ஆஹா, இது ஆப்பக்குச்சி சிலம்பம்

ஊர்த் திருவிழாக்களில் ‘கம்பு விளையாட்டு’ பார்க்கும் சில ஆட்கள் வீட்டிற்கு வந்ததும்  துணைவியுடன் ஆடுவார்களாம் வீரமிகு ‘கம்பு’ளாட்டு !  ஹனீபாக்காவின் கதையைப் படித்த நம்ம நானாவுக்கோ கிளம்பி விட்டது, பழைய ஞாபகம்.  இந்த நானாவை விளங்கவே முடியவில்லை. ஹஜ்ரத் முஹம்மது பின் சுலைமான் அல் ஜஜூலி அவர்களின் ‘தலாயில் கைராத்’ என்ற உயர்வான அவுராதைப் பற்றியும் எழுதுகிறார். இந்த மாதிரியும்… இது வேறுவகை ‘வூடு கட்டுதல்’ போலும். ஆடுங்க நானா, ஆடுங்க.

***

ஹமீது ஜாஃபர்ஆப்பக்குச்சி சிலம்பம்
ஹமீது ஜாஃபர்

ஆபிதீனின் வலையில் ‘ஹனிபா போர்த்திய சால்வை‘ என்ற பதிவைப் பார்த்தவுடன் “ஆப்பக்குச்சி சிலம்பம்’ ஞாபகத்துக்கு வந்தது என்று மறுமொழியில் எழுதியிருந்தேன். அதனுடையத் தொடரே இது.

ஓடுற பாம்பை மிதிக்கிற வயசல்ல; கண்டந்துண்டமா வெட்டுற வயசு; ஓனான் வாயில் சுருட்டை திணித்து வேடிக்கைப் பார்க்கிற வயசு; ராத்திரியில் தேங்கா திருடி உடையவன் வீட்டு கொல்லையில் ரண்டு காயை வச்சுட்டு வர்ற வயசு; பதினைஞ்சு பதினாறு வயசு; ரத்த தினாவெட்டு சும்மா இருக்குமா? சின்ன வயசுலெதானே ஷைத்தான் விளையாட்டெல்லாம்!

ஸ்கூல் கோடை லீவு உட்டவுடன் கம்பு, குஸ்தி, மடுவு என்று ஊட்டுக்குத் தெரியாம நாங்க நாலஞ்சு பேர் கத்துக்கிட்டிருந்தோம், வாப்பாக்கு தெரிஞ்சா அடிப்பாக அதனாலெ. நாங்க கத்துக்கிட்ட கலையெ ஊர் கூடு கொடியேத்தத்துலெ காண்பிப்போம்.

வருசா வருசம் நாகப்பட்டினத்திலேந்து புறப்படுற சந்தனக் கூடு மஞ்சக்கொல்லை வழியாத்தான் பாப்பாவூர் போவும். கூடு மட்டுமல்ல கொடியேத்தமும் அப்படித்தான். ஏன்னா நாங்களும் கப்பல், ஏரோப்ளான்,  பத்திகூடுன்னு சில அயிட்டங்களை செஞ்சு நாகப்பட்டினத்திலேந்து வர்றவங்களை ரோட்டிலேயே வரவேற்போம்.

பாப்பாவூரைப் பத்தி கொஞ்சம் சொல்றேன். நாகப்பட்டினத்திலிருந்து வேளாங்கன்னி போற ரோட்லெ நாகையிலேந்து அஞ்சு கிலோமீட்டர் தூரத்துலே மெயின் ரோட்லேந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளே இருக்கும் சின்ன கிராமம். அங்கு பாலாப்பூர் என்ற ஊரில் பிறந்த இறைநேசச் செல்வர் ஷெய்கு அலாவுதீன் என்ற வலியுல்லாஹ் அடங்கியிருக்கிறார்கள். சுமார் பத்து தலைக்கட்டு இருக்கும் மற்றதெல்லாம் நேர்த்திக்கடனுக்காக தங்கியிருக்கும் வெளியூர் ஜனங்கள். வெள்ளிக்கிழமை இரவு மட்டும் கொஞ்சம் கூட்டம் இருக்கும். மத்த நாட்கள் ஈ எறும்பு இருக்காது. இது அப்போது – இப்போது அருகில் கல்லூரி வந்துவிட்டது. துபையில் தடுக்கி விழுந்த இடமெல்லாம் ச்சாயாக் கடை மாதிரி இந்தியாவில் வெளிக்கி இருந்த இடமெல்லாம் கல்லூரி.

