தலாக் (சிறுகதை) – ஏ.ஹெச். ஹத்தீப்

‘போபால் பேரழிவு ஒரு திட்டமிட்ட சதி’ என்று ஆதாரங்களுடன் சொல்கிறது நம் ஹத்தீப் சாஹிபின் அரசியல்  புதினமான ‘இரும்பு மங்கை’ . ‘போபால் தீர்ப்பு’  என்ற இன்னொரு சதி கசிவதற்கு 6 மாதம் முன்னரே வெளிவந்த நாவல் அது. கத்தி மேல் ஹத்தீப் நடந்த அதன் சில பகுதிகளை அப்புறம் பதிவிடுகிறேன்.  இன்னும் அதை எனக்கு டைப் செய்து அனுப்பாமல் சதி செய்யும் அவரை ,  ‘சரி சாபு… அதென்ன ‘இரும்பு மங்கை’ – இந்திராகாந்தியின் புகைப்படத்தோடு?’ என்று கிண்டல் செய்தால் ‘அது (மணிமேகலை) பதிப்பகத்தின் சதி’ என்கிறார்! இறைவனோடு இகலோகத்தையும் சிந்திக்கும் சகோதரர் ஹத்தீப் அவர்களின் புதிய சிறுகதை –  சவுதி நண்பர் ஹாஜாவுக்காக…

ரமளான் க்ரீம்!

*

தலாக்

ஏ.ஹெச். ஹத்தீப்

ஜமீலாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் வந்திருந்தது.

அதிர்ச்சியில் ரத்தம் தலைக்கேறி மூலை கலங்கிவிடவில்லை. வானம் பொடிந்து தலையில் விழுந்து அவளை நிலை குலைத்துவிடவில்லை. கடந்த மூன்று மாதக்காலமாக இந்த நோட்டீஸ் ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்த விஷயம்தான் என்றாலும், அக்தாருடன் உற்சாகமாகவும் உல்லாசமாகவும் வாழ்ந்த காலங்கள் நினைவில் நிழலாட, அவளுக்கு அழுகை பொத்துக்கொண்டு வரவே செய்தது. உதட்டைக் கடித்து அடக்கப் பார்த்தாள். முடியவில்லை. அவளது வெளிறிய முகம் பளிச்சென்று காட்டிக் கொடுத்துவிட்டது.

“என்னம்மா அது கடுதாசி?”என்று நடுங்கும் குரலில் வினவினாள் அம்மா, மகளின் கண்களைக் கூர்ந்து நோக்கியவாறு.

உடனடியாக விடையளிக்கவில்லை ஜமீலா. சற்று நேரமேனும் தாயின் உள்ளம் உடைந்து போவதைத் தவிர்க்க நினைத்தாள். ‘உன் மானத்தைக் காக்கும் ஆடையாக இருப்பேன்’என்று நிகாஹ் மஜ்லிஸில் உறுதியளித்த அக்தார் அஹமதா இவ்வளவு சீக்கிரத்தில் தலாக் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறான் என்று நம்புவதற்கு வேறு யாரும் யோசிக்கலாம். ஜமீலாவைப் பொறுத்தவரை அதொன்றும் மகாக் கஷ்டமாக இல்லை. என்றாலும் அவனது உருவம் உள்ளத்தை ஆக்ரமித்து சகிக்க முடியாத சோகத்தைக் குவித்துக் கொண்டிருந்தது.

இதை அறிந்தால் அம்மா என்ன ஆவாள்? முற்றிலுமாக நிலை குலைந்து விடமாட்டாளா?

ஜமீலா குடும்பத்துக்கு ஒரே வாரிசு. அதுவும் பெண்.  பிளஸ் டூவரை படித்திருக்கிறாள். அதை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது. இட ஒதுக்கீட்டுக்கெல்லாம் பெண் லாயக்கற்றவள்.  குடும்பத்தின் ஏழ்மையை அகற்றுவதற்கு பெண்கள் தரப்பில் எதுவும் செய்ய முடியாத சமூகச் சூழல். போதாக்குறைக்கு இப்போது அவளது கையில் ஆறு மாதக் கைக்குழந்தை நுஸ்ரத்!

அதனாலென்ன? அவளுக்காவும் குழந்தைக்காவும் அக்தார் சம்பாதித்து வைத்துவிட்டுப் போன ரொக்கமும் சொத்தும் லட்சக்கணக்கில் இருக்கையில் பழைய ஏழ்மையை நினைத்து வருந்துவானேன்?

அனாலும், நபிகள் நாயகத்தின் சொல்லொணா வெறுப்புக்கு ஆளான விவாகரத்து, ஒரு பெண்ணின் வாழ்வில் மிகக் கொடுமையான துர்நிகழ்வு இல்லையா?

“ஏம்மா அழறே?”என்று கேட்டுக்கொண்டே தாய் அழுதாள்.

