இரத்த உறவு

‘கோயிலும் வேண்டாம், மஸ்ஜிதும் வேண்டாம், பேசாமல் சர்ச் கட்டிவிடலாம்’ என்று தீர்ப்பு சொன்னான் ஜோஸப்!  எங்கள் கம்பெனி இன்ஜினியர். Beshaq mandir masjid todo… (இது நம்ம நாகூர் ரூமி , ஜமால்முஹம்மது கல்லூரியில் பாடி முதல் பரிசு பெற்ற ‘பாபி’ பாடல். அன்று வார்டன் ஷாவுக்கு சுத்தமாக காது கேட்கவில்லை என்பது உபரி தகவல். அடுத்த வருடம் நான் பாடும்போதும் அப்படித்தான்)  ‘ஜோக்’ இருக்கட்டும், கவிஞர் ஜபருல்லாதான் அழகாக ஒரு விஷயம் சொல்வார்.  ‘ நாம (உலகத்தை) அல்லாஹ் படைச்சான்டு சொல்றோம்; ஹிந்து , கிருஸ்தவ நண்பர்கள் பிரம்மாங்குறாங்க, ‘பிதா’ங்குறாங்க… இந்த மூணு தெய்வங்களும் படைச்ச மனுஷங்கள, விஷயங்கள  பாருங்க. ஒரே மோல்டு! ஏதோ அவங்களுக்குள்ள ஒரு காண்ட்ராக்ட் போட்ட மாதிரி அவ்வளவு அழகா இருக்கு – ஒவ்வொண்ணும்! இதேமாதிரி வெவ்வேறு மதத்த சேர்ந்த மனுஷங்க – ஒத்துமையா இருப்போம்’டு – ஏன் ஒரு காண்ட்ராக்ட் போட்டுக்ககூடாது?’. அருமையான கேள்விதான். தண்ணீர் தராத பக்கத்து மாநிலங்களை விடுங்கள், பக்கத்து வீட்டுக்காரனிடமே நாம் பகையாக அல்லவா இருக்கிறோம்!

‘ஏகோபித் தானதோரெண்ணம் – மக்கள்
எவரிடத் துங்காணக் கிடையா(து)
ஓகோகோ! இதற்காக நீ ஏன் நொந்து
ஓலமிட் டலைந்திட வேண்டும்?’ என்று ‘அமைதியின் அடிச்சுவடு’ பாடலில் கேட்கும் புலவர் ஆபிதீன்

‘இன்றுனைச் சூழ்ந்துள்ள இன்னலைக் கண்டு
இறந்துப் போவதை மேலெனெ நினைத்தாய்
சென்று நரகத்தில் சேர்ந்திடில் மீளச்
செய்வகை யாதுண்டு சிந்தனைச் செய்தனையா?’ என்றும் வேறொரு பாடலில் சொல்வார்.

எனவே, ஒற்றுமைக்காக ஒரு கதை… இதை எப்போதோ பதிய நினைத்தேன். ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு ‘சமயம்’ இருக்கிறதல்லவா? மணி சார், ஒரே முஸ்லிம் சமாச்சாரமா இருக்கு’ என்று இந்தப் பக்கங்களை இனிமேலும் வெறுக்க  மாட்டீர்கள்தானே? முஸ்லிம்கள் என்னவென்றால் நான் இஸ்லாத்தைப் பற்றியே சொல்வதில்லை என்று முறைக்கிறார்கள்!  என்னதான் செய்வது?

‘வெற்றியின் ரகசியங்கள்’  சொல்லிய அ. ந. கந்தசாமி (ஆகஸ்ட் 8, 1924 – பெப்ரவரி 14, 1968, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடி எனப் போற்றப்படுகின்றவர். கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர், கலையரசன், சிப்பி, புரூனே என்னும் புனைபெயர்களிலும் எழுதியவர்.’ (மேலும் படிக்க : விக்கிபீடியா) .  இவரது வாழ்க்கைக் குறிப்பை – எழுத்தாள நண்பர் வ.ந. கிரிதரனின் எழுத்தில் – இங்கேயும் படிக்கலாம். அறிஞர் அ.ந. கந்தசாமியின் ‘இரத்த உறவு’ சிறுகதையை ‘பதிவுகள்’ இதழில்தான் முதலில் படித்தேன். மிகவும் எளிமையான கதை. ஆனால் அது பேசும் பொருள் இன்று(ம்) முக்கியமானது. எனவே எனக்கு பிடித்த கதைகளுள் ஒன்றாகிப்போனது. (கதைகள் எனக்கு பிடிப்பதற்கு இப்படியெல்லாம் காரணம் இருந்தாக வேண்டும் என்ற அவசியமில்லை. மோசமான கதைகள் கூட எனக்குப் பிடிக்கும். உதாரணமாக , என் கதைகள்!).

