பிரச்னையே ‘நம்பணும்’இல்தான்! – தாஜ்

சந்தேகப்பட்டது சரியாகிவிட்டது! ‘அழகிய திருக்குர்ஆன் சிந்தனைகள்‘ எல்லாம் திடீரென்று அனுப்புகிறாரே தாஜ் என்று நினைத்தால் இந்தக் கட்டுரைக்கு ஒத்திகைதான் அது! ஓய்,  நீர் திருந்தவே மாட்டீரா?

கூத்தாநல்லூர் தந்த கவிஞர் சாரணபாஸ்கரன் குமுறியது போல,
 
‘சன்மார்க்கம் தழைத்தோங்க உழைப் பவர்கள்
தரித்திரத்தின் கரத்தினிலே தவிக்கின் றாரே
துன்மார்க்கம் அத்தனையும் தொழிலாய்க் கொண்ட
சூதர்கள் செல்வத்தைக் குவிக்கின் றாரே
நன்மார்க்கம் தவறாத நல்ல றத்தோர்
நாளெல்லாம் துன்பத்தைச் சுவைக்கின் றாரே
உன்மார்க்கம் கொண்டவராய் நடித்து வாழ்வோர்
ஊரேய்த்தும் உனைஏய்த்தும் உயர்வ தென்னே’

என்று நானும் குமுறுவதுண்டுதான் தாஜ்…. ஆனால்,  நாகூர் தந்த புலவர் ஆபிதீன், ‘கண்டுவிடில் கடன்கேட்டுக் கழுத்துநெரி படுமெனவே பண்டுஇதை அறிந்தொளியப் போனானோ நாமறியோம்!’ என்று இறைவனை மெலிதாகக் கிண்டல் செய்ததைப் படித்தவுடன் ( ‘கள்ளன்?’ முழுப்பாடலையும் பிறகு பதிகிறேன்) கொஞ்சம் புரிந்து விட்டது. நீங்களோ ‘இந்தப் பாட்டும் சரியில்லை’ என்று எதிர்ப்பாட்டு பாடுவீர்கள். உங்கள் பிரச்னையே அதுதான்; அதிகம் சிந்திப்பது!

’27ஆம் கெழமை ராவு’ இப்படியெல்லாம் பதிவு போடக் கூடாதுதான். சொன்னால் இந்த தாஜ் கேட்கிறீரா? தகவற்பிழை வேறு – அவருடைய கட்டுரையில். வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு – எப்பாடுபட்டாவது – துபாய் ‘நாசர் ஸ்கொயர்’ பள்ளிக்கு நான் வந்துவிடுவேன் என்று சொல்கிறார். உண்மைதான். ஆனால்,  இதில் அஜ்மானில் ‘தொழுகிறேன்’!

ஒரு கோயில், சர்ச், தர்ஹா விடாமல் – என்னுடன் சேர்ந்து – தாஜ் அலைவதற்காக இந்தப் பதிவு. கீழேயுள்ள புகைப்படம் நாங்கள் இருவரும் சமீபத்தில் திருவண்ணாமலை சென்றபோது (நான்) எடுத்தது.

சிந்திப்போம்!
 
ஆபிதீன்.

 *

இறை – இறை நம்பிக்கை – இறை வணக்கம்
தாஜ்

‘ஜே.ஜே. சில குறிப்புக’ளில் சுந்தர ராமசாமி, ‘இரண்டு வரிகளில் சொல்லிவிட முடியும் என்கிற செய்தியை,  எக்காரணத்தை முன்னிட்டும் மூன்றுவரிகளில் சொல்ல  முனைய  மாட்டேன்’ என்றிருப்பார். எழுதுகிற முறையில் நான் பலரிடம், பலவித நெறிகளைக் கற்றிருக்கிறேன். அவைகளில் இதுவும் ஒன்று. தவிர, இரண்டு வரிகளில் சொல்லிவிட முடியும் என்கிற செய்தியை’ முடிந்தவரை ஒன்னே முக்கால் வரிகளில் சொல்லணும் என்கிற முயற்சியும் செய்பவன். அதனால் என்னவோ என் ஆக்கங்களில் வார்த்தைகளைப் பார்த்துப் பார்த்து உபயோகிக்கும் வழக்கம் வந்துவிட்டது. வாசிக்கும் அன்பர்கள் என் எழுத்து விசேசத்தை, ரசித்து வாசிக்க வேண்டியே சமீபக்  காலமாக கட்டுரைகளை  கவிதை  வடிவத்தில்  புழங்கி  வருகிறேன்.  இதனை சிலர் ஏற்கலாம், அல்லது மறுக்கலாம். மறுப்பவர்களின் பார்வையில், இந்த வடிவம் சிரமம் தருவதாக இருக்குமேயானால், மன்னிக்கணும். இந்தக்  கட்டுரையில் தெளிவின்மை குறைவாக இருப்பது மாதிரியான தோற்றம் தெரிய வாய்ப்புண்டு. எடுத்துக் கொண்ட கருத்தாக்கம் அப்படி. ஆழமான/ நுட்பான/ முரண்பாடுகளைப் பொருட்படுத்தாத மனநிலையில் வாசித்தால் தெளிவின்மைக் களைய, வாசிப்பும் கைகூடும்.

– தாஜ் (25/08/2010)

*

நண்பர் ஆபிதீன்
என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.
என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
காலம்: 2002
ஏதோ ஒரு மாதம் ஏதோ ஒரு தேதி.
இடம்: அஜ்மான்
ஐக்கிய அரபு எமிரேட்./ செல்லப் பெயர்: அமீரகம்!

ஆபிதீன் பணிபுரியும் துபாயில்
சில ஆண்டுகள்
நானும் அந் நாட்டில்
பணி நிமிர்த்தமாய் இருந்தேன்.
வார விடுமுறைகளில்
நாங்கள் சந்தித்துக் கொள்வோம்.
விடுமுறை சந்திப்பை இன்னும் விசேசமாக்க
விரும்பும் போதெல்லாம்
எங்களுக்கேற்ற சில நண்பர்கள் புடைசூழ
அஜ்மானில் பணிபுரியும்
‘சீர்காழி’ நண்பர் ஒருவரின் ரூம் தேடி
வியாழன் மாலையே புறப்பட்டு விடுவோம்.
துபாயில், குருவிக் கூடு மாதிரியான
எங்களது ரூம்களை விழுங்கும் நண்பரின் ரூம்!
வெள்ளிக்கிழமை அங்கேதான் விடியும்.

அஜ்மான்,
துபாயில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர்
தூரத்தில் உள்ள இன்னொரு நாடு!
கவனிக்கணும்…
இன்னொரு ‘நகரமல்ல’ நாடு!
துபாயில் இருந்து அஜ்மான் வந்து அடைவதற்குள்
‘ஷார்ஜா’ என்றோரு நாட்டை வேறு கடந்தாகணும்!
ஐக்கிய அரபு எமிரேட்-க்கு உட்பட்ட ஏழு நாடுகளில்
இதுவும் ஒன்று.
கையடக்கமான நாடு!
குறிப்பாய்…
சாராயம் இங்கே தாராளம்.
சட்டம் இடம் தந்திருகிறது.
உலகில் பெயர் போட்ட அத்தனைவித பாட்டில்களும்
காசை நீட்டினால், கைகளில் வந்து வழுக்கும்!
 
வெள்ளிக்கிழமை துளிர் காட்டும்
அந்த நடுநிசிக்குள்
சுடச்சுட வாங்கி வைத்திருக்கும், வோட்கா/ கிரான்பெரி ஜூஸ்/
சுட்ட கோழி/ லெப்னான் குப்ஸ்/ ஹம்மூஸ்/ முத்தபல்/ தூம்/
தபுலி/ மிக்ஸர்/ பொரித்த மீன்/ புரோட்டா/ மட்டன் மசாலா/
இரண்டு பாக்கெட் சிகரெட் என பரப்பப்படும் எல்லாமும் தீரும்!
தள்ளாட்டத்தோடு எழுந்து, கைகழுவி, வாய்கொப்பளித்து
மீண்டும் சிகரெட்/ தேர்ந்த இயக்குனரின் ஆர்ட் மூவி/
ஹிந்துஸ்தானி சங்கீதம்/ இலக்கியக் கலந்துரையாடல்
என நீளும் எங்களது சந்தோஷம்!
புகை மூட்டமாகிப் போன ரூமுக்குள்ளே,
விசேசமாகிப் போன அந்த இரவும் விடியும்!

