க வ ன ம் : க. நா. சு. – தாஜ்

புதுக் கவிதைக்கு, புதுக்கவிதை என்று பெயரிட்டவர் க.நா.சு.! பாரதி காலத்தில் ‘வசன கவிதை’யென அறியப்பட்ட கவிதை வடிவத்திற்கு பட்டுத் தலைப்பாகை கட்டி அழகு பார்த்தவர் க.நா.சு.! நவீன இலக்கியத்தின் மாட்சிமைகளை தமிழ் இலக்கிய உலகுக்கு இவரை விஞ்சி எவரும் சொன்னதில்லை! தன் வாழ்வை நவீன இலக்கியம் பொருட்டு அழித்து  கொண்டவர்க ளில் இவர் முதன்மையானவர்! சரியாகச் சொன்னால், வெறும் வாழ்வை மட்டுமல்ல தனது பூர்வீகச் சொத்துகளையும் இழந்தவர். இன்னும் கூடுதலாக தன் மனைவியின் சொத்துமெனக் கேள்வி. கவிதைக்கென்றும்/ நாவலுக்கு என்றும்/ மொழி மாற்ற நாவலகளுக்கென்றும் புத்தகங்கள் பல பிரசுரித்து, பிரசுரித்தே….  இல்லாமல் ஆனார் என்பது சோகமென்றால், அந்தப் புத்தகங்களை கொள்வார்கள் யாருமில்லாமல் போனது ஜீரணிக்க இயலாத சோகம்.  

க.நா.சு. வை எனக்குப் பிடிக்கும். நவீன தமிழ் இலக்கியத்தின் பிடித்த சில பெருசுகளில் அவரும் ஒருவர். இலக்கியம் குறித்த அவரது உலகலாவிய வியாபாகமும்/ அதனின் உன்னதங்களை அவர் தொட்டுக் காட்டிய பாங்கும்/ தயவு தாட்க்ஷண்ணியமற்ற அவரது இலக்கிய விமர்சனங்களும் குறிப்பிடத் தகுந்த சிறப்புகள். நீங்கள், நவீனத்தின் அழகியலைக் காண விரும்புகிறது  உண்மையானால்/ அதன் நுட்பத்தை கண்டுத் தெளிய ஆசைப் படுவதும் நிஜமானால்/ உலக – இந்திய அளவிலான இலக்கியப் பரிச்சியம் குறித்த அடிப்படை  தகவல்கள் தேவைதானென உள்ளப்படியே நீங்கள் உந்தப் படுவீர்களேயானால், கட்டாயம் நீங்கள் க.நா.சு. என்கிற க.நா.சுப்ரமணியத்தின் எழுத்துகளை அள்ளி அணைத்து கொள்ளாமல் இயலாது. அத்தனைக்கு அவர் எழுதியிருக்கிறார்! கட்டுரை கட்டுரையாக அவர் இலக்கிய ஆவலர்களுக்கு பாடம் நடத்தி இருக்கிறார்.

இலக்கியம் என்கிற பெயரில், இன்றைய எழுத்து வியாபாரிகள் கடைத் திறந்து வைத்து கொண்டு, வாசகர்களுக்கு ஈ-மெயிலில் கடிதம் எழுதி கொண்டு அல்லது பதில் எழுதி கொண்டு, அதனூடே தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டு, தங்களது அதீத எழுத்துக்களின் வியாபாரத்தை விருத்தியாக்கிக் கொள்கிறார்கள். இன்றைய ஆரம்பகால வாசகர்கள் எல்லாவற்றையும் வெள்ளாந்தியாய் நம்பி, அவர்களின் குழம்பிய குட்டையில் ஆர்வமாய் இறங்கி – பின்னர் தவிக்கவும் தவிக்கிறார்கள்.

இலக்கிய ரசனையை கண்டுக் கொள்வதென்பது நீண்ட நெடுநாள் பயிற்சி! தேடித்தான் அடையணும்! மந்திரத்தில் மாங்காயையோ/ மாங்கன்றையோ வரவழைத்துக் காட்டுபவர்களிடம் ஏமாந்துவிடக் கூடாது. தேடுங்கள்… தேடுங்கள்…. இன்னும் இன்னுமென்றுத் தேடுங்கள்.