‘அகத்திலும் புறத்தில் இறையருள் கிடைக்கட்டுமாக. சிறப்பானவற்றில் ஏகன் உங்களை இணைத்து வைப்பானாக’ என்று திருமணத்தின்போது ஊரார்  உளமாரப் புரிந்த பிரார்த்தனைகள் அத்தனையும் ஒன்றரையாண்டுக்குள்ளேயே பொய்த்துப் போய்விட்டனவா? இதைப் பெற்ற தாயால் தாங்கிக்கொள்ள முடியுமா? என்றாலும் எத்தனை நாளைக்குத்தான் இந்தக் கெட்ட செய்தியை மறைத்து வைக்க இயலும்?

மீண்டும் ஒரு முறை நோட்டீஸைப் பார்த்தாள் ஜமீலா. அதில் அவள்மீது குற்றம் எதுவும் சுமத்தவில்லை. ‘ஒன்றாகச் சேர்ந்து வாழ முடியவில்லை’ என்று மட்டும் நாசூக்காகவும் நாகரீகமாகவும் குறிப்பிட்டிருந்தான் அக்தார். “உன் மருமகன் தலாக் நோட்டீஸ் அனுப்பி இருக்கார்ம்மா” என்று முணுமுணுத்தாள் ஜமீலா, மெல்லிய விசும்பலினூடே.

“தலாக்கா?”என்று கேட்டுக்கொண்டே ஒடிந்து போய்த் தொப்பென்று கீழே உட்கார்ந்தாள் அம்மா. “உங்களுக்குள்ளே என்னம்மா நடந்தது? நீ எதுவும் தப்புப் பண்ணினியா? மாப்பிள்ளை தங்கமான மனுஷர்ல? நீ என்னம்மா பண்ணினே? சொல்லும்மா?”

அம்மா சொல்வதில் துளியும் தப்பில்லை. அக்தார் அஹமத் போன்ற ஒரு கணவன் வாய்ப்பதற்கு ஜமீலா கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதிசயிக்கத்தக்க அழகன். நல்ல சிவப்பு. எடுப்பான உயரம். கடைத்தெருவில் ஒரு கம்ப்யூட்டர் சென்டர். எல்லாவற்றுக்கும் மேலாக ஜமீலாமீது உயிரையே வைத்திருந்தான்.

ஆனால் என்ன நடந்தது என்பதை எப்படிச் சொல்வது? இந்த நோட்டீஸுக்கு ஒருவகையில் அவளும் ஒரு மறைமுகக் காரணம் என்பதை எப்படி விளக்குவது?

திருமணமான இரண்டொரு மாதத்துக்குள் வேறொரு வீட்டுக்குத் தனிக்குடித்தனம் வந்துவிட்டார்கள். சீதன நகைகளையெல்லாம் விற்று ஒரு சின்னஞ்சிறு வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்ததுபோக மிஞ்சிய பணம் சமையல் பாத்திரங்கள் வாங்குவதற்கே போதுமானதாக இருந்தது. அதிகமான வசதிகள் இல்லாவிட்டாலும் இல்வாழ்க்கையில் இன்பத்துக்குப் பஞ்சமில்லை.

வறுமை, கஷ்டத்துக்கிடையே நுஸ்ரத் பிறந்தாள்.

திடீரென்று ஒருநாள் அக்தார் உற்சாகத்துடன் சொன்னான்: “ஜமீலா, இன்னிக்கு குழந்தையை தூக்கிட்டு ரெண்டுபேரும் ஜாலியா மாயாஜல் போறோம். ஸ்டார் ஹோட்டலில் பிரியாணி சாப்பிடறோம். எல்லாம் டாக்ஸியில்தான். இன்னிக்குச் சமையல்கட்டுக்கு டாடா. ”

வீட்டைப் பெருக்கிக்கொண்டிருந்த ஜமீலா வெடுக்கென்று நிமிந்து பார்த்து, “அதுக்கெல்லாம் எவ்வளவு செலவாகும்?”என்று கேட்டாள்.

“எங்க வீட்டு மஹாராணிக்கு செலவைப்பத்தி என்ன கவலை? ”

“மஹாராணிதான் கேட்கிறாள். சொல்லுங்க: எவ்வளவு செலவாகும்?”

“ மிஞ்சி மிஞ்சிப் போனால்  ஆயிரம்  ரூபாய்.”

ஜமீலா தலையை உயர்த்தாமலேயே, “அதை அப்படியே சேமிச்சு வையுங்க! குழந்தையின் கல்யாணக் காலத்தில் உதவும் ”என்றாள்.

அனல் பட்டாற்போல் முகம் வாடிப் போனான் அக்தார். இமையோரத்தில் நீரின் மினுமினுப்பு. ஒரு சராசரிப் பெண்ணின் விருப்பத்தைக்கூட உணராத அறியாமை,அவனுள் வெட்கத்தையும் வேதனையையும் ஊற்றெடுக்க வைத்துவிட்டது. அன்றிரவு வெகுநேரம்வரை இருவருக்குமிடையே கனத்த மௌனம்.