‘இரத்த உறவு’ கதையை பெரிதாக கட்டுடைக்க வேண்டாம்; கருத்தைப் பரப்பினால் போதுமானது. அதுவே அறிஞர் கந்தசாமிக்கு நாம் கொடுக்கவேண்டிய மரியாதை.

நன்றி!

***
இரத்த உறவு

அ.ந.கந்தசாமி

மாலை வேளையிலே வெள்ளிப் பனிமலையின் உச்சியிலே அகில லோக நாயகனான பரமேஸ்வரன் பராசக்தியோடு வழக்கம் போல் உலாவிக் கொண்டிருந்தபோது அகிலாண்டநாயகி சிவபிரானிடம் பொழுது போகவில்லை என்று கூறி ஒரு இனிய கதை சொல்லும்படி இரந்து கேட்டாள். பார்வதி கதை சொல்லும்படி கேட்பது இது முதற் தடவையல்ல. வருடத்தில் முந்நூற்று அறுபத்தைந்து நாட்களிலும் ஏதாவது கதை சொல்லியேயாக வேண்டியிருந்தது. கதை என்றால் உலக மாதாவுக்கு உயிர். பலயுகங்களுக்கு முன்னர் இக்கதை சொல்லும் பழக்க்ததை நடைமுறைக்குக் கொண்டுவந்தபோது உமாபதிக்குக் கதை கட்டிச் சொல்வது சிருஷ்டியைப் போல் ஒரு இன்பமான பொழுது போக்காகவே இருந்து வந்தது. ஆனால் இப்பொழுதோ அவருக்கு அது ஒரு நீங்காத தொல்லையாகவே மாறிவிட்டது. தினம் தினம் ஒரு புதிய கதையைச் சிருஷ்டிப்பதென்றால் எந்தக் கதாசிரியருக்கும் இலகுவான காரியமா என்ன?

இன்று பரமசிவன் ஒரு புதிய யுக்தியைக் கையாண்டார். “ஒவ்வொரு நாளும் நான் தான் கதை சொல்லுகிறேனே இன்று வேறுவிதமாக நேரத்தைப் போக்கலாம் வா” என்று சிவபிரான் கூற, மீனாட்சியும் இரட்டிப்புச் சந்தோஷம் அடைந்தவளாய் “அவ்வாறே ஆகட்டும்” என்றுகுதூகலத்துடன் புறப்பட்டாள்.

கட்புலனுக்குத் தோன்றாத சூக்கும நிலையில் மலைமகளும் பரமசிவனும் கொழும்பு நகரிலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரியியில் நோயாளிகளின் கட்டில்களுக்குச் சமீபமாகச் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். தமது ஒலியிலா மொழியிலே அவர்கள் பின்வருமாறு பேசிக்கொண்டார்கள்: “ஐயோ! பாவம். இந்த மனுஷனுக்கு என்ன நோயோ?” என்றாள் உலகம்மை.

“தெருவிலே தனது மோட்டாரில் வந்து கோண்டிருந்த போது ஒரு பெரிய லொறியிலே மோதி இவனுக்குக் கை எலும்புகள் முறிந்து போய்விட்டன. சரியான காயம். அதற்குத்தான் சத்திரசிகிச்சை செய்து வைத்திருக்கிறார்கள் எனறு பதிலளித்தார் சங்கரர்.

பார்வதி நோயாளியை மேலும் கவனித்தபோது ஒரு கண்ணாடிக் குழாயிலிருந்து சிவப்பு நிறமான திராவகமொன்று நோயாளியின் உடலில் ஊசி மூலம் செலுத்தப்பட்டுக் கொண்டிருப்பதையும் கண்டு ஆச்சரியமடைந்தாள். 

