ஒரு கடிதம்…பின்னூட்டமிட முயன்று அது நீஈஈஈஈஈஈஈண்டு அந்து விழப்போனதால் அது கடிதமாகிவிட்டது.
சகோதரர் ஒ. நூருல் அமீன் அவர்களின் மேலான பார்வைக்கு :
தாஜ் அவர்களின் ‘க.நா.சு.‘ படித்தவுடன் எழுதத்தோன்றியது நிறைய! ஆனால் தகுதி குறித்த ஐயம் தடுத்து விட்டது. தங்களின் பின்னூட்டம் படித்தவுடன் ஏதோ ஒரு பின்பலம்.
முதலில், தங்களைப்போல ஒருவர் தாஜ் அவர்களைப் போன்ற ஒருவரிடம் வாசிக்க வழிகாட்ட வேண்டும் பாங்கும், அடக்கமும் போற்றுதற்குரியது. தாஜ் அதற்கு மிகத்தகுதியானவர் என்பதும் ஐயத்துக்கப்பாற்பட்டது; என் அனுபவம் அதற்கு சாட்சி.
தாஜ் தனது இடுகையில் நான்கு முறை குறிப்பிடும் ‘வாசகர்க’ளுக்கு (இதில் கற்றுக்குட்டிகளும் கட்டாயம் அடக்கம்) அவர்களில் ஒருவனால் சில விடயங்கள் முன்னிருத்தப்படுவது தேவைதான்.
நான் அதிர்ஷ்டசாலி ஒருவகையில். தாஜ் அழுத்தத்துடன் அறிவுறுத்தும் தேடல் எனக்கு தேவைப்படவில்லை. தேடல் என்னைத்தேடி வந்தது. சஞ்சிகைகளே இலக்கிய உலகமாக இருந்த எனக்கு, உலகமே சித்திரவதைக்கூடமாக இருந்த (தெரிந்த)நேரத்தில் நான் தாஜிடம் ஒதுங்கியது இலக்கியம் தேடியல்ல. நிழல் தேடியும் தனிமை தவிர்க்கவும்தான். வெகு சீக்கிரத்திலேயே தாஜ் யார் என்று தெரிந்துகொண்டேன். அதைவிட நான் யார் என்று தெரிந்துகொண்டேன் என்பதே சரியாகும். தேடித்தேடி அலைந்து படிக்கவேண்டியவை யாவும் தானாகவே புகட்டப்பட்டன. ஒரு புத்தகத்தை நானாக எடுத்து அதைத் ‘தொடர்ந்து’ படித்துக்கொண்டு இருந்ததை ஓரக்கண்ணால் அவர் பார்த்திருக்க வேண்டும். கேட்டார்: ஏதாவது புரியுதா? நான்: ம். மீண்டும் அவர்:புடிக்குதா? என்னிடமிருந்து மீண்டும் ஒரு ‘ம்’. பிறகு சில சிற்றிதழ்களை விசிறி, முதல்ல இதெல்லாம் படிய்யா, ‘அதை’ அப்புறம் படிக்கலாம் என்றார். ‘சரிண்ணே’ என்று சொல்லி வாங்கினேனே தவிர ‘அதை’ முடித்துவிட்டுத்தான் மற்றவற்றைத் தொட்டேன். கவனித்துக் கொண்டுதானிருந்தார். இடையிடையில் ஏன்ய்யா புரிஞ்சுதான் படிக்கிறியா? புரியலைனா கேளுய்யா என்பார். ‘தொல்லை’ தாங்காமல் ஒருநாள் கொஞ்சம் கடினமான ஒரு பக்கத்தை, அவரிடம் விளக்கிச்சொன்னவுடன் ‘சரிய்யா, படி படி’ என்றார். ‘அது’தான் ஜே.ஜே. சில குறிப்புகள். அந்தளவுக்கு வாசிப்பை வழிநடத்துபவர் தாஜ். (சமீப காலமாக என்னிடம் பேசும்போது, இரண்டு மாதத்திற்கு முன்பு வரை பேனாவே பிடித்திராத நான் எழுதியதாகவும் அதை அவர் படித்ததாகவும் சூடம் கொளுத்தி சத்தியம் செய்கிறார். அந்தளவுக்கு அவரை நான் ‘படுத்தி’யிருக்கிறேன், பேசிப்பேசியே.) வெகுநாட்களுக்கப்புறம் கொஞ்சம் ‘தெளிந்தபின்’ புளியமரத்தின் பக்கம் ஒதுங்கினால், அது ஜே.