படுக்கையில் தூக்கம் கொள்ளாமல் கணவன் புரண்டுக்கொண்டிருப்பதைக் கண்டு ஜமீலாவுக்கே இதயம் ரணமாகிப் போயிற்று.

இரண்டு நாட்கள் சென்றிருக்கும்.

‘இஷா’த் தொழுகையை முடித்துவிட்டு ஜமீலா முஸல்லாவை மடித்துக் கொண்டிருந்தாள்.

‘டண்டணாய்’ என்று வாயால் ஒரு வினோத ஒலி எழுப்பிக்கொண்டே அவள் முகத்துக்கெதிரே ஒரு கை நீண்டது.அதன் ஆள்காட்டி விரலில் இரண்டு வளையல்களும் ஒரு மொத்தக் கழுத்துச் சங்கிலியும் தொங்கிக்கொண்டிருந்தன.

எல்லாமே சுத்தத் தங்கம்.

ஜமீலாவுக்கு மூச்சே நின்றுவிடும்போலிருந்தது. மகிழ்ச்சியைக் காட்டிலும் வியப்பு முகத்தை ஆக்கிரத்துக்கொண்டிருந்தது. தனது மனைவி ஓடி வந்து ஆசை ஆசையாய் அதை எடுத்து அணிந்து கொள்வாள் என்று எதிர்பார்த்த அக்தாருக்குச் செம ஏமாற்றம்.

“இது எவ்வளவு?” என்று கேட்டாள் ஜமீலா, குரலில் சுரத்தையில்லாமல்.

தூளியில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் அழகை ரசித்துக்கொண்டே,“ஒரு லட்சம்”என்று பதிலிறுத்தான் அவன்.

“பணம் ஏது?”- புருவங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ள, பார்வையில் சுள்ளென்ற உஷ்ணம்.

அக்தார் சோர்வுடன் சாய்வு நாற்காலியில் விழுந்தான். “சென்டரை வித்துட்டேன்.”

“இனிமேல் சாப்பாட்டுக்கு என்ன பண்றது?”

“அல்லாஹ் தருவான். உனக்கு நம்பிக்கையில்லையா?”

“சாப்பிடுறதுக்கு வசதியாக அல்லாஹ் கொடுத்த சென்டரையே வித்துட்டு, நாளைக்கு அல்லாஹ் தருவான்னு சொல்றீங்களே, இது உங்களுக்கே சரியாப்படுதா? இதுதான் ஈமானா?”

சுரீரெனச் சாட்டையடி பட்டாற்போல் அவனுக்கு வலித்தது. “உன்னை மூளியாகப் பார்க்கறதுக்கு எனக்கு ரொம்பவும் கஷ்டமாக இரு்க்கு ஜமீலா. உன்னை மகிழ்ச்சிப்படுத்துறதுக்கு எனக்கு வேறு வழி தெரியலே.”

“வயித்துலே பசியை வெச்சுக்கிட்டு நகையெல்லாம் போட முடியாது. நீங்க நிறையச்
சம்பாதிப்பீங்க’ல? அப்ப தங்கமா எடுத்து வந்து என் தலயிலே கொட்டுங்க. சரியா?”

அவன் வெறுமனே தலையாட்டினான்.

“இந்த நகைகளை மறுபடியும் வித்துட்டு ஏதாவது பிஸினசுக்கு ஏற்பாடு பண்ணுங்க ”என்று ஒரு வாத்தியார் மாதிரி அவள் அதட்டினாள்.

“சரி மேடம்”என்று பயந்த பாவனையில் அவன் ஒப்புக்கொண்டான்.

“இப்ப ஒழுங்கா சாப்பிட வாங்க.”

அவனது சிந்தனை எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது.

ஒருவாரம் கழித்து…

ஜமீலா சமையல்கட்டில் வெண்டைக்காய் நறுக்கிக் கொண்டிருந்தபோது, படுகுஷியாகச் சீழ்க்கையடித்தவாறே அக்தார் வீட்டுக்குள் நுழைந்தான். கைலிருந்த பிளாஸ்டிக் பையை அடைத்துக்கொண்டு இனிப்புப் பலகார அட்டைப்பெட்டிகள். ஒன்றை எடுத்துத் திறந்தான். நெய் மைசூர்பாகு. “எடுத்துக்கோ”என்றான் உற்சாகத்துடன்.

ஜமீலா ஒரு மைசூர்பாக்கை எடுத்துக்கொண்டு, “மஹாராஜாவுக்கு இன்னிக்கு என்ன மகிழ்ச்சி ஊற்றெடுக்குது?” என்று வினவினாள்.

“ஐயாவுக்கு லண்டனில் வேலை கிடைச்சுருக்கு. மாதம் லட்ச ரூபாய் சம்பளம்.இரண்டு நாளில் கிளம்பணும்.”

“ப்பூ! இவ்வளவுதானா?” என்று புன்னகைத்தாள் ஜமீலா.

