ஆபிதீன் கடிதங்கள் – தாஜ்

நண்பர்களை நம்பவே கூடாது! கால் மூட்டுவலியால் கடுமையாக நான் இங்கே அவதிப்பட்டுக்கொண்டு – Voveran Gel & Tabletsஓடு – போராடிக் கொண்டிருக்கும்போது ,  ‘ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு’ என்ற அதிசய சுட்டியை அனுப்பி அபார சேவை செய்கிறார் ஒரு நண்பர். அவரிடம் வலியைச் சொல்லாதது என் தப்புதான். சொல்லியிருந்தால் முகப்பருவுக்கு சுட்டி அனுப்புவார் மனுஷன். நாகூரில் இருக்கும் நண்பன் ரஹ்மத்துல்லாவோ எதைச்சொன்னாலும் தன் ‘நோனி’யைக் காட்டிவிடுகிறான். இதில் ‘சின்ன நோனி வேணுமா, பெரிய நோனி வேணுமா?’ என்ற கேள்வி வேறு. ‘நோனி’யின் ஏஜெண்ட் அவன். ‘நோனி‘ புகழ்பெற்ற ஒரு லேகியமாகவே இருக்கட்டும். கீழத்தஞ்சை மாவட்ட முஸ்லிம் செண்டர்களில் ‘நோனி’ என்றால் அர்த்தமே வேறு. தெரியாதவர்கள் சொன்னால் பயங்கரமான அடிதான் கிடைக்கும்.

இதனாலேயே சங்கடம் தவிர்க்க ,’என் ஓ என் ஐ’ என்று சாமர்த்தியாகப் பேர் சொல்வான் ரஹ்மத்துல்லா. பிசினஸ் தெரிந்தவன். நோகாத ‘நோனி’ இருக்கட்டும், உருப்படியான கட்டுரை ஒண்ணு அனுப்புய்யா என்று மெஸ்ஸேஜ் அனுப்பினால் இந்த மஹா மடையன் எழுதிய கடிதங்கள் பற்றி எழுதி அனுப்புகிறாரே வேகாத ஞானியும் வெண்வீட்டுத் தோணியுமான தாஜ்! . (White House :  தாஜ் வீட்டின் செல்லப் பெயர்).

என்ன செய்யலாம்?

ஸ்கேன் செய்யப்பட்ட என் பழைய கடிதமொன்றைப் பார்த்து எனக்கு ஆச்சரியமோ ஆச்சரியம் – கிழித்தெறியாமல் இன்னும் வைத்திருக்கிறாரே என்று. என்மேல் தாஜ் வைத்திருக்கும் அன்பு என்றென்றும் நெகிழ வைக்கிறது. அவருடையது அன்புக்கண் – அஸ்மாவுடையதைப்போல. ஆபிதீன் மேல் குற்றமே காணாது. பல அசிங்கங்களை ஆபிதீனும் செய்திருக்கிறான் என்பதை அறியாத கண்…

இன்னொரு வகை கண் இருக்கிறது. ‘சைத்தான்’ சாதிக்-இன் கண்! காய்ச்சல் காரணமாக ஒருநாள் நான் அலுவலகம் போகவில்லை என்பதை அறிந்ததும் , ‘அப்ப…நீங்க மனுஷனாயிட்டு வர்றீங்கண்டு சொல்லுங்க’ என்கிறது!

என் கதைகளைப் பாராட்டியிருக்கும் சில எழுத்தாளர்களின் விமர்சனங்களை இங்கு பதிவிடுவதற்கே கூசும்போது இப்படி ஒரு கட்டுரை! மூக்குப்பீயை நோண்டிப் பார்ப்பது மட்டுமல்லாமல் நக்குவது மாதிரியும். தர்மசங்கடமாக இருக்கிறது. ஆனால், ‘அட, போடுய்யா’ என்று உத்தரவிடுகிறார் அன்பர் தாஜ். சரி, அல்லாஹ் உன் காவல்! என் கடிதங்களைப் பற்றிய கவிஞர் தாஜின் குறிப்புகளில் – பல வரிகளை நான் நீக்கிவிட்டாலும் – படைப்பாளி அப்படி இப்படியென்று பிழையான பல தகவல்கள் இன்னும் இருக்கின்றன. நம்பி மோசம் போகாதீர்கள்! நான் எழுத்தாளன் அல்ல, அல்ல, அல்ல. எழுதவும் வரும் (வருமா?), அவ்வளவுதான். நான் வியக்கும் எத்தனையோ எழுத்தாளர்கள் உண்டு. தி. ஜானகிராமனின், கி.ரா ஐயாவின் ஒரு வரிக்கு நான் ஈடாவேனா? பிரித்து மேயும் ஜமாலனும் , பேரா. ரமீஸ்பிலாலியும், ஹனீஃபாக்காவின் சிஷ்யன் அறபாத்தும் இப்போது பயமுறுத்துகிறார்கள். நாகூர் ரூமி பற்றி சொல்லவே வேண்டாம். அவர் எழுதாமலிருந்தாலே இலக்கியம்தான்! போகட்டும், அந்தக்காலத்தில் நிறைய கடிதங்கள் நான் எழுதியதுண்டு. கடிதம் வந்ததுமே பதிலெழுத உட்கார்ந்து விடுவேன். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு எழுத்து டிசைன்கள். அழகாக எழுதவேண்டுமென்ற ஆர்வத்தை சிறுவயதில் ஏற்படுத்திய, முத்துமுத்தாக எழுதும் அண்ணன் ஆறுமுகத்தை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். என்னைப் பார்த்து என் தம்பிகள் சேத்தாப்பா, ரஃபீக், நஜ்முதீன் ‘அப்படியே’ எழுதுவார்கள். ஒருவரிடமிருந்து ஒருவருக்கு…

தமிழில் தட்டச்சு செய்து -கையெழுத்துமட்டும் போட்டுவிட்டு – கடிதம் அனுப்பினால் ‘ரிகார்ட் செய்த ஃபுட்பால் மேட்சை பாக்குற மாதிரி இருக்குடா. பழையபடி கையாலெ எழுது’ என்பான் நண்பன் ஹமீது. அப்போதான் எம்ப்ளது கிலோ என்னைப் பார்க்கிறானாம்! எங்கே எழுத? எல்லாமே ஈ-மெயிலாகி விட்டது. ‘செல்’லாக் காசாகி விட்டன செல்லக் கடுதாசிகள்…

