கூத்தாநல்லூர் சாபு வீட்டு கோணிகிராப் பொட்டி

முந்தைய லிஸ்டில் அந்த ’78 RPM ரிக்கார்டு’ மட்டும் தடிமனாக இருந்தது. கவனித்தீர்களா? அது சகோதரர் சடையன் அமானுல்லாவின் எழுத்துத் திறனை இங்கே சொல்வதற்குத்தான்!  இப்போது ‘சமநிலைச் சமுதாயம்’ இதழில் அவர் பணியாற்றுவதாக அறிகிறேன். நல்லது. ‘லிஸ்ட்’  வெளியான அடுத்த சில மணி நேரத்தில் தங்கள் வீட்டு ‘பொட்டி’ பற்றி அவர் எழுதியதை  கீழே தந்திருக்கிறேன். (வேர்ட்பிரஸ் இன்று ரொம்பவும் உதைக்கிறது. உடைந்த பத்திகளை ஒட்டவைத்துப் படியுங்கள். ) நன்றி.

*

கோணிகிராப் பொட்டி

ஊரில் ‘மொதமொதக்கா நம்பூட்டுக்குத்தான் ‘கோணிகிராப் பொட்டி’
வந்ததென பாட்டி மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லி மகிழ்வாள். அந்த ‘கோணிகிராப்’ பொட்டியில் நானே அதிகதிகமாக பாட்டு, கதை வசனம் கேட்டிருக்கிறேன். வீரபாண்டிய கட்ட பொம்மன் கதை வசனம்,  மனோகரா கதை வசனம், சிட்டுக் குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? பாடல், அவள் செந்தமிழ்த் தேன் மொழியாள். பாடல் நாகூர் ஹனீபா காலத்திற்கு முந்தைய
அல்லது சம காலத்து பாடகர் கலிபுல்லாவின், ‘பூரண சந்திரன் போலவே பேரொளி எங்கும் வீசவே பார் மீதே தோன்றினார்.. யா ரசூலுல்லாஹ்’ போன்ற இசைத்தட்டுக்கள் பல கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் ஊரில் தாத்தா வீட்டிற்கு சென்றிருந்த போது மாமி(அத்தை)யிடம் ‘அதெல்லாம் என்னவாயிற்று’ எனக்கேட்டபோது, ‘ஒடஞ்சது பாதி ஒடெயாதது பாதியாக எல்லாம் பரண் மேல் கெடக்கிறதென்றார்கள். ‘பார்க்கவேண்டுமே’ என்றேன். அதெல்லாம் ‘ஒனெக்கெதுக்குப்பா இப்போ’ என மறுத்த போது, ‘இல்லை அவசியம் பார்க்க வேண்டுமென ஆயத்தமான போது, விட்டால் மருமகனே பரணில் ஏறி விடுவானோ என்ற பயத்தில், ‘சரி சரி வேலைக்காரன் வரட்டும் எடுத்துத் தரச் சொல்கிறேன் என்பதையும்
பொருட்படுத்தாது கைலியை வரிந்து கட்டிக் கொண்டு ஏணி மேல் ஏறிவிட்டேன்.

