பச்சென்று முதல் முத்தம் – ஏ.ஹெச். ஹத்தீப்

“மிஸ் வித்யா, நீங்கள் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடிக்க முடியுமா?”என்று பிரபல யுனிவர்ஸல் மூவீஸிலிருந்து தொலைபேசியில் கேட்டபோதுதான், வித்யாவுக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவளை வைத்துப் பல வெற்றிப் படங்களைத் தயாரித்த முன்னணி நிறுவனம் அது. அவளால் பல கோடிகளைச் சம்பாதித்த கம்பெனி. தமிழ்த்திரைப்பட உலகத்தில் தானொரு முடி சூடாப்பேரரசியாக உலா வந்த காலம் மலையேறிவிட்டது என்று இப்போது அவர்கள் நாசூக்காக உணர்த்திய விதம் அபாரம். இனி அந்தக்கனவு உலகத்துக்கு அவளொரு கழிவுப்பொருள் என்று பளிச்சென்று உறைத்தது.
கண்மூடித் திறப்பதற்குள் பத்தாண்டுகாலம் பறந்தோடிவிட்டன. கோடி கோடியாகப் பணம். குவியல் குவியலாகப் புகழ். மாநில அரசிலிருந்து மத்திய அரசுவரை போட்டிப் போட்டுக்கொண்டு அவளுக்கு விருதுகளையும் பரிகளையும் வாரி வாரி வழங்கிக் கௌரவித்த பொற்காலம் கைக்கெட்டாத தூரத்துக்குப் போய்விட்டது. சினிமா உலகத்தின் உச்சாணிக்கொம்பில் வீற்றிருந்தபோது வித்யா காலத்தின் கழுத்தைப் பிடித்துத் தள்ளிக்கொண்டிருந்தாள். இப்போது காலம் கைவரிசை காட்டுகிற சமயம். அவளை எட்டி உதைத்துவிட்டது.
இதுதான் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டிய உலகத்தின் நித்தியச் சுழற்சி.
என்றாலும் ஒரு நப்பாசை. “ஹீரோயினாக யார் நடிக்கிறாங்க?”என்று கேட்டாள்.
மறுமுனை: “அதுக்கெல்லாம் மும்பையிலிருந்து ஒரு புதுமுகம். உங்க முடிவைச் சொல்லுங்க?”
“முடியாது”என்று வெடுக்கென்று கூறி ரிஸீவரைக் கோபத்துடன் வைத்த வித்யா, புத்தக மேசைக்கு முன்னால் நின்று அன்றைய செய்தித்தாள்களை நோட்டமிட்டாள். அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்திகளோ உற்சாகத்தில் மிதக்க வைக்கிற சங்கதிகளோ எதுவும் எந்தச் செய்தித்தாளிலும் இடம் பெறவில்லை. ஒரு காலத்தில் அட்டைப்படங்களையும் முக்கியப் பக்கங்களையும் வியாபித்துக்கொண்டிருந்த அவளது உருவம் இப்போது எங்கும் காணோம். எதிலும் காணோம்.
“என்னம்மா சொல்றாங்க?”என்று கேட்டுக்கொண்டே மாடிப்படி இறங்கி வந்தாள் அம்மா.
ஒரு நெடிய பெருமூச்செறிந்தாள் வித்யா. “ஒரு குணச்சித்திரம் வேடம் இருக்குதாம். செய்யுறியான்னு கேட்கிறாங்க.”
“நீ என்ன சொன்னே?”
விடையளிக்காமல் ஆளுயர நிலைக்கண்ணாடிமுன் நின்றாள் வித்யா. இமைகள் வீங்கிச் சுருங்கியிருந்தன. கழுத்தில் கொழகொழவென்று ஊளைச்சதை. உடல் ஒரு சுற்றுப் பெருத்திருந்தது.
அம்மா: “கேக்கறேன்ல?”
கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்திலிருந்து பார்வையைப் பெயர்க்காமலேயே, “முடியாதுன்னு சொல்லிட்டேன்” என்றாள் வித்யா.
