ஒரு பயங்கர நேர்காணல்! – ‘துக்ளக்’ சத்யா

துக்ளக் இதழில் வெளியான ‘இது நம்ம நாடு’ கார்ட்டூனை முதலில் பார்த்துவிட்டு ‘பயங்கர’ நேர்காணலை வாசியுங்கள். தட்டச்சு செய்து அனுப்பிய வருங்கால ‘எம்.எல்.ஏ’ தாஜுக்கு நன்றி!

***

ஒரு பயங்கர நேர்காணல்! – ‘துக்ளக்’ சத்யா

[முன்னால் எம்.எல்.ஏ. ஒருவர் வருமான வரி அதிகாரி போல் நடித்து மோசடி செய்து கைதாகியிருக்கிறார். நமது நாட்டில் கிரிமினல்கள் தேர்தலில் நின்று வெற்றி பெறுவது புதிய விஷயமல்ல. பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிகிற போதெல்லாம், ‘இம்முறை இத்தனை கிரிமினல்கள் எம்.பி.க்களாகி இருக்கிறார்கள்’ என்று அறிவிக்கப்படுவதும் வழக்கமானதுதான். இருந்தாலும், நாடு முழுவதும் பரவலாக நடந்து வருகிற இத்தகைய சம்பவங்களைப் பார்க்கிறபோது, நமது அரசியல் கட்சிகள் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்துகிற ‘நேர்காணல்’கள் இந்தவகையில் இருந்துவிடக் கூடாதே என்று கடவுளை வேண்டத்தான் தோன்றுகிறது.]

கேள்வி: தேர்தலிலே போட்டி போட ஸீட் கேக்கறியே, அரசியல் முன் அனுபவம் இருக்குதா?

பதில்: என்னங்க அப்படிக் கேட்டுட்டீங்க? நாங்க பரம்பரை கிரிமினல்ங்க. எங்கப்பா செய்யாத கிரிமினல் வேலையே கிடையாது. அவர் கிட்டேதான் நான் தொழில் கத்துக்கிட்டேன். அரசியலுக்கு இதுக்கு மேலே என்ன தெரியணும்?

கேள்வி: இதுக்கு முன்னாலே என்ன தொழில் பார்த்தே?

பதில்: அதான் சொன்னேனுங்களே. நினைவு தெரிஞ்ச காலத்திலேந்து கிரிமினல் தொழில்தான்.

கேள்வி: அது தெரியுதுப்பா. என்ன தொழில்னு விளக்கமாச் சொல்லு.

பதில்: விபரம் தெரியாத காலத்திலே பிக்பாக்கெட் அடிச்சிட்டிருந்தேனுங்க. அப்புறம் ஸ்கூட்டர்லே போய் செயின் பறிச்சேன். முகமூடிக் கொள்ளைக்காரர்கள் சங்கச் செயலாளர் பதவியிலே கூட இருந்திருக்கேன்.

கேள்வி: அப்புறம்?

பதில்: இப்படிப் படிப்படியா முன்னுக்கு வந்ததும், கள்ளச் சாராயம் காய்ச்ச ஆரம்பிச்சேன். கட்டப் பஞ்சாயத்து பண்ணேன். திருட்டு வி.சி.டி.வித்து லட்சாதிபதி ஆனேன். அப்பத்தான் ஒருநாள் எங்கப்பா என் கனவிலே வந்து, ‘இதெல்லாம் பார்ட்டைமா வெச்சுக்க. ஃபுல் டைம் வேலைக்கு டீஸண்டா அரசியல்லே இறங்கிடுன்னாரு. உடனே இங்கே வந்துட்டேன்.

கேள்வி: வெரிகுட் ஸீட் குடுத்தா உன்னாலே ஜெயிக்க முடியுமா?