பரண் என்றுதான் பேர் இது போன்ற இடத்தை பம்பாயில் வாடகைக்கு விட்டால் பல லட்சம் மாத வாடகையே கிடைக்கும். பார்வையை சுழல விட்ட போது, நடை வண்டி, மூணுகால் சைக்கிள், பழைய லாந்தர் விளக்குகள், பெரிய பெரிய
வெங்கல பூஜாடிகள். ரசம் போன நிலைக் கண்ணாடிகள், ஊஞ்சல்கள், சைஸ்வாரியாக ட்ரன்க் பெட்டிகள், படிக்கல், தராசு, மரக்கால், முக்காலி இப்படி பல வகைகள். பெட்டி பெட்டியாக திறந்து பார்த்ததில், ஜரிகை மாலைகள், கம்பியில் கோக்கப் பட்ட “பொத்த காசு” எல்லாம் கிடைத்ததே தவிர கோணிகிராப் பெட்டியும் இசைத் தட்டுகளும் கிடைக்க வில்லை. கடைசியாக இருந்த ஓர் பெட்டியில் அந்த கோணிகிராப்பும், இசைத்தட்டுகளும்
கிடந்தது. வேலைக்காரனை விட்டு கோணிகிராப்பை எடுத்துக் கொள்ளலாம் எனவென்னி, இசைதட்டுகளை மட்டும் எடுக்க முற்பட்டபோது, சில புத்தகங்களும் தென்பட்டது. எல்லாம் இஸ்லாமிய புத்தகங்கள். அடுத்து பாதி கரையானால்
அரிக்கப்பட்ட ஒரு பொத்தகம். அது ‘மணிக்கொடி’ கையில் தூக்கிய போதே பொல பொலவென பொத்தகம் கொட்டி விட்டது. மிஞ்சிய இரு பக்கத்தில் ஒரு கதை ‘ முதலைச்சட்டை” என்ற பெரிய் எழுத்து விக்கிரமாதித்தன் சைசில் அதுவும் பாதிப்பக்கத்தில், மீதி இடத்தை ‘ சனடோஜன்’ மாத்திரை விளம்பரம் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. மணிக்கொடி படிக்க கொடுப்பினை இல்லை.

இப்போது ‘பிட்சா” வைத்து தருகிறார்களே அம்மாதிரி சதுரமான சிவப்பு அட்டைப்பெட்டியில் இசைத்தட்டுகள் இருந்தன. கையிலே அள்ளிக் கொண்டு ஏணியருகே வந்திருப்பேன். மணிக்கட்டிலே சுளீரென்ற ஒரு வலி . வலி தாங்க முடியாமல் பெட்டியை நழுவ விட்டதில் இசைத்தட்டுகள் கீழே விழுந்து சுக்கு நூறாகியது. பெட்டியிலிருந்து பெரிய தேள் ஒன்று ஓடி மறைய இடம் தேடிக்
கொண்டிருந்தது.

எப்படியோ வலியைத் தாங்கிக் கொண்டு பரனிலிருந்து இறங்கி விட்டேன். ஆளாளுக்கு வைத்தியம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதிலொன்று, கிராமபோன இசைத்தட்டை ‘உரைத்து’ கொட்டு வாயில் தடவினால் வலி போய்விடுமாம். உடைந்த தட்டை எடுத்து அம்மிக்கல்லில் உரைக்க ஆரம்பித்து
விட்டாள் ஒரு வேலைக்காரி.

‘அதெல்லாம் சரி வராது மாப்ளே, இப்ப பாருங்க வலி பறந்தோடி விடும்’ என ஒரு சொந்தக்காரர், சைக்கிளை எடுத்து வந்து நிப்பாட்டி, அருகே வாளி நிறைய தண்ணீரை வைத்து, சைக்கிள் ‘டைனமோ’ விற்கு செல்லும் ஒயரை பிரித்து வாளித்தண்ணீரில் விட்டு,’ மாப்ளே கையை வாளியில் விடுங்கள்’ எனச் சொல்லி சைக்கிள் வீலை சர் சர்ரென்று சுற்றினார்.டைனமோவின்
மின்சாரம் தண்ணீரில் பாய்ந்ததும், விர்ரென்று மின்சாரம் கையில்
தாக்கியதில் வலி தெரியவில்லை, ஆனால் கையை வாளியிலிருந்து வெளியில் எடுத்தால் பழையபடி வலி. இதற்கிடையில், மாமி அவரைப் பார்த்து , “ஏண்டா உனக்கு கூறு மாறியாப் போச்சு கரண்ட்ல் கையை வுட்டா, ரத்தம் சுண்டிப்
போயிடுங்ற புத்தி தெரியாமப் போச்சே உனக்கு, போடா போய்
பள்ளிவாசல்லேருந்து லெப்பையை கூட்டி வா, அவர் வந்து ஓதி ஊதினால் எல்லாம் சரியாப் போயிடும் என” விரட்டினாள்.

