இதுபோல் ‘தவறுகள்’ செய்க!

கவி கா.மு.ஷெரீப் சொன்னார்கள் அப்படி. யாரைப்பார்த்து? ஜபருல்லாவைப் பார்த்துதான். இம்மாதிரி ‘தவறுகளை’ அடிக்கடி செய்யவும்’ என்ற கடிதம் வேறு! அந்தக் கடிதத்தைப் பத்திரமாக வைத்திருக்கிறார் நானா. தனது ‘தவறுகளை’ என்னிடமும் மறைக்காமல் காண்பித்தார். அது ஒரு சிறுகதை. மணிவிளக்கு இதழில் (பிப்ரவரி 1986) வெளிவந்திருக்கிறது. ‘பிஞ்சு நெஞ்சத்திலிருந்து எழும் முதிர்ந்த கேள்விகளுக்குப் பதில் சொல்வது சிரமமான காரியம்தான்… மற்றவர் தவறுகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டே எத்தனை தவறுகளை நாம் செய்து கொண்டிருக்கிறோம்!‘ என்று அந்தக் கதைக்கு முன்குறிப்பு வழங்கியிருந்தார்கள்  ‘சிராஜுல் மில்லத்’ அப்துல் ஸமது சாஹிப் அவர்கள்.  சிறுகதையில் வரும் சிறுவன் வயசுக்கு மீறிப் பேசுகிறான் – ஜபருல்லா நானாவைப் போலவே! அதிலும் முடிவாக அவன் கேட்கும் கேள்வி , ஹா, அபாரம். இதுபோல் அனைவரும் ‘தவறுகள்’ செய்க!

*

தவறுகள்
இஜட். ஜபருல்லாஹ்

என்னெ யாருன்னு கேக்குறிங்களா…? நா இந்தவூரு மோதினார் மவனுங்க. சின்ன ஸ்கூல்லே அஞ்சாங் கிளாஸ் படிக்கிறேன். இந்த ஊரு நாட்டக்காரரு மவன் இஸ்மாயில், மெத்த வூட்டுக்காரர் மவன் அஷ்ரபு எல்லாரும் எங்கிளாஸ்தாங்க. ஆங்..இன்னொருத்தனெ மறந்துட்டனே..ஹமீது…அவனும் எங்கூடத்தாங்க படிக்கிறான். இவனோட வாப்பா சிங்கப்பூருலே இருந்தவங்களாம். எங்க வூருலேயே அவன் வூட்டுலேதாங்க டி.வி இருக்குது. வெதவெதமா  சட்டெ போட்டுக்கிட்டு வருவான் ஸ்கூலுக்கு. எனக்குக் கூட அவன் கலர் கலரா சட்டெ போட்டுக்கிட்டு வர்றதெ பாக்கும்போது ஆசையா இருக்கும். ஒரு நாளு வாப்பாகிட்ட கேட்டேன். அல்லா நெறயா தரட்டுண்டா வாங்கித் தர்ரேன்னாங்க, ஏங்க…அல்லா எப்பங்க தருவான்…?

எனக்கு இதெல்லாம் வருத்தம் இல்லேங்க. இந்த அஷ்ரபு, இஸ்மாயிலு எல்லாம் என்னெ வெளையாடவே சேத்துக்க மாட்டாங்க. நாங்கூட ஒரு நாளு கேட்டேன். ஏண்டா என்னெ மட்டும் சேத்துக்க மாட்டேங்கறீங்கண்ணு.. அதுக்கு அந்த இஸ்மாயீலு என்ன சொன்னான் தெரியுமா..? நான் லெப்பையாம். மோதினாரு மவனாம். எங்கூட வெளையாடினா அவன் வாப்பா அவனெ அடிப்பாங்களாம். ஏங்க லெப்பைன்னா என்னாங்க..? எனக்கு ஒண்ணும் புரியலே. சரிதாண்ணு வுட்டுட்டேன். என்னெகூட எங்க வாப்பாவும் உம்மாவும் பிலால்னு கூப்புடுவாங்க. நாட்டக்காராங்க எல்லாங்கூட ‘டேய் மோதீன் மவனே’ன்னுதாங்க கூப்புடுறாங்க.