அம்மாவின் முகத்தில் ஒரு நிச்சலனமான புன்னகை. “வித்யா! உனது பத்து வருஷத் திரையுலகப் பிரவேசத்தை நாளைக்கு ஜாம் ஜாம்னு கொண்டாடப்போறேன். உனக்கும்கூட ஒரு சந்தோஷமான செய்தி உண்டு. ஐயாம் கோயிங் டு அனௌண்ஸ் இட் பை டுமார்ரோ”என்று பூடகமாகக் கூறினாள் அம்மா.
“இஸிட்?” என்று கேலியாகக் கேட்டபோது அந்த முதல் முத்தக் காட்சி நினைவில் நிழலாடிற்று.
பச்சென்று முதல் முத்தம்.
உணர்வுக் கொந்தளிப்பால் உதடுகளில் மிக மெல்லிய மைக்ரோ துடிப்பு. நொடிப்பொழுதில் மேனியெங்கும் பரவிய மின்சாரம், அதற்குமுன் எப்போதுமே கிடைத்திராத புதிய கிளுகிளுப்பை வழங்குகிறது. நேற்றுவரை இத்தகைய விரகதாபத்துக்கு வித்யா அந்நியவள். அம்மா ஒரு லட்சத்தடவை இப்படி முத்தமிட்டிருப்பாள். சென்ற இரண்டாண்டுகளுக்குமுன் அவள் பூப்பெய்தியபோது அண்ணன்கூட முத்தமிட்டான். அதே சடங்கு நாளன்று ஆணென்றும் பெண்ணென்றும் நூற்றுக்கணக்கான உறவினர்கள் முத்தம் மழை பொழிந்தார்கள். எதுவுமே அவளை எவ்விதச் சலனத்துக்கும் ஆளாக்கியதில்லை. அதெல்லாம் உள்ளத்தைத் தொடாத ஒருவிதச் சம்பிரதாயம். உடலின் முதல் லேயர் தோளோடு விடை பெற்றுக்கொள்கிற சமாச்சாரங்கள்.
இந்த முத்தம் வித்தியாசமானது. நிச்சயமாக முற்றிலும் பரிச்சயமில்லாதது. சுனாமி மாதிரிப் பிரளயத்தில் ஆளை மூழ்கித் திணறடித்து, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் விடுவித்து, அப்புறம் முன்பின் அறிமுகமற்ற அபூர்வ இனிமையை மூட்டை மூட்டையாக நாடி நரம்புகளில் பரப்புகிற முதல் முத்தம். இது செயற்கையானதோ பலவந்தமானதோ இல்லை. முதல் முதலாக இத்தனை சிலிர்ப்பை உள்ளமெங்கும் வாரி இறைத்த இனிய முத்தம்.
“கட்!”என்று கத்துகிறார் இயக்குனர் செந்தமிழ்ச்செல்வன்.
வலது கையால் இடுப்பை வளைத்து, இடக்கரம் கழுத்தை மென்மையாக இறுக்க, மீசைமுனைகள் மூக்கில் குத்தினாற்போல் கதாநாயகன் பதித்த அந்த மந்திர முத்தம் ஒரு நடிப்பா? நடிப்பென்றால் விழிகள் ஏன் சொக்குகின்றன? அது செயற்கை என்றால் இதழ்கள் ஏன் தடித்துத் துடிக்க வேண்டும்? அது ஒரு மாயை என்றால் உள்ளத்துள் ஏன் மத்தாப்பு சிதற வேண்டும்?
முத்தம் பொய்யென்று மனம் பிடிவாதமாக ஒத்துக்கொள்ள மறுக்கிறது.