இதற்கிடையில் நாட்டுவைத்தியருக்கு ஆள்விட்டு அவரும் வந்து விட்டார். கொட்டிய இடத்தை கையால் தடவி, நாடியையையும் பிடித்து பார்த்து விட்டு, ‘செனைத்தேள்’ ( வயிற்றில் குஞ்சுள்ள) கொட்டியிருக்கிறது, விஷம் அதிகம். சூரணம் தருகிறேன், மூன்று நாள் மூன்று வேளை சாப்பிட்டால், விஷம் இறங்கி
விடும் என சூரணத்தை சீனி, மிளகு இரண்டிலும் கலந்து பொடியாக்கி சாப்பிட வைத்து , அவர் கிளம்பும் போது சூரணம் சாப்பிடும் மூன்று நாளைக்கும் கருவாடு, மீன், கத்த்ரிக்காய் சாப்பிடக் கூடாது என கண்டிப்பாக சொல்லிப்
போய்விட்டார். ( ஊரில் நாட்டு மீன் சாப்பிடும் ஆசையிலும் மண்) நேரம் ஆக ஆக வியர்த்துக் கொட்டியது. சரிப்பட்டு வராது எனத் தெரிந்து, டாக்டரைப் பார்க்கக் கிளம்பி விட்டேன். டாக்டரிடம் ஊசி போட்டுக் கொண்டு வந்த பிறகே வலி கொஞ்சம் குறைந்த மாதிரி ஓர் பிரமை. கீழே விழுந்து உடைந்த கிராமபோன் இசைத்தட்டை கையிலெடுத்து பார்த்தேன். ‘வீரபாண்டிய கட்டபொம்மன் – கதை வசனம் 3ம் பாகம் ‘ என எழுதியிருந்த்தது.

இது நடந்த மூன்றாம் நாள் சென்னைக்குப் புறப்பட்டு வந்து விட்டேன். ஒரு வாரம் கழித்து, வீட்டுக்காரி, ‘ஏங்க… பீச்சுக்கு போயிட்டு வரலாமா?’ எனக் கேட்டாள். நான் கூப்பிடும் போதல்லாம் முகத்தைச் சுளிப்பவள், வலிய
வந்து கூப்பிடுகிறாளே என்ன வில்லங்கமோ தெரியவில்லை, ஏனென்று கேட்டு வைத்தேன். ” சும்மா போய்ட்டு அப்படியே வரும்போது மீன் வாங்கி வரலமென்றாள்” . மீனுக்குத்தான் தூண்டில் போடுவார்கள், இவள் மீனைச்சொல்லி
நமக்கு தூண்டில் போடுகிறாளே என மனதிற்குள் சொல்லிக் கொண்டு தம்பதி சமேதராக பீச்சிற்கு புறப்பட்டோம்.

பீச்சிலே உட்கார்ந்து பேசிமுடித்து கிளம்பும் நேரத்தில் ‘மசக்கைக்காரிக்கு’ ஆசை வருவது போல் சுண்டல் சாப்பிடலாமே என்றாள். வழக்கம்போல தலையாட்டி விட்டு சுண்டல்காரனைத் தேடிச் சென்றபோது, நடைபாதை கடையொன்றில் நல்ல
கூட்டம், இருவருமாகவே எட்டிப் பார்த்தோம்.

