உமா மகேஸ்வரியின் கவிதைகளும் கட்டியங்காரனின் கூற்றும் – தாஜ்

‘குமுறிக்கொண்டிருக்கும்போது ‘குருவி‘யின் கவிதைகளா?’ என்று சகோதரர் ‘ஹபீபு’ கேட்கக்கூடும். தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு கவிதையில் சொன்னதுபோல ,  ‘இத்தனைக்குப் பிறகும் சாப்பிடத்தான் வேண்டியிருந்தது’ என்பதுதான் பதில். சரி, ஒருவகையாக ‘குருவி’ இங்கே வந்து அமர்ந்தது பற்றி சந்தோஷம். அனுப்பிவைத்த ‘கட்டியங்காரனுக்கு’ ஆயிரம் நன்றிகள்.

***

உமா மகேஸ்வரியின் கவிதைகளும்
கட்டியங்காரனின் கூற்றும் – தாஜ்

கவிஞர் உமா மகேஸ்வரியின்
எட்டு கவிதைகள்
கீழே
உங்களின் பார்வைக்கு இருக்கிறது.

*

இன்றைக்கு, தமிழில் புதுக் கவிதை எழுதும்
பெண் கவிஞர்கள்
கொஞ்சத்திற்கு ஜாஸ்தி!
இதில் பெரிய விசேசம்…
எல்லோரும் நன்றாக எழுதுவது.

‘ஆணாதிக்கத்தை முறியடிக்க வேண்டும்…’
‘பெண்ணுரிமையை நிலைநிறுத்த வேண்டும்….’ என்கிற
கோஷத்தை முன்னெடுத்து
எழுதும் பெண் கவிஞர்களே
இவர்களில் அதிகம்!
அதனாலேயே…
பலநேரம் அவர்கள்
‘பால்சர்ந்த யுக்தி’களோடு எழுதுகிறார்கள்!

‘ஏன் அவர்கள் அப்படி எழுதணும்?
அப்படி எழுதினால்தான்….
தங்களின் கோஷத்தை தெரிவித்ததாகுமா?’
கேட்கிறார்கள்.
‘தமிழ்க் கலாச்சாரத்தை/
அதன் வரம்பை/ நெறியை மீறலாமா?
பெண்ணென்பவள் மீறலாமா?
அடக்கம்தானே அவர்களது நிரந்தரம்!
எப்படி இப்படி மீறலாம்?’யென
ஆக்ரோஷமாகவே சீறுகிறார்கள்.
இப்படி கேட்பவர்களில் / சீறுபவர்களில்
பெரும்பாலோர் ஆண்கள்!
ஆணாதிக்கத்தின் வம்சாவளி வந்த ஆண்கள்!

தமிழ்ச் சினிமாவுக்கு
‘குத்துப் பாடல்கள்’ எழுதும் ‘மகா கவிஞர்களும்’
அந்த வம்சாவளியோ என்னவோ?
 
உரிமைக்களுக்காக / அடக்கு முறைகளை தகர்ப்பதற்காக
போராடும் அந்தப் பெண் கவிஞர்களை
சினிமா கவிஞர்கள்(?)
ஏகமாகத் திட்டி/ எதிராக கோஷம் எழுப்பி
கண்டமேனிக்கு தங்களது எதிர்ப்பை
ஒன்றுக்கு மேற்பட்டமுறை பதிவு செய்திருக்கின்றார்கள்.
இதைவிடக் கொடுமை ஏதேனும் உண்டாயென்ன?

இப்படியொரு வலுவான எதிர்ப்பை தெரிவிக்கும்
இவர்களது லட்சனம்தான் என்ன?
குறைந்தபட்சம்
அந்தப் பெண்கவிஞர்களைச்சாட யத்தனிக்கும் முன்
தங்களை இவர்கள்…
கண்ணாடியிலாவது பார்த்திருக்க வேண்டாமா?
மேலெல்லாம் சகதியும் சாக்கடையுமாக
இருப்பதைக் கண்டு வெட்கி, தலை முழுகி
பிறகாவது
எதிர்ப்பென்று வாய்திறக்கக்கூடாதா.

