‘வலம்புரி’ விரும்பிய ‘தக்கலை’

விழுதுகளுக்கும் எடுப்போம் விழா – ஞானபாரதி வலம்புரி ஜான்
அகில உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆறாம் மாநாட்டுச்  (1999) சிறப்பு மலரிலிருந்து, நன்றிகளுடன்

***

இவர் (தக்கலை ஹலீமா) கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர். கவிஞராகக் கண்விழித்த இவர் பாடலாசிரியராகவும் பரிணமித்திருக்கிறார். இவரது புதுக்கவிதைகளுக்குக் கோலங்களாக நிலைத்துவிட்ட சில புள்ளிகளை மாத்திரம் உதாரணமாக எடுத்து வைக்கிறேன்.

‘சொத்தென்றும் சொர்ணமென்றும்
நட்டென்றும் நகையென்றும்,
உன் அப்பனை
நிச்சயதார்த்தத்தின் போதே
நிர்வாணமாக்கிவிட்டுக்
கல்யாண தினத்தன்று
அவன் வாங்கி வருவது
காஞ்சிப்பட்டல்ல கண்மணி
உன்
கனவுகளின் பிணம் பொதியும்
கபன் துணி’

‘இந்தத் தேசத்தின்
எல்லைக்கோடுகளைத் தாண்டி
இராணுவ ரகசியங்களைக்
கொண்டு செல்லத்
துட்டுவாங்கிய விரல்களைவிடத்
தொழுநோயாளியின்
தொலைந்துபோன விரல்கள்
மரியாதைக்குரிய மகத்துவ விரல்கள்’

‘கடத்திவரப்பட்ட
வீடியோ கேசட்டுகளில்
போனியம் குழுவினரின்
ரஸ்புடீன் பாடலை
ரசிப்பவனின் குழந்தைகளுக்கே
சரஸ்வதியின் வரங்கள்
சாத்தியமாகின்றன’

‘பிறைமுடியைத் தரித்திருக்கும் சிவபெருமான்
பிட்டுக்கு மண்சுமந்து உழைத்ததுண்டு
கறைபடியா மேரிமகன் ஏசுகூடக்
காலெமெல்லாம் மேய்த்தலையே
தொழிலாய்க் கொண்டார்
மறைவிளக்காய் வந்துதித்த மாநபியும்
மாடாடு பால்கறந்தார்
மன்பதைக்கு ஏவல் செய்தார்
ஆனால் இன்று
அரைகுறை நாம் அவ்வுழைப்பை மறந்துவிட்டோம்
கடவுளென்றும் மதமென்றும் பிரித்துப்பேசி
நம் கலைப்பூமி இந்தியாவைப் பிரிக்கப்பார்க்கும்
அடவுமுறை தெரிந்துகொண்டு புறப்படுவோம்.
அழிந்தாலும் இம்மண்ணில் அழிந்துபோவோம்.’

‘எத்தனைபேர் செத்தார் ஒரு கணக்குமில்லை
எத்தனைநாள் வாழ்ந்தார் அது புரியவில்லை
புத்தனையே கொண்டாடும் பூமி எங்கும்
போதிமரம் பிடிபோட்ட கோடாரிகள்’

‘மதம் வளர்க்கும் இறையில்லம் கட்டுதற்கு
மானுடத்தின் அஸ்திவாரம் பெயர்த்தெடுத்தால்
வரம் கொடுக்கக் கடவுளிங்கே வருகும்போது
வாழ்ந்திருப்பார் யாரிங்கே பிணங்களன்றி’

இந்தக் கவிதைகள் தாங்களாகவே நின்று கொள்ளுகிற திறம் படைத்தவை. ஆகவே இவைகளைப்பற்றி நான் ஒன்றும் எழுதி முட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நமது நாட்டில் கவிதைகளில் எல்லாம் இருக்கும். எழுதியவர் மாத்திரம் இருக்க மாட்டார். அதாவது கவிதை அவரைப் பிழிந்ததாக இருக்காது. கவிஞர் தக்கலை ஹலீமா எழுதிய கவிதைகளில் அவர் இருக்கிறார். அவரது எழுத்துக்களுக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லை என்பதே அவருக்குப் பெருமை. அண்மையில் ‘அவ்வல்’ என்கிற ஒலிப்பேழையை நான்தான் வெளியிட்டேன்.