புத்தகம் புத்தகமாக வாசித்தப்படியே தேடுங்கள். உன்னதமான எழுத்துக்கள் உங்கள் கைகளில் வந்து அமரும்வரை/ உங்களது அனுபவச் சிந்தனை அதனை கண்டுக் கொள்கிறவரை தேடுங்கள். உன்னதத்தைக் உறுக்கித்தரும் எழுத்துக்களுக்கு தமிழில் பஞ்சமில்லை! சலசலப்பில் மயங்கித் தேங்கிவிடாதீர்கள். நம்பித் தேடுங்கள். தட்டுங்கள் திறக்கும். அப்படி நீங்கள் தேடத் துவங்கும் போது க.நா.சு.வை சந்திக்காமல் இருக்க முடியாது. சரியான வழிகாட்டியாகவும் அவரே முன் நிற்பார்.   

க.நா.சு.வின் புதுக்கவிதைகள், ஆரம்பக்கால புதுக் கவிதைகளின் அடையாளம் கொண்டவை. மேற்கத்திய கவிகள் பலரை அவர் வியந்து வாசித்து, அதைத் ஒட்டி தமிழில் புதுக்கவிதைகள் படைத்தவர். அவர் குறிப்பிட்டு இருக்கிறபடிக்கு, ஷெல்லி/ கீட்ஸ்/ வால்ட் விட்மன்/ டி.எஸ். எலியட்/ பாடலேர்/ மல்லார்மே/ ரிம்போ/ வில்லியம் கார்லாஸ் வில்லியம்ஸ்/ எஸ்ரா பவுண்டு போன்ற மேற்கத்திய கவிகள் அவரது ஆதர்ச புருஷர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் எழுதிய ‘Free Verse’ கவிதையினை ஒட்டி, அதில் காணக்கிடைத்த ‘லிரிகல்/மெடாபிஸிகல்/ சடையரிக்/ ரொமாண்டிக்’ போன்ற தளங்களில் அவரும் தனது கவிதை முயற்சியை மேற்கொண்டவர்.

இன்றைக்கு புதுக் கவிதை வளர்ந்திருக்கிறது. அதை அன்றைக்கு காமித்து தந்த, பாரதி/ கு.ப.ரா./ புதுமைப் பித்தன்/ க.நா.சு. வகையறாக்களின் கவிதைகளைவிட இன்றைக்கு அது நேர்த்தியான வளர்ச்சியை கண்டிருக்கிறது. குறிப்பாய், பிரம்மராஜன்/ பெண் கவிஞர்களில் உமா மஹேஸ்வரி கவிதைகள் மஹா கீர்த்தி கொண்டது! இன்றைய ‘Free Verse’ கவிதைகளின் வளர்ச்சியை உலகுக்கே  உணர்த்துபவை!

க.நா.சு.வின் கவிதைகளில் இந்த ‘உயில்’ என்னை மிகவும் கவர்ந்த கவிதை. வாசிக்கும் நேரமெல்லாம் மனதை என்னவோ செய்கிற கவிதை. எத்தனையோ தரம் இந்தக் கவிதையை வாசித்திருப்பேன், அத்தனைத் தரமும் நெகிழவே செய்கிறேன். நான் ஏன் அப்படி நெகிழ்கிறேன் என்பதை வாசகர்கள் அந்தக் கவிதையை வாசிக்கும் தருணம் அறியக்கூடும். வாசகர்களே, கவிதை வாசிப்பை, வாய்ப்பாடு மாதிரி வாசித்து முடித்து விடாதீர்கள். ஒவ்வொரு சொல்லும்/ ஒவ்வொரு வரியும்/ சொல்லோடு அடுத்த சொல் சேர்கிற போதும்/ ஒரு வரி அடுத்தவரியோடு சங்கமிக்கிற போதும்/ மொத்தக் கவிதையும்/ அதன் தலைப்பும்கூட நமக்கு முக்கியமானதாக இருக்கும். கவனமும்/ உள்வாங்கிக் கொள்வதும்/ உணர்தலுமே கவிதையை நம்மில் கொண்டு வந்து சேர்க்கும். கவிதை என்பதே உணர்தலில் விடியும் உலகம்தானே!

