படைக்கும் படைப்பினம் – நூருல் அமீன்

சுடச்சுட ஒரு சூப்பர் தோசை!

நண்பர் தா’ஜின்’ குறிப்புகளுடன் வந்த ‘படைப்பதனால் என் பெயர் இறைவன்?’ என்ற மாலனின் கட்டுரைக்கு, மறுமொழியளித்த சகோதரர் நூருல் அமீன், ‘ ஒரு மெழுகுவர்த்தியை பற்ற வைப்பதற்குள் சூரியனுக்கு மாற்று ஏற்பாடு செய்து விட்டேன் என கூறினால் எப்படி சகோதரரே!’ என்று கேட்டிருந்தார். வலம்புரி ஜானின் ஸ்டைலில் சொல்லவேண்டுமென்றால் , ‘தன்னைச் சொல்லவேண்டும், தகவலும் இருக்க வேண்டும் என்பது சாதாரணமானதல்ல;  அது இவருக்கு கைவந்திருக்கிறது; படித்த நாள் முழுவதும் அந்த வரிகளையே அசைபோட்டுக் கொண்டிருந்தேன்’! ‘இறைவன் இருக்கின்றானா?’ என்ற (அமீனின்) பதிவுக்கு மறுமொழியளித்த நண்பர்களுக்கு பதில் கொடுத்த பாங்கும் (நம்ம ‘வாங்கு’ அல்ல!) என்னை மிகவும் கவர்ந்தது.

‘அகப்பார்வை’ நூலின் ஆசிரியரான நூருல் அமீன் ஆன்மீகத்தில் ஊறிக்கொண்டிருப்பவர். ‘பல ஆன்மீக சந்தேகங்களுக்கு இவரின் வலைதளம் தெளிவு தருகிறது’ என்று கிளியனூர் சகோதர் அன்பின் இஸ்மத்தே பாராட்டிவிட்ட பிறகு இந்த ‘அடஹா’ என்ன சொல்ல? நிறைய எழுதுங்கள் அமீன்பாய். அப்படியே, தாஜையும் திருத்துங்கள்!

புகைப்படம் கேட்டேன். ‘வேண்டாம் நானா’ என்று மறுத்துவிட்டார் நூருல் அமீன். இதுவும் ஆன்மீகம்தான்!

ஆபிதீன்

***

புல்லாங்குழல் :

ஆபிதீன் நானா போன் செய்து இப்படி இப்படி வேண்டும் என கூறி ஒரு கவிதை எழுத சொன்னதும் ஒரு ஜோக்குதான் ஞாபகத்துக்கு வந்தது.

ஒருவன் ஹோட்டல் சர்வரிடம் சூடா, மென்முறுவலா, லேசா நெய்  ஊத்தி ஒரு சுவையான தோசை கொண்டு வா என கேட்க. சர்வர்சரக்கு மாஸ்டரை நொக்கி “ஒரு சாதா!” என சவுண்டு கொடுத்தானாம். நாங்க என்ன சீர்காழி தாஜா?!. வச்சுகிட்டா வஞ்சகம் பண்றோம். ஏதோ என்னால முடிஞ்ச சாதா தோசை!

ஆபிதீன் நானா கவிதை எழுதக் கேட்டவுடன் உடனே எனக்கு தமிழாசிரியர் ஜோஸப் சாரின் நினைவு வந்தது. அவரை பற்றி இப்ப நான் சொல்லாவிட்டால் என் ஜென்மம் சாபல்யமடையாது.

பள்ளியில் படிக்கும் போது பெண் உரிமைக்காக பாடுபட்ட ஒரு கவிஞரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னார் எங்கள் தமிழ் வாத்தியார் ஜோஸப் சார். கொஞ்சூண்டு மட்டுமே அந்த கவிஞரை பற்றி தெரிந்திருந்த நிலையில். சப்பாத்தி கட்டையில் சப்பாத்தியை உருட்டிப் பெரிதாக்குவது போல தெரிந்ததை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளர்த்தேன். அப்படியும் பக்கம் காலி இருந்தது. மீதி இடத்தை நிரப்புவதற்காக

“மாங்கனி மங்கையர்க்கு மாசிலா கல்வி வேண்டி!
தீங்கனி சொற்களலாலே சிந்தைக்கு உரிமை வேண்டி!
கட்டுகள் கழற வேண்டி கைவிலங்ககல வேண்டி!
பாட்டினால தட்டி எழுப்பிய பாவலா உன் புகழ் வாழி!” என எழுதி கொடுத்தேன்.