“இதைவிட மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும்?”

“கணவனைவிட்டுப் பிரியுறது ஒரு பெண்ணுக்கு மகிழ்ச்சியான விஷயமா?”

“நம்ம சமுதாயத்துலே இது புதிதல்லவே?”

“வாஸ்தவம்தான்”என்று அவள் ஆணித்தரமாக ஆமோதித்தாலும், “கணவனை வெளிநாட்டுக்கு அனுப்பி வெச்சுட்டு ஒவ்வொரு பெண்ணும் என்ன சித்திரவதை அனுபவிக்கிறான்னு உங்களுக்குத் தெரியுமா?”என்று கேட்டாள்.

“கணவனுக்கு மட்டும் வேதனை இல்லையா?”என்று குறுக்கிட்டான் அக்தார்.

“அப்படியானா இங்கேயே இருக்க வேண்டியதுதானே?”என்று மடக்கினாள் ஜமீலா.

“இங்கேயே இருந்தா சமுதாயத்துலே எப்படி தலை நிமிர்ந்து நிக்கிறது? உனக்கு நகை நட்டெல்லாம் போட்டு எப்படி அழகு பார்க்கிறது? நம்ம பொண்ணுக்கு எப்படி நல்ல இடத்திலே கல்யாணம் பண்ணுறது? அதையெல்லாம் உத்தேசித்துத்தானே நான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். ஒன்றை இழந்தாதான் இன்னொன்றை அடைய முடியும்.”

“தத்துவமா?”

‘ஓஹோஹோ’என்று உற்சாக மிகுதியால் அக்தார் கூவினாலும்,என்னவோ தெரியவில்லை அவனது சிரிப்பில் அவ்வளவாக ஜீவன் மிளிரவில்லை. என்றாலும் சொன்னான்: “ எல்லாம் உனக்காகத்தான்.”

மறுநாளே, கையில் ஒரு புத்தம் புதிய கோப்புடன் உள்ளே வந்தான் அக்தார். மனைவியிடம் அளித்தான்.

“என்ன அது?”

“நகரின் மையப்பகுதியில் ஓர் ஆடம்பரமான தொகுப்பு வீடு. பங்களா என்று வைத்துக்கொள்ளேன். அதன் ஃபைல்.”

“ஏது?”

“அல்லாஹ் கொடுத்தான்.”

பார்வையால் துளைத்தாள் ஜமீலா. கேள்வியில் சந்தேகக் கணைகள். “இன்னும் வெளிநாடே புறப்படலே. அதுக்குள்ளே இவ்வளவு பெரிய சொத்து வாங்க பணம் ஏது?”

“இப்போது இனிஷியல் பேமண்ட் நாற்பதாயிரம் மட்டும் கட்டுறோம். மீதித் தொகையை மாதாமாதம் சம்பளத்திலிருந்து பிடித்துக்கொள்வார்கள். கம்பெனி  ஃப்ளாட்.”

“அதானே பார்த்தேன்.”

“ஓகே! நாளைக்கே புது வீட்டுக்குக் குடி போயாகணும். சாமானையெல்லாம் எடுத்து வை. நான் லண்டலிருந்து திரும்பிவரும்வரை துணைக்கு உங்கம்மாவைக் கூப்பிட்டு வச்சுக்கோயேன்.”

“நீங்க திரும்பி வர்றதுக்கு எவ்வளவு நாளாகும்?”

“அது சொல்ல முடியாது. ஒரு வருஷம்கூட ஆகலாம்.”

ஜமீலா நெடுமூச்செறிந்தாள்.

‘ஓரண்டு உத்தியோகம்’ என்று சொல்லிவிட்டு, லண்டன் புறப்பட்டுச் சென்ற அக்தார் மறுமாதமே திரும்பி வந்தான். கை நிறைய விலையுயர்ந்த பொருட்கள். ஒரு பிரீஃப்
கேஸைத்  திறந்து காட்டினான். பாம்புக்குட்டி மாதிரி மொத்த மொத்தச் சங்கிலிகள், பத்து வளையல்கள், கவர்னர் மாலைகள், காசு மாலைகள், நெத்திச்சுட்டி, கால் கொலுசுகள், தொங்கல், மாட்டல், தோடு, வைர மூக்குத்தி என்று அவ்வளவும் தங்க நகைகள். “எல்லாம் உனக்குத்தான்.போதுமா?”என்று சிரித்தான் அக்தார்.

“மொத்தம் எத்தனை சவரன்?”

“இந்தப் பெண்களே இப்படித்தான்”என்று பொய்க்கோபம் காட்டினான் அவன். “ கணவன் ஒருமாதம் கழித்து வந்திருக்கானே, அவன் தேவை என்னன்னு கேட்டுப் பரிமாறுவோம்னு கிடையாது” என்று கண் சிமிட்டிப் புன்னகைத்தவன், “எதுக்கெடுத்தாலும் கேள்விக்குமேல் கேள்வி” என்று செல்லமாகச் சலித்துக்கொண்டான்.