இங்கே வாசகர்களின் பார்வைக்கு நான் தந்திருக்கும் க.நா.சு. கவிதைகளில் ‘காசியும் பம்பாயும்’ என்கிறத் தலைப்பில் எட்டு பத்து வார்த்தைகள் கொண்ட கவிதையொன்றும் உள்ளது. சாதாரண வாசிப்பில், வேடிக்கையான அல்லது ஒன்றுமே இல்லாத கவிதையது. என்றாலும், அது நிஜமா? என்றால் இல்லை. கவிதையை படித்த நாழிக்கு, உணர்தல் நிலையில் அந்தக் கவிதையினை உட்படுத்துவோமேயானால், அது காமிக்கும் நிறமே வேறு.

காசி என்பது ஓர் புனித ஸ்தலம். பம்பாய் என்பது பல இந்திய இன மக்கள் கொண்ட/ பாலியல் அனுமதிக்கப்பட்ட/ அதற்காகவே ஆன தொழில் புரியும் பெண்களும் கொண்ட நகரம். காசியில் கணவனை இழந்த/ மறு மணத்திற்கு மறுக்கப்பட்ட அல்லது மறு மணத்தை வெறுக்கிற பெண்களும் கொண்ட நகரம். குறிப்பாய், பால்ய விவாகம் புரிந்த சிறார்களும் கூட விதவையாகி, சிலர் பாலியல் தொழிலிலும் சிக்கி காலம் கழிக்கிற இடம்! காமம் என்பதும் ஒருவகைப் பசிதானே! பாலியலைத் தொழிலாக கொண்ட பெண்களைவிட, அதை அனுபவிக்க வழி அத்துப் போன பெண்களிடம் அப்பசி கூடுதலாக எதிரொலிப்பதென்பது யதார்த்தமும் கூட!

க.நா.சு. இங்கேதான் தன் எழுத்து வழியே இன்னொரு சங்கதியையும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார். பம்பாய் விலை மாதர்களிடம் காண முடியாத இன்பத்தை, பக்தி தளமான காசியில் வாழும் கூடுதல் மேன்மைக் கொண்ட பெண்களிடம் கிடைக்கிறது என்கிற அவரது கூற்றில் ‘பக்தி நகரமும், கூடுதல் மேன்மை கொண்ட பெண்களும்’ அவரது வியப்புக்குரியவர்களாகிப் போகிறார்கள்.

இன்னொரு தளத்தில், இன்னொரு கோணத்தில் உணரத் தலைப்பட்டோமேயானால், பட்டறிவு இருந்தாதொழிய க.நா.சு.வால் இப்படி ஒரு கவிதையை எழுதியிருக்க முடியாது. ஆக, இந்தக் கவிதையின் வழியே, க.நா.சு. நமது நமுட்டுச் சிரிப்பிற்கும்/ உள்ளார்ந்தக் கேள்விக்கும் ஆளாகிறார். அவருக்கு பம்பாய் சுகமும் தெரிந்திருக்கிறது/ காசியின் சுகமும் தெரிந்திருக்கிறது! அது இல்லாமல் இந்தக் கவிதையும்தான் அவருக்கு ஏது?

இதனையெல்லாம் விவரிக்காமல்தான் பத்து வார்த்தைகளில் அந்தக் கவிதையை எழுதி முடித்திருக்கிறார் அவர். இன்னும் கூட இந்தக் கவிதைக் கிளறினால், நம் உணர்தலில் பலப்பல சங்கதிகள் மேலோங்கி வரக்கூடும்! கவிதை விரும்பிகளே முயற்சி செய்யுங்கள்.      

‘என் பெயரை யாருக்கு இஷ்டமோ அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்.’ என்று, உயில் கவிதையில் க.நா.சு. அறிவித்திருக்கிறார். நான் ரெடி! அவரது பெயரை எடுத்துக் கொள்வதில் எனக்கு இரட்டை சந்தோஷம்! அவரது உறவுகளும் சம்மதித்தால் அந்த மஹா கலைஞனின் பெயரை எடுத்துக் கொள்ள கசக்குமா என்ன? ‘கநாசு’ எஸ்.ஏ.தாஜுதீன்! நன்றாகத்தானே இருக்கிறது! அவரது பெயர் மாதிரி, அவரது வித்தைகளும் இவ்வளவு சுளுவில் கிடைக்க வேண்டுமே?