“யாரு பாரதிதாசன் கவிதையா?” என ஜோஸப் சார் அப்பாவி தனமாய் கேட்க! அன்றைக்கு எனக்கு முளைத்தது கொம்பு.

பள்ளிக் கூடங்களுக்கு இடையே நடக்கும் கட்டுரை போட்டிகளில் அதை பற்றிய தகவல் அனுப்பும் அரசு அலுவலருக்கு எங்கள் ஜோஸப் சாரை பிடிக்காது என நினைக்கின்றேன். அவர் கடைசி நாளில் தான் ஜோஸப் சாருக்கு தகவல் தருவார். பாக்கியசாமி என்ற கண்டிப்பான எங்கள் பிரின்ஸி ஜோஸப் சாரை துரத்துவார். பிரமாண்டமான எங்கள் பாக்கியசாமி பார்வையாலேயே அவரை மிரட்ட, தூக்கி எறியப்பட்ட வாழைப்பழ தோல் போல் எங்கள் குழுவிடம் வந்து விழுவார் ஜோஸப் சார். அவசர கட்டுரை எழுதுவதற்காக எனக்கு விடுமுறை தந்து லைப்ரரிக்கு அனுப்புவார். எனக்கு உதவுவதற்கு ஆள் வேண்டும் என கூறி வம்படித்து ஸ்டீஃபன், மனோகர் என நணபர்களையும் இழுத்து கொண்டு சென்று விடுவேன். லைப்ரரியில் இஸ்டத்துக்கு படித்து விட்டு கடைசியில் சம்பந்தபட்ட விசயத்தையும் கொஞ்சம் படித்து வழக்கம் போல் சப்பாத்தி வளர்த்து அதிர்ஷ்டவசமாகவோ, துரதிஷ்டவசமாகவோ சில பரிசுகளும் (‘நம்ம ஊர்களின் தரம் அவ்வளவு தான்’ – ஆபிதீன் நானா திட்டுவது காதில் விழுகிறது.) வாங்கி தந்துவிடுவேன். இந்த எனது திறமையால்/திமிரால் பல முறை அந்த நல்ல மனிதரை பாடாய் படுத்தி இருக்கின்றேன். ஆனால் அவர் என் மேல் எப்போதும் பிரியமாய் தான் இருந்தார். குருவை படுத்திய பாட்டினாலோ என்னவோ என் கவிதை ஸ்கூல் லெவல் ஸ்டேண்டர்டிலிருந்து வளரவே இல்லை.

ஆகவே , படிக்கும் போது ஒரு பள்ளி மாணவன் நாற்பது வயதுக்கு மேல் எழுதிய கவிதை என்பதை நினைவில் கொள்ளவும். இதில் கொஞ்சம் கொஞ்சம் கவிதை என்கிற வஸ்து இருந்தால்  அதை ஸ்டீபன், மனோகர்,நேதாஜி,கிருஸ்ணமூர்த்தி, மாணிக்கம் எனும் எங்கள் குழுவினர் சார்பில்  ஜோஸப் சாரின் பாதங்களில் சமர்பிக்கின்றேன். சார் மன்னிச்சு கொஞ்சம் வளர வுடுங்க சார்.

இதோ நீங்க கேட்ட சாதா தோசை, இல்லை, கவிதை.

படைக்கும் படைப்பினம் (Created creator)

காட்சிகள் இல்லை. காண்பவர் இல்லை.
ஓசைகள் இல்லை. செவிகளும் இல்லை.
ஓவியன் சிந்தையில் எல்லாம் இருந்தன.
ஓவியத் திறமை புதையலாய் இருந்தது.
புதையலின் நாவுகள் ஆசையை பேசிட
உணர்ந்திட்ட ஒவியன் கேட்ட வரம் தந்தான்.

புதையலின் ஆசையால் வான்,புவி வந்தது.
மலை, கடல் வந்தது. மான்,மயில் வந்தது.
புல்லினம் தொடங்கி வானவர் வரையில்
அத்தனை அழகும் அவன் புகழ் சொல்லுது.
ஒருமையின் அர்த்தம் சொல்ல பன்மைகள் வந்தது.

ஓவிய ஆசை உச்சத்தில் சென்றது.
படைக்கும் தன் முகம் பார்த்திட கேட்டது.
‘ஓவியக்’ கண்ணாடி காட்சிக்கு வந்தது.
முத்திரை படைப்பாய் மானுடம் என்றது.