“நாதா, இது என்ன திராவகம்?” என்று ஆச்சரியத்தோடு வினவினாள் பார்வதி.

நடராஜர் புன்னகை பூத்தவராய் “அவசரப்படாதே உமா அதை அப்புறம் சொல்லுகிறேன். இப்பொழுது என்னுடன் இன்னோர் காட்சியைப் பார்க்க வா” என்று பார்வதியை அங்கிருந்து வேறு புறமாக அழைத்துச் சென்றார்.

கொம்பனித் தெருவிலுள்ள ஒரு முடுக்கிலே குழந்தைகள் ஏகக் கும்மாளமடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அந்த முடுக்கினிலே ஒரு சிறு வீட்டின் வாசலில் ஒரு அழகிய பெண் நின்று கொண்டு, வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கும் தனது கணவனை வைத்தகண் வாங்காது பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் களைத்து விறுவிறுத்துப் போயிருந்தான். அவன் முகத்தில் வியர்வை அருவிபோல் வழது கொண்டிருந்தது.

அவன் மனைவி அவனை அன்போடு வரவேற்பதைக் கண்ட் பார்வதி, பரமேஸ்வரனின் காதில் “பார்த்தீர்களா?  ஏழைப் பெண்ணாயிருந்தும் தன் பர்த்தாவிடம் எவ்வளவு திருப்தியுடன் அன்பும் ஆதரவும் காட்டுகிறாள்?” என்று திருப்தியுடன் குறிப்பிட்டாள். உண்மையான அன்பில் இணைந்து வாழும் தம்பதிகளைக் காணும்போது கடவுளர் கூட மகிழ்ச்சியில் திளைத்து விடுவார்கள்.

வீடு வந்த இளைஞன் தன் மனைவியிடம் “இந்தா சுபைதா, பத்து ரூபாய் இருக்கிறது. அரிசி, காய்கறி வாங்கிப் பிள்ளைகளுக்குச் சமைத்துக் கொடு. நான் இதோ போய்க் குளித்துவிட்டு வந்து விடுகிறேன்” என்று கிளம்பினான். சுபைதா  முகத்தில் குதூகலம் தாண்டவமாடியது.  “பணம் ஏது? வேலை கிடைத்ததா?” ஆர்வத்தோடு கேட்டாள் அவள்.

இளைஞன் ” வேலை  கிடைக்கவில்லை. கிடைக்கும் என்றும் தோன்றவில்லை. செலவுக்கு இருக்கட்டுமே என்று என் இரத்தத்தை விற்று இந்தப் பத்து ரூபாயை வாங்கி வந்தேன்” என்று ஒரு விரக்தியோடு குறிப்பிட்டான் அவன்.

“இரத்தத்தை விற்பதா? எனக்கொன்றும் விளங்கவில்லையே” என்று திகிலுடன் வினவினாள் சுபைதா.

அவன் இலேசாகப் புன்னகை புரிந்தான். “இந்த விசயம் எனக்கும் தெரியாது சுபைதா. இன்றூ காலை ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். ஆஸ்பத்திரியிலுள்ள நோயாளிகளுக்கு இரத்தம் வேண்டுமென்றும் அதற்குப் பதிலாக ரூபா பத்து கொடுக்கப் படுமென்றும் போட்டிருந்தார்கள். சரிதான் என்று நானும் ஜமால்தீனும் போனோம். எங்கள் உடம்பில் ஊசிபோட்டு ஒவ்வொருவரிடமிருந்த்கும் முக்காற் போத்தல் இரத்தம் எடுத்து விட்டார்கள். பதிலுக்கு ரூபா பத்தும், பால் கோப்பியும் கொடுத்தார்கள்” என்றான் சிரித்துக் கொண்டே.

சுபைதா அவன் பாதி சொல்லி வரும்போதே “ஐயோ!” என்று அலறிவிட்டாள். “உங்கள் உடம்போ வாடிப்போயிருக்கிறது. இந்த நிலையில் இருக்கிற இரத்தத்தையும் கொடுத்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும்?” என்று மனமிடிந்து குறிப்பிட்டாள். சிறிது செல்ல மீண்டும் அவள் “இதெல்லாம் எதற்காகச் செய்கிறீர்கள்? எனக்காகவும் பிள்ளைகளுக்காகவும் தானே?” என்று சொல்லி அவனது மெலிந்த தோளைக் கட்டிக் கொண்டாள். அவன் கண்களிருந்து கண்ணீர்த்துளிகள் அவனது தோளில் விழுந்து நெஞ்சிலும் பட்டன.