அன்றையக் கால கட்டத்தில்
எங்களது இலக்கியக் கலந்துரையாடல் என்பது,
நமது வித்தக எழுத்தாளர்களின் நாவல்/
குறு நாவல்/சிறுகதை என்று
எந்த முனையில் தொடங்கினாலும்,
‘ஏமாளி’ ஆபிதீனுக்காக
இரத்தம் கொதிப்பதில் முடியும்.
அவரோ, எங்களது புலம்பலை
காதில் வாங்கிக்கொள்ளவே மாட்டார்!
மாறாய், ‘அண்ணனுக்கு என்ன கஷ்டமோ?’ என்பார். 

காலை வேளையில் ஏ.சி.யின் அலறல்  
கூடிக் கொண்டே இருந்தால்
வெளியில் சூரியன்
அநியாயத்திற்கு சிரிக்கிறானென்று அர்த்தம்.
எங்களோடு விடிந்த அந்தப் புனித வெள்ளிக் காலையிலும்
ரூமில் அலறல் கூடிக் கொண்டே இருந்தது.
அன்றைய பகல் பதினொரு மணிக்குத்தான்
ஆபிதீன் என்னிடம் அந்தக் கேள்வியை கேட்டார்.
இப்போது… மணி பத்து!  

*

புத்தியின் திறவுகோலான,
‘ஏன்? எதற்கு? எப்படி?’-யை
உலகுக்கு உணர்த்தியவர் அரிஸ்டாட்டிலாக இருக்கலாம்.
ஆனால், எனக்கு அதைப் போதித்தவர் ‘பெரியார்‘!

என் பள்ளிப் பருவத்தில்
மூத்தவர்களது வாய்மொழி வழியாக,
வியப்புகள் விஞ்ச நான் அறிய வந்தப் ‘பெரியார்’
எனது மானசீக ஆசானாகவுமானார்!
‘ஏன்? எதற்கு? எப்படி?’ மட்டுமல்ல,
அதை மையப்படுத்தி அவரிடம் கற்றது இன்னும் ஏராளம்! 
 
பெரியாரின் எல்லா கருத்துக்களையும்
உடனடியாக ஒப்புக் கொண்டுவிட முடியாது.
முடிந்ததும் இல்லை.
இடியோசையின் மிரட்டலை
செவிமடுத்துக் கொண்டிருக்கும் போதே
நம் காலடியில் அது விழுமானால் நம்மில் எழும்
அதிர்வுகளுக்கும் அதிர்ச்சிகளுக்கும் அளவுண்டா?
அவர் வழியாய் அறிய வந்த கடவுள் மறுப்பும் அப்படிதான்!
காலடி மண்ணே இடிந்து விட்டது!

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள்
கிட்டிய நேரமெல்லாம் கடவுள் குறித்தே யோசிப்பு!
சதா நேரமும், கேள்விகள் கேள்விகள் கேள்விகள்!
விடை கிட்டாத வெறும் கேள்விகள்!
நிம்மதியைப் பறிகொடுத்துவிட்ட நிலை.
அகத்துக்குள்ளே பலநேரம் திக்குத்தெரியாது அலைந்தேன்!
கேட்பவர்கள் சிரிக்கலாம்.
சிரிக்கத்தான் செய்வார்கள். தப்பில்லை.

கிளைத்து விரியத் தொடங்கிய
பெரியார் மீதான மதிப்பை முன் வைத்து
அவர் சொல்லிவிட்டார் என்பதற்காக
அவரது சொல்லை அப்படியே
ஒப்புக் கொண்டவன் இல்லை நான்.
ஒரு தீர்க்கத்தை நோக்கி திரும்பத் திரும்ப
யோசித்தவன் என்கிற வகையில்,
இன்றைக்கும் பெருமையாக இருக்கிறது.

உயிர்/ சதை/ இரத்தமென கலந்து போன
இறைவனைப் பிரித்து
தூரவைத்துப் பார்ப்பதென்பது
ஆகுமானதாக இல்லை.
எத்தனை யோசித்தாலும் மீண்டும் மீண்டும்
புறப்பட்ட இடத்திற்கே வந்தேன்.
அகத் தடங்கல்களைத் தாண்டி
புறத்திலும் நிறையத் தடங்கல்கள்.
ஒடுங்க ஆரம்பித்தேன் நான்.
என்னோடு ஒடுக்க ஆரம்பித்தன என் யோசிப்புகளும்.

காலத்தில்,
அந்த ஒடுங்கல்களில் வெட்கமுற்று
நிஜம் தேடிச் சிலிர்த்தெழ,
தொடர்ந்து இறைவனைத் தேடத் துவங்கினேன்.
காலங்கள் கடந்தாலும்
இறைவன் குறித்த, ஏதோவோர்
ஆறுதலானத் தெளிவு கிட்டவே செய்தது.
அதன் பின்னர்,
கடவுள் குறித்த யோசிப்புகளில் இருந்து
எனக்கு நான் முற்றாய் விடுதலை தந்து கொண்டேன்.
தகிப்பிலிருந்து நீண்ட மௌனம் அது!

*

இறைவன்…
‘உண்டு/ இல்லை’
கண்டடைய, செலவிட்ட அந்த இருபது வருடங்களில்
நானும் கொஞ்சம் கொஞ்சம் வளர்ந்திருந்தேன்.
வளர்கிற பருவத்தில் நிறையப் படிக்கவும் செய்தேன்.
ஜே.கே.யும் இன்னும் சில தத்துவ சிகரங்களும்
என் வாசிப்பில் வந்து, மனதின்கண் தங்கியும் போனார்கள்!
அன்பு, நட்பு, மனித நேயம்,
மனிதாபிமானம், சகோதரத்துவம் என்பன
பலவற்றைப் பேணுபவனாக நிறமாற்றம் கொண்டேன்.
மேலாய், திருமணமுமாகி மூன்று குழந்தைகளுக்கு தகப்பன்!
எதையும் அடக்கி வாசிக்க வேண்டிய
காலக்கட்டமாகவும் போனது என் காலம்!
அதனால் என்னவோ, இறைவன் குறித்து
நான் உணர்ந்ததை யாரிடமும் பிரஸ்தாபிக்கவில்லை.
நான் தேடிக் கண்ட உண்மை என்பதும் எனக்கானதே!
யாரிடமும் ஏன் நான் பிரஸ்தாபிக்க வேண்டும்?
கொண்ட மௌனமும் பாதுக்காப்பாகவே இருந்தது.

சரி….
நான் கண்டடைந்ததுதான் என்ன?
ஒரு வார்த்தையில் சொல்லணும் என்றால்….
ஒன்றுமில்லை!
அதையே நீட்டிச் சொல்லணுமென்றால்….

மனிதன் நாகரீகம் கொள்ள முளைவிட்ட
அந்தக் காலகட்டத்தில், கடவுள்தான்
எல்லா தத்துவார்த்தத்தங்களின் மூலம்!
அப்போதைய சிந்தனாவாதிகளால்
கடவுளை ஸ்தாபிக்காமல்
அடுத்தக் கட்டத்திற்குப் போக முடிந்ததில்லை!
கடவுளை ஸ்தாபிக்காமல்
மக்களுக்கான வாழ்வியல்
நெறிமுறைகளை/ கட்டுப்பாடுகளை
சொல்லவும் முடிந்ததில்லை!

ஒவ்வொரு மண்ணிலும்
வெவ்வேறு விதமான சிந்தனாவாதிகள்
அவரவர்களின் கடவுள்களும் வெவ்வேறானவை!
அவரவர்களின் கடவுள்கள்
அவரவர்களின் குணாதிசயங்களைக் கொண்டது.
ஒரு சிந்தனைவாதியின் கடவுள்
இன்னொரு சிந்தனைவாதியின் கடவுளோடு
ஒத்துப் போகவே போகாது!
என்றாலும்,
தங்கள் தங்கள் மக்களுக்காக
அவர்கள் அத்தனைப் பேர்களும் போதித்த
வாழ்வியல் நெறிமுறைகள்/ கட்டுப்பாடுகள்
கிட்டத்தட்ட ஒரே தெறிப்பு!
கடவுளர்களைக் காட்டி, அச்சுறுத்தி
அவர்கள் போதித்ததெல்லாம்
தங்கள் தங்களது மக்களின்
பாதுகாப்போடு கூடிய மேலான வாழ்விற்காகத்தான்.

ஆதி ஆரம்பத்தில்
யாரோ ஒரு மனோதத்துவம் அறிந்த
சிந்தனாவாதிதான்
கடவுளைக் கண்டு பிடித்திருக்க வேண்டும்.
தன் மக்களின் நல் வாழ்விற்கான அருமருந்து மாதிரி!
அவன் போதித்த மந்திர வார்த்தைகள்
கடவுளை துணைக்கழைத்து போதிக்கப் பட்டவை.
கடவுள்தான் அவனது வலு / சித்து!