சின்னத் துளியிலே வரைந்திட்ட சித்திரம்.
சித்திரக் கண்ணாடியில் ஓவியன் தரிசனம்.
கவிதைகள் சொல்லுது, காவியம் சொல்லுது
கப்பல்கள் செய்து கடலில் மிதக்குது.
வானில் பறக்குது. வையத்தை ஆளுது.
படைக்கும் படைப்பினம். படைத்தவன் அற்புதம்.
படைக்கும் படைப்புகள். படைத்தவன் புகழ் சொல்லும்.

காட்ட வந்த கண்ணாடி தன் நிலை மறந்தது.
சாட்சியாய் வந்திட்ட சங்கதியும் மறந்தது.
காட்சியில் வந்ததை ‘நான்’, ‘நான்’ என்றது.
தன் புகழ் பாடியே தருக்கி திரியுது.

வானமும், பூமியும்
உன் வசமானது.
சக்தனின் சக்தி நீ.
வித்தகன் வித்தை நீ
உயிர் தரும் வித்தையும் உன்னில் உறங்குது
உயிர் விடும் நாள் முன்பே
உறக்கம் களைந்திடு!.

***

நன்றி : நூருல் அமீன்  | மின்னஞ்சல் : onoorulameen@gmail.com

12 பின்னூட்டங்கள்

 1. மஜீத் said,

  22/11/2010 இல் 15:34

  “”சூடா, மென்முறுவலா, லேசா நெய் ஊத்தி ஒரு சுவையான தோசை”” (முன்னுரை) சாதா தோசை (கவிதை)யைவிட சூப்பர். அருமை.
  இந்த மாதிரி முன்னுரை எழுதுனா, அப்புறம் எங்கே நாங்க கவிதையைப் படிக்க??

  • 22/11/2010 இல் 21:55

   நன்றி மஜீத் பாய். ஆனாலும் இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. கவிதை பற்றி உங்கள் கருத்து என்ன?

   • மஜீத் said,

    16/12/2010 இல் 15:34

    அன்பின் அமீன் அவர்களுக்கு,

    தாஜ் விமர்சனம் வரட்டும் அவர் ஏதும் மீதம் வைத்திருந்தால் எழுதலாமென இருந்தேன். இடையில் 15 நாள் பயணம். திரும்பி வந்தபின், பல வகையில் தாமதம். அவர் ஏதும் மிச்சம் வைக்கவில்லை.

    அதே சமயம், கவிதை என்றவகையில் ‘படைக்கும் படைப்பினம்’ என்று நீங்கள் எடுத்த பொருளும் அதை கவிதையாக்கிய 40 வயதுக்கு மேற்பட்ட (50வயதுக்குக் கீழ்ப்பட்ட?) மாணவனின் கலைநயமும் முறையே வியக்க/ரசிக்கத் த‌குந்தவையே.

    முதலில் கால‌ரைத் தூக்கிவிட்டுக்கொள்ளுங்க‌ள்! (கொம்பு ம‌றைந்து விடாத‌ப‌டிக்கு; அது முக்கிய‌ம்)

    //என்குறிப்பு: இப்ப இல்லை தாஜ் நாங்க சின்ன புள்ளையிலிருந்தே அப்படி தான் சொல்லிகிட்டு இருக்கோம்//

    உண்மை; அதை எங்ஙனம் நியாயப்படுத்துவது என்றுதான் என்னை/தாஜைப் போன்றோர்கள் போராடிக்கொண்டிருக்கிறோம்; எங்களோடுதான்; இன்றுவரை நிராயுதபாணியாகவே!

    இன்னும் ந‌ம்பிக்கையோடு.
    பேச‌லாம்; நேர‌மும் வாய்ப்புமிருந்தால், இன்ஷா அல்லாஹ்!

 2. தாஜ் said,

  22/11/2010 இல் 17:10

  நன்றி.

  என்றாலும்…
  நூருல் அமீனை
  பென்டிரைவில்
  வீட்டுக்கு கொண்டு போய்
  தீர வாசித்து
  இன்ஸா அல்லா
  நாளைக்கு பதில்.
  என்றாலும்….
  நன்றி.

  கவிதைக்கு….
  நெற்றிப் பொட்டில் மூத்தம்.

  -தாஜ்

  • 22/11/2010 இல் 21:58

   கவிதைக்கு….
   நெற்றிப் பொட்டில் முத்தம்.