சந்தனக் கூடு வர்ற ராத்திரி எங்கஊர்லெ வருசாவருசம் குஸ்தி, சிலம்பு, மடுவு என கலைவிளையாட்டுக்கள் நடக்கும். வெளியூர்லேந்து வெளையாடுறவங்க நெறையபேர் வந்து வெளையாடுவாங்க. பார்ப்பதற்கு இண்ட்ரஸ்டிங்கா இருக்கும். உஸ்தாதுமார்கள் வெளையாடுமுன் கத்துக்குட்டிக்களான நாங்களும் வெளையாடுவோம்.

எங்கஊர்லெ சின்னமரைக்கார்னு ஒரு உஸ்தாது இருந்தார். மூன்ரையடி உயரம், நல்லா உருண்டு திரண்டு மேட்டுப்பாளையம் உருளை கிழங்கு மாதிரி இருப்பார், அல்டா ஜாஸ்தி. அவருக்கு குஸ்தி, சிலம்பாட்டம் எல்லாம் தெரியும். அவர்கிட்டெ கொஞ்சம் கத்துக்கிட்டோம்.

அந்த வருஷம் எங்க சின்னமரைக்கார்தான் எல்லா ஏற்பாடுகளும் செஞ்சார். “நீங்க இந்த வருஷம் நல்லா வெளையாடனும், என் பெயரை காப்பாத்தனும், எல்லாரிடமும் சொல்லிவச்சிருக்கேன், வெளியூர்லேயும் சொல்லிபுட்டேன்” என்றார். நாங்களும் ரெடின்னு சொல்லிபுட்டோம், அதுமட்டுமல்ல ‘ஆப்பக்குச்சி விளையாட்டு’ இருக்குன்னு ஸ்பெஷலா அனவுன்ஸ் பண்ணுங்க நாநா என்றுவேறு சொன்னோம்.

“அது என்ன ஆப்பக்குச்சி? எனக்கு தெரியாத ஆட்டம்” என்று கேட்டார். “வெளையாடும்போது பாருங்க நாநா இது புதுசா கத்துக்கிட்டு வந்திருக்கோம்” என்றோம்.

ஆப்பக்குச்சின்னா என்னான்னு சொல்லிபுடுறேன். அகப்பைக்குச்சித்தான் ஆப்பக்குச்சி என்று மறுவி இருக்கிறது.  கொட்டாங்கச்சியில் (தேங்காய்த்தோட்டில்) இரண்டு ஓட்டைப் போட்டு அதில் மூங்கில் சிம்பை சொறுகி பிடியாக வைத்திருப்பார்கள். இதை சமையல் செய்ய அகப்பையாக உபயோகிப்பார்கள். இதை இன்றும் கிராமங்களில் பார்க்கலாம். அந்த பிடிதான் “ஆப்பக்குச்சி” அப்புறம், நாங்க நாங்கன்னு சொல்வது வேறு யாருமல்ல நான், எனது நண்பர்களான ரவூஃப்தம்பி, நுஜுமுதீன் ஆகிய மூம்மூர்த்திகள் மட்டுமே!

நாள் நெருங்கிக்கிட்டு இருக்க, சின்னமரைக்கார் நாநா என் புள்ளையளுவ ஆப்பக்குச்சி சிலம்பு விளையாட்டு ஆட போவுதுன்னு ஊர் பூராவும் சொல்லிக்கிட்டு அலைஞ்சார்.

