பணக்காரர்கள் – இமாம் கஸ்ஸாலி

1966-இல் வெளியான ‘அறிவும் தெளிவும்’ நூலிலிருந்து… இமாம் கஸ்ஸாலியின் ‘இஹ்யா உலூமித்தீன்’ [Arabic: احياء علوم الدين ]  தமிழாக்கம் : மௌலவி. எஸ். அப்துல் வஹ்ஹாப் (பாகவி) அவர்கள்.

***

இவர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள்; கெட்டவர்களும் இருக்கிறார்கள். தாம் பெற்ற செல்வத்தை முறைப்படி செலவிடுவதோடு பணச் செருக்கிலிருந்து தம் மனத்தைக் காத்துக்கொண்டவர்கள் நல்லவர்கள். பணத்தை அடிப்படையாகக் கொண்டு பண்புக்கு மாறுபட்ட எண்ணத்திலும் செயலிலும் ஈடுபடுகிறவர்கள் கெட்டவர்கள். இவர்களே நம் ஆராய்ச்சிக்குரியவர்கள்.

முதல் வகுப்பு : இந்த வகுப்பார் தம்மிடமுள்ள செல்வத்தைச் செலவிட்டுப் பிரம்மாண்டமான பள்ளிவாசல்களையும் மக்களின் கவனத்தை கவரக்கூடிய பொதுக் கட்டடங்களையும் எழுப்புகிறார்கள். அத்துடன், மறந்துவிடாமல் தம்முடையை பெயரையும் அவற்றில் பொறித்து விடுகிறார்கள்.

இந்த விதத்தில் அவர்கள் செலவிடும் பணம் நேர்மையான வழியில் தேடப்பட்டதல்ல; மார்க்கத்தின் வரம்புகளைப் பேணிக்காத்துச் சம்பாதிக்கப்பட்டதல்ல. அநீதியிலும் மோசடியிலும் கிடைத்த பணம் இப்படிச் செலவிடப்படுகிறது.

தவறான வழியில் பணம் சம்பாதித்தவர்கள் அதனைத் தமக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியாது; அதற்கு மார்க்கத்தில் அனுமதி கிடையாது. அவர்கள் இறைவனின் வெறுப்புக்குப் பலியாகிறார்கள். ஏனெனில் ஒரு மனிதனின் உடைமையைப் பறிக்கும் உரிமை வேறொரு மனிதனுக்குக் கிடையாது.

முதலில் அவர்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும். அப்புறம் அந்தப் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பணத்தை ஒப்படைக்க முடியாத நிலையில் அதற்கு நிகரான பொருளை ஒப்படைக்கலாம். பணத்தின் உரிமையாளனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அவனுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கலாம். உறவினரும் இல்லாத கட்டத்தில் அந்தப் பணம் சீர்திருத்தக் காரியங்களுக்குச் செலவிடப்பட வேண்டும். அதனை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுத்தாலும் பாதகமில்லை. மொத்தத்தில், பாதிக்கப்பட்டவர்களின் பணம் எந்த விதத்திலும் பாதகம் செய்தவர்களுக்குப் பயன்படக்கூடாது. இது மார்க்கத்தின் தீர்ப்பு.

இந்தத் தீர்ப்பை நிறைவேற்ற முற்படும் பணக்காரர்கள், மக்களுக்குத் தம்மீது வெறுப்பு ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சி, பள்ளிவாசல்களைக் கட்டுகிறார்கள். தம்முடைய சொந்தப் பணத்தைச் செலவிட்டதுபோல் அவற்றில் தம் பெயர்களைப் பொறித்து வைக்கிறார்கள். பள்ளிவாசல் நிலைக்க வேண்டும் என்பதற்கல்ல; தம் பெயர் நிலைக்க வேண்டும் என்பதற்காக! இந்த விளம்பரத்துக்குத் தேவையேயில்லை. ஏனெனில் கட்டிடத்தின் முகப்பில் அவர்கள் பெயர்போட்டாலும், போடாவிட்டாலும் இறைவனுக்கு அது நன்றாகத் தெரியும். அது யாருடைய பணத்தினால் கட்டப் பட்டிருக்கிறது என்பதும் அவனுக்குத் தெரிந்ததுதான்.

இரண்டாம் வகுப்பு : இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் தாம் நியாயப்படி சம்பாதித்த பணத்தை வைத்துப் பள்ளிவாசல் எழுப்புகிறார்கள். ஆனால் அதை விட முக்கியமான செலவுகள் சூழ்ந்து இருக்கின்றன. அவர்களுக்கு எதிரில் நூற்றுக்கணக்கான ஏழைகள் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் வசிக்கும் ஊரில் பணக்காரர்களை விட ஏழைகள் பன்மடங்கு அதிகமாக இருக்கிறார்கள். உண்டு உறங்குகிறவர்களை விட உணவுக்கு வருந்துகிறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

அந்த ஏழைகளுக்குச் செலவிடுவது பள்ளிவாசல் கட்டுவதைவிட முக்கியமானது. இந்த வகுப்பார் இதை மறந்துவிட்டு, அலட்சியம் செய்து விட்டுப் பள்ளிவாசலுக்குக்காகப் பணத்தை வாரிச் செலவிடுகிறார்கள். ஏனெனில் பள்ளிவாசலுக்குச் செலவாகும் பணம் மக்களின் கவனத்தைக் கவருகிறது. பசித்த வயிற்றுக்குச் செலவாகும் பணம் காதும் வாயும் வைத்தாற்போல் ரகசியமாகப் போய்விடுகிறது.