வாப்பாவுக்கு என் கடிதங்கள் என்றால் உயிர். ஜெராக்ஸ் எடுத்து தன் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு அனுப்புவார்கள். ‘பாருங்க என் மவனோட எழுத்த. பெரிய ஆளா வருவாரு தம்பிவாப்பா’. எங்கே வந்தேன் என் சீதேவி வாப்பா? ஏமாளி என்ற ஏச்சுக்கும் , பிழைக்கத் தெரியாதவன் என்ற பேச்சுக்கும் இலக்காகி நிற்கிறேனே.. கால்தூசி பெறாத, ‘காசு மட்டுமே வாழ்க்கை’ என்று சொல்லும் கழுதைகளெல்லாம் கண்மண் தெரியாமல் என்னை உதைக்கிறதே.. காப்பாற்ற வரமாட்டீர்களா வாப்பா?

வாப்பா அனுப்பிய கிராஃபிக் பேனாக்களை உபயோகிப்பதற்கு முன்பு சாதாரண ஃபவுண்டன் பேனாவால் – அதன் ‘நிப்’பின் பின்பக்கத்தை உபயோகித்து – எழுதுவேன் (‘அப்போதிருந்தே பின்பக்கம் என்றால் உமக்கு அவ்வளவு இஷ்டம்’ – ரூமி) . பதிப்பகத்தைத் திட்டி எழுதினால் ‘உங்கள் கையெழுத்து அழகாக இருக்கிறது’ என்ற பதில் வரும். எழுத்தாளரைத் திட்டி எழுதினால் அவரது மகளின் பாராட்டு வரும்! வேடிக்கை… அதேசமயம் , படுவேகமாக – யாருக்கும் புரியாத மாதிரி – கிறுக்கவும் செய்வேன். அவைகள் கதைகள் என்று அழைக்கப்படும்!. உயிர் நண்பரான இஸ்மாயில் போன்றோருக்கு நாலைந்து பக்கத்திற்குள் (சமயத்தில், ஓவியக் கிறுக்கல்களோடு) கடிதமென்றால் நாற்பது பக்கம், நானூறு பக்கமென்று வேறொரு நெருங்கிய நண்பருக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறேன். அதில் சில கடிதங்கள் ஓரிரு சிற்றிதழ்களிலும் இடம் பிடித்தன. பல ‘கடித எளக்கியங்களை’ காக்கா தூக்கிட்டு ஓடியும் போச்சு! ம்… இப்ப அது வேண்டாம், இது வேறொரு ‘இடத்திற்கு’ என்னை இழுத்துப் போகும். அதற்கான மனமும் தெம்பும் இப்போது இல்லை.

கேட்கும்போதெல்லாம் நெகிழவைக்கும் ஒரு பாட்டு ஏனோ இங்கே ஞாபகம் வருகிறது…

‘நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்..
இனி அடுத்தடுத்து கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம்
யா அல்லாஹ்..யா அல்லாஹ்..சுபுஹானல்லாஹ்..’

நன்றி.

ஆபிதீன்

***

கடித இலக்கியம்: ஆபிதீன்

தாஜ்

‘ஆபிதீன் பக்கங்கள்’ வாசிக்கும்
நண்பர்கள் அனைவருக்கும்
அன்புடன்….

நவீன இலக்கியம் சார்ந்த
கதைகள்/ கவிதைகள்/ கட்டுரைகள்/
மற்றும் நாவல்கள் குறித்தெல்லாம்
இந்தப் பக்கங்களில் எழுதப்படுபவற்றை
நீங்கள் படிப்பதும்
அது குறித்து (கடிதத்தில்) எதிரொலிப்பதும்
சந்தோஷமாக இருக்கிறது.

நானும்….
இங்கே
எனக்கு தெரிந்த சில இலக்கியச் சங்கதிகளை/
கதை/ கவிதை/ கட்டுரை/ விமர்சனங்கள் என்று
வாசிக்கத் தந்து, உங்களோடு
வட்டமடித்துக் கொண்டிருப்பதையும் சகிக்கிறீர்கள்!
நன்றி…..
இப்போது இது.

*

நவீன இலக்கியத்தில்…
கடித இலக்கியம் என்றோர்
நட்சத்திர சங்கதி ஒன்று உண்டு!
அது வளமாக இருந்த காலம்
இப்போது மங்கித் தேய்ந்து வருகிறது.
டெலிபோனின் உபயோகப் பெருக்கமும்
ஈமெயில் பரவலும்
தளைத்துக் கிளைத்துவிட்ட இன்றைய பொழுதில்
கடித இலக்கியம் நசிந்துவிட்டதில் வியப்பில்லை.
ஒரு காலகட்டத்தில்
ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு
அமர்க்களப்பட்ட
காதல் கடிதங்கள் கூட
இப்போதெல்லாம் அவ்வளவாக
உபயோகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
உலகமயமாக்கப்பட்ட காலமிது!
எல்லாமே துரிதம்…
எல்லாமே நேரடி ஆக்சன்!

*
ஜவஹர்லால் நேரு, தனது மகள்
இந்திரா பிரியதர்ஷிணிக்கு (இந்திரா காந்தி) எழுதிய கடிதங்கள்/
அம்பேத்கார், பெரியாருக்கு எழுதிய கடிதங்கள்/
புதுமைப்பித்தன், அவரது மனைவிக்கு எழுதிய கடிதங்கள்/
சு.ரா., சிறையில் இருந்த ஒரு ஆயுள்கைதிக்கு எழுதிய கடிதங்கள்/
சு.ரா., இலக்கிய நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள்/
கி.ரா., ‘ரசிகமணி’க்கும் கு.அழகிரிசாமிக்கும் எழுதிய கடிதங்கள்/
கல்யாண்ஜி, கலாப்ரியாவுக்கு எழுதிய கடிதங்கள்…
தொகுப்புகளாக வந்து
வாசகனின் வாசிப்பு நெகிழ்ச்சியை
இன்னொரு தளத்திற்கு நகர்த்தியது.

