பெரியார் + ஜக்கரியா = ஒரு நட்பின் கதை

‘ஒரு நட்பின் கதை’ என்ற தலைப்பில் திரு. க. திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய கட்டுரை. தினமணிகதிர், பிப்ரவரி 26, 1995-இல் வெளிவந்தது. நன்றிகளுடன்…

*

பெரியாரால் ‘நவாபு சாகிபு’ என்றும் அறிஞர் அன்ணாவால் ‘ஸ்டவ்’ என்றும் செல்லமாக அழைக்கப்பட்டவர் எஸ். எம். ஜக்கரியா. இவர் பெரியாரின் காலத்தில் திராவிடர் கழக நிர்வாகக் குழு உறுப்பினர். அண்மையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொன்விழாவின்போது அதன் பொதுச் செயலாளர் வீரமணியால் பாராட்டுப் பெற்றவர்.

பெரியாரின் மேடைப்பேச்சால் ஈர்க்கப்பட்டு இன்றளவும் அவரது கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்துவரும் ஜக்கரியாவுக்கு இப்போது வயது 82.

1912-ல் காயல்பட்டினத்தில் பிறந்த இவர், 1925-லேயே சென்னைக்கு வந்துவிட்டார். தொடக்கத்தில் காங்கிரஸ்காரர். 1927-ல் சென்னை சேத்துப்பட்டில் டாக்டர் அன்சாரி தலைமையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டவர்.

இம்மாநாட்டில்தான் காங்கிரஸ் ‘பூர்ண சுதந்திரம்’ வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. காங்கிரஸ் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர் ஜக்கரியா.

தீவிர காங்கிரஸ்காரராக இருந்த அவரை, மௌலானா சவுகத் அலியின் மரணத்தின்போது காங்கிரஸ் ‘நடத்திய விதமே  ‘ அவரை காங்கிரசின்பால் மேலும் செல்லாமல் தடுத்துவிட்டது.

அப்படி என்ன நடந்தது?

லண்டனில் நடைபெற்ற 3-வதுவட்டமேசை மாநாட்டில் (1932) அலி சகோதரர்கள் கலந்து கொண்டனர். சவுகத் அலி பெரியவர்; முகமது அலி இளையவர். இம்மாநாட்டில் சவுகத் அலி பேசுகிறபோது ,’ சுதந்திரத்தோடுதான் போவேன்; இல்லையேல் என்னை இங்கேயே புதையுங்கள்’ என்று கூறினார். அவரது அப்பேச்சு அந்நாளைய ‘சுதந்திரச் சங்கு’ பத்திரிக்கையில் வெளிவந்தது.

சவுகத் அலி (பேசியதுபோலவே) லண்டனிலேயே மரணமடைந்தார். அலி சகோதரர்கள் 1927-லேயே காங்கிரஸிலிருந்து விலகிவிட்டனர். அதனால் சவுகத் மறைவிற்கு காங்கிரஸ் இரங்கல் கூடத் தெரிவிக்கவில்லை. அவரது மறைவை ஒரு பொருட்டாகவும் அது மதிக்கவில்லை. ‘

ஆனால் பிரிட்டிஷார், யூதர், கிருஸ்தவர், இசுலாமியர்களின் புனித இடமான ஜெருசலேமில் சவுகத் அலியின் உடலை ஏற்பாடு செய்தனர்.  இதனால காங்கிரஸ்மீது வெறுப்படைந்திருந்த ஜக்கரியா, பெரியாரின் மேடைப்பேச்சால் கவரப்பட்டிருந்ததால் பெரியாரின் தொண்டரானார். நேர்மைக்கும் நம்பிக்கைக்கும் உரியவர் அவர் என்பதைக் கண்டுகொண்டு ஜக்கரியா பெரியாரின் வசமானார். பெரியார் தனக்கிடும் பணிகளைச் செய்வதில் மகிழ்ச்சி அடைந்தார். நிறைவேற்றிக் காட்டினார்.

ஜக்கரியாவும் பெரியாரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவரானார். பெரியார் அன்பு மேலிட ‘நவாபு சாகிபு’ என்று ஜக்கரியாவை அழைக்கலானார்.