சற்றுத்தள்ளி ராட்சதக்குடை நிழலில், ஸ்டீல் நாற்காலியில் உட்கார்ந்திருந்த அம்மாவைத் திரும்பிப் பார்க்கிறாள் வித்யா. ஒரு முத்தக் காட்சியில் தனது மகள் சிறப்பாக நடிக்கும் பெருமிதம் தாயின் அகன்ற முகத்தில் சற்றும் லஜ்ஜையின்றிப் பிரகாசிக்கிறது. என்றாலும் மகள் மனத்தளவிலே அழுகிறாளோ என்ற பதைபதைப்பில் கையமர்த்திச் சமாதானம் கூறுகிறாள் அன்னை. .
யாருடைய அதிருஷ்டமோ; சென்ற மாதம் வித்யாவின் கல்லூரி ஆண்டுவிழாவின்போது, சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருந்த இளம் டைரக்டர் செந்தமிழ்ச்செல்வன், வித்யாவைப் பார்த்துவிட்டார். தனது அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்காக வித்யாவை ஒப்பந்தம் செய்த அடுத்த கணத்திலிருந்து அம்மாவின் நடையில் புதிய கம்பீரம் (நெஞ்சைச் சற்றே நிமிர்த்தி, தளராமல் அழுத்தமாக அடியெடுத்து வைக்கிறாள்). உடையில் புதிய டாம்பீகம் (மகளுடன் படப்பிடிப்புக்குச் சென்றாலும் வெளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் விலையுயர்ந்த சாமுத்ரிகாப்பட்டில் ஜொலிக்கிறாள்). பேச்சில் புதிய பாணி ( தொனியை உயர்த்திக் கொண்டாலும் அளவுக்கதிகமாக ஒரு வார்த்தைகூடப் பேசுவதில்லை). சிரிப்பில் புதிய நளினம் (கண்கள் கிறங்க, உதட்டைச் சுழித்து அவள் புன்னகைக்கும் அழகே தனி – அதுவும் தயாரிப்பாளர்களிடமும் இயக்குனர்களிடமும் ). எல்லாமே புதிய பரிணாமம். ஒரு நடிகையின் அன்னை என்பதற்கான அத்தனை லட்சணமும் அவளை வந்தடைந்துவிட்டன. பெற்றெடுத்த மகளைக்கூட பதினாறு வருடங்களுக்குப்பின் கொஞ்சமும் விகற்பமின்றிப் புதுவிதமாக உபசரித்தாள் தாய்.
அஸிஸ்டெண்ட் டைரக்டர் நெற்றியைச் சுருக்கிச் செந்தமிழ்ச்செல்வனை உற்று நோக்குகிறான். அவனது விசனமெல்லாம் புதிய ஸ்க்ரிப்டுடன் அடையாறு பார்க்கில் காத்திருக்கும் பிரபல எழுத்தாளர் ஒருவரோடு சேர்ந்துகொண்டு கதை கேட்கும் சாக்கில் வெளிநாட்டு மதுவில் நீந்த வேண்டும். அதுதான் இன்றைக்கு முக்கியமான ப்ரோகிராம். இப்போதே நாழியாகிவிட்டது. ‘ஷாட்’ முழுமையடையும்வரை கற்சிலையாக நிற்க வேண்டிய லைட் பாய்களில் சிலர் அலுப்புடன் நெளிந்தார்கள். ‘பேக்கப்’ சொல்லும்வரை அவர்களுக்கு விடுதலை கிடையாது.
சுள்ளெனறு பிடரியில் விழுந்த காலை வெயிலை அலட்சியப்படுத்திய ஒளிப்பதிவாளர், “”உங்களுக்குத் திருப்தி இல்லைன்னா, ஒரு கிரேன் ஷாட் வைக்கலாமா, சார்?” என்று இயக்குனரிடம் கேட்கிறான், ஸூமைச் சரி செய்தவாறே.
