ஒத்துமையா, அப்டீண்ணா?

‘ஹமீது ஜாஃபரின் ‘ஷைத்தான்‘ படித்தேன். ஷைத்தானை தோற்கடிப்பது எனக்கும் ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவரை தொடர்ந்து எழுதச்சொல்லுங்கள்.  அவருக்குரிய மூட்டு வலி எனக்கும் உண்டு. அதிகமாக குனிவதை தவிர்த்துக் கொண்டாலே சுகம்’ என்று ஹனிஃபாக்காவின் மெயில் வந்தது. சொன்னதும் உடனே குனிந்து விட்டார் ஜாஃபர் நானா! ஊர்லெ இன்னக்கிம் ஒரு பெருநாளாமே!

***

ஒற்றுமை ஜிந்தாபாத்!

ஹமீது ஜாஃபர்

“ஒன்னா இருக்க கத்துக்கனும்’ பாட்டு என்ன படம்னு தெரியலே, ஆனா என்னமோ திடீரென ஞாபகத்துக்கு வந்துச்சு. அந்த நேரம் பார்த்து நம்ம ஆபிதீன் போன்பண்ணி ‘முன்கர் நக்கிர்’ மாதிரி ஒரு கேள்வி கேட்டார், “நானா நாம எத்தனை கூட்டம்னு ஹதீஸிலெ இருக்கு?”

நான்தான் அரைகுறையாச்சே, ஒடனே அந்த ஹதீஸை சொன்னேன். “என்னுடைய உம்மத்துக்கள் எழுபத்தோறு பிரிவுகளாகப் பிரிவார்கள், அதில் ஒரு பிரிவினர் மட்டும் சொர்க்கம் செல்வார்கள்” என்று பெருமானார் சொன்னதாக எப்பவோ படிச்சதை ஞாபகப் படுத்தி சொன்னேன்.
 
அடுத்த கேள்வி: “அப்பொ அது யாரு? மத்தவங்களெல்லாம் எங்கே போவாங்க?”

“அது நாங்கத்தான்-நாங்கத்தாண்டு ஒவ்வொருத்தரும் சொல்றாங்க, யாரு உண்மையானவங்க என்பதெல்லாம் தெரியாது, அவங்க எங்கே போவாங்கன்னும் தெரியாது. இதெல்லாம் “ஆமன்னா சல்லம்னா” (ஆண்டவனுக்கும் அவன் ரசூலுக்கும் மட்டும்தான் தெரியும்). ஏன், எதுக்கு கேக்கிறீங்க?”

“இல்லே, எங்க மிஸிரிகாரன் சொல்றான் , நாமத்தான் ஒத்துமையா இருக்கோம்னு.” என்றார்

இஸ்லாத்தில் ஒத்துமையைப் பத்தி மிஸிரிக்காரன் கேட்டதுக்காக இப்படி எடக்கு மடக்க கேள்வியெ கேட்டு என்னை கொழப்பினார், அவரை நான் கொழப்பிவச்சிருக்கேன். இதெ படிச்சுட்டு நீங்களும் கொழம்பினாலும் சரி இல்லை திட்டித்தீர்த்தாலும் சரி..!

இஸ்லாம் என்ற வார்த்தை ‘சலாம்’ என்ற சொல்லிலிருந்து வருகிறது. சலாம் என்றால் சாந்தி, சமாதானம், அமைதி என்றல்லாம் பொருள் கொள்ளலாம். இதை அஹமது தீதாது கூட வலியுறுத்தி சொல்லியிருக்கிறார். நாம் சாதாரணமா பார்க்கலாம் யாரையாவது வாழ்த்தனும்னா ”சலாமத்தா இரு” என்பாங்க; அதேமாதிரி பயணம் போனால் ”சலாமத்தா போய்ட்டுவா” என்று சொல்வாங்க. அப்பொ இந்த சலாமத் என்ற வார்த்தை சந்தோஷத்தைத்தானே குறிக்கிறது.

இந்த சந்தோஷம், சமாதானம், அமைதி இவையெல்லாம் ஒத்துமை என்ற செயலிலிருந்துதானே வருகிறது? ஒத்துமை இல்லேன்னா…?