லட்சுமிகாந்தன் கொலைவழக்கில்  தண்டனை பெற்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராச பாகவதரும் சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

பெரியாரின் சார்பாக அவர்களை அடிக்கடி சென்று பார்த்துவரும் பொறுப்பினை ஜக்கரியா மேற்கொண்டிருந்தார். அப்போது ஜெயிலராக பாலசுப்ரமணியம் இருந்தார். இவரது மனைவி இந்திராணி அம்மையார் அந்நாள்களில் பெரியாரின் இயக்கத்தில் புகழ்பெற்ற பெண்மணியாகத் திகழ்ந்தவர். பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு உடையவர். அவரது கணவர் பாலசுப்பிரமணியமும் அப்படியே. கலைவாணரையும் ஏழிசை மன்னரையும் பார்க்கச் சென்றதால் ஜக்கரியாவுக்கு இத் தம்பதியினரின் நட்பு கிடைத்தது.

பாலசுப்பிரமணியம் ஓய்வு பெற்றபின் அவரைப் பார்க்க ஜக்கரியா சென்றார். இந்திராணி அம்மையாரும் பாலசுப்பிரமணியமும் ஒருவருக்கொருவர் பேசுவதில்லை என்பது தெரிந்தது. ‘ஏன்?’ என்று பாலசுப்பிரமனியத்திடம் ஜக்கரியா கேட்டார். அதற்கு அவர் அளித்த பதிலிலிருந்து, காலப்போக்கில் பலர் கொள்கைச் சிதைவில் விழுந்து விடுகின்றனர். அவர்களில் இவரும் ஒருரராகி விட்டார் என்பதைப் புரிந்துகொண்டார்.

பெரியாரின் கொள்கைகளுக்கு எதிராக உள்ள இந்நிலை மனைவி இந்திராணி அம்மையாருக்கு உடன்பாடில்லை. அதனால் கணவரோடு அவர் பேசுவதில்லை என்பதையும் தெரிந்துகொண்டார் ஜக்கரியா. இந் நிகழ்ச்சி ஜக்கரியாவுக்கு பெரிய வியப்பளித்தது. அந்த அம்மையாரிடம் சமாதானம் செய்யப்பார்த்தார். அது முடியவில்லை.

இதன்பிறகு ஒருநாள் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பாலசுப்பிரமணியம் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. எனவே வேலூர் மருத்துவமனைக்குச் சென்று பாலசுப்பிரமணியத்தைப் பார்த்தார் ஜக்கரியா.

பாலசுப்பிரமணியம் ஜக்கரியாவின் கைகளைப் பற்றிக்கொண்டு, ‘நான் பழையபடி கொள்கையில் உறுதியுடையவனாகிவிட்டேன். எனக்கு ‘கேன்சர்’ நோய் வந்திருக்கிறது. இதை அய்யாவிடம் சொல்லுங்கள், என் நிலையை விளக்குங்கள். எங்களைப் பற்றி அய்யாவை எழுதச் சொல்லுங்கள்’ என்று கூறினார். அவர் இப்படிக் கூறியதைக் கேட்ட ஜக்கரியா மனமுருகிப்போனார். சென்னைக்கு விரைந்து வந்து, பெரியாரிடம் நிகழ்ந்தவைகளைக் கூறினார். அன்றே பெரியார் இந்தத் தம்பதியினரைப்பற்றி ‘ஜோடிப் புறாக்கள்’ என்று தலைப்பிட்டு விடுதலையில் எழுதினார்.

பெரியாரின் எழுத்துக்களைத் தாங்கிய விடுதலை பத்திரிகையை எடுத்துக்கொண்டு ஜக்கரியா அன்றே வேலூர் சென்று பாலசுப்பிரமணியத்திடம் காட்டினார். இதன்  பின்னர்தான் பாலசுப்பிரமணியம் நிறைவடைந்தார்.