ஜே அளவுக்கு கவரவில்லை. இதைச் சொல்லும் தகுதி எனக்கிருப்பதாக நான் நினைக்கவில்லை. தாங்கள் அதைச்சொன்னவுடன் தங்களுடன் சேர்ந்துகொள்கிறேன். விவரமானவர்களில் இயன்றவர்கள் 1991 வளைகுடா போருக்கு முன்னாலேயே சவூதியில் இருந்து கம்பி நீட்டி விட, தாஜ் ‘ரொம்ப விவரமாக’ போர்முடிந்து அமைதியானவுடன் ரிஸைன் செய்துவிட்டுக் கிளம்பினார். போகும்போது ‘அடியில் கண்ட சொத்துக்களை’ என்ன செய்வதென்று தவித்தார். இது வளைகுடாவின் அவலம்; இடப்பிரச்சினை. மவுத்தானால் கப்ருக்கு இடம்பிடிக்கவே 333 சான்றிதழ்கள் வேண்டும். காகிதங்களுக்கு என்ன செய்வது? கட்டுக்கட்டாக அனைத்தையும் என் பெயருக்கு உயில் எழுதிவிட்டு, கடைசியாக அவற்றை வாஞ்சையோடு ஒரு பார்வை பார்வை பார்த்துவிட்டுச்சொன்னார்: ‘நீயாவது எல்லாத்தையும் படிய்யா’. எனக்கும் நீண்ட நாட்கள் ஓடவில்லை அங்கு. முடிந்தவரை படித்தேன். என் கண்முன்னாலேயே சிலசமயம் மூட்டைகளின் உருவம் சிறிதாகும்; எண்ணிக்கை குறையும். எனக்கே கண்கலங்கும். மீதமிருந்ததை உயில் எழுதக்கூட ஆளில்லாமல் விட்டுச்சென்றுவிட்டேன்.திரும்பவும் அங்கு செல்லக்கூட முடியவில்லை.
தாஜ், கவிதை வாசிக்கும் முறை பற்றி கூறுகிறார்: வாசகர்களே, கவிதை வாசிப்பை, வாய்ப்பாடு மாதிரி வாசித்து முடித்து விடாதீர்கள். ஒவ்வொரு சொல்லும்/ ஒவ்வொரு வரியும்/ சொல்லோடு அடுத்த சொல் சேர்கிற போதும்/ ஒரு வரி அடுத்தவரியோடு சங்கமிக்கிற போதும்/ மொத்தக் கவிதையும்/ அதன் தலைப்பும்கூட நமக்கு முக்கியமானதாக இருக்கும். கவனமும்/ உள்வாங்கிக் கொள்வதும்/ உணர்தலுமே கவிதையை நம்மில் கொண்டு வந்து சேர்க்கும்
எங்கள் ஊரில் ஒரே வார்த்தையில் சொல்வார்கள்: “பிரித்துமேய்ந்து” விடவேண்டும். இந்த கலையை மேம்படுத்திக்கொள்ள ‘வாசகர்கள்’ நண்பர் ஜமாலன் அவர்கள் ஈவ் இன்ஸ்லரின் ”சுவர்” கவிதையை பிரித்துமேய்ந்திருப்பதையும் பார்க்கவேண்டியது அவசியம்.
‘பம்பாய்’ கவிதையைக் கிளறினால் பூதங்கள் கிளம்பிக் கொண்டேதான் இருக்கும். தாஜ் கூறும் நமுட்டுச்சிரிப்பு விவகாரத்தில் எனக்கு இன்னொரு கோணமும் தோன்றியது: க.நா.சு.வின் பட்டறிவு காசியில் வென்று பம்பாயில் தோற்றிருக்கலாம் என்று. Imagination at your own risk !!! வாசகர்கள் வெல்லட்டும். வெல்ல வேண்டும்.