பெரியாரின் கூற்றுப்படிக்கு
‘கடவுளை கற்பித்தவன் முட்டாள்.’
ஆனால், எனக்கோ…
அவன் மனோதத்துவம் வாய்ந்த ஞானி!

கடவுள் நிலை,
பிற்காலங்களில்
கணக்கில் அடங்கா கடவுள் பெருக்கத்திற்கும்/
மனிதர்களிடையே பிளவுக்கும்/
இன துவேசத்திற்கும்/ லாபநோக்கிற்கும்/
ஆன்மீகப் போலிகளின் ஜொலிப்புகளுக்கும்/
மந்திர தந்திரக்காரர்களின் அடாவடிக்கும்/
அரசியல் அதிகார விரும்பிகளுக்கும்
ரொம்ப ரொம்பப் பயன்பட்டுக் கொண்டிருப்பதை,
அருமருந்தாய் கடவுளைக் கண்டெடுத்த அந்த ஞானி
கனவில் கூட கற்பனை செய்திருக்க முடியாது.
அவனைப் பலிகாரனாக ஆக்குவதும் சரியாகாது!
 
கடவுளை முன் நிறுத்தி
மக்களை வஞ்சித்த ஓர் கூட்டத்தாரோடும்
அவர்களது கடவுளர்களோடும்
பெரிய அளவில் சமூக எழுச்சிப் போரை
பெரியார் நிகழ்த்திய காலக்கட்டத்தில்
கடவுளோடு, கடவுளைக் கற்பித்தவனும்
அவரது வசவுக்கு ஆளாக வேண்டிவந்தது.
இதனை நாம் சரியான கோணத்தில் புரிந்துக் கொள்வதே சரி.

*

இந்த மண்ணில், மனிதர்களின் தொடக்கம்
பில்லியன் பில்லியன் காலப் பழசு!
இவர்களிடம் கடவுள் வந்து சேர்ந்ததென்பது
ஒரு பத்தாயிரம் வருஷத்துச் சங்கதி!
கடவுள் என்றொன்று அவர்களுக்கு இல்லாத காலத்தில்
தாங்கள் அஞ்சியதற்கெல்லாம் வணங்கினார்கள்!
அடுத்தக் கட்ட மக்கள்
இயற்கையின் கூறுகளை வணங்கினார்கள்!
பிறகேயான மிகப் பிந்தையக் காலத்தில்தான்,
போதனையாளர்களின் வழியாக, வணக்கம் பெற
கடவுளர்கள் பூமிக்கு வருகிறார்கள்!
அதையொட்டி மனிதனுக்கு மதமும் வருகிறது!
கடவுளர்களுக்கான இருப்பிட கட்டிடங்களோ/ கடவுளை
மனதிற்குள் நினைத்து தொழுவிடங்களோ ரொம்பவும்
பிந்தியக் காலச் சங்கதி!
இதில் குறிப்பிடத் தகுந்த விசயம், அத்தனையும்
மனிதர்கள் கட்டி எழுப்பியது.

பழமையான மதவரிசையில்
கிரேக்க மதமும்/ புத்த மதமும் பேசப்படுகிறது.
அடுத்தக் கட்ட வரிசையில்
சீனம் சார்ந்ததோர் மதமும்/ யூதர்களின் மதமும்
இந்தியாவின் இந்து மதமும் முன் நிற்கிறது.
இதெல்லாம் கி.மு. காலச் சங்கதிகள் என்றால்,
கி.பி.யில், உலகம் தழுவிய மதமாக
கிருஸ்துவமும்/ இஸ்லாமும் பரந்து விரிந்து தழைக்கிறது.

இந்த மதங்களுக்காக, மனித வர்க்கம் தங்களுக்குள்
போர் தொடுத்து/ நிகழ்த்தி
மண்டு/வென்று
தழைக்கவைத்த நிஜத்தின் கதை சொல்லத் தகுந்தது அல்ல!
இன்றைக்கும்
இந்த அவலம் வெவ்வேறு வடிவில் நடந்தேறிக் கொண்டு இருக்கிறது.

கிருஸ்துவம்/ இஸ்லாம் மதங்களின் கோட்பாடுகள்
பெரிய வித்தியாசங்களைக் கொண்டது.
பொதுவாகவே இஸ்லாம்,
எல்லா மதங்களின் நடவடிக்கைகளில் இருந்தும்
ஏகத்துக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் கொண்டது!

மேன்மையான தீர்க்கதரிசிகளுள் ஒருவராக
முகம்மது நபி உலகுக்கு அடையாளம் காணப்படுகிறார்.
மேன்மை தாங்கிய நபி அவர்களின் வருகைக்குப் பிறகே,
பல வகையிலும் சீர்திருத்தம் கொண்ட மதமாக
இஸ்லாம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன் காலம் சுமார் 1500 ஆண்டுகள்.
இதை நவீன மதமாக பார்க்கலாம். அதற்கான
விஞ்சிய நவீனக் கூறுகளும்/ அழகியல் முன் மாதிரிகளும்
ஏராளமாக இந்த மதத்தில் உண்டு.

மேலை மற்றும்/ மேற்கு ஆசிய
புராணச் செய்திகளின் வழியாகவும்
திருக்குர்ஆனின் மூலமாகவும்
முதல் மனிதனாக அறியப்படும் ‘ஆதம்’ முதலாக,
இஸ்லாம் மதத்தின் தொடக்கக் காலத்தை கணக்கிட்டு
இஸ்லாம் ஆகப் பழைய மதம் என்று கூறும்
இஸ்லாமியர்களும் இருக்கவே செய்கிறார்கள்!

மற்ற மதங்களிடம் இல்லாததோர் சங்கடம்
என் மதமான இஸ்லாத்தில் உண்டு.
ஆய்விற்கென்றுக் கூட
கடவுளை கேள்வியாக்கிப் பார்க்க முடியாது.
இறைவன்…
நம்மின் ஆழமான நம்பிக்கையைச் சார்ந்தவன்!
மறைபொருளான இறைவனை, நம்புகிறவனே இஸ்லாமியன்!
இஸ்லாத்தில்…
இறைவன் குறித்த உருவம் சொல்லப்படவில்லை.
இறைக் குடும்பத்தைப் பற்றியும் பேசப்படவுமில்லை.
இன்னும் இன்னும் இப்படிப் பலப்பல
அறிவுக்கு ஒவ்வாத விசயங்கள் இல்லை.
இருந்தும்….
கேள்வியென்று முல்லாக்களிடமோ/ ஹஜ்ரத்துகளிடமோ போனால்
பதில் கிடைக்காது.
அவர்களது கோபப் பார்வையைத்தான்
சந்திக்க வேண்டியிருக்கும்.

அவர்கள் கோபம் கொள்வதற்கு கொஞ்சம் அர்த்தமும் இருக்கிறது.
கடவுள் குறித்தக் கேள்வியை கேட்கிற தருணத்திலேயே
நான், இஸ்லாமியன் அந்தஸ்த்தை இழந்து
காஃபிர் ஆகிவிடுகிறேன்!
என் கேள்வியை உள்ளடக்கி
( ‘கடவுள் இல்லை’ என்பதை நான் மறுக்கிறேன்…. )
அவர்கள் பதில் சொல்லும் தருணம்
நமது கேள்வியை உச்சரிக்க வேண்டி இருப்பதாலேயே
அவர்களும், அவர்கள் அறியாமல்
காஃபிர் ஆகிவிடும் அபாயம் உண்டு!

முகம்மது நபி வழியாகப் போதிக்கப்பட்ட
இறைவனின் சொற்கள் அனைத்தையும்
அவரைப் பின் தொடர்பவர்கள்
தயக்கமற/ கேள்வியுமற/ நம்பணும்.
என்னை ஒத்தவர்கள் முரண்டு பிடிப்பதே
இந்த ‘நம்பணுமில்தான்’.
‘ஏன்? எதற்கு? எப்படி?’
எந்நேரமும் மண்டைக்குள் தகிக்கும்போது,
நான் என்ன செய்ய?

இறைக் குறித்தும்/ அவன் மீதான நம்பிக்கை குறித்தும்
இஸ்லாமிய மக்களில் பெரும்பாலானோரை
கேள்விகளற்று சாந்தப்படுத்தி விட்ட அதே இறைவன்தான்
எனக்குள் கேள்விகள் பல தோற்றுவித்து
இப்படி என்னை இம்சிக்கிறான் என்று
இஸ்லாமியர்கள் நம்பும் கோட்பாட்டின்படியே சொன்னாலும்
இதனை வாசிக்கும் இஸ்லாமிய ஆன்மீகவாதிகளில் எத்தனைப் பேர்
கோபமற என் நிலையை புரிந்துக் கொள்வார்கள்?
கோபம் இஸ்லாத்துக்கு ஆகாதென்றாலும் கோபிக்கத்தான் செய்வார்கள்.
எல்லாம் இறைவனின் செயலென ஒரு போதும் கருத மாட்டார்கள்!