கடைபோட்டிருந்தவர், காடாவிளக்கு உஷ்ணத்தில் பழைய கிராமபோன் இசைதட்டை காட்டி கையாலெயே வளைத்து நெளித்து, பல வடிவங்களில் அழகான தட்டைகள உருவாக்கி அதற்கு பலவண்ணம் தீட்டி காசாக்கிக் கொண்டிருந்தார்.
சாப்பாட்டு மேசையில் வைக்க நமக்கும் நாலு தட்டை வேண்டும் என வீட்டுக்காரி கேட்க, கடைக்காரர் அங்கு அடுக்கி வைக்கப் பட்டிருந்த இசைத்தட்டுகளைக் காட்டி, உடைசல், விரிசல், இல்லாமல் நல்லதாக நீங்களே ‘செலக்ட்’ செய்து தா சார், ‘தட்டு’ செய்து தருகிறேனென்றார். வீட்டுக்காரி ஏதோ தேங்காய் வாங்குவது போல தட்டித் தட்டி ‘செலக்ட் செய்து ‘இசைத்தட்டுகள கடைகாரர் கையில் கொடுப்பதற்கு முன் ஆர்வக் கோளாறால் எந்தப் பாடலின் இசைத் தட்டு எனப் படித்தப் போது, நான்கு
இசைத்தட்டுகளிலும் ‘வீரபாண்டியக் கட்டபொம்மன் கதை வசனம்’ என்றிருந்தது.

*

நன்றி : சாபு (சடையன் அமானுல்லா) , ராயர் காப்பி கிளப்

*

இன்னும் :

Gramophone record – பற்றி wikipedia சொல்வதைப் பார்த்துவிட்டு வலையுலகின் ‘கலகல’ ஜவஹரின் ‘இசைத்தட்டு ஜோக்ஸ்’!ஐயும் சும்மா பாருங்கள்.

மடலாட உபத்திரம் இல்லாத நூறு விசயங்கள்

‘இஸ்லாமியக் கதையெழுத இனிய குறிப்புகள்‘ எழுதியதை தெரியப்படுத்தியற்கு , மடலாட உபத்திரம் இல்லாத நூறு விசயங்களாக ‘நகைச்சுவை மின்னல்’ இரா. முருகன் குறிப்பிட்டது! :

அரைஞாண் கயிறு  , ஊஞ்சல் பலகை , சிகைக்காய்ப் பொடி , ஆஸ்டின் கார் , கோபால் பல்பொடி, ரவா உப்புமா , ஷவர பிளேடு , ஓமக்குச்சி நரசிம்மன் , பீப்ரி காப்பிக்கொட்டை , பிளாஸ்டிக் குடம் , டம்ளர் டபரா , சந்தன சோப் , பழுப்புச் சர்க்கரை , டர்க்கி டவல் , ப்யூஸ் போன பல்ப் , வெளிச்செண்ணெய் , காலில் ஆணி , எண்ணெய்ச் செக்கு , காலண்டர் , கொசு , அவித்த கடலை , வெள்ளரிக்காய் , சேப்டி பின் , ஒயிட் லெக்கான் முட்டை , காது குடையும் குச்சி ,கைக்குட்டை , அஞ்சால் அலுப்பு மருந்து , மர முக்காலி , ஜவ்வந்திப் பூ , கோந்துப் பசை , மூக்குக் கண்ணாடி , பனை மரம் , டேபிள் ஃபேன், நேமத்தான்பட்டி-ராங்கியம்-பள்ளத்தூர் , தலையில் பொடுகு , ராலே சைக்கிள் , மூல நோக்காடு , பல்லாங்குழி , கருணைக் கிழங்கு , திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா , காலித் தீப்பெட்டி , யானை வால் முடி , கத்தரிக்காய் எண்ணெய்க் கறி , ஒட்டகப் பால் , இங்க் வில்லை , கைக்கணினி , கருப்பு வெளுப்பு புகைப்படம் , புனுகுப்பூனை , லேசர் ஹோலோகிராபி, சென்னையில் வெய்யில் , மினரல் வாட்டர் , மந்தித்தோப்பு தைலம் , 78 RPM ரிக்கார்டு , சைபால் , கரப்பான் பூச்சி , சினிமா கொட்டகையில் முறுக்கு , ஹவாய் செருப்பு, சொக்கலால் பீடி , ஆர்.எஸ்.பதி மருந்து , தவிடு , மூட்டுவலி , காயலான் கடை, பேதிமருந்து , பக்கோடா, சாம்பிராணி, பெருச்சாளி , வான்கோழி , தலகாணி (தலையணை) , புளிமூட்டை ராமசாமி , மண்ணெண்ணெய் ஸ்டவ் ,  கூ பேண்ட் டிரான்சீவர் , கோவேறு கழுதை , பாதாளச் சாக்கடை , ஜமுக்காளம் , சி ஷார்ப் மொழி, நடிகை அங்கமுத்து, மூக்கடைப்பு , அயிரை மீன் , கோட்டு வாத்தியம் , பெங்களூர்க் கத்தரிக்காய் , பாக்கெட் கடியாரம் , ஜல்லி ஏற்றிய லாரி , வாக்கிங் ஸ்டிக் , இரும்பு கிராதி , அண்டங்காக்கை , புல்லக்கு , ஒரு குயர் நோட்டுப் புத்தகம் , பூவன் பழம் , காஜா போடும் பையன் , மாவுச் சல்லடை , சினிமா பாட்டுப்புத்தகம் , அரிக்கேன் விளக்கு , அல்ஜீப்ரா , பனை விசிறி , பிட் நோட்டீஸ் , சின்ன வெங்காயம் , சாஷேயில் நல்லெண்ணெய் , வசம்பு , பிளாஸ்திரி , சங்கு மார்க் லுங்கி