***

திராவிட இயக்கப் பத்திரிகைகளில் பொன்னியும் கதிரவனும் ஆனந்தவிகடன், கல்கிபோல அந்நாள்களில் (1947களில்) வெளிவந்து கொண்டிருந்தன. அதில் ‘கதிரவன்’ பத்திரிகைக்கு உரிமையாளராக இருந்தவர் ஜக்கரியா. ஆசிரியராக இருந்தவர் புலவர் பு. செல்வராசு. (இவர் டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் மைத்துனர்).

இப்பத்திரிக்கையைத் தொடங்குவதற்கு முன் பெரியாரைச் சந்தித்து ஜக்கரியா,’பத்திரிக்கை தொடங்கப்போகிறேன்’ என்று கூற அதற்கு பெரியார்,’அது உனக்குச் சரிப்படாது; வேண்டாம்’ என்று கூறியிருக்கிறார். பெரியாரின் ஆலோசனையை ஏற்காமல் மூன்றாண்டுகள் பத்திரிகையை நடத்தியிருக்கிறார் ஜக்கரியா. இறுதியாக பத்திரிகையை நிறுத்த வேண்டியதாயிற்று.

நட்டத்தால் பத்திரிகை நின்றுபோன செய்தியைப் பெரியாரிடம் கூறினார் ஜக்கரியா.

அதற்கு அவர் ‘நான் அன்றே சொன்னேன் அல்லவா?’ எனச் சொல்லிச் சமாதானம் கூறியதோடு ரூ. 5000/- கொடுத்தார்.

ஜக்கரியா பணம் வாங்க மறுக்கவே, ‘ஏன், இன்னும் அதிகமான நட்டமா?’ என்று கேட்டார் பெரியவர்.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை அய்யா. எனக்கு உங்கள் அன்பு போதுமய்யா’ என்று கூறி சிக்கனத்தின் சிகரம் தாராளத்தின் சிகரமாகி வாரி வழங்கியது குறித்து ஜக்கரியா இன்றும் இந் நிகழ்ச்சியை நினைத்து நெக்குருகிப் போகிறார்.

***

1948-ல் தமிழ்நாட்டில் சென்னையில் முதன் முதலாக நடந்த திருக்குறள் மாநாட்டைப் பற்றி இன்று பேராசிரியர்கள் – ஆய்வாளர்கள் – எழுத்தாளர்கள்  தமது எழுத்துக்களில் எழுதக் காண்கிறோம். இத் திருக்குறள் மாநாட்டுக்கு மூலவர் ஜக்கரியா.

அந்நாளில் சென்னை பிராட்வே தியேட்ட அருகே செயிந்த் கேப்ரியல் பள்ளிக்கு எதிரே பெரிய மைதானர் ஒன்றிருந்தது. அம் மைதானம் காயிதேமில்லத் இஸ்மாயில் சாகிபின் மாமனாருக்குச் சொந்தமானது.

அந்த இடத்தில்தான் திருக்குறள் மாநாடு நடந்தது. மாநாட்டை நடத்துவதற்கு ஜக்கரியாவிடம் பெரியார் ரூ.1000/- தந்தார். மாநாட்டிற்கு வேண்டிய இதர தளவாடச் சாமான்கள் ஜக்கரியாவின் நண்பர்கள், உறவினர்கள், கழகத்தவர்களின் உதவியால் பெறப்பட்டது.  மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது.

பெரியார் அவர்கள் மாநாட்டுச் செலவிற்காக மேலும் ஜக்கரியா பணம் கேட்பார் என் எதிர்பார்த்தார். மாறாக அம் மாநாட்டின் மூலம் மீதமான தொகையாக ரூ. 4300/-ஐப் பெரியாரிடம் வழங்கினார் ஜக்கரியா.

***

ராஜாஜி 2-வது முறை (1952) முதல்வராக இருந்த சமயம். இக்கால கட்டத்தில் சாதி, பேத, மூடச் சடங்குகளின் மீதான சாடுதல்கள் தனிநபர்களின்மீது சாய்ந்துவிடும் அளவிற்கு உச்சத்தில் இருந்தது. கொள்கையில் உறுதியுடைய பெரியார் தனிநபர்மீதான தாக்குதலாக அது மாறிவிடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருந்தார்.