*

இஸ்லாத்தில்
மறைவான இறைவனைப் பற்றிய குறிப்புணர்த்தல்கள்
சுத்தமாக/ தெளிவாக/ தீர்க்கமாக/ சொல்லப்பட்டிருக்கிறது.

1. இறைவன் மிகப் பெரியவன்!
2. ஒப்புமை இல்லாத/ அளவிட முடியாதவன். 
3. அவனுக்கு இணை-துணை இல்லை!
4. அவனுக்கு உருவமில்லை!
5. அவன் பிறக்கவுமில்லை/ யாரும் பெற்றெடுக்கவும் இல்லை
6. அவனுக்கு இணைவைத்தல் மன்னிக்க முடியாத பாவம்.

இப்படிக் குறிப்புணர்த்தப்பட்டிருக்கும் இறைவனை
என் மதக் குருமார்களும்/ என் சக இஸ்லாமியர்களும்
‘அவன்’ என்று பல இடங்களில் சுட்டுகிறார்கள்.
அரபி மூலத்திலும் இந்தச் சுட்டுதல் இருக்க
இவர்களும்தான் என்ன செய்வார்கள்?
இறைவனை ‘அல்லா’வென அரபியில் அழைக்கும் அதே வேளை 
‘அவன்’ என்று அர்த்தம் தரும் அரபி சொல்லாலும் அழைக்கிறார்கள்.
யோசிக்கணும்.
இறைவன் குறித்த இஸ்லாத்தின் பிரகடனத்திற்கும்,
‘அவன்’ என்று இறைவனை விளிக்கப்படுவதற்குமான முரண்
நம்மை விடுபடாததோர் குழப்பத்தில் ஆழ்த்தும்!

அவன், என்பது பிறப்பெய்திய உயிர்/
அவன், என்பது ஆண்பால்/
அவன், என்பது பண்மையற்ற ஒருமை/
அவன், என்பது ஓர் அளவே உடைய மனித வடிவம்/
அவன் என்பது ஆசாபாசங்களுக்கு வளைந்து தரும் ஜீவ சங்கதி/
அவன் என்பது கால அளவுக்கு உட்பட்ட உயிர்/
அவன் என்பது அழியும் தன்மைக் கொண்டது/

ஒரு பிரமாண்டத்தை எப்படி இப்படி அழைக்கத் தகும்?
இன்னொருபுறம்
ஒப்புமை வைத்தல் மகாபாவம் என்று சொல்லிக் கொண்டே
இவர்களால் எங்கனம் ‘அவன்’ என்று
இப்படியெல்லாம் ஒப்புமை கொண்ட சொல்லால் அழைக்க முடிந்தது?
எனக்குத்தான் இந்தக் குழப்பமெல்லாம்
என் இஸ்லாமிய நண்பர்களுக்கு
இதுவோர் பொருட்டே அல்ல!

இந்தக் கேள்வியோடு நான் குழம்பிய நாளில்தான்
சில தெளிவுகள் படப்படவென தெளிய வந்துச் சேர்ந்தது.
இஸ்லாம் குறிப்பிடும் இறைவன்…
அந்த மஹா பிரமாண்டம்/ அந்த உருவமற்ற பிரமாண்டம்/
உறவுகளற்ற/ ஒப்புமையற்ற பிரமாண்டம்…
இயற்கையாகத்தான் இருக்க முடியும்!
மிகப் பெரிய/ ஒப்புமை இல்லாத/ அளவிட முடியாத/
இணைத்துணை இல்லாத/ என்கிற
குறிப்புணர்த்தல்கள் எல்லாம்
இயற்கையைக் குறிப்பிடுபவனாகவே உணர்கிறேன்!

அரபி மூலத்தில் இறைவனை
‘அவன்’ என்று குறிப்பிடப்படுவதில் உள்ள
சிக்கல் குறித்து யோசித்த போது…

முகம்மது நபியவர்களால் போதிக்கப்பட்ட
திருகுர்ஆனின் வரிகள் கவிதை வடிவானவை என்று
சான்றோர்களால் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இறைவன் குறித்த அதன் வர்ணணைக் கொண்டே
கவிதை வயப்பட்ட மறை நூல் அதுவென,
நாம் புரிந்துக்கொள்ள முடியும்!

மூலத்தின் கவிதை வரிகள்
இறைவனாக குறிப்புணர்த்தப்படும்
இயற்கையின்/ அதன் பேராண்மையின்
குறியீடாக ‘அவன்’ என்கிற சொல்
குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்று
என் உணர்வுகள் எனக்கு உணர்த்த அறிந்தேன்.
யோசிப்பில், அது சரியாகவும் பட்டது.

‘இயற்கையை,
இஸ்லாம் இறைவனாக உருவகப்படுத்துகிறது’
என்கிற என் கூற்றை
எத்தனை அன்பர்கள் ஒப்புவார்களென நான் அறியேன்.
ஆதி மனிதன்,
இயற்கையை இறைவனாக உருவகப் படுத்தாது
அதன் பிரமாண்டத்திடம்
பயந்த/ பணிந்த/ தொழுதெழுந்த/ கர்ணக்காலச் சான்றுகள் உண்டு!
‘ஆதம் – ஏவாள்’ கொண்டு
இஸ்லாத்தை, சிலர் ஆதி மதமென
நிரூபணம் செய்கிற போது, என் கூற்று இன்னும் வலுவாகிறது.

*

நான்/ எனது என்று செறுக்கு கொள்வதில்
எப்போதும் முகம் சுழிப்பவன் நான்.
கற்றோர்களிடமும்/ பெரியோர்களிடமும்
என்னை நான் தாழ்த்திக் கொள்ளத் தயங்காதவன் நான்.
அவர்களின் பாதம் பணிய முன் நிற்பவன் நான்.
நம்மை மீறிய சக்தி குறித்து
என்னிடம் மாறுபாடான கருத்து எழுந்ததில்லை.
விஸ்வரூம் காட்டும் பரவெளியின்
அத்தனைக் கூறுகளையும் கண்டு
நித்தம் நித்தம் கூட அல்ல, நொடிக்கு நெடி மலைப்பவன்!
எண்ணிலடங்கா கோளங்களை விடுங்கள்,
சின்னச் சிறு செடிகளின் துளிர் கண்டும் வியப்பவன் நான்!
இயற்கையிடம் பணிய முரண் இருக்குமா என்ன?

இன்னொரு பக்கம்
நவீனத்தின் அடையாளங்களை
விரும்பி ஏற்றுக் கொள்பவனே நான்!
என்றாலும், இயற்கையோடு ஒத்துப் போக மறுப்பவன் இல்லை!
அதை மீறுபவனும் இல்லை.
அதை மீறவும் முடியாது.
வாழ்வியல் விதியல்லவா அது!

மனிதர்கள், கோட்டைக் கொத்தளங்களில் வாழ்ந்தாலும்
இயற்கைக்குள்ளே, அதன்
தீரா அரவணைப்பில்தான் வாழ்கிறார்கள்.
இயற்கையின் கருணை இல்லை என்றால்
மனிதர்களால் நிமிஷமும் வாழ முடியாது.
இயற்கையின் கூறான
சூரியனின் கருணை/ மழையின் கொடை/
பசுமையின் குளிர்ச்சி என்பதெல்லாம் கிடக்கட்டும்,
பரமண்டலத்தில் வியாபித்திருக்கும் காற்று…
நம் உயிரின் இயக்கத்தோடு
நொடியும் தப்பாது உறவாடி
மூச்சுக்கு மூச்சு,
நம்மில் உள்வந்து கண்டு கண்டுப் போவதென்பது
இயற்கை நம் மீது கொண்ட உயிரான பாசமல்லவா?
அது அறுபடாதவரைத்தானே இயங்கவும் முடிகிறது!
நம் வாழ்வும்/ வாழ்வின் நாட்களும்
அதன் கரங்களில்/ சொடுக்கில் என்கிறபோது, பணியாமல் எப்படி?

நேற்றுவரை சகஜமாக கண்டு வந்த இயற்கையை
நம்மை மீறிய சக்தியாக/
நம்மை ஆகர்ஷிக்கும் இறையாக/
தடையற கண்டு கொண்டேன்!
மனதிற்குள் பணியவும் பணிந்தேன்!