*

நன்றி : இரா. முருகன் / ராயர் காப்பி கிளப்

குஸ்தி : கிங்காங் Vs தாராசிங்

சின்ன அண்ணாமலை அவர்கள் எழுதிய ஒரு நகைச்சுவைக் கதையை சிறுவயதில் படித்து ரொம்ப சிரித்திருக்கிறேன். கிட்டத்தட்ட ‘சின்ன மாப்பிள்ளை’ படத்தின் கதை மாதிரி இருக்கும். முழுக்க ஞாபகம் இல்லை. சும்மா அவர் பெயரை இன்று கூகிளிட்டபோது கீழ்க்கண்ட சுவாரஸ்யமான தகவல் வந்தது. எழுத்தாளர் சாவி  பற்றி ராணி மைந்தன் எழுதிய புத்தகத்தின் பகுதிகள் – அப்புசாமி டாட் காமிலிருந்து. பதிகிறேன். நீங்கள் பாட்டுக்கு எதையாவது தொடர்புபடுத்திக்கொண்டு சிரிக்காதீர்கள். சீரியஸான விஷயங்களுக்கும் சிரித்தவர்கள் நீங்கள். இன்னொரு சீரியஸான விஷயம் : நாளை கவிஞர் தாஜ் கதை ஒன்று  வெளியாகும்!

*

சாவி நடத்திய மல்யுத்தம்


ஒருநாள் கிங்காங்கை சாவியும் சின்ன அண்ணாமலையும் சென்னை மவுண்ட் ரோட் அம்பாஸிடர் ஹோட்டலில் – இப்போது இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி உள்ள இடம் – சந்தித்தார்கள். அன்று மாலை சென்னையில் நடக்க இருந்த நிகழ்ச்சி பற்றி விவாதித்து ஒரு திட்டத்தை உருவாக்கினார்கள்.

அதன்படி, ஐந்தாவது ரவுண்டில் தாராசிங்கை கிங்காங் வலுச்சண்டைக்கு இழுத்து மேடையிலிருந்து கீழே தள்ளிவிட வேண்டும். தாராசிங் ஆவேசமாக மீண்டும் மேடை ஏறி மாமிச மலை போன்ற கிங்காங்கைத் தன் இரு கைகளாலும் தலைக்கு மேலே தூக்கி மூன்று முறை தட்டாமாலை சுற்றிக் கீழே போட வேண்டும். கிங்காங் ஒன்றும் இயலாதவராக மல்லாந்து கிடப்பார். அவர் மீது தாராசிங், கம்சன் மீது கிருஷ்ணன் போலப் பாய்ந்து அமர்ந்து அவர் நெற்றில் ரத்தம் கசியும் அளவுக்கு ஓங்கி அடிக்க வேண்டும்.