க.நா.சு. இழந்தது பற்றி உருகும் தாஜ், தனது இலக்கிய ஆர்வத்தால் இழந்ததும் கொஞ்சமல்ல, நானறிந்து. அவர் மறைந்தவுடன், தன்னந்தனியாக, நாட்கணக்கில், ஒரு அரசாங்கம் போல, துக்கம் அனுஷ்டித்ததைப் பார்த்த ஒரே சாட்சி நான். (என் நினைவு சரியானால், தாஜ் க.நா.சு. அவர்களை சந்தித்து வந்த சில வாரங்களில்).
க.நா.சு. பெயருக்கு உரிமை கோர வேறு யார் இருக்க முடியும், இவரை விட்டால்?
அன்புடன்,
மஜீத்
*
ப்ரீஃப்கேஸ்
எங்க ஊர் ‘மொக்குசா’ வுக்கு சமீபத்துலதான் கல்யாணம் ஆச்சு. ஒரிஜினல் பேரு முகம்மது சாஹிப் ஆ இருக்கலாம். பெயர் மருவுவது அதுவும் கொடுமையாக மருவுவது ஒன்னும் புதுசில்லையே நம்ம ஊர்ல? முஹம்மது இப்ராஹீம் ‘மாம்ராய்’, முஹம்மது அப்துல்லா ராவுத்தர் ‘மம்மத்துல்லா’ ராவுத்தர், இன்னும் ‘மம்மால் கார்’, (முஹம்மது அப்துல் காதர்).
இதைவிட இன்னொருவர் கதை பரிதாபகரமானது. திருவேங்கடத்தையங்கார் ஒருத்தர் இருந்தார். அவரோட அப்பா அந்தக்காலத்துல எலி கடிக்கு மருந்து கொடுத்தாராம். அதனால இவரை ‘எலிகடி’ அய்யங்கார்னு கூப்பிட்டு, அப்பறம் ‘ங்கா’ குறைஞ்சு எலிகடி அய்யர்னு ஊர்ல ரொம்ப பேரு சொல்றோம். அவரும் எலிகடிக்கு மருந்து கொடுத்தாரோ இல்லையோ, வேற மருந்தெல்லாம் கொடுத்தார். சுத்து வட்டார கிராமத்துல இருந்து ஏதோ ஒரு நம்பிக்கைல வர்ற ‘சனங்களுக்கு’ கிளோரோமைசிடீன் கியாப்சூல்’ ன்னு தமிழ்ல எழுதுன “பிரிஸ்க்ரிப்ஷன்” எங்க ஊர் சேரன் மெடிகல்ஸ் சுக்கு வரும். அந்த மாதிரி வர்ற சனங்க அவர சொல்றது ‘எலிப்புடிக்கி அய்யர்’
மொக்குசா மாட்டர்க்கு வருவோம்.
கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நாள்ல பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு ஷாப்பிங் போனான். ஏழரை ஸ்டார்ட் ஆயிருச்சு. அந்தப்பொண்ணு எனக்கு ‘பாம்புத்தோல்’ல செஞ்ச மணிபர்ஸ் வேணும்னுச்சு. எதுக்குடி பாம்புத்தோல் எல்லாம்? அப்பர்க்ரவுண்டுல கொண்டுபோய் சொருக போறீங்க, எந்த தோலா இருந்தா என்னன்னு கேக்க நினைக்க மட்டும்தான் முடிஞ்சது. புது பொன்டாட்டில? அலஞ்சு வாங்கி குடுத்த கையோட அவன் குதர்க்க புத்தி வேலைய ஆரம்பிச்சுருச்சு. நம்மளும் ஒரு ‘பாம்புத்தோல்’ மணிபர்ஸ் வச்சுகிட்டா என்ன?
