ஹனிபா போர்த்திய சால்வை

முதலில் என் பெருநாள் வாழ்த்துக்களை பிடித்துக்கொள்ளுங்கள். ஈத் முபாரக்!

சால்வை போர்த்தியது , ‘காணாமல் போன’ நண்பர் கய்யூம் காட்டிய இந்த ஹனிபா அல்ல; ஜெ.மோ தீட்டிய அந்த ஹனிபாவும் அல்ல ( மாடியிலிருந்து கீழே விழுந்த நொடியில் ‘அசம்பிளி பிரிச்சு உட்டு’ என்று பேப்பர் வாசிப்பார் மனுசன், ‘வெட்டம்’ சினிமாவில்; அட்டகாசம்). இது இலங்கை எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபா. அவருடைய எழுத்தின் ரசிகன் நான். ‘எத்தனை நாளைக்கு மக்கத்து சால்வையை போர்த்திக் கொண்டிருப்பது அல்லது பக்கத்து பஷீர்-ஐ பார்த்துக்கொண்டிருப்பது?’ என்ற வரி ‘இஸ்லாமியக் கதையெழுத இனிய குறிப்புகள்’-இல் வரும். அந்த ‘மக்கத்து சால்வை’ எழுதிய மாமனிதரேதான். இரண்டு மாதத்திற்கு முன் – ஊரில் இருந்தபோது – அவரிடமிருந்து ஒரு மெயில் வந்திருந்தது.  எனக்கோ ஆச்சரியம்; சந்தேகம் வேறு. இதனாலேயே சிலருக்கு பதில் எழுதுவதில்லை. சும்மா இருந்தேன். மறுபடியும் மெயில்!

ஹனிபாவின் செல்லமான பிரியமும் அண்ணனுக்குரிய அதட்டலும் பிடித்திருந்ததால் அவருடைய புகழ்பெற்ற கதையை இங்கே பதிகிறேன் – அவருடைய மெயில் வாசகங்களோடு, நிறைய கூச்சத்தோடு. நானிலம் போற்றும் நாகூர்க்காரர்கள் மாதிரியோ நற்நற்குணமிக்க அரபுத்தமிழர்கள் மாதிரியோ ‘நட்போடு’ என்னை ஒதுக்காமல் ஈழத்திலிருந்து இறங்கி என்னை ஏற்றுக்கொண்டாரே என்ற மகிழ்ச்சி. அவ்ளோதான்.

ஒரு விஷயம் : எல்லாரையும் போல ஹனிபாவுக்கும் என் ‘வாழைப்பழம்’தான் பிடித்திருக்கிறது (அஸ்மா கவனிக்கவும்!)

‘மக்கத்து சால்வை’ சிறுகதைத் தொகுப்பு நூலகம் தளத்தில் இருக்கிறது. இங்கே பார்க்கலாம். அதன் முன்னுரையில், ‘ஓட்டமாவடிச் சூழலிலே நடமாடும் மகா சாமாண்ய மனிதர்களிலே அவர்கள் பயிலும் தமிழிலே, மனிதத்துவத்தின் சத்தியம்-தர்மம் என்ற இரு முகங்களையும் தரிசிக்க நடாத்தும் ஓர் இலக்கியத் தேடலாக இத்தொகுதியிலுள்ள பல கதைகள் அமைந்துள்ளன’ என்கிறார் எஸ்.பொ.

காலச்சுவடு பதிப்பக வெளியீடாக ” அவளும் ஒரு பாற்கடல் ” என்று ஒரு சிறுகதைத் தொகுதி சமீபத்தில் வெளியாகிருப்பதாக சாபத்தா சொல்கிறார். ‘இதிலே “மக்கத்து சால்வை’ எனும் ஒரு சிறுகதை முற்றிலும் சிலம்பாட்டத்தை சுற்றி சுற்றியே வருகிறது. தவிர இக்கதை 1992 ல் வெளிவந்த உடனே இலங்கை அரசின் கல்வித் திணைக்களத்தின் 11ம் வகுப்பு தமிழ்ப் பாடத் திட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக இடம் பெற்று வருகிறதாம். நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய சிறுகதை’ – பண்புடன் குழுமம்

நேரம் கிடைக்கும்போது ஹனீபா இப்போது எனக்கு மெயில் எழுதுகிறார். நட்பு தொடர்கிறது – அவர் ‘பாமினி’யை உபயோகித்தாலும்!

எனக்கும் தாஜுக்கும் உமாமகேஸ்வரி பிடித்திருப்பதுபோல அவருக்கு அனார். ‘உங்களுக்கு மகேஸ்வரி குருவியென்றால் எனக்கு அனார் ஒரு பஞ்சவர்ணக்கிளி.  நேற்று அனார் எழுதிய ஒரு புதிய கவிதையை எனக்கு தொலைபேசியில் படித்துக் காட்டினார் ரொம்பவும் கலகலப்பாகயிருந்தது. ஊஞ்சல் ஆடும் ஓர் பெண்ணின் களிகொண்டாட்டம்.  அனாரின் கண்களுக்குள் எப்போதோ உறைந்து போன காட்சிகள் இன்றுகவிதையாக. நாமும்தான் தலை “கிறுகிறுக்க”  ஊஞ்சலாடினோம்–ஆனாலும் அந்தத்தருணம்  நமக்குச் சித்திக்கவில்லையே. ‘தொட்டால் பாஷை!புரிகிறதா’ என்றார் லாசரா. இன்று தொடாமலே—தொலைவிலிருந்து அனாரின் கவிதைகள் நம்மையும் பதினைந்து வயதில் சேர்த்து விடும் விந்தை. அவர் கவிதையின் மாயமே அவரின் மொழிதான். ஊஞ்சல் கவிதை உங்களை வந்தடையும்.’ என்று எழுதியிருந்தார் நேற்றைய மெயிலில்.