பதில்: கண்டிப்பா ஜெயிப்பேனுங்க. பணம் வாங்கிட்டு ஓட்டுப் போடலைன்னா குடலை உருவிடுவேன்லே? என் தொகுதி மக்களுக்கு என்னைப்பற்றி நல்லாத் தெரியுங்க. என்னைப் பார்த்தவுடனே மடமடன்னு வீட்டுக் கதவையும் கடைக் கதவையும் மூடிடுவாங்க. அவ்வளவு மரியாதை. கோபம் வந்தா வீடு பூந்து அடிச்சிடுவேன்னு எல்லோருக்கும் தெரியும்.

கேள்வி: கொலை கிலை பண்ணியதுண்டா?

பதில்: எல்லாத்தையும் நானே பண்ண முடியுங்களா? எதை செஞ்சாலும் முறையோட செய்யணும். அதான் என் பாலிஸி. அதுக்கு ஆள் வெச்சிருக்கேன். என் கிட்டே 150 பேர் வேலை பாக்கறாங்க. எந்த வேலை கொடுத்தாலும் போலீஸ்லே மாட்டாதபடி நேக்கா செய்வேணுங்க.

கேள்வி: தேர்தல் வேலைக்குத் தேவையான அளவு பணம் இருக்குதா?

பதில்: அது ஒரு பெரிய விஷயம்ங்களா? நீங்க ஸீட் குடுங்க. தொகுதியிலே ஒரு ரெளண்ட் போய் வியாபாரிங்க கிட்டே வசூல் பண்ணிடறேன். நானே கோதாவிலே இறங்கினா பணம் கொட்டும்ங்க. அப்படி ஒரு முகராசி எனக்கு.

கேள்வி: கேட்டவுடனே, வியாபாரிங்க பணம் கொடுத்துடுவாங்களா?

பதில்: கொடுக்கலைன்னா, நாமே கல்லாவிலே கையை விட்டு தேவையான அளவுக்கு எடுத்துக்கவேண்டியதுதான். அப்பத்தான் அந்த அயோக்கியனுங்களுக்கு புத்திவரும். எதிர்காலத்திலே ஒழுங்கா நடப்பானுங்க.

கேள்வி: எம்.எல்.ஏ. வேலை எல்லாம் தெரியுமா?

பதில்: வருமான வரி அதிகாரி, ஸி.பி.ஐ. அதிகாரி மாதிரியெல்லாம் வேஷம் போட்டவனுக்கு எம்.எல்.ஏ. வேஷம் போடறது ஒரு கஷ்டம்ங்களா? ஒரு தடவை, எம்.எல்.ஏ. மாதிரி போலீஸ் ஸ்டேஷன்லே நுழைஞ்சு, லாக்-அப்லே இருந்த எங்க ஆளை ரிலீஸே பண்ணியிருக்கேன்.

கேள்வி: அதிருக்கட்டும்ய்யா, நிஜமாவே எம்.எல்.ஏ. ஆனா, மக்கள் பணி ஆற்றணுமே. அந்த வேலையெல்லாம் தெரியுமான்னு கேக்கறேன்.

பதில்:  ஓ, அதைக் கேக்கறீங்களா? அதுவும் தெரியுங்க. நம்ம கட்சிக்காரங்களுக்கு அரசாங்கத்திலே காண்ட்ராக்ட் வாங்கிக்கொடுத்து, வர்ற கமிஷன்லே கொஞ்சம் கட்சிக்கு நிதியா கொடுக்கணும். தொகுதி நிதியிலே, முடிஞ்சா ஒரு பத்து பர்ஸெண்டை வேலைக்குன்னு ஒதுக்கி, மீதியை முக்கியமானவங்க பிரிச்சுக்கணும். போலீஸ்காரங்களை நம்ம கட்டுப்பாட்டிலே வெச்சுக்கணும்…

கேள்வி: போதும் போதும், நிர்வாக ரகசியத்தை வெளியிலே சொல்லாதே. விவரம் தெரியுதான்னு டெஸ்ட் பண்ணேன். அவ்வளவுதான். தொகுதியிலே கரண்ட் இல்லை, ரோடு சரியில்லை, தண்ணி வரலைன்னு மக்கள் பிரச்சனை பண்ணா எப்படி சமாளிப்பே?