பச்சை பசேலென்ற பச்சைப்போர்வையால் போர்த்தப்பட்ட ஒரு வயற்வெளி அது. இளஞ்சிவப்பு நாடா மாதிரி ஓர் ஒற்றையடிப்பாதை. அதையொட்டிய புளிய மரத்தடி நிழலில் வித்யா. கத்திரிப்பூப் பாவாடையும் கருமஞ்சள் ரவிக்கையும் தாவணி தரிக்காத அவளுக்குக் கனக்கச்சிதம். சினிமாவுக்கென்று அவளது அங்கப்பிரதேசங்களில் ஆங்காங்கே செய்யப்பட்டிருந்த கூடுதல் கவர்ச்சியைக் காரிலிருந்து இறங்கும்போதே பார்வையால் மேய்ந்த இளம் கதாநாயகன், வீட்டிலிருந்து கொண்டுவந்த பழரசத்தைப் பிரத்தியேகக் கண்ணாடித்தம்ளரில் சுவைத்துக்கொண்டே குறும்பாகச் சிரிக்கிறான்.
தயாரிப்பாளர் தர்மலிங்கம்தான் துணிந்து கேட்கிறார்: “ஏன் டைரக்டர் சார், ஷாட் ஓகேதானே?”-கதையம்சம் பிடித்துப் போயிருந்ததால் அவர் மீட்டர் வட்டிக்குப் பணம் கடன் வாங்கியிருந்தார்.
செந்தமிழ்ச்செல்வன் உடனடியாகப் பதிலளித்துவிடவில்லை. சிகரெட் பாக்கெட்டுடன் பக்கவாட்டில் வந்து நின்ற உதவியாளனைக்கூடக் கவனிக்காமல், சுட்டுவிரலால் நெற்றியை வருடிக்கொண்டே இருக்கிறான். முகத்தில் அதிருப்தியின் ரேகை.
ஏனோ வித்யாவுக்கு இதயம் படபடக்கிறது.
ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தாற்போல் இயக்குனர் இமை திறக்கிறான். “கதாநாயகனின் பிடரியிலிருந்து ஷாட்டை க்ளோஸ் பண்ணலாமென்றிருந்தேன். இப்போ அப்படி வேண்டாம். அந்தப்பெண்ணின் உதட்டிலேயே க்ளோஸ் பண்ணுவோம். கமான், கெட் ரெடி! ஒன் மோர் ஷாட்!”
வித்யாவின் உள்ளம் சிறகடித்துப் பறக்க, இன்னொரு புது முத்தம் கிடைக்கப் போகிறது.
‘பட்டக் காலிலே படும்’ என்பார்கள். வித்யாவைப் பொறுத்தவரை அது மெத்தப்பொருத்தம்.
மறுநாள். படுக்கையறைக் காட்சி.
பார்வையாளர்கள் யாரும் செட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.என்றாலும் தொழில் நுட்பக் கலைஞர்களும் அவர்களது உதவியாளர்களும் அன்றைக்கு வழக்கத்தைவிட அதிகமாகவே வந்திருப்பதாகத் தோன்றுகிறது வித்யாவுக்கு. ஜோடிக்கப்பட்ட படுக்கைக்கு வெகு அருகில் கேமரா நிற்கிறது. இயக்குநரின் கண்களில் ஏகப்பட்ட சுறுசுறுப்பு. “ரெடியா?”
“ரெடி”என்கிறார் கேமராக்குள் முகத்தைப் புதைத்திருந்த ஒளிப்பதிவாளர்.
வித்யாமீது போர்த்தப்பட்டிருந்த பட்டுத்துணியை உதவியாளன் ஒருவன் நிர்த்தாட்சண்யமாக விருட்டென்று உருவ, மெகாவாட் வெளிச்சமழையில் கட்டிலின் நடுவே அரைகுறை உடையுடன்(அதுவும் சென்சாருக்கு பயந்து) வித்யா. வெட்கமும் சன்னமான வேதனையும் அவளைப் பிடுங்கித் தின்கின்றன.