அவள் விடவில்லை. “மொத்தம் எத்தனை சவரன்?”

“நூத்திஐம்பது.”

“அந்தப்பணத்தை வச்சு இந்த வீட்டின்மேலுள்ள கடனை அடைச்சிருக்கலாம்ல? ”

“அதானே உன் கவலை?”

அவள் ஆமென்று தலையசைத்தாள்.

“வீட்டுக்கடனை அங்கேயே அடைச்சுட்டேன். போதுமா?”

அவள் ஒரு புதிய பார்வையால் அவனைத் துழாவினாள். அவளுள் ஆயிரக் கேள்விகள். அதற்கெல்லாம் விடை பெறுகிற சமயமல்ல இது. என்றாலும் தெளிவு பெற்றே தீர வேண்டும்.
அவளது ஐயத்தை வலிமைப்படுத்துகிறாற்போல் பல பொருள்கள் அவளது கண்களில் தென்பட்டன.

“வாயேன் ஜமீலா”என்று அவன் ஆசையாய் அவளது இடுப்பை வளைக்க, அவள் இயந்திரமாய் அறைக்குள்  பின்தொடர்ந்தாள். 

வைகறைப்பொழுதிலேயே எழுந்து, சில்லென்ற நீரில் குளித்து, ‘சுபுஹு’ தொழுகையை முடித்து, கணவருக்கு காபி தயாரிப்பதற்காக சமையலறைக்குள் நுழைந்தபோது தொலைபேசி ஒலித்தது.

ரிரீவரை எடுத்து, “அஸ்ஸலாமு அலைக்கும்”என்றாள்.

மறுமுனையில், “வஅலைக்குமுஸ்ஸலாம்” என்று பதில் முகமன் கூறியது ஒரு கரடு முரடான ஆண்குரல். “நேற்று ராத்திரி அக்தார் பத்திரமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தானா?”

ஜமீலாவுக்குத் திக்கென்றது. “ வந்துவிட்டார். நீங்க யார்?”

“அவன் நண்பன். அவனுடன் இப்போது பேச முடியுமா? ஒரு முக்கியமான செய்தி.”

“அவர் அசந்து தூங்கிக்கிட்டிருக்கார். உங்க பெயர் என்ன?”

“நம்பர் டூ என்று சொல்லுங்கள். புரிந்துகொள்வான்”- தொடர்பு துண்டித்துவிட்டது.

ஜமீலாவுக்குத் தூக்கிவாரிப்போட்டது. வெறும் அநாமதேய தலைபேசி அழைப்பை வைத்துக்கொண்டு கைப்பிடித்த கணவனைச் சந்தேகிப்பது ஒரு குடும்பப்பெண்ணின் லட்சணமல்ல. இருந்தாலும் இதயத்தை என்னவோ இம்சித்தது. அதற்குத் தீனி போட்டாக வேண்டும். என்ன செய்வது? எப்படி இந்தக் குழப்பத்திலிருந்து மீள்வது?

நேற்று தங்கநகைகள் வைத்து எடுத்து வந்த கறுப்புநிற சூட்கேஸைத் திறந்தாள். ஒவ்வொரு ஆபரணமாக எடுத்துப் பரிசோதித்தாள். ஆனால் எல்லாவற்றிலுமே விலையும் அளவும் பொறிக்கப்பட்ட அட்டைகள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தன. பெட்டியின் இன்னோர் அறையைத் திறந்து கையைவிட்டுத் துழாவினாள். பாஸ்போர்ட்டும் குடி இருக்கும் வீட்டின் கிரயப் பத்திரமும்
கிடைத்தன. முத்திரைத்தாளின் பக்கங்களைப் பரபரப்புடன் புரட்டினாள். இரண்டு நாட்களுக்குமுன்தான் அது சென்னை பதிவாளர் அலுவகத்தில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருந்தது. அப்படியானால் வீட்டுக்கே வராமல் அவன் சென்னையில்தான் இருந்திருக்கிறான்.  பரபரப்பில் பயம் கலக்க உடலெல்லாம் பதறியது ஜமீலாவுக்கு. நடுங்கும் விரலால் பாஸ்போர்ட்டைப் புரட்டினாள். அக்தார் லண்டன் சென்று வந்ததற்கான சுங்கத்துறை முத்திரைகள் எதுவும் குத்தப்படவில்லை. ஆக, அவன் லண்டனுக்கும் செல்லவில்லை.

அப்படியானால் கட்டிய மனைவியிடமே பொய்யுரைக்கிற அளவுக்கு அவனது ரகசியம் என்ன? அவனுள் மறைந்து கிடக்கிற மர்மங்கள் என்னென்ன?

“எல்லாத்தையும் சோதனை போட்டாச்சா?”என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினாள் ஜமீலா.