பதில்: சாமர்த்தியமா எதையாவது புளுகி சமாதானப்படுத்திடுவேனுங்க. இப்படித்தான் நான் ஒரு தடவை ஃபைனான்ஸ் கம்பெனி நடத்திட்டிருந்தப்போ, டெபாஸிட் பண்ணவன் எல்லாம், பணம் எப்பக் கிடைகும்னு கழுத்தறுத்துகிட்டே இருந்தானுங்க. அவங்களை எல்லாம் ஏமாத்தின அனுபவம் இருக்குது. அதே மாதிரி தொகுதி மக்களையும் ஏமாத்திட முடியும்.

கேள்வி: ஆட்சிக்கு திடீர்னு ஆபத்து வருதுன்னு வெச்சுக்க, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களைக் கடத்தற வேலையைக் கொடுத்தா, நல்லபடியா செய்ய முடியுமா?

பதில்: முடியும்ங்க. கடத்தல்லே எனக்கு நல்ல எக்ஸ்பிரீயன்ஸ் இருக்குது. கஞ்சாக் கடத்தல் சம்பந்தமா போலீஸ்காரங்க என்னை ஏழு வருஷமா தேடிக்கிட்டிருக்காங்க. நானே போலீஸ் மந்திரி ஆகி அவங்க கொட்டத்தை அடக்கணும். போலீஸ் மந்திரி ஆகறதுதாங்க என் லட்சியம்.

கேள்வி: தொகுதி மக்கள் சிபாரிசு கடிதம் கேட்டு வந்தா, கொடுப்பியா?

பதில்: அததுக்கு ஒரு ரேட் வெச்சு, கேக்கற சர்ட்டிஃபிகேட்டை கொடுத்துடுவேன்ங்க. வாழ்க்கையிலே எவ்வளவோ போலிச் சான்றிதழ் கொடுத்திருக்கேன். மக்களுக்காக இதைக்கூடச் செய்ய மாட்டேனா? ‘போலி செக் கொடுத்து பல லட்சம் அபேஸ்’னு போன மாசம் பேப்பர்லே கூட நியூஸ் வந்ததே. ஞாபகம் இருக்குதுங்களா? அது நான்தான்.

கேள்வி: தேர்தல் வேலையெல்லாம் ஒழுங்காத் தெரியுமா?

பதில்: ஒரு நெருக்கடின்னா, ஓட்டு மெஷினை தூக்கிட்டு வர முடியுமான்னுதானே கேக்கறீங்க? தனி ஆளா ஏ.டி.எம். மெஷினை பேத்து, மொத்தப் பணத்தையும் தூக்கிட்டு ஓடினவனாலே இதுகூட முடியாதா?

கேள்வி: ஊழல் எல்லாம் ஒழுங்கா பண்ணுவியா? திடீர்னு சட்டத்துக்கு பயந்து, கட்சிக்கு துரோகம் பண்ணிட மாட்டியே?

பதில்: யாரைப் பார்த்து என்ன கேள்வி கேக்கறீங்க? எங்க அப்பா செத்து பத்து வருஷம் ஆகுது. அவர் உயிரோட இருக்கற மாதிரி, மாசாமாசம் அவர் கையெழுத்தை நானே போட்டு, பத்து வருஷமா பென்ஷன் வாங்கிட்டு வரேன். அவ்வளவு ஏன்? மூணு வருஷமா போலி ஆர்.டி.ஓ. ஆஃபீஸ் நடத்தி, பார்ட்னருங்களை ஏமாத்தி எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டு வந்தவன் நான். அந்த அளவுக்கு வேலை நுணுக்கம் தெரிஞ்சவன் மேலே இப்படி சந்தேகப்படறீங்களே?

கேள்வி: கோவிச்சுக்காதேப்பா. தகுதியான ஆளுக்குத்தான் ஸீட் கொடுக்கிறோமான்னு நான் உறுதிப்படுத்திக்க வேண்டாமா? கட்சி வளர்ச்சியைப் பார்க்கணும்லே? பயங்கரமான ஆள்தான்ற நம்பிக்கை எனக்கு வர வேண்டாமா?

