மனசு சரியில்லையாம் மஜீதுக்கும்!

மனசு சரியில்லாத சீஸன் போலிருக்கிறது! ரிலாக்ஸ் பண்ண இந்த ‘You can do this at your own risk’ சுட்டியைப் பாருங்கள் (என் மேனேஜர் அனுப்பியது) . சிரிச்சிங்களா? இப்ப நம்ம மஜீத்பாயின் கடிதம் :

***

ம‌ன‌சு ச‌ரியில்லைதான் – இன்னுமொரு க‌டித‌ம்

 மஜீத்

இந்த மாதிரி யாராவது எழுதிட்டா, அடுத்து வருவது என்னன்னு எல்லாருக்கும் தெரியும், அட்வைஸ்தான்.
 
எல்லாநேரத்திலும் அட்வைஸ் அட்வைஸாவே இருக்காது.
சில சமயம் ஆறுதல் வந்து விழும், அட்வைஸ் ரூபத்தில்.
 
சில நாட்களாக எனக்கும் மனசு சரியில்லைதான்; பெரிய பிரச்சினை எதுவும் இல்லாவிட்டாலும். ஊருக்குப் போன்செய்து புலம்பியாயிற்று.
 
நேற்று திடீரென்று ஒரு தெளிவு.
 
என் ஷூ ஒன்று மாதக்கணக்கில் குடைச்சல் குடுத்துக் கொண்டிருந்தது, மண்டையில். (மனசு சரியில்லாத்துக்கு இது காரணமில்லை)
 
வாங்கிய ஒருவாரத்தில் ஒரு சிறிய குறை கண்டுபிடித்தேன். (சரிசெய்யவேண்டி வச்ச நிய்யத்து 3 மாசம் இழுத்துருச்சு).
 
ஒருசில நாட்கள், நிறப்பொருத்தம்வேண்டி மட்டும், போட்டுக்கொள்வேன், அன்றைக்கும் மனைவியிடம் ஒரு சபதத்தோடு, வரும்போது சரிசெய்துவிட்டுத்தான் வருவேன் என. சபதத்தோடு சரி.
 
அதைச் சரிசெய்யவேண்டிய அவசியமும் இல்லைதான். அப்படியேகூட போடலாம். ஆனா இந்த மண்டைப்பூச்சி??
 
ஒருநாள் இருவரும் சூப்பர்மார்க்கெட் போகும்போது, எப்போதும் போல மறக்காமல், தூக்கிச்சென்றோம். பலன் பூஜ்யம். கடைவாசலில் எப்போதும் உட்கார்ந்திருக்கும் நண்பரும், போகும் வழியில் அமர்ந்திருக்கும் நண்பரும் ஆப்சென்ட்.
 
வீட்டுக்கு வந்ததும் இந்த ‘தோசி’ இனி வேண்டாமென, கடாசிவிட்டாள், வீட்டுக்குள்ளேயே.
 
ஒண்ணறை மாசமாச்சு.  மனைவி ஊருக்குப்போனதும் ‘Forced Bachelor’. நேற்று வீட்டைச்சுத்தப்படுத்தும்போது, ‘அது’ கண்ணில் பட்டது.

எடுத்தேன். நேராக சூப்பர்மார்க்கெட். வாசலில் இருந்தார், பாகிஸ்தானி நண்பர். வெற்றி வெற்றி என்று கத்தாத குறை.
 
காட்டினேன். மேலும் கீழும் பார்த்தார்; முதலில் ஷூவையும் அப்புறம் என்னையும். இதை என்ன பண்ணட்டும் என்று என்னிடமே கேட்டார். ஏதாவது பண்ணுய்யாண்ணேன்.
 
 ‘ஹம் சொலுசன் கரேகா’ன்னார்.

என்ன ஒரு மொழி? அரபிகள் வெளிநாட்டவர்ட்ட பேசுறதுக்குன்னு ஒரு அரபி பாஷை வச்சிருக்கிற மாதிரி, உருது சுட்டுப் போட்டாலும் வராத பச்சைத்தமிழர்களுக்காக‌, இவர் ஒரு உருது வச்சிருக்காரோன்னு தோணுச்சு.
 