*

பெண் என்றால் ஆணுக்கு இளைத்தவள்
பெண் என்றால் மறைமுக அடிமை
பெண் என்றால் புகுந்த வீட்டின் இனாம் வேலைக்காரி
பெண் என்றால் போகப் பொருள்
பெண் என்றால் பிள்ளை பெறும் இயந்திரம்
பெண் என்றால் காசாக்கத் தகுந்த ‘மாடல்’
பெண் என்றால் பத்திரிகைகளின் விற்பனைக்கான புகைப்படம்
பெண் என்றால் சினிமாக்களுக்கு நிர்வாணம் வழங்கும் பேதை
பெண் என்றால் ஆண்களின் முன், ஒட்டுத்துணியோடு ஆடும் ‘கேபரே’காரி
பெண் என்றால் பாலியல் தொழிலுக்கான உடல்
பெண் என்றால் வாங்கவும்/ விற்கவும் தகுந்த பண்டம்
பெண் என்றால் ‘பொட்டுக் கட்டி’ சுகம் காணும் பொதுச்சொத்து
பெண் என்றால் நெறி காக்கவேண்டும்
பெண் என்றால் வரம்பு மீறாதிருக்க வேண்டும்
பெண் என்றால் அடக்கி வாசிக்கவேண்டும்
பெண் என்றால் அராஜகங்களை சகிக்கவேண்டும்
பெண் என்றால் கற்பு பேணவேண்டும்
பெண் என்றால் கலாச்சாரத்தை மெச்சி வாழவேண்டும்
பெண் என்றால் வாழ்விடமே  சகலமாக்கிக் கொள்ளவேண்டும்
பெண் என்றால் சிரிக்க மறக்கவேண்டும்
பெண் என்றால் அதட்டிப் பேசுவதைவிட வேண்டும்
பெண் என்றால் உயர் படிப்புக்கூடாது
பெண் என்றால் பரபுருஷர்களோடு வேலை செய்யக்கூடாது
பெண் என்றால் உயர் பதவிகளுக்கு தகுதி காட்டக்கூடாது
பெண் என்றால் தூரம்வரும் நாட்களில் வெளித்திண்ணையில் படுக்கவேண்டும்
பெண் என்றால் கணவனை அடைய வரதட்சணை தரவேண்டும்
பெண் என்றால் கணவன் மரித்தால் சதியேறவேண்டும்
பெண் என்றால் கணவன் மரித்தால் சிகை மழிகக வேண்டும்
பெண் என்றால் கணவன் மரித்தால் பொட்டு, பூவைத் துறக்கவேண்டும்
பெண் என்றால் கணவன் மரித்தால் மறுமண நினைவை மறக்கவேண்டும்

இப்படி இப்படி இன்னும் இன்னும்….

மதங்களின் பேராலும்/ சாஸ்திர சம்பிரதாயங்களின் பெயராலும்/
பழமையின் பெயராலும்/ குடும்ப குலப் பெருமைகளின் பெயராலும்
நாடுகள் தழுவி/ தேசங்கள் தழுவி/ கண்டங்கள் தழுவி
ஆணாதிக்க சக்திகள் அடித்த/ அடித்துவரும்
அடாவடிக்கொட்டம் கொஞ்சமல்ல.
பெண்களை காலுக்கடியில் போட்டு
உயிரோடு கொல்வதற்கும் மேலான
இத்தனை…
கொடுமைகளும்
சூதுவாது அற்றவையா?
சூழ்ச்சிகள் அற்றவையா?
ஆண்களின் சுகத்திற்கும்/ அவர்களின் நேர்மையின்மைக்கும்/
அவர்களது அனுசரணைகளுக்குமான…
ஈவு இரக்கமற்ற
பெண்கள் மீதான இந்த நிர்பந்தக் கொடுமைகளை
நேர்மைகொண்ட எந்த சமூகம்தான் சகிக்கும்?
நவீன உலகில்…
புத்திகொண்ட எந்த பெண்ணும்தான் பொறுப்பாள்?

பெண்களுக்கென்று ஓர் மனம் இருக்கும் என்றோ
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தோன்றுமென்றோ
ஆணாதிக்க பெருங்கூட்டத்திற்கு
காலாதிகாலமாய் ஏன் தோணவில்லை?
சூழ்ச்சிக்கும் சூதுக்கும் கூட ஓர் கால எல்லையுண்டே!