கிங்காங் நெற்றியில் இயற்கையிலேயே மூன்று மடிப்புகள் உண்டு. அந்த மடிப்புகளுக்கிடையே வரிவரியாக ஆழமான மூன்று கோடுகள். அந்தக் கோடுகளை முன்கூட்டியே ரேஸர் பிளேடால் லேசாக ரத்தம் கசியும் அளவுக்குக் கீறி, பவுடர் போட்டுத் துணியால் ஒற்றி விட்டுவிடுவார் கிங்காங். சண்டை நடக்கும்போது தாராசிங், கிங்காங் நெற்றியில் பட்பட் என்று ஓங்கி அடிக்க, அந்த இடத்தில் ரத்தம் பீறிட்டு வெளியாகும்.

அந்த ரத்தத்தை தாராசிங் தன் வலது உள்ளங்கையில் ஒற்றி எடுத்து குறுக்கே வரும் ரெ·பரியின் – அவர் பெயர் வாங்பக்லி – பனியன் மீது அப்பிவிடுவார். ரெ·பரியின் அந்த வெள்ளை வெளேர் பனியன் மீது படிகின்ற ரத்தம் சூரிய ஒளி போன்ற இரவைப் பகலாக்கும் ‘·ப்ளட் லைட்’ வெளிச்சத்தில் பளிச்செனத் தெரிய, இரண்டு பேரும் உண்மையிலேயே கடும் ஆவேசத்தில் சண்டை போட்டுக் கொள்வதாகவே ரசிகப் பெருமக்கள் நம்பி விடுவார்கள்.

திட்டமிட்டபடியே அன்று மாலை ரெ·பரி பனியனில் ரத்தம் அப்பப்பட்டபோது ரசிகர்கள் நரம்புகள் முறுக்கேற கூச்சலிட்டார்கள். கிங்காங் தன் பங்கிற்கு ரெ·பரி மீது பாய்ந்து அவரது பனியனைப் பிடித்திழுத்து சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டார். அவ்வளவுதான். ஸ்டேடியமே அமளி துமளிப்பட்டது. ”கிங்காங், பனியனையே கிழித்து விட்டார். உண்மையாகவே இது அசல் சண்டைதான்’ என்று ரசிகர்கள் பேசிக்கொண்டு போனார்கள்.

பனியன் விலை வெறும் எட்டு ரூபாய்தான். ஆனால் அன்று ஆன வசூலோ முப்பத்திரண்டாயிரம் ரூபாய்! கிங்காங் அத்துடன் விட்டுவிடவில்லை. தாராசிங்கைப் பார்த்து ‘நாளை உன்னைக் கவனித்துக் கொள்கிறேன்’ என்று சவால் சண்டைக்கு அழைத்தார். தாராசிங்கும் சவாலுக்கு ஒப்புக் கொள்ள மறுநாள் வசூல் இரண்டு மடங்கு!

இப்படி நாளொரு வண்ணமும் பொழுதொரு தினுசுமாய் ‘புதுப் புது உத்தி’களைக் கையாண்டு மக்களைப் பைத்தியமாய் அலைய வைத்தார்கள். நாளடைவில் ‘கிங்காங் – தாராசிங் சண்டை பொய்யானது; போலியானது; என்று தெரிந்தும்கூட மக்கள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அசல் சண்டை போல் சுவாரசியமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு மேலும் மேலும் குஸ்தி பார்க்கக் குவிந்தார்கள்.

தமிழ்நாட்டில் முதல் ரவுண்ட் சண்டை முடிந்தது.  பின்னர் சின்ன அண்ணாமலையும் சாவியும் கிங்காங்குடன் தனி ஒப்பந்தம் செய்து கொண்டு மீண்டும் சென்னையிலும், திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களிலும் இரண்டாவது ரவுண்ட் போட்டிகளை நடத்தினார்கள். திருச்சியில் மழை வந்து வசூலைக் கெடுத்த போதிலும் மொத்தத்தில் நல்ல லாபம் கிடைத்தது.