பதில்: பயங்கரம்னதும் ஞாபகத்துக்கு வருதுங்க. நான் பயங்கரவாதக் கூட்டத்திலே கூட கொஞ்ச நாள் இருந்தேன். வெடிகுண்டு பராமரிப்பு ஆஃபிஸுக்கு என்னை மேனேஜராவே போட்டிருந்தாங்க. தலைமறைவு வாழ்க்கை எனக்குப் பிடிக்கலை. கௌரவமா மக்கள் மத்தியிலே, ஜனநாயக முறையிலே கொள்ளையடிக்க ஆசைப்பட்டுத்தான் எம்.எல்.ஏ. ஸீட் கேக்கறேன்.

கேள்வி: சட்டசபையிலே எப்படி பணியாற்றணும்னு தெரியுமா?

பதில்: நான்தான் விடாம பேப்பர் படிக்கிறேனுங்களே. எதிர்க் கட்சி ஆளுங்க தகராறு பண்ணா நாலு தட்டு தட்டித் திருத்தணும். அவ்வளவுதானே? உங்க கிட்டே சொல்றதுக்கென்னா? ஒரு தடவை நானும் எங்க ஆளுங்களும் பேங்க்லே கொள்ளை அடிச்சிட்டு வெளியே வரும்போது, பொதுமக்கள் நூறு பேர் எதிர்லே வந்துட்டாங்க. அத்தனை பேரையும் அடிச்சு நொறுக்கினோம். அரசியல்லே இல்லாதப்பவே அவ்வளவு வேலை காட்டினவன், அரசியல் பாதுகாப்போட செயல்படும்போது கேக்கணுமா?

கேள்வி: அதெல்லாம் சரிப்பா! இவ்வளவு கிரிமினல் வேலைகளை செஞ்சிருக்கியே. எப்பவாவது போலீஸ்லே மாட்டினது உண்டா? ஜனநாயகத்திலே, மாட்டாம செயல்படுகிற செயல் திறந்தான் முக்கியம். கட்சிக்கு கெட்ட பேர் வந்துடக் கூடாதே. அதுக்காகத்தான் கேட்க்கிறேன்.

பதில்: ஐயோ எந்த போலீஸ் ஸ்டேஷன்லே வேணும்னாலும் விசாரிச்சுப் பாருங்க. எனக்கெதிரா ஒரு சின்ன ஆதாரம் கூட கிடையாது. அப்படி ஒரு க்ளீன் ரிகார்டு எனக்கு. ஒரே ஒரு சான்ஸ் குடுங்க. என் கைவரிசையைப் பார்த்து நீங்களே என்னை மந்திரியாக்கிடுவீங்க.

***

நன்றி: சத்யா/ துக்ளக் (03-11-2010)
நன்றி : தாஜ் |E-Mail : satajdeen@gmail.com
3:17 PM 30/10/2010

6 பின்னூட்டங்கள்

 1. 01/11/2010 இல் 11:12

  சூப்பர்…

 2. 01/11/2010 இல் 12:11

  :)))

 3. மஜீத் said,

  01/11/2010 இல் 13:57

  நான் சிறுபிள்ளையாக இருந்தபோதே இவரது கற்பனைப்பேட்டிகளின் விசிறி. ஒண்ணரைப் பக்க நாளேடுகளும் இவரது கைங்கர்யம்தான் என்று நினைக்கிறேன். அதிமேதாவித்தனம் அதிகதிகமாக மேலிடவும் துக்ளக் படிக்கும் ஆர்வம் போயே போச்சு. சத்யாவை படிக்காமல் போனதென்னவோ துரதிருஷ்டம்தான்.

 4. 01/11/2010 இல் 20:33

  துக்ளக் படிச்செல்லாம் பல வருஷங்களாவுது. அப்பப்ப எதாவது எடுத்துப் போடுங்க தாஜ்.

 5. maleek said,

  01/11/2010 இல் 22:51

  இன்னா சோக்காக்கீது நேர்காணலு இதப்போய் பயன்கரம்னு பிகிலு உட்டா எப்டிங்கறேன்?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s