மார்பு நிறையப் பொசுபொசுவென்ற ரோமக்கற்றையுடன் அவள்மீது முழுமையாகப் படர்கிறான் அதே கதாநாயகன். இதை வெறும் நடிப்பென்று அவன் நினைத்திருந்தால் முகத்தை மட்டும் வித்யாவின் கன்னத்தருகே கொண்டு வந்திருக்கலாம். டைரக்டரும் ‘பேஃஸ் மட்டும் க்ளோஸப்’ என்றுதான் கூறியிருந்தார். ஆனால் கதாநாயகன் வேண்டுமென்றே அவளை முழுமையாக ஆக்ரமித்தான். அவளது மார்பகங்கள் அவனது நெஞ்சுக்குள் புதைகின்றன. நெற்றியில் வியர்வைத்துளிகள் அரும்புகின்றன.செவ்வரியோடிய விழிகளில் போதையின் கிறக்கம்.வித்யாவின் மெல்லிய மேனி அழுந்தினாலும் வலிக்கவில்லை. உதடுகள் சன்னமாகத் துடிக்கின்றன. இருவரது புஜங்களுக்கிடையே இருந்த இடைவெளி அகன்றுவிட, அவனது மூச்சுக்காற்று அவளது இதழைச் சுள்ளெனச் சுடுகிறது. உடம்பெல்லாம் தகிக்க, அவள் பட்டு மஞ்சத்தில் நெளிகிறாள்.
இன்னொரு தரம் இதே காட்சியை எடுக்கமாட்டாரா என்று வித்யா ஏகத்துக்கும் ஏங்கி என்ன பிரயோஜனம்?
“ஷாட் ஓகே!” என்கிறார் டைரக்டர்.
படுக்கையைவிட்டு எழ மனமின்றி நித்யா நீண்ட நேரம் அப்படியே கிடக்கிறாள்.
இரவு, தனிமை, காமவேட்கை மைனஸ் காதலன்: கொடிய நரகம்.
வித்யாவுக்கு நினைவறிந்த நாட்களாக இப்படியோர் அவஸ்தையை அனுபவித்ததில்லை. மெத்தென்ற படுக்கை, முட்களாய் உறுத்த அவள் வெகுநேரம்வரை புரண்டு புரண்டுப் படுக்கிறாள். மிதமான ஏஸிக்காற்று அறையெங்கும் வியாபித்திருந்தாலும் எரிமலைமீது எறியப்பட்ட மாதிரி உடல் தகிக்கிறது. உறக்கம் விழிகளைத் தழுவ வெகுவாக முரண்டு பிடிக்கிறது.
எங்கு திரும்பினும் மென்மையான முத்தம். இறுக்கமான அணைப்பு. உஷ்ணமூட்டும் கிளுகிளுப்பு…
சென்ற வாரம் கல்லூரிச் சினேகிதி சுகுணாவைச் சந்தித்தாள். அவளது விழிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்து வித்யா கேட்டாள்: “ராத்திரியெல்லாம் வீட்டில் சண்டையா?”
“யார் சொன்னது?”
“பின்னே ஏன் கண்களெல்லாம் இப்படி சிவந்து கிடக்குது?”
சுகுணா குறும்பாகச் சிரிக்கிறாள். “இரவு முழுவதும் டேட்டிங்”.
டேட்டிங் என்றால் என்னவென்று தெரியாத பாப்பா அல்ல வித்யா. இருந்தும், “டேட்டிங் என்றால்?” என்று வெறுப்பில் புருவத்தை நெரிக்கிறாள்.
“டேட்டிங் என்றால் டேட்டிங்தான்”என்று இமைகளைச் சிமிட்டுகிறாள் சுகுணா.
எவ்வளவு மோசமானதொரு விஷயத்தைப் பத்மபூஷன் விருது பெற்றாற்போல் இவ்வளவு அப்பட்டமாகத் தம்பட்டம் அடிக்கிறாள் இவள்?
இன்றைக்கு ஏறத்தாழ சுகுணாவின் நிலையில்தான் வித்யா. தனது தலையை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்துக் கொண்டிருந்த அம்மாவின் நினைவை ஒதுப்புறமாக ஒதுக்கித் தள்ளுகிறாள். அவளுக்கு ஆசை ஆசையாக ஆப்பிள் வாங்கி வந்த அண்ணனின் உருவத்தை வேண்டுமென்றே சிதைக்கிறாள். வாசலில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு “காலேஜ் போகலாமா?” என்று விளித்த அடுத்த வீட்டு சங்கீதாவின் பிம்பத்தைக் கசக்கி எறிகிறாள்.