இதே ஆணாதிக்கம்…
இன்னொரு பக்கத்தில்…
பெண்களை….
கண்ணகியென்றும்/
தெய்வ அம்சமென்றும்/
குலம்காக்கும் திருமகளென்றும்/ தாய் என்றும்…
இனிக்க இனிக்கப் புகழ்ந்து மெச்சி….
அவர்கள் நிகழ்த்திய/ நிகழ்த்துகிற
கூடுதல் நயவஞ்சகக் கூத்துக்களுக்கும் பஞ்சமில்லை! 
தப்பைத் திருத்திக்கொள்ளாமல்
இப்படி நாவினிக்க பேசுவததென்பது…
அவர்கள் திருந்தாதவர்கள்
திருந்தவே மாட்டாதவர்கள்
என்பதற்கான அத்தாட்சி!

*

காலச் சுழற்சியில்…
ஏதோவோர் புள்ளியில்..
உஷ்ணம் தகித்ததோர் புலர்தலில்…
விழித்துக் கொண்ட பெண் வர்க்கம்
தாங்கள் இரண்டாம்தரப் பிரஜையாகவும்/
அடக்குமுறைகளுக்கு உட்பட்டும்
வாழ்ந்து வருவதிலான கசப்பை உணர
நிமிர்ந்தார்கள்.
நேர் நின்றார்கள்
கண்கள் சிவக்க கேள்விகள் தெறித்தது.
தங்கள் மீது யுகயுகமாக இறுகும் கட்டுகளை
அறுத்தெறிந்தார்கள்.
பேச்சில்/ எழுத்தில்
தங்களுக்கு மறுக்கப்பட்டவைகளையெல்லாம்….
பேச/ எழுத தாராளம் கொண்டார்கள்!

நேர் வார்த்தைகளில் பேசினால்
ஆணாதிக்க வர்க்கம்
காதுகொடுத்து கேளாது என்பதை
உணர்ந்ததினாலேயோ என்னமோ
திரும்பத் திரும்ப
முலை/ யோனி/ படுக்கை/ புணர்தல்/
கட்டில் சங்கடம்/
கலவியின் போதாமை/
வீணே மீசை முறுக்கும் வீட்டுக்காரன்/
செத்தகுறி… என்பதான
பால்சார்ந்த வார்த்தைகளையும் 
அதற்குறிய சம்பவங்களையும் குறியீடாக்கி
நம் பெண் கவிஞர்கள்
தங்களது கவிதைகளால்
ஆணாதிகத்திற்கு பேதி தர ஆரம்பித்தார்கள்.

தங்களது சுதந்திர வேட்கைக்கு குறுக்கே நிற்கும்
ஆணாதிக்ககாரர்கள் விலகும்வரை/
பெண்வர்க்கம் எதிர்கொள்ளும் அநீதிகள்
அத்து இத்து வீழும்வரை…
அவர்கள் தரும் பேதி தொடரத்தான் செய்யும். 
பேதி தருவதென்பது
சிலநேரம் சிலருக்கான வைத்தியச் சிகிச்சையின் ஆரம்பம்! 
 
பெண்களின் மீதான கட்டுகள் தெறிப்பது குறித்து
ஆணாதிக்க வர்க்கம்
இன்றைக்கு
விக்கித்துப்போயிருக்கிறார்கள்..
செய்வதறியாது விழிக்கிறார்கள்.
பெண் கவிஞர்களின் ஆக்ரோஷ கேள்விகளை மறுக்க
அவர்களிடம் நேர்மையான பதிலேதும் இல்லை.
அதனாலேயே…
கோபம் கொள்கிறார்கள்.
மீண்டும் மீண்டும் சுடு சொற்களால்
கண்டமேனிக்கு…
பெண் கவிஞர்களை சாடுகிறார்கள்.