‘த சண்டே இந்தியன்’ என்றோர் தமிழ் இதழ்
சில வருடங்களாக வெளிவருவதை
நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.
இதழ் தவறாமல் அதில்
முன்னால் உலக முக்கியப் புள்ளிகள்
எழுதிய விசயதானக் கடிதங்களை
தொடர்ந்து பிரசுரித்து வருகிறது!
4-17oct,,2010 இதழில்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்,
பிராங்க்ளின், டி ரூஸ்வெல்ட்டுக்கு எழுதிய
கடிதம் பிரசுரமாகி இருக்கிறது.
‘1940களின் ஐரோப்பிய நாடுகள்
அணுசக்திப் பெருக்கத்தில்
அதிக ஈடுபாடுகள் கொண்ட
செயல்பாடுகளைப் பேசுகிறது அது!’

தமிழின் அரிய படைப்பாளியான மௌனி,
கவிஞர். கி.அ.சச்சிதானுக்கு எழுதிய கடிதங்கள்
விரைவில் தொகுப்பாக வரவிருக்கிறது.
இப்படி, கலை இலக்கியம் சார்ந்த படைப்பாளிகளின்
கடிதத் தொகுப்புகளும் தொடர்ந்து வரவேண்டும்; வரும்.

நம்ம ஆபிதீன்….
தனது நண்பர் ஒருவருக்கு
எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு
சுமார் அறுநூறு பக்க அளவில்
புத்தகமாய் வருவதற்கான
ஆயத்தப் பணிகள் முன்பு தொடங்கிய நிலையில்….
‘சில காரணங்களால்’ தடைப்பட்டுப் போனது.

*

ஓரிரு வாரங்களுக்கு முன்
கடித இலக்கிய ரசனையை
உங்களுக்குத் தொட்டுக் காமிக்கும் நோக்கிலேயே
படைப்பாளி சு.ரா., ‘கவிஞர்’ உமாமகேஸ்வரிக்கு எழுதிய
கடிதமொன்றைப் பதித்திருந்தேன்.
இன்றைக்கு
இன்னொரு படைப்பாளியான ஆபிதீன்,
‘மண்டை’யான எனக்கு எழுதியக் கடிதத்தை பதிகிறேன்.
கடிதத்தின் காலம்: 4,5th March,1987
சௌதி அரேபியாவில் பணி நிமிர்த்தமாய்
அவர் தமாமிலும் நான் ரியாத்திலும்
காலம் தள்ளியபோது அவரால் எழுதப்பட்ட கடிதம்.

இப்படி… 
என் சேமிப்பிருப்பில் இன்னும்….
தி. ஜானகி ராமன், பிரம்மராஜன், பிரபஞ்சன்,
சாருநிவேதிதா, நாகூர் ரூமி,
கூத்தாநல்லூர் ஹாஜா அலி,
ஜெயமோகன், கவிஞர் உமா மகேஸ்வரி,
கவிஞர் லதா ராமகிஷ்ணன்
வாசகியும் நண்பருமான வித்யா
தமிழகத்திற்கு தன்னம்பிக்கை போதித்த
எம்.எஸ்.உதய மூர்த்தி, நண்பர் சீர்காழி சாதிக்,
நண்பர் நாச்சியார் கோவில் ஹாஜா என்று…
பலரது கடிதங்கள் பத்திரமாக இருக்கிறது.

கீழே….
ஆபிதீனின் கடிதத்தை
நீங்கள் வாசிக்கும் முன்
மேலும் உங்களோடு கொஞ்சம்
அளவளாவ வேண்டியிருக்கிறது.

*

உங்களில் எத்தனை பேர்கள்
ஆபிதீனின் படைப்புகளை
வாசித்து இருக்கின்றீர்கள்?
இல்லைதானே…?
தெரியும்!

1980-களின் தொடக்கத்தில்
கடை‘ என்கிற அவரது கதையொன்று
இலக்கியச் சிற்றிதலான
‘கணையாழி’யில்
முத்திரைக் கதையாக வந்தபோது
வாசிக்க வாசிக்க வியந்து போனவன் நான்!

‘இஸ்லாமிய சமூகத்தில்
இப்படியொரு….
நவீன இலக்கியப் படைப்பாளியா?
பார்க்கணுமே’ என்கிற ஆவலில்
நாகூர் போய்,
நண்பர் நாகூர் ரூமியோடு ஆபிதீனை சந்தித்தேன்.
கைகுலுக்கி, பேசி, சிரித்து, வாதிட்டு நண்பர்களானோம்.
இதில் கைகுலுக்கியதும் நண்பரானதும் மட்டும்தான்
ஆபிதீனோடு நடந்தது.
மற்றதெல்லாம்…
உடன் இருந்த அவரது இலக்கிய நண்பர்களோடுதான்!

‘அப்படியென்ன அந்தக் ‘கடை’யில்?’ என்கிறீர்களா…
மனதின் வலியை….
வெளியே சொல்ல முடியாத அந்த வலியை
யதார்த்த நிகழ்வுகளின் வேடிக்கைகளைக் கொண்டு
சின்னச் சின்ன ‘வெடை'(கிண்டல்)களோடும்
கொஞ்சம்போல வாழ்வு சார்ந்த விமர்சனங்களோடும்
உள்ளார்ந்து ரசித்து சிரிக்கும்படி அவர் எழுதி இருந்தார்.

இது என்ன பெரிய விசயம்
சில எழுத்தாளர்கள் அப்படியெழுதி
வாசித்திருக்கிறோமே என்கிறீர்களா?
சரிதான்.
வாசித்திருக்கவும் கூடும்.

அந்தக் கதையை…
மண்ணின் மணம் கமழ எழுதியிருந்தார் என
மேலும் நான் சொல்ல முனைந்தால்….
அப்படியும் படித்திருக்கிறோம் என்பீர்கள்.
அதையும் மறுக்க முடியாது.
தமிழ் வளமான மொழிப் பிரதேசம்தான்!
பல படைப்பாளிகள் நன்றாகவே
ஆழ அகலமாக உழுதிருக்கிறார்கள்!
உங்களது கூற்றும் சாத்தியமானதே.
தவிர…
நீங்கள்தான் எவ்வளவு பெரிய ஆள்!
எவ்வளவு தெரிந்து வைத்திருக்கின்றீர்கள்!