அவளது இதயத்தை நிரம்பி வழிந்ததெல்லாம் அந்த இனிய முதல் முத்தம். அந்த இனிய முதல் இறுக்கம்.
காலையில் மாடிப்படி இறங்கி வருகையில், அம்மா எதிர்ப்படுகிறாள், காபிக்கோப்பையுடன்.
“ராத்திரியெல்லாம் தூங்கவில்லையா? அறையில் விடிய விடிய விளக்கு எரிஞ்சுகிட்டிருந்ததே?”
பதிலளிக்கவில்லை. ஆமென்று தலையசைக்கிறாள், காபியை ஒரு மிடறு விழுங்கிக்கொண்டே.
“ஏண்டிச் செல்லமே ஒருமாதிரியாக இருக்கே? தலை கிலை வலிக்கிறதா?”
“ப்ச்.”
“அப்புறம் ஏன் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கே?”
இதுதான் சந்தர்ப்பம். செம வாய்ப்பு. ஒழுக்கமும் நாணமும் மிக்க ஒரு யுவதி, தன்னைப் பெற்றவளிடம் வைக்கக்கூடாத கோரிக்கை. என்ன செய்வது? வேறு வழியில்லை. சொல்கிறாள்: “எனக்கொரு கல்யாணம் பண்ணி வச்சுடேன்…”
சவுக்கால் சொடுக்கினாற்போல் அம்மா துவண்டு விழப்பார்க்கிறாள். அவளது எண்ணவோட்டத்தை ஓரளவுக்குப் படிக்கத் தெரிந்தவள் வித்யா. எனவே சற்றும் தாமதிக்காமல் அடுத்த அஸ்திரத்தைப் பிரயோகிக்கிறாள்: “…ஒருத்தன் பின்னாடி நானே ஓடிப்போறதுக்கு முன்னாடி! ”
ஓடிப்போய் மேஜைமீது இறைந்து கிடந்த நாளிதழ்கள், பத்திரிகைகள் அத்தனையையும் ஒரே எட்டில் எடுத்து வருகிறாள் அம்மா. எல்லாவற்றையும் வித்யாவின் கைகளில் திணிக்கிறாள். “படித்துப்பார். எல்லா பேப்பர்லேயும் உன்னைப்பத்தித்தான் நியூஸ் வந்திருக்கு. பார்.எல்லாத்தையும் புரட்டிப்பார்.”
சுவாரஸ்யமின்றி அவற்றைப் பிரித்துப் பார்க்கிறாள் வித்யா. உண்மைதான். எல்லாச் செய்தித்தாள்களும் இயல்பான தோற்றத்தைவிட அவளைப் படுகவர்ச்சியாகப் பிரசுரித்திருந்தன. அவளது மெலிதான மார்பகங்கள் பிதுங்கிக்கொண்டு…இடுப்பு மடிப்புக்கள் பளிச்சென்று தெரிய…தொடைகள் விரசமாக…’தரமான இலக்கிய நாளேடு’என்று பீற்றிக்கொள்ளும் ஒரு பிரபல பத்திரிகை, இவ்வாண்டு கனவுக்கன்னி வரிசையில் வித்யாவுக்கு முதலிடம் அளித்திருந்தது.
வித்யா படித்து முடித்ததும் சற்றும் தாமதமின்றி, “இதையெல்லாம் வேஸ்ட் பண்ணிடாதேடி என் செல்லமே!”என்று கெஞ்சுகிறாள் அம்மா. ‘ஆராரோ ஆரிரரோ என்னாத்தா நீதானோ’ என்று தாலாட்டுப் பாடிய அன்னை, பெற்ற மகளின் அந்தரங்க அழகைக் காட்சிப்பொருளாக்க வேண்டி ஒரு பிச்சைக்காரியைப்போல் மன்றாடுகிறாள்.