ஒரு சமயம் பெர்னார்ட்ஷாவிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டார்கள்: “உலகத்தில் எந்த நாட்டுக்குப் போனாலும் சண்டையும் சச்சரவுமாக இருக்கிறதே, சமாதானம் ஏற்பட்டு அமைதியாக இருக்கவே முடியாதா?”

அலட்டிக்காமல் சொன்னார், “ஏன் முடியாது? 1400 வருஷத்துக்கு முந்தி அரபு பாலைவணத்தில் பிறந்த அந்த முஹம்மது மீண்டும் பிறந்து வந்தால் முடியும். ஆனால் அவர் பிறக்கமாட்டார்.” – இது அவருடைய கண்ணோட்டம்.

ஒரு வேளை பெருமானார் அவர்கள் வந்தாலும் எல்லா சமூகமும் சமாதானமாகிவிடும் ஆனால் முஸ்லிமாகிய நாம் மட்டும் ஆகவே மாட்டோம். டிவியிலே இஸ்லாமிய நிகழ்ச்சின்னு ஒன்னு நடக்குது, அதுலெ இரண்டு பிரிவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்கின்றர்; நாங்க சொல்றதுதான் சரி, அவங்க சொல்வது குஃப்ரியத்துன்னு சொல்றாங்க; இதுலெ சுன்னத்து ஜாமாத்து, தவ்ஹீது ஜமாத்து, தமிழ் நாடு ஜமாத்து. ஆல் இண்டியா ஜமாத்துன்னு பேரு வச்சிருக்காங்க.

ரசூலுல்லாஹ் எப்பவாவது இது சுன்னத்து ஜமாத்து அது தவ்ஹீது ஜமாத்துன்னு சொல்லிருக்கார்களா? இல்லை இது ஆல் அரபு ஜமாத்து ஃபெடரேஷன் அப்படி இப்படீன்னு சொல்லிருக்கார்களா? அஞ்சு வருஷம் பத்து வருஷம்னு ஓதிட்டு வந்து ஆலிம்சாக்கள் இப்படி சொன்னா பாமரர்களாகிய நாங்க என்ன செய்ய?

ஒரு கூட்டத்திலெ ஒத்துமையை பத்தி ஒரு ஆலிம்சா விரிவா பேசினார். அடுத்து பேசிய எங்க ஜஃபருல்லாஹ் நானா, நாம் ஒற்றுமையாக இருக்கவே முடியாது என்றார். எல்லோர் முகத்திலும் கேள்விக் குறி. “குர்ஆன் எவ்வளவு காலத்துக்கு இருக்கும்? யுக முடிவு வரை இருக்கும். அப்பொ குர்ஆனிலுள்ள ஆயத்தும் இருக்கும். நாம் எல்லோரும் ஒத்துமையாயிட்டா குர்ஆன் ஆயத்து பொய்யா போயிடும், அதனாலெ நம்மிடம் ஒத்துமை வராது!” என்றார்.

அல்லாஹ் ஒற்றுமையாக இருங்கள் என்று மட்டும் சொல்லவில்லை, நீங்கள் பிரிந்துவிடவேண்டாம் – “லா தஃபற்றக்” என்றும் அடுத்த வரியில் சொல்கிறான். அதெ நிரூபிக்கிற வகையிலெ கடந்த நோன்பு பெருநாள் உலகமெங்கிலும் செப்டம்பர் 10 ம் தேதி கொண்டாடினோம். எந்த வருஷமும் இல்லாமல் இந்த வருஷம் மட்டும் எப்படி சாத்தியமானது என்று வியப்பாக இருந்துச்சு. இந்த நிலை தொடர்ந்தா ரொம்ப நல்லா இருக்கும், இது ஒத்துமைக்கு தொடக்கமாக இருக்கும்னு நினைச்சேன்.  அந்த நினைப்பு அல்பாயுசாயுடுச்சு.

இப்பொ ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடிக்கிட்டிருக்கோம். வழக்கம் போல அரபு நாடுகள் ஒரு நாள் இந்தியா ஓமன் ஒரு நாள்னு ஆயிடுச்சு. ஆனால் ஒரே ஊர்லெ மூனு நாள் பெருநாள் கொண்டாடும் போது நம்ம ஆலிம்சாக்களை பெருமைப் படுத்தி பாராட்டுவதைத் தவிர வேறென்ன சொல்லமுடியும்?