‘எல்லோரும் வாழப் பிரார்த்திக்கிறேன் – நரேந்திரமோடி உட்பட’ என்ற கடைசி வரி அண்ணன் ஹனிபாவின் எழுத்தையும் இதயத்தையும் சொல்லும்.

மீண்டும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.

***

ஹனிபாவின் மெயில் :

அன்புள்ள ஆப்தீன்

இன்றுடன் மூன்று கடிதங்கள் அனுப்பியாகி விட்டது. அடப்பாவி பதிலே தரமாட்டேன்கிறியே.. அப்படி பிசியா? உன்னுடைய பக்கங்களை படிப்பதற்காகவே ஒரு லெப்டெப் வாங்கி பாலர் பாடசாலைக்கு சிறுவர்கள் போவதுபோல் தோளில் தொங்கப்போட்டுக் கொண்டு ஒவ்வொரு கம்பியூட்டர் நிலையங்களுக்கும் இந்த அறுபத்தைந்து வயதில் படியேறி இறங்குகிறேன் இதற்கும் நீ பதில் தராவிட்டால் இங்குள்ள ஏதாவது ஒரு பத்திரிகையில் உன்னை வம்புக்கு இழுப்பதை தவிர வேறு வழியில்லை அறுபத்தைந்து வயதிலும் உன்னுடைய வாழைப்பழம் எனக்கு இனித்தது.

இப்படிக்கு
‘மக்கத்து சால்வை’ எஸ்.எல்.எம். ஹனீபா | Sun, May 16, 2010

***

மக்கத்துச் சால்வை
எஸ்.எல்.எம். ஹனீபா

“தம்பி மம்மனிவா ஞாபகமிரிக்காடா மனெ? அண்டெய்க்கி உங்கெ வாப்பால்லாம் பேசாமெ வாயெப் பொத்திட்டாங்கெ. நீ சின்னப்பொடியன். காகத்தெப்போலெ அதெக் கண்டுக்கிட்டாய். உண்டெ சத்தெம் எனைக்கி விசிலடிச்சாப்லெ இரிந்திச்சி.”

“அடிபட்டிட்டு அடிபட்டிட்டு அண்ணாவியார்ரெ தலையிலெ அடிபட்டிட்டு.”

“நீ மட்டும்தாண்டா மனெ அதெக் கண்டாய். இண்டெய்க்கிம் அந்தச் சத்தம் என்டெ காதிலெ இரையிதிடா மனெ.”

அது எப்பவோ நடந்த விளையாட்டு. நேற்றுப்போலெ தான் இருக்கிறது. நெஞ்சில் அப்படியே ஈரமாக…

அப்பவெல்லாம் மூன்று நான்கு நாள்களுக்கு முந்தியே பெருநாள் மணக்கத் தொடங்கிவிடும்.

பொழுது விடிந்தால் பெருநாள். பையென்னா ஹோட்டெல் ‘கலகல’த்தது. கண்ணாடி ‘ஷோட்கேஸ்’ இரண்டும் ‘பளிச்’ சென்று – உள்ளெ தின்பண்டங்கள் கண் சிமிட்டும். பசு நெய்யில் பையென்னாவின் கைபட்டுப் பக்குவப்பட்ட ‘மஸ்கெற்’ வாசம். ஒரு துண்டின் விலை இருபது சதம். ‘ரீ’ ஒன்று பத்து சதம்.

அதுவும் பையென்னாடெ கையால் ‘நோனா மார்க்’ கட்டிப் பாலில் ரீ போட்டால் தனிச் சுவைதான். இறுகிய சாயமும் கட்டிப்பாலும் அவர் கைபட்டுச் சுவை கூட்டும் வித்தை. ‘மஸ்கெற்’றில் ஒரு துண்டைக் கடித்து ‘ரீ’யும் அடித்துவிட்டு வெளியே வரும்போதுதான் ஹொட்டெலுக்குக் குளிரூட்டி நின்ற பூவரசு மரத்தில் ஒட்டியிருந்த கடதாசி கண்ணில் பட்டது.

‘ஹஜ்’ பெருநாளை முன்னிட்டு நாளை அசர் தொழுகையில் பிறகு மாபெரும் கம்பு விளையாட்டுப் போட்டி, பிரபல சீனடி வாத்தியார் நூகுத்தம்பியுடன் மோதுபவர்கள் முன்வரலாம். பரிசாக ஒரு மக்கத்துச் சால்வையும் பறங்கி வாழப்பழக் குலையும் வழங்கப்படும்.’

அந்த வருஷத்துப் பெருநாள் பெரும் கொண்டாட்டமாகவே இருந்தது. பெருநாள் பொழுது உச்சியைக் கடந்து உப்பாத்துப் பக்கமாகக் கெளிந்தும்விட்டது. பக்கத்தூர் சனங்களெல்லாம், கிராமத்தின் சந்தை முகப்பில் ஈயாய் மொய்த்துவிட்டார்கள்.

