மேடும் பள்ளமும் – சீர்காழி ராவுத்தன்

 

‘Beauty and the beast’ என்று போடுவேன், புகைப்படத்தின் அடியில் என்றேன். உறுமினார் ‘காதல் மன்னர்’ தாஜ்!

***

தாஜ் குறிப்புகள்:

அச்சில் வெளிவந்த, என் இரண்டாவது கதை இது. 1983- ஜுலை ‘முஸ்லிம் முரசு’ மாத இதழில் பிரசுரமாகியது. ரம்ஜான் பெருநாள் மலராக வந்த அந்த சிறப்பு இதழில், சிறப்புச் சிறுகதையளவில் வெளியிட்டு இருந்தார்கள்.

‘பணத்திலும் பகட்டிலும் நிர்ணயிக்கப்பட்ட திருமணம் அந்தத் தம்பதியரை எவ்வளவு இம்சைப்படுத்துகிறது? பல கல்யாணங்களுக்கு ‘விஸாக்களே கபில்துப் பத்திரங்களாவதால் மகிழ்ச்சி கூட ‘ஸஹாரா’வாகிறது. இளமையைப் பலியிடுகிற வெள்ளாட்டு மந்தைகளில் இவனும் ஒருத்தன்-‘ என்று அழுத்தம் தந்து ‘முஸ்லிம் முரசு’ பொறுப்பாளர்கள் எழுதி இருந்த முன்வரிகளும், அதன் விளக்கமும், என் கதைக்கு எந்த அளவில் பொருந்திப் போகும்? என்ற குழப்பம் இருந்தது.

அந்த முன்வரிகளைக் கொண்டு நோக்கும் போது, அந்த இதழின் அன்றைய ஆசிரியர் , ‘N.B.ரமீஜா’ அல்லது நிர்வாக ஆசிரியர் ‘ஆளூர் ஜலால்’ , யாரோ ஒருவர் இந்தக் கதையைப் படித்த நாழிக்கு, ரொம்பவும் உணர்ச்சிவசப் பட்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் உணர்ந்தேன்.

அவர்கள் எனக்குத் தந்த இந்த முக்கியத்துவத்தை கணக்கில் கொள்கிற போது, நான்தான் அவர்களோடும், அவர்களது இதழோடும் ஒட்டி உறவாடி ஓடியிருக்க வேண்டும். நேர் மாறாக பிற்காலத்திலும்கூட வேறு  எழுத்து எதனையும் அந்த இதழுக்கு அனுப்பாதவனாகவே இருந்துவிட்டேன். அப்படி அவர்களோடு ஓடாததில், உறவு பாராட்டாததில் நஷ்டம் எனக்குத்தான் என்பது இப்போது புரிகிறது. ‘முஸ்லிம் முரசு’ கைலி விளம்பரத்திற்கான இதழென அதை ஒதுக்கியிருக்கக் கூடாதுதான் 😉

நவீன இலக்கியத்தில் நிறைய சாதித்தவர்களான தோப்பில் முகம்மது மீரானும், என் இனிய ரஃபி என்கிற நாகூர் ரூமியும் இந்த இதழ்வழியாகத்தான் தமிழ் உலகுக்கு அறிமுகமானார்கள்.  இந்தக் கதை வந்த அதே இதழில், தோப்பில் முகம்மது மீரானின் முதல் வெற்றி நாவலான ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ – 23-அத்தியாயம் வெளிவந்ததிருந்தது. நான்தான், கயிற்றைப் பற்றிக் கொள்ளும் யோசனை இல்லாமல் பெரிய வெற்றியொன்றை நழுவ விட்டிருக்கிறேன்.

