கவிஞர் இஜட். ஜபருல்லாவின் ‘இன்ஷா அல்லாஹ்!‘ கவிதையை முன்வைத்து நடந்த விவாதத்தில் சகோதரர் அப்துல்லா நீண்ட பின்னூட்டமிட்டிருந்தார். அவருக்கான நாகூர் ரூமியின் பதில் அங்கேயே இடம் பெற்றிருந்தாலும் ‘தனியாகவும் பதியவும்’ என்று ரூமி கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தப் பதிவு. பிராமிஸ், அடுத்த பதிவு இலக்கியம்தான் (தாஜ் கவனிக்கவும்) !
குறிப்பு : பதிந்ததும் , கொஞ்சம் எடிட் செய்து திரும்பவும் அனுப்பி ‘இப்போ திருப்பி போடும் (போடும்டு உம்மட்ட சொல்றதுக்கு ரொம்ப யோசனையா வேறு இருக்கு!)’ என்றார் ரூமி. போட்டுட்டேன்.
**
அன்பார்ந்த சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். சகோ அப்துல்லாஹ் நீண்ட ஹதீதுக்ளை மேற்கோள் காட்டி சகோ பிஜே-யின் வாதம் சரி என்று சொல்ல வருகிறார். நான் மௌனம் காத்திருப்பதும் அதற்காகத்தான். சகோ பிஜே ஆறு மாதம் கழித்து தன் ஆராய்ச்சிகளின் முடிவுகளை வெளியிடுவாரல்லவா? அப்போது நான் என் வலைத்தளத்தில் அதை மறு பதிவிட்டு அதற்கு பதில் சொல்லலாம் — எனக்குத் தெரிந்த வரையில் — என்று காத்திருக்கிறேன்.
என்றாலும், சில குறிப்புகளைத் தருகிறேன். முஸ்லிம்களுக்கு என்னுடைய ஆத்மார்த்தமான வேண்டுகோள் ஒன்றுதான்:
தயவு செய்து சொந்தமாகச் சிந்தியுங்கள்.
உதாரணமாக, நம்மையே எடுத்துக் கொள்வோம். நமக்கு உருவமும் உடலும் இருக்கிறது. அதாவது நமக்கு ஒரு ஆரம்பமும் (தலை) முடிவும் (கால்) உள்ளது. பிறப்பும் இறப்பும் என்றுகூட வைத்துக் கொள்ளலாம். நாம் தேவையுள்ளவர்கள். ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் தேவையற்றவன். அல்லாஹுஸ் ஸமத் என்ற வசனத்தின் (112:02) பொருளும் அதையே சுட்டுகிறது. ஸமத் என்ற சொல்லுக்கு அரபியில் அனேக அர்த்தங்கள் உண்டு. எல்லா அர்த்தங்களும் தேவையற்றவன், நித்தியன் என்ற பொருளில் கொண்டுபோய் விடுகின்றன.
அல்லாஹ்வுக்கு ஒரு உருவம், நாம் மறுமையில் பார்க்கக் கூடிய ஒரு உருவம் என்றே வைத்துக் கொள்வோம், உண்டு என்றால், அவன் ஆரம்பமும் முடிவும் உள்ளவனாக ஆகிவிடுகின்றானல்லவா? உருவம் என்ற ஒன்று அவனுக்குத் தேவையாகிவிடுகிறதல்லவா?
அப்படியானால் அவன் தேவையற்றவன், மனிதர்கள்தான் தங்களுடைய தேவைகளை அவனிடம் கேட்டுப் பெற வேண்டும் என்பது பொய்யாகிவிடுமல்லவா?
அப்படியானால் பெருமானார் சொன்ன ஹதீதுகளின் பொருள் என்ன?
அவைகள் ரொம்ப எளிமையானவை. மிகமிக எளிமையான மக்களுக்காகப் பேசப்பட்டவை. குழந்தைக்கு நிலாச்சோறு ஊட்டிய தாயின் வார்த்தைகளைப் போன்றவை அவை.
கேட்கின்ற மக்களின் அறிவுக்குத் தக்கவாறுதான் பெருமானார் பேசுவார்கள் என்பது ஹதீதுகளை ஊன்றிப் படிப்பவர்களுக்குப் புரியும்.
எனவே, சுருக்கமாகச் சொல்வதானால், குர்’ஆனில், ஹதீதில் வருபவற்றிற்கெல்லாம் பொருள் அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது. பல இடங்களில் விளக்கங்கள் தேவைப்படுகின்றன.
எல்லா இடங்களிலலும் சிந்திக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அந்த கடமையைச் செய்வதற்காக நாம் மானசீகமாக சிலரை நியமித்துவிட்டு,அவர்கள் சொல்வதே வேதவாக்கு என்று எண்ணிவிடுவதால்தான் நமக்குள் பிரச்சனைகள் வருகின்றன.
சகோதரர்களே, நான் சொல்வதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஆனால் சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதல் — ஹிதாயத் — உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். அப்போது யாரும் சொல்லாமலே திருமறையின் அர்த்தங்களும், ஹதீதுகளின் விளக்கமும் உங்களுக்குப் புரியலாம்.
எது எப்படி இருப்பினும், ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம். யூதர்கள் ஆரம்பத்தில் தொழுது கொண்டிருந்த பைத்துல் முகத்தஸை நோக்கியே முஸ்லிம்களும் தொழுது வந்தார்கள். (உத்தரவுப்படி). பின்னர் க’அபாவை நோக்கித் தொழும்படி உத்தரவு வந்தது. நாம் முஸ்லிம்கள் என்பதை எல்லா வகையிலும் நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டிய அவசியத்தை இறைவன் அப்போதே உணர்த்திவிட்டான். இது அடிப்படை.
அப்படி இருக்கும்போது, இறைவனுக்கு உருவம் உண்டு என்று சொல்லும் மற்ற மதத்தவரின் நம்பிக்கயைப் போன்றதுதான் நமதும் என்று சொல்வது, அதற்கு ‘ஆதாரமாக’ குர்’ஆனையும் ஹதீதுகளையும் காட்டுவது / புரிந்து கொள்வது என்று சொன்னால், அது எங்கே போய் முடியுமென்பதைக் கொஞ்சம் சிந்தியுங்கள்.
பெருமானாரின் 23 ஆண்டுகால தூதுத்துவ வாழ்வையும் இப்படிப்பட்ட விளக்கங்களால் கேள்விக்கு உள்ளாக்கி விடுகின்றீர்கள்.
அப்படியானால், மேலே கூறப்பட்டது போன்ற ஹதீதுகளின் உண்மையான பொருள் வேறாக இருக்கலாம் என்றாவது புரிந்து கொள்வது அறிவுடைமையாகும்.
சிந்தியுங்கள்.
அன்புடன், மிகுந்த வருத்தத்துடன்
நாகூர் ரூமி
மு மாலிக் said,
07/08/2010 இல் 10:21
“வெளி” (space) எனப்படுவதில் எல்லைகளைப் (boundaries) பெற்று “உருவம்” (shape of an object) என்ற ஒன்று அமைய வேண்டும். ஒரு உருவத்தின் எல்லைகளை உணரும் செயலானது நிச்சயமாக ஒரு கால இடைவெளியில் (over a span of time) நிகழும் செயல். “வெளி”யில் எல்லைகளை வகுத்துவிட்டு காலத்தினைத் தொடர்பு படுத்தாமல் இருக்கவே முடியாது என்பது அடிப்படை இயற்பியல் நியதி.
உருவத்திற்குள் அடைபடும் இறைவன், காலத்தின் பக்கம் தேவையற்றவனாக இருக்க முடியாது.
ஹமீது ஜாஃபர் said,
07/08/2010 இல் 14:41
நான் எப்பொதும் ‘லேட்’. இப்போதுதான் (ist 19.30) பார்த்தேன்.
எல்லா மதங்களும் இறைவனை உருவமில்லாதவன் என்றுதான் சொல்கிறது ஆனால் இந்து மதம் ஒருபடி மேலாகச் சென்று “அருவ நிலைக்கும் அப்பாற்பட்டவன்” என்று சொல்கிறது. ஆனால் அவைகள் மறைத்துவிட்டன, இஸ்லாம் வெளிப்படையாக, உறுதியாகச் சொல்கிறது.
காலம், எல்லை, பரிணாமம், பரிமாணம், அறிவு, சிந்தனை, எண்ணம் இவைகளுக்கெல்லாம் கட்டுப்படாத, கட்டுப்படுத்த முடியாத, அளவிடமுடியாத ஒப்புவமைக் கூறமுடியாத ஓர் மாபெரும் சக்தி (வேறு வார்த்தை இல்லாததினால் சக்தி என்று குறிப்பிடவேண்டியிருக்கிறது) இறைவன்.
“அவன்” என்ற சொல்லுக்கு பன்மை கிடையாது; உயர்திணையைச் சார்ந்தது. இது தமிழின் தனிச்சிறப்பு. எனவே அவன் என்று குறிப்பிடுகிறோம். இதனை உணராத அறிவின் சிகரங்கள் என்று தன்னைத்தானே நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்குப் இதெல்லாம் புரியாது. புரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று “மின்னல் ஹபீபு” மட்டும்தான். அதற்குத்தானே பேயும் இறங்கும். அதனால்தான் எதையாவது சொல்லி காசாக்குகிறார்கள்.
இதற்குதான் அப்போதே சொன்னார் எங்கள் Z.ஜஃபருல்லாஹ் நானா
“இறைவா….
நான் உனக்குப் பயப்படுவதில்லை
காரணம்
நீ அளவற்ற கருணையாளன்.!
நான் பயப்படுவதெல்லாம்
அந்த
சபிக்கப்பட்ட ஷைத்தானுக்குத்தான்..!”
இப்போது சொல்லுங்கள் யாருக்கு பயப்படவேண்டுமென்று? உருவமற்ற அல்லாஹ்வுக்கா? இல்லை ஊலகில் திரியும் உருவமுள்ள ஷைத்தானுக்கா?
Mohamed Ismail said,
08/08/2010 இல் 04:28
நான், உங்களின் ஜிமெயில் ஐடிக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தேன். தராவீஹ் பற்றி உங்கள் பதிவில் நீங்கள் எழுதியிருந்ததை அனுப்பி வைக்கும் படி.. கிடைக்குமா? என் பதிவில் வெளியிடுவதற்கு
ஒ.நூருல் அமீன் said,
09/08/2010 இல் 19:32
“இடங்களின் தேவை இறைவனுக்கு இல்லை” என ஒரு இடுகையை என் வலைத் தளத்தில் பதிந்திருந்தேன். பதில் சொல்வதாக கூறி ஒரு மாதம் யோசிதத ஒரு நண்பர் ” இறைவனுக்கு உருவமுண்டு” என ஒரு மின்னஞ்சலை எனக்கும், எனக்கு பழக்கமான பலருக்கும் அனுப்பினார்.
துபாயில் வெயில் ஒரு வாரமா ஜாஸ்தியா இருக்குள்ளே என்றார் அவர் மின்னஞ்சலை படித்த நண்பர் ஒருவர். உங்கள் பதில் அருமை.
raeesudeen said,
09/08/2010 இல் 20:40
Allahuvai Nam Tamilil Avan entru alipathu athu orumai panmai illai enpatharkaha anal avan entru nam eppadi mudiyu saivahu ean entral avan entral tamili oru anai kurikum sol appo iraivan oru ana allathu oru penna? nam eaan avan entru aanuku solla kudiya sollai sollukirom?
nagoorumi said,
12/08/2010 இல் 19:09
அது என்று சொல்ல முடியாதல்லவா? ஏதாவது சொல்ல வேண்டுமே.. அல்லாஹ் என்று எப்போதுமே சொல்லிக் கொண்டிருக்க முடியாதபோது சுருக்கமாக அவன் என்று சொல்கிறோம். அதில் தவறு இல்லை. ஏனென்றால், அது ஆண் பாலையும் குறிக்கும் பெண் பாலையும் குறிக்கும். மனிதன் என்பது ஆண்பால்தான். ஆனால் அது ஆணையும் பெண்ணையும் குறிப்பதுபோல. இதெல்லாம் மொழியின் வளர்ச்சியில், இலக்கணத்தில் உள்ளது. உர்து மொழியில் நிலவு, சூரியன் இதற்கெல்லாம் கூட ஆண் பால், பெண் பால் உள்ளது. அப்படியானால் அது உண்மையா? அது போலத்தான் இதுவும். மற்றபடி ‘அல்லாஹ்’ என்ற சொல்லுக்கு அரபியில் பாலோ, ஒருமை பன்மையோகூட கிடையாது.