முன்வரிசையில் – பெரியவர்களின் முழங்கால்களுக்கிடையில் நாங்கள்-வாண்டுக்கூட்டம்-குந்திக்கொண்டோம்.

ஊரின் விதானையாரும், மத்திச்செமாரும் கூட்டத்தில் ஒழுங்கை நிர்வகித்துக்கொண்டிருந்தார்கள். பொழுது ஊர்ந்தது. போட்டிக்கு வந்த அண்ணாவியாரும் அவரின் சீடப் பிள்ளைகளும் துடித்துக்கொண்டிருந்தார்கள். சவால் விட்ட நூகுத்தம்பி வாத்தியார் இன்னும் ஆஜராகவில்லை. எல்லோரும் ஆற்றங்கரை வீதியையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். கேலிப் பேச்சுகளும் நக்கல்களும் கிளம்பத் தொடங்கின. தூரத்தே ஒரு சைக்கிள் வண்டி மிக வேகமாக வந்துகொண்டிருந்தது.

“அன்னா வந்திட்டார்! ஹோய்ரா…!”

கூச்சலுடன் கூட்டம் கலகலத்திற்று.

நூகுத்தம்பிதான் வந்துகொண்டிருந்தார். வந்த வேகத்திலேயே அவரின் சைக்கிள் இன்னொருவரின் கைக்கு மாறியது. அடுத்த கணமே அவர், விளையாட்டு நடைபெறும் வீதியின் மையத்தில் பாய்ந்து நின்றார்.

கருங்காலி போன்ற உடல்வாகு. வீச்சுத் தொழிலில் உரம் ஏறிப்போன விசைகொண்ட கைகளும் கால்களும். கட்டுக்டங்காத காளையின் தோற்றம்.

மீண்டும் கைதட்டல்கள் சீழ்க்கை ஒலிகள் – உடுத்தியிருந்த பழைய ‘கார்ட்’ சாரணை களைந்தார். கையிலிருந்த சாரன் பறந்துபோய் பூவரச மரத்தில் ஒட்டிக் கொண்டது. உள்ளெ முழங்கால் மறைந்த சிறுவாலும் கைவைத்த பனியனும்…

விம்மிப்புடைத்த நெஞ்சிலிருந்து வெட்டுவாளாகக் கரங்களிரண்டும் வெளிக்கிளம்பியது. நின்ற நிலையிலேயே கரங்களிரண்டையும் சுற்றி – அந்தரத்தில் பாய்ந்து – திடீரெனக் குனிந்து பூமியைத் தொட்டு முத்தமிட்டு – ஒப்புதல் எடுத்துச் சலாம் வரிசை போட்டார். மகிழ்ச்சிப் பிரவாகம் கடல்போல் கொந்தளித்து அடங்கியது.

“நூகுத்தம்பியுடன் சிலம்பம் விளையாட விரும்புபவர்கள் வரலாம்.” விதானையாரின் அறிவித்தல்.

சனத்திரனின் மறுகரையில் இன்னோர் உருவம். சுற்றிச் சுழன்று – மின்னல் கோடுகளாய் – கையிலிருந்த கல் விண்ணாங்குத்தடி “ங்…ய்….ய்” ஊதி வெளிவந்திற்று. அகமதுலெவ்வை அண்ணாவியார்தான். அவரின் கையிலிருந்த தடி ஓர் பாம்புபோல அவரைச் சுற்றிச் சுற்றிப் படமெடுத்தாடியது.

பார்வையாளர்களின் பாதங்கள் பூமியில் தாவவில்லை. விளையாடத் தெரிந்தவர்களுக்குக் கையும் காலும் தினவெடுத்திற்று.

“இப்பொழுது நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு வாழைப்பழக் குலையொன்று பரிசாக வழங்கி, மக்கத்துச் சால்வையால் போர்த்தப்படும்.”

விதானையாரின் அறிவிப்பு வந்ததும் கரகோஷம் வானைப் பிளந்தது.

ஒருபக்கம் அகமதுலெவ்வை அண்ணாவியார். மறுபக்கம் நூகுத்தம்பி வாத்தியார். ரெண்டும் ரெண்டுதான். சோடையில்லாத சோடி.

முதலில் இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கியவாறு நான்கு பாக இடைவெளி விட்டு நின்றார்கள். விதானையார் ‘ஆரம்பம்!’ சொன்னார்.

அடுத்தகணமே புழுதிப் படலம் கிளம்ப இருவரும் சலாம்வரிசை எடுத்தார்கள்.

சுற்றிச்சுற்றி – அந்தரத்தில் கிளம்பி – நான்கு கைகளும் அரிவாள்போன்று மின்னல் வெட்டி…. உருவங்கள் இரண்டு பம்பரம்போல் சுழல்வது மட்டுமே கண்களுக்குப் புலனாகின.

சலாம் வரிசை எடுத்ததும் மீண்டும் அவரவரின் மூலைக்குள் போய் நின்று கொண்டார்கள்.

அகமதுலெவ்வை அண்ணாயாருக்கு வெலிகாமத்து மவுலானா வாப்பாதான் குரு. மவுலானா வாப்பாவின் கையால் தொட்டு வாங்கிய தடியை, அவரின் மகன் தொட்டுக்கொடுக்க மிகவும் பாந்தமாகப் பற்றிக்கொண்டார்.

