் வாடை வீசுது அம்ம!
அறிவில் திரையும் விழுந்த தெங்ஙன்?
உலகைக் கட்டி ஆண்டும் ஆசை
விலகிப் போக வில்லை கொடுமை
பொன்னை உணவுப் பொருளாய் வைத்து
உண்ணச் சிறிதும் உதவுமோ என்ன?
முள்ளைப் பறித்து முடியில் சூடிக்
கொள்வது சற்றும் நல்லது அன்று.
ஆயிரம் ஆண்டும் வாழ்பவ ரென்று
பாயிரம் பெற்றுப் பிறந்தோ மல்லோம்
இன்றோ அல்லது என்றோ ஒருநாள்
சென்று நெருப்பில் சாய்வது உறுதி
அன்பின் வடிவம் புத்தர் பெருமான்
இன்பம் விழைவார்க் கிதுவா நீதி?
தருமம் செய்க தடைகூ றாமல்
கருமப் பொருளே கொஞ்சமும் வேண்டா’
இப்படிப் பெரிதும் இதமாய்ப் போதம்
செப்பிய மகவின் செஞ்சொற் கேட்டு
‘உண்மை கூறினை உத்தம மகளே!
நன்மை உரைத்தாய் நன்றி உனக்கு;
பாரில் வறுமைப் பட்டார்க் கெல்லாம்
வாரி இறைத்து விடுவாய் இவற்றை
எதுவோ அரசியல் ஏய்த்தது என்னை
இதுவே போரில் இறுதி’
என்று அசோகர் எழுந்தா ரன்றே.

***

நன்றி : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், இஜட். ஜபருல்லா  ,  பத்மா / தமிழ்பேப்பர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s