‘காஸிம்பீ பாய்மொடஞ்சா
கண்டசனம் வாய்பொளக்கும்
வாசமுள்ள தாழம்பாயாம்
வண்ணவண்ண தாழம்பாயாம்
காஸிம்பீ பாய்மொடஞ்சா
கண்டசனம் வாய்பொளக்கும்
ஆயிரம் மணவறையில்
அவமொடஞ்ச பாய்விரியும்
பாய்விரிஞ்ச பறக்கத்திலே
பதினாறும் கூடிவரும்’ ##

என்று ஒரு பாடல். இதைப்பாடுகிற உதடுகளில் ஒருவகை ஈழ மின்னல் ஈரமும், இதயத்தில் ஒரு சுயமான சோகமும் உண்டாகும். சாதாரண முஸ்லிம்களின் வாழ்வுக்கோலங்களைப் படம்பிடிப்பதில் இந்தப்பாடல் பெரு வெற்றி பெற்றிருக்கிறது. இதைப் போலவே ‘ஸபர்’ என்கிற தலைப்பில் வருகிற பாடலில்,

சின்னச்சின்ன பிராயத்தில
சிங்கப்பூரு தேசத்தில
என்னெயிங்க தவிக்கவிட்டு
வியாபாரம் செய்யப்போன
நீங்க வருவீகளாமாட்டீகளா
ரஜூலா கப்பலிலே
தூங்க முடியாம முளிச்சிருக்கேன்
தொழுகப் பாயினிலே
காட்டுவாசா மலப்பள்ளிக்குக்
கால்கடுக்க நடந்ததுவும்
கல்லுருட்டாம் பாறையிலே
கைபிடிக்கக் கேறினதும்
வட்டப்பாற இளப்பாறி
கட்டுச்சோறு உண்டதுவும்
திட்டுத்திட்டா மனசுக்குள்ளே
தீராமப் பதிஞ்சிருக்கு

என்கிற வரிகள் கண்கள் உலர்ந்துபோன காய்களாக இருந்தாலும் உப்பு நீர்ப்பூக்களை உருவாக்கும்..

*

நன்றி : இஸ்லாமிய இலக்கியக் கழகம், தக்கலை ஹலீமா

***

## ‘THE SONG “‘KAASIMBI PAAI…”‘ IS FROM THE AUDIO CASETTE ”AWWAL”‘.IT IS NOT ”MOWWAL”.AWWAL IS AN ARABIC WORD MEANS ”BEGIN OR START OR FIRST”‘.IT IS AN MUSIC ALBUM ABOUT THE CULTURE AND THE LIFE OF MIDDLE CLASS PEOPLE OF SOUTH DISTRICTS.THE “‘PAAI” MENTIONED THE POEM IS THE ONE USED DURING MARRIAGES. – Thakkalai Haleema

5 பின்னூட்டங்கள்

 1. 18/10/2010 இல் 23:02

  “புத்தனையே கொண்டாடும் பூமி எங்கும்
  போதிமரம் பிடிபோட்ட கோடாரிகள்”
  அற்புதமான வரிகள்.
  ஒருபக்கம் ச்கோதரி ஹலிமாவின் எழுத்துகள் ஞான கோடாரிகளாய் வெட்டி சாய்க்கிறது நம் சுயநல விருஷங்களை.
  இன்னொரு பக்கம் தென்றலாய், மயிலிறகாய் நம் காயங்களுக்கு இதமூட்டுகின்றது.

 2. 23/10/2010 இல் 23:08

  சற்றேறக்குறைய முப்பது வருடங்களுகு முன் என் பள்ளி பருவத்தில் மதிநா இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதே இதழில் தக்கலை ஹலிமா என்ற பெயரில் ஒரு கவிதை வந்ததாக நினைவு. அவர்கள் தான் இவர்கள் என நினைத்தேன்.

  தகவலுக்கு நன்றி!

 3. Ahamed Aruf said,

  26/11/2011 இல் 00:24

  ‘அவ்வல்’ – ஒலிப்பேழை எங்கு கிடைக்கின்றது?

 4. 26/11/2011 இல் 00:26

  அவ்வல்’ – ஒலிப்பேழை எங்கு கிடைக்கின்றது?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s