இரு கைகளின் விரல்களுக்கிடையில் நின்று – அக்கம்பு “ங்ய்…ய்” ஊதி நர்த்தனமாடியது. ஒரு தடி, நான்காகி, பதினாறாகிப் பல்கிப்பெருகி கண்களுக்குள் மாயாஜால வித்தை காட்டிற்று.

எதிர்த்திசையில் நூகுத்தம்பி வாத்தியார். தனது குருவான இந்தியக்கார நானாவின் கையால் வாங்கிய பிரம்புடன் நின்றுகொண்டிருந்தார்.

இரு விளிம்புகளிலும் வெள்ளிப் பூண்களால் மோதிரம் போடப்பட்ட மூங்கில் பிரம்பைத் தனது வலது கையால் மட்டுமே எடுத்துச் சுற்றிச் சுழற்றினார்.

இடக்கை அசையாமலிருக்க வலக்கை மட்டு ம சுற்றிச் சுழன்றது. அந்த நுட்பம், லாவகம் அவருக்கே கைவந்த வித்துவம். ஒரு வெள்ளிப் பறவை தனது பரிவாரங்களுடன் தாளலயம் தப்பாது – சிறகடித்துப் பறந்து பறந்து மாயுமே, அவ்வாறு நூகுத்தம்பியின் கையிலிருந்த வெள்ளிப்பூண் பிரம்பு பறந்தலைந்தது.

முதல் சுற்று முடிந்து – இரண்டாவது ஆட்டமும் தொடங்கிற்று. காகங்களிரண்டும் கம்புகளினூடாக தங்கள் தங்கள் பார்வையைக் குவித்துக் கறுவிக்கொண்டன. ஒன்றையொன்று துரத்தித் துரத்தி…ஒன்றையொன்று போருக்கு அழைத்து அழைத்து…அலைக்கழித்து அதே கணம் மின்னலெனச் சீறிப்பாய்ந்து….ஒன்றையொன்று கொத்திக்குதறி….

புழுதிப்படலம் மேலெழும்ப அந்த அற்புதக் காட்சி!

திடீரெனப் புறப்பட்ட நூகுத்தம்பியின் வெள்ளிப்புறா அகமதுலெவ்வை அண்ணாவியாரின் தோளைத் தொட்டுப் பார்த்துத் திரும்பியது.

தடுமாறிய அண்ணாவியார், தழும்பிய பாதங்களை நிலத்தில் பலமாகப் பதித்துக்கொண்டார்.

“அடிபட்டிட்டு அடிபட்டிட்டு அண்ணாவியார்ரெ தலையிலெ அடிபட்டிட்டு” நானும் மம்மலியும்தான் கூப்போட்டோம். ஊரில், ‘தலையாலெ தெறிச்சதுகள்’ என்று பட்டம் வேறு வாங்கியிருந்தோம்.

“டேய்! பொத்துங்கடா வாயை. யாருக்கிட்டெ கதைக்கிறீ கெ” அண்ணாவியார்ரெ சீடப்பிள்ளைகளில் ஒருவரனான ஈறாங்குட்டி சீறிப்பாஞ்சான்.

“அடிபடெல்லெ அடிபடல்லெ…இவ்வளவு பெரிய மனுஷனுகள்றெ கண்ணையும் மறச்சிட்டு – இந்தெ ஹறாங் குட்டிகள்றெ கண்ணிலெ மட்டும் தைச்சிட்டு…”

மத்திச்செம் பார்த்த புகாரி விதானையார் – அந்தத் தருணம் பார்த்துத் தனது பார்வையை எங்கோ கோட்டை விட்டுவிட்டார். கூச்சலும் இரைச்சலும் கூடிவிட்டது. அண்ணாவி அகமதுலெவ்வையின் சீடப்பிள்ளைகள் சுற்றி வட்டமிட்டு நின்றார்கள். ஒவ்வொருத்தனும் “நறநற” வென்று பல்லைக் கடித்து….

நூகுத்தம்பி வாத்தியாரின்மீது பாய்ந்து குதறிக் கிழிக்க வேண்டும்போல் ஆத்திரத்தில் “படபட”த்தனர்.

“டேய்! எங்கெட ஆளுக்கு அடிக்க ஏலுமாடா? வாங்கடா பாப்பம்?” ஆளுக்கொரு கம்புடன் ஆவேசத்துடன் பொங்கினார்கள்.

நூகுத்தம்பி வாத்தி தன்னந்தனியனாய் – வாயில் கைவைத்து விக்கித்துப்போய் நின்றான். ஊர் மத்திச்சத்தினருக்கு அவர்களைச் சமரசத்திற்குக் கொண்டுவருவதே பெரும்பாடாகிவிட்டது.

“டேய்! யாரும் சத்தம் போடவேண்டாம்.” கையில் பிரம்புடன் முகம் ‘கடுகடுக்க’ விதானையார் ஆணையிட்டார். கூட்டம் பெட்டிப்பாம்பாக அடங்கியது.

“போட்டியை மீண்டும் ஆரம்பிப்போம்.”

விதானையார் முடிவெடுத்தார்.

“என்னெ திருப்பியும் விளையாடவா?” அலப்பெ வேணாம்!” நூகுத்தம்பி வாத்தி அடம்பிடித்தான்.

“நீ அடிச்செத்தெ நாங்கெ பாக்கெல்லெ…” கூட்டத்தில் பெரும்பகுதியினர் கூச்சல் போட்டனர்.