தாஜ்  / 27th August – 2010  

***

க. நா. சு. கவிதைகள் :

உ யி ல்


என் உயிலை எழுதி வைக்க வேண்டிய நாள்
வந்து விட்டது. சொத்து ஒன்றும் இல்லாவிட்டாலும்
உயில் எழுத வேண்டும் – அது புருஷ லக்ஷணம்.
என் பெட்டிகளில் நிரம்பியுள்ள கிழிசல்
காகிதங்களை எல்லாம் உலகத்துச் சர்வகலா
சாலைகளுக்குத் தந்து விடுகிறேன் – அதைவிடச்
சிறப்பாக அவர்களால் கிழிக்க முடியாது. நான்
உபயோகிக்காத எண்ணற்ற வார்த்தைகளை
அகர முதலியில் உள்ளதையும் இல்லாததையும்
எனக்குப் பின் வருகிற கவிகளுக்கு அளித்து
விடுகிறேன். நான் சம்பாதித்த சொல்ப
ஊதியத்தை என்னை எழுத்தாளனாக்கி
பெருமைக் கொள்ள எண்ணி நம்பிக்கையுடன்
உயிர் நீத்த என் தகப்பனாருக்குத் தந்து
விடுகிறேன். எத்தனையோ ஆசைகள்
ஏக்கங்கள் ஏமாற்றங்கள் என் ஆயுளில்
என்னைப் பின் தொடர்ந்து வந்துள்ளன.
அவற்றை உலகுக்குக் தந்து விடுகிறேன்.
என் நல்ல பெயரை ஊரிலுள்ள கேடிகள்
பகிர்ந்து கொள்ளட்டும். காணாத என் கண்களை
பார்வையுள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளட்டும்.
என் எதிர்காலத்தை என் மனைவி ராஜிக்கு
அன்பளிக்கிறேன்.

யேட்ஸ் என்கிற
ஆங்கிலக் கவி தன் வாரிசாக ‘நிமிர்ந்து
நடப்பவர்களை’ நியமித்தான். என்
சுற்று வட்டத்தில், இந்தியாவில் நிமிர்ந்து
நடப்பவர்களையே காண முடியவில்லை. எல்லோரும்
கூனிக்குறுகி குனிந்து தரையில் பூமிக்கடியில்
எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் தேடுமிடம் அவர்களுக்குக் கிடைக்கட்டும்
பட்டு விட்ட கடன்களை யெல்லாம் யார்யாரிடம்
சொல்லி வாங்கினேனோ அதையே திரும்பவும்
சொல்லி அவர்களிடமே கடனாக திருப்பி
விடுகிறேன். தங்களுக்கு தாங்களே வரவு
வைத்துக் கொள்ள அவர்களுக்குச் சக்தி
பிறக்கட்டும். சேமித்து வைத்து உபயோகப்
படாத என் அறிவை யெல்லாம் அதை
உபயோகிக்கத் தெரியாதவர்களுக்குத் திரும்பவும்
தந்து விடுகிறேன். அறிவுக் கலைக்களஞ்சியங்களை
நிரப்பட்டும் – வெளியில் வந்து செயல் படாதிருப்பது
நல்லது. எனக்குக் கல்லறையே வேண்டாம்.
அப்படிக் கல்லறை தவிர்க்க முடியாததானால்
அதில் ஒரு பெயரும் பொறிக்கப்பட வேண்டாம்.
எனக்கு அறிமுகமான பல தெய்வங்களை யெல்லாம்
இருளடர்ந்த பல கோவில்களில் யார் கண்ணிலும்
படாத சிற்பங்களாக நிறுத்தி வைத்து விடுகிறேன்.