அதனாலும்…
பயனும் கிட்டாமல் போக…
பெண் கவிஞர்களுக்கு நீதி நேர்மைகளை போதிக்கிறார்கள்.
பொய்யான வியப்பை பரவவிடுகிறார்கள்.
பெண்களின் மகத்துவம் பேசுகிறார்கள்.
குலவிளக்கென கரிசனை காட்டுகிறார்கள்.
தாய் என மெச்சுகிறார்கள்
பெண்களை தலைக்கு மேல் வைத்திருப்பதாக
புராணக்கதை பேசுகிறார்கள்.
இன்றைய நவீனப் பெண்களா…
மயங்குவார்கள்?
அதுவும்…
நவீன கவிதை எழுதும் பெண்களா?
கவிதைகள் எழுதும் ஆண்களாலேயே
அவர்களுக்கு உரைபோட முடியவில்லையே!

சரியாகக் கணித்தால்….
நம் பெண் கவிஞர்களிடம்தான்…
இன்னும் எத்தனையெத்தனை யுக்திகளோ!
இந்த ஆணாதிக்ககாரர்களையே
பெற்று வளர்த்த வர்க்கமாச்சே!

இதுதான்/ இவ்வளவுதான்.
நம் பெண் கவிஞர்கள்
தங்களது புதுக் கவிதைகளில்
பால் சார்ந்து எழுதும்
கதைச் சுருக்கம்!

*

இஸ்லாமிய நாடுகளிலும்/
உலம் தழுவிய பிறநாடுகளிலும்
இஸ்லாமியப் பெண் கவிஞர்கள்
தங்களது சுதந்திரம் குறித்தும்/
அதன் ஏக்கம் குறித்தும்/
தங்களின் மீது ஏற்றிவைக்கப்பட்டுள்ள
பழமையின் அளவுகோள்கள் குறித்தும்
கவிதைகள் என்றும்
கதைகள், கட்டுரைகள் என்றும் நிறையவே எழுதுகிறார்கள்.

நம் மண்ணிலேயும் கூட
பொருட்படுத்தத் தகுந்த
இஸ்லாமிய பெண் கவிஞர்களின் குரல்கள் உண்டு!
அவற்றையெல்லாம் இங்கே…
தெரிந்தே எழுதாது விடுகிறேன்.
எழுத தொடங்கினால் அதுவோர்…
தனிக்கதையாகிவிடும்.
இன்று இல்லாவிட்டாலும்…
நாள் நட்சத்திரம் பார்த்து
ஒரு நாளைக்கு
எழுதிப்பார்க்க வேண்டும்.

*
ஆணாதிக்கத்தைச் சாடும் மொழியில்
கவிஞர் உமா மகேஸ்வரி
எழுதிய கவிதைகள் குறைவு.
என் பார்வையில் அதுவோர் குறையாகவே படுகிறது,
அதட்டிப் பேசாத
கவிதைகளையே எழுதப்பழகிய அவருக்கு
இப்படியான கவிதைகள் எழுதுவதில்
தேக்கம் ஏற்பட்டுப் போனதை
புரிந்துகொள்ள முடிகிறது.
 
ஆனால்…
சமூக/ கலாச்சார சார்ந்த
மீறல் கவிதைகளை
அவர் நிரம்பவே எழுதியிருக்கிறார்.
இங்கே உங்களது பார்வைக்கு வைத்திருக்கும்
இந்த எட்டுக் கவிதைகளும்
அதற்கு சான்று.

தமிழ் சாகித்தியத்துக்கான
இந்த வருடத்து
சாகித்திய அகாடமி விருது
கவிஞர் உமா மகேஸ்வரிக்கு…
கிடைக்கலாம் என்றெரு தகவல்
இலக்கிய வட்டத்தில் உலா வருகிறது.
தகுதியானவர்தான்.
சந்தோஷம்!
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

இவண்.


கட்டியங்காரன்…
– கநாசு.தாஜ்
10:16 PM 10/7/2010

***

உமா மகேஸ்வரியின் கவிதைகள்…

1. ‘சித்திர அரூபம்’

எல்லாமும் நகர்கின்றன
விரைந்து
நிற்பதேயில்லை அவை
திரும்பியும் பார்ப்பதில்லை
அவற்றை
மீட்டெடுக்க முடிவதில்லை மீண்டும்
எந்தச் சக்தியும்
பறந்து மறைகின்றன
அவை.
இந்த அரூபச் சித்திரத்தின்
வளைகளோடு
இழைதல்
உன்னை மீறியதா?
சுழலும் இதே
திகிலின்பத்தில்
சுண்டப்பட்டுத் தொலைந்து
சிதறுவதும்?