இதுலெ பெரிய ஒரு சவுரியம்/அட்வாண்டேஜ் இருக்கு. என்னன்னா, வெளி நாட்டுலெ குறிப்பா அரபு நாட்டுலெ இருக்கிறவங்க சில பேருக்கு திடீர்னு ஒரு மூடு வரும், பெரு நாளைக்கு ஊருக்குப் போவனும்னு. கடைசி நேரத்துலெ டிக்கட் கிடைக்காது ஆன் லைன்லெ செக் பண்ணினாலும், டிராவல்ஸ்லே கேட்டாலும் எல்லா ஏர்வேஸும் ஃபுல்லுன்னு சொல்லுவாங்க. பெரு நாள் காலையிலெ இல்லாட்டி மறுநாள் இருக்கும்பாங்க. எப்படியோ டிக்கட் எடுத்துக்கிட்டு போனாலும் 200/300 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஊருக்குப் போய் சேரமுடியாது; இங்கேயும் கொண்டாட முடியாது ஊர்லேயும் கொண்டாட முடியாது. கடைசியிலே திரிசங்கு சொர்க்கமாயிடும்.  இதெ மனசுலெ வச்சு நம்ம சுன்னத்து, ஃபர்ளு, தளஹீது, ஜாக்பாட், ஆல் இண்டியா, தமிழ் நாடு, கேரளா இந்த ஜமாத்தெல்லாம் ஆளுக்கொரு நாளைக்கு பெருநாள் வச்சிருக்காங்க. அதனாலெ லாஸ்ட் மினிட் டிக்கட் கெடச்சு டென்ஷனோட போறவங்களுக்கு பெரி…..ய்ய ரிலீஃப் கிடைச்சிருக்கு. எப்படி லேட்டா போனாலும் பெருநாளை அராம்ஸே கொண்டாடலாம். NO TENSION , NO HASSLE!

வாழ்க ஒற்றுமை! வளர்க நம்ம ஜமாத்!! 

***

நன்றி : ஹமீது ஜாஃபர்  | E-Mail :  manjaijaffer@gmail.com

***

நானா, அந்தப் படம் அன்புக்கரங்களாம். இதோ பாட்டு

3 பின்னூட்டங்கள்

 1. maleek said,

  19/11/2010 இல் 03:42

  அமெரிக்காவில் செப் 11 அன்று தான் நோன்புப்பெருநாள் அறிவிக்கபட்டது .இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட
  இந்த நாளில் , நீங்கள் எப்படி பெருநாள் கொண்டாடலாம் என்று தீவிரவாத கிறிஸ்தவ அமைப்புகள் கோபம்
  கொண்டதோடு,நீங்கள் பெருநாளை மாற்றவில்லை என்றால் குரானை எரிப்போம் என்றும் எச்சரித்தன.உடனே
  செப் 10 பெருநாளாக அறிவிக்கபட்டது ..இதுதான் “உலகமெங்கிலும்”ஒரே நாளில் பெருநாள் கொண்டாட சாத்தியமான கதை.ஒற்றுமை என்னும் கயிற்றைப்பிடித்துகொள்ளும் லட்சனம் தான் ஊருக்கு பத்து அமைப்புகள்,தனித்தனி பள்ளிவாசல்கள்.வாழ்க ஒற்றுமை(என்னும் வார்த்தை) வளர்க ஜமாஅத்(அதன் மனம்
  போன போக்கில்)

 2. 19/11/2010 இல் 10:06

  எங்கூட்டு இஸ்லாம் எங்களுக்கு. உங்கூட்டு இஸ்லாம் உங்களுக்கு.
  ‘ஆடு’ ஒருவருக்கு ‘ஒற்றுமை’ ஜமாத்துக்கு.

 3. 19/11/2010 இல் 10:08

  உலக அதிசியங்களில் ஒன்றாகத்தான் இருந்தது நாம் நோன்பு பெருநாள் கொண்டாடியது. அது ஏதோ தவறுதலாக நடந்துவிட்டது போல் தெரிந்தது.
  ஒற்றுமை என்ற கயிறைத்தான் துண்டுத் துண்டாக்கி நம்ம வீட்டு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க வைத்துக்கொண்டோமே, அப்புறம் எங்கே இருக்கும்?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s