விவாதம் : அதை என்னிடம் கேட்காதீர்கள்!

மதிமயக்கத்தின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்டிருக்கும் அறிஞர்களை பல்வேறு வகுப்புகளாகப் பிரித்து ஆராயும் ‘அறிவும் தெளிவும்’ நூலிலிருந்து ஒரு சிறு பகுதி.. இமாம் கஸ்ஸாலி எழுதிய ‘இஹ்யாவு உலூமித்தீன்’இன் தமிழாக்கம் : மௌலவி. எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள். மொத்தமுள்ள ஒன்பது வகுப்புகளில் இது ஆறாம் வகுப்பு. மற்ற வகுப்புகளை பிறகு பதிவிடுகிறேன், இன்ஷா அல்லாஹ்.

*

இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் இறைவனைப் பற்றியும் அவனுடைய ஆற்றல்களைப் பற்றியும் வாதம் புரிகிறார்கள். தாம் கற்ற கல்வியையும் தாம் பெற்ற அனுபவ ஞானத்தையும் அவர்கள் இந்த வழியில் செலவிடுகிறார்கள். தம் கருத்தை வலியுறுத்துவதிலும் எதிரியின் கருத்தைத் தகர்த்தெறிவதிலும் அவர்கள் தம் கவனம் முழுவதையும் செலுத்துகிறார்கள்.

இந்த வாதப் பிரதிவாதத்தினால் வெளிப்படுவது உண்மையாகத்தான் இருக்கவேண்டும் என்று சொல்ல முடியாது. நாவன்மை பெற்றவர்களால் உண்மையை மறைக்க முடியும்; பொய்யை உண்மை என நிரூபிக்க முடியும். இந்தக் கட்டத்தில், விவாதம் செய்கிறவர்களை இரண்டு பிரிவுகளாகக் கூறுபோடலாம்; உண்மைக்கு வாதாடுகிறவர்கள்; முரணுக்கு வாதாடுகிறவர்கள்.

உண்மையில் இந்த இரண்டு பிரிவினரும் மதிமயக்கம் கொண்டவர்களே. ஏனெனில், முதற் பிரிவினரைப் போல இரண்டாம் பிரிவினரும் தம் கருத்தையே வலியுறுத்துகிறார்கள். அது நேர்மையானதா, முரணானதா என்று அவர்கள் கவலைப்படுவதில்லை. எதிரியின் வாய்க்குப் பூட்டு போடுகிறார்கள். அவன் கருத்துக்களில் நியாயம் உண்டா, இல்லையா என்பதுபற்றி அவர்களுக்குக் கவலை கிடையாது.

நேர்மைக்கு வாதாடும் அறிஞர்கள் நேர்மையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தால் பேச்சேயில்லை. ஆனால் நேர்மைக்கு வாதாடுகிறவர்கள் என்று தமக்குத் தாமே பெயர் சூட்டிக்கொள்ளும் அவர்கள் நேர்மையை மட்டுமே தம் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நேர்மையை எடுத்துரைத்து வாதாடும் அதே நேரத்தில் அவர்கள் தம்முடைய அறிவுக்கும் நாவன்மைக்கும் மனப்பூர்வமாக விளம்பரம் கொடுக்கிறார்கள். தம் கருத்தை மறுக்கும் துணிவு யாருக்கும் இருக்க முடியாது என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

அவர்கள் செய்யும் தவறுகளில் மிகப் பயங்கரமானது இதுதான்; இவ்வாறு வாதம் புரிவது இறையன்பைப் பெறுவதற்குரிய வழிகளில் மிகச் சிறந்தது என்று நம்புகிறார்கள். அவர்கள் ஏன் அப்படி நம்புகிறார்கள் என்று கேட்கிறீர்களா? அவர்களைப் பார்த்து நாம் கேட்கும் கேள்வி இது. எனவே தயவுசெய்து அதை என்னிடம் கேட்காதீர்கள்!

முரணுக்கு வாதாடுகிறவர்களின் நிலைமை இன்னும் மோசமானது. அவர்கள் எடுத்துதுவைத்த முதலடியே தவறாக இருக்கும்போது இறுதி வெற்றியைப்பற்றி எழுதுவதற்கு என்ன இருக்கிறது?

இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால், தர்க்கம் செய்கிறவர்களை இரண்டே இரண்டு பிரிவுகளில் கட்டுப்படுத்த முடியாது என்னும் உண்மையை நாம் தெரிந்து கொள்ளலாம். அவர்களில் எத்தனையோ பிரிவினர்! அவர்களின் மனத்தில் எத்தனையோ ஆசைகள்! அவர்களின் வாதத்தில் எத்தனையோ தவறுகள்!

அவர்களில் ஒரு சாரார் மறு சாராரை இழித்துக் கூறுகிறார்கள்; குற்றவாளியாக்குகிறார்கள். அவர்கள் கூறும் கருத்தை இவர்கள் மறுத்தால், இவர்களின் வாதத்தை அவர்கள் ‘முட்டாள்தனம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

நீங்களே சொல்லுங்கள். இத்தகைய விவாத அரங்கத்தினால் உண்மை வெளிப்பட முடியுமா? இரண்டு சாராரும் ஒருவரை எதிர்த்துக் கொண்டிருக்கும்போது நேர்மை உருப்பட முடியுமா? முடியாது என்றால் அவர்களை மதிமயக்கத்தின் சிகரங்கள் என்று குறிப்பிடுவதில் என்ன குற்றம் இருக்க முடியும்?

இறைவனையும் அவனது திருத்தூதர்களையும் அவன் கொடுத்தனுப்பிய வேதங்களையும் முன்னால் வைத்துத் தர்க்கம் செய்யும் அவர்கள் இறைக் கட்டளையையும் இறையன்பையும் ஏன் மறந்து விடுகிறார்கள்? புனித வழிக்காக விவாதம் செய்யும் அவர்கள் தம் மனத்தைப் பண்படுத்திக் கொள்ளாமல் பொழுது போக்குகிறார்களே, காரணம் என்ன? அவர்களின் மனத்தைத் திரை போட்டு மறைத்து வைத்திருக்கிறதல்லவா மதிமயக்கம், அதுதான் அத்தனைக்கும் காரணமா?

இறைவன்மீதும் இறைமார்க்கத்தின் மீதும் பாமரர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அவர்கள் மிகத் தாழ்மையாக மதிக்கிறார்கள். தர்க்க ரீதியாக அறிந்துகொள்ளும் வரை அவர்கள் கொண்டிருக்கும் கொள்கைகளுக்குப் பொருள் கிடையாது என்று வாதிக்கிறார்கள்.

இத்துடன் அவர்கள் நிற்கவில்லை. ‘தர்க்கம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. தான் வைத்திருக்கும் நம்பிக்கையை எடுத்து வைத்து ஒருவன் தர்க்கம் செய்யவில்லை என்றால் அவனை உண்மையான முஸ்லிம் என்றே சொல்ல முடியாது. இறைவனை அவன் நம்பட்டும்; பெருமானாரையும் அவன் நம்பட்டும், ஆனால் விவாதம் செய்து பார்க்கும்வரை அவனுடைய நம்பிக்கைக்கு நிச்சயமாக மதிப்புக் கிடையாது’ என்றும் வேறு விரிவுரை கொடுக்கிறார்கள்.

தவறான இந்தக் கண்ணோட்டத்தினால் அவர்களின் எண்ணமும் செயலும் மாறுபட்டு புதியதொரு கோணத்தில் செல்கின்றன. மனப் பயிற்சிக்கென்று அவர்கள் சிறிது நேரத்தைக்கூடச் செலவிடுவதில்லை. இதனால் அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் உள்ளத்தில் தீய உணர்வுகள் முழு அளவில் வளர்ந்து நிற்கின்றன.

*

நன்றி : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்

1 பின்னூட்டம்

  1. 19/09/2010 இல் 11:05

    இந்த கூட்டத்தில் நான் எந்த பக்கம் இருக்கின்றேன் என்ற கேள்வியை எழுப்பியது இமாம் அவர்களின் அறிவுறுத்தல்.இறைவா! என்னிடமிருந்து என்னை காப்பாற்று என்றெழுந்த என் கோரிக்கை பாசாங்கற்றது என்று தான் நம்பினேன். பொது இடத்தில் கோரிக்கையை பதிவு செய்யும் போலி நீ என்றது மனசாட்சி!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s