நான் இன்னும் எழுதாத நூல்களை என் பிரசுர
கர்த்தர்கள் தாராளமாகப் பிரசுரித்து லாபம்
அடைந்து கணக்கெழுத இன்னொரு
கம்ப்யூட்டர் வாங்கிக் கொள்ளட்டும்.
நான் தந்த வாக்குறுதிகளை யெல்லாம்
காற்றுக்கும், நான் செய்த நற்பணித்
தீர்மானங்களை யெல்லாம் இனி எதிர்
பார்க்க முடியாத எதிர் காலத்துக்கும்
வாரி அளித்து விடுகிறேன். எனக்கும்
அரசியல் ஆசைகள் இருப்பதுண்டு
அவற்றை நேருவின் சந்ததியாருக்கு
அளித்து விடுகிறேன். இந்திரன்,
சந்திரன், காற்று, வெளி, நீர்
உள்ளளவும் கொள்ளுப் பேத்தி
எள்ளுப் பேரன் என்று அரசாண்டு
வரட்டும் என்று வாழ்த்துகிறேன்.
எனது எழுதப்பட்ட கவிதைகள் மக்கள்
கண்ணில் படாமல் புஸ்தகங்களின்
பக்கங்களில் மறைந்து கிடக்கட்டும்.
ஆனால் எழுதப்படாத கவிதைகளை
விமர்சகர் போற்றி அலசி ஆனந்தித்துப்
பேராசிரியர்கள் ஆக ஒரு ஊன்றுகோலாக
உபயோகித்துக் கொள்ளட்டும்.
என் வீணாகிப் போன நொடிகள் நாழிகைகள்
நாட்கள், வாரங்கள், மாதங்கள்,
ஆண்டுகள் எல்லாம் தேசப் பொதுச்
சொத்தாகி எல்லோருக்கும் உதவட்டும்
உதவட்டும். நான் கட்டாத மாளிகைகளில்
உயிரோடு பிறக்காதவர்கள், நடைப்பிண
மாக நடப்பவர்கள் குடியேறட்டும்.
மற்ற என் ஜங்கம சொத்துக்களை
தட்டு முட்டு சாமான்களை, கந்தல்
துணிகளை, கந்தாடையான் பெயரை
என் பிறக்காத பிள்ளைகளுக்கு
விற்கக் கூட பாத்தியமில்லாமல்
தந்து விடுகிறேன். என் அபிமான
சிஷ்யர்களுக்கென்று நான்
சிந்திக்காத சிந்தனைகளை எல்லாம்
கிடைக்கின்றன.

வேறு ஒன்றும்
எனது என்ற சொல் சாகும் சமயத்தில்
என்னிடம் இருக்கக் கூடாது. காதற்ற
ஊசியும் உடன் வராது காண் என்று
சொன்னவர் வாக்கு என் விஷயத்தில்
பலிக்கட்டும். என் பெயரையும் நான்
துறந்து விடுகிறேன் – என் பெயரை
யாருக்கு இஷ்டமோ அவர்கள்
எடுத்துக் கொள்ளட்டும்.

***

ஏன்?


நீ பார்க்கிற அதே உலகத்தைத்தான்
நானும் பார்க்கிறேன்
உன் பார்வை மட்டும்
வேறாக இருக்கிறதே
ஏன்?

***

காசியும் பம்பாயும்


காசியிலும்
கூலிக்கு இன்பம்
தரும் பெண்கள்
உண்டு உண்டு.

பம்பாயிலும்
கூலிக்கு இன்பம்
தராத பெண்கள்
உண்டு உண்டு.

***

இக்காலம்


தேவனென்று நம்பி அவனை மனிதனாக்கி
விண்ணென்று நினைத்ததை மண்ணாக்கி
உயர்வென்று தோன்றியதைத் தாழ்வாக்கியது
ஒரு காலம்.

மனிதனேயல்ல, அசுரனேயுண்டு
மண் உண்டு, விண் பொய்,
தாழ்வு உண்டு உயர்வு இல்லவே இல்லை என்பது
இக்காலம்.

***
நாலடி பாய


நாலடி பாய எட்டடி பதுங்கி
இருபதடி பின்வாங்க நூறடி முன்னேறி
முன்னும் பின்னும் இறுக்கி முரண்பட்டு
நேர்படுத்தி முடிச்சில் சிக்கித் தவிப்பவன்
மனிதன்.

***
மரம்

வனத்திலே எங்கேயோ உள்ள
சூரியனுடன் மத்து-மத்து ஆடுகிறது
என் நிழல்

வேரடியில் தேங்கிக் கிடக்கும்
சாக்கடை நீரில் என் பிம்பத்தைக் கண்டு
வெறுப்புறுகிறேன் நான்.

என்னை வெட்டிச் சாய்க்க
வருகிற வீரன் என் நிழலை மட்டும்
என் நிழலை மட்டும்
வெட்டிச் சாய்த்து விட்டானானால்
நான் ஓங்கிக் கிளைத்து வளருவேன்-
ஒன்பதாய்ப் பெருகுவேன்.

என்னோடு
என் நிழலையும் சாய்க்க
உன்னால் முடியும்-

முடியுமா
என் நிழலை மட்டும்
அப்புறப் படுத்திவிட?