என்னமாச்சும் பண்ணுய்யான்னு மறுபடி சொல்லிட்டு, ரொம்ப நாளா முயற்சிபண்ணி அவரை அன்னிக்குத்தான் புடிச்ச கதையையும் சொன்னபோது அவர் ‘சொலுசன்’ பண்ணிமுடிச்சுட்டார்.
 
2 நிமிட வேலை. அதில் ஒரு நிமிடம் அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்ததுதான். இப்ப ‘அவர்களுக்கே’ உள்ள ஸ்டைலில் ‘அப்பிடி’த் தூக்கிப்போட்டார்.
 
 எடுத்துக்கொண்டே, எவ்வளவு தரட்டும்?னு கேட்……
 
‘சொலுசன்’ ஃபெய்லியர்.
 
அதுமட்டும் இல்லை. முன்பு எனக்கு மட்டும் தெரிந்த குறை, இப்ப ஊருக்கே தெரிந்தது. அவ‌ருக்குக் கோப‌மான‌ கோப‌ம், என் மீது!

என‌க்கோ சிரிப்பு!! இதை எதுக்குக் கொண்டுவ‌ந்தே? சும்மா அப்டியே போட்டுருக்க‌லாம்ல‌? சிரிப்பை அட‌க்க‌ப் ப‌டாத‌பாடு ப‌ட்டேன்.
ச‌ரி ச‌ரி விடுங்க‌ பாய், அதைக்கொடுங்க‌; இல்லைனா தூக்கிப்போட்ருங்க‌. ப‌ர‌வால்லண்ணேன்.

அவ‌ர், அது எப்படி? கொஞ்ச‌ம் இரு, வேற மாதிரி ச‌ரியாக்கித்த‌ர்றேன்னார், எனக்கும் வேற வேலை ஒண்ணும் இல்ல‌. 
 
நீ இந்த‌ ‘ஜூத்தாவ‌’ இங்க‌தானே வாங்கினே? இங்க இப்பிடித்தான்ன்னார். நான் மெதுவாக‌, நல்ல‌ குவாலிட்டிதானே?  எல்லாமே ஒரிஜின‌ல் தோல்தானே? இதுக்கென்ன‌ குறைன்னேன். த‌ட்டிப்பார்த்துவிட்டு, “ஆமா நல்லாத்தான் இருக்கு, ஆனாலும் என் சொலுச‌ன் ஒட்ட‌லைன்னா, இது ஒரிஜின‌ல்ங்கிற‌து ச‌ந்தேக‌ம்தான்”.

மீண்டும் சிரிப்பை அட‌க்கிக்கொண்டேன்.
 
இப்போது வேறு வழியில் முயற்சித்தார், ஷூவை வெல்ல.
 
உன‌க்குத்தெரியுமா, இந்த‌ சொலுச‌ன் ரொம்ப‌ நல்ல‌தாக்கும், பாகிஸ்தான்ல‌ இருந்து நான் வ‌ர‌வ‌ழைச்ச‌து, ரொம்ப‌ ந‌ல்ல‌ குவாலிட்டி. பாகிஸ்தான்ல‌யெல்லாம்… ம்ம்ம், ச்சோடோ பாய், அதெல்லாம் பேசி என்னாக‌ப்போகுது இப்ப‌? பாகிஸ்தான் முடிஞ்சு போச்சு, இனி என்ன‌ இருக்கு அங்க‌? எல்லாம் போச்சுன்னார், திடீரென‌.
 
த‌ன் சொந்த‌வேலையில் எதிர்பாராத‌ த‌வ‌று நிக‌ழ்ந்த‌போது கோப‌ப்ப‌ட்ட‌வ‌ர், நாட்டைப்ப‌ற்றி பேசும்போது சாந்த‌மாக‌ விர‌க்தி காட்டினார்.