“அழாதே சுபைதா, எப்பவுமே இப்படி இருக்காது. அல்லா அருள் புரிவார்” என்று கூறி அவளது கண்களைத் துடைத்து விட்டான் அவன். ஆனால் அதே நேரத்தில் தனது கண்களில் கண்ணீர் துளிர்ப்பதை அவனால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

பார்வதி “ஐயோ, பாவம்” என்று இரங்கினாள். பரமசிவன் “அவன் நம்பிக்கை வீண்போகாது” என்று அங்கிருந்து கிளம்பினார். உமையவளும் அவரைப் பின் தொடர்ந்தாள்.

மீண்டும் ஆஸ்பத்திரிக் காட்சி.

லோகநாயகனும் உலக மாதாவும் பழைய நோயாளியிடம் மீண்டார்கள்.

“ஆமாம், நீங்கள் அந்தச் சிவந்த திராவகத்தைப் பற்றி எனக்குச் சொல்லவில்லைத்தானே! நான் உங்களுடன் கோபம்” என்று பரமசிவனிடம் பார்வதி கோபித்துக் கொண்டாள்.

“கோபம் வேண்டாம் அம்மணி. சொல்லி விடுகிறேன். அந்த முஸ்லீம் இளைஞனின் இரத்தம் தான் அது. இந்த நோயாளியின் உடலிலிருந்து ஏராளமான இரத்தம் வெளியேறி உடல் பலவீனப்பட்டுப் போனாதால் அந்த இரத்தத்தை இவன் உடலில் செலுத்தினார்கள். அவ்வளவுதான்” என்று விளக்கினார் பரமசிவன்.

இப்போது நோயாளிக்கு அறிவுத் தெளிவு ஏற்படிட்டிருந்ததால் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தன் உறவினரொருவருடன் பேசிக் கொண்டிருந்தான்.

“அந்தத் துலுக்கப் பயலின் லொறி வந்து மோதி என்னை இப்படி ஆக்கி விட்டது” என்று வெறுப்புடன் பேசினான் அவன்.

“வேலாயுதம்! உடம்பை அலட்டிக் கொள்ளாதே, படு” என்று கூறினார் பக்கத்திலிருந்த அவன் அண்ணர்.

பார்வதி நோயாளியின் பேச்சுப் பிடிக்கவில்லை.

“துலுக்கப் பயல் என்று ஏளனமாகப் பேசுகிறானே. ஒரு துலுக்கப் பயல் தானே இவனுக்கு இரத்தம் கொடுத்தான்” என்றாள் அவள்.

பரமசிவன் விஷமப் புன்னகை புரிந்தார். “ஆமாம் பார்வதி. இவனும் அந்த முஸ்லீம் இளைஞனும் இரத்த உறவு பூண்டவர்கள். பாவம், இவன் அதை எப்படி அறிவான்? ஆனால் பார்வதி. இந்துவான அவனது உடம்பில் முஸ்லீம்களின் இரத்தம் ஓடுவது விசித்திரமாயில்லையா?” என்றார் பலமாகச் சிரித்துக் கொண்டு.

“உஷ் சிரிக்காதீர்கள்! யாராவது கேட்டு விடப் போகின்றார்கள்” என்று எச்சரித்தாள் உமாதேவி. சிரிப்பின் உற்சாகத்தில் சங்கரர் தம்மை மறந்து ஒலியை உண்டாக்கி விடுவாரோ என்று லோக மாதாவுக்கு உள்ளூரப் பயம்.

“தேவமொழிமட்டுமல்ல. தேவர்களின் சிரிப்பும் மானிடர்களுக்குக் கேட்பதில்லை: என்று  விளக்கினார் சிவபிரான்.

பரமசிவனும் பார்வதியும் வான வீதி வழியே கைலயங்கரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் ‘ஏயார் சிலோன்’ ஆகாய விமானம் ஏக இரைச்சலோடு வந்தது. இருவரும் ஒருபுறமாக ஒதுங்கிச் சென்றார்கள்.