“ கொஞ்சம் புரிஞ்சுக்கோயேன்ம்மா. ராத்திரியிலே என்னால் தூங்க முடியலேம்மா.”
ஒரு விநாடி வித்யாவை வெறித்துப் பார்க்கிறாள் தாய். மறுகணம் வானமே பொடிப்பொடியாகப் பொடிந்து தலையில் வீழ்ந்தாற்போல், “ டேய், சுகுமாரா! எங்கேடா இருக்கே? இங்கே ஓடி வாடா!”என்று கூப்பாடுப் போட்டவாறே தரையில் தொப்பென்று உட்கார்கிறாள்.
“என்னம்மா? ஏன் இப்படி அலர்றே?”என்று கேட்டபடி எங்கிருந்தோ ஓடி வருகிறான் அண்ணன்.
“அவ என்ன சொல்றான்னு கேளடா.”
“என்ன கவிதா இதெல்லாம்?”-அவனது குரலில் பாசத்திற்குப் பதிலாக கோபம். அன்புக்குப் பதிலாக ஆவேசம்.
வித்யாவிடம் பரிபூரண மௌனம்.
ஏன் யாருமே அவளைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்? வித்யா தாகமென்று முணுமுணுத்தால், ஜாடி நிறையப் பழரசத்துடனும், ‘பசி’என்று வாய் திறந்தால் வகை வகையான உணவுப் பதார்த்தங்களுடனும் ஓடி வரும் அண்ணன்; “தூக்கம்”என்று கண் ஜாடை காட்டினால் மடியில் போட்டுத் தாலாட்டும் அன்னை; அவளது ‘மற்றத்தேவை’களை மட்டும் ஏன் புரிந்துகொள்ள மாட்டேனென்கிறார்கள்?
அவர்களுக்குப் புரியாமலில்லை. வேண்டுமென்றே புரியாத மாதிரி நடிக்கிறார்கள். வித்யாவின் குரலுக்குச் செவி கொடுக்க ஆரம்பித்துவிட்டால் அவர்கள் ஆகாயத்தில் கட்டி வைத்திருக்கும் கற்பனைக்கோட்டை சுக்கல் சுக்கலாக நொறுங்கி விழுந்துவிடும். அதனால் ஒன்றும் அறியாத அப்பாவி மாதிரி நடிக்கிறார்கள்.
முகத்தை விகாரமாக்கிக்கொண்டு, “வாய் திறந்து சொல்லேன்” என்று அண்ணன் கத்துகிறான்.
எல்லாம் அவனுக்கும் தெரியும். இருந்தும் கேட்கிறான். சொல்லிவிட வேண்டியதுதான். “நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.”
“அவ நம்மையெல்லாம் ஏமாற்றிவிட்டு யாருடனோ ஓடிப்போகப் போறாளாம்.”-அன்னை மடை திறக்கிறாள்.
“ எப்ப உனக்கு என்ன பண்ணனும்னு எங்களுக்குத் தெரியும். அதுவரை மூச்சுவிடக்கூடாது. “இனிமேல் நீ எங்கே போறதாயிருந்தாலும், யாருடன் பேசுறதாயிருந்தாலும் எங்க அனுமதி இல்லாமல் செய்யக்கூடாது. புரிஞ்சுதா?”என்று ஆவேசமாகச் சத்தமிட்டு உச்சி மயிரைப் பிடித்து உலுக்குகிறான்.
‘அறம் செய விரும்பு’ என்று ஆத்திச்சூடி கற்பித்த உடன்பிறந்த சகோதரனா இவன்?
வெடுக்கென்று ஏறிட்டுப் பார்க்கிறாள் வித்யா.
சாவு வீட்டில் தலையில் அறைந்துகொள்கிறாற்போல் அடித்துக்கொண்டு ஓவென்று ஒப்பாரி வைத்த அம்மா, என்ன நினைத்துக்கொண்டாளோ திடீரென்று எழுந்து ஓடிப்போய் டிராயரைத் திறந்து எதையோ எடுத்து வந்து வித்யாவின் முகத்துக்கெதிரே நீட்டுகிறாள். “என்ன இது?”