*     

யதார்த்தம் சார்ந்த என் புனைவுகளில் இதுவும் ஒன்று. கதை என்னவோ என்னைச் சார்ந்தது என்றாலும், கற்பனை கலந்த புனைவுதான் இது! 1981ல் எழுதினேன். யாரும் கண்டுப் பிடித்துவிடக் கூடாதென ‘சீர்காழி ராவுத்தன்’ என்ற புனைபெயர் வேறு! அந்தப் புனைபெயரே, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்றவன் கதையாக என்னை காட்டித் தந்துவிட்டது. இதழில் கதை வந்து, அந்த இதழ் என் கைக்கு கிடைக்கும் முன்னேயே, என் தம்பி மனைவி வாசித்து, கண்டுபிடித்து, ‘வார்த்தைகள் எதுவுமில்லாமல், வாய்கொள்ளா சிரிப்பில் விமர்சித்தும் விட்டாள்! 

தொடர்ந்து, கதைக்கான விமர்சனம் நேரடியாக பரபரவென வந்து சேர்ந்தது. ‘இதை எழுதித்தான் ஆகணுமா?’ என நண்பர்களும், அர்ச்சனைகளாக வீட்டில் உள்ளோர்களும் தாராளம் காட்டினார்கள். கேள்விப்பட்ட என் மனைவி, ‘வெட்கமே இல்லாமல் இதைப்போய் யாராவது கதைன்னு எழுதுவாங்களா?’ என்று இரண்டு நாள் கோணிகொண்டு அலைந்தாள்.

ஒரு ஐந்து வருடங்களுக்குப் பிறகு, சௌதி – தமாமில், ஏதோவோர் ரூமில், அதுவரை பழக்கப்படாத புதிய இஸ்லாமிய நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு கவிதை கதை என்று நீண்டது. அந்தப் புதிய நண்பர் இந்தக் கதையை பத்திரப்படுத்தி வைத்திருப்பார் போலிருக்கிறது! ‘யாரோ’ எழுதிய கதையென இக்கதைக் குறித்து என்னிடம் பிரஸ்தாபித்து கொண்டிருந்தார். அவரது பேச்சில், இந்தக் கதையின் நாயகன் அவரது இரக்கத்திற்கும் பரிதாபத்திற்கும் உள்ளாகிக் கொண்டிருந்தான்.

மறதி எனக்கு எப்பவுமே கொஞ்சம் தூக்கல். அந்தக் கதையை எங்கோ படித்திருக்கிறோம் என்கிற எண்ணத்தோடு, அவரது இரக்கத்திலும் பரிதாபத்திலும் நானும் பங்கு கொண்டவனாக பேசிக் கொண்டிருக்கும் போதே…. ‘அது நம்ம கதையாயிற்றே! அந்தக் கதாநாயகனே நான்தானே’ என்று சட்டென நினைவெழ, சற்று தயங்கி, ‘அது, நான் எழுதிய கதையாக்கும்!’ என அசடு வழிந்தேன். அந்தப் புதிய நண்பர் என் கூற்றை நம்பவில்லை. ‘இத்தனை நேரம் இவனுக்காகவா அனுதாபப்பட்டோம்!’ என்பது மாதிரி முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

அதற்குமேல் அவரை நம்பவைக்க நானும் முயற்சிக்கவில்லை. வேடிகையான – மறக்க முடியாத – சம்பவம் அது!

நிஜத்தில், இந்தக் கதைக் குறித்து என் அபிப்ராயம் என்பது பெரிதாக ஒன்றுமில்லை. கையகலத்திற்கான சாதாரணக் கதை! சப்பை மேட்டர். என்றாலும் 1981-னில் பேனா பிடித்த தாஜ் இருக்கிறான்.

தாஜ்

***

மேடும் பள்ளமும்
சீர்காழி ராவுத்தன் (தாஜ்)

நான் – சிராஜுதீன் – பி.ஏ., அப்புறம் பி.டி., இன்று வெளிநாடு போய் வந்து இருக்கிறேன்.

அங்கே சவூதி அரேபியாவில் இரண்டு வருடமாக உத்தியோகம் பார்க்கிறேன் – சம்பாதிக்கிறேன் – சொல்லிக் கொள்ளவும் பெருமையாக இருக்கிறது. திரும்பவும் விடுமுறை கழித்து அங்கே போயாக வேண்டும். வேண்டுமா? வேண்டும். பின்னே இங்கே தங்கிவிட முடியுமா?