   அப்ப நெசமாவே இது கவிதை தானா?
   தாஜ் சொன்னா சரி!.
   ஆவலுடன் உங்கள் பதிலை எதிர்பார்க்கின்றேன்.

   • தாஜ் said,

    23/11/2010 இல் 09:07

    அன்புடன்
    நூருல் அமீன்….

    ‘படைப்பதனால் என் பேர் இறைவன்?’ என்கிற
    மாலன் கட்டுரை குறித்தும்
    அதில் கண்ட
    எனது முன் குறிப்பு குறித்தும்
    நீங்கள் பதிந்திருக்கிற….
    வாசக கடிதம்
    அப்புறம் எனக்கு பொருள் உணர்த்தும்
    இந்தக் கனமான கவிதை….
    ஆக இரண்டுமே அழகு!

    இனிய வரிகளிலான
    உங்களது எழுத்துக் கோலம்!
    முத்திரை அழகு!
    நாகரீகம்!

    உங்களது
    கடித வரிகளுக்கோ/
    கவிதையில் காணும் பொருளுக்கோ
    நான் பதில் சொல்வதென்பது பின்னே.
    ஆபிதீனின் பக்கத்தை அலங்கரிக்க
    நீங்களும் கைக்கோர்த்திருப்பதிலேயே
    பெருமகிழ்ச்சி.
    உங்களது துணிவு பாராட்டத் தகுந்தது.

    இப்போது….
    தேசிய நீரோட்டத்தில் நீங்களும்!
    தொடர்ந்து எழுதுங்கள்.

    *

    பின் குறிப்பு:

    அன்பு நூருல் அமீன்….
    உண்மைக்கு எப்பவும்
    நாத்திக முகம்தான்!
    அதுவோர் விஞ்ஞானம் மாதிரி!
    உண்டுன்னா உண்டெங்கும்
    இல்லைன்னா இல்லையென்கும்
    தெரியாதுன்னா தெரியாது என்றுவிடும்.

    ஆனால், நம்பிக்கைக்குதான்
    ஆயிரம் முகம்!
    ஆன்மீக முகத்தையும் சேர்த்து.

    அது பேயை நம்பும் அதைவிரட்டும் பூசாரியை நம்பும்
    சூரணத்தை நம்பும், கடவுளை நம்பும், டாக்டரையும் நம்பும்
    கடலையும் வானத்தையும் பார்த்து
    கவிதையான உருவகத்தை
    விளக்கப்படுத்திக் கொண்டு அதையே நம்பும்.

    பிறப்பை/ அந்த… உயிரின் ஆக்கலை
    இறைவனின் கீர்த்தியோடு முடிச்சுப் போட்டு
    எழுதுவதெல்லாம் பத்திரிகைகள்தான்.
    நான் அந்தக் கருத்தோடு
    முரண்டுப் படாமல் எழுதியதால்தான்.
    நீங்கள் இறைக்கீர்த்தியை
    பிறப்போடு…
    உயிர் ஆக்கலோடு நெருக்கமாக வைத்து
    சிலாகிக்கின்றீர்கள். .

    நிஜத்தில்…
    உயிராக்கல் அல்லது பிறப்பு என்பது
    ஒரு ஆண்
    ஒரு பெண் கூடி
    கலவிக் கொண்டு
    சிலிப்பதிலானப் பலன் மட்டுமே!

    ஒரு தாய்,
    பிரசவத்திற்காக
    பத்து மாதம் கொள்ளும் வேதனையையும்
    ஈன்றப்பொழுதில் அவள் கொள்ளும் மகிழ்ச்சியையும்
    இறைவன் கீர்த்தியை முன்வைத்து
    மறந்துவிடக் கூடாது.

    ஓர் உயிர் என்பது
    அனு அனுவாக வளர்ந்து
    முழுமை அடைகிறதேயன்றி
    நினைத்த நாழியில்…
    படைத்து
    மண்ணில் நிறுத்தப்படுவதல்ல.

    அமீன்….
    இப்படி நான் பதில் சொல்வதால்…
    சோராதீர்கள்.
    தீர மறுங்கள்.
    உண்மை உங்கள் பக்கம்தான் என்றால்…
    கைகளைத் தூக்கிவிடுவேன்.

    வாழும் அன்புடன்
    -தாஜ்

 3. 22/11/2010 இல் 19:38

  நூருல் அமீன் – பாராட்டுக்கள். இன்னும் என்னென்ன கைவசம் வச்சிருக்கீங்க? எடுத்து வுடுங்க சார் தைரியமா beautiful.