எல்லாம் சரிதான்.
ஆனால்….
‘நாகூர் தமிழில்’ அப்படி படித்திருக்கிறீர்களா?
படித்திருக்க மாட்டீர்கள்.
அந்த மண்ணின் நிஜ மணம் குழைய
நிச்சயம் படித்திருக்க மாட்டீர்கள்.
படைப்பு என்கிற அந்தஸ்தில்…
நிச்சய நிச்சயமாகப் படித்திருக்க மாட்டீர்கள்.
அப்படிப் படிக்கணும் என்றால்…. 
ஆபிதீனைத்தான்…
ஆபிதீனை மட்டுமேதான்…
நீங்கள் தேட வேண்டியிருக்கும்!
வேறு மார்க்கமே இல்லை!

*

‘கடை’ வெளியானதற்கு முன்பே
அவர் எழுதிய ‘குழந்தை‘ என்கிற கடிதம்
‘யாத்ரா’ என்கிற இலக்கியச் சிற்றிதழில்
வெளிவந்திருந்ததாக அறிந்து…
தேடி… அந்தக் குழந்தையைக் கண்டெடுத்து
உச்சி முகர்ந்தேன்.
‘கடை’யைவிட ரசனை கொண்டதாகவும் இருந்தது!

*

1. இடம்
2. உயிர்த்தலம்.

– என்ற தலைப்புகளில்
ஆபிதீனுடைய இரண்டு
சிறுகதைத் தொகுப்புகள் வந்திருக்கிறது.
ஒன்று, சினேகா பதிப்பகம்
மற்றொன்று, எனி இந்தியா பதிப்பகம்.
இந்தத் தொகுப்புகளில்
நான் குறிப்பிட்ட/ ரசித்த 
மேற்கண்ட கதைகள் இடம்பெற்றிருக்கிறது.
வாசித்துப் பாருங்கள்.
அப்போதுதான்… 
என் சிலாகிப்பின் நிஜம் பிடிப்படும்.

ஆபிதீனின் பக்கங்களிலேயே கூட
திண்ணை/ பதிவுகளில் வெளிவந்த
அவரது கதைகள் சில இருக்கிறது.

*

சில வாரங்களுக்கு முன்னால்….
இன்னும் பிரசுரத்திற்கு தராத/
2000ம் ஆண்டு வாக்கில் எழுதிய/
‘வலை’ என்ற அவரது கதையை
என் பார்வைக்கு ஆபிதீன் அனுப்பித் தந்தார்.
அவரது எழுத்து வல்லமைக்கு அது
மேலுமோர் சான்றாகவே இருந்தது.

தனது, வலைத்தளப் பக்கத்தை
அர்த்தப்படுத்தும் நோக்கில்
தனது ஊரின்…
சரித்திரத் தகவல்கள் வேண்டி/
அந்த மண்ணில் வாழ்ந்து மடிந்த
சாகித்திய கர்த்தாக்களின் தகவல்களும்
ஆக்கங்களும் தேடி/
கூடுதலாக, சான்றோர் பெரியோர்களை
நாடி ஓடி , செய்திகளின் தீர்க்கம் அறிந்து…
அறிய வந்த தகவல்களில்
நிஜத்தின் துல்லியம் வேண்டி
இன்னும் பலரைக் காணவென்று
நாகூர் வீதிகளில்
ஆபிதீனும், ரூமியும் நடந்த நடையின்
பாதச்சுவடுகள் அப்படியே தெரிய
பதிவாகி இருப்பதுதான் அவரது அந்த ‘வலை!’

விரைவில் எல்லோரின் பார்வைக்கும் வரும்.
வாசித்த நாழியில்
நீங்களும் என் கருத்தை வழிமொழிவீர்கள்!
நம்புகிறேன்.

ஆபிதீன் என்கிற இந்தப் படைப்பாளி
ஈடுபாடு கொள்ளும்…
எழுத்து சார்ந்த / கலை இலக்கியம் சார்ந்த சங்கதிகளின்
நுட்பம் விளங்காமல்….
இஸ்லாமிய அடிப்படைவாதிகளில் சிலர்
அவரையும் ‘தசுவமணி’ உருட்டச் சொல்லி
அவ்வப்போது கடிதங்கள் மூலம்
நொறுக்குவதை நீங்கள் அறிந்திருக்கலாம்!
என்னத்த சொல்ல?

இஸ்லாமிய சகோதர்கள் தொடங்கும்
அத்தனை வலைத்தளங்களும்
அதைத்தான் செய்கிறது.
இருந்தும் போதவில்லை அவர்களுக்கு!
ஒருவர் பாக்கியில்லாமல்
எல்லோருமே ‘மாவு’ இடிக்கணும் என்கிறார்கள்!
மூளை சார்ந்து எதுவொன்றும்
செய்துவிடக் கூடாது இவர்களுக்கு!.
செயல் சார்ந்து
‘நாட்டு வெடிக்குண்டு தயாரித்தால்’ டபுள் ஓ.கே.

பணிரெண்டு வயதைத் தாண்டிய மகனுக்கு
புத்திச் சொல்ல தகப்பனுக்கு
அனுமதி கிடையாது என்கிற மதத்தில்
இவர்கள் இப்படி செயல்படுகிறார்கள்.
தாலிபான்களையும் மிஞ்சிவிட்டார்கள்!

*

ஆபிதீன்
முன்னை மாதிரி எழுதுவதில்லை
தொடர்ந்து எழுதுவதற்கு
ஆர்வமும் காட்டுவதில்லை.
அவர் ஆர்வம் காட்டாவிட்டால் என்ன?
நான் விட்டுவிட முடியுமா?

இதுதான்….
இதற்காகத்தான்… நான்
இத்தனைச் சுற்றென
சுற்றி வந்துக்கொண்டிருக்கிறேன்!

சந்தோஷம்… நன்றி!