*

2. ‘மடைகள்’

விதிகளைக் கிழிப்பதில் வேலி தாண்டிக்
குதிக்கும் திகிலின்பம்;
குளிர் பெட்டிக் காய்கள் போல்
முலைகளில் பனி துளிர்க்கும்.
அலையும் மரங்கள் பெயர்தலை விரும்பும்.
மறைவுகளில் தளும்பும் சிந்தை
இமையாப் பொழுதிலும் நெஞ்சில்
இறங்கும் மூர்க்கம்.
புரியப்புரிய விலகும் வெறுப்பின் விடுதலை
மீறிய அபஸ்வர மயக்கம்
மடைகளின் விளிம்பில்
கவர்ச்சிகளிடம் தோற்ற பயம்.
இருந்தும் பரிபூரணமுற்றது
மகரந்த மஞ்சள்
ஒருபோதும் சீராகதெனினும்
ஒட்டுண்ணியாகும் உயிர்
வெற்று வாழ்விடம்
சதுப்பு நடையாக.

*

3. ‘சித்திர இசை’

மூளைக்குள் நிறங்கள் குழைக்கும்
இசைச் சித்திரம்
கணந் தோறும்
மயக்கத்திற்கும், திடுக்கிடலுக்குமூடே
அலைகின்றன நரம்புவலைகள்.
சிகரத்தில் ஒன்றித் தெறிக்கையில்
அறுபட்டு வீழ்கிறேன்
தொகுக்கவே முடியாமல்.
ப்ரியம் தெரிவித்தவளுக்கு
கணையாழி சூட்டிக்
கடந்து மறந்தவன்
நெருடுகிறான் நினைவடியில்
செத்த மீனின் செதில்களாக.
அபத்த நாடகத்தில்
பொருந்தா வேடங்களின்
ஒவ்வா வசனம்,
புரிய அறியாயென்
மந்த கவனத்தைச்
சிராய்த்த அம்பு நுனிகளைச்
சீராகச் செருகித் துளைத்தெடுத்தேன்
பாதத்திலிருந்து,
உடல் வகிர்ந்து,
உச்சி கீறி.

*

4. ‘என் கடல்’

ஒன்றுமில்லை
என்றைக்கும் போல
காதோரம் பதிக்கையில்
அலையோசையிடம் கேட்டேன்
விசனத்தோடு
இவ்வளவு அழிவாயென
அதன் மூர்க்கம் குறித்து.
அவ்வளவுதான்;
எவ்வளவோ தடுத்தும் கேளாமல்,
என்னுடைய சங்கிலிருந்து
இறங்கிப் போய்விட்டது
கடல்
திரும்பியே பாராமல்.

*

5. ‘மழை வரம்’

நீ வரமளித்துப் போன
வெளி முழுவதும்
விடாமல் கொட்டிக்கொண்டிருக்கிறது
மழை.

உதிரும் கற்பனைகளினூடே
நீர்க் குமிழ்கள் கொண்டு
லகுவாய் மிதந்து நெருங்கும்
மனங்களைத் தாக்குகிறாய்.
நா நுனிக் கங்கு தீண்டி
வெந்து வீழ்கிறாள் ஒருத்தி.
விரைந்துகொண்டிருக்கிறது
சாரல் வேறெங்கோ.

*

6. ‘உன் முகங்கள்’

அப்போதெல்லாம்
என் விரல் நுனிகளில்தானிருந்தது
அந்த விழிகளின் அசைவு.
தென்னம்பாளையைக் கொத்திக்கொண்டிருந்த
மஞ்சள் குருவிகளை,
என் நீள நிலைக்கண்ணாடியை
நெருங்க அழைக்க விரும்பினேன்.
வானேறிய பறவைக் கூட்டங்கள்
இருளத் தொடங்கின
படுக்கை மீது துளி தெறித்தது
மழையின் வரைமுறையின்மை.
சாரல் முணுமுணுக்கும் இப்பொழுதுகளிலோ
நீ தெரிவிக்காத உன் பகுதிகளைத்
தெளிந்தெரியும் கங்குகளாகக்
கை மாற்றித்
தவித்து ஏந்துகிறேன்.
அந்த மலைச் சரிவில் உண்டு,
மிருதுவாக இளகிப்
பசுமையுறும் பாறைகளும்.
ஒப்புகிறேன் –
தற்சமயம் புரிபடாத தொலைவில்
முறுகிக் கடும் மோனம் கொள்வனவும்
உன் முகங்கள் தானென்று.