நூகுத்தம்பியின் உள்ளம் குமுறியது.

“நான் வென்றதும் போய். கடைசியிலெ கரையானிண்டும் ஏசிப்போட்டானுகள்.” அவன் கண்கள் கலங்கியது. ஆவேசம் வந்தவனைப்போல – வெள்ளிப்பூண் பிரம்பைக் கையிலெடுத்தான். அட்டம் தொடங்கியது. அனைவரின் கண்களும் பிரம்பிலும்….கம்பிலும்…குத்திட்டுப் பாய்ந்து நின்றன.

விளையாடிக்கொண்டிருந்த நூகுத்தம்பியின் கண்களுக்குள் – நெருப்பு மணி ஒன்று காற்றில் வந்து விழுந்ததைப் போல – கண்கள் பற்றி எறிந்தன. அவன் தம் கையொன்றை கண்களுக்கு அருகில் கொண்டுபோன அதேசமயம் – அவன் தோளை அண்ணாவியார் ஏவிய பாம்பு கொத்திவிட்டு மீண்டது.

“அடிபட்டிட்டு அடிபட்டிட்டு….அண்ணாவியாருக்கு வெற்றி.”

அண்ணாவியாரைத் தூக்கிக்கொண்டார்கள். விதானையாரும் மததிச்செமாரும் அவரை மக்கத்துச் சால்வையால் போத்தினார்கள்.

பையன்னா தமது கடையில் தொங்கிய பறங்கி வாழப்பழக் குலையை அண்ணாவியாரின் கையில் கொடுத்தார்.

சலவாத்துடன் ‘பொண்டுகளி’ன் குரவையொலியும் இணைந்து வானைமுட்ட – அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்.
“தம்பி என்னெ யோசிக்காய்?”

பழைய ஞாபகத்தில் மூழ்கியிருந்த என்னை அவர் குரல் நிணத்திற்கழைத்தது.

“நல்லா ஞாபகமிரிக்கி. எனைக்கி நல்லா ஞாபகமிரிக்கி அண்டய்க்கி உங்கெளுக்கு நடந்தது அநீதிதான்.” நான் மிகவும் நிதானமாகச் சொன்னேன்.

“அண்டய்க்கி இந்த மண்ணெவிட்டு – சொந்த பந்தங்களை விட்டு போனெவன் நான். இண்டய்க்கி முப்பது வருஷத்தைக்குப் பிறகு வந்திரிக்கென். நீயெல்லாம் ஊரிலே பெரியாக்காளாப் போனீங்களாம். எனைக்கிச் சந்தோசம்.”

அவரின் கண்கள் பனித்தன.

“மம்மனிவா! என்டெ புள்ளகள் ரெண்டுபேரு கொழும்புக் கெம்பெஸ’லே படிக்கானுகள். மூத்தவன் வெளிநாட்டுக்குப் போய்வந்து தனியா ரெண்டு ‘இன்ஜின்போடு’ வாங்கி ஆழ்கடலுக்குப் போறாண்டாமனெ. மலையிலெ எங்கெளெயும் மனுசனா மதிக்காங்கெடா. அண்டய்க்கி எங்களுக்கு கரையானுகளெண்டுதானே நீதி கிட்டெல்லெ… இண்டைய்க்கி எங்கெடடெவென் ஊருக்கும் அல்லாஹ்ட பள்ளிக்கும் தலைவனா வந்திட்டான். எங்கெடெ நாத்தெப்பிலாலுக்கு கிலோ நூறு ரூவாடா மனெ. அரிசி விலையைக் காட்டிலும் அஞ்சிமடங்கு கூடிட்றா.”

அவர் நெஞ்சில் என்றோ கிளைத்த சுழி – பேரலையாகிப் பொங்கிக் குமுறியது.

“இப்பெ என்னெ செய்வெம்?”

“எனைக்கி நீதி வேணும். நான் திரும்பவும் அகமதுலெவ்வை அண்ணாவியோடெ கம்பு விளையாடணும். என்னையும் மக்கத்துச் சால்வையாலெ போத்தணும்!” அவர் விடாது பேசினார்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு – இந்த மனிதனுக்கு இப்படியொரு ஆசையா? மூளையேதும் பிசகோ?”

என் மனம் தவித்தது.

“என்னெ யோசினெ? ராவைக்கு நான் மூத்த ராத்தாட்டான் தங்குவென். சுப்ஹு தொழுதாப்லெ வருவென். முடிவெச் சொல்லு.”

பஞ்சுப் பொட்டியாய் தொங்கிய தாடியைக் கோதி விட்டுக்கொண்டே அந்த மனிதர் ‘கிடுகிடு’வென்று படியிறங்கிக்கொண்டிருந்தார்.
“யார்ரு வீட்லெ?” நான்.

“வாங்கம்பி உள்ளெ!”

அகமதுலெவ்வை அண்ணாவியார்ரெ மனைவிதான் அழைக்கிறா.

“அண்ணாவியார் எங்கெ?”

“படுகாட்டு வயலெப் பாக்கப்போனாரு. இனி வாறநேரந்தான்.” கூறிக்கொண்டே மெதுவாக அடுப்பங்கரையை நோக்கி…

தேயிலைப் பானை அடுப்பில் ஏறியது. ஐம்பதைத் தாண்டியும் கட்டுக்குலையாத அழகு. அத்தனை பல்லும் முத்துப்போல. அங்கொன்றும் இங்கொன்றுமாக முடியில் மட்டும் வெள்ளிக்கோடுகள்….