கநாசு.தாஜ்

*

ஒரு ஆபிதீன் கடிதம்.  (பெரிதாக்க ‘க்ளிக்’ செய்யுங்கள்)


ஆபிதீன் / அல்கோபர்
431987

நேற்று மாலை 5 1/2 மணிக்கு ‘தடாலெ’ன்று தபால் ஆபிஸில் விழுந்தேன். இவ்வளவு பெரிய தாக்குதலை அதுவரை நான் சந்தித்தவனில்லை. எண் 69 ஐ திறக்கும்போது எனக்கென்று ஏதும் உள்ளே இருந்தால் ‘பெரிய எஜமான்’ வாசலில் பெறும் மயிலிறகு அனுபவம் – சின்ன வயதில் அனுபவித்தது – நினைவிற்கு வரும். (இப்போது அங்கே காணிக்கை தராமல் தலை நீட்டினால் மயிலிறகு அடிதான்!) ஆனால் நேற்று காத்திருந்தது புயலென்பதை அதன் உருவம் காட்டியதுமே ‘திடுக்…’. ஒன்றல்ல , அதுவும் இரண்டு புயல். இலக்கியப் புயல். ரொம்ப நாளாய் காணாமலிருந்தது. இப்போது ஒட்டுமொத்தமாய் கருவிக்கொண்டு காத்து இருந்தது. (ரவி)அண்ணனின் + உங்களின் வேகம் தாங்குகிற சக்தி எனக்குக் கிடையாது. நான் சிறுவன்! தெரிந்துபோன பிறகு சந்தித்தேயாக வேண்டும். நியதி மீற நினைக்கவில்லை நான். ஆனால் அங்கே கடையில் ‘கஃபில்’ (அரபி முதலாளி) காத்திருக்கிறான். முன்பு போல அல்ல. ‘அஸர்’ சலா’ (மாலைநேரத் தொழுகை) முடிந்தவுடன் கடையைத் திறந்து விட்டு ‘மஞ்சளை’ (மலையாளி) கவனிக்கச் சொல்லிவிட்டு நான் தபாலுக்கென்று போய் மரம்-மலர்-மனிதரில்லா புல்பூங்காவில் கொஞ்சநேரம், ஷுலா ஷாப்பிங்கில் கேமரா – கேஸ்ஸட் என்று பார்க்க கொஞ்சநேரம் என்று செலவழிக்க முடிவதில்லை. இப்போது ஓரிரு நிமிடங்களையே நான் எனக்கு நேரும் நேரமாய் நினைக்கிறேன் என்பதை உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை. ஏனெனில் நீங்களும் கெடிகாரஜாதி இல்லையா? ஒரு நாள் இப்படி நேரம் நீண்டுபோனதாக ஆச்சரியமாக சீக்கிரம் முழித்து வந்துவிட்ட ‘கஃபில்’ கண்டுபிடித்ததலிருந்து நான், அவன் கடைக்கு வந்த பிறகே தபாலுக்குப் போகவேண்டும் என்றாகிவிட்டது. ஆகவே விழுந்தவன், ‘சரி சாவகாசமாய் செத்துப்போகலாம்’ என்று அங்கே பிரிக்காமல் கடைக்கு எடுத்து வந்தேன்….

இப்படிச் சாவதானால் நான் எத்தனைமுறை வேண்டுமானாலும் என் ‘வெல்லக்கட்டி’ இழக்க தயார்…. என்ன ஒரு குதுகலமான சாவு… அருவி மாதிரி பெய்தல்லவா குளிர வைக்கிறது…! நீங்கள் உங்கள் எழுத்துப்படி ஆபிதீனாகவோ பட்டுக்கோட்டையின் பக்கிரியாகவோ இருப்பதைவிட இப்படி உண்மையான தாஜாக இருப்பதே நல்லது. என்ன அற்புதமாய் எழுதுகிறீர்கள்! இனி எனக்கு நீங்கள் Mr. இலக்கியம்தான்! இப்படி அழைப்பதனால் ஒரு 3 பக்க தாஜ் கிடைப்பது சுலபம் என்பதனால் மட்டும் அல்ல , உண்மையிலேயே உன்னதமா…(சீ.. இதன் பிடியிலிருந்து மாறவே மாட்டேனா) உயர்வான எழுத்துதான். அதிலும் நீங்கள் தளர்கிற நேரத்திலிருந்து அடுத்த நாள் காலையில் புகுத்திக் கொள்வது வரை அழகு…. இப்படியே இருந்து விடுங்கள்!

531987

நேற்று தொடரமுடியாதபடி ஒரு வருடமாக உயிர்த் தோழனாக இருந்த என் பேனா சதி செய்துவிட்டது. rotring 2mm. எப்படியோ கவனக்குறைவாக நேர்க்குத்தலாக விழுந்து அதன் மிக மெல்லிய உயிர் போய்விட்டது. (உங்களுடன் பேச என் பேனா பயப்படுவதாக எடுத்துக் கொள்ளலாம்!) இந்த பேனா சமாச்சாரம் எனக்கு ரொம்பவும் துடிப்பை ஏற்படுத்திவிடுகிறது. கூடவே வந்த குறியின் மேல் பாசமில்லாமல் இடையில் வருகிறது இப்படி…! அதே thickness வேணுமென்றால் 25 ரியாலுக்கு அலையவேண்டும். எங்கேபோக மாதமுதல் வாரத்தில்? தவிர பணத்திற்கு பிரயோசனம் இப்போது மூலம் போக்க வாங்கும் மருந்திலும் பழங்களிலும்தான். அப்படியும் குளிர்ச்சியான பழங்கள் விலையால் ஏகமாய் உஷ்ணத்தை வழங்கிவிடும் துரதிர்ஷ்டம். போகட்டும். கைவசம் ஊரில் தொழில் செய்ய என்று வாங்கி வைத்திருந்த Steadlier (0.1) உதவுகிறது. இது உதவிதானா? நீங்கள்தான் சொல்லவேண்டும். நம்மூர் புரட்சிக்காரர்கள் போலல்லவா அழகில்லாமல் இருக்கிறது. நீங்கள் சரி சொன்னால் தொடர்வேன். இல்லையேல் ‘கம்சின் ஹலாலா’ (50 பைசா)  Redleaf தான் இனி தடிப்புரட்சிக்கு!