*

நன்றி : அப்புசாமி டாட் காம்

கிரிக்கெட்டை முன்வைத்து கிருஷ்ணன் சொல்லியது

‘1996ஆம் ஆண்டின் உலகக் கோப்பைக்கான பெங்களூர் ஆட்டத்தில் உலகக் கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவரான ஜாவேத் மியான்தாத் கடைசி முறையாக ஆடினார். குஹா கூறுகிறார் : When he walked out of the ground I stood up to applaud him. “Why are you clapping?” asked an abnoximous fellow from a row behind..”He is a truly great player, and this is the last time any of us see him bat.” “Thank God. I shall never see the bastard again” came the reply.

ஆனால் 1999ல் சென்னையில் பாகிஸ்தான் முதல் டெஸ்டில் வெற்றிகண்டபோது  சென்னைப் பார்வையாளர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பிப் பாகிஸ்தான் குழுவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அரங்கத்தைச் சுற்றி நின்ற பாகிஸ்தான் ஆட்டக்காரர்களின் கண்களில் குறிப்பாகக் குழு மேனேஜராக வந்த மியான்தாத் கண்களில் – கண்ணீரைப் பார்த்ததாக எனக்கு ஞாபகம்.’ – பி.ஏ. கிருஷ்ணன்

**

சீட்டாட்டம் போலவே கிரிக்கெட் ஆட்டமும் எனக்கு ரொம்ப தூரம். இன்றுவரை இந்த இரண்டுமே எனக்கு சற்றும் புரியாததால் மகாஜனங்களுடன் ஒன்றமுடியாத மனநிலை. மகனை விடுங்கள், இதற்காக மனைவியே என்னை வெறுக்கிறாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! ஆனாலும் அதைவைத்து நண்பர் மணிக்கு ஒரு செய்தி சொல்லலாம் என்றுதான் மேலே ஆடினேன். அதன் பெயர் என்ன, ‘டக்’ஆ? நீங்களே மேய்த்துக் கொள்ளுங்கள். பி.ஏ. கிருஷ்ணன் அவர்களின் ‘தமிழர்களும் வெகுதூரம் வந்துவிட்டார்கள்’ கட்டுரையில் கண்டதுதான் மேலேயுள்ள பத்தி. அவர் சந்தேகத்தோடுதான் முடிப்பார் கடைசியில். வேண்டுமென்றுதான் அதை நான் இங்கே சேர்க்கவில்லை. எனக்கு சந்தேகமுமில்லை. நீங்கள் புத்தகத்தை வாங்கிப் பார்த்துக்கொள்ளுங்களேன்.  நூல் : அக்கிரகாரத்தில் பெரியார். காலச்சுவடு வெளியீடு. படு சுவாரஸ்யமான புத்தகம். மதிப்பிற்குரிய இராம.கி ஐயா அவர்களுடன் அவர் நடத்திய விவாதத்தையும் ரசித்துப் படித்தேன். மெய்ப்பொருள் காண்பது அறிவு! நூலிலுள்ள ‘வடிவியலின் கதை’ மட்டும் கொஞ்சமும் புரியவில்லை. மூச்சு நின்றுவிட்டது! ‘கணிதம் என்பது பாவப்பட்ட மனிதர்களின்மீது செலுத்தப்படும் பயங்கரவாதம்’ என்பதை கிருஷ்ணன் மறுக்கலாம்; நான் மறுக்கமாட்டேன். பட்டபாடு அப்படி சார்!