இரண்டு நாளைக்கு முந்தியே வெளையாடுற இடத்தை சுத்தப்படுத்தி பொடி கற்களையெல்லாம் எடுத்துப்புட்டு கொஞ்சம் ஆத்துமணல் அடிச்சு வெளையாடுறதுக்கு தோதா ஆக்கிவச்சார். சந்தனக்கூட்டு ராத்திரி நாலு பக்கமும் கம்பு நட்டு, டியூப் லைட் போட்டு, லவுடுஸ்பீக்கர் வச்சு சுற்றிலும் தோரணம் கட்டி ஏக தடபுடலா சினிமா பாட்டெல்லாம் போட்டு எட்டு மணிலேந்து அனவுன்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டார்.

நாங்களும் அவர்கூட அங்கேயே சுத்திக்கிட்டிருந்தோம்.  “தம்பி, இப்ப மணி எட்டரை நீங்க வூட்டுக்குப் போய் கொஞ்சமா சோறு உண்டுபுட்டு சரியா பத்து மணிக்கெல்லாம் வந்துடுங்க, பதினோறு மணிக்கு ஆட்டம் ஆரம்பிச்சுடும். ஒன்னுரண்டு பேர் வெளையாண்ட பொறவு நீங்க உங்க கைவரிசையெ காண்பிங்க” என்று சொல்லி எங்களை அனுப்பிச்சிட்டார்.

நாங்க சரியா பத்தரை மணிக்கு அவர் முன்னால் நின்றோம். “தம்பி, நீங்க மூணுபேரும் ரெடிதானே, உங்களை நம்பித்தான் இருக்கேன், நல்லா வெளையாடனும், காலை வாரிவிட்டுடாதீங்க” என்றார். “நாநா, நீங்க கவலையே படாதீங்க, வெளுத்துகட்டிடுறோம்” என்று சொல்லிபுட்டு அவரு வேறே ஆள்கிட்டே பேசிக்கிட்டு இருக்கிற சமயம் பார்த்து கம்பியெ நீட்டினதுதான் மறுபடி அந்த பக்கம் வரவே இல்லை.

மைக்கில் அனவுன்ஸ் அனல் பறந்தது, “இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆப்பக்குச்சி ஆட்டம் ஆரம்பமாகும், ஆங்காங்கே இருக்கும் அன்பர்கள் அனைவரும் விளையாடும் திடலுக்கு வருமாறு சின்னமரைக்கார் அன்புடன் அழைக்கிறார்” என்று.

அங்கிருந்து மெதுவா நழுவி சுவரேறி குதிச்சு பக்கத்துவீட்டு பூவரசன் மரத்தில் ஏறி நல்ல கிளையாப் பார்த்து உட்கார்ந்திட்டோம். சரியா பத்து மணிக்கு சாபு வந்து ஃபாத்தியா ஓதி சின்னமரைக்கார் நாநாவுக்கு பெரிய மாலை போட்டு அப்புறம் சின்ன சின்ன உஸ்தாதுமார்களுக்கு சின்ன சின்ன மாலையா போட்டு ஆரம்பிச்சாங்க.

மாலையை மருவாதியா களுத்துலே வாங்கிக்கிட்ட சின்னமரைக்கார் நாநா ஒரு சைடு நடுவுலெ போட்டிருந்த கைபுடி வச்ச நாற்காலியில் ஒரு மாதிரியான பாவனையில் உட்கார்ந்து சுத்திமுத்தியும் பார்த்தார். இவரு எங்களைத்தான் தேடுறார்னு தெரிஞ்சது. அவருக்கு பக்கத்திலெ ரண்டு பக்கமும் பெஞ்சு போட்டு அதுலெ ஊர் பெரிசுங்க, மத்தமத்த வெளையாட்டுக்காரங்கள்லாம் உட்கார்ந்திருந்தாங்க.