முதலில் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி எவ்வகையிலும் உங்களை காயப்படுத்த கூடிய செயல்களில் ஈடுபட மாட்டேன். அப்படி ஈடுபட்டாலும் நான் மன்னிப்பு கேட்டால் கொடுத்துவிடுகிற ஆளும் கூட நீங்கள்! உங்களை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்று குறை சொல்லியிருக்கிறீர்கள். யாரை நான் புரிந்து கொண்டிருக்கிறேன்? என் குறைதான். அதேசமயத்தில் நீங்கள் என்னை புரிந்திருக்கிற அளவும் தாங்கள் Pocket இல்லாத சட்டை போடுபவர் என்று என்னை நினைக்க வைக்கிறது. நாம் மேலோட்டமான மனிதர்களையே பார்க்க நேரிடுகிறது. இதனால் மனிதநேயத்தை ஒத்துக் கொள்கிற நம்மூர் காயலான் கடை அல்லது புத்திஜிவி கூட்டம் ஒரு தேரை தன்மேல் ஏற்றிக்கொள்ள போராடி வருகிறது. எவ்வளவு படிப்பும் திறமையும் புருவம் தூக்குவதற்காக போய்த்தொலைகிறது. இதில் யாரோ ஒருவர் ஒன்று சேர்க்க என்று முனைந்து பிய்த்துப்போடும் இலட்சியத்தை சரிவர நிறைவேற்றிவிட்டுப் போகிறார். வெறுமைதான் விளைவு. வெறுத்துப்போய்த்தான் இந்த மாதிரி பவித்திரத்தை கிண்டல் செய்கிறேன். எழுத்து , மலமாகவோ மூத்திரமாகவோ இருந்தால் போகிறது. தெய்வமாக இருக்காதிருந்தால் போதும். இம்மாதிரி கும்பிடுகள் மனிதனை தத்துவத்திற்கு படைத்திட என்று ரொம்பவும் மூழ்கி அலட்டிக்கொள்ளாமலிருக்க முயன்றுவருகிறேன். சும்மா இருத்தலும் முடியவில்லை. ஆகவே கடிதம்.

நண்பர்களுக்கு மட்டும் என்று இந்த நழுவும் தன்மை உங்களுக்கு சிரிப்பைக் கொடுக்கலாம். மற்றவர்க்கு பாதகமில்லாமல் சிரித்தால் சரிதான். வாழ்க்கையில் நாகரீகத்தின் மரணம் என்றோ ஏறிவிட்டது என்று கவலை கொள்ளவேண்டாம். முதலில் முயற்சிப்போம். அந்த ஃபீனிக்ஸ் பறவை நம்முடன் தொடர்ந்து இருக்குமென்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படி அது நம் கையில் கிடைத்தால் பரஸ்பரம் புரிந்து மொத்தமாய் மலையேறமுடியும். எதற்காகவும் அந்த நேரத்தில் ஒரு மிகக்குறுகிய எழுத்து வட்டத்திலுள்ளவர்கள் சண்டையிடுவது சாத்தியமில்லை. எழுத்து பிடித்திருந்தால் மட்டுமே நட்பு என்று யாரு தைரியமாகச் சொல்லமாட்டார்கள். எழுத்தால் மட்டுமே தனக்குப் பரிச்சயமான ஒரு நபரின் எழுத்தை, ஒருவர் அநாகரீகமாகக் குறை கூறி , கூறியவரை குத்திக்கிழிக்க அநாகரீகத்தின் உச்சியில் நின்று பாயமாட்டார்கள்…. எவ்வளவு நல்ல விசயம்! பிச்சைக்காரனாய் ஒரிரு மாதம் ஒரு நண்பனிடத்தில் தங்கிவிட்டு (பேய் மாதிரி தீனி வேறு அங்கு!) போகும்போது நன்றி கூட சொல்லாதது மட்டுமல்ல ‘பெரிதாய் உதவியதாக நினைக்காதே. உன் கண்டிப்பான கடமை கலைஞருக்கு உதவுவதாக்கும்…!) என்று சொன்ன கலைஞனை செருப்பால் அடித்தால்தான் என்ன? இப்படி அடித்து விட்டுவிடுவதுதான் நாகரீகம் அங்கே.

இந்த கலைஞன் வாழ்வின் அநியாயம் என்பதல்ல இவனால்தான் வாழ்வே அநியாயமாகிப் போகிறது என்கிறேன்.

உண்மையில், ஒரு நல்ல மாலை நேரத்து கடற்கரை கையில் கிடைக்க அதை பார்க்கத் தெரியாமல் ‘சுந்தரராமசாமி’யுடன் நீங்கள் இருவரும் போரிட்டபோது சில்லடி முழுவதும் குறைப்புகளால் நொருங்கிப்போனதை கண் கலங்க பார்த்துக் கொண்டிருந்தேன். புரியாத ரவி புத்தியில்லாதவர் என்கிறீர்கள்! (அப்படித்தான் புரிந்தாலும் என்று அடிக்காதீர்கள்) ஜே.ஜே. உங்களுக்கு இதைத்தான் புரியவைத்தானா?

இப்படி ஒரு ஆதரவாளரை உருவாக்கிவிடுவது மட்டும் சு.ரா.வின் எழுத்திலுள்ள நோக்கமாக இருக்கமுடியாது என்று நம்புகிறேன். இப்போது கூட ‘மடத்தனமான விமர்சனம்’, ‘போலித்தனமான வீம்பு’, ‘எளிதில் அகப்பட்டுவிட்டவர்’ என்றுதான் ரவியை சொல்லமுடிகிறது உங்களால்… நீங்களும் ரவிதான் என்பதை உணரவில்லையா இங்கே? இதன் அர்த்தம் , விவாதமே கூடாதென்பதோ அப்படியே வந்தாலும் ‘சு.ரா.’ என்று இரு வார்த்தை சொல்லி நீங்களும் ‘ஆமாம்’ அல்லது ‘இல்லை’ என்று அவரும் சொல்லிப் போய்விட வேண்டும் உடனே என்பதோ அல்ல. நாமெல்லாம் எந்த யுத்தத்தில் வெற்றிபெற இப்படி தனித்தனியே? இந்த பைத்தியக்காரத்தனத்தையா எழுத்து சிஷ்டிக்கிறது? நீங்கள் ரொம்ப கஷ்டப்படுகிறீர்கள் தாஜ். ஆயினும் நீங்கள் சகமனுஷன்தான் என்று நம்புகிறேன். எழுதியிருக்கிறீர்களே!