இந் நிலையில் திருச்சியில் தங்கியிருந்த பெரியார் ஜக்கரியாவை அழைத்தார். உயர்நீதிமன்றம் அருகேயுள்ள கடற்கரையில் நபிகள் நாயகம் விழா நடத்தவேண்டும் என்று கூறியதோடு , ராஜாஜியின் பெயரைச் சுவரொட்டியில் முதலில் போடவேண்டுமென்றும் இதனை குத்தூசி குருசாமி விரும்பமாட்டார் என்பதால்தான் சொன்னதாக அவரிடம் சொல்லிக் கூட்டத்தை ஏற்பாடு செய்யும்படியும் கேட்டுக்கொண்டார். அத்தோடு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குபவர் காங்கிரஸைச் சேர்ந்த முஸ்லிமாக இருக்கவேண்டும் என்பதும் அவரது விருப்பமாக இருந்தது.

பெரியாரின் விருப்பபடி கூட்ட ஏற்பாட்டை தமிழ் முஸ்லிம் சங்கம் கவனித்துக்கொண்டது. கூட்டத்திற்கு காங்கிரஸ்காரரான காயல் எம்.கே.மொய்தீன் இப்ராகிம் தலைமை தாங்கினார். 14 வருடங்களுக்குப் பிறகு ராஜாஜியும் பெரியாரும் ஒரே மேடையில் தோன்றினர்; பேசினர். இக்கூட்டத்திற்கான சுவரொட்டியில் ‘இரு துருவங்களின் சந்திப்பு’ என் அச்சிடப்பட்டிருதது. இந் நிகழ்ச்சியைத் தாம்தான் ஏற்பாடு செய்ததாக விடுதலை என்.எஸ். சம்பந்தம் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியிருந்தார். அது சரியான செய்தி அல்ல. அவரும் இப்போது இல்லை. அவர் இருக்கிறபோதே வீரமணி ‘இப்படி சம்பந்தம் தவறாகச் சொல்லிவிட்டாரே’ என ஜக்கரியாவிடம் வருத்தப்பட்டதும் உண்டு.

***

டாக்டர் யூ. கிருஷ்ணாராவ் 1952-ல் அமைந்த ராஜாஜி அமைச்சரவையில் தொழிலாளர் அமைச்சராக இருந்தவர். இவர் 1957-ல் துறைமுகம் தொகுதியிலிருது தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரைப் பற்றிய ‘நல்ல அபிப்பிராயம்’ காமராசருக்கு இல்லை. இவர் ராஜாஜிக்கு வேண்டியவர் என்றே காமராசர் கருதியிருந்தார்.

ராஜாஜி அமைச்சரவை 1954 மார்ச் 27-ல் பதவி விலகியது. பிறகு காமராசர் முதல்வரானார்.  இவரது அமைச்சரவையில் கிருஷ்ணாராவ் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. 1957-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு ஏதாவது பொறுப்பை காமராசரின் அரசில் பெற விரும்பினார். பெரியார் சொன்னால் காமராசர் கேட்பார் என்ற முடிவுக்கு வந்தார் யூ. கிருஷ்ணாராவ்.  அதனால் பெரியாருக்கு வேண்டிய ஜக்கரியாவை நாடினார்.  இவர்கள் இருவரும் சென்னையின் ஒரு பகுதியைச் சார்ந்த நண்பர்களாக வேறு இருந்தனர்.

இப் பிரச்சினையைச் சுமந்துகொண்டு  ஏற்காட்டில் தங்கியிருந்த பெரியாரைக் காணச் சென்றார் ஜக்கரியா. அவருடன் காயல் வழக்கறிஞர் எம்.கே.மொய்தீன் இபுறாகிமூம் சென்றிருந்தனர். காலை 9-00 மணிக்கெல்லாம் பெரியாரைச் சந்தித்தனர். வந்த சேதியை பெரியாரிடம் கூறினர். அதன் பயனாக யூ.கிருஷ்ணாராவ்  சபாநாயகரானார்.