  • 22/11/2010 இல் 22:05

   நன்றி நானா! உங்களயும், ஆபிதீன் நானாவையும் சந்தித்து உபதேசம் பெற்று வந்த பிறகு தான் என் பூர்வாசிரம வாசனை தூசி தட்டப்படுகின்றது. ஏதோ உங்க துவாவுல நல்லது நடந்தா சரி!

 4. 23/11/2010 இல் 04:41

  தோசை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. சாதா தோசை என்று தான் நினைத்தேன் சுவைக்கும் வரை. இது சாகா தோசை போல தெரிகிறது. வளர்ந்து பண்பட்டு நிற்கும் உங்களை ஜோசப் சார் எப்படி வளர்த்து விட போகிறார் என்பதே மிஞ்சிய மாவு போல் எஞ்சி நிற்கும் கேள்வி.

  • 23/11/2010 இல் 17:20

   உங்கள் கருத்துக்கு நன்றி!.

   1. மனிதனுக்கு செய்த பாவத்தை மனிதன் மன்னிக்கா விட்டால் இறைவன் மன்னிக்க மாட்டான் அல்லவா?

   2. ஜோசப் சாரின் போர்வையில் இறைவனிடம் தான் என் கோரிக்கை என்பது சூஃபி வழியில் உள்ள உங்களுக்கு தெரியாதா என்ன?

 5. 23/11/2010 இல் 16:03

  அன்புள்ள தாஜ்,

  உங்கள் பாராட்டுக்கு மிக மிக நன்றி. உங்கள் பின் குறிப்புகளுக்கு என் குறிப்புகள் உங்கள் அன்பான பார்வைக்கு.

  தாஜின் பின்குறிப்பு: உண்மைக்கு எப்பவும்
  நாத்திக முகம்தான்!
  அதுவோர் விஞ்ஞானம் மாதிரி!
  உண்டுன்னா உண்டெங்கும்
  இல்லைன்னா இல்லையென்கும்
  தெரியாதுன்னா தெரியாது என்றுவிடும்.
  உண்மை எப்போதும் உண்மைதான்.
  நிறங்களை அறிவதில் பார்வை உடையவரின் உண்மை வேறு
  பார்வையில்லாதவரின் உண்மை வேறு
  ஆனால், நம்பிக்கைக்குதான்
  ஆயிரம் முகம்!
  ஆன்மீக முகத்தையும் சேர்த்து.
  அது பேயை நம்பும் அதைவிரட்டும் பூசாரியை நம்பும்
  சூரணத்தை நம்பும், கடவுளை நம்பும், டாக்டரையும் நம்பும்
  கடலையும் வானத்தையும் பார்த்து
  கவிதையான உருவகத்தை
  விளக்கப்படுத்திக் கொண்டு அதையே நம்பும்.

  என் குறிப்பு : எல்லாவற்றையும் நம்பினால் முட்டாள்.
  எதையுமே நம்பவில்லை என்றால் பைத்தியக்காரன்.
  எண்ணித் துணியலாம் கருமம்.
  எல்லாத்தையும் சந்தேகத்தோடு எண்ணிக் கொண்டே இருந்தால் அது கருமம்..கருமம்.

  தாஜின் பின் குறிப்பு: பிறப்பை/ அந்த… உயிரின் ஆக்கலை
  இறைவனின் கீர்த்தியோடு முடிச்சுப் போட்டு
  எழுதுவதெல்லாம் பத்திரிகைகள்தான்.
  நான் அந்தக் கருத்தோடு
  முரண்டுப் படாமல் எழுதியதால்தான்.
  நீங்கள் இறைக்கீர்த்தியை
  பிறப்போடு…
  உயிர் ஆக்கலோடு நெருக்கமாக வைத்து
  சிலாகிக்கின்றீர்கள். .

  என்குறிப்பு: இப்ப இல்லை தாஜ் நாங்க சின்ன புள்ளையிலிருந்தே அப்படி தான் சொல்லிகிட்டு இருக்கோம். வளர்ந்த பிறகு இன்னும் தெளிவாக, முன்னிலும் உறுதியாக.

  தாஜின் குறிப்பு: நிஜத்தில்…
  உயிராக்கல் அல்லது பிறப்பு என்பது
  ஒரு ஆண்
  ஒரு பெண் கூடி
  கலவிக் கொண்டு
  சிலிப்பதிலானப் பலன் மட்டுமே!