அன்னக்கி ஒரு நாளு ஹமீது கூப்புட்டான்னு அவன் வூட்டுக்கு டி.வி பார்க்க போனேனா? அவங்க உம்மா என்ன சொன்னாங்க தெரியுமா? ‘ஏண்டா மோதின் மவனே ஒனக்குக்கூட டி.வி கேக்குதா?’ன்னாங்க. எல்லாரும் எங்கூடத்தானே படிக்கிறாங்க? நா  மட்டும் டி.வி பாக்கக்கூடாதா? அன்னக்கி சினிமா பாக்கவே எனக்கு புடிக்கலேங்க. பாதியிலேயே எந்திருச்சி வந்துட்டேன். இதெ வாப்பாகிட்டே வந்து சொன்னேன். நீ ஏண்டா அங்கே எல்லாம் போனேன்னு என்னெத்தான் அடிச்சாங்க. ஹமீது கூப்புட்டுதானே போனேன். நானாவா போனேன்னு கேட்கலாம்னு தோணுச்சு. கேட்டா இன்னும் அடிப்பாங்களோன்னு நெனெச்சு பேசாமெ இருந்துட்டேன்.

ஆனா எங்க ஹெட்மாஸ்டரு ரொம்ப நல்லவருங்க. எம்மேலே ரொம்ப பிரியமா இருப்பாரு. முஹம்மது பிலால்ன்னு முழுப் பேரையும் சொல்லிக் கூப்புடுவாரு. எல்லாரையும் வாடா போடான்னுக் கூப்புடுற அவரு என்னெ மட்டும் ‘இங்க வாங்க தம்பி’ன்னுதான் கூப்புடுவாரு. ஒருநாளு அவருகிட்டேயே கேட்டேன். ஏன் சார் என்னெ மட்டும் வாடான்னு கூப்புட மாட்டேங்கறீங்கண்ணு. ‘ஒங்க வாப்பா வச்சிருக்க்கிற பேருதான் காரணம்’னாரு. எம் பேரு ரொம்ப பெரிய பேராம். அதனாலெதான் யாருமே என்னெ பேரெச் சொல்லிக் கூப்புட மாட்டேங்ககருங்களோ என்னவோன்னு நெனெச்சுக்கிட்டேன்.

எங்க ஸ்கூல்லெ பெற்றோர்கள் தினவிழா நடந்துச்சே. ஒங்களுக்குத் தெரியுமா? வகுப்புலெ மொதமார்க்கு வாங்குனவன்னு எனக்கு ஹெட்மாஸ்டரு பேனா பரிசு கொடுத்தாரு. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. ரொம்ப ஒசத்தி பேனா! எனக்குக் கொடுத்த பேனா மாதிரிதான் ஹமீதும் வச்சிருக்கான். அவன் வாப்பா சிங்கப்பூருலேந்து அனுப்புனதாம். அன்னக்கி எல்லாரோட வாப்பாவும் வந்திருந்தாங்க. எல்லாரும் நாற்காலியிலே உக்காந்து இருந்தாங்க. எங்க வாப்பா மட்டும் ஓரமா நின்னுக்கிட்டே இருந்தாங்க. யாருமே அவங்களெ ஒக்காரச் சொல்லீங்க. ஹெட்மாஸ்டருதான் வாப்பா கிட்டெ வந்து ஒக்காரச் சொன்னாங்க. ஆனா வாப்பாதான் ஒக்கார மாட்டேன்னுட்டாங்க.; நாட்டக்காரங்க எல்லாம் ஒக்காந்து இருக்காங்களாம்! பெரிய மனுஷங்க முன்னாடி நாற்காலிலே உட்காருறது மரியாதெ இல்லெயா. ஏங்க நாட்டக்காரங்கள்ளாம் இருந்தா எங்க வாப்பா அவங்க முன்னாடி ஒக்காரக் கூடாதா..?

உம்… இன்னொண்ணு சொல்ல மறந்துட்டேனே. விழா ஆரம்பத்திலே நாந்தான் கிராஅத்து ஓதினேன்.. ஸ்கூல்லே எல்லா விழாவுலேயும் என்னெத்தான் ஓதச் சொல்லுவாங்க. ஏன்னு கேக்குறீங்களா..? மத்த யாருக்குமே ஓதவேத் தெரியாதே…? சின்ன வயசுலே ஓதிக்கலேண்ணா அல்லா அடிப்பாண்ணு எங்க உம்மா அடிக்கடி சொல்லும். ஏங்க அவங்களையெல்லாம் அல்லா அடிக்க மாட்டானா..?உம்மாதான் எனக்கு ஓதித் தந்தாங்க. நா இப்ப முப்பது ஜூஜ்ஜும் தடங்கலே இல்லாமே ஓதுவேனே!

