ஆர்.எஸ்.எஸ்-ன் இன்னொரு முகம் – தாஜ்

ஆர்.எஸ்.எஸ்-ன் இன்னொரு முகம் : இரண்டு இதழ்களின் தகவல்களும் + நானும்

 – தாஜ்

ஒன்றும் சொல்வதற்கில்லை.

தேடப்பட்டு அழிக்கப்படும்
நக்சலைட்டுகளைவிட
மதவாதிகளின் அட்டூழியம்
இந்நாட்டில் அதிகம்.

இந்தியத் துணைக்கண்டத்தின் சுதந்திரம் தொட்டு
இஸ்லாமியத் தீவிரவாதிகள்
இந்த மண்ணில்…
உண்டாக / பெருக
நிர்பந்திக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
இஸ்லாமியனது அட்டூழியம்
வெளிப்படையான அராஜகமாக ஆகிவிடுகிறதென்றால்,
அந்த முனைக்கு அவனை கொண்டு நிறுத்தும்
அரசியல் முனைப்புகளும்
மனிதாபிமானமற்ற சூழ்ச்சிகளும்
இன்னும் பலப்பல மறைமுக வஞ்சிப்புகளும்
அராஜகத்தின் அராஜகமாகிவிடுகிறது.
 
நம் மூத்த அரசியல்வாதிகளால்
அலங்கோல சட்டவரைவில்
காஷ்மீர் சிக்கவைக்கப்பட்டதும்.
பாகிஸ்தான்/ பங்களாதேஷ்
தனித்தனி நாடாக்கப்பட்டதும்
இந்திய எல்லைக்குள்ளே வாழ்கிற
இஸ்லாமியர்களின் தவறாக இருக்க முடியாது.
அதையே காரணம் காட்டி
இந்த மண்ணின் இஸ்லாமியர்களின் நிம்மதியை
நாளும் கேள்விக் குறியாக்குவது எந்த வகையில் சரி?
 
பாகிஸ்தானை இந்தியா அழித்துவிட முடியும்
சக்தியும் திறனும் இருக்கிறது.
காஷ்மீர் பிரச்சனையை முடிவுக்கு
கொண்டுவந்துவிட முடியும்.
அதற்கான மேதமைக் கொண்டவர்கள்
நம் மண்ணில் உண்டு.

பாகிஸ்தான் மீது படையெடுக்க வேண்டாம் என்றோ
காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க வேண்டாம் என்றோ
இந்திய மண்ணில் வாழும்
எந்தவொரு இஸ்லாமியனும் சொல்ல மாட்டான்.
சொன்னதுமில்லை/ சொல்லவும் முடியாது.
(அந்த அதிகாரமெல்லாம் அமெரிக்காவுக்குத்தான்)
 
அதைவிட்டுவிட்டு
இந்தியச் சுதந்திரம்தொட்டு
திட்டமிட்டு
இங்கே ஓர் இன அழிப்பை….
சொன்னால் கேவலம்,
சிறுபான்மையினரை
பெறும்பான்மையின் சிறுமதியாளர்கள்
அந்த அழிப்பை
விதவிதமான கோணங்களில்
‘ஜாம்ஜாம்’ என்று
நடத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

வறியவனை வலியவன்
பந்தாடுவது ஒன்றும் புதிதில்லை.
காலம் காலமாய்
உலகப் பக்கங்களில் அறியப்படும்
செய்திதான் அது.

அகண்ட பாரதமும்
ஆரிய வர்த்தனமும்தான்
இந்த மண்ணின் மேட்டுக் குடி
சூழ்ச்சியாளர்களின் கனவென்றால்…
தடையில்லை நிறைவேற்றிக் கொள்ளட்டும்.
சட்டங்கள் சங்கடப்படுத்தினால்
அவைகளை உடைத்தெறியட்டும்.
அல்லது
ஒற்றைக்காலில் நின்று/ யாகம் வளர்த்து
நிறைவேற்றிக் கொள்ளட்டும்.
அதற்கு…
இஸ்லாமியனை ஏன் காவு வாங்கவேண்டும்?
உங்களை தடுக்க முடியுமா?
அதற்கான சக்திதான் அவனிடம் உண்டா?