வளக்கம்போல ஷேக்கலா நாநா, அந்த கம்பை எடுத்து நாலு பக்கமும் சுத்தி திசைக்கு ஒரு வூடா நாலுவூடு கட்டி, கம்பை சாய்ச்சவாறு அக்குள்லெ இடுக்கி ஒரு முனையை பூமிலெ தொடறமாதிரி சின்னமரைக்கார் நாநா கிட்டெ தலயெ குனிஞ்சு ஆசிர்வாதம் வாங்கினாரு.

அப்புறம் வேற ரெண்டுபேரு வெளையாண்டாங்க.

மறுபடியும் அனவுன்ஸ் எங்களை கூப்பிட்டு, “டேய் ரவுஃப், வாடா போய் எதாவது செஞ்சுபுட்டு வந்துடலாம், போவலென்னா அந்தாளு மானத்தை வாங்கிடுவான், எவனாச்சும் நம்மலெ காட்டி கொடுத்துட்டான்னா அவமானமா போயிடும்.” என்ற பயத்தில் நான் சொன்னேன்.

“ஒரு பயலுக்கும் தெரியாது நாம மரத்துமேலே இருப்பது, அந்தாளு ஏதாச்சும் செய்யட்டும் நாம வேடிக்கை பார்த்துக்கிட்டிருப்போம்” என்றான் ரவூஃப்தம்பி. “டேய் தவுடு, (நுஜுமுதீனின் செல்லப்பெயர்) எல்லாம் உங்க ஏற்பாடு, நாளைக்கு இருக்கு அவர்கிட்டெ” என்றான் மேலும்.

“அங்கெ வேடிக்கையெ பாரு, களுத்துலெ கெடக்கிற மாலையெ கடைசிவரை கலட்டவுமாட்டான், விளையாடவும் மாட்டான். இப்படியே காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கான், இன்னைக்கி படட்டும்” என்றான் தவுடு ஆரம்பிச்ச சற்று நேரத்தில் ஆப்பக்குச்சி என்று தொடங்கிய அனவுன்ஸ் “எங்கிருந்தாலும் ஹமீது, ரவுஃப்தம்பி, நுஜுமுதீன் ஆகிய மூவரும் விளையாட்டு மைதானத்திற்கு வருமாறு அழைக்கிறோம்” என்று பத்து நிமிஷத்துக்கு ஒருமுறை சொல்லத்தொடங்கினர். ஒரு பத்து முறை சொல்லியிருப்பார்கள். இரண்டு மணிநேரத்தில் அணைத்து விளையாட்டுக்களும் நடந்து முடிந்திருக்கும்.  விளையாட்டு மும்முரமாக நடந்துக்கொண்டிருக்கும்போதே நாங்கள் மரத்திலேந்து கீழே இறங்கி இருடோட இருட்டா பாப்பாவூர் சென்றுவிட்டோம்.

மறு நாள் வீடுதேடி வந்துவிட்டார், உம்மா சமாதானம் சொல்லி அனுப்பிவிட்டார்கள். இரண்டு நாள் வரை அவர் கண்ணில் படவேயில்லை. அப்புறம் பார்க்கும்போதெல்லாம் “தம்பி, உங்க ஆப்பக்குச்சி விளையாட்டு ரொம்ப நல்லா இருந்துச்சு, எனக்கு நல்லபேர் வாங்கிக்கொடுத்திட்டீங்க” என்பார்.

மறு வருசம் நாநா என்றதும், போதும் இனி இந்த ஏற்பாட்டுக்கெல்லாம் நாம இல்லை என்று ஒதுங்கிவிட்டார்.

*

நன்றி : ஹமீது ஜாஃபர்
மின்னஞ்சல் : manjaijaffer@gmail.com

2 பின்னூட்டங்கள்

  1. மஜீத் said,

    14/09/2010 இல் 15:57

    சூப்பர் நானா. எதிர்பாத்துக்கிட்டு இருந்தேன், ஏதோ ஒண்ணு பெருசா வரப்போகுதுன்னு, வந்துருச்சு!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s