எங்க ஊருலே யாரு வூட்டுலே கோழி வாங்கினாலும் எங்க வாப்பாவெத்தான் அறுக்கக் கூப்புடுவாங்க. ஆனா அறுக்கக் கூப்புடுறதோட சரி. ஒருதடவை கூட சாப்பிடக் கூப்பிட்டது கெடையாதுங்க. ஆனா, ஹெட்மாஸ்டரு மட்டும் ஒவ்வொரு பெருநாளைக்கும் என்னெயும் வாப்பாவெயும் அவரு வூட்டுக்குக் கூப்புட்டு சாப்புடச் சொல்வாரு. அது மட்டுமில்லே ஒரு டிபன் கேரியர்லே வச்சு எங்க வூட்டுக்கும் அனுப்புவாரு.. ஒரு தடவை வாப்பாகிட்டே கேட்டேன். நம்ம வூட்டுலெ கோழி ஆக்கினா என்னான்னு. ‘நம்ம வூட்டுலெ கோழி ஆக்கக்கூடாது. அது ஹராம்’ன்னு சொல்லிட்டாங்க. ஏங்க எங்க வூட்டுலெ மட்டும் கோழி ஆக்கினா ஹராமாங்க?

ஹஜ்ஜு பெருநா அன்னிக்குக் கூட எங்க வாப்பாதான் எல்லார் வூட்டுக்கும் போயி ஆடு அறுப்பாங்க. சில பேரு எங்க வூட்டுக்கும் கறி அனுப்புவாங்க. உம்மா அத சுட்டுக் கொடுக்கும். ஆனா ஹெட் மாஸ்டரு மட்டும் எப்போதும்போல எங்களெ வூட்டுக்குக் கூப்புட்டுப்போயி விருந்து கொடுப்பாரு. எங்க வூட்டுக்கும் அனுப்பிச்சுடுவாரு.

யாரெப்பாத்தாலும் .எங்க வாப்பாதான் மொதல்லே ஸலாம் சொல்லுவாங்க..ஆனா யாரும் பதில் சொல்றதே இல்லே, லேசா தலையெ ஆட்டிட்டு  போய்டுவாங்க. ஆனா ஹெட்மாஸ்டருக்கு மட்டும் எங்க வாப்பா ‘ஸலாம்’ சொல்ல முடியாது. ஏன்னா அவரு மொதல்லே ஸலாம் சொல்லிடுவாரு. எங்க  வாப்பா பதில் ஸலாம்தான் சொல்ல முடியும். ‘யாரு ஸலாம் சொன்னாலும் ஒடனே பதில் ஸலாம் சொல்லனும், இல்லேன்னா பாவம்’னு வாப்பா எங்கிட்டே நெறைய தரம் சொல்லியிருக்காங்க. எங்க வாப்பா ஸலாம் சொன்னா மட்டும் யாரும் பதில் சொல்ல மாட்டேங்கறாங்களே..! அவங்களுக்கு அது பாவம் இல்லெயாங்க..?

ஆனா ஒண்ணுங்க. எங்க வூர்லே யாரு மௌத்தாப்போனா மட்டும் எங்க வாப்பாவெத்தான் மொதல்லெ கூப்புட்டு அனுப்புவாங்க. இதுக்கு மட்டும் ஏன் ஒங்களெ முதல கூப்புடுறாங்கன்னு வாப்பாவைக் கேட்டேன். ‘மௌத்தாப் போனவங்களெ ஒழுங்க குளுப்பாட்டி சுத்தம் பண்ணி, நல்லதுணி உடுத்தி, அல்லாவோட ஒலகத்துக்கு அனுப்ப எனக்குத்தாண்டா தெரியும்’னு சொல்லிட்டாங்க…! ஏங்க , மௌத்தா போனதுக்கு அப்புறம் போறதுதான் அல்லாவோட உலகம்னா இது யாரோட உலகங்க..?

*

நன்றி : இஜட். ஜபருல்லாஹ்
தொலைபேசி : 0091 9842394119
முகவரி:
கவிஞர் இஜட். ஜபருல்லா
14, புதுமனைத் தெரு
நாகூர் – 611002

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s