தந்தைப் பெரியார்
இயற்கையை இறைவனாகப் பார்த்தவரோ/
ஒப்புக் கொண்டவரோ அல்ல.
‘கடவுளை மற/ மனிதனை நினை’ என்றவர்.
அவர் பார்வையில் உறுத்திய கடவுளர்கள் எல்லாம்
அவர் சார்ந்த மதவழிக் கடவுளர்கள்தான்.
என்றாலும், அப்படி உறுதியாகவும் சொல்லிவிட முடியாது
பொதுவாகவே எந்தக் கடவுளர்களையும்
அவர் ஒப்புக் கொண்டவர் இல்லை என்பதும் சரியே.
‘மனிதனை நினை’ என்கிறார் அடுத்து!
மனிதன் என்பவன் யார்?
அவனும் இயற்கையின் அங்கம்தானே!
அதே இயற்கையைத்தானே நானும்
கொண்டாடுகிறேன்/ ஒப்புக் கொள்கிறேன்.

‘பெரியாரை மிகவும் மதிப்பதாகச் சொல்லும் நீங்கள்
அவர் சொல்லாத ஒன்றை புனைந்து சொல்கின்றீர்களே…’
– என நீங்கள் கேட்கக் கூடும்.
பெரியார் என் மதிப்பிற்குரியவரே!
என் போற்றுதலுக்கும் உரியவரே!
உரியதோர் நேரத்தில்
அவர் கிளர்ச்சி செய்யவில்லை என்றால்
தமிழ் இனத்தின் முகமே
சிதைந்திருக்கும் என்றும் நம்பக்கூடியவனே
அதில் எந்த மாற்றமுமில்லை.

இன்னொரு சொல் சொல்லணும்
கொஞ்சம் காதைக் கொடுங்கள்…
ஒரு குழந்தையிடம் அதன் தகப்பன்,
‘வாசலுக்குப் போகாதே,
கொல்லைப் பக்கம் போகாதே’ என்கிற போதும்
அந்தக் குழந்தை வாசல்/ கொல்லைப் பக்கமெனப் போய்
புதிதாய் ஏதேனையும் கண்டுக் கொண்டு வந்து
அந்தத் தந்தையிடமே கூறி, வியப்பது மாதிரி…
என்னை/ எனது கூற்றை, நீங்கள் கொள்ளலாம்.
 
*

இன்றைய தினங்களில்
மதத்தின் குதியிலிருக்கும் என் மக்களிடம்
நான் கண்டெடுத்த இஸ்லாத்தைப் பற்றியோ/
இறையைப் பற்றியோ/ கூற முடியுமா என்ன?
நித்தம் வியக்கும் என் வணக்கத்தைப் பற்றி
விளக்கவும்தான் முடியுமா?
ஒரு பைத்தியத்தைப் பார்ப்பதைவிட 
கேவலமாக என்னைப் பார்க்க மாட்டார்களா?
அவர்களை சொல்லியும் குற்றமில்லை
நுட்பம் கூடிய யோசிப்புக்கோ/ புரிதலுக்கோ
ஏது நேரம் அவர்களுக்கு?
நிலம் வாங்கணும்/ பங்களா கட்டணும்/ கார் வாங்கணும்.. 
ஏது நேரம் அவர்களுக்கு?

நானும்…
என் மக்களின் பக்தி மார்க்கத்தில்/
அவர்களது ஆன்மீகத்தில்/
குறுக்கிடுவதே இல்லை.
தேன் கூட்டுக்குள் கைவிடவும் தோணுமா?
அதைவிட வம்பேது?
பக்தி மார்க்கத்தில் உருகிப் பேசும்
நெருக்கமான உறவுகளிடம்
கைகட்டி/ வாய்பொத்திக் கொள்வதும் உத்தமம்.
‘வா மசூதிக்கு’ என அவர்கள் அழைக்கிற போது
போய் வருவதே நல்லது.
(அங்கே, ஹஜ்ரத் பேசும் பழங்கதைகளை
அந்த நிமிட சங்கதியாக
கேட்டு மறந்து வருவது அதைவிட நல்லது.)
அல்லாது போனால்,
குடும்பத்திற்குள் அபவாதம் புகைய ஆரம்பித்துவிடும்.
என்னை ஐந்துவாக (ஜந்துவாகவும்)
பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.
உறவுகளுக்கு அத்தனை வாய் நேர்த்தி!
உறவுகள் மட்டுமல்ல சுற்றமும் கூட அப்படித்தான்; சங்கறுக்கும்!

சமூகத்தில் வலம் வந்து, கால் தரையில் பதிய
வாழ்ந்தே ஆகணும் என்கிறபோது
நெளிவு சுழிவுகளும்/ சில விட்டுக் கொடுத்தல்களும்
தேவையாகத்தான் இருக்கிறது.

என்னிடம், என் சக வீட்டுக்காரன்
தன் தாயார் மரணித்ததைப் பற்றிக் கூறி அழுகிறபோது,   
‘அல்லா இருக்கிறான் கவலைப்படாதே,
தைரியமாக இரு’ என்றால்…
அவன் சாந்தமாகிவிடுவான். அதைவிட்டு அவனிடம்,
என் கண்டுப்பிடிப்பின்படிக்கு,
‘இயற்கை இருக்கிறது கவலைப்படாதே
அது பார்த்துக் கொள்ளும், தைரியமாக இரு’ என்றால்
அவன், தன் தாயார் இறந்தத் துக்கத்தையும் மறந்து
அழுவதையும் விட்டு என்னை
‘அய்யோ பாவம்’ என்று அடிக்கத் தொடங்கிவிடுவான்!
இதனாலேயே பலநேரம்
என் சக மக்களோடும்/ உறவுகளோடும்
ஒத்துப் போக வேண்டிய நிலை!

பழக்க வழக்கத்தால் என் மீது படிந்துவிட்ட
இஸ்லாமியக் கூறுகள் பல
இன்றைக்கும் என்னிடம் உண்டு.
சலாம் சொல்கிற போது, பதில் சலாம் சொல்வது/
திடுக்கிடும் நேரங்களில் என்னையும் அறியாமல்
‘யா அல்லாஹ்’வென அதிர்வது/
திருமணத்திற்கோ, சாவு வீட்டிற்கோ போய் இருக்கிறபோது
அங்கே முல்லா, கையேந்தி
நலம் வேண்டியோ, சொர்க்கம் வேண்டியோ
இறைவனிடம் பிராத்தனை செய்து மன்றாட
எல்லோரோடு நானும் கையேந்தி ‘ஆமீன்’ சொல்வது/
பள்ளிப் பருவத்தில் நண்பர்களோடு சேர்ந்து
ஒவ்வொரு ஆண்டும் பக்கத்து ஊர் தர்காவுக்குப் போய்
அங்கே அடங்கி இருக்கும் ஓர் அம்மாவிடம்
குறைகளுக்கு நிவர்த்தி வேண்டி அடக்கமாக அமர்ந்திருப்பது/
என்பனவெல்லாம்
இன்றைக்கும் தவிர்க்க முடியாமல்தான் போகிறது.

நான் தேடிய தெளிவுகளில்
பெரும்பாலும் மதத்தையும்
அதன் கோட்பாடுகளையும் தள்ளிவைத்து
இறைவன் பற்றிய ஆய்வில் மட்டுமே பெரிதாய் ஈடுப்பட்டேன்.
இறைவன் விழுகிற போது
மதமும்/ அதன் கோட்பாடுகளும்
தானே விழுந்து விடும் என்பது என் கணிப்பு.
ஆனால், அது அப்படி நடக்கவில்லை.
இறைவனைத் தேடி ஓய்ந்த பிறகு…
என் யோசனையின் தளத்தில் மதங்கள் எழுந்து நின்றன!
மக்களிடம் மதங்கள், அவர்களது கடவுளர்களைவிடப்
பெரியதென அப்போதுதான் உணர்ந்தேன்.