விமானத்தின் இரைச்சல் அடங்கியதும், “கடவுளே, சிவபெருமானே! கைலாசபதி! என்னைக் காப்பாற்று! என் நோவைப் போக்கு:” என்று நோயாளி வேலாயுதம் முனகுவது கேட்டது.

“அல்லாஹுத்தஆலா! ஆண்டவனே!  எத்தனை நாளைக்குத்தான் இந்தத் தரித்திர வாழ்வு! எங்களுக்கு நல்வாழ்வு அருளமாட்டாயா” என்று கொம்பனித்தெரு முடுக்கிலிருந்து இபராஹீமும் சுபைதாவுக்கு தொழுது கொண்டிருப்பது அதைத் தொடர்ந்து கேட்டது.

பரமசிவன் மலர்க்கண்களில் கருணை வெள்ளம் ஊற்றெடுத்தது. தன் வலது கரத்தை உயர்த்தி “உங்கள் மனோபீஷ்டங்கள் நிறைவேறட்டும்” என்று ஆசி வழங்கி விட்டு வானவீதியிலே நடந்தார் அவர். பராசக்தியின் உள்ளம் பூரித்தது.

***

நன்றி : பதிவுகள் இணைய இதழ்

5 பின்னூட்டங்கள்

 1. 30/09/2010 இல் 11:32

  ‘இரத்த உறவு’ கதையை பெரிதாக கட்டுடைக்க வேண்டாம்; கருத்தைப் பரப்பினால் போதுமானது. அதுவே அறிஞர் கந்தசாமிக்கு நாம் கொடுக்கவேண்டிய மரியாதை.

  – கட்டுடைக்கலாம் என்று பார்த்தேன்.. அருகில் சுத்தியல் எதுவும் இல்லை. பரப்பலாம் என்றால் இதனை ஜெயமோகன் பரப்பிலக்கியம் என்று கூறிவிடுவார். பரப்பாத இலக்கியம் என்றால்… சுத்த இலக்கியமாக இருக்க வேண்டும். அதில் ஆண்களோ பெண்களோ வரக்கூடாது. வந்தால் “பரப்பிய“ இலக்கியமாகிவிடும். போகட்டும். எதோ உங்கள் சமூகப்பணியை ஆற்றுகிறீர்கள். எதற்கும் நாகூருக்கு போனை போட்டு பிள்ளைகயை வெளியில் போக வேண்டாம் என்று சொல்லுங்கள். இப்ப ரத்தத்தை வீடுதேடி வந்து எடுக்கிறார்களாம். ((

 2. 30/09/2010 இல் 11:42

  நன்றி ஜமாலன், நேற்றே ஃபோன் போட்டு நதீமுக்கு சொல்லிவிட்டேன். பயந்து சாக வேண்டியிருக்கிறது…

 3. மஜீத் said,

  30/09/2010 இல் 16:13

  ஒரே மோல்டுதா…..ன், இந்த ப்ளட்டுல ‘ஏ’ குருப்பு ‘பி’ குருப்பு ‘ஓ’ குருப்பு, அப்பறம் டிஸ்யூ மேட்ச் ன்றானுவளே, அதான் கொஞ்சம் ஒலட்டுது. புரிபட மாட்டேங்குது.

 4. வ.ந.கிரிதரன் said,

  13/10/2010 இல் 01:15

  இந்தச் சிறுகதை கூறும் பொருளின் அடிப்படையில் மிகவும் முக்கியமானது. விமர்சகர்கள் பலரால் விதந்துரைக்கப்பட்ட அ.ந.க.வின் சிறுகதைகளில் இதுவுமொன்று. இத்தகைய கதைகளைக் கட்டுடைக்கும்போது அது எழுதப்பட்ட காலகட்டத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மதம், மொழியென்று பல்வாறாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் அனனவரும் மனிதர்களே என்பதை விளக்கும் இத்தகைய கதைகளின் தேவை இக்காலகட்டத்திற்கும் தேவையானதொன்றே.

  • abedheen said,

   13/10/2010 இல் 10:17

   அன்பின் கிரிதரன், உங்கள் வருகைக்கு நன்றி. //மதம், மொழியென்று பல்வாறாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் அனனவரும் மனிதர்களே // சரியாகச் சொன்னீர்கள். இதை சொல்வதற்குத்தான் நானும் பலமாதிரி பதிவுகளை இடுகிறேன்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s