நூலின் பல இடங்களிலும் , (உச்சாணிக்கொம்பிலிருந்து இறங்க மறுக்கிற) ‘பாப்பனத்திமிர்’ என்று துணிச்சலாகச் சொல்கிற இந்தப் ‘பார்ப்பன’ எழுத்தாளரின் நடிப்பற்ற கோபத்தை நன்றாக நான் உணர்ந்தேன். பாகிஸ்தான் பாடப் புத்தகங்களில் காணப்படும் மதவெறியைச் சொல்லும்போதும் (The Subtle Subversion – The State of Curricula and Textbook in Pakistan – compiled by Nayyar and Ahmed Salim), தாரிக் அலியின் புத்தகத்தின் ( The Clash of Fundamentalism) முக்கியமான பகுதியாக அன்வர்ஷேக்-ஐ சொல்லும்போதும் (கூடவே , அபு அல் ஆலா அல் மாரியின் கவிதை வேறு!  ‘The Prophets, too, among us come to teach, Are one with those who from the pulpit preach; They pray, and slay, and pass away, and yet Our ills are as the pebbles on the beach..’)  கிருஷ்ணன் மேல் எனக்கு எரிச்சல் வந்ததுதான். சொல்ல இயலாத முஸ்லிமாயிற்றே! ஆனால் , பெரியார் பற்றிய கட்டுரையில், தன் கீழ் வேலை பார்க்கும் ஒரு தலித் அதிகாரியை சக (பிராமண) அதிகாரி ஒருவர் கடுமையாக அவதூறு செய்ததை, ‘எனக்கு மலத்தை மிதித்த உணர்வு ஏற்பட்டது. அந்த மலம் தோய்ந்த செருப்பாலேயே அவரை அடிக்கவேண்டும் என்று தோன்றியது’ என்று அவர் எழுதும்போதும், ‘மனுஷ்ய வித்யா‘ கட்டுரையில் ‘நான் மார்க்ஸ் சொன்ன De Ominbus Dubitandum (எல்லாமே சந்தேகப் படத் தக்கது) என்ற கூற்றை நம்புபவன். ஆனால் ஒரு கிறித்துவத் தேவாலயத்தின் உள்ளே நுழைந்து சுற்றிப் பார்க்கும் போது என்னை அறியாமல் கண்களில் நீர் வந்து விட்டது’ என்று எழுதும்போதும் என் கண்களில் நீர் நிறைந்து விட்டது.

போதும் சீரியஸ் மேட்டர்.

என்னைபோலவே பி.ஏ கிருஷ்ணனுக்கும் சுந்தர ராமசாமியின் ‘விகாசம்’ (மலர்ச்சி) கதை பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. சு.ராவோடு கிருஷ்ணன் பேசும்போது ஒரு தமாஷ். யாருடைய வீட்டைப் பற்றியோ பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

‘பெருசோ?”

‘தொலைஞ்சு போயிடலாம் கிருஷ்ணன்”

சு.ராவை தோற்கடிக்கிறார் கிருஷ்ணன் , தன்னுடைய ‘ஆசிரியப்பணி‘ குறித்த ஒரு கட்டுரையில் (இது நூலில் இல்லை). நண்பர் நாகூர் ரூமி கவனிக்க வேண்டிய பகுதி இது! :

‘நான் ஆசிரியப் பணியைவிட்டு வெளிவரத் தீர்மானித்த ஆண்டில் தான் மதுரையில் கல்லூரி ஆசிரியர்களுக்காக ஒரு அமைப்பு தீவிரமாகச் செயல்படத் தொடங்கியது. அதன் செயல்பாடுகளின் விளைவாகக் கல்லூரி ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டிருந்த அநீதிகள் வெகுவாகக் குறைந்துவிட்டன என்று எனது நண்பர்கள் சொல்கிறார்கள். ஆனால் மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகள் குறைந்துவிட்டதாக எனக்குத் தெரியவில்லை’

*

நன்றி : காலச்சுவடு , பி.ஏ. கிருஷ்ணன்

*

சில சுட்டிகள் :

 ஒரு கிழவருடன் இரண்டு நாட்கள் – பி.ஏ. கிருஷ்ணன்

‘புலிநகக் கொன்றை நாவலை’ முன்வைத்து, திரு. பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுக்கு ஓர் திறந்த மடல். – – தாஜ்

அடிப்படைவாத மோதல்கள் – தாரிக் அலி பற்றிய குறிப்புகள்  : எச். பீர்முஹம்மது

« Older entries Newer entries »