யூ. கிருஷ்ணாராவ் 1957 முதல் 1961 வரை அப்பதவியில் இருந்தார். 1955 வரை ஜே.சிவசன்முகம் பிள்ளையையும் , 1956-ம் ஆண்டு கோபாலமேனனும் சபாநாயகர்களாக இருந்தனர்.

ஜக்கரியாவும் மொய்தீன் இப்ராகிமும் பெரியாரிடம் ஏற்காட்டில் பேசிக் கொண்டிருந்தபோது நண்பகல் உணவு நேரமாகிவிட்டது. மணியம்மையார் பெரியாருக்கு உணவு கொண்டுவருவதற்காகக் கேட்டார்கள். உடனே இருவரும் பெரியாரிடம், ‘நாங்கள் கீழே சென்று சாப்பிடுகிறோம். நீங்கள் மாடியிலேயே உணவு உட்கொள்ளுங்கள்’ என்றனர். ‘வேண்டாம் – நாம் அனைவரும் கீழே சென்று சாப்பிடுவோம்’ என்று கூறினார் பெரியார்.

அனைவரும் மாடியிலிருந்து கீழே வந்து உணவுக்காக உட்கார்ந்தனர். மனியம்மையார் பரிமாறினார். சோற்றைப் போட்டு, ஆட்டிறைச்சிக் குழம்பையும் போட்டுக்கொண்டு வந்தார் அம்மையார். மொய்தீன் இப்ராகிமுக்குப் போடும்போது  பெரியார், திடீரென்று மணியம்மையாரின் கையைப் பிடித்துக்கொண்டார்.

மணியம்மையாருக்கு ஒன்றும் புரியவில்லை. ஜக்கரியாவும் மொய்தீன் இப்ராகிமும் எதற்காக இப்படி… என வியப்பு மேலிட பார்த்தனர்.

பெரியார் கேட்டார் : ‘அம்மா, கறி எங்க வாங்கினீங்க?’

‘கடையில்… பசார்லதான் வாங்கினோம்’ என்றார் மணியம்மையார்.

‘அப்படியா.. அப்ப அய்யாவுக்கு போடு; போடு நல்லா போடு’ என்றார் மகிழ்ச்சி பொங்க பெரியார்.

விஷயம் என்ன என்பது மொய்தீன் இப்ராகிமுக்கும் ஜக்கரியாவுக்கும் புரிந்தது. அவர்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆனந்தம். ஆனால் மணியம்மையாருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

உணவு முடிந்தது. ஜக்கரியாவைத் தனியாக அழைத்து விசாரித்தார் மணியம்மையார். ‘நான் என்ன தப்பு செய்தேன்? அய்யா ஏன் என் கையைத் தடுத்தார்?’ என்று கேட்டார்.

அதற்கு ஜக்கரியா, ‘அம்மா, எங்களைப் பற்றி அய்யாவுக்குத் தெரியும். குழம்பைப் போடுகிறபோது ஒரு விஷயம் அவருக்கு நினைவுக்கு வந்துவிட்டது. அதாவது, ஏற்காட்டில் பங்களாவாசிகள் ஆட்டை வாங்கி அவர்களாகவே ‘இஷ்டத்திற்கு’ அடித்து அறுத்து ‘கூறு’ போட்டு விற்பார்கள். அந்த இறைச்சியை வாங்கிவிட்டீர்களோ என் அய்யாவுக்குச் சந்தேகம்  வந்துவிட்டது. கடைத்தெருவில் அப்படி செய்வதில்லை. ‘முறையாக’ ஆபரேஷன் முறையில் அறுத்த இறைச்சி விற்பனைக்குக் கிடைக்கும். அதனை அறிந்துகொண்டவுடன்தான் அய்யா குழம்பைப் போடுங்கள் என்று கூறினார். ‘இஷ்டப்படி’ அறுத்த இறைச்சியை மார்க்கப்படி இஸ்லாமியர்கள் உண்பதில்லையாதலால்தான் அய்யா தமது விருந்தினரையும் அப்படியே நடத்த விரும்பினார்’ என்றார். மணியம்மையார் அதிர்ச்சியிலிருந்து விடுபட்டார். ஆனால் எம்.கே.மொய்தீன் இப்ராகிம், நாத்திகரான அய்யாவின் உபசரிப்பில் மகிழ்ந்து கண்ணீர் துளிர்த்தார்.

