சேர்த்துப் பிரிக்கும் விதி – சேவகன்

‘ஆளூர் ஷா நவாஸ் என்றொரு ஆளுமை!’ என்று சொன்னதற்கு அடிக்கவே வந்து விட்டார் ஒரு அன்பர். ‘ஆளூர் ஷா நவாஸ் என்றோர் ஆளுமை!’ என்றுதான் சொல்ல வேண்டுமாம்.  இந்த பாழாய்ப்போன இலக்கணம்…! ஆனாலும் நம்ம தமிழ நாம அறியனும்னு ஆச வந்திடுச்சி…எனவே, ‘சேவகன்’ என்பவர் எழுதிய தொடரிலிருந்து பதிவிடுகிறேன். சுட்டி அனுப்பிய நண்பர் இப்னு ஹம்துன்தான் சேவகனா என்பதறியேன். இணைய மர்மங்களில் இதுவும் ஒன்றாக இருந்துவிட்டு-ப்-போகட்டும்!

(முந்தைய பகுதிகள் இங்கே :  பகுதி ஒன்று | பகுதி இரண்டு ). இது பகுதி மூன்று. நன்றி : பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

***

மீன்கண்ணும் மீன் கண்ணும் வேறு வேறு!

சேவகன்

சேர்த்தும் பிரித்தும் எழுதுவதில் ஏற்படுகிற பிழைகள் சிலவற்றைக் கண்டோம்.

வாசகர்களும் சிலவற்றைக் குறிப்பிட்டிருந்தார்கள்:

காட்டாக,

ஒரு பெண் குழந்தை பெற்றாள் – ஒரு பெண்குழந்தை பெற்றாள்

அன்றுமுதல் பட்டியல் தயாரித்தோம்

அன்று முதல் பட்டியல் தயாரித்தோம்

சேர்த்தும் பிரித்தும் எழுதுவதில் இருக்கும் பொதுவான விதிகள் சிலவற்றைக் காண்போம்

1). இரண்டு சொற்கள் சேர்ந்து வரும்போது, முதற் சொல்லின் இறுதியில் ஒற்றெழுத்து (புள்ளி வைத்த எழுத்து) இருந்தால், அந்த இரு சொற்களும் இடம்விட்டு எழுதப்படுகின்றன.

காட்டாக, படைத் தலைவர், நச்சுப் புகை, பலாக் கொட்டை

2). முக்காலமும் பொருந்துவதாக வரும் வினைத் தொகைகளைப் பிரிக்கக்கூடாது

புனைபெயர், சுடுநீர்

3). இரு சொற்களுக்கிடையே குணம், நிறம், போன்ற பண்புகளைக் குறிக்கும் சொல் மறைந்திருப்பது (பண்புத் தொகை) அப்படி உள்ள சொற்களைப் பிரிக்கக்கூடாது.

கரு மேகம் என்று எழுதாமல் கருமேகம் என்றே எழுத வேண்டும்.

அவ்வாறே, செந்தாமரையும் கருங்கூந்தலும்.

4). பொதுப் பெயரும் சிறப்புப் பெயரும் சேர்வதைப் பிரிக்கக்கூடாது. (இருபெயரொட்டுப் பண்புத் தொகை). மரம் என்பது பொதுப் பெயர் என்றால், தென்னை என்பது சிறப்புப் பெயர். எனவே தென்னை மரம் என்று வெட்டி எழுதக்கூடாது. தென்னைமரம் என்றே எழுத வேண்டும்.

வெற்றிலைக் கொடி என்பதைப் பிரித்து எழுதலாம். காரணம், முதற்சொல்லின் இறுதியில் ஒற்றெழுத்து(புள்ளிஎழுத்து) வந்திருப்பதால்.)

5). இரு சொற்களுக்கிடையே ‘உம்’ என்பது மறைந்து நிற்கையில், அதைப் பிரித்து எழுதக்கூடாது.

செடி(யும்)கொடி(யும்) என்பதை செடி (இடைவெளி) கொடி என்று எழுதாமல் செடிகொடி என்றே எழுத வேண்டும். கைகாலை பிரித்துவிடக் கூடாது. கைகால் தான். கை கால் அல்ல.