*

7. ‘முத்த மழை’

மழை விசிறும்
கண்ணாடி முத்தங்கள்
உன்னுடையவை போன்றே.
பிரியங்கள் திரண்டு.
வெறிச் செம்மை ஜொலிக்க,
ஆவேசமாய் நெருங்கி
அணுகித் தெறித்தும்
திசையற்றுச் சிதறி உடைகின்றன.
திக்கற்ற கனவாக.

*                                                                                                                           
8. ‘மழைத் தூது’

பெரும்பாலும்
அடைமழை கொட்டும்
ஒரு சாயங்காலத்தில்
நீயற்ற வெளியை
நான் வெறித்தல் நிகழும்.
குரல்களின் அபாய வலையிலிருந்து
உன்னை
மழைச்சரங்கள்
என் முற்றத்திற்கு
இழுத்து வரட்டும்.
தாளத் துளிகளில் உன் விழிகளை
வரைந்தபடி தளைப்பட்டிருக்கிறேன்.                                                                                            

மழையோடையில் காகிதக் கப்பலையோ,
பாதி சிகரெட்டையோ விட்டுவிட்டு,
ஆசை, ஆசையாய் உன் கன்னம் தொடும்
சின்னத் திளியை மட்டும் உதறி விடாதே.
உன் கூரைக்குள் நுழைகையில்
என்
ஈரத் தவங்களின்
இளைத்த தபால் அது.
                                       
***

‘இறுதிப் பூ’ – கவிதைத் தொகுப்பிலிருந்து…

வடிவம் &  தட்டச்சு: கநாசு. தாஜ்

*

நன்றி :  ‘செல்லக் குருவி’ உமா மகேஸ்வரி

4 பின்னூட்டங்கள்

 1. மஜீத் said,

  09/10/2010 இல் 17:47

  கவிதைகளைப் படிக்குமுன்:
  குருவி குருவின்னு சொல்லியே அவர் ‘குருவி மகேஸ்வரி’ ஆகப்போகிறார்! இருந்தாலும் “குருவி, குருவிதான்”. அற்புதமான கவிதை. பல நாட்களாக மனசு அசைபோடும் விசயங்களில் ஒன்று.

  //ஆணாதிக்கத்தைச் சாடும் மொழியில்
  கவிஞர் உமா மகேஸ்வரி
  எழுதிய கவிதைகள் குறைவு.
  என் பார்வையில் அதுவோர் குறையாகவே படுகிறது//

  அவர் ஏன் ‘அப்படி’ எழுதவேண்டும்? அவர் ‘இப்படி’யே இருக்கட்டும்!
  (Let her be outstanding instead of standing out)
  (உங்களுக்கே இதுதானே பிடித்திருந்தது தாஜ்,எப்படி அது குறையானது?)
  இன்னும் சொல்ல‌ப்போனால், ஆணாதிக்க‌ம் த‌வ‌றென்றுண‌ரும் ஒவ்வொரு ஆண்க‌விஞ‌னும் ‘அப்படி’ எழுதணும்,நிறைய‌.