  என் குறிப்பு: முதல் மனிதன் அல்லது மனுசியின் பிறப்பின் கதை என்ன நண்பரே?

  ஒரு தாய்,
  பிரசவத்திற்காக
  பத்து மாதம் கொள்ளும் வேதனையையும்
  ஈன்றப்பொழுதில் அவள் கொள்ளும் மகிழ்ச்சியையும்
  இறைவன் கீர்த்தியை முன்வைத்து
  மறந்துவிடக் கூடாது.

  என் குறிப்பு : தாயை மறப்பவனை கடவுள் மன்னிப்பதில்லை தாஜ்.

  தாஜ்: ஓர் உயிர் என்பது
  அனு அனுவாக வளர்ந்து
  முழுமை அடைகிறதேயன்றி
  நினைத்த நாழியில்…
  படைத்து
  மண்ணில் நிறுத்தப்படுவதல்ல.

  என் குறிப்பு : ‘ரப்’ என்னும் இறைவனின் பண்புப் பெயருக்கு ஒன்றை சன்னம் சன்னமாக வளர்த்து உச்சத்தை அடைய செய்பவன் என்று பொருள்.

  என் பின் குறிப்பு : ஒரு சின்ன விளக்கம் தாஜ்.
  அடிக்கடி தாஜை திருத்துங்கள். தாஜை திருத்துங்கள் என ஆபிதீன் நானா எழுதுகின்றார். தாஜ் என்ன அச்சுப் பிழையா திருத்துவதற்கு. நான் உங்களை மாற்ற முடியும் என்ற மூட நம்பிக்கை எல்லாம் எனக்கில்லை.
  அல் குர்ஆனின் கூற்றுபடி சங்கை மிகுந்த நபியே கூட தன் தானே யாருக்கும் இறை நம்பிக்கையை உண்டாக்கி விட முடியாது இறைவன் நாடினாலன்றி!. நபியின் பணி தன் தூதுத்துவ செய்தியை எத்தி வைப்பது தான்.

  எங்களுக்கு ஒரு சின்ன ஆசை. இறைநம்பிக்கை எனும் மகத்தான செல்வம் வழங்கும் நிம்மதி எங்கள் அன்பு தாஜுக்கும் கிடைக்காதா என்பது தான்.

  என் குறிப்பல்ல வேண்டுகோள் இறைவனுக்கு :

  ஆண்டவனே! உன் பாதங்களில் நான் கண்ணீரை நீராக்கினேன்.
  இந்த ஓர் உயிரை நீ வாழ வைக்க இறைவா உன்னிடம் கை ஏந்தினேன்.

 6. Rashid said,

  25/11/2010 இல் 21:15

  படைப்பின் நோக்கத்தை மிகவும் நேர்த்தியான முறையில் கவிதையாக சொல்லிருக்கிறார்கள்!கடலை கூஜாவில் அடைத்தது போல்!அல்ஹம்துல்லில்லாஹ்!உங்களைபோன்ற அறிவுஜீவிகளின் கூட்டு சம்பாஷனை மிகவும் கவர்வதாக உள்ளது!”நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழிந்தோடி புல்லுக்கும் அங்கே பொசியுமாம் என்பதுபோல் உங்களது அறிவும் அக்கறையும் சார்ந்த கருத்து அருவியில் என்னை போன்ற சாமானியனும் குளிக்கும் பாக்கியம் பெறமுடிகிறது!ஆபிதீன் நானவுடைய அக்கறை,தாஜுடைய //அமீன்….
  இப்படி நான் பதில் சொல்வதால்…
  சோராதீர்கள்.
  தீர மறுங்கள்.
  உண்மை உங்கள் பக்கம்தான் என்றால்…
  கைகளைத் தூக்கிவிடுவேன்// தைரியம்,அமீன் அவர்களுடைய தாசின் மீது கொண்ட பிரியம்-உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கிறது!நேசித்தால் இறைவனுக்காக நேசிக்கவேண்டும்,வெறுத்தால் இறைவனுக்காக வெறுக்கவேண்டும் என்ற சத்திய சொல் நியாபகம் வருகிறது அமீன் அவர்களுடைய இறைவனுக்கு வேண்டுகோள் என்ற வரிகளின் மூலம்!தொடரட்டும் உங்கள் அறிவுக் கூட்டணி!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s