அக்தார். அவனது விரலுக்கு நடுவில் ஓர் ஏ.டி.எம்.அட்டை. “இதைப் பிடி”என்றான் அன்பாக.  குட்டு உடைந்துவிட்டதே என்ற ஆத்திரத்திற்குப் பதிலாக முகத்தில் அபூர்வ சாந்தம். குரலில் அமானுஷ்ய வருத்தம். திடீரென்று அழுதான். விசும்பலினூடே சொன்னான்: “நீ சிரமப்படுவதை என்னாலே தாங்கிக்க முடியலே ஜமீலா.”

“நான் சிரமப்படுறதாக யார் சொன்னது? பிரியாணி சாப்பிட முடியலேன்னாலும் பசிக்கு உணவு கிடைக்குது. பங்களா இல்லைன்னாலும் ஒரு சின்ன ஓட்டு வீடு போதும். கண்ணுக்கு நிறைஞ்ச கணவன் நீங்க இருக்கிறீங்க. அழகான குழந்தை.எல்லாத்துக்கும்மேலே அல்லாஹ் இருக்கிறான். எனக்கென்ன சிரமம்?”என்று கரகரத்த குரலில் கூறினாள். ஒரு வகையில் அவளது ஏழ்மைக்கோலமும் வறுமைமுகமும் அவனை வெகுவாகச் சிரமப்படுத்திக் கொண்டிருப்பதை அவளால் இப்போதுதான் உணர முடிந்தது.

அதற்குள் என்னென்ன விபரீதமெல்லாம் நடந்திருக்குமோ?

நினைத்துப் பார்க்கவே பகீரென்றது ஜமீலாவுக்கு.

குறுக்கிட்டான் அக்தார்: “என்னைச் சமாதானம் பண்ண முயற்சிக்காதே! இதிலே இருபது லட்சரூபாய் இருக்கு. நீயும் நம்ம குழந்தையும் எக்காரணத்தைக்கொண்டும் எதிர்காலத்தில் சிரமப்படக்கூடாது என்பதற்காக நான் செய்த ஏற்பாடு. இதையெல்லாம் எடுத்துக்கிட்டு உன் அம்மா வீட்டுக்கே போய்டு!”

இதயத்தைக் கையில் பிடித்துக்கொண்டு, “நீங்க?”என்று கேட்டாள் ஜமீலா. அவளை விட்டுப் பிரிந்து கைக்கெட்டாத தூரத்துக்கு, கண்ணுக்குத் தெரியாத இடத்துக்கு அவன் போகப்போகிறான் என்று மட்டும் உள்ளத்தில் உறைத்தது.

அவன் ஓரிரு நிமிடங்கள் மௌனமாக இருந்தான். மனப்போரட்டத்தில் சிக்குண்டுக் கிடந்தான் என்பதே சரியான பதம். அப்புறம் , “நான் ஜிஹாதுக்குப் போறேன்”என்று திடமாக முணுமுணுத்தான்.

‘ஜிஹாத்’என்றால் என்னவென்றே தெரியாதவளல்ல ஜமீலா. 1400 ஆண்டுகளுக்கு முன்னால், நபிகள் நாயகத்தின் காலத்தில், இஸ்லாத்தின் பகையாளிகளுக்கெதிராக நடத்தப்பட்ட போருக்குப் பெயரே ‘ஜிஹாத்.’

இப்போது அதெற்கென்ன அவசியம் வந்தது? ஜிஹாத் புரிவதற்கான சூழலோ நிர்ப்பந்தமோ எங்கே இருக்கிறது? குறிப்பாக இந்தியாவில்?

சினத்தையும் சோகத்தையும் மிஞ்சி, விரக்தியான சிரிப்புடன், “மனைவியோடு, குழந்தைக்காக, சமுதாயத்தோடு வாழ்றதைவிட ஜிஹாத் அவசியமா?” என்று வினவினாள் ஜமீலா.

அவன் விடை எதுவும் அளிக்கவில்லை. கன்னத்தில் தாரை தாரையாக நீர் கொட்ட, அக்தார் எதுவும் பேசாமல் ஜமீலாவின் நெற்றியில் ஒரு முத்தமிட்டான்.

அதுதான் அவனின் கடைசி ஸ்பரிசம்.

பட்ட காலிலே படும் என்பார்கள். ஜமீலாவின் வாழ்க்கையில் அது நிரந்தரம் போலும். நேற்றுதான் விவாகரத்து நோட்டீஸ் வந்திருந்தது. மறுநாள் சாயங்காலமே பேப்பர் பையன் விட்டெறிந்துவிட்டுப் போன நாளிதழில் இன்னொரு பயங்கரச் செய்தி: ‘ போலீசுக்கு உளவு சொன்னவர் சுட்டுக் கொலை. தீவிரவாதி அக்தார் அஹமதுக்குப் போலீஸ் வலைவீச்சு.’

‘யா அல்லாஹ்’ என்று தொப்பென்று தரையில் விழுந்தாள் ஜமீலா.