ராத்ரி பூரா தூங்காம கிடந்து அதிகாலைல பொண்டாட்டி எந்திரிச்ச உடனே கேட்டான்: ‘ஆமா, உங்க அக்கா மவனுவளுக்கு என்னிக்கிடி சுன்னத் கலியாணம்?’ ‘வர்ற திங்கக்கிழமைங்க.. ‘
அங்க போய் விசாரிச்சதுல பழையகோட்டை மாலி (நாவிதர்/சுன்னத் செய்பவர்) தான் வந்திருந்தார். இவர்தான் ரொம்ப பிஸி. வேறகோட்டை மாலி சமயத்துல கொதறி வச்சுர்ராறாம். அவர்ட்ட ரொம்ப நேரம் பேசுனான் நம்மாளு. அவரோட டர்ன் ஓவர் தெரிஞ்சதும், மனிபர்ஸ் வேணாம், ப்ரீஃப்கேஸே செஞ்சிருவோம்னு முடிவுகட்டிட்டான். கடைசில மாலி எதுக்கோ ஒத்துக்கொண்டது மாதிரி தலையாட்டினார்.
அதுக்கப்புறம் அந்த மாலி எப்பவும் ஒரு துணிப்பை மட்டும் கொண்டுட்டு வருவார். அதுல ஒரு மரக்கிட்டி,ஒரு கத்தி, அப்பறம் இப்ப புதுசா ஒரு Ethyl Chloride ஸ்பிரே – மரமரப்புக்காம், மாடர்ன் டாக்டிஸ்தான்-. இருக்கும். (அதை அடிக்கும்போது சுர்ர்னு எரியும் அவ்வளவுதான்; மரமரப்பெல்லாம் வராதுங்கிறது தனிக்கதை)
மொக்குசாட்ட பேசுனதுக்கு அப்பறம் அவர் ஒரு தெர்மாஸ் ஃபிளாஸ்க்கும் கொண்டுவர்றது எதுக்குன்னு எல்லார்க்கும் ஒரே குழப்பம். ஃபிளாஸ்க்கை தொறந்து பாத்தா தெரிஞ்சிருக்கும், வெட்டுன தோலை எல்லாம் ஐஸுல போட்டு மொக்குசாவுக்காக வச்சுருக்கிறது
மொக்குசா பாட்டுக்கு அடுத்த ஏற்பாட்டுல பிஸியாயிட்டான். சூரக்குடி பேக் ஒர்க்ஸுல போய் என்னமோ விசாரிச்சதுக்கு அவுங்க, நாங்க ரெக்ஸின்ல பேக் தச்சு வித்துக்கிட்டு இருக்கோம். நீங்க கொண்டுட்டு வர்ற ‘மெட்டீரியல்ல’ எல்லாம் நாங்க ஒன்னும் பண்ண மாட்டோம்னுட்டாங்க.
அடுத்தா மொக்குசாவுக்கு ஞாபகம் வந்தது எங்க ஊர்ல செருப்பு தைக்கிற கடை வச்சுருக்கிற முனுசாமி. அவன் ஏற்கனவே ஒரு மாதிரி ஆள். அண்ணனோட கடைல அப்பப்ப உக்காந்து செருப்பு தைக்கிறதோட, அப்பப்ப மூனு நாளக்கி விடாம சைக்கிள் ஓட்றேன்னு சொல்லி மைக் செட்டெல்லாம் போட்டான்னா, வெள்ளிக்கிழமை சாயந்திரம் ஏறி, ஞாயிற்றுக்கிழமை காலைல இறங்கி வசூல் பண்ண ஆரம்பிச்சுருவான். இடையில ரெண்டு ராத்திரியிலயும் ஒரு மணிக்கு அப்பறம் வேற ஆள் ஓட்டுறதா வதந்தி வேற. இன்னொரு ஆள் கூட சேந்துகிட்டு மரணக்கிணறு ஓட்றேன்னு ஓட்டி அப்பப்ப சறுக்கி விழுவான்.
அதோட சரியான சோம்பேறி. அண்ணன் செத்தவுடனே கடை அவனுக்கு வந்ததுல ஆச்சரியம் ஒன்னும் இல்ல. ஆனா, அண்ணன் பொண்டாட்டியும் ரென்டு புள்ளைகளோட வந்து சேந்தத என்னன்னு சொல்ல?
