ஹமீது ஜாஃபரின் 3 பதிவுகள்

‘ஷிர்க்’ பற்றி எழுதி அனுப்பியிருந்தார் ஹமீது ஜாஃபர் நானா. சூஃபி சுலைமான் ஜலூஸி அவர்களைப் பற்றிய விபரம் தவிர அதிலிருந்த மற்ற விஷயங்கள் ‘இன்றைய ஸ்பெஷல் :  தலைக்கறி, குடல் கறி’ ரகம்!  அதனால் பதியவில்லை. பதிலாக, நானா முன்பு அனுப்பியிருந்த ஒரு கதையைப் பதிவிடுகிறேன்.

எச்சரிக்கை : நானாவுடையது ரொம்பப் பெருசு!

*

பதிவுகள்

ஹமீது ஜாஃபர்

ஹமீது ஜாஃபர்இப்பொ நான் யார்? என் பெயர் என்ன? எதுவுமே எனக்கு நினைவில் இல்லை. ஆனால் நான் நானாக இருக்கின்றேன். எங்கே? எப்படி? வாருங்கள் என்கூட …

அது ஒரு அநாமதேய உலகம், அங்கு யார் யாரோ இருக்கிறார்கள். அவர்களெல்லாம் யாரென்று தெரியவில்லை. தங்கத்தினால் செய்யப்பட்டு நவரத்தினங்களும் பதிக்கப்பட்ட மிருதுவான ஆசனம் ஒன்றில் நான் அமர்ந்திருக்கிறேன்; நான் இருக்குமிடமோ சோலைபோல் காட்சியளிக்கிறது; எதிரே மரகத மலைகள் தெரிகின்றன; அந்த மரகத மலைகளிருந்து சிறு சிறு அருவிகள் புறப்பட்டு தெளிவான நீரோடையாகப் பரிணமித்து என் எதிரே சலசலவென்று ஓடிக்கொண்டிருக்கிறது; நீரோடையின் இரு மருங்கிலும் வண்ணவண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கி அவைகளிலிருந்து மனத்தை மயக்கும் நறுமணம் வீசிக்கொண்டிருக்கிறது; அதீத வெளிச்சமும் இருளுமில்லாத மந்தகாசமான வானம்; சிலு சிலுவென குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது, அதை காற்று என்று சொல்லமுடியாது ஆனால் குளிர்ச்சியான ஒரு உணர்ச்சி; உணர்ச்சியல்ல , உணர்ச்சிபோன்ற உணர்வு; அந்த விவரிக்கமுடியாத ரம்மியமான சூழலில் இரண்டறக் கலந்திருந்தபோது என்னையறியாமல் என் நெஞ்சின் ஆழத்தில்  கிடந்த பதிவுகள் முன்னே நின்று கூத்தாடத் தொடங்கின.

கொஞ்சங்கொஞ்சமாக நினைவுகள் வரத்தொடங்கின; எதோ கனவுபோல் தெளிவற்ற நிலையில் மங்கலாகத் தெரிந்தவை சிறிது சிறிதாகத் தெளிவடையத் தொடங்கின… 

பதிவு -1

பம்பாய்க்கு நான் அப்போது புதிது, ஹிந்தி சுத்தமாகத் தெரியாது; ஒரு பாக்டரி வாசலில் நின்றுகொண்டிருந்தேன், வாசலில் கூர்க்கா ஆனால் நேபாளி அல்ல என்று மட்டும் தெரிந்தது, உள்ளுக்குள் ஒரு பயம், ஒரு அசட்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சாக்கோச்சன்  வந்துட்டுப் போனான் என்பதை ராமகிருஷ்ணனிடம் சொல்லு என்பதை எனக்கு தெரிந்த இந்தியில் அடிச்சுவிட்டேன் இப்படி..

“ராம்கிர்ஷ்ணன் போலோ, ச்சாக்கோச்சன் ஆயா, கயா”

“க்யா….?”

க்யா என்றதும் திருப்பி கேட்கிறான் என்பதை புரிந்துக்கொண்டேன்.

மீண்டும், “ராம்…கிர்ஷ்ணன் போலோ…, ச்சாக்கோச்சன்  மாலூ….ம்ஹை, ச்சாக்கோச்சன் ஆயா.. கயா…”

“எலா! நீ எந்தா பறையின்னு?” என்றான் அந்த கூர்க்கா.