“என்னெ தம்பி கனகாலத்தைக்குப் புறகு?”

“அண்ணாவிச் சாச்சாவைக் காணணும்” நான் சொல்லி முடீவதற்குள்-முன் வாசலை சைக்கிள் எட்டிப் பார்த்தது. எங்கள் பேச்சு எங்கெல்லாமோ சுற்றிவளைத்து – நூகுத்தம்பி வாத்தியாருடன் சங்கமித்தது.

“சாச்சா! அது நடந்து முப்பது வரிஷம். இன்னெம் நெஞ்சிலெ அப்படியெ…”

“ஓம்! மனெ அண்டெய்க்கி அவர்தான்….” அண்ணாவியார் பேச்சை மடக்கிக்கொண்டார். அவர் முகத்தில் ஏதோவொரு உணர்வுகளின் சாயல் படருகிறது. அவர் தோளில் மக்கத்துச் சால்வை பாரச் சுமையாகியதைப்போல….

“திருப்பி விளையாடனுமா? அதுக்கென்னெ விளையாடுவெம்” என்றவரின் மனம் எதையோ அசைப்போட்டது.

“என்னெ சீனடி விளையாட்டா? இந்தெ வயசிலெ இந்தக் கிழவனுகெள்?” சாச்சி கேலி பண்ணினா. அன்று ஜும்ஆ நாள்.

அசர் தொழுகையின் பின்னால் தங்கள் பயங்களையெல்லாம் மறந்தவர்களாக….மக்கள்….

பையென்னா ஹோட்டெல் பாழடைந்து – சந்தைக் கடைகளெல்லாம் எப்பவோ மூடி – பூட்டுகளில் கறள் கட்டியும்விட்டது.

இழவு வீடுபோல் காட்சியளிக்கும் அந்த வீதியில் மக்கள் ‘திமுதிமு’வென்று…

எழுபது வயது இளைஞர்கள் இருவரும் களத்தில்….

அகமதுலெவ்வை அண்ணாவியார் தனது மூக்குக் கண்ணாடியின் கால்களை – றப்பரைக்கொண்டு கட்டி, பிடரிப்பக்கமாக முடிச்சுப் போட்டுக்கொண்டார். நாற்பது வயதுக்குப்பிறகு அவருக்குப் பார்வைக்கோளாறு ஏற்பட்டுவிட்டது.

அன்றைக்கு மத்திச்செம் பார்த்தவர்களில் எவரும் இப்போது உயிரோடில்லை. எல்லோரும் மண்ணுக்குள் மறைந்து விட்டார்கள். புதிய இரத்தங்கள் ஊரைப் பரிபாலித்தது.

“ஆரம்பம்!”

விளையாட்டு ஆரம்பமாகியது. புதிய தலைவர் ஆணையிட்டார். அண்ணாவியாரின் கையில் அதே கல் விண்ணாங்குத்தடி காய்ந்து – தைலம் வற்றி “ங்ங்…ய்” ஊதிக்கொண்டு படமெடுத்தாடியது. அவர் குந்தி எழுந்து சுற்றிச் சுழன்றார். அந்தரத்தில் வட்டமிட்டு – அதேவேகத்தில் காலடி மண்ணைத் தொட்டு முத்தமிட்டுக்கொண்டார்.

நூகுத்தம்பி மறுதானின் கையிலும் அதே வெள்ளிப்பூண் மூங்கில் பிரம்பு. கையிலிருந்து சிறகடித்து கொக்கரித்தது. அவரின் ஒற்றைக் கைச்சுழலில் மூங்கில் பிரம்பு விண்ணொலி பிழிந்தது.

எழுபது வயதுக் காகங்கள் இரண்டும்….நீச்சலடித்து; கரைகட்டி நின்றன. அவர்களின் மார்புகள் உயர்ந்து உயர்ந்து தணிந்தன.

மீண்டும் விளையாட்டுத் தொடங்கியது.

நூகுத்தம்பி மஸ்த்தானோ பழைய வஞ்சத்தை நெஞ்சில் நிரப்பி நெருப்பாகச் சுற்றிச் சுழன்றார்.

அகமதுலெவ்வை அண்ணாவியார் – நின்று நிதானித்து எதிரியை மடக்கிப் பிடிக்கப்பார்த்தார். மூங்கில் பிரம்பின் ஒவ்வொரு அடியையும் – லாவகமாகவும் புத்திசாதுரியமாகவும் தடுத்துக்கொண்டிருந்தபோதுதான் அது நடந்தது.

அகமதுலெவ்வை அண்ணாவியாரின் கண்ணாடி கழன்று – வீதியின் மறுகரையில் விழுந்து நொருங்கியது…அதேசமயம் நூகுத்தம்பியின் வெள்ளைப்புறா அவரின் தோளின் அருகில் போய்…

புறா நினைத்திருந்தால் கொத்திக் காயமாக்கியிருக்கலாம். ஒருகணம்தான் பின்வாங்கிற்று…

அண்ணாவியாரின் கண்களுக்குள் பாநூறு வெள்ளைப் புறாக்கள் – அவர் திக்குமுக்காடிப் போனார்.