அடுத்து அவர்கள் பள்ளிக்குச் செலுத்தும் அக்கறை பள்ளியின் குறிக்கோளையே தகர்த்தெறிகிறது. மனத்தில் தூய்மை ஏற்படவேண்டும், மனத்தின் ஆற்றல்கள் ஒருமுகப்பட்டு இறைவன் பக்கம் திரும்பவேண்டும், சிறிது நேரத்திற்கேனும் உலகத்தை மறந்து உண்மைக்கு உண்மையான உள்ளமையில் மனிதனின் மனம் லயிக்க வேண்டும் என்பதற்காகவே பள்ளிவாசல்கள் எழுப்பப்படுகின்றன; அப்படித்தான் அவை எழுப்பப்பட வேண்டும்.

ஆனால் அவர்கள் எழுப்பும் பள்ளிவாசல்கள் இந்த வழியில் துணை செய்வதில்லை. பள்ளிவாசல்களை அவர்கள் தேவைக்கதிகமாக அழகுபடுத்துகிறார்கள். கலை நுணுக்கம் நிறைந்த படைப்புகள் பள்ளியின் சுவர்களிலெல்லாம் செதுக்கப்படுகின்றன. பள்ளியின் தூண்களுக்கும் மேடைக்கும் அவர்கள் பூசும் வர்ணம் தொழுகிறவர்களின் உள்ளத்தின் தொலையாத என்ணங்களத் தோற்றுவிக்கின்றன.

இதனால் பள்ளிக்கு வருகிறவர்களின் மனநிலையில் ஈடுகட்ட முடியாத மாறுதல் ஏற்படுகிறது. அவர்கள் பள்ளிக்கு வெளியில் எந்தச் சூழலை அனுபவித்தார்களோ அதே சூழலைப் பள்ளிக்குள்ளேயும் அனுபவிக்க வேண்டி ஏற்படுகிறது. பள்ளிக்குரிய தனிச் சிறப்பு இதனால் பாதிக்கப்படுகிறது. எனவேதான் இத்தகைய அலங்காரங்களை இஸ்லாம் எதிர்க்கிறது.

இதனை ஈஸாநபியின் கருத்து ஒன்று தெளிவுபடுத்துகிறது. இறைவணக்கத்துக்காக எழுப்பப்பட்ட ஒரு கட்டிடத்தை, அலங்காரமான கட்டிடத்தைக் கண்ட நண்பர்கள் கூறினார்கள் : ‘ஆகா! எவ்வளவு அழகாக இருக்கிறது இந்தத் தேவாலயம்!’

ஈஸாநபியின் முகத்தில் வேதனை படர்ந்தது; பொருள் செறிந்த புன்னகையொன்று தொடர்ந்தது.

‘இந்த ஆலயத்தின் அழகு கிடக்கட்டும். இதிலுள்ள ஒவ்வொரு கல்லும் தொழுகிறவர்களுக்குத் தீங்கு செய்யும். அதில் தொழுகிறவர்களின் தீமையால் ஒவொரு கல்லும் வீணாகும். தங்கம் வெள்ளியை மட்டுமல்ல, ஆச்சரியத்தைத் தோற்றுவிக்கக்கூடிய இந்தக் கற்களையும் இறைவன் மதிப்பதில்லை. ஒழுக்கமுள்ள உள்ளத்தையே இறைவன் விரும்புகிறான். அதை வைத்துத்தான் புனித ஆலயங்கள் எழுப்பப்பட வேண்டும். இல்லையேல் எழும்பி நிற்கும் ஆலயம் பாழாகிவிடும்!’

பெருமானார் மதீனாவின் பள்ளிவாசலைக் கட்ட முற்பட்டபோது அவர்களுக்கு இறைவனிடமிருந்து வந்த செய்தியில் ‘அதனை அலங்காரம் செய்ய வேண்டாம்; கலை நுணுக்கமுள்ள படைப்புகளை அமைக்க வேண்டாம் ‘ எனும் கட்டளைகள் இருந்தனவாம். இப்படி ஹஸன் கூறுகிறார்கள்.

நம் சிந்தனைக்கு வந்திருக்கும் இரண்டாம் வகுப்பார் இதையெல்லாம் எண்ணிப் பார்க்கட்டும். புனிதமான நோக்கத்துக்காக எழுப்பபடும் பள்ளிவாசல் அந்த நோக்கத்துக்குப் பாதகம் செய்யும் நிலையில் அமையக் கூடாது. எனவே பள்ளிவாசலின் இலக்கணத்துக்கு மாறுபட்ட வகையில் பள்ளிவாசல் கட்டுகிறவர்களை நம்மால் தெளிந்த மதியுள்ளவர்கள் என்று குறிப்பிட முடியாது.

மூன்றாம் வகுப்பு : இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் பணத்துடன் தொடர்புள்ள எந்த வணக்கத்திலும் ஈடுபடுவதில்லை. பணத்தின்மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு , ‘ஸகாத்’ குறித்து அவர்களின் முகத்தில் வேதனையைத் தோற்றுவிக்கிறது. அவர்கள் ‘ஹஜ்’ செய்வதில்லை. காரணம் அந்த வழியில் பெரும் பணம் செலவாகிவிடுமாம்.

இறைவணக்கத்திலும் நோன்பு பிடிப்பதிலும் குறை வைப்பதில்லை. முழுமூச்சோடு நின்று அவற்றை நிறைவேற்றுகிறார்கள். ஏனெனில் இவற்றினால் பணத்துக்குச் செலவு கிடையாது. இறைவழியில் நடப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும் அவர்கள் தமக்கே தெரியாமல் முரண்வழியில் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

– இப்படி அவர்களில் எத்தனையோ வகுப்பார் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் மதிமயக்கம் கொண்டவர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.

எங்கும் நிறைந்தவன் இறைவன். அவன் நமக்கு நல்லுதவியையும் நல்முடிவையும் கொடுத்தருள்வானாக!

***

நன்றி : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s