மனசு சரியில்லை தலைவரே…. – தாஜ்

அன்புடன் ஆபிதீன்…
மனசு சரியில்லை தலைவரே….
மனம்விட்டு பெரிய கடிதம்
எழுதணும் எழுதணுமென்று
எழுதாது இருக்கிறேன்.

ஏதாவது இரவில் கிறுக்குவது ஒண்ணுதான்
இப்போதைக்கு ஆறுதல்.

எப்படி ஆபிதீன் வாழ்க்கையை
சமாளிக்கிறீங்க?
காசுபணத்தை முன்வச்சி இந்த கேள்வியை கேட்கலே..
என்னமோ போங்க.

– தாஜ் / 28th Oct’2010

*

கவலைப்படாதீர்கள் தாஜ்..

உங்கள் நிலையில்தான் நான் இருக்கிறேன். ஒன்றும் உருப்படியாகச் செய்ய வழியில்லை. உங்களுக்கு கிறுக்குவது ஆறுதலென்றால் அதைப் பதிவதுதான் எனக்கு ஆறுதல். ‘நான் சுட்ட அப்பத்தை நீங்களும் வலைச்சட்டியில் சுட்டுவைத்து அசத்திவிட்டீர்கள். நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சி’ என்று தம்பி அறபாத் போன்றவர்கள் எழுதும்போது கொஞ்சம் சிரிப்பு. அவ்வளவுதான். நித்தமும் தொடரும் பிரச்சனைகள் என்னை அலைக்கழிக்கிறது. என்ன செய்வேன், எல்லாம் சரியாகும் என்று ‘அவனிடம்’ பாரத்தைப் போடுவதைத் தவிர? எழுதுங்கள். அது ஒன்றுதான் வழி – நாம் நினைக்கப்பட.

ஆபிதீன் / 30th Oct’2010

*

அன்புடன் ஆபிதீன்…

தமிழ்ப்பூக்கள் (மார்ச் -1982) இதழில் நண்பர் ஹாஜா அலி கைப்பட எழுதிய வடிவத்தை அனுப்புகிறேன். எழுத்துச் சிதறலான இந்த வடிவத்தை – முடிந்தவரை அப்படியே உபயோகிக்கலாமெனத் தோன்றுகிறது.
– தாஜ் / 30th Oct’2010

***

ஹாஜா அலி : மேலும் சில குறிப்புகள் – தாஜ்

பெயர்: ஹாஜா அலி / புனைப்பெயர்: ‘ராவுத்தன் ஹாஜா அலி’ / ஊர்: கூத்தாநல்லூர் / அத்தா: திருவாரூர் / அம்மா: ஜாவா (இந்தோனேசியா) / கணீர் தமிழ் பேசும் ஜாவா அம்மா! / பையனை தமிழ்ப் படிக்கவைத்த ஜாவா அம்மா! / ஆமாம்.. ஹாஜா அலி தமிழ் படித்தவர் / மதுரைப் பக்கம் கருத்தவாப்பா கல்லூரி / தமிழ் ஆசிரியர் : கவிஞர்(?) நா. காமராசன் / வயதில், நவீன இலக்கிய ஈடுபாட்டில்… என்னில் மூத்தவர் / சௌதி-அல்கோபர்-துத்பாவில் வைத்துப் பழக்கம் / புத்தகம் படிப்பதும், சிகரெட் புகைப்பதும் – அவர் விழித்திருக்கும் வேளையில் – அதிக நேரம் விழுங்கும் வேலை.

ரொம்ப வித்தியாசமான மனிதர்/ ‘ஹாஜாவா , யார்?’ – சொந்த ஊர் / தெருக்காரர்களே விழிக்க விளங்கிய மனிதர் / ஒருதரம், நானும் அவரும் புகைபிடித்தபடி பேசிக் கொண்டிருக்க, அவர் அடுத்த சிகரெட்டை பற்றவைத்துப் புகைத்தபடி, புகை எத்தனைக் கேடு என்றும், அது வேண்டாமென்றும் எனக்கு தீர அறிவுரை வழங்கினார்! / அவரது பொழுதுபோக்கு வேடிக்கையானது / சக நண்பர்களை, அவரது பார்வைக் குத்த பேசித் திரிபவர்களை (குறிப்பாய், தஞ்சை மாவட்ட இஸ்லாமிய சகோதரர்களை) கூர்ந்து வேடிக்கை பார்ப்பதுதான் அது. பல நேரம், அவர்களிடமிருந்து அவர் தள்ளிப்போய் முகம் மலர நமூட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு திரும்புவதை கண்டிருக்கிறேன் (நிஜத்தில், நம் சகோதர்கள் அத்தனைக்கு அப்படியா?).