ஒரு சிறிய மூட்டைப்பூச்சி மருந்து பாட்டில்.
“குடிச்சுட்டு ஒரேயடியாச் செத்துடுவோம்.”
அம்மா சொன்னால் சாதிக்காமல் விடமாட்டாள். அவளது பிடிவாதமும் ஆக்ரோஷமும் வித்யாவை நிலை குலைய வைக்கின்றன.
வண்ண வண்ணப் பூச்சரங்களும் மாவிலை தோரணங்களும் சரவிளக்குகளுமாக வீடே விழாக்கோலம் பூண்டு கிடந்தது. வெள்ளைச்சீருடையணிந்த வேலையாட்கள் கைகளில் குளிர்பானத்தட்டை ஏந்தியபடி குறுக்கும் நெடுக்குமாக அலைய, திரைப்படப் பிரமுகர்கள், பிரபல தொழிலதிபர்கள், நண்பர்கள்,உறவினர்கள் என்று ஏக அமர்க்களம்.
பரந்து விரிந்த ஹாலின் நட்டநடுவே போடப்பட்டு மலர்க்கொத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட மேஜை விளிம்பில் வித்யா. பக்கத்தில் மைக்கைப் பிடித்தபடி அம்மா: “… எனது செல்ல மகள் வித்யா திரை உலகத்துள் நுழைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகிவிட்டன. அவள் இன்றும் முடிசூடா ராணிதான். நேற்றுகூட நலைந்து கம்பெனியிலிருந்த ஒப்பந்தம் செய்ய வந்தார்கள். நான் மறுத்துவிட்டேன்.காரணம், அவளுக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்துவிட்டேன்.”
படபடவென்ற கரவொலி.
அன்னை தொடர்ந்தாள்: “மாப்பிள்ளைகூடப் பார்த்தாகிவிட்டது. பிரபல தொழிலதிபர் சந்தோஷ்தான் அவர்.”
மீண்டும் பலத்த கரகோஷம்.
மைக்கை வித்யாவின் கையில் பிடிவாதமாகத் திணித்தபடி, “ஆமோதித்து நீயும் இரண்டொரு வார்த்தை பேசு”என்று கிசுகிசுத்தாள் தாய்.
“எனக்குக் கல்யாணமே வேண்டாம்.”
அங்கே குழுமியிருந்தவர்களின் உடலியக்கம் சட்டென முடங்கிப்போக, அனைவரது பார்வையும் வித்யாவை மொய்க்க, அம்மா அதிர்ச்சியில் முறைக்க, அண்ணன் ஒரு மூலையிருந்து பாய்ந்தோடி வர-
“ஏன்?”
“ஏன்?”
“ஏன்?”
வித்யா வேதனையுடன் சிரித்தாள். “பத்து வருஷத்துக்குமுன்னால் எனக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட இல்லறம் இப்போது அநாவசியம். உள்ளம், உணர்வுகள்,உடல் மூன்றும் முழு வேகத்துடன் செயற்பட்டபோதுதான் இல்லறம் தேவைப்பட்டது. இப்போது நான் வெறும் மரக்கட்டை. எனக்கு எதுக்குக் கணவன், இல்லறம், வாழ்க்கை? ”என்று கூறிக்கொண்டே மலேரென்று கீழே சரிந்தாள் அவள்.
பத்தாண்டுகளுக்குமுன் வித்யாவை அச்சுறுத்துவதற்குப் பெற்றன்னை பயன்படுத்திய அதே சிறிய மூட்டைப்பூச்சி மருந்து பாட்டில் அவளது வலக்கரத்தில், காலியாக.

**

Published in “Devi” weekly 05.05.2010 issue.

***
நன்றி : ‘தேவி’, ஏ.ஹெச். ஹத்தீப் | E-Mail :  hatheeb@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s