நூகுத்தம்பி மஸ்தானின் வேகம் மட்டாகியது. கையிலிருந்த மூங்கில் பறவை, பறந்து பறந்து, சுழன்று சுழன்று அடித்துக்கொள்ள –

சிந்தனைக் காகம் அடம்பிடித்தழுதது.

‘கண் பார்வை புகைச்செல்போலெ. இவருடன் நான் மோதுவது நீதியில்லெ. இந்தெ வயசிலெயும் அல்லாஹ் எனைக்கி இவ்வளவு பிலத்தையும் கண்ணிலே ஒளியெயும் தந்தானெ இதான் பெரிய பரிசு.’ அவர் மனசு மத்திச்செம் கூறியது.

மறுகணம் அவர் கையிலிருந்த வெள்ளிப் பூண்போட்ட மூங்கில் புறா எங்கோ பறந்துகொள்ள – ஓரே பாய்ச்சலில் அவர் அகமதுலெவ்வை அண்ணாவியாரை ‘முசாபா’ச் செய்யக் கட்டிப்பிடித்தார்.

அகமதுலெவ்வை அண்ணாவியாரும் தமது கல் விண்ணாங்குத் தடியைத் தூர எறிந்தார்.

இரண்டு காகங்களும் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்து….முசாபாக் செய்து….முத்தமிட்டு…

பார்வையாளர்களின் கண்கள் கசிந்து மேனி சிலிர்த்திற்று –

மஸ்தானின் பிடியிலிருந்து விலகிய அண்ணாவியார் ஏதோ பேச ஆயத்தமானார். கூட்டத்தினர் வாயடைத்து நின்றனர்.

“அஸ்ஸலாமு அலைக்கும்! முப்பது வருஷத்திக்கு முந்தி நடந்த போட்டிலெயும் நூகுத்தம்பிதான் வெத்தினார். அண்டெய்க்கி அந்தெ வெத்தியெ என்டெ வரட்டுக் கவுரவம் எத்துக்கெல்ல. அண்டெய்க்கிம் இண்டெய்க்கும் இவருதான் வெத்திவீரன்.” என்றவர் உடனே முப்பது வருடங்களுக்கு முன்னர் ஊர்மக்கள் தன்னைப் போர்த்தி, சங்கை செய்த மக்கத்துச் சால்வையை இடுப்பிலிருந்து பவ்யமாக எடுத்தார்.

சால்வையின் இரு கரைகளையும் ஒன்றாகப் பிடித்து உதறியவராக – அதேவேகத்தில் நூகுத்தம்பி மஸ்தானைப் போர்த்தியும் விட்டார்.

இத்தனை வையை வழங்கிவிட்ட திருப்தியில் – பாவச்சுமை கழன்றுவிட்ட ஆனந்தத்தில் அவரின் கண்கள் கசிந்தன.

நாயகத்தின் பெயரால் சலவாத்து வானத்தை எட்டியது. அந்தப் பூவரச மரமும் ஆனந்தத்தில் சிரித்துக் கொள்ள – நூகுத்தம்பி மஸ்தானின் தோளில் கிடந்த மக்கத்துச் சால்வையின் அத்தர் வாசனை காற்றில் கலந்து நிறைந்தது.

– 1991 –

*

நன்றி : எஸ்.எல்.எம். ஹனீபா , நூலகம்

தொடர்புக்கு :  slmhanifa22@gmail.com

*

மேலும் வாசிக்க : ஹனிபாவின் ‘மச்சி’  (சிறுகதை)

9 பின்னூட்டங்கள்

  1. நாகூர் ரூமி said,

    08/09/2010 இல் 14:55

    அற்புதமான கதை, வெளிகாமா மவுலானா வாப்பாவிடம் ஆசி பெற்ற கம்பு என்ற தகவல் ரொம்ப ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஏனெனில் இப்பவும் வெளிகாமத்தில்தான் வாப்பா நாயகம் என்று அழைக்கப்படும் மகான் வாழ்ந்து வருகிறார். திருமுல்லை வாசலில் அடங்கியிருக்கும் யாஸீன் மவுலானா அவர்களின் மகனார். எல்லா வகையான இலக்கிய அந்தஸ்துகளும் ஒருங்கே அமைந்த கதையாக இருந்தது.

  2. தாஜ் said,

    09/09/2010 இல் 17:25

    மக்கத்துச் சால்வை
    *
    மிக நேர்த்தியாக இருந்தது.
    பல வருடங்களுக்கு முன் இப்படி
    எஸ்.எல்.எம்.ஹனீபா வெளிப்பட்டும்
    நம்மால் அறிய முடியாமல் போனதில்
    வெட்கமே மிகுகிறது.

    ஆபிதீனின் ‘வாழைப்பழம்’
    ஹனிபா காக்காவுக்குப் பிடித்திருப்பது
    விசேசமானது. என்றாலும் அவருக்கு
    கவிதையான ‘அனாரையும்’ பிடித்துதானே இருக்கிறது.

    ஹனீபா காக்கா
    ‘ஆபிதீன் பக்கத்திற்காக’
    அனார் கவிதைப் பற்றிய
    விமர்சனக் கட்டுரை ஒன்றை எழுதணும்.