பித்து எப்படியெல்லாம் ஒருவனை கணக்கில் ஈடுபடச்செய்யும் என்பதற்கு ஒரு உதாரணம்: சமீபத்தைய பித்து! ‘ஜே.ஜே’.யை மொழிபெயர்த்து (Sample மாதிரி) அனுப்பிய ரஃபி, சுந்தர ராமசாமி அதில் திருப்தியில்லை என்பதாக அனுப்பியவுடன் ஓரளவு பொறுத்துக் கொண்டிருந்து , பின் அது வெ.சா., ‘க்ரியா’ ராம் ஆகியோரின் சரிபார்ப்பில்தான் திரும்பியிருக்கிறது என்கிற ‘விபரம்’ தெரிந்தவுடன் இது முஸ்லீமை எதிர்க்கும் பிராமணத்தனம் என்று தியரி வைக்கிறார். (உ.ம்: S.M.A. காதரின் சங்கீதத்திற்கு நேர்ந்த சங்கடம்) இப்படியெல்லாம் திருப்திபட்டுக் கொள்ளவேண்டுமா? எதற்காக? ஏதோ ஆர்வம் (இலக்கியச்சேவைக்குத்தான், வேறெதற்கு?) அனுப்பினார். மறுப்பா? தூக்கியெறிந்து விட்டால் நிஜ சாதனை செய்ய ஆயிரம் காத்திருக்கிறது. இவர் குழியில்தான் இறங்குவேன் என்கிறார்… எங்கே போய் முட்டிக்கொள்ள என் நண்பர்களை நினைத்து?

போதும். நான் இப்போதெல்லாம் ரொம்பவும்தான் வருத்தப்பட்டுக்கொள்கிறேன். கலைஞனாக மாறிக்கொண்டிருக்கிறேனோ என்னமோ! உங்களைப்போலவே என்னைத்தெரிவிக்க நானும் கஷ்டப்படுகிறேன். கஷ்டப்படுத்துகிறேன் என்றும் படுகிறது. ஒருவகையில் இது நல்லதுதான்… கடிதங்கள் மிஞ்சும்.(‘சோகம்! சோகம்!’ – தாஜ்)

எனக்கு மிகவும் உறுத்தல் அதிகம் என்று சொல்லி ‘eassy eassy’ என்று என்னமோ எழுதியிருக்கின்றீர்கள். இந்த சீர்காழி எழுத்தாளர்கள் இப்படித்தான். புரியாத மொழியில் – வார்த்தையில் சொல்லிவிடுகிறார்கள். ஒருவேளை easy என்று சொல்ல நினைத்திருப்பீர்களோ? விளக்கவும். அதுபோல ‘புரிந்த கவிதைகளோடு குழாவல்’ குழாவல்? உண்மையாகவே எனக்கு தமிழில் நல்ல பழக்கம் இல்லை. இப்போது ஒரு நல்ல விசயம். எனது மீதி ‘————‘ ஐ (நீங்கள் கடிதத்தை செய்யலாம். நான் கவிதையை கறக்கக்கூடாது?!) அனுப்பி வைப்பதாக இல்லை. (‘easy… easy…!’) தாஜை முக்கியமாக கருதுவதால் இப்படி.

ஹாஜா மைதீன் என்று உங்கள் நண்பர் தமாமில் இருக்கிறாரா? உங்கள் மூலம் என்னைத் தெரியும் என்று சொல்லியிருக்கிறார். நான் பார்த்த ஞாபகம் இல்லை. அதுபோகட்டும். அப்படியே கார்த்திகா ராஜகுமார் என்கிற எழுத்தாளரும் அவர் குருப்பைச் சார்ந்தவர் என்று சொல்லியிருக்கிறார். இது கேட்ட இங்கிருக்கும் நண்பர்கள் கா.ரா.வை நானும் தெரிந்தவன் என்று நம்பி… ஏக மரியாதை போங்கள்! வாழ்க அந்த முகம் தெரியாத நண்பர்…!

கடிதங்கள் நீளமாய் எழுதி உங்களைத் திருப்திபடுத்த முடியாது தாஜ். திருப்தி நீளத்திலில்லை என்பதுமட்டுமல்ல நீங்கள் நாகூரான் இல்லை என்பதும். இதுதான் முக்கியம். வேறு யாரோடும் முழு உரிமை எடுத்துக்கொள்ளும் தைரியம் இன்னும் வரவில்லை. அந்த சுவாதீனம், வெடை எல்லாம் அவர்களோடுதான். நாகூரின் ஒரு மூணாவது மனிதனிடம் நான் காட்டும் அன்பு , எடுத்துக்கொள்கிற சுதந்திரத்தை இன்னொரு இடத்துக்காரரிடம் ஏனோ எடுக்க மனம் வரவில்லை. பயம் போலும்! சற்று விதிவிலக்காக நீங்கள் ஒருவர்தான் எளிதாக இருக்கிறீர்கள். இந்த மந்தையில் சுலபமாக இனம் காண. அப்புறம் பிரியம் வழிகிற பேச்சு… (சாப்பிடச் சொல்லி போடும் உத்தரவு இதில் தலைசிறந்தது!) நீங்கள் மட்டும் யார்யாருக்காகவோ சண்டை போடாதவராக இருந்தால் உடம்பு பற்றி தயக்கம் கொள்ளாமல் முத்தமிட ஓடி வருவேன்…! அடுத்த பிறவியிலாவது நாகூரில் பிறக்கப்பாருங்கள்!  

போன் நம்பர்? 8741738. இதை எழுதும் காரணம் நீங்கள் போன் செய்ய அல்ல! ‘மௌத்’தை தெரியப்படுத்தலாம். கஷ்டம் இல்லை. ஆனால் பிணத்திற்கு இதெல்லாம் தேவையில்லை. இதிலெல்லாம் நலத்தை தெரிந்து கொண்டுவிட முடியுமா? ஒருவேளை குரல் கேட்கலாம் என்றோ? ஆமாம். நான் மல்லிகார்சுன் மன்சூர் பாருங்கள்…. அப்புறம்.. தைரியத்தை போன் நம்பர் எழுதி தெரிவிக்கச் சொல்லியிருக்கிறீர்கள். இதனால்தான் தமாமில் இருக்கும்போது யாரையும் உங்களுக்கு போன் செய்ய விடவில்லை போலும். ஏன், இப்போது – ரியாதில் மட்டும் என்ன வாழ்கிறது? மானேஜருக்கு ‘தொந்தரவு’ கொடுக்காமலிருக்க என்பீர்கள். அதுதானே? சௌதியில் கொட்டை போட்டவருக்கே இந்த கதி. கொட்டையே முளைக்காத எனக்கு?! பிடிவாதம் இன்னும்? சரி, வெள்ளி காலை மட்டும். இந்த கடிதத்தை கடையில்தான் எழுதுகிறேன். ஆச்சரியப்படவேண்டாம். Sponser ஐ பெரிய தூண் மறைத்துவிடுகிறது. எழுத்தே மறைப்புதான்.

