மிதந்து வரும் நுரைப்பூவாய்…. – கிண்ணியா எஸ். பாயிஸா அலி

சகோதரி எஸ்.பாயிஸா அலியின் புதிய இரண்டு கவிதைகளை பதிவிடுகிறேன், நன்றிகளுடன்.  ‘மூழ்கிடினும் முத்தாய் மேலெழுவோம், தேடலிலும் முழுத்தெளிவை நாமடைவோம்’ என்று சொல்லும் இவரின் வலைத்தளம் : http://faiza.kinniya.net/ 

***

காலைநேரம் சாலையோரம்

என்னமாய் பரபரக்குது
இந்த சாலையோரம்  காலைநேரம்
தொடராயும் நெருங்கியும்
ஊர்ந்து திரிபவை
புகைத்து மகிழ்கிற இளவட்ட எறும்புகளோ.
முள்ளந்தண்டை வளைக்கிற
மூட்டைகளோடு நடைபயில்பவை
கால் முளைத்த வெண்பஞ்சு மேகங்களோ.
சதாவும் அவசரங்களோடு அலைகிற சாரதிகளை
கிளறிக் கிளறி வறுக்கிறாரோ
பச்சை ஏப்ரன் சுற்றிய சீருடை சமையற்காரர்.
வதங்குகிற வெங்காய மணமும்
கொத்துரொட்டியின் கொத்தோசையுமாய்
சுற்று மண்டல சுவைநரம்புகளை
சிலிர்ப்பூட்ட முனைகிறதோ
மருங்குகளின் சிற்றுண்டிச் சாலைகள் .
பின்னிரவு நாய்கள்
கலைத்துப் போட்ட
தொட்டிக் குப்பைகளை  தின்னத் தொடங்குதோ
குப்பை வண்டிகள்.
உயர்ரகங்களில் பளீரிடும் விற்பனைத் தளங்களை ….
தெம்பிலிக் குலைகளை வரிசையிட்டும்
பூக்களும் பொத்தான்களும் நிறைந்த
சின்னச்சின்னச் சட்டைகளைக் கொழுவியபடியுமாய்
விற்பனையில் முந்திவிடுகிறார்களோ
நடைபாதை வியாபாரிகள்.
குளியலறை நீர்க்குழாயை…
சமைத்த வாயு அடுப்பை….
கொஞ்சமாய் பிரச்சனைப் படுத்துகிற முன்கதவை ….
சரியாக மூடியிருப்பேனோ வெனும் சுழல்வினூடே…
அவித்த மரவெள்ளித் துண்டாய்
நசிந்து வெளிரப் பண்ணவெனவே
விரைந்து வருகிற பேரூந்தை எதிர் பார்த்த படிக்கு ..
நானும்
இதே சாலையோரம் காலைநேரம்.

***

மிதந்து வரும் நுரைப்பூவாய்…..

போவதா விடுவதாயென
இடைவிடாதடித்த எண்ண அலைகளினூடே
சரி போவோமெனக் கரையொதுங்குது மனசு.
தலைமையுரை
அதிதியுரை
ஆய்வுரை
நயவுரை
நன்றியுரையென விரிகிற உரையலைகளினூடே
மிதந்து வருகிற நுரைப்பூவாய்
நான் மட்டுமே காணுகிற உன்னோடு
பேச விரும்புதது
எல்லாமும் முடிந்து நூலோடு வீடேகிய வேளையிலும் …
அங்கே தொடங்கிய சிடுப்பான சிணுங்கலை
இங்கேயும் தொடர்கிற சின்னவளுக்கு
ஆடைமாற்றுகிற வேளையிலுங் கூட
ரசித்தவை
பிடித்தவை
முகம் சுழித்தவையென்றாகிய
ஒருநூறு சேதிகளையும்
பகிர்ந்திடவே ஆதங்கிக்குதது.
நிலா, நட்சத்திரங்களின்
சன்னமான குறட்டையொலிகள் தவிர
மற்றெல்லாமுமே மௌனித்துக் கிடக்கிற
இந்நிசியின் நிசப்தங்களுக்குள்
தற்செயலாய் விழித்துக் கொண்டு
தனிமைப் படுகையிலே …
அட  சற்றுமுன்னமாவது பேசியிருக்கலாமோவென
மறுபடியும் முணுமுணுக்கத் தொடங்குதது
மிக அருகிருந்தும் ….
ஒரு புன்னகைதானும்
பூக்க மறுக்கும் உன்னோடு.

***

நன்றி : கிண்ணியா எஸ். பாயிஸா அலி

மின்னஞ்சல் : sfmali@kinniyans.net

5 பின்னூட்டங்கள்

 1. 21/11/2010 இல் 20:21

  கொத்துரொட்டியின் கொத்தோசையுமாய் – ஆகா அருமையான வரிகள். ஆனந்த பைரவியில் தொடங்கி இன்ப லாகிரியில் மூழ்கடிக்கும் அவ்வோசையைக் கேட்கும்போதே சுவை நரம்புகள் சிலிர்த்தெழத்தானே செய்யும்.

 2. எஸ்.எல்.எம். ஹனீபா said,

  25/11/2012 இல் 08:52

  நான் படித்த, பழகிய பெண்கவிஞர்களில் மகள் ஃபாயிஸா அலி பெரும் மதிப்புக்குரியவர். அழகான பிள்ளைகள், குடும்பத்தின் எதிர்காலம் பற்றிய கனவுகளை காரிய சித்தியாக்கும் கணவன், செழுமை மிகு கல்விப் பின்புலம், பொருளாதார வசதி என்று வாழும் ஃபாயிஸா போன்ற எமது பெண்மணிகள், கவிதைகளிலும் அக்கறை காட்டுவது சங்கையானது. ஃபாயிஸாவுக்கு எனது வாழ்த்துக்கள்.

 3. 27/11/2012 இல் 16:19

  மிக்க நன்றிகள் ஸேர்.
  உங்கள் வாழ்த்துக்கள் எமக்கு மிகவும் பெறுமதியானவை.
  எனதும் குடும்பத்தாரினதும் அன்புக்கும் மரியாதைக்குமுரிய உங்களுக்கு எம்முடைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் எப்போதும் உண்டு.
  அன்புடன்
  மகள் ஃபாயிஸா அலி.

 4. 09/04/2013 இல் 04:52

  கவிதைகளைப் படித்தேன் மஜீத். என்ன சொல்ல இருக்கிறது… மூன்றும் அருமை, அதிலும் முதலாவதும் மூன்றாவதும் மிக அருமை. கவிதைகளோடு, தாஜின் பின்னூட்டமும் ஆபிதீனின் நகைச்சுவை கலந்த பதிலும், நாகரிகமான நட்புமுறை உரையாடலும் சுவை தருகின்றன. மொத்தத்தில் இலங்கைக் கவிஞர் இன்னொருவரின் அறிமுகத்துக்கு நன்றி.

 5. 09/04/2013 இல் 09:39

  //ஆபிதீனின் நகைச்சுவை கலந்த பதிலும்// நான் ஒண்ணுமே சொல்லலியே ஷா. அதான் தமாஷா?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s