தொலைபேசி ஒலித்தது. “உங்க கணவர் தீவிரவாதியாமே?”-முகம் தெரியாத யாரோ விசாரித்தார்கள். தெருவில் நடந்து செல்பவர்களின் பார்வை மொத்தமும் அந்த வீட்டின்மீதே மொய்த்தது. அக்கம் பக்கத்துப் பெண்களில் சிலர் வேண்டுமென்றே வேண்டியவர்கள் மாதிரி ‘நலம்’விசாரிக்க வந்தார்கள். அடுத்துப் பெண் காவலர் துணையுடன் பெரிய பெரிய போலீஸ் அதிகார்களின் படையெடுப்பு. ஜமீலா கற்சிலை என நின்றிருக்க, வீட்டின் மூலை முடுக்கெல்லாம் சோதனை. கேள்விமேல் கேள்விகள். குத்தலான, கிண்டலான, இதயத்தைக் கீறிப் பிறாண்டும் விசாரணைகள்.

அப்புறம் இன்னொரு போன். வெட்கமும் வேதனையும் பிடுங்கித்தின்ன, நடுங்கும் விரல்களால் ரிஸீவரை எடுத்து, “யார்?’’ என்று கேட்பதற்குள் ஜமீலாவுக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது.

“சிறப்புப் புலனாய்வுத் துறை. உன் கணவனை இன்றிரவே பிடித்துவிடுவோம். அதற்குள் உண்மையைக் கூறிவிடு: அவன் எங்கே மறைந்திருக்கிறான்?”

ஜமீலா போனிலேயே குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

பால்கனியில் நின்றவாறு குழந்தைக்கு வேடிக்கை காட்டிக்கொண்டிருந்த அம்மா, “என்னம்மா? என்னம்மா?”என்று பதறினாள்.

விளக்கமளிக்கும் மனோநிலையில் ஜமீலா இல்லை. “உடனடியாக நம்ம கிராமத்துக்கே திரும்பிப் போறோம்மா”என்று கூறியவள், அந்தக் கறுப்பு சூட்கேஸை எடுத்து அக்தார் ஆசை ஆசையாய் வாங்கிக்கொடுத்த தங்க நகைகள், வீட்டுப் பத்திரங்கள், நேற்று பேங்க்கில் மாற்றிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கட்டுக்கள், விலையுயர்ந்த பொருட்கள் அத்தனையும் அதனுள் திணித்துக் கொண்டிருந்தாள்.

இரயில் புறப்படும் நேரம்.

பெட்டியில் அதிகக் கூட்டமில்லை. அங்கொருவரும் இங்கொருவருமாக பிரயாணிகள். குழந்தை வேடிக்கை பார்ப்பதற்கு வசதியாக ஜமீலா ஜன்னல் பக்கம் இடம் தேர்ந்தெடுத்திருந்தாள். பக்கத்தில் அம்மா. அவளது பார்வை எங்கோ சஞ்சரித்துக்கொண்டிருந்தது.

எதிரே ஓர் இளம்பெண் உட்கார்ந்திருந்தாள். அவளது மடியில் தலை வைத்துப் படுத்திருந்த மூன்று குழந்தைகள், ஒவ்வொரு வயது வித்தியாசத்தில். மகிழ்ச்சி தவழ்ந்து வருடக்கணக்கில் ஆகியிருக்கும் போலும். முகத்தில் அவ்வளவு சோகம். அடிக்கடி அழுதாள். யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகத் தலையைத் தாழ்த்திக்கொண்டாள். என்றாலும் அவளது தோள்பட்டையின் குலுக்கல் அப்பட்டமாகக் காட்டிக் கொடுக்கத் தவறவில்லை. வெளிர் மஞ்சள் நிறக் கசங்கிய சேலைத் தலைப்பை மடக்கி  போட்டிருந்த முக்காடு, அவளது சோகத்தையும் முதுமையையும் இன்னும் அதிகமாகக் காட்டிற்று.

ரயில் நிலையத்துக்கு வரும்போது அம்மா வாங்கிய பிஸ்கட் பாக்கெட்டுக்களும் பழங்களும் ‘கேரி’ப்பையில் அப்படியே கிடந்தன. எதிர் இருக்கைக் குழந்தைகள் அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தன. முகத்தின் வாட்டத்தைப் பார்த்தால் சாப்பிட்டு வெகுநாட்களாகி இருக்கும் போலிருந்தது.