ஆள்ப‌வர்க‌ள் எல்லாம் திருட‌ர்க‌ள் என‌ அர‌சிய‌ல் பேசினார். நான் வேறுவ‌ழியின்றி, ஆள்ப‌வ‌ர்க‌ள் அப்ப‌டித்தான். அத‌னால்தானே அவ‌ர்க‌ளிட‌ம் நிறைய‌ உள்ள‌து என்றேன்.
 
வேலையில் க‌வ‌ன‌ம் குறையாம‌ல் பேசுவ‌தில், ந‌ம்மூர் நாவித‌ர்களை வென்றுவிட்டார்.
 
நீ சொல்வ‌து த‌ப்பு. ஒருவ‌ன் எப்போது திருடுவான் தெரியுமா? அவ‌னிட‌ம் ஒன்றுமில்லாத‌போதுதான். உன‌க்கே ப‌சி தாங்க‌முடியாட்டி திருடித்தான் திங்க‌னும், உங்கிட்ட‌ ஒண்ணுமில்லைன்னா. ச‌ரியா?ன்னு கேட்டார்.
 
ச‌ரிதான், ஆனா நீங்க‌ சொன்ன‌ ஆள்ப‌வ‌ர்க‌ள் அப்ப‌டியில்ல‌யேண்ணு கேட்டேன்.
 
அவ‌ங்க‌ளும் ஒண்ணுமில்லாத‌வ‌ங்க‌தான்; எவ்வ‌ள‌வு காசுப‌ண‌ம் இருந்தாலும். அதைவிடு, இப்ப‌ யார்ட்ட‌ என்ன‌ இருக்குங்கிறே? எங்க‌ பழைய‌ ஜனாதிப‌திட்ட‌ இப்ப‌ என்ன‌ இருக்குங்கிறே? அவர் எங்க இருக்காரு இப்ப? அவர் சொந்த வீட்டுக்கு வர முடியுமா இப்ப?
எங்க‌ முன்னால் பிர‌த‌ம‌ர்ட்ட‌ என்ன‌ இருந்தாலும் ந‌டுரோட்ல‌ செத்தத‌ பாத்தீல்ல‌? ரூஹ் கூட‌ இல்ல‌ இப்ப. 
ஒண்ணுமில்லாத‌வ‌ன் திருடுவான், திருடுறவ‌ன்ட்ட‌ ஒண்ணுமிருக்காது.
 
அதிர்ந்துவிட்டேன்.
 
ஒரு ஷூ முடிந்துவிட்ட‌து. த‌ந்தார்.

நான் கேட்டேன், இன்னொன்னு? அதையும் இது மாதிரி ப‌ண்ணிருங்க‌ளேன்.. ?
 
வேண்டாம். நல்லா இருக்கிற‌தை ச‌ரிபண்ணுனா என்னாகும்னு இப்ப‌தானே பாத்தே? அதை விட்டுடுன்னார்.
 
நான் அவ‌ர் கேட்ட‌ கூலியைக் கொடுத்துக்கொண்டே, ஏம்பாய், உங்க‌ளுக்கு இந்த‌ வேலை ம‌ட்டும்தானா, இல்ல‌ வேற எதுவும் வேலை பாக்குறீங்க‌ளா?ன்னு கேட்டேன்.
 
ஆமாமா, நான் இன்னொரு வேலையும் பாக்குறேன், அதுல‌ அவ்வ‌ள‌வா வ‌ருமான‌ம் இல்ல‌, ஆனா இந்த‌ தொழில்ல ஏதோ ப‌ர‌வால்ல‌ அதைக்காட்டிலும் இதுல‌ கூட‌த்தான் கிடைக்குதுன்னார்.
 