அவருக்கு பொருளீட்டும் வித்தைக்காரர்களைப் பிடிக்கும் / அமெரிக்கர்களையும்,அமெரிக்காவையும் கேள்வியறப் பிடிக்கும்/ அவர்களது பரிபூர்ண சுதந்திரம்… ரொம்பப் பிடிக்கும் / ‘இஸ்லாம் , கேப்பிடலிசம் சார்ந்த மதம்’ என்பதைச் சுட்டிக்காட்ட ரொம்ப ரொம்பப் பிடிக்கும். கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் போன்ற சிகப்புத் தலைவர்களை வரிசையாக அவர் அறிவார். அந்த இயக்கத்தின் எந்தவொரு பொலிட்பீரோ உறுப்பினரையும் தாண்டி, அவர்களின் சித்தாந்தங்களை அறிவார். அத்தனையையும் தலைகீழாகப் புரட்டிப் படித்தவர்.

என்றாலும்… புரட்சிகர சிந்தனைகளுக்கு… ‘நோ’!. ஜனநாயகம்தான் ‘எஸ்’! / அதுதான் சுதந்திரத்தின் திறவுகோல்/ சுதந்திரமே உரிமைகளின் கண்ணி / உரிமைகள்தான் உயிரின் உயிர் / அது அற்ற உயிர், உயிர் வாழ்வது வேஸ்ட் / இந்திய இடதுசாரிகள்? கடுமையான வேஸ்ட் / பெரியார்? கேள்வியே வேஸ்ட், முகத்தை திருப்பிக்கொள்ளத் தகுந்த வேஸ்ட் / தொடர்ந்தால்… கதவைச் சாற்றும் வேகமும், இரட்டைத்தாள் இடும் ‘கிறீச்’… ‘கிறீச்’சும் கேட்கும் / அவருக்கு அவர் விபரமானவர் / கொண்டதை மாற்றிக்கொள்ள மாட்டார் / வயதுக்கு மீறிய அறிவு அப்படித்தான் நர்த்தனமாடும்!

கொண்டதை, மாற்றிக் கொள்ள மாட்டார் என்பது நிஜமானாலும், ஓரேடியாய் தீர்மானமாய் அப்படிச் சொல்லிவிட முடியாது / எனக்குத் தெரிந்து துக்ளக் சோ, அவரது வெகுக்கால செல்லம் / தீர்மானமான அரசியல் விமர்சகர் , தீரர், மஹா புத்திசாலி , சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட நேர்மை / அப்படித்தான் நம்பினார் / அப்படியே பேசினார்/ சோவை கேள்வியாக்கி அவரிடம் பலமுறை வாதாடி இருக்கிறேன் / ம்… ஹும் / அவர், தனது வட்டத்தை விட்டு வந்தது கிடையாது.

சோ குறித்த, அவரது இன்னொரு மதிப்பீடு அவரிடம் தகைத்தது / அது பிற்காலச் சங்கதி/ துக்ளக்கோடு எங்கே எப்போது மோதி காயம்கொண்டாரெனத் தெரியாது / நான் அவரைச் சந்தித்த ஓர் சந்திப்பில், சோ பற்றிய தடித்தச் சொல் அவரிடமிருந்து தெறித்தது / இடியட்! / தமிழில் முட்டாள் எனச் சொல்லலாம்/ தான் கொண்டதை, அவர் மாற்றிக்கொள்ள லேட்டானாலும்…. லேட்டஸ்ட் ‘ரைட்’!

வைத்தீஸ்வரன்கோயிலில் நாடிஜோசியம் பார்க்க, ஊரிலிருந்து அவர் நேரே சீர்காழி வந்து, வைத்தீஸ்வரன்கோயில்போக அழைத்தார் / நாடிஜோசியம் பார்க்கவேண்டிய அளவுக்கு வாழ்வில் அவருக்கு என்ன கஷ்டமோ, என்ன நஷ்டமோ/ அல்லது, எந்த அழுத்தத்திலான மனச் சங்கடமோ… எனக்குத் தெரியாது / அவர் பார்க்கணும் என்று கருதிவந்த நாடிஜோசியம் பார்க்கப்பட்டிருக்கும் பட்சம், அது அவருக்கு நிஜமாலுமே ஆறுதலை தந்திருக்கலாம் / புரிந்தே அவரை நான் மறுத்தேன் / அவரும் தன்னை மாற்றிக்கொண்டு ஊர் திரும்பிவிட்டார்/ இது எனக்குத் தெரிந்த இன்னொரு ‘ரைட்’!   

மறக்க முடியாத அவரது வித்தியாச சம்பவங்களும், நினைவுகள் ஏராளம் / கொஞ்சகாலமாக அவரே கூட, என்னில் வெறும் நினைவாக மட்டுமே வாழ்கிறார்! / எஸ்…/ அவர் இறந்து, அல்லது தற்கொலை செய்துக்கொண்டு (நிஜம் மறைக்கப்படுகிறது) பத்து வருஷம் ஆகிவிட்டது / 1.அவர் இப்படி திடுமென இறந்துப் போனதும், 2.பெரிதாக எதுவும் எழுதாது மறைந்துப்போனதும், அவர்மீது கோபத்தையே தருகிறது.

அபூர்வமாக எழுதக் கூடியவர் / கோடைக்காலத் தூறல் மாதிரி/ ‘எழுதணும் என்றில்லை தாஜ்…. நல்ல எழுத்தை தேடிப் படித்தாலே போதும், அதுவும் இலக்கிய ஈடுபாடுதான்’ என்பார் / தனக்குப் பிறகு, தான் கற்ற… வளர்த்தெடுத்த…. எழுத்து வாழணுமென அவர் நினைக்கவில்லை / இப்போது, அவரைக் காண… அவர் எழுதியதை தேடினால், சிலச்சில எழுத்துக்கள்தான் கிடைக்கிறது / அது கடுகு என்றாலும் வசீகரம் / கீழே அவரது கடுகானதோர் எழுத்துண்டு. இருபத்தி எட்டு வருடக் கடுகு! / ஓர் கோட்டோவியம் மாதிரியான கடுகு!/ வாசிக்கும் நாம்தான் தோணும் காட்சிகளையும், உருவங்களையும் அதில் ஏற்றிப் பார்த்துக் கொள்ளணும் / இது, நவீன எழுத்தின் இன்னொருமுனை! / அபூர்வரகம்!

ஆன்மீகத்தில் அபார நம்பிக்கை உடையவர் / அம்மா, மாமியார், மனைவி இவர்களோடு சச்சரவு என்றால்… அடுத்த அவரது நடவடிக்கை ஆன்மீக ரீதியகத்தான் இருக்கும்! மாதக் கணக்கில் ‘தப்லிக்’ புறப்பட்டுவிடுவார் / இடைக்கால, நவீன சந்நியாசம் மாதிரி! / மத அரவணைப்பிலான தப்பித்தல் என்றும் சொல்லலாம் / ஒரு ரம்ஜான் காலத்தின் முப்பது நாளும், நோன்போடு அவர், பள்ளிசாலை புகலிடமாக்கிக் கொண்டு பக்கா ‘இபாதத்’துடன் காலம் கழித்ததை நான் கண்டிருக்கிறேன்/ அவர், தீரா நேசித்த இறைவன்… அவருக்கு, ‘கபரின்’ கஷ்டத்தை இலேசாக்கியிருப்பானா? சொர்க்கத்தை காட்டுவானா? தெரியவில்லை.

சொல்ல மறந்துவிட்டேன்… மது அவருக்கு இஸ்டம். உயர்வகை மது, தீர இஸ்டம். சரியாகச் சொன்னால்… அதற்கு அவர் அடிமை! 

– கநாசு.தாஜ்

*

இந்திய….
சுதந்திர….
ஜனநாயக…
குடியரசு… முகங்கள்.

 
– ராவுத்தன் ஹாஜா அலி

இவ்வருஷமும்
இந்தியாவின்   ஆட்டு மந்தைகளுக்கு   பழக்கமும்
வழக்கமும்   இரும் பெரும்  தளைகள்.
சட்டை போடாத  ஜாதிகள்   இப்பவும்  
    சாகாவரம்      பெற்றிருக்கின்றன.
இந்த வருஷமும்   சுண்ணாம்புக் கட்டியிலிருந்து 
    சூரியன்வரை    சகலமும்   கோயில்   தெய்வங்களே.
அட,  புது வருஷமென்று  காந்தி சிலைப் பார்த்து 
            காகங்கள்  எச்சமிடாமல்
இருக்கப் போவதில்லை.  அரசியல்வாதி 
           குறைச்சலாய்  போய்விடப்போவதில்லை.
2010  நூற்றாண்டிலும்  இந்திய  இலக்கியங்களெல்லாம்  
                              சடாரென்று

தூக்கத்திலின்றும்   விழித்ததுபோல்  சுதாரித்துக் கொண்டு  திசை
            திரும்பப்போவதில்லை.

பழம்பெருமைகள் நிறைய பேச,   புதுக் கண்டுபிடிப்புகள்  
                              மௌனம்.

‘ரொபோட்’  யாருக்கும்   தெரியவராது.
ராக்காயி வயசுக்கு வந்தது  தெரியாதவனெல்லாம் 
          இத்தடவை அவசியம் தெரிவர்.

இன்னும்   தெரிந்த முனியாண்டி  
           தெரியாத முஸ்தபாவாக  உருவெடுப்பான். 

               மூன்லைட்டில்     கூட்டாஞ்சோறு
               நியான்லைட்டில்      ஊதாரி
               நக்ஸலைட்டில்     பட்டதாரி
                               
                           மேலும்
                   
                  சாதுகள்     சம்சாரித்து
                      சம்சாரி      சன்யாசித்து
                   ரவுடிகள்    சட்ட சபையில்
                ரயில்கள்  விபத்தில்   – நான் தனியே  விட்டுவந்த
                         தங்கச்சி   ஆபத்தில்.
மீந்து கிடக்கும்   கிழங்கட்டைகள்   பார்க் பெஞ்சிலும்,  பீச் மணலிலும்
பழசு  பேசி   வெத்திலை   மெல்லலாம்.     அதோடு…

யுகத்துக்கு முந்தி   எழுதிப்பெற்ற    வேய்ங்குழலுடன்
இடையனின்   மேய்ப்பு.   வழக்கமே  இந்திய   சிங்கங்கள் கத்த
இந்தியக்   கழுதைகள்   கர்ஜிக்கும்.  இந்த   நாதத்தின்   பேதமறியா
அவசரமாய்   மானிடர்   அலைவர்.

                 
                  அவன்   அரிசிக்காய்.
       இவன்  பருப்பிற்காய்.  தின்று கொழுத்த எவனோ ஒருத்தன்
                  பாவாடை   மீறிய   பருவத்துக்காய்.

எனக்கும்   உனக்கும் மட்டும்   திரும்பவும்   டூரிங் டாக்கீஸ் பார்த்து
சக்கை   போடு  போடும்       எம்ஸியாண்டை  போதும்.
எழுதிப்  படிக்க  வேண்டிய     வயதுகளுக்கு    ரஜினிகாந்த்.
    
   
     இந்த லட்சணத்தில்    இனி ஒரு   மாடலாய்   நாற்பது பக்க
     கணக்கு நோட்டு புக்கின்   அட்டையில் சரிதா   சிரிக்கலாம்.
அவதி அவதியாய்  கட்டப்பட்ட  அணைகள் 
                    திரும்பவும்  உடையலாம்.
திரும்பத் திரும்ப   பஸ்கள்  
                    பாதசாரிகளை   பதம் பார்க்கலாம்.

இருநூற்றி   எழுபத்தெட்டாவது  தடவையாக 
                     வரிகள்   ஏறலாம்.
முன்னூற்றி   நாற்பதாவது முறையாக  
                   அரசியல் சாசனம்  திருத்தலாம்.

அங்கே   ‘அந்துலே’ சைஸில்     இன்னொரு   ‘பொந்துலே’
முதன் மந்திரியாகி   பணம்   பண்ணலாம்.

ஏழைகளுக்கும்   ஏமாந்தவனுக்கும்   இப்பவும்  இருக்கவே
                                      இருக்கின்றன,  

                 ஈரத்துணிகளும்
                        நீண்ட   நீண்ட    கியூக்களும்.

அத்தனைக்   கியூவிலும்  நின்று  பார்த்துவிட்டு   இந்த முறையும்
எந்த   கவிஞனாவது   “இன்று  என்னிடம்   பீரங்கி   இருந்தால்”
என்று     புதுக் கவிதை    எழுதலாம்.
காக்காக்கடிப்   போட்டு   சின்னப் பயல்கள் விளையாட்டில்  
                         திண்ணை     ரெண்டுபடுவது போல 
பெரிய   மனுஷன்கள்  வினையால்  அரசியல்  கூறுபடும்.  
          
       டை கட்டி   நகரத்தார்   பூரிகிழங்கு  தின்க,   மிஞ்சியபேர்
             புது   கடன்காரர்கள்.
         புது   கவிஞர்கள்.

            உழைப்பும்    உரிமையும்     ஊரான் சொத்து
அதில்     மறந்தும்கூட   இந்த   வருஷமும்   கைவைக்கவேண்டாம்.

           ரௌத்திரம்   பழகச்   சொன்னது   பாரதிதான்.
அதனால்    என்ன?     அவன்தான்    இல்லையே.

        சாதுவாயிரு ! 
        இவ்வருஷமும். . . .
        புண்ணிய    பாரதத்தில்
        திரும்பத். . . . பம்ருதி
        கத்தரிச் செடி
               வளர்ப்போம். . . .  வா. 

***

நன்றி: கநாசு. தாஜ் | E-Mail : satajdeen@gmail.com

6 பின்னூட்டங்கள்

 1. 30/10/2010 இல் 14:37

  தன்னை கொஞ்சம் மறக்க மது. முழுவதும் மறக்க தற்கொலை என்பதெல்லாம் நம்பிக்கையாளனின் வழியல்ல.
  So Lose not heart,
  Not fall into despair:
  For you must gain mastery
  If you are true in Faith. (3:139)
  உங்களைப் பற்றி கலவரப்பட செய்யாதீர்கள் தாஜ்.ஜெயமோகனைப் போல எழுதி குவியுங்கள் தாஜ். இந்திரா பார்த்தசாரதி, அல்லது ஆதவ்ன் பாணியில் கொஞ்சம் இண்டலக்சுவல் சுமைகளை இறக்கி விட்டு தன்னையே கேலிக்கும், கேள்விக்கும் உள்ளாக்கும்

 2. 30/10/2010 இல் 15:03

  தொடற்சி….

  இந்திரா பார்த்தசாரதி, அல்லது ஆதவ்ன் பாணியில் கொஞ்சம் இண்டலக்சுவல் சுமைகளை ( இந்த இடத்தில் நீங்கள் அப்ஜெக்ஷன் பண்ணுவீர்கள். ஆனால் அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்ட்) இறக்கி விட்டு தன்னையே கேலிக்கும், கேள்விக்கும் உள்ளாக்கும் ந்ல்ல எழுத்துகளை தாருங்கள்.புத்தருக்கு போதி மரம் எனக்கு எழுத்து என ஜெயமோகன் சொன்னது போல எழுதி எழுதி குவியுங்கள். தன்னை அறிய எழுத்து ஒரு நல்லவழி என்பது நீங்கள் அறிந்த விசயம் தானே!

  பின் குறிப்பு:

  கடலிலும், திடலிலும் உங்களை நான் சுமக்கிறேன் என்கின்றான் இறைவன்.

  ரயிலில் ஏறிய பின்னும் சுமையை தலையிலிருந்து இறக்காத இரயில் பயணியாக நாம் இருந்தால்…..

  தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதிலை. இறைவன் 70 தாயைவிட கருணை மிகுந்தவன்…….

  அன்றியும் இறைவனை மறந்து விட்டவர்கள் போன்று ஆகி விடாதீர்கள். ஏனெனில் அவர்கள் தங்களை மறக்கும் படி (இறைவன்) செய்து விட்டான்.அத்தகையோர் தான் ஃபஸிக்குகள் ஆவர்கள்.59:19

  To forget God is to forget the only Reality. As we are only refelected realities how can we understand or do justice to or remember ourselves when we forgot the very source of our being. (Allama Yousus Ali (rah) Quran translation Page 1527.)

  ஃபாஸிக் என்பது ஃபிஸ்க் என்பதிலிருந்து வந்தது ஃபிஸ்க் என்றால் பிரிவினை என பொருள்.(தப்ஸீர் ஹமீது)

  வஸ்ஸலாம்.

  ஒ.நூருல் அமீன்.

 3. 30/10/2010 இல் 20:29

  தாஜ்/ஆபிதீன்,

  வண்டிச் சக்கரம் சரியா ஓடிக்கிட்டிருந்தபோது ஒரு பெரிய முட்டுக்கட்டை, போக வழிதெரியாம முளிச்சிக்கிட்டிருந்தேன், நாலுபக்கமும் பாதை அடைப்பட்ட மாதிரி எனக்கு தோனுச்சு. புலம்பினேன், உங்கவூட்டு எங்கவூட்டு பொலப்பமல்ல பெரும் பொலப்பம். ஹஜ்ரத்துக்கு லட்டர் எழுதினேன், பதிலே இல்லை. ஊருக்குப் போனேன். என்ன சொன்னார்கள் தெரியுமா? என்னை ஏசினார்கள். ஏன் எல்லாத்தையும் தனித்தனியா பார்க்கிறீங்க எல்லாத்தையும் ஒன்னா வச்சுப் பாருங்க. cause தெரியும். எப்பொ cause தெரியுமோ அப்போ அதை தீர்க்க வழியும் தெரியும் என்றார்கள். உண்மை, அதை அனுபவப்பூர்வமாகக் கண்டேன், தீர்த்தேன்.

  அவர்கள் எங்களுக்கு அட்வைஸ் பண்ணும்போது ஒன்றை சொன்னார்கள். அதை இப்போது பகிர்ந்துக் கொள்கிறேன்.

  “எவன் பிரச்சினையை மறக்க குடிச்சாலும் சரி, பொம்பளையிட்டே போனாலும் சரி அது ஹராம். நான் சொல்றேன், லைப்ரரிக்குப் போனாலும் சரி, குர்ஆன் ஓதினாலும் சரி, அல்லாகிட்டே போனாலும் சரி அதுவும் ஹராம்தான். பிரச்சினையைத் தீர்க்க வழி கேட்டு அல்லாகிட்டே போறியா? குர்ஆன்லெ தேடுறாயா அதுக்கு ஒன்னும் சொல்லமாட்டேன், பாராட்டுகிறேன்” என்றார்கள்.

 4. 30/10/2010 இல் 22:51

  ஹமீது ஜெஹபர் நானா!

  ஊர்லேந்து எப்ப வந்திங்க. இன்னும் கொஞ்சம் விள்க்கமாக சொல்லுங்களேன்.

  ஆவலுடன் உங்கள் அன்பு தம்பி,
  ஒ.நூருல் அமீன்

 5. மஜீத் said,

  31/10/2010 இல் 15:31

  தாஜண்ணே! எல்லாம் போகுது விடுங்க, ஒரு பெரிய தகவல் பிழை வச்சுட்டீங்க, ஹாஜா அலி பற்றிய குறிப்பில். அவரே ‘ராவுத்தன்’ என்பதில் ரொம்பத்தீவிரமென சொல்லியிருக்கிறீர்கள். அவர் படித்த கல்லூரியின் பெயரிலுள்ள ‘ராவுத்தர்’ ஏன் “வாப்பா” ஆகிவிட்டார்?

  அவ‌ர் கண்டிருந்தால் ‘பொள‌ந்து க‌ட்டியிருப்பார்’. ம‌துரைப் பக்க‌ம் உத்த‌ம‌பாளைய‌த்தில் “ஹாஜி க‌ருத்த‌ ராவுத்த‌ர் கல்லூரி” உள்ள‌து. அதைத்தானே சொல்கிறீர்கள்? சரியென்றால் அதன் வெப்ஸைட்: http://www.howdia.org


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s