ஒவ்வொருவருக்கும் அவரவர் கவலை. அவரவர் கஷ்டம். அவரவர் வேதனை. ஆனால் ஜமீலாவைவிட துர்ப்பாக்கியசாலியாக நிச்சயம் இருக்க மாட்டாள். மிகவும் ஏழ்மையிலும் இயலாமையிலும் உழன்ற ஜமீலா, கையிலிருந்த அத்தனை ஐஷ்வர்யங்களையும் புயல் தட்டிச் சென்றாற்போல் பறிகொடுத்தவள். அப்படிப்பட்ட துக்கிரி உலகத்தில் ஜமீலாவைத்தவிர வேறு யாரும் இருக்க முடியாது.. வாழ்வதற்கான வசதிகள் இருந்தும் வாட்டி வதைக்கும் தனிமை. கணவன் உயிருடன் இருந்தும் விதவை. இத்தனை சிறுவயதில் எந்தப் பெண்ணும் இவ்வளவு கொடுமையை அனுபவித்திருக்க மாட்டாள்-எதிரே விநாடிக்கொரு தரம் குலுங்கிக் குலுங்கி அழுகிற அந்தப் பெண் உட்பட. இறைவன் அருளிய இன்பமயமான வாழ்க்கை, இவ்வளவு விரைவில் கை நழுவிப் போகுமென்று அவள் கனவுகூடக் காணவில்லை. இப்போது அவளுடன் துணை இருப்பதெல்லாம் குழந்தை நுஸ்ரத்தும் பாழாய்ப்போன தனிமையும்தான்.

பெட்டி நிறையப் பணமும் தங்க ஆபரணங்களும் இருந்தென்ன? மனத்தில் சற்றும் நிம்மதி இல்லையே? இதயம் பாறாங்கல்லாய்க் கனக்கிறதே? இந்த நரக வேதனைக்கு என்றைக்குத்தான் விடிவுகாலமோ?

ஆறுதல் தேடி மனத்தை வேறு எதிலாவது செலுத்த நினைத்தாள் ஜமீலா.எதிர் இருக்கைக் குழந்தைகள்தான் கண்ணில்பட்டன. பக்கத்திலிருந்த கேரிப்பையிருந்து பிஸ்கட் பாக்கெட்டுக்களை எடுத்து குழந்தைகளுக்கு அளித்தாள்.  ஒரு வாழைப்பழத்தைப் பிய்த்து அந்தப் பெண்ணின் கையில் திணித்தவாறே, “ஏம்மா ரொம்பவும் சோகமா யிருக்கிறீங்க?”என்று விசாரித்தாள். ‘இன்னொருவரின் துக்கத்தில் பங்கெடுத்தால் நமது துன்பம் பாதி குறைந்த மாதிரி’ என்று சிறுவயதில் மத்ரஸா உஸ்தாத் அடிக்கடிச் சொல்வது நினைவில் நிழலாடிற்று..

ஜமீலா சற்றும் எதிர்பாராத விதமாக அந்த அம்மாள் ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டாள். கண்களில் மடை திறந்து கண்ணீர் கொட்டியது. அந்த அழுக்கடைந்த முந்தானைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக்க்கொண்டாள். கண்ணீர் மீண்டும் மீண்டும் பிரவாகமெடுத்தது. அழுகை ஓயவில்லை.

ஜமீலாவுக்கு ஏண்டா கேட்டோம் என்றாகிவிட்டது.

விசும்பலினூடே அந்தப் பெண்ணே தொடர்ந்தாள்: “போலீசுக்கு உளவு சொன்னார்னு தீவிரவாதிகள் என் புருஷனை சுட்டுக் கொன்னுட்டானுங்கம்மா”என்று மீண்டும் கதறினாள்.

‘யா அல்லாஹ்’ என்று ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டே பின்னால் சாய்ந்தாள் ஜமீலா.”இதென்ன சோதனை யா அல்லாஹ்?’- உள்ளத்தில் ஏற்பட்ட மரண வேதனையை  அப்படியே கண்ணைப் பொத்திக்கொண்டு குறைக்க நினைத்தாள் ஜமீலா. அது அவ்வளவு எளிய காரியமாகத் தோன்றவில்லை. மேலும் மேலும் ரணமாகிக்கொண்டிருந்த இதயம் சகிக்க முடியாதபடி கனத்து வலித்தது. நெடுநேர மயான மௌனத்துக்குப்பின் படீரென இமையைத் திறந்தாள்.

ஏதோ ஒரு ஸ்டேஷனில் ரயில் நின்றுகொண்டிருந்தது.

குழந்தையைக் கையில் தூக்கிக்கொண்டாள் ஜமீலா.அம்மாவைப் பரபரவென்று எழுத்துக்கொண்டு பெட்டியைவிட்டு இறங்குபோது, எதிர் இருக்கைப் பெண்ணிடம் ஜமீலா சொன்னாள்: “ நாங்க காபி குடிச்சுட்டு வந்துடறோம்.”

அந்தப் பெண் எதேச்சயாக கேட்டாள்: “இந்தப் பெட்டி?”

ஜமீலா பதிலேதும் கூறவில்லை. ‘அதற்குரியவள் நீதான்!’என்று நினைத்துக்கொண்டபோது, இதயத்தின் வலியும் கனமும் ஜமீலாவுக்கு வெகுவாகக் குறைந்திருந்தன.

*

நன்றி : ஏ.ஹெச்.ஹத்தீப் |E-Mail :  hatheeb@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s