அது என்ன‌ வேலைன்னு ஆர்வ‌மா கேட்க‌, அவ‌ர் சொன்னார்: ‘ஒரு பாங்குல‌ மானேஜ‌ரா இருக்கேன்’

முக‌த்தைக் கூர்ந்து பார்த்தேன், அதில் சிரிப்புக்கான‌ த‌ட‌ய‌மே இல்லை. என‌க்கும் வ‌லித்த‌தை உண‌ர்ந்திருக்க‌ வேண்டும்.
 
எனக்கு இந்த‌ வேலையை விட்டா வேற‌ என்ன‌ தெரியும்? நானும் ப‌ல‌த‌ட‌வை நின‌ச்சிருக்கேன். இப்ப‌டி ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் க‌ஷ்ட‌ப்ப‌ட்ற‌துக்கு, அந்த‌ வேலை பாத்தா என்ன‌, இந்த‌ வேலைபாத்தா என்ன‌ன்னு யோசிச்சிருக்கேன்.
 
ஆனா, தீர‌ யோசிச்ச‌துல‌ ஒண்ணும் தேவையில்ல‌ன்னு விட்டுட்டேன். நான் இப்ப‌ இப்பிடி இருக்கேன், நாளைக்கு அப்பிடி ஆனா என்ன‌ பெரிய வித்தியாச‌ம்? எவ்வ‌ள‌வு நாள் வாழ்க்கை? அதுக்க‌ப்புற‌ம்? இப்ப‌டி இருக்கிற‌ என‌க்கும், அப்பிடி இருக்கிற‌ அவ‌ங்க‌ளுக்கும் என்ன‌ பெரிய‌ வித்தியாசம் இருக்கப்போகுது வாழ்வு முடியும்போது? அவ‌ங்க‌ அப்ப‌டி வாழப் ப‌ழ‌கிட்டாங்க‌, நான் இப்படிப் ப‌ழ‌கிட்டேன். எல்லாரும் ஒரு வாழ்க்கையை ப‌ழ‌கிக்கிறாங்க‌. ப‌ழ‌கி முடிக்கும்போது எல்லாரும் ஒண்ணுதான்.
 
என்ன‌வோ மாதிரி இருந்த‌ ம‌ன‌சு ரொம்ப‌ லேசாயிருச்சு.

ஹாஜா அலி அவ‌ர்க‌ளின் தீர்க்க‌ம் அவ‌ர் ம‌ன‌சிட‌ம் தோற்றிருக்க‌லாம்; உங்க‌ளைப் போன்ற‌வ‌ர்க‌ளின் ம‌னசையெல்லாம் வெல்ல‌வில்லையா?
 
தேடினால் கிடைக்கும், பழகிக்கொள்ளும் வழி. உடனேயே!
 
ஹாஜா அலி கவிதை பற்றி:
 
பார‌தியின் கோப‌த்துக்கு, இவ‌ரது கோப‌ம் ஒன்றும் குறைந்த‌து கிடையாது

***

நன்றி : மஜீத் | E-Mail : amjeed6167@yahoo.com

2 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  31/10/2010 இல் 17:21

  மஜீத்….
  என் மனசு நல்லாயிடுச்சுய்யா.
  இப்போ பூரா சந்தோசம்.
  என்ன அழகா எழுதியிருக்கே.
  – தாஜ்

 2. மஜீத் said,

  31/10/2010 இல் 18:26

  சீஸன் என்றுதான் தோன்றுகிறது ஆபிதீன் நானா! இரண்டு நாள் முன்பு பேசிய என் பால்ய நண்பன், மனசு சரியில்லை.ஏன்தான் உயிரோடு இருக்கவேண்டுமெனத் தோன்றுகின்றதென்றான். பொருளாதாரப் பிரச்சினையாம். இன்றைக்கும் அவனுக்கு நிறைய சொத்தெல்லாம் இருக்கிறது. மறுபடி அவனிடம் முக்கால்மணி நேரம் தொலைபேசி,நான் ஊருக்கு வரும்வரை பொறுமையாயிருக்கச் சொன்னேன். அடிக்கடி பேசனும் அவன்ட்ட; இது என்ன‌ உல‌க‌ம்??


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s