முன்பு நான் ரொம்பவும் சிலாகித்திருந்த ‘காசிம்பீ பாய்முடைஞ்சா’ பாடலை எழுதியவர் கவிஞர் தக்கலை ஹலீமா என்று தெரிந்து கொண்டேன். பின்னூட்டத்தில் அந்த தகவலைச் சொல்லியவர்களுக்கு நன்றி. கூடவே அவர்கள் ஹலீமாவின் கவிதை ஒன்றையும் இணைத்திருக்கலாம். சரி, ஹலீமாவின் மின்னஞ்சலை தொடர்புகொண்டு அந்த ‘மௌவ்வல்’, மன்னிக்கவும், ‘அவ்வல்’ கேசட்டை அனுப்பச் சொன்னேன். இதுவரை பதிலில்லை. எனவே ‘காணாமல் போன ஒட்டகம்’ தொகுப்பிலிருந்து அவருடைய பாடல் ஒன்றை இங்கே பதிகிறேன். வாழ்க்கையின் வேட்கையே வாருங்கடி…!
*
எட்டும் அறிவினில்…
தக்கலை ஹலீமா
பெண்ணுக்குள் ஞானத்தின் திறனையே வைத்தான்
அன்னை நம் ஆயிஷா சாட்சியடி
விண்ணுக்கும் சாடிய வீரத்தின் வாரிசே
விரிகின்ற ஞானத்தைத் தேடிப்படி.
அறிவினைத் தேடிட ஆணுக்கும் பெண்ணுக்கும்
சரிசம உரிமையைத் தந்தார் நபி
கறிபுளி சமையல்கள் காரியம் கிடக்கட்டும்
கைகளில் புத்தகம் ஏந்திப்படி.
‘றாபியத் துல்பஸ்ரி’ போலொரு சூரியன்
தோன்றிய துன்குலம் சொல்லிப்படி
காரியம் எல்லாமே கைகூடி வரவேண்டும்
காலத்தின் ஏக்கத்தை எண்ணிப்படி.
கல்வியில்லாத பெண் களர்நிலம் என்றானே
சொல்லிலே சூடுள்ள புரட்சிக்கவி
நெல்லிலே மணியின்றி போனால் நிலையென்ன
நிறையுமா களஞ்சியம் படித்துக்குவி.
சீனத்தில் சென்றேனும் சீர்கல்வி கற்றிட
செப்பிடும் நபிமொழி கேட்டுப்படி
வானத்துச் சூரியன் வசப்படும் நிச்சயம்
வாழ்க்கையின் வேட்கையே வாருங்கடி.
*
நன்றி : தக்கலை ஹலீமா, I.C.O. அறக்கட்டளை
*
Thakkalai Haleema’s E- Mail : thuckalayhaleema@gmail.com
ஒ.நூருல் அமீன் said,
24/07/2010 இல் 18:48
எளிமையும் நெஞ்சை மயக்கும் ரிதமும் குற்றால அருவி போல் கொட்டுகிறது கவிதை.