இன்றைக்கு எனக்கு கல்யாண காலம். பெற்றோர்களின் முயற்சி தீவிரமாகிறது. இப்பொழுது வேண்டாம் என்பதற்கான காரணங்களை – நியாயங்களை – எடுத்து வைத்து அடுக்கியாகி விட்டது.  பலன்… இன்னும் தீவிரமாகிறார்கள்.

எனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறதாம்! சரி. திருமணம் வாழ்வின் கட்டாயமாம்! அதுவும் சரி. ஆனால் எனக்கு விடுமுறை நாற்பத்தி ஐந்து நாட்கள் தானே – இப்பொழுதே பதினைந்து நாட்கள் ஆகிவிட்டதே – இனி என்றைக்கு நிச்சயதார்த்தம்? என்றைக்கு கல்யாணம்? என்றைக்கெனக்கு அந்தப் பொன் இரவுகள்? அப்புறம் இனி எப்பொழுது அவளுடன் பழகி – பரிச்சயமாகி – மனம் விட்டுப் பேசி – மனம் புரிந்து – சல்லாபம் செய்து – தூங்கி – விடிந்து – தூங்கி… ஏது நேரம்?

ஏன் இப்படியொரு சோதனை? வாழ்க்கையை வகையுடன் வாழ – எத்தனை வயதுகளில் இருந்து சின்னச் சின்னதாக கனவுகளை சேமித்து இருப்பேன்? திடுமென்று இன்றைக்கு ஏன் இந்த இடர்பாடுகள்?

எத்தனையோ பேர் வாய்க்கிறவளிடம் ஆற அமர வாய்பேசி – சிரித்து – மகிழ்ந்து – சிணுங்கி – சின்னதாய் சண்டையிட்டு – நேரத்தில் கூடி – கும்மாளமிட்டு – குழந்தைக்கு தகப்பனாகி – பொறுத்து – நிதானித்து – மீண்டும் ஒரு குழந்தைக்கு அஸ்திவாரமிட்டு… எப்படியெல்லாம் ஆனந்திக்கின்றார்கள்!

அப்படி ஏன் எனக்கு அமையாமல் போனது? வெளிநாட்டில், சம்பாத்தியம் என்பதில்தான் இந்தப் பிரச்சனை முளைக்கிறதா? கட்டியவளை அவ்வளவு எளிதில் அங்கே அழைத்துக் கொள்ள முடியாது என்பதால், பிரச்சனை வருத்தி இன்னும் உயர எழுகிறதா? இரண்டுக்குமே ஆமாம்தான்.

கல்லூரிவரை போய் படித்துவிட்டு நின்றேனே – எம்ப்ளாய்மெண்ட் வாசலில் பியூனின் வசவுக்கிடையில் க்யூவில் நின்று பதிவு செய்து கொண்டு வந்தேனே – இண்டர்வியூ என்று கம்பெனிக்கு கம்பெனி ஏறி இறங்கினேனே – என்ன மிச்சம்? வேலை கிடைத்ததா? கிடைத்து இருக்கும் பட்சம், இன்றைக்கு இத்தனை உறுத்தல்கள் ஏது? அன்றைக்கு, நிந்திக்கப்பட்டு – மிதிப்பட்டு – கசங்கி – வாழ்வில் பிடிப்பில்லாமல் – வழிதெரியாமல் அல்லவா நான் திரிந்தேன்.

*

“சிராஜ் நமதூருக்கு அடுத்த வாரம் அந்தக் கல்வி மந்திரி வருகிறாராமே!”

“வரட்டும்.”

“என்ன செய்யலாம்?”

“இப்படிக் கேட்க வெட்கமாயில்லை? ஆயி-அப்பன் உழைப்பையெல்லாம்… படிப்பு படிப்பு என்று உறிஞ்சிவிட்டு, இன்றைக்கு நாம கையாலாகத்தனமாய் – வேலைக் கிடைக்காமல் வெட்டியாய் திரிகிறோமே…. அதை அந்த மந்திரிக்குப் புரியவைக்க வேண்டாம்?”