*
நன்றி: புதுக்கவிதைகள்/ க.நா.சு/ ஞானச்சேரி/
Date of Publication: 10th April,1989

*

நன்றி : தாஜ் / தமிழ்ப்பூக்கள் | E-Mail : satajdeen@gmail.com

4 பின்னூட்டங்கள்

 1. 01/09/2010 இல் 13:18

  நண்பர் தாஜின் இலக்கியம் சார்ந்த எழுத்துக்கள் சுவராஸ்யமானவை. ஆனால் பிரம்மராஜன், உமாமகேஸ்வரி படடியல்கூட அவர் க.நா.சு. பாணியில்தான் போட்டுள்ளார் என நினைக்கிறேன். நல்ல வாரிசுதான், பேரை காப்பாற்றிவிட்டார். தமிழில் “இலக்கியத்தை” அல்லது “இலக்கியம்“ என்கிற எந்திரத்தை கட்டமைத்ததில் க.நா.சு. முக்கியமானவர். இலக்கிய எந்திரத்தை பல்கலைக்கழகங்களுக்கு வெளியில் கொண்டுவந்தவர். இன்று நாம் எதை எல்லாம் “இலக்கியமா“-க புரிந்து கொள்கிறோமே அதை உருவாக்கியவர் அவர். அந்த இலக்கிய குணாம்சத்தில்கூட தாஜ் இந்த லிஸ்ட்டை விரிவு படுத்தியிருக்கலாமோ! ஆனால், அந்த “இலக்கிய“-எந்திரம் குறித்து நாம் விரிவாக ஆராயவேண்டும். அதற்கும் இன்றைய வெகுஜன “ரசனை“ என்பதற்கும் உள்ள உறவு பற்றி. கழிப்றைகளில் கவிதைகளை கழியும் வரகவிகள் உட்பட இந்த எந்திரத்தினால் உற்பத்தி செய்யப்பட்டவர்கள்தான். க.நா.சு- கட்டதைமத்த ரசனைவாத விமர்சனமுறை என்பதும் விவாததிற்கு உரியதே. என்றாலும், தாஜின் தெடர்ந்த இலக்கிய அனுகுமுறை ஆக்கம் (நகுலன் பற்றியது உட்பட) வரவேற்க்த்தக்கது மட்டுமல்ல ஆர்வம் ஊட்டக்கூடியதும். இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.

 2. 01/09/2010 இல் 16:59

  தங்களின் விமர்சனமும், தொகுப்பும் அருமை தாஜ்! க.நா.சு.வின் விமர்சன கட்டுரைகள், உலக இலகியத்தை அறிமுகப்படுத்தும் கட்டுரைகள் எல்லாம் மிகவும் எளிமையாக நமக்கு பாடம் சொல்லித் தரும் அற்புதமான பொக்கிசங்கள். பொக்கிசம் என்பதாலேயே புதையுண்டு போனதோ? என்னவோ தெரியவில்லை.பல வருடங்களுக்கு முன் வாசித்தது ஆனால் அவரது கதைகள் ஏனோ என்னை அவ்வளவாக வ்சீகரிக்கவில்லை பொய்தேவு உட்பட.நுட்பமான் இலக்கிய வாசிப்பின் ரசனை எனக்கு போதவில்லை என்றே நம்புகின்றேன். ஏனென்றால் சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள் கவர்ந்த அளவு அவரது பிரபலமான புலியமரத்தின் கதை என்னை வசிகரிக்கவில்லை.என் வாசிப்பின் குறைபாடுகளை மேமபடுத்திக் கொள்ள இளம் க.நா.சு. தாஜின் வழிகாட்டுதலை அன்புடன் வேண்டுகின்றேன். (Taj I am requesting seriously) என் போன்ற பாமரர்க்ளின் ரசனை மேம்பாட்டுக்காகவாவுது அடிக்கடிஎழுதுங்கள். ஆபிதீன் நானா தாஜை தொடர்ந்து எங்களுக்கு வழங்குங்கள்.அதற்காக எங்கள் நன்றி! வஸ்ஸலாம்