    நன்றி.
    – தாஜ்

  3. ஹமீது ஜாஃபர் said,

    09/09/2010 இல் 18:22

    மக்கத்து சால்வை நல்ல கதை
    சிலம்பாட்டம் என்றஉடன் என்னை டீனேஜுக்கு கொண்டுபோய்விட்டது. இப்படித்தான் பாப்பாவூர் ஹத்தத்தின்போது எங்களூரில் சிலம்பாட்டம் நடைபெறும். ஒருவருடம் ஆப்பக்குச்சி சிலம்பாட்டம் நடைபெறும் என்று மைக்கில் அனவுன்ஸ் பண்ணிவிட்டு ஒளிந்துக்கொண்டது ஞாபகத்துக்கு வந்துவிட்டது; நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருக்கிறேன்.

  4. மஜீத் said,

    10/09/2010 இல் 08:24

    இன்னும் ஒரு பிரமிப்பு, ஆபிதீன் பக்கங்களில்!

  5. uma varatharajan said,

    10/09/2010 இல் 11:02

    ஹனிபாவின் நெருங்கிய நண்பர்களில் நானும் ஒருவன் என்பது என் எண்ணம்.ஹனிபாவின் இந்தக் கதையை
    ஒருவர் மட்டம் தட்டி எழுதிய போது அவருக்காக மேடையில் சண்டை போட்டிருக்கின்றேன்.அவர் வம்பளப்புகள்
    சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் அதை கொஞ்சக் காலத்துக்கு சங்கிலியில் கட்டிப் போட்டு விட்டு எழுத்தில்
    தன்னை அமிழ்த்தியிருப்பாரேயானால் கி.ராஜநாராயனனைத் தேடிப் பாண்டிச்சேரிக்குப் போகத் தேவையில்லை.
    அனாரைப் பஞ்சவர்ணக்கிளி என்றா சொல்கிறார்? அவ இவரை ‘ஓடி விளையாடு தாத்தா’ என்று சொல்லாத வரை
    சந்தோஷம்.

  6. 12/09/2010 இல் 09:43

    பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. ‘என் கதையைப் பற்றி எழுதிய அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய அன்பை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அண்ணன் ஹனிபாவும் மெயில் போட்டிருந்தார். சொல்லிவிட்டேன்.

    இந்த ஹனிபாக்கா நன்றாக பிஸாது பண்ணுவாராம்; ரொம்ப சந்தோஷம். தாத்தாக்களுக்கே உரிய தங்க குணமல்லவா அது!

    நண்பர் உமா வரதராசன் தனது ‘அரசனின் வருகை’ கதையை எனக்கு அனுப்பிவைக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

  7. uma varatharajan said,

    15/09/2010 இல் 05:24

    நண்பர் ஆபிதீன்,
    வணக்கம்.எல்லோருக்கும் முன்பே உங்கள் எழுத்தோடு எனக்கு நல்ல பரிச்சயம்.கணையாழி காலத்திலிருந்து.இப்போதுதான் நேரடி தொடர்பு வாய்க்கிறது. இடம், உயிர்த்தலம் இரண்டையுமே அவை வெளி வந்த
    வேளையிலேயே கண்ணனுக்கு சொல்லி தருவித்து விட்டேன்.அவை பற்றியெல்லாம் விரிவாகப் பேசுவோம்.
    எனது விருப்பத்திற்குரிய மிகச் சில எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர் என்ற தகவல் மாத்திரம் இப்போதைக்குப்
    போதுமானது.
    என்னுடைய வலைத் தளமான www . umavaratharajan .com இற்கு சென்றால் ‘அரசனின் வருகையைப்’ படிக்கலாம்.
    ஏற்க்கனவே அன்னம் வெளியீடாக என்னுடைய ‘உள் மன யாத்திரை’ 1989 இல் வெளியாகியது. படித்தீர்களா?
    அன்புடன்,உமா வரதராஜன்.

    • abedheen said,

      15/09/2010 இல் 09:46

      உடன் பதிலுக்கு நன்றி உமா. உங்கள் வலைத்தள முகவரியை ( http://umavaratharajan.com/ ) எழுத்தாளர் பக்கத்தில் சேர்த்துவிட்டேன். ஹனீபாக்கா சொல்லித்தான் ‘அரசனின் வருகை’யை அறிந்தேன். ‘‘உள் மன யாத்திரை’ என்னிடம் இல்லை (எப்போதும் துபாய் யாத்திரைதான்!). தொடர்பில் இருங்கள்.

  8. சு.மு.அகமது said,

    19/07/2014 இல் 10:31

    சி.சு.செல்லப்பாவின் “வாடிவாசல்” சென்ற வருடம் தான் படிக்க கிடைத்தது.நண்பர் ஆபிதீன் தயவால் தற்போது தான் “மக்கத்து சால்வை” கிடைத்துள்ளது.உங்களது “வாழைப்பழம்” அவருக்கு பிடித்திருக்கிறது.எனக்கு எப்போதும் ‘ருக்கூஃ” தான்.”இடம்” நண்பர் நாகூர் ரூமி தயவில் ‘நங்கூரம்”பாய்ச்சியுள்ளது.”அய்ய்ஸ்ஸ்…..’பற்றியும் அறிந்துகொண்டேன்.இது ஹனிபா பாயின் கதை குறித்தான பின்னூட்டம்.அவரை பற்றி என்னால் என்ன சொல்ல முடியும்.நேரில் கண்டால் முசாபா செய்வதை தவிர ஏதும் இயலாது.வாழ்த்துக்கள்.நெகிழ்ச்சியாய் இருக்கிறது.


uma varatharajan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி