தாய்லாந்து காடும் கஸ்தூரி ரசித்த கவிதைகளும் – தாஜ்

அன்புடன்…
ஆபிதீன்.

என் மெயில் பாக்ஸில்
வந்து குவியும் கடிதங்கள்
அநியாயத்திற்கு அதிகம்.
நாளும் குறைவதில்லை!
பெரும்பாலும் முகம் கண்டிராதவர்களின்
கடிதங்களே அதிகம்!
வேலை கேட்டு/ வேலைகளின் தகவலோடு/
சலாம் சொல்லி, உதவி கேட்டு/
FaceBook-இல் பதிய
புகைப்படம் வேண்டி/
இது புலிகளின் செய்தியாக்குமென
உரிமைப் பாராட்டி/
நாங்கள் புலி எதிர்ப்பாளர்கள்
காதை கொஞ்சம் கொடுங்களெனக் கெஞ்சி/
இலங்கை – முள்வேலி படுகொலைக்கு
கருணாநிதியே காரணமென சீறி/
புதிய வலைத்தளம் இது
வாசித்துப் பாருங்கள்…
ஆக்கங்களை அனுப்புங்கள் என
பலப் பல இப்படி!

சென்ற மாதத்தில்
வழக்கம் மாதிரி ஊர் பேர் தெரியாத
ஒரு அன்பர் மெயில் அனுப்பியிருந்தார்.
அதிர்ச்சியில் கொஞ்ச நேரம்
உறைந்து போனேன்.
தாய்லாந்தின்
ஏதோ ஒரு காட்டில்
நவநாகரீக ஆண்களும் பெண்களும்
மனிதனைக் கொன்று 
பகுதிப் பகுதியாக கழித்து
ப்ஃபே ரேஞ்சில்
வட்டமிட்டு நின்று
தீயில் தீய்த்து சுவைக்கின்றார்கள்.

ஆமாம் ஆபிதீன், மனிதக் கறி
அத்தனைக்கு சுவையானதா?
சுட்டுத் தீய்த்து சுவைத்து….
நாக்கில் எச்சி ஊர்கிறது இல்லே?!

இந்த ஈ-மெயிலில் வந்து சேரும்
இந்த மனிதக் கறி சுட்டுச் சுவைக்கும்
கண்றாவிகளைக் கூட சகித்துக் கொள்ளலாம்
‘எங்களுக்குத் தெரிந்த இஸ்லாமை
எத்தி வைக்கிறோம்’ என்று
அதிரை அன்பரும்
அத்திக்கடை நண்பரும்/
முதுவை சோதரரும்
தினம் பத்துத் தடவை
அனுப்பி வைக்கும்
இஸ்லாமியத் தகவல் மெயில்களை
சகித்துக் கொள்ளவே முடிவதில்லை.

இறைவனின் புதிய தூதர்கள் மாதிரி
இவர்கள் செயல்படும் வேகம்
அதிரவைக்கிறது.
இதிலே….
ஈ-மெயிலை அவர்கள்
‘மலக்குமார்கள்’ ரேஞ்சுக்கு
உயர்த்தி விட்டதுதான் வேடிக்கை.

‘போங்க போங்க போயி புள்ளைங்கள படிக்க வைங்க’ என்று
நீங்களும் முன்பு ஒரு பதிவு போட்ட ஞாபகம்…

பலமுறை நானும் அவர்களுக்கு எழுதிவிட்டேன்,
‘பாவம் நான்
சத்தியமாய் உங்கள் ஆளில்லை
தாடி முளைப்பதே கூட பிடிக்காதவன்
தயவு செய்து
என்னை மட்டுமாவது விட்டுவிடுங்கள்’ என்று.
அதுவும் கதறாத குறையாக
சொல்லியாகிவிட்டது.
விடுவேனா என்கிறார்கள்!
திரும்பவும் என்னை
இஸ்லாமியனாக மாற்றாதவரை
விடமாட்டார்கள் போல் தெரிகிறது.
அல்லாதான் அவர்களுக்கு புத்திய தரனும்.

சென்ற வாரத்தில்…
என் மெயில் பாக்ஸில்
கஸ்தூரி என்ற பெயரில் மெயில்!
(பெயர் நல்லாயிருக்குதில்ல?)
தென்றல் இப்பல்லாம்
ஈ-மெயில் வழியாகக் கூட
வீசும் போல் தெரிகிறது.
என்றாலும்…
கடிதத்தை வாசிக்கத் துவங்கிய போது….
சாரு நிவேதிதா வகையறாக்களுக்கு
அல்லவா இப்படியான கடிதங்கள் வரும்!
நமக்கு எப்படி?
முகவரி மாறிவிட்டதா? என்றே தோன்றியது.
வாசித்து முடித்த போது,
அது, எனக்கென்று எனக்கேயான
கடிதம் என்று உறுதிப்பட்டது.

அதில்…
அந்த வாசகி ரசித்த/ பத்திரப்படுத்திய
என் கவிதைகள் சிலவும் கூட இணைத்திருந்தார்!
காலத்தைத் தாண்டி(பல வருஷங்கள் கழித்தும்)
என் கவிதை பேசப்படுவது
நிஜத்தில் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

‘இதயம் நிறைந்த அன்பருக்கு
உங்கள் கவிதைகளை
வெகு காலமாய்
காதலித்து வருபவள் நான்.
இப்போதெல்லாம்
சிறு பத்திரிகைகளிலோ
வலைத் தளங்களிலோ
உங்கள் கவிதைகள் வாசிக்க
கிடைப்பதில்லை.
கவிதைப் தொகுப்பு எதையும்
நீங்கள் பதிப்பிப்பதும் கிடையாது.
இன்றைக்கு
எழுத்து என்று ஏதேதோ
எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள்.
அந்த அத்தனையும்
உங்களின் ஒரு கவிதைக்கு ஈடாகுமா?’
நான் ரசித்த உங்களது நான்கு கவிதைகளை
பின் தொடர்பாக இணைத்திருக்கிறேன்.
இதைவிடவா இனி எழுதிவிடப் போகின்றீர்கள்?
– என்றெழுதி
தொடர்ந்து என்னைக் கவிதைகள் எழுத
அன்போடு பணித்திருந்தார்.

கவிதைகள் எழுதி எழுதி
விண்டு போனவன் நான்.
அதனால்தான் என்னவோ
கவிதைத் தொகுப்பை வெளிக்கொண்டு வர
முயன்றதேயில்லை.
பொதுவில்,
இந்த மண்ணில்
கவிதைகள் படிக்க
நாதியில்லை என்பதுதான்
என்னளவில் நான் கணித்த உண்மை.

ஆபிதீன்…
நினைவிருக்கிறதா…
நான் முடங்காதிருக்க
உங்கள் சொல் கேட்டு
உரை நடைக்கு வந்தேன் என்பது!
இப்போது…
இன்றைக்கு இப்படியொரு கடிதம்!
இரண்டு நாட்களுக்கு முன் பேசிய
மஜீத் என்ற நண்பர் ஒருவர்
பதினைந்து வருடங்களுக்கு முந்தி
நான் எழுதி, அவர் ரசித்த கவிதை ஒன்றை
மனனமாய் ஒப்பிக்க துவங்கிவிட்டார்!
கவிதை தேடும் நெஞ்சங்கள்
இந்த மண்ணில்
இருக்கத்தான் செய்கிறதோ ஆபிதீன்?
 
கஸ்தூரி…
தன் சேமிப்பில் வைத்து
வாசித்து வாசித்து ரசிப்பதாக குறிப்பிட்ட
என்னுடைய
அந்த நான்கு கவிதைகளை
உங்கள் அனுமதியோடு
இங்கே வாசகர்களின்
பார்வைக்கும் வைக்கிறேன்.
தாஜ்

***
நேரம் கெட்ட நேரம்
—————————–

என் பயணங்களை
இரவில் தான் தேர்வு செய்கிறேன்
நீண்டதூரம் இருளில் பயணிப்பது
தவிர்க்க முடியாத அனுபவம்
சின்னச் சின்ன நட்சத்திரங்கள்
வெள்ளையாய் கண்சிமிட்டுகின்றன
முந்தாநாள் பார்த்த முழுநிலவு
இன்றைக்கு தேய்ந்து கொண்டிருக்கிறது
கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம்
கவிழ்ந்து கிடக்கிறது மையிருட்டு
இருள் பெருக்குமது சுகமானது
யாருக்கும் யார்முகமும் பிடிபடாது
இருளில் எல்லோருக்கும் உண்டு
இன்னொரு முகம்
தடங்கல்களுக்கும் பதற வேண்டியிராது
நித்திரை மனிதர்களோ
எதையும் அறியமாட்டார்கள்
வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி
என் வாகனம் விரைகிறது
எல்லோரும் கனவுகளில்
சஞ்சரிக்கும் நேரம்
மறுபடியும் பிறக்கலாம்
திரும்ப திரும்ப இறக்கலாம்
வானுக்கும் பூமிக்குமான வெளியில்
அத்தனையையும் நிம்மதியாக
நீண்டு போகம் செய்யலாம்
கலவியில் கசியும் பூரணம் உணர்ந்து
பூரித்துப் போகலாம்
தூங்கியவர்களும்
கனவுகளின் பக்கம் திரிந்தவர்களும்
புதிய விடியலில் அவரவர் திக்கில்
எழுந்து முந்தி விரைய
உறங்கநான் அமைதியானதோர்
இடம் தேடி அலையக்கூடும்.

***

வெள்ளை அறிக்கை
——————————
 
இயற்கையின் வீச்சு
மழுங்கி விட்டது.
பேரிடி மின்னலுக்குப் பிறகு
கொஞ்சம் மட்டும்.
பருவ மழை பொய்த்து விட்டது.

தூறலின் சாரலில்
புலன்கள் விழித்து
ஆனந்தம் பாடியதும்
மலர்களின் மகரந்தத்தில்
நீர் பட்டு
சிலிர்க்கக் கண்டதும்
கால்களை மழைநீரில்
நனைய விட்டு
விளையாடியதும்
கெட்டிமேளத்தோடு கைகோர்த்த
அடைமழை காலத்தில்
தொப்பமாய் நனைந்து கிடந்ததும்
ஞாபகத்தில் இனிக்கிறது.

***

தேடல்
———-

கற்றுத் தந்த காலம்
வானவீதியை காட்ட
பறப்பதில் இருப்பு
உச்சமென
சிலிர்த்தது ஞானம்.
மன புத்தன்
சிரிப்பை கிழித்து
பறந்த க்ஷணம்
அந்தரத்தில் 
நிழல் தொலைந்தது
முதலில்!

***

பிழை
——–

மோசமான கவிதையிது
பிரசுரத்திற்கு உதவாது.
அடித்தல் திருத்தலாய்
கறுப்பு மை மொழுகலாய்
எழுதும்போதே தெரிகிறது
எல்லாம் காலத்தின் விரயம்.
கற்றுத் தந்த காலமே
காற்றின் சுழிப்பில்
அபகரித்து விடலாம்.
நானேகூட செய்யலாம்தான்
கிழித்து வீசிவிட நாழியாகாது
அத்தனைக்கு கேவலாமாயிது.
படிக்கக் கிடைத்தவர்கள்தான்
சொல்லனும்
எனக்கிது வாழ்க்கை
பிறருக்கது நான்.

***

நன்றி : தாஜ் / தமிழ்ப்பூக்கள் | E-Mail : satajdeen@gmail.com

5 பின்னூட்டங்கள்

 1. 09/08/2010 இல் 06:31

  //இந்த ஈ-மெயிலில் வந்து சேரும்
  இந்த மனிதக் கறி சுட்டுச் சுவைக்கும்
  கண்றாவிகளைக் கூட சகித்துக் கொள்ளலாம்
  ‘எங்களுக்குத் தெரிந்த இஸ்லாமை
  எத்தி வைக்கிறோம்’ என்று
  அதிரை அன்பரும்
  அத்திக்கடை நண்பரும்/
  முதுவை சோதரரும்
  தினம் பத்துத் தடவை
  அனுப்பி வைக்கும்
  இஸ்லாமியத் தகவல் மெயில்களை
  சகித்துக் கொள்ளவே முடிவதில்லை.//

  -சொச்சத்த படிப்பதற்க முன்பு இதற்கு ஒரு ஓ….
  என் இனமடா நீ.. (இம்சை வடிவேலு குரலில் வாசிக்கவும்.)…
  ஆமா எத்தி வைக்கிறேன்னு இஸ்லாமையே ஒத்தி வச்சிடுவான்னுவ போலிருக்கு.. தொல்ல தாங்க முடியலடா சாமீ…

 2. 09/08/2010 இல் 06:39

  ஆமாங்க எவனும் ஜக்காத் அனுப்ப மாடடங்குறான்.. ஜக்காத்து கால்குலெட்டர் எக்சல் சீட்டா அனுப்புறானுவ…

 3. மஜீத் said,

  09/08/2010 இல் 20:14

  விரைப்பு ஊக்க (erection enhancing)மாத்திரை விற்பவர்கள் ஒருபக்கம் ஆடித்தள்ளுபடி தாராளமாய் அள்ளித்தருகிறார்கள். இவர்களுக்கும் தங்கள் இமெயில் முகவரி தந்துவிடவா தாஜ் அவர்களே?

 4. Taj said,

  11/08/2010 இல் 05:16

  நட்புடன்….
  ஜமாலன்/ மஜீத்/ஆபி..
  என்றுமான நன்றியோடு
  உங்கள்
  – தாஜ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s