நாட்டின் அரசும்/ அதன் சட்ட ஒழுங்கு அமைப்புகளும்
சமூகத்தில் தவறு செய்யும் நபர்களை கண்டெடுத்து
தண்டனை தருகிறது.
ஆனால், மனிதர்களை தவறு செய்யவிடாது
மானசீகமாக தடுப்பது என்னவோ
மதங்களும்/ அச்சமூட்டி போதிக்கப்பட்டிருக்கும்
அதன் கோட்பாடுகளும்தான்.
மதங்களின் வழியாகவும், ஆன்மீகத்தின் வழியாகவும்
நடந்தேறும் சரமாரியான தவறுகளுக்கு
பஞ்சமில்லை என்றாலும்
தவறு செய்ய முனைபவர்களை முன் கூட்டியே
மானசீகமாக தடுக்கவல்ல சக்தியான
மதங்களையும்/ அதன் கோட்பாடுகளையும் விட்டால்
வேறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை!
அப்படி வேறெதுவும் இல்லையென்று
சொல்லிவிடவும் முடியாதுதான்.
‘மனசாட்சி’ என்றொன்று இருக்கத்தான் செய்கிறது!
மதங்களும்/ அதன் கோட்பாடுகளும்
மனிதர்களை அச்சமூட்டி
அவர்களை தவறுகள் செய்யவொட்டாது
தடுக்க முனைவது மாதிரி மனசாட்சியால் முடியுமா?
அதற்கு அத்தனை வலுவுண்டா?
தெரியவில்லை/ தெளிவுமில்லை.
மனோதத்துவத் துறை சார்ந்த நண்பர்கள் யாரேனும்
மனசாட்சியின் தார்மீக வலுப்பற்றி
ஆய்ந்துச் சொன்னால் நல்லது.
‘உங்களது மனச்சாட்சி பற்றிச் சொல்வதற்கு என்ன?’ வென்று
நீங்கள் கேட்கலாம்.
சரியா போச்சு!
என் மனசாட்சியைப் பற்றி எனக்குத் தெரியாதா?
அது அத்தனைக்குச் சொல்லத் தகுந்தது அல்ல;
தேறாவும் தேறாது!

*

இப்போது மணி பத்து ஐம்பத்தி ஐந்து.
வெள்ளிக் கிழமை ஜும்ஆவுக்குப் போக
ஆபிதீன் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.
பிற நண்பர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்கள்.
இரண்டரை மணிக்கு ரெடியாகும்
மட்டன் பிரியாணியின் வாசனைத் துளைப்பில்
ஒரு வேளை அவர்கள் விழித்தால் உண்டு!

ஆபிதீன் ஜும்ஆ தொழுகையைத் தவறவிடுகிறவர் அல்ல.
குளித்துச் சுத்தமாகி அந்த நேரத்திற்கு தயாராகிவிடுவார்!
வெள்ளிக் கிழமைகளில்
துபாயின் எந்தத் திக்கில்,
எத்தனைத் தூரத்தில் தங்கியிருந்தாலும்
ஜும்ஆ தொழுகைக்கு
நாசர்ஸ்கொயர் அருகில் உள்ள
‘அல்லா பள்ளி’க்குதான் போவார்.
‘எத்தனையோ மஸ்ஜித்கள் தெருவுக்குத் தெரு இருக்க,
ஏன் அப்படி?’ என்று ஒரு தரம் கேட்டேன்.
‘அந்த மஸ்ஜித், ‘அல்லா’வென்ற அரபி எழுத்தின்
வடிவம் கொண்டது , உயரத்தில் இருந்து பார்த்தால்
அந்த வடிவம் தெரியும் என்றார். 
நான், ‘ம்’ என்றேன்.
கப்பல்/ விமானம்/ ராக்கெட்/ விண்ணைத் தைக்கும் அம்பு
மாதிரியெல்லாம் கட்டிடங்கள் இருப்பதும்,
கடலின்கண் பேரிச்சை மர வடிவில்
நகர் ஒன்று உருவாகிக் கொண்டிருப்பதும் கூட
அவருக்கும் தெரியும்/ எனக்கும் தெரியும்.

நானும் ஆபிதீனுடன்
ஜும்ஆ தொழுகைக்குச் செல்ல ரெடியானேன்.
இப்போது மணி பதினொன்னு.

ஆபிதீனின் கேள்வி, அழுத்தமாக வெளிப்பட்டது.

‘தாஜ், நீங்கள்தான் நாஸ்திகராயிற்றே…
ஏன் தொழ வருகின்றீர்கள்?’ என்றார்.
என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
ஊரில், என்னை நன்கு தெரிந்த சில நண்பர்கள்
கேட்கும் கேள்வியேதான் இது.
அதற்கு அங்கே, சிரித்து மழுப்புவதையே
பதிலாக கொண்டிருந்தேன்.
ஆபிதீனிடமும் அந்த பதிலையே பிரயோகித்தேன்.
அவர் விடுவதாக இல்லை.
திரும்பவும் கேட்டார்
‘தயவு செய்து என்னைப் புரிந்துக் கொள்ளுங்கள்’ என
மன்றாடி கெஞ்ச வேண்டியதாயிற்று.
விடுபவராகத் தெரியவில்லை
திரும்பவும் கேட்க, ‘ஆபிதீன் , விடுங்கள்’ என்று நெளிந்தேன்.

அப்போது அவர் சிரித்தார்.

**

நன்றி : தாஜ் / தமிழ்ப்பூக்கள் | satajdeen@gmail.com

14 பின்னூட்டங்கள்

 1. 07/09/2010 இல் 14:57

  அன்புள்ள தாஜ்,

  நீங்கள் மேதைமையின் சிக்கலான சிந்தனையில் உங்கள் பார்வையின் எளிமையை தொலைத்துவிட்டீர்களோ என தோனுகின்றது. திருக்குரானில் இறைவன் தன்னை வெளிப்படையாகவே அறிமுகப் படுத்துகின்றான். 15 வருடங்கள் ஒரு கிடைப்பதற்கரிய குருவின் சகவாசத்தில் இருந்ததன் பலனாய் கடவுளைப் பற்றிய தேடுதலில் எனக்கு கிடைத்த சில எளிய விளக்கங்களின் என் வலைப்பக்கத்தில் பதிந்திருக்கின்றேன்.
  நீங்கள் அறிந்தவற்றின் சுமையிலிருந்து சற்றே விடுதலையடைந்தவராக அவற்றை பார்வையிட உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.

  • தாஜ் said,

   08/09/2010 இல் 09:53

   அன்புடன்
   நூருல் அமீன்…

   உங்களது கருத்துக்கு நன்றி.

   உங்களிடம் இருந்து கருத்தை
   இன்னும் ஆழமாக எதிர்ப்பார்த்தேன்.

   நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல்…
   மேதமையின்
   சிக்கலான சிந்தனை எல்லாம் இல்லை.
   நான் சாதாரணமானவன்.
   அந்தக் கட்டுரை
   என் யோசிப்பின்
   அவஸ்த்தையைத்தான் பேசுகிறது.
   முன் வைக்கிறது.

   நூருல் அமீனின்
   ஆன்மீக எழுத்துக்களை முழுமையாகப்
   படித்துவிட்டுத்தான் இதை எழுதுகிறேன்.
   நீங்கள்தான் எனக்கு
   பதில் சொல்லத் தகுந்தவர்.
   என் ஐயங்களை கலையுங்கள்.

   இறைவன்/குர்-ஆன்/நபி மொழி/நம்பிக்கை/ போன்ற
   பலமான, என்னை அச்சமூட்டுகிற,
   ஆயூதங்களைப் பயன்படுத்தாமல்
   முகத்தில் அறைவது மாதிரி
   பதில் செய்து எழுதுங்கள்.
   அப்பவாவது புத்திவருகிறதா என்றுப் பார்க்கிறேன்.

   நூருல் அமீன்,
   இதை நான் நட்புடனும்/
   திறந்த மனதுடந்தான்/
   எழுதியிருக்கிறேன்.

   நன்றி
   -தாஜ்

 2. 08/09/2010 இல் 09:40

  Truly those who deny Our Signs and are arrogant (toward them) shall not have the gates of Heaven opened for them, nor will they enter the Garden until the camel passes through the eye of the needle. And that is how We repay the evil-doers.
  – The Quran Shareef 7:40

  மேலே கூறப்பட்ட குரான் ஷரீஃபின் வசனத்தில் எவர் நம்பவில்லையோ என்று வரவில்லை, எவர் மறுக்கின்றாரோ (deny) என்று வருகிறது.

  இஸ்லாத்தின் கோட்டைக்கு நம்பிக்கை தான் வாசல் கதவு என்றாலும் தெளிவான அத்தாட்சிகள் (குரான் ஷரீஃப்- Literary Miracle) வந்த பின்பும் கேள்வி கேட்டு புறக்கணிப்பது என்பது பிடிவாதத்தை மட்டுமல்ல கர்வத்தையும் (arrogant) தான் காட்டுகிறது.

  ஒரு விதத்தில் (நம்ப மறுப்பதோ அல்லது) புறக்கணிப்பது(தோ) நன்றி கெட்டத் தனம் ஆகிறது.

  நாட்டின் அரசும் சமூக அமைப்பும் தவறுகளுக்கு தண்டனை கொடுக்கலாம், ஆனால் அத்தனை தீர்ப்புகளும் நீதமாக தான் கொடுக்கப்படுகின்றதா? உதாரணமாக ஒரு கொலை செய்தவனுக்கும் அதே தண்டனை, குண்டு வைத்து ஊரையே அழித்தவனுக்கும் அதே தண்டனை என்று தான் கொடுக்க முடிகிறது, இதை நியாயமான தீர்ப்பு என்று வரையறுக்க முடியாது.