அப்படியாப்பட்டவன்ட்ட போய் நிறய்ய்ய்ய பேசி, “மெட்டீரியல்ஸ” குடுத்து ப்ரீஃப்கேஸ் ஆர்டர் பண்ணிட்டான் மொக்குசா. சொன்ன டயத்துக்கு போய் டெலிவரிக்காக நின்னான் மொக்குசா. வந்தான் முனுசாமி. ஒரு பிளாஸ்டிக் கவர்ல போட்டு அவன் மொக்குசா கைல குடுத்தது ஒரு மனிபர்ஸ்.
மொக்குசாவுக்கு ஒரே கோபம், குழப்பம். நான் உங்கிட்ட ப்ரீஃப்கேஸுக்குத்தானே ஆர்டர் பண்ணி அம்புட்டு மெட்டீரியல்ஸ் குடுத்தேன், இப்பிடி பண்ணிட்டியேன்னு கத்துனான்.
முனுசாமி சொன்னான்: ரொம்ப கத்தாதே. வீட்டுக்குப் போய் இந்த பர்ஸ உன் கையால வேகமா ஒரசிப்பாரு, பெருசா ப்ரீஃப்கேஸ் ஆயிரும். ஒருவேளை இன்னிக்கு அப்படி ஆகலைன்னா, நாலஞ்சு வருஷம் கழிச்சு பண்ணிப்பாரு, பசங்களுக்கு இப்ப சின்ன வயசுதானே?
*
நன்றி : மஜீத்
E-Mail : amjeed6167@yahoo.com
தாஜ் said,
06/09/2010 இல் 10:43
மஜீது எழுதிய கடிதத்தில் நான் வருகிறேன்.
வாசிக்க கூச்சமாக இருந்தது.
மஜீதின் அன்பு எனக்குத் தெரியும்.
அதைவிட கடிதவரிகள் பெரிதில்லை.
நன்றி.
‘பிரீஃப்கேஸ்’
அட்டகாசமான
‘அந்தப் பக்க’ கதையாக இருக்கிறது.
ராஜ நாரயணனின்
அப்படியான கதைகளைப்
படிக்கிற போது
எத்தனைக்கு நமுட்டுச் சிரிப்பு எழுமோ….
அப்படியோர் சிரிப்பு!
வாழ்த்துக்கள்.
மஜீத் நிறைய எழுதணும்.
ஆபிதீனின் ‘ஹியூமர்’ கதைகளையெல்லாம்
ஒரு தரம் வாசிக்கணும்.
மீண்டும் வாழ்த்துக்கள்.
– தாஜ்
ஒ.நூருல் அமீன் said,
11/09/2010 இல் 21:43
சுஜாதாவின்(ஜெஃப்ரி ஆர்ச்சரின் பாணியில் அமைந்த) தூண்டில் கதைகளின் பாணியில் அமைந்துள்ளது உங்கள் கதை. உள்ளடக்கம்???
மஜீத் said,
14/09/2010 இல் 18:17
நீங்களே சொல்லிவிட்டீர்கள், தூண்டில் கதை போலென்று!
உள்ளடக்கம் வேறொன்றுமில்லை, மெலிதான குசும்பைத் தவிர.
நன்றி, தொடர்ந்து விமர்சிக்கவும்
ஜமாலன் said,
11/11/2010 இல் 14:32
நல்ல கதை. குசும்பு ஆபிதீன் அண்ணாவிடம் கற்றதா? அப்படியே வந்துள்ளது. புதுமைபித்தன்போன்ற குசும்பு இறுதி வரிகளில். காரப்ரேட் கம்பனிகளுக்கு தெரிந்தால் அதையே பயன்படுத்தி காம்பாக்ட் டபுள் கேஸ் என்று செய்து பர்சாகவும் பிரிப்பாகவும் பயன்படுத்தலாம் என்பார்கள். )))
ஆனால் என்ன சிறுவர்கள் கத்தல் அதிகமாகலாம். ((( என்கவுண்டர்களும் கொவைபோல் நடக்கலாம். (((