 3. 02/09/2010 இல் 10:23

  ஜமாலன், கட்டுரையைவிட ‘லிஸ்ட்’ பெரிதாகிவிடும் என்று தாஜ் தவிர்த்திருப்பார் என்று நம்புகிறேன். உங்கள் பின்னூட்டத்தைத் தெரியப்படுத்தியதும் ‘ரெண்டு பேர்தான் தெரியுது; மத்தவங்க எல்லாம் முறுக்கிக்கிறாங்கய்யா’ என்றார். பிறகு உங்களுக்கு பதில் தருவார், இன்ஷா அல்லாஹ். முக்கியமான நம் கவிஞர்கள் பற்றி நீங்கள் எழுதி அனுப்புங்கள். இங்கே பதிகிறேன். ரமளான் டயமாச்சே என்ற யோசனை வேண்டாம். ‘இன்ன மினஷ் ஷிஃரில ஹிக்மத்துன்’ என்கிறார்கள் பெருமானார் ரசூல் (ஸல்) அவர்கள். ‘அப்டீன்னா…?’ என்கிறீர்களா? ‘கவிதையில் இரத்தினச் சுருக்கமான பேரறிவுகள் உள்ளன’ என்று அர்த்தம்!

  நூருல் அமீன், உங்களுக்கும் நன்றி. தாஜ் என்னைவிட்டு எங்கே போவார்? தொடர்ந்து இங்கே ‘தொந்தரவு’ செய்வார்; கவலை வேண்டாம்.

 4. தாஜ் said,

  03/09/2010 இல் 12:52

  தோழர் ஜமாலன் அவர்களுக்கு…
  நவீன இலக்கியம் குறித்து க.நா.சு.விடம் நிறைய கற்றிருக்கிறவன் என்றாலும்
  ஒரு போதும் அவரை பிரதிப் பலித்தவனில்லை.
  அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.
  அவர் ஒரு மைல் கல்.
  மதிப்பிற்குறியவரைத் தாண்டி, அவரது சேவையை முன் நிறுத்தி,
  மனதின் கண் நிரந்தரமான மதிப்பு. அவ்வளவே.

  பிரம்மராஜனும்/ உமா மஹேஸ்வரியும்
  சிலப்பல கருத்தின் மீதான உதாரண குறியீடு மட்டும்தான்.
  ஆணும் பெண்ணுமாக தமிழில் புதுக் கவிதை எழுதும் ஆர்வலர்கள்(என்னையும் சேர்த்து)
  ஒருபாடு உண்டு! அறிவேன்.
  இவர்களைப் பற்றி முன்பு சில முறை எழுதி இருக்கிறேன். திரும்பவும் எழுத ஆசை.

  நமது காலத்தில்,
  நவ கவிதைகளுக்காக பிரம ராஜனின் பிரம்மாத்தமான முயற்சிகள்
  தோழர் ஜமாலன் அறியாததல்ல.
  புதுக்கவிதை முயற்சியிலும்
  அவர் சில உச்சங்களைத் தொட்டும் காமித்தவர்.
  இதனையும் ஜமாலன் அறியக் கூடும்.
  அடுத்த நூறு வருஸத்துக்கான கவிதையை
  இன்றைக்கு அவர் மட்டுமே எழுதியிருப்பதாக நம்புகிறேன்.

  அடுத்து உமா மகேஸ்வரி.
  தமிழில் இன்றைக்கு புதுக் கவிதை எழுதுகிற பெண்கள் ஆண்களைவிட அதிகம்.
  இந்தக் கவிதைப் பெண்களை சற்று ஊன்றிக் கவனித்தாள்… சமூகத்தையும்/ அதில் வாழும் ஆண்களையும்
  திருத்தியே தீர்வது என்கிற
  சபதம் எடுத்துக் கொண்ட பரப்பரப்பில்/ உந்தலில் எழுதுகிற கவிதையாகவே அவர்களின் கவிதைகள் இருக்கும்!
  அந்த வீம்பில் இருந்து தள்ளி/ கவிதையை கவிதையாக கணித்து எழுதும் ‘சீனியர்’ உமா./ தவிர, என் நண்பர் வேறு!
  அவரைக் குறிப்பிடாமல்….
  வேறு யாரைக் குறிப்பிட்டு இருந்தாலும் மனசும் தாங்காதே… அவ்வளவுதான் ஜமால்.
  ரொம்பத் தப்பு பண்ணியிருந்த மாதி தோணினா…..
  ஒரு பெரிய ஸாரி.
  நன்றி.
  – தாஜ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s