“அதான் எப்படி?”

“கருப்புக் கொடி காட்டலாம்.”

“போதாது – அதுகள் மரத்துப் போன ஜென்மங்கள்!”

“முகத்தில் அறைகிற மாதிரி கோஷம் போடலாம்.”

“போலீஸ் சும்மா விடுமா?”

“அச்சமில்லை. போலீஸ் என்ன செய்யும். சிறைச்சாலையைத்தானே காட்டும். காட்டட்டும். அங்கேயாவது வேலை கிடைத்தால் சரி.”

*

சுதந்திரத்தையும் உரிமையையும் தாராளமாய் அனுபவித்து பயனற்றுப்போன அந்த நாட்களை நினைக்கிறபோது கசக்கத்தானே செய்கிறது. இன்று அரபு அரசாட்சிக்கு கீழ் என் சுதந்திரச் சிந்தனைக்கே வேலை இல்லாமல் – வேலை செய்கிறபோது, வேலை செய்கிறோம் என்கிற நினைவே மகிழ்ச்சியாக இருக்கிறதே! மாதா மாதம் கைநிறைவதுகூட இரண்டாம் பட்சம். இந்த இரண்டு வருடங்களில் என் எவ்வளவோ பிரச்சனைகள் வெளிச்சம் கண்ட பனியாய் மறைந்து விட்டது மட்டுமல்ல, இன்றைக்கெனக்கு  என் காலில் நிற்கவும் முடிகிறதே!

ஏன் இப்படி மீண்டும் குழம்பிப்போய் நிற்கிறேன். இதற்குத்தான் இங்கே வந்தேனா?  நாட்கள் நகர்கின்றன. இன்னும் என் பெற்றோர்களால் எனக்கான பெண்ணை நிச்சயிக்க முடியவில்லை. அவ்வளவு இடங்களில் இருந்து நான் – நீ என்று பெண் பேசி வருகிறது. பெண் தேர்வுப் படலத்தில் என் பெற்றோர்கள் தவித்துதான் போனார்கள்.

நான் அங்கே என்ன வேலை செய்தேன்? அந்தச் சூழ்நிலையின் நிதர்சனம் என்ன? என்று கூட கேட்கக் தோன்றாமல் பெண்ணைப் பெற்றவர்களால், எப்படி இப்படி துரிதகதியில்  பெண்ணை ஒருவனிடம் ஒப்படைக்க முன்வரமுடிகிறது? அவளை கழித்துக் கட்டினால் போதும் என்ற எண்ணமா? விலைவாசி மாதிரி நாளுக்கு நாள் உயர்கிற வரதட்சணையின் பயமா? அல்லது உள்ளபடியே… வயதுக்குவந்த பெண் என்பவள், மடியில் கட்டின நெருப்பா? புரியவில்லை. ஆனால், பெண்ணைப் பெற்றவர்களின் பரபரப்பும் – அவர்களுக்கு இடையே ஜனிக்கும் போட்டியும் கண்கூடாகவே தெரிகிறது.

அங்கே கோழிப் பண்ணையில், கோழிகளின் கொக்கரிப்பும், மூக்கைத் தீய்க்கும் சூழலின் வாடையும் – இன்னும்கூட என்னைச் சுற்றிச் சுற்றி வருகிறதே! ஊரில் அப்படி ஒரு பண்ணையை சொந்தத்தில் நான் வைத்திருக்கும் பட்சமும் இப்படியொரு வரவேற்பு இருந்திருக்குமா?

சரி , அப்படியே மணம் முடித்தாலும், எத்தனை நாள் மகளுடன் இவன் சந்தோஷமாய் தங்கி இருக்கக் கூடும்? என்று மகளின் நல்லெண்ணம் பொருட்டுக்கூட நினைத்துப் பார்க்கத் தோன்றாமல் இப்படியா விழுந்தடித்துக் கொண்டு பெண் தருகிறேனென முன் வருவது?