***

பெரியாரோடு மட்டுமில்லாமல் அறிஞர் அண்ணாவோடும் ஜக்கரியாவுக்கு நெருங்கிய நட்பு உண்டு. அறிஞர் அண்ணாவை அழைத்து காயல்பட்டினத்தில் வள்ளல் சீதக்காதி விழாவினை 1940-களில் நடத்தினார்.

இவ்விழாவினுக்கு டாக்டர் நயினாமுகமது உசேன் தலைமை தாங்கினார். நயினாமுகமது சென்னைப் பல்கலைக் கழகத்தில்  அரபு, பார்சி, உருது ஆகிய மொழிகளின் துறைக்குத் தலைவராக இருந்தவர். ‘சுதந்திர நாடு’ எனும் பத்திரிகையை நடத்தியவர். இபத்திரிக்கையில் எம்.ஆர்.எம். அப்துர்ரகீம், இரா.நெடுஞ்செழியன், இராதாமணாளன், அருணகிரிநாதர் ஆகியோர் துணை ஆசிரியர்களாகப் பணியாற்றினார்கள்.

சீதக்காதி விழாவிற்கு வந்த அண்ணா, காயல்பட்டினத்திலுள்ள தமிழ் முஸ்லிம் சங்கத்தில் தங்கியிருந்தார். அப்போது ‘தண்ணீர் பீப்பாய்’ பொருத்தப்பட்ட மாட்டு வண்டிகள் சாலைகளில் சென்று கொண்டிருந்தன. அதனைப் பார்த்த அண்ணா, ‘ஜக்கரியா, இது என்ன நம்ம மெட்ராசிலே சைதாப்பேட்டை  ஆத்துலே சாக்கடைத் தண்ணிய கொண்டுபோய் கொட்டறது மாதிரியான மாட்டுவண்டியா…? என்று கேட்டார்.

அதற்கு ஜக்கரியா,’ அண்ணா, இங்கே குடிதண்ணீர்ப் பஞ்சம். தண்ணிய காசுக்கு வாங்கிதான் உபயோகப்படுத்துகிறோம். இங்கேயிருந்து 1 1/4 மைல் தூரம் கடலோரத்தில் இருந்துதான் குடிதண்ணிய வண்டியில கொண்டுவராங்க..அந்த வண்டிங்கதான்-ணா, இது’ என்று கூறினார்.

‘அப்படியா?’ என வியப்படைந்த அண்ணா அன்று இரவு நடைபெற்ற சீதக்காதி விழாவில் காயல்பட்டிணத்துத் தண்ணீர் பஞ்சத்தைப் பற்றி ‘வள்ளல் சீதக்காதி பிறந்த ஊரில் தண்ணீர்ப் பஞ்சமா?’ என்று கேட்டார். அண்ணாவின் இப்பேச்சிற்குப் பிறகே காயல்பட்டிணத்திற்கு ரூ. 5 லட்சம்  செலவில் குடிநீர்த் திட்டம் உருவாகி பயன்பாட்டிற்கு வந்தது.

***

1967-ல் அண்ணா தமது அமைச்சரவையில் யார் யாரை சேர்த்துக்கொள்வது என யோசித்துக்கொண்டிருந்த நேரம். புலவர் செல்வராசை அழைத்துக்கொண்டு ஜக்கரியா என்.வி.நடராசனுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என பரிந்துரைக்க அண்ணாவைப் பார்க்கச் சென்றிருந்தனர். சென்னையில் அண்ணா அவரது நெருங்கிய நண்பர் ஒருவரது வீட்டில் தங்கியிருந்தார். அமைச்சரவைப் பட்டியல் தயாராகிக்கொண்டிருந்தது.