  இன்னும் எத்தனையோ நிரபராதிகள் தண்டிக்கப்பட்டும், குற்றவாளிகள் நீதமான முறையில் தண்டிக்கப்படாமலும், அல்லது குறைவாக தண்டிக்கப்பட்டும், அல்லது தண்டனையே கிடைக்காமலும் அவர்கள் காலமும் முடிந்து விடுகிறதே..

 3. 08/09/2010 இல் 09:42

  (தொடர்ச்சி..)

  அதனால் தான் மறுமை நாளுக்கு நியாய தீர்ப்பு நாள் என்றே பெயர்.

  • தாஜ் said,

   08/09/2010 இல் 10:07

   அன்புடன்
   நாகூர் இஸ்மாயில்…
   உங்களது வருத்தத்தையும்/ கோபத்தையும்/
   முழுமையாக அறிகிறேன்.

   புதிதாக மதத்தையோ/ஸ்பனத்தையோ
   தொடங்க நான்
   எழுதிய பிரகடனம் அல்ல அது.

   என்னுடைய எளிய யோசிப்பும்/
   சிந்தனைகளும் மட்டுமேதான்!

   தயவு செய்து எனக்கு,
   என் கோணத்தில் பதிலளித்து
   யோசிக்க வையுங்கள்.

   உங்களின் முரணுக்கு ஆளானதற்காக….
   வருந்துகிறேன்.

   எழுதுங்கள்.
   நன்றி.
   -தாஜ்

 4. mohideen said,

  08/09/2010 இல் 23:57

  Whether God Exist or not ? This question can not be solved by any of the intellectual. It is unanswerable as like what is the final digital of a number..It is infinity?
  When we belive that we possess less power or knowledge to control the nature, it is our natural instict to belive in the supernatural power like God, Allah, Krishna , bla bla,,,
  That y when you bow yourself before God. Psycologically atleast for sometime our mind is free,,,
  Regards

  Mohideen

  • தாஜ் said,

   09/09/2010 இல் 09:14

   Dear Mr.Mohideen…

   நீங்கள் சொல்லி இருப்பதெல்லாம் சர்யே.
   கடவுளின் இருப்பு விடைக் காணமுடியாத கேள்விதான்.
   இயற்கையை இயக்கும் சூப்பர் பவர் குறித்த உங்களது
   அனுமானமும் சரிதான்.
   பலப் பிரச்சனைகளில் இருந்து மூளை விடுப்பட
   கடவுளை நாடுவதென்பதும் சரிதான்.

   ‘கடவுள் இருக்கு என்பவனும்
   இல்லை என்பவனும்
   ஒரே நிலை எய்தியவர்கள்
   அவர்கள் இறைவனைத் தேட
   இனி எந்த முகாந்திரமும் இல்லை!’
   என்கிற மூன்றாம் கருத்தும் இருக்கிறது.
   பொதுவில் விடைக் காண முடியாத கேள்வியாகத்தான்
   இறைவனின் இருப்பை அழுந்தப் பதிய வைத்திருக்கிறார்கள்.

   என்னுடைய கட்டுரை
   போகிறப் போக்கில் சொல்லப்பட்ட
   அனுபவ ரீதியான சங்கதி மட்டும்.
   கூடுதலாக சில ஐயங்களையும் விவரித்திருக்கிறேன்.

   கடவுளைப் பற்றி நான் அநியாயத்திற்கு யோசித்தக் காலத்தில்
   ஹாஜா அலி என்கிற என் இலக்கிய நண்பர் சொன்னார்,
   ‘யோசிக்க எத்தனையோ விசயங்கள் இருக்கிற போது
   ஏன் இப்படி இதனை யோசிக்கின்றீர்கள்!’ என்றர்.
   இன்னொரு கவிதை எழுதும் பெண் நண்பர்,
   ‘இதோ பருங்க தாஜ், அது நாம் தலைவைத்து
   சற்று இளைப்பாருகிற இடம். அதையேன் போய்
   பிரச்சனை ஆக்குகின்றீர்கள்’ என்றார்.

   நீங்களும்
   கிட்டத்தட்ட அதையேதான் சொல்லி இருக்கின்றீர்கள்.
   நன்றி.

   ஆனால், என் கட்டுரைப் பேசும் தளம்
   சற்று கோணம் மாறியது என கருதுகிறேன்.
   என்றாலும்…
   நன்றி.

   அன்புடன்
   – தாஜ்

 5. 11/09/2010 இல் 21:20

  அன்புள்ள தாஜ்,
  என்னிடத்தில் உங்களுக்கு பதில் இல்லை தாஜ்.அது உங்களிடமே தான் இருக்கிறது. எந்த அறிவின் மூலம் தேடுதலின் அவஸ்தை நமக்கு பிறக்கிறதோ அந்த அறிவின் மூலம் எது என உங்களிடமே தேடுங்கள். எனக்கு கேள்விகளின் அவஸ்தை நேர்ந்த போது என் கேள்விகளுக்கு பதில் வேண்டாம். தேவையற்ற என் கேள்விகளை நிருத்தி விடுங்கள் என என் குருவிடம் கோரிக்கை அனுப்பினேன். நான் கடிதம் எழுதி அஞ்சலில் சேர்த்தவுடனே என் கேள்விகள் நின்று விட்டது. அதற்கு இது வரை எனக்கு கிடைப்பதெல்லாம் பதில்கள் மட்டுமே.

  உங்கள் முகவரியை எனக்கு மெயிலில் அனுப்புங்கள். அகப்பார்வை என்ற எனது நூலில் ஒரு பிரதியை உங்களுக்கு அனுப்ப ஆசைப்படுகின்றேன்.அந்த புத்தகம் நம் அறிவின் மூலத்தை பற்றிய சின்ன அறிமுகம் மாத்திரமே. ஒரு வேளை ஒரு சிறிய வெளிச்ச கீற்றை நீங்கள் பெற்றுக் கொண்டால் கூட எனக்கு மகிழ்ச்சியே.

  தாஜுடன் இருக்கும் தாஜின் இறையே அவருக்கும் சாந்தி நிறைந்த உள்ளத்தை (கல்பின் சலீம்) வழங்குவாயாக! என்ற பிரார்த்தனையுடன்.

  • தாஜ் said,

   13/09/2010 இல் 10:09

   நட்புடன்
   நூருல் அமீன்…

   உங்கள் மீது என் ப்ரியம்
   சற்றைக்கு அதிகம்.

   நீங்களும் என்னை மாதிரியே
   சுமார் பதினைந்து வருடங்கள்
   இறைவனை தேடியவராயிற்றே!

   அதனால்தான்
   சென்றப் பதிவில் எழுதியிருந்தேன்…
   நீங்களே எனக்கு பதில் சொல்லத் தக்கவர் என்று.
   இன்னும் நீங்கள் சொல்லாததுதான் ஏக்கத்தை தருகிறது.

   பதில் என்னிடத்தில்தான் இருக்கிறது
   தேடி அடையுங்கள் என்று
   மீண்டும்
   இன்றைக்கு நீங்கள்
   குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.

   பார்க்கலாம்.
   எப்படித் தேடினாலும்
   அந்த பதில்
   நம்பிக்கையின் அச்சில்தான் நிற்கும்!

   உங்களுக்குத் தெரியுமா…
   நம்பிக்கை என்பது இரண்டு விதம்.
   பூர்ண நம்பிக்கை/ பூரணமற்ற நம்பிக்கை.
   பூரண நம்பிக்கை
   சிதையாததுவரை பிரச்சனை இல்லை.
   சிதைந்ததோ…
   அதில் கேள்விகள் பிறந்ததோ…
   அல்லது துளியளவு சந்தேகம் ஏற்பட்டதோ…
   அதை நிவர்த்திப்பது பெரும்பாடு.

   நீங்கள் எனக்கு
   இறை தெளிவுறுத்தலுக்காக
   புத்தகம் ஒன்றை
   அனுப்பி வைப்பதாக கூறியுள்ளீர்கள்.
   நன்றி.

   வேறென்ன சொல்ல.

   முகவரியை
   மெயிலில் அனுப்பி வைக்கிறேன்.

   – தாஜ்

 6. மஜீத் said,

  13/09/2010 இல் 14:02

  ஜமாலன், ஊருக்குப் போயிருக்கிறாரோ?