கடல் தாண்டி சம்பாத்தியம் செய்து வருபவனிடம் அப்படி என்ன கவர்ச்சி? பணமா? பணம் மட்டும்தான் வாழ்க்கையா? இந்தச் சம்பாத்தியம்தான் எத்தனை வருடங்களுக்கு ஊர்ஜிதம்? எனக்கே என் நிலை தெரியாதே! எல்லோருமே அகதிகள் மாதிரி நாளைக்கே கூட திரும்ப நேரிடலாம் என்று மிக நன்றாகத் தெரிந்துதானே இன்று அங்கே கைக்கட்டி வாய்பொத்தி சேவகம் புரிகிறோம்.

பல பெண்களைத் தவிர்த்து – பெண்தர முன்நின்ற பல உறவினர்களின் மனஸ்தாபங்களை சம்பாதித்துக் கொண்டு, ஒரு வழியாய் என் பெற்றோர்கள் ஒரு பெண்ணை மணப் பெண்ணாக தேர்ந்தெடுக்கின்றார்கள்!

இன்னொரு முறை முயற்சித்துப் பார்க்கலாமே என்று, “நாட்கள் இல்லையே, இப்போது கல்யாணம் வேண்டாமே” என்று முரண்டு பிடித்துப் பாக்கிறேன். என் பாட்டியின் உடல் நிலையினைக் காரணம் காட்டுகிறார்கள். கல்யாணத்தை இப்போதே நடத்திப் பார்க்க வேண்டும் என்பதாக பிடிவாதம் கொள்கிறார்கள். பிறகு…, மறுக்க முடியவில்லை. இணங்குகிறேன்.

கல்யாணத்திற்கு நாள் குறித்தது – பத்திரிகை அச்சடித்தது – ஊர் அழைத்தது மட்டுமல்ல, எல்லா காரியங்களுமே அவசர அவசரமாய்! வேண்டப்பட்ட எத்தனையோ பேரை அழைக்க மறந்ததுகூட அவசர அவசரமாய்.

ஊத்தாத மழையில் கறி சோர் ஆக்கி – ஊர்சோர் கொடுத்து – நனைந்த ஆடைகளாய் உற்றார் உறவினர்கள் வலம்வர – ஹஜ்ரத்து சளிகொண்ட தும்மலில் துவா ஓத, கல்யாணம் நடந்து முடிந்தது. திரும்பவும் அரேபியா புறப்பட ஏழே நாட்கள்தான் பாக்கி!

அலைச்சலில் – அசதியில் – திடுமென இரண்டு நாட்கள் தொலைந்துவிட்டது. கல்யாணத்தன்று பெண்ணை கண்ணில் காட்டியதோடு சரி. அந்த இரண்டு நாட்களின் இழப்பைக் கூட தாங்க முடியாமல் மனம் கிடந்து தவித்தது. நஷ்டம்! அவளை தீண்டாததுதான் எத்தனைப் பெரிய நஷ்டம்!

மூன்றாம் நாள் நிதானமாய் – அவளின் கூச்சம் போக்கி – அசுவாசப்படுத்தி – முகம் பார்த்து – சிரித்து – பேசி பேசி – கட்டிலில் அமர்த்தி – கதவை சாத்தி – விளக்கை…..

விசும்பல் கேட்கிறது. அவளிடம் இருந்தா? ஆமாம்! ஏன்? புரியவில்லை. மூளையைக் கசக்கிக் கொள்கிறேன். புரியவில்லை. சின்னப் பதற்றம் மட்டும் என்னுள் இலேசாய் இங்கும் அங்கும்! அவள் மனம் அறியாமல் என்னுடன் இணைத்து விட்டார்களோ? அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்குமோ? என்பதாக பலமாதிரி நினைப்புகள் அரித்தெடுத்தது. அவளது முகம் திருப்பி,, “ஏன்?” என்று கேட்கிறேன். பதிலில்லை.