அண்ணாவைச் சந்திக்கச் சென்றபோது கே.ஏ.மதியழகன் மட்டுமே இருந்தார். ஏதோ பேச வந்திருக்கிறார்கள் என்ரு மதியழகன் எழுந்து சென்றுவிட்டார். ஜக்கரியா பேசத்தொடங்குவதற்குக் முன்பாகவே அண்ணா கூறினார்:

‘என்ன ஜக்கரியா நீங்க ரெண்டுபேரும் என்.வி.என்னுக்கு அமைச்சர் பதவி கேட்டு வந்திருக்கிறீர்கள் இல்லையா?’

‘ஆமாம் அண்ணா!’

‘எனக்குக் கொடுக்க வேண்டும் என்று ஆசைதான்! முதலியார் அமைச்சரவை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சுகிறேன்’

ஜக்கரியா அண்ணாவை இடைமறித்து ‘அண்ணா அவர் ஒரு மூன்று மாதம் அமைச்சராக இருக்கட்டும். அமைச்சரா இருந்தார்னு ஒரு பேரு இருக்கும்…உங்களுக்கும் நண்பர்..’ என்றார்.

‘ஜக்கரியா, இரண்டு வருஷம் போகட்டும். ஒரு மாறுதல் செய்து என்.வி.என்-ஐ அமைச்சராக்கிவிடலாம். நீங்கள் என்.வி.என்னுக்கு காரணங்களைக்கூறி அமைதிப்படுத்துங்கள். அது உங்கள் பொறுப்பு’ என அதற்குப் பதில் அளித்தார் அண்ணா.

இதற்கு மேலும் அண்ணாவைத் தொந்தரவு செய்யாமல் அவர்கள் இருவரும் விடைபெற்றுக்கொண்டனர்.

***

ஒரு சமயம் கட்சிப் பணிகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஜக்கரியாவுடையவது என விடுதலையில் பெரியாரின் அறிவிப்பும் வெளியாகிவிட்டது. இவ்வறிவிப்பைப் பார்த்தவுடன் அதிர்ச்சிக்கு ஆளாகி உடனே பெரியாரைப் பார்க்கச் சென்றார் ஜக்கரியா!

பெரியாரைப் பார்த்து, ‘என்ன அய்யா எனக்குத் தெரியும். என்னெப் போய் – இதெல்லாம் பார்த்துக்கச்  சொல்லி அறிவிப்பு செஞ்சிருக்கிறீர்களே’ என்றார்.

பெரியார் சொன்னார் : ‘உங்களுக்கு எதுவும் தெரியாதுதான்! எந்தப் பதவியும் எதிர்பார்க்கிறவர் இல்லை என்பதும் உண்மை. அதனால்தான் இப்படி அறிவிப்பு செஞ்சேன். நீங்க என்ன செய்யப்போறீங்க, எல்லாத்துக்கும் ஆள் இருக்கு. நீங்கள் சொல்வதைச் செஞ்சால் செய்யட்டும். இல்லாவிட்டாலும் சரி, ஒரு கவலையும் இல்லை.’

இந்த மொழிகளைக் கேட்டு ஜக்கரியா வாயடைத்துப் போனார். ஆம்; இன்றும் மெய் சிலிர்த்து இந்நிகழ்ச்சியை நினைவு கூர்கிறார் ஜக்கரியா.

*

நன்றி : க.திருநாவுக்கரசு, தினமணிகதிர்

*

கட்டுரை தேர்வு : தாஜ் , தட்டச்சு : ஆபிதீன் , வாசித்தது : கடவுள் !

3 பின்னூட்டங்கள்

 1. 22/08/2010 இல் 11:30

  நல்ல கட்டுரை. கடவுளுக்கு பிறகு வாசித்தது நானும்.

 2. நாகூர் ரூமி said,

  22/08/2010 இல் 12:07

  அருமையான கட்டுரை. ஹலால் இறைச்சியைத்தான் முஸ்லிம்கள் உண்ண வேண்டும் என்பதில் பெரியார் அக்கறை காட்டிய நிகழ்ச்சி அற்புதமானது. பெரியார் உண்மையிலேயே மிகவும் பெரியவர்தான்.

 3. மஜீத் said,

  22/08/2010 இல் 19:26

  அருமை. அருமை.. அருமை… அருமை….அருமை…..அருமை………………………..வேறு என்ன உண்டு எழுத???


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s