  //‘ஆணாதிக்கத்தை முறியடிக்க வேண்டும்…’
  ‘பெண்ணுரிமையை நிலைநிறுத்த வேண்டும்….’ என்கிற
  கோஷத்தை முன்னெடுத்து
  எழுதும் பெண் கவிஞர்களே
  இவர்களில் அதிகம்!//

  அதென்ன ‘பெண்’ கவிஞர்? அவர்கள் “வெறும்” கவிஞர்களாக இருக்கக்கூடாதா?
  நாமாவது இந்த அடைமொழி தவிர்க்கலாம். ‘ஆண்’ க‌விஞ‌ர்களின் பெயர்களே புனைந்து புதையும்போது, இவ‌ர்க‌ள் சுய‌ அடையாள‌ந்தாங்கி நிமிர்வ‌தை வ‌ர‌வேற்போம். த‌மிழில் சில‌ வினைக‌ளுக்கு ‘பெண்பாற்சொல்’ இல்லாதிருப்பதை, த‌மிழைத்தாங்கி,அணைத்து,வ‌ள‌ர்த்து,உயர்த்திக்கொண்டிருக்கும் பெண்ணியம் பேசும் அறிஞர்கள் இன்னும் வாளாவிருப்ப‌து பேர‌வ‌ல‌ம்.

 2. 09/10/2010 இல் 23:03

  தஜத்துதே அம்ஸால் (ஒன்று போன்றவை புத்துயிர் பெறுதல்) என்றொரு ஆன்மீக பாடத்தை நினைவூட்டியது சித்திர அரூபம். விளக்கின் ஒளியைப் போல, ஓடும் நதியைப் போல போனவை மீள்வதில்லை. ஒவ்வொரு கணத்தின் இருப்பும் புத்தம் புதியது தான்.

  00000

  /சிராய்த்த அம்பு நுனிகளைச்
  சீராகச் செருகித் துளைத்தெடுத்தேன்
  பாதத்திலிருந்து,
  உடல் வகிர்ந்து,
  உச்சி கீறி./
  /மூளைக்குள் நிறங்கள் குழைக்கும்
  இசைச் சித்திரம்
  கணந் தோறும்
  மயக்கத்திற்கும், திடுக்கிடலுக்குமூடே
  அலைகின்றன நரம்புவலைகள்.
  சிகரத்தில் ஒன்றித் தெறிக்கையில்
  அறுபட்டு வீழ்கிறேன்
  தொகுக்கவே முடியாமல்./
  இத்தனை தீர்க்கமாக சோகம் இசைக்கும் கவிதை ………
  அற்புதம் என்று சோகத்தைக் கூட சொல்வதை கவிதை அனுமதித்தாலும்.
  கவிதையை மீறி கலவரப்படுத்தும் வரிகள் நெஞ்சை கனமாக்குகின்றது.
  அடுத்தடுத்து வரும் பிரிவின் சோகம் சொல்லும் கவிதைகள் யாவும்
  அது நிஜமாய் இருந்தால் பொய்யாய் போகட்டும்.
  அது போய்யாய் இருந்தால் உங்கள் கவிதையில் மட்டும் வாழட்டும்.

 3. su.bharathi said,

  11/12/2012 இல் 08:17

  nalla kavithaigal.suya pachathapathudan irupathu en?satham padaikavum sethiduvom theiva sathi padaikavum seithiduvom maha kavi bharathiin patin unarvu vendum.nanru naru.athu sari alugium, veeramum velipattal thane veriyam purium.–erodebharathi

 4. தாஜ் said,

  12/12/2012 இல் 17:30

  அன்புடன்…
  சு.பாரதி அவர்களுக்கு….
  உங்களின் கருத்துக்கு மிகுந்த நன்றி.

  உமாமகேஸ்வரி
  இன்றைய புதுக் கவிதைகாரர்.
  மகாபாரதி….
  இந்திய சுதந்திர வேள்வி தணலாக இருந்த போது
  தன் எழுதுகோலை
  அந்த சூட்டின் சூடுகொண்ட நிலையில்
  தான் பெற்ற வரமான
  கவிதையால்
  இந்த சமூகத்தோடு பேசினான்!
  இந்த இருவரையும்
  ஒருபோதும் ஒப்பிட முடியாது.
  மனகிலேசங்களை
  மொழி அழகில்
  கவிதை காண்பவர் மட்டும்தான்
  உமாமகேஸ்வரி.
  அதுவரை அவர் கவிதைகள்
  ஏற்புடையதாக இருக்கிறதா யென
  கண்டு ரசிப்பதுதான்
  இன்ரைய கணக்கில்
  சரியாக இருக்கும் என கருதுகிறேன்.
  நன்றி.
  -தாஜ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s