*

ஒரு கேள்வி…
சாணக்கிய வழிவந்த
இன்றைய ஆரிய வர்த்தன
தளகர்த்தர்களிடம்
ஒரே ஒரு கேள்வி.
உங்களது வியூகத்தின்படிக்கு
இந்த மண்ணில்
இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள்
இஸ்லாமியனும்/ கிறிஸ்துவனும்
இல்லாமல் போய்விடலாம்.
அடுத்து…
இன்றைக்கு நீங்கள்
‘பிராக்கெட்’டுக்குள் வைத்திருக்கும்
புத்திஸ்ட்டுக்களையும்/ஜைனர்களையும்/சீக்கியர்களையும்
முடித்துவிடுவீர்கள்.
அப்புறம்??????
கற்ற இன அழிப்பு
ரத்தத்தில் ஊறி அடுத்த காவு கேட்குமே…
அப்போது?
சொல்லுங்கள் ராஜாக்களே
அப்போது?????????
 
***

எச்சரிக்கை
——————-
‘முஸ்லிம்களைத் தாக்க சிலர் திட்டமிட்டுள்ளனர்; அவர்களுடன் ஆர்.எஸ்.எஸ்.ஸினர் சிலருக்கு தொடர்பு உண்டு’ என்று காட்டுகிற வகையில் சில ரகசிய வீடியோக்களை, ‘ஹெட்லைன்ஸ் டுடே’ டெலிவிஷன் சேனல் ஒளிப்பரப்பியது.

இதையடுத்து அந்த சேனலின் அலுவலகம் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறது. நூற்றுக் கணக்கானவர்கள்  ஆர்.எஸ்.எஸ்.ஸை  ஆதரிக்கிற ‘ப்ளாகட்’களை ஏந்தியவாறு, அந்த சேனலின் அலுவலகத்தில் புகுந்து, எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி, அராஜகம் புரிந்திருக்கின்றனர்.

‘ஹெட்லைன்ஸ் டுடே’ ஒளிபரப்பியதும், சுட்டிக் காட்டியதும், உண்மை விவரங்களா  அல்லது இவற்றில் எல்லாம் ஏதாவது தவறுகள் இருக்கின்றனவா என்பது இனிமேல்தான் தெரிய வேண்டும். அந்த சேனல் ஒளி பரப்பியது உண்மையே இல்லை என்று வைத்துக்கொண்டால் கூட, ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் செய்தது கண்டனத்திற்குரியதுதான். பொய்ச்செய்தி, அவதூறு, ஆகியவற்றை எதிர்க்க சட்ட ரீதியான வழிமுறைகள் உண்டு; அவற்றை எல்லாம் விட்டுவிட்டு, அராஜகத்தில் இறங்கிய கூட்டம், செய்தது குற்றம், அநாகரீகம்.

நன்றி : துக்ளக் , எச்சரிக்கைப் பகுதி/ ஜூலை,28.2010

***

குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ். – இன் பங்கு: வெளிச்சத்துக்கு வரும் புதிய ஆதாரங்கள்
(நன்றி : புதிய ஜனநாயகம் / தலையங்கம், ஆகஸ்ட்,2010)

மகாராஷ்டிராவில் மாலேகான், மத்தியப் பிரதேசத்தில் அஜ்மீர், ஆந்திராவில் ஹைதராபாத் மெக்கா மசூதி, கோவாவில் மார்காவோ ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் இந்து மதவெறி பயங்கரவாதிகளின் கைங்கர்யம் என்ற உண்மை அம்பலமாகி, இப்பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய ‘எழுச்சி கொண்ட இந்துக்கள்’ சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்குண்டு வெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சங்கப் பரிவார அமைப்புகளுக்கும் தொடர்பில்லை என காட்டிக்கொள்வதற்காக, இக்குற்றவாளிகள் தங்களைத் தனி அமைப்புகளாக – அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி என்ற பெயர்களில் அடையாளப்படுத்திக் கொண்டனர்.

எனினும், ‘ஹெட்லைன்ஸ் டுடே’ என்ற தனியார் ஆங்கிலத் தொலைக் காட்சி நிறுவனம், இக்குற்றவாளிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் இடையே நடந்த இரகசிய உரையாடல்களை ஒலி-ஒளி பரப்பியிருப்பதும்; இக்குண்டு வெடிப்புகளோடு தொடர்புடைய குற்றவாளிகள் தமக்குள் நடத்திய உரையாடல்கள் மற்றும் இக்குண்டு வெடிப்புகள் தொடர்பாக  போலிசாரிடம் உள்ள சாட்சியங்களை தெஹெல்கா இதழ் (31 ஜுலை, 2010) வெளியிட்டிருப்பதும் இக்குண்டு வெடிப்புகளை நடத்திய குற்றவாளிகளுக்கும்  ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும்  நேரடித் தொடர்பிருப்பதையும் வேறு பல பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்துவது பற்றி அவர்கள் விவாதித்திருப்பதையும் அம்பலப்படுத்தியுள்ளன.