பெரிதாக நிரூபிக்க உங்களால்தான் இயலும். 100, 150 ரியால் செலவு செய்வது குருவிகளுக்கு இயலாது. அப்படி நீங்கள் வரும்போது நாம் பேசவேண்டிய முக்கிய விசயங்கள்: 1.’சௌபாக்ய கண்டி’ உண்மையில் பலன் உள்ளதா? 2. நான் கக்கிலி வாங்கினால் மட்டுமே என் தங்கை கல்யாணத்திற்கு என் உதவி கிடைக்கும். 3. ரியாத் – தமாம் – கோபர் Food stulf விலை ஒப்பீடு. 4. ஊருக்கு புடவை ஏதும் கொண்டு போகாமலிருந்து விடுவது. 5. நீங்கள் மிக டைட்டாக சட்டை அணிவதன் காரணம்…

இதில் இலக்கியத்தையோ புரட்சியையோ காண்பது உங்கள் சாமார்த்தியம்! யல்லா, மாஸலாமா…!

எந்த விதத்திலும் நீங்கள் விண்டு போக இக்கடிதம் காரணமாக இருக்காது என்று நம்புகிறேன். அப்படியிருந்தால் என்னை நீங்கள் எந்தவிதத்திலும் தண்டிக்கலாம். அல்லது பதில் போடலாம்!
   
(ஆபிதீன்)

***

வடிவமும் தட்டச்சும்: தாஜ் | satajdeen@gmail.com

***

நன்றி : கடிதத்தை வெளியிட அனுமதியளித்த ஆபிதீனுக்கு!

5 பின்னூட்டங்கள்

 1. 01/12/2010 இல் 22:17

  இது ஆபிதீனுக்கு

  ஏன் ஆபிதீன் சுத்தி வளைச்சு பயந்து பயந்து சொல்லாம விட்டுடீங்க. இருட்டைக் கண்டாத்தான் பயம், நோனிக்குமா பயம்? நோனி என்ற சொல்லுக்கு medical terms நுனாக் காய்; நுனாப் பழம் என்று பொருள். நம்ம termsல் IBM லொப்டொப்பு கீ போர்டில் இருக்கும் பருப்பு போன்றது. அது பச்சை நிறம், இது இளஞ்சிவப்பு.

  இது தாஜுக்கு

  தாஜ்! ஆபிதீனுடைய கடிதத்தைவிட நீங்கள் கொடுத்த அறிமுகம் உன்னதமாக இருக்கிறது. ஆபிதுனுடைய கடிதத்தில் அவரின் மன வலி தெரிகிறது. அங்கு அப்போது அவருக்கு உறுதுணையாக யாருமில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. அதுதான் உண்மையாகவும் இருக்கலாம். என் போன்றவர் துணை கிடைத்திருந்தால் அவர் இன்னும் வளம் பெற்றிருப்பார்.

  ஆனால் உங்கள் எழுத்தில் காணும் முதிர்ச்சி(maturity), வளம்(richness), அதை வெளிப்படுத்தும் பாங்கு இவைகளில் தனி முத்திரைப் பதித்திருக்கிறீர்கள். You established your own signature. பிரார்த்தனையுடன் வாழ்த்துக்கள்.

 2. maleek said,

  02/12/2010 இல் 04:25

  நானா உங்க மூட்டுவலிக்கு நல்லமருந்து கைவசம் இருக்கு .”அங்கென ஒண்ணு
  இங்கென ஒண்ணு” மாதிரி இன்னொன்னு வந்தா இந்த மருந்து இலவசம்..
  டீலா–நோ டீலா?.

  • 05/12/2010 இல் 09:34

   அநியாயமான ‘டீலா’கவல்லவா இருக்கிறது! கொஞ்சம் கருணை காட்டுங்கள் மாலிக். சீனப்பயணம் பற்றி ஒரு கட்டுரை நீங்கள் எழுதினால் பதிலுக்கு ஒரு கதை எழுதுகிறேன். ஆனால்.. கால்வலி குணமான பிறகுதான். ஓகே?

   தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள். இங்கே 3 நாள் விடுமுறை. விடுமுறைகளில் நான் இணையத்தைத் தொடுவதில்லை. சீரியஸாக சினிமா பார்க்க ஆரம்பித்துவிடுவேன்.

   உடனே மருந்தை சொல்லுங்க சார். ப்ளீஸ்…

 3. தாஜ் said,

  02/12/2010 இல் 17:23

  ஆபிதீன் தந்திருக்கிற முன்னுரையில்
  அவரின் மொழி மினுக்கைக் கண்டேன்.
  இந்த எழுத்து தரிசானத்துக்காகத்தான்
  நான் வேள்வி வளர்த்தேன்!
  இன்னும் இன்னும் எழுதணும்.
  – தாஜ்

 4. மஜீத் said,

  07/12/2010 இல் 19:21

  //எந்த விதத்திலும் நீங்கள் விண்டு போக இக்கடிதம் காரணமாக இருக்காது என்று நம்புகிறேன். அப்படியிருந்தால் என்னை நீங்கள் எந்தவிதத்திலும் தண்டிக்கலாம். அல்லது பதில் போடலாம்!//

  இந்த வரிகளில் இலக்கியமும் நகைச்சுவையும் இழைந்தோடவில்லையென்று எந்தப் ‘புண்ணாக்கு’ சொல்லமுடியும்?

  முன்னுரைகளை மீண்டும் மீண்டும் படித்தாலும் திருப்தியில்லை. இன்னும் பலமுறை படிக்கணும்!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s