எனக்கு தைரியம் வந்துவிட்டது. “சேட்டா, நிங்ஙளெ இந்திக்காரன்னு விஜாரிச்சதானு ஞான், நிங்கள் மளையாளின்னு இப்பொழா மனசுலாச்சு. என்டெ பேரு சாக்கோ ஜோஸப்பானு, எனக்கி இந்தி அறிஞ்சோடா, ஞான் நாட்டிலேந்து வந்து பத்து தெவசங்களாயி. ஜோலி தேடி வந்திருக்கேன் சேட்டா!, எண்டெ பிரண்ட் ராமகிருஷ்ணன் இவிடெ ஜோலி செய்யுன்னு. அவன் வேலெ வாங்கி தரும்னு பரஞ்சு, அதான் இங்கோட்டு ஞான் வந்து. நிங்கள் அவன்கிட்டெ பறையனு ஞான் வந்துட்டுப்போயின்னு.”

“நீ தமிழா மளையாளமா?” மீண்டும் கூர்க்கா.

“ஞான் மலையாளியானு பட்ஷே என்ட ஜீவிதம் கொறய காலம் தமிழ்நாட்டுலெ உண்டாயிருன்து!”

“அங்ஙனயானு! அதான் மளையாளமும் அறியலெ தமிழும் வரலெ. நீ தமிழ்லெ சம்சாரிக்கு எனக்கி  மனசுலாவும். இவிட  ஒருபாடு ராமகிர்ஷ்ணன் உண்டு, நீ பறையுன்ன ராமகிர்ஷ்ணன் யாரென்னு அறியிலெ, ஞான் நோக்கட்டும். பின்னெ.., நி எந்தினெ அவனெ இவிடெ அன்னோசிக்கின்னு?”

“நான் நாட்லேந்து வந்திருக்கேன், புதுசு, ஜோலி தேடி வந்திருக்கேன். ஆனால் ஹிந்தி பாஷை அறிஞ்சோடா அதான் இவ்ளவு கொழப்பம்.”

“சாரமில்லா,  நினக்கு எந்தா ஜோலி அறியும்?”

“நான் மெஷினிஸ்ட், எனக்கு ரண்டுமூனு மெஷின்லெ ஜோலி செய்யான் அறியும், இந்தா, என்னோட சர்டிபிகேட்.” என் கையில் தயாராக வைத்திருந்த சர்டிஃபிகேட் காப்பியை அவனிடம் கொடுத்தேன்.

அவற்றை வாங்கிக்கொண்டு ஒரு வாரம் கழித்து தன்னைப் பார்க்க சொன்னான். ஊரிலிருந்து வந்து ராமகிருஷ்ணனுடன் தங்கியிருந்ததால் அவனைப் பார்ப்பதற்கு பிரச்சினை இல்லாமல் போய்விட்டது. ஆனால் அந்த ஒரு வாரம் வரை சும்மா இல்லாமல் பல இடங்களில் எனக்குத் தெரிந்த ஹிந்தியை வைத்துக்கொண்டு வேலை தேடினேன், சில இடங்களில் அடிவாங்காத குறைதான். சில இடங்களில் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடி வந்ததும் உண்டு.

ஒரு வாரம், இரண்டாகி மூன்றாகியது. சற்றுப் பொறு என்று சொன்னான். எனக்கு வெளியில் போய் வேலை தேடவும் பயம். ரூமில் இருந்தால் போர். சாப்பாட்டிற்கு லாட்டரி அடிக்கும்படியான சூழல் உருவானது . எத்தனை நாளைக்குத்தான் ராமகிருஷ்ணன் சாப்பாடு போடுவான், என் மனசு உறுத்தியது. சும்மா இருந்தால் சரியாக வராது என்று அந்த ஃபக்டரி வாட்ச்மேன் ரூமிற்கு போனேன். அவன் ஒருமாதிரியாகப் பார்த்தான்.

அவன் பார்வை ஏன் இங்கு வந்தாய்? என்று என்னை துளைப்பதுபோல் இருந்தது. மனம் தளர்ந்த நிலையில் என் கண்கள் குளமாவதைப் பார்த்த அவன்  அங்கே கிடந்த நாற்காலியில் உட்காருக்கும்படி சொன்னான்.

சொன்னதும்தான் தாமதம், நாற்காலியில் உட்காராமல் அங்கு ஒரு ஓரமாக அமர்ந்து தலையை தொங்கப்போட்டு இரு