  • தாஜ் said,

   14/09/2010 இல் 15:48

   மஜீத்…
   உங்களது விமர்சன வரிகள்
   என் டேபிளிலும்,
   ஆபிதீன் பார்வையிலும் இருக்கிறது.
   ஆசிரியர் ஆபிதீன் பச்சை சிக்னல் தந்தால்
   உங்களது விமர்சனத்தையொட்டிய என் பதில்…
   இன்னொரு விசேஷ கட்டுரையாக வரக் கூடும்.
   என்றாலும்… இப்போதைக்கு நன்றி.

   தோழர் ஜமால் மட்டுமல்ல
   இன்னும் சில அறிவுஜீவிகளிடம் இருந்து
   அபிப்ராயத்திற்காக நானும் காத்திருக்கிறேன்.
   – தாஜ்

   • abedheen said,

    15/09/2010 இல் 09:47

    ‘ஆசிரியர்’ ஆபிதீனா?! யோவ், என்ன வெளையாடுறியா? நம் ஜமாலன் எழுதுவார். இப்போது ஈத் விடுமுறையில் இருக்கிறார்.

 7. 17/09/2010 இல் 10:11

  அன்புள்ள தாஜ்,
  உங்கள் பதிலில் ஒரு சின்ன சலிப்பைக் கண்டேன். அதனால் புத்தகம் அனுப்பும் நோக்கத்தை விளக்க இதை பதிவு செய்கின்றேன்.
  இறைவனுக்கு வெளியானவன் (லாஹிர்) என்றொரு பண்பு பெயர் உள்ளது.
  வெளியானவன் என்றால் எப்படி?
  வெளிப்பட்ட வெளி எது?
  உருவங்கள் அற்றவன் அவன். வடிவங்களில் அடங்கா மகத்துவம் அவன். அத்தனை உருவங்களும்,வடிவங்களும் அவன் இருப்பின்அடையாளங்களே!
  நிறங்கள் அற்றவன் அவன்.அத்தனை நிறங்களும் அவன் வெளிப்பாட்டின் வர்ணஜாலங்களே!
  அனைத்தும் அவன் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட வெளிகளே!
  நீங்களும், நானும் இயற்கையும், செயற்கையும் அவனை காட்ட வந்த கண்ணாடிகளே!
  ஒவ்வொரு வினாடியும் மாறும் தன்னையும்,அனைத்தையும் கண்ணடியாக்கி மாறா அவன் மதிமுகத்தை காணும் காதலன் யார்?
  குருடர்கள் கண்ட யானையல்ல அவன்.
  யானையை கண்ட குருடர்கள் நாம்.
  இன்ஸான் என்ற வார்த்தைக்கு கண்மனி என்று ஒருபொருள்.
  நம் சுயம்/அகம் என்பதே அவன் காட்சிக்கு சாட்சியான – கண்மனியான இருப்புத் தான்.
  அவன் தூரமற்ற நெருக்கத்தை உணரும் நம் பிறவிப்பார்வையை….அகப்பார்வையை வழங்க வந்தவர்களே நபிமார்கள்.
  கண்களின் வெளிச்சத்துக்கு ஒரு சூரியன் போல் அகப்பார்வையின் வெளிச்சத்துக்கு வந்ததே வேதம்.
  ஒரு சின்ன அறிமுகத்துக்காகத் தான் என் அகப்பார்வை புத்தகத்தை அனுப்புவதாய் சொல்லி இருந்தேன்.
  அந்த தேநீரை உங்கள் கோப்பையில் ஊற்றி பருகுமுன் உங்கள் கோப்பையை முன்தீர்மானங்களின் வாசனையில் இருந்து சுத்தப்படுத்துங்கள்.
  வேதவரிகளும், தூதர் மொழிகளிலும் நம்மை மிரட்ட வந்த பிரம்புகளல்ல.
  நம் பாதையின் – பயணத்தின் ஒளிவிளக்குகள் அவை.
  நம் மீது காதல் கொண்ட அந்த மகத்துவம் பரிவோடு நமக்களித்த காதல் பரிசு.
  உங்களின் தேடலின் கன்னித் தன்மை களங்படாமல் இருந்தால்…..
  அந்த அகவாசலின் கதவுகள் மூடப்படாமல் இருந்தால்….
  இன்ஷாஅல்லாஹ் சின்ன காற்றாகவாவது உள்நுழையும் என் அகப்பார்வை.
  முகவரி கிடைத்தது. விரைவில் அனுப்பி வைக்கின்றேன்.
  வஸ்ஸலாம்.

  • தாஜ் said,

   17/09/2010 இல் 16:41

   அன்புடன்…
   ஓ நுருல் அமீன்…

   இப்பவும் கனிவுடனேயே பதில் செய்கிறேன்.
   எனக்கு நேர் பாதைக்காட்ட
   அல்லது
   என்னிடம் ஏதோ ஒன்றைத் தெரிந்துக் கொள்ள
   மடல் எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள்.
   மிகுந்த சந்தோசம்.

   என்னை நீங்கள்
   நல்வழிப் படுத்துவதாகவே கருதி
   இந்த மடலை நான் எழுதுகிறேன்.
   உங்களது தாகம் எனக்குப் பிடித்திருக்கிறது.

   என்னுடைய கட்டுரையில்
   ‘இறை’ வார்த்தைகளைப் பொருட்படுத்தால்/
   நபி மொழிகளை எடுத்துக் கொள்ளாமல்/
   தொடர்ந்திருக்கிறேன் என்கிற
   ஆதங்கம் உங்களுக்கு இருக்கிறது.

   அதற்கு மேலாக
   நாம் அதனை எடுத்துச்சொன்னால்
   இவர் பொருட் படுத்த மாட்டேன் என்கிறாரே என்கிற சொல்லமுடியாத வருத்தமும்
   உங்களுக்கு உண்டு அறிவேன்.

   ப்ரிய நூருல் அமீன்…

   இந்த வகை எடுத்துக் காட்டுகளை
   என் வழ்வில் எத்தனையோ உலமாக்கள்
   எனக்கு எடுட்டுக்காட்டிவைதான்.
   அவர்களால் அதற்கு மீறி,
   எதனையும் கூறி விட முடியாது என்பதும் தெரிந்ததுதான்.

   என் கட்டுரையின் கோணத்தைப் பாருங்கள்.
   அதில் நான் வைத்திருப்பவைகள் வாதங்கள் அல்ல-
   அபிப்ராயங்களும் அல்ல-
   கிட்டத்தட்ட ஓர் ஆய்வு சம்பந்தப்பட்ட அலசல்கள்!

   நான் வெகு காலமாக சமூகம் பொருட்டு மதித்து வந்த
   பெரியாரி மொழியை
   பிரச்சனையாக்கி இருக்கிறேன்.
   அவரது பக்கத்தில் நின்று நான்
   கடவுளை மறுத்திருந்தால்
   உங்களது ஆதங்கம் அர்த்தம் கொண்டிருக்கக் கூடும்.
   நான் எழுதி இருப்பது கிட்டத்தட்ட ஓர் ஆய்வு.

   மிகுந்த/ செறிவுடைய
   இஸ்லாமிய குடும்பத்தின் பிள்ளை நான்.
   என் பாட்டி எந்நேரமும்
   ‘முஸ்ஸல்லாவிலேயே/ஒதுவிலேயே அமர்ந்திருக்கக் கூடியவர். என் தாய்/தந்தை/பாட்டி எல்லோருமே
   முதிர் வாங்கியவர்கள்.
   1985-ல்
   நான் என் அம்மாவோடு ஹஜ் செய்தவன்.
   எனக்குள் இப்படி ஓர் யோசிப்பும்/
   அது குறித்த ஆய்வும் கிளைக்கு மென்றால்…
   நான் என்ன செய்ய?
   நான் எல்லோரையும் மாதிரி
   இருக்க முடியாதற்கு நிச்சயம் நான் காரணமல்ல!
   புரிந்துக் கொள்ளுங்கள்… நூருல் அமீன்.

   இறைவன் குறித்த
   என் வெளிப்பாட்டைதான்
   இப்போது நீங்கள் ‘லாஹிர்’ என்று
   எனக்கு நீங்கள் திரும்ப விளக்கி இருப்பதில் சந்தோசம்.

   நூருல் அமீன் உங்களுக்குத் தெரியுமா?
   நம் கடவுள் நம்பிக்கை நூற்றுக்கு நூறு
   நம்பிக்கையின் கயிற்றால் கட்டப்பட்டது
   இதை யாராவது எடுத்துச் சொல்லி
   என் வாயை அடைபார்கள் என்று பார்த்தால்
   எல்லோருமே மீண்டும் மீண்டும்
   தத்துவார்த்த முழக்கங்களுக்கே போகின்றார்கள்!
   சந்தோசம்.
   நன்றி.
   -தாஜ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s