மீண்டும் அதே கேள்வி. கொஞ்சம் அழுத்தமாக. எங்கேயோ பார்த்தப்படிக்கு, கம்மியக் குரலில் சொன்னாள், இன்று அவள் தலைமுழுகி இருக்கிறாளாம் – ‘மாசம்’ பட்டிடுச்சாம் – இன்னும் ஐந்து நாட்களுக்கு அவளைத் நான் ம்ஹும் – கூடாதாம் – ஆகாதாம் – ஹராமாம்! முதல் நாளில் முகம் காமிக்க பெண்ணை ரூமுக்கு அனுப்பும் போதே என் பாட்டி, விளங்கா அரைகுறை சொற்களால் வினோதப் புலம்பலாக அரற்றியதின் அர்த்தம் இப்போதுதான் புரிந்தது.

இயற்கை என்னைப் பார்த்து சிரித்துவிட்டது. நானும் வேறு வழியற்றுச் சிரிக்கிறேன். என்னுள் எழுந்த ஆசைகள் செங்குத்தாய் மேலேபோய், அங்கிருந்து கீழ்நோக்கி கரணம் அடிப்பதை ரொம்ப நிதானமாய் ரசிக்கிறேன். வேலை இல்லை. வேறு என்ன செய்ய?

***

நன்றி: முஸ்லிம் முரசு/ ரம்லான் பெருநாள் மலர்/ ஜுலை-1983
தவிக்க முடியாத சில திருத்தங்களுடன், தட்டச்சும் &வடிவமும் : தாஜ்  | satajdeen@gmail.com

8 பின்னூட்டங்கள்

 1. 06/12/2010 இல் 20:07

  தாஜ்..! நீங்க சொல்லிட்டீங்க, ரொம்பப் பேர் சொல்ல முடியாம தவிச்சிக்கிட்டிருக்காங்க. இதெல்லாம் அவனவன் தலைவிதி. எல்லாத்துக்கும் கொடுப்புனை வேணும். உங்க லிஸ்ட்லெ என்னை சேர்க்காதீங்க. கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டுதான் ஊருக்குப் போனேன். நாற்பது முடிஞ்ச பிறகுதான் வந்தேன்.

  • மஜீத் said,

   07/12/2010 இல் 16:34

   நான் சொல்லுவேன்! எதுக்குத்தவிக்கணும்? ஹிஹி

 2. 06/12/2010 இல் 20:13

  ‘Beauty and the beast’ என்று தலைப்பைக் கொடுத்துட்டு ‘காதல் மன்னன்’ என சமாதானம்…! அது என்ன ‘உறுமினார்’. beast உறுமாம என்ன செய்யும்?

 3. மஜீத் said,

  06/12/2010 இல் 20:18

  ஏற்கனவே இந்தக்கதையைப் பற்றி ‘சிராஜுதீனே’ ஒன்றிரண்டுமுறை சொல்லக்கேட்டிருந்தாலும் படித்தது இன்றுதான். இப்போது இக்கதையை ,கநாசு தாஜ், எழுதியிருந்தாலும்…………இதேமாதிரிதான் இருந்திருக்கும். எழுத்தின் வளமை அப்படி. 1983லேயே அவர் வயசுக்கு வந்துவிட்டார் (வாங்கெடுத்து பஃப் வச்சுல்ல சீவிருக்கார்)

  இந்த மாதிரி ஒரு ஜாக்கெட்டோடு ரியாத்தின் குளிர்காலையில் அவர் வேலைக்குப்போக படியிறங்குகையில் நானும் நண்பர் நஸீரும் இவருக்கு வைத்த பெயர்: ‘ஆம்ஸ்ட்ராங்’

 4. தாஜ் said,

  07/12/2010 இல் 17:17

  என்ன எழுதி என்ன புண்ணியம்? இப்படி வாறுறீங்களே.
  அல்லா உங்கள சும்மாவிடமாட்டான்.
  என்றாலும் நன்றி.
  – தாஜ்

 5. 15/12/2010 இல் 22:45

  எதையுமே கண்ணியமான முறையில் எழுதும் தாஜின் எழுத்துகள் ம்கவும் வசீகரமானவை.

 6. சரோஜா said,

  16/09/2013 இல் 14:57

  அட


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s