நாளைய தமிழகம் – ஆக்டோபஸ் (1982)

இணையம், டி.வி சேனல்களென்று எதை நோக்கினாலும் ஆரூட அரசன் ஆக்டோபஸ் ‘பால்’ பற்றிதான் பேச்சு. ‘ஆரூடம் சொன்னாயே… ஆருயிர் நீத்தாயே!’ என்று அழுகிறது தினமலர். தன் வாழ்வை கணிக்கமுடியாத ‘பால்’-ன் ஆத்மா சாந்தியடையட்டும். இன்னாலில்லாஹி…! கால்பந்து ரசிகர்களின் சோகத்தை விடுங்கள், கவிதை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்த நமது ‘சீர்காழி ஆக்டோபஸ்’ தாஜ் ,எழுதிய ஒன்றை பதிவிடுகிறேன். 1982-ஆம் வருடம் தனது ‘தமிழ்ப்பூக்கள்’ இதழில் – சவுதியில் – எழுதியிருக்கிறார், ‘மணிமுடி’ என்ற புனைபெயரில். அப்போதெல்லாம் எவருக்கும் புரிகிறமாதிரிதான் எழுதியிருக்கிறார் மனுசன். அதைவிட ஆச்சரியம் இவரது அன்றைய கனவு இன்றும் , என்றும் பொருந்தக்கூடியதாக இருப்பது. வாழ்க ஆக்டோபஸ் கனவுகள்!

***

நாளைய தமிழகம்

– மணிமுடி (தாஜ்)

என் கனவுகள் தூய்மையானது.
ஏன்…
சத்தியமானதும் கூட.

என் தாய்நாடு
நாளை எப்படியெல்லாம்…
இருக்கவேண்டுமென நினைக்க…
கனவுகள் காண
இன்றைக்கு எனக்கு பேராவல்.

நான் மந்திரம் தெரிந்தவனாக இருந்திருந்தால்…
இப்படிக் கனவுகளுடன் கட்டுரை
எழுதிக்கொண்டு இருக்கமாட்டேன்.

நான்….
சாதாரண மனிதன்.
இப்படித்தான் எழுதி… எழுதி…
என் சகமனிதர்களுக்கும்
கனவுகளை பகிர்ந்தளித்து கிரியையூட்டி
அவர்களோடான கூட்டு முயற்சிகளால்
நாளைய ‘அந்த’ நாட்டை
அலங்கரித்துப் பார்க்க முயலவேண்டும்.

என் நாட்டிற்கு…
இன்றைக்கு என்ன நேர்ந்துவிட்டது?
நான் ஏன்
நாளைய ‘அந்த’ நாட்டை
அலங்கரிக்க கனவு காணுகின்றேன்?
இன்றைக்கு ஒன்றும் நடக்கவில்லை…
அதனால்தான்.

பிறந்த பூமியை பறிகொடுத்துவிட்டு,
கண்ட நாடுகளிலெல்லாம் தஞ்சமென அடங்கி
சொந்த மண்ணைத் தேடும் பாலஸ்தீனர்களை விட
நாம் கொஞ்சம் தேவலாம்தான்.

குந்த நிலமிருக்கிறது.
பிரச்சனைகளைச் சொல்ல வழியிருக்கிறது.
மற்றபடி
பாலாறும் – தேனாறும்
நேற்றைய புலம்பலாக மட்டுமே இருக்கிறது.

இன்றைக்கு….
என் நாட்டில் சுகவாசம் செய்யும்
அரசியல் மரங்கொத்திகள்
நிறைய இருக்கின்றார்கள்.
ஆனால்…
வேருக்கு நீர்விடத்தான்
எண்ணிவிடும் அளவிலும் ஆட்களில்லை.

மக்களோ….
பதப்பட்டுப்போய் விட்டார்கள்.
பதவியில் உட்காருபவனையெல்லாம்
பரமன் என்று நினைக்க பக்குவப்பட்டுவிட்டார்கள்.

அவர்களை நிமிர்க்க வேண்டியது
என் புத்தியின் ,
பொறிகொண்ட எல்லோருடைய புத்தியின்
கட்டாயம்.
தவிர,
காய்கள் நாளடைவில் பழுத்துவிடும் என்பது
இயற்கையின் விதி.
என் ஆசைக்கு ஆறுதல் தரும் விதி.

என் தாய்த் தமிழகத்தில்
நாளைக்கு பொன்னும் மணியும்
காய்த்துத் தொங்கவேண்டும் என்கிற
பேராசை இல்லை எனக்கு.
ஆனால்…
பொன்னும் மணியும் கொண்டுவந்து குவிக்கும்
தொழிற்சாலைகள் சங்கொலிக்கவேண்டும்.