‘ஹெட்லைன்ஸ் டுடே’ ஒளிப்பரப்பிய ஒளி – ஒலிப்பேழை ஒன்றில் மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தயானந்த பாண்டே என்ற இந்துச் சாமியார்,  இந்திய இந்திய ராணுவத்தின் லெப்டினெட் கர்னலாகப் பணியாற்றிக் கொண்டே  மாலேகன் குண்டு வெடிப்பை நடத்தியவரான புரோகித், ஆர்.எஸ்.எஸ்.-இன் தீவிர ஆதரவாளரும் பா.ஜ.க.- வின் முன்னாள் கிழக்கு தில்லி நாடாளுமன்ற உறுப்பினருமான பி.எல்.சர்மா ஆகிய மூவரும் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவது பற்றி  விவாதிக்கின்றனர். மற்றொரு ஒலிப்பேழையில், தயானந்த பாண்டேயும், ஆர்.பி.சிங் என்ற மருத்துவரும் துணை அரசுத்தலைவர் ஹமித் அன்சாரியைக் கொல்லும் திட்டம் பற்றி விவாதிக்கின்றனர்.

அத்தொலைக்காட்சி ஒலிபரப்பிய  இன்னொரு ஒலிப்பேழையில்,  அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில்  முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் காலஞ்சென்ற ஆர்.எஸ்.எஸ். ஊழியர் சுனில் ஜோஷி என்பவன், ஆர்.எஸ்.எஸ்.-இன் தேசியச் செயல் கமிட்டி உறுப்பினரான இந்திரேஷ் குமாரிடம் அக்குண்டு வெடிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து விளக்கியுள்ளான்.

துணை அரசுத்தலைவரை கொல்லத் திட்டம் போட்ட ஆர்.பி.சிங்கிற்கும் விஷ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்காலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதையும், மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய ‘அபிநவ் பாரத்’ அமைப்பிற்கும் புனேவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். -இன் உயர்மட்டத் தலைவர்களுள் ஒருவரான ஷியாம் ஆப்தேவிற்கு  இடையில்  நெருக்க மான உறவு இருந்து வந்ததையும்; விஷ்வ இந்து பரிஷத்தின் முக்கியத் தலைவரான பிரவீன் தொகாடியா அபிநவ் பாரத் அமைப்பிற்கு ஒரு இலட்ச ரூபாய் நன்கொடை அளித்திருப்பதையும் தெஹெல்கா இதழ் வெளியிட்டுள்ள ஒலிப்பேழை உரையாடல்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

இவை ஒரு புறமிருக்க, இந்தியா பாகிஸ்தான் இடையே சென்றுவரும் சம்ஜெனதா விரைவுத் தொடர்வண்டியில் நடந்த குண்டுவெடிப்பு கூட இந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலாக இருக்கும் என்றும்; சந்தீப் டாங்கே மற்றும் ராம்ஜி என்ற இரு ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களுக்கு இக்குண்டுவெடிப்பில் நேரடியாகத் தொடர்பிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். 

                                                                               
அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளியான தேவேந்திர குப்தாவிக்கு உத்திரப் பிரதேச  மாநிலத்திலுள்ள  கான்பூர் நகர ஆர்.எஸ்.எஸ். கிளைத் தலைவரான அசோக்வார் ஷ்னேயும், ஆர்.எஸ்.எஸ். இன் தேசிய செயல் கமிட்டி உறுப்பினரான அசோக் பேரியும்தான் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.  சங்கப் பரிவார அமைப்புகளுள் ஒன்றான பஜ்ரங்தள் சட்ட விரோதமாக குண்டு தயாரிக்கும் வேலைகளைச் செய்து வருவது கான்பூரிலும், நான்டேட்டிலும் நடந்த குண்டு வெடிப்புகளின் போதே அம்பலமாகியிருக்கிறது. 

மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய கும்பல்தான் மகாராஷ்டிராவிலுள்ள ஜல்னா, பர்பானி, நான்டேட் ஆகிய இடங்களிலும் குண்டு வெடிப்புகளை நடத்தியிருப்பதும் புலனாய்வில் நிரூபணமாகியுள்ளதால், அக்கும்பல் மீதான வழக்குகளை வழக்கமான இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்காமல், பொடாவுக்கு இணையான மகாராஷ்டிரா குற்றக் கும்பல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்குமாறு மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலில் பங்கு கொண்டு அதிகாரத்தைப் பிடித்து மேலிருந்து இந்து மதவெறித் திட்டங்களை நிறைவேற்ற பா.ஜ.க.; கீழிலிருந்து இந்து மதவெறித் திட்டங்களை நடைமுறைப்படுத்த பஜ்ரங்தள்,  விஷ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகளை இயக்கி வரும்  ஆர்.எஸ்.எஸ். நாடெங்கும் குண்டு வெடிப்புகளை நடத்துவதற்காகவே அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், போன்ற அமைப்புகளைத் தமது தலைவர்கள் மூலம் இரகசியமாக இயக்கி வருகிறது என்றுதான் இவ்வுண்மைகள் மூலம் முடிவுக்கு வர முடியும்.

எனினும் கடந்த பத்தாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.இன் ஆசீர்வாதத்தோடு நடந்துள்ள இக்குண்டு வெடிப்புகள் குறித்து போலீசார் ஒருங்கிணைந்த முறையில் விசாரணை நடத்த  மறுக்கிறார்கள். மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இந்து மதவெறியர்களை விசாரணை செய்தபோழுதே, அஜ்மீர், ஹைதராபாத் குண்டு வெடிப்புகளுக்கும் இந்து மதவெறி பயங்கரவாத அமைப்புகள்தான் காரணம் என்பது அம்பலமாகிவிட்டது. ஆனாலும், மிகத்தாமதமாகத்தான் அக்குண்டு வெடிப்புகளை நடத்திய சதிகாரர்கள் கைது செய்யப்பட்டனர். அதே சமயம், இக்குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரியாகக் கருதப்படும் ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த இராம்நாராயணன் கல்சங்கரா, சுவாமி அசிமானந்தா ஆகியோர் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்.

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியான சுனில்கோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டு விட்டான். குண்டுவெடிப்பு பற்றிய உண்மைகளை மூடிமறைப்பதற்காக ஆர். எஸ்.எஸ்.குண்டர்கள் அவனை கொன்றிருக்கலாம் எனப் பரவலாக நம்பப்படும் பொழுது, போலீசாரோ ‘சிமி’ அமைப்புதான் அக்கொலையைச் செய்ததாகக் கூறிவருகிறார்கள்.

சம்ஜெளதா விரைவுத் தொடர்வண்டியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை வேண்டுமென்றே தாமதப்படுகிறது. அபிநவ் பாரத் அமைப்போடு தொடர்பு வைத்துள்ள பல இராணுவ அதிகாரிகள், போலீசு அதிகாரிகள் பற்றிய விபரங்கள் புலன்விசாரணையில் அம்பலமானாலும் அவர்களுள் ஒருவர்கூட விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-ஐத் தொடர்பு படுத்தும் ஆதாரங்கள் கிடைத்தால், மத்தியப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த பார்ப்பன அதிகாரவர்க்கம் விசாரணையை அப்படியே அமுக்கிவிடுவதாக அம்பலப்படுத்தியிருக்கிறார், மகாராஷ்டிரா மாநில முன்னால் போலீசு தலைவர் எஸ்.எம்.முஷ்ரிஃப்.

இந்திய அரசு இந்துமதவெறி பாசத்தோடுதான் இருந்து வருகிறது என்பதற்கான ஆதாரங்கள் இவை. இந்தியாவில் குண்டுவெடிப்புகளை நடத்திவரும் முஸ்லீம் பயங்கரவாதிகளுக்குக் கிடைக்காத சாதகமான அம்சம் இது.

***

எழுத்து/வடிவம்/தட்டச்சு :  தாஜ் | satajdeen@gmail.com
15th Aug, 2010

***

நன்றி : தாஜ், துக்ளக், புதிய ஜனநாயகம்

2 பின்னூட்டங்கள்

  1. 17/08/2010 இல் 15:06

    Very good Thaj, எங்களைப் போன்ற பத்திரிக்கைப் படிக்க முடியாதவர்களுக்கு இதுபோன்ற செய்திகள் உதவியாக இருக்கின்றன. தேடிப்பிடித்து இன்னும் வெளியிடுங்கள்.

  2. 17/08/2010 இல் 17:18

    பாரதி ஒரு வேளை உயிருடன் இருந்திருந்தால் நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைந்து விட்டால் என அவர் ஆர்.எஸ்.ஸை நோக்கி பாடி இருப்பார். அவரை பரலோகம் அனுப்ப யானைக்கு வாய்ப்பிருந்திருக்காது.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s