6) ‘போன்ற’ என்னும் சொல் மறைந்துவருவதான உவமைத் தொகைகளைப் பிரிக்கக் கூடாது.

மீன்கண் என்று எழுதினால் மீனைப் போன்ற கண் என்ற பொருள் தரும். மீன் கண் என்று எழுதினால் மீனின் கண் என்ற பொருளைத் தரும். (ஆனால், கமலக் கண் என்று (உவமையாக) எழுதலாம்.. ஏனெனில், முதற்சொல்லின் இறுதியில் புள்ளி வைத்த எழுத்து வருவதால்)

7). ஊரிலிருந்து திரும்பினார் என்பதும் ஊரில் இருந்து திரும்பினார் என்பதும் இரு வேறு பொருள் தருவன. (ஊரிலிருந்து திரும்பினார் – நேரடிப் பொருள் என்றால், ஊரில் இருந்து திரும்பினார் என்றால் ஊரில் தங்கியிருந்து திரும்பினார் என்று பொருள்).8).

இடைச் சொற்களைப் பிரிக்கக்கூடாது. (காட்டாக, நாந்தான், குருவியைப்போல, )

9). இரண்டு சொற்களில் இரண்டாவது சொல் உயிரெழுத்தில் தொடங்கினால், பிரித்து எழுதலாம்.

( சமுதாய ஒற்றுமை, காகித ஓடம், அறிமுக எழுத்தாளர்)

10). இரண்டு வினைகளைக் குறிப்பிடும் போது, சேர்த்துத்தான் எழுத வேண்டும்.

செய்துமுடி என்பது செய்வது முதல் வினை. முடிப்பது துணை வினை. எனவே சேர்த்து, செய்துமுடி’க்கவே வேண்டும். செய்து (இடைவெளி விட்டு) முடிக்கக் கூடாது.

பெயர்ச்சொல்லையே வினைச்சொல்லாகக் கருதுகிற போதும், சேர்த்தே எழுத வேண்டும்.

புன்னகைபுரி, தலைமைவகி, கடன்படு..

11). இரட்டித்து வரும் சொற்கள் சேர்த்தே எழுதப்பட வேண்டும்.

முத்துமுத்தாக, கொத்துக்கொத்தாக, படபடவென

***

நன்றி : சேவகன்

7 பின்னூட்டங்கள்

 1. 12/10/2010 இல் 14:43

  திரும்பவும் (மறுபடியும்) பள்ளிக்கூடத்துக்குப் போனது மாதிரியே இருந்தது. கற்றுக்கொள்ள எவ்வளவோ இன்னும் உள்ளது. ஹும்…

 2. 12/10/2010 இல் 15:21

  சேவகனின் சேவை பாராட்டுக்குறியது. இதைப் போல சின்ன சின்னதாக அவ்வப்போது வெளியிடுவது நலம்.

 3. 12/10/2010 இல் 18:55

  இது எனக்கும் தாஜுக்கும் அவசியமானது. என்ன வெட்டவெளிச்சமா சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க. சில பேரு அமுக்கு முட்டையா இருப்பாங்க.

  • மஜீத் said,

   13/10/2010 இல் 00:50

   புனைபெயரா? புனைப்பெயரா?

  • abedheen said,

   13/10/2010 இல் 10:19

   ஏன் நானா, தாஜை வாராமல் இருக்க மாட்டீர்களோ? ‘அப்படித்தான்யா தப்பு வரும். யாரும் கேட்டாக்கா ‘தாஜ் கான்வெண்ட்டில் படிச்சவர்’னு சொல்லு என்கிறார் சீர்காழி கவிஞர்!

   • மஜீத் said,

    13/10/2010 இல் 13:04

    நானாவுக்கு இப்பத்தெரியும் (இப்ப பிரிச்சு எழுதுறதா இல்ல சேத்து எழுதுறதா?) தாஜ் ஏன் இங்கிலீஸுல கவிதையெல்லாம் இன்னும் எழுதலைன்னு.

 4. 13/10/2010 இல் 12:49

  கற்றுக் கொண்டேன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s