விண்முட்டக் கொடி போட்டு
இறுமாந்திருக்க அல்ல இந்த ஆசை.
நேச நாட்டுக்காரனிடம் நேர்பார்த்து பேச
உயரம் வேண்டுமே என்பதினாலான ஆசை.

இன்றைய அரசியல்வாதிகளைப் பற்றி
எனக்கு கவலை இல்லை.
ஆனால்….
நாளைக்கு எவனேனும் அவன் சந்ததியென
சொல்லிக்கொள்ள வெட்கிக் கூசும் நிலைவேண்டும்.

அன்றைக்கு…
என் மக்களை என் மக்களே ஆளவேண்டும்.
என் மொழி, எனக்கு தேசியமொழியாக ஆகவேண்டும்.

என்னை ஆள்கிறவன்
என்னைவிட சிறுவனாக இருக்கலாம், அனுமதிப்பேன்
ஆனால்…
உலகில் செங்கோல் பிடிக்கும் எவனைவிடவும்
அவன் புத்திசாலியாக இருக்கவேண்டும்.

நாளை என் நாட்டில்…
குறைவாய் படித்தவன் இவன்தானென
எவனொருவனைக் காணவும்
மோப்பநாய் கொண்டு அலையவேண்டும்.

தமிழ், கம்ப்யூட்டரில்
நடனம்புரிய வேண்டும்.
மறுமலர்ச்சியின் சாட்சிகளாக…
விஞ்ஞானத்தின் கூறுகள்
வீதிகளில் விஞ்சிக் கிடக்கவேண்டும்.

வருங்கால சந்ததியர்கள் படிக்கும் சரித்திரத்தில்
இமயத்தில் கொடிபோட்ட தமிழனுடன்
கிரகங்களில் குடியேறிய தமிழனின்
அறிவும் தீரமும் சேரவேண்டும்.

லஞ்சத்திற்கு…
அகராதியில் அர்த்தம் தேடவேண்டும்.
தீண்டாமை…
புரியா வார்த்தையாக வேண்டும். 

நாளைய தமிழகம்…
இன்றைய தமிழகத்தை
கெட்டகனவாக மறக்கவேண்டும்.

***

(மார்ச்-1982 / தமிழ்ப் பூக்கள்)

***

நன்றி: தாஜ் / தமிழ்ப் பூக்கள் 😉

E-Mail : satajdeen@gmail.com

4 பின்னூட்டங்கள்

 1. மஜீத் said,

  27/10/2010 இல் 16:34

  //அவர்களை நிமிர்க்க வேண்டியது
  என் புத்தியின் ,
  பொறிகொண்ட எல்லோருடைய புத்தியின்
  கட்டாயம்.
  தவிர,
  காய்கள் நாளடைவில் பழுத்துவிடும் என்பது
  இயற்கையின் விதி.
  என் ஆசைக்கு ஆறுதல் தரும் விதி//

  ஆம், தாஜ் போன்ற காய்கள் பழுத்துவிடும்.
  அவர் புத்தியின் பொறியும் பழுத்து, எல்லோருடைய புத்திமாதிரி ஆகிவிடும்.

  பாரதிதான் நினைவில் வருகிறான்: நெஞ்சு பொறுக்குதில்லையே!

 2. 27/10/2010 இல் 20:44

  தாஜின் சின்ன சின்ன ஆசைகள் சிறகடிப்பதோடு நின்று விடாமல் ராஜாளி சிறகுகள் கொண்டு வானில் பறக்கட்டும். ஜெய்ஹிந்த்!
  அபுல்கலாமுக்கு கனவு காண கற்றுத் த்ந்த தாஜுக்கு ஜிந்தாபாத்!.

 3. 27/10/2010 இல் 20:59

  ஆபிதீன்!
  தாஜ் இவ்வளவு அலஹா இருப்பாஹன்னு கனவுலேயும் நெனக்கலெ. ஆமா தூரத்திலே எதயோ பாக்குறாஹலே யாரு சீமந்த கன்னியையா?

  ஒருத்தர் கனவுக்கு பதில் எழுதுறார், இவர் பதிலுக்கு கனவு காண்றார். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஒத்த பைசா செலவில்லாம நடப்பது இது ஒன்னுத்தானே காணட்டும் காணட்டும்! ஆபிதீன் காணமலிருந்தா சரி.

  தாஜு, மனசெ தளரவுட்டுடாதீங்க!

 4. தாஜ் said,

  28/10/2010 இல் 16:59

  நாளைய தமிழகம்…
  என்னை ஒப்புக்கொண்ட
  உள்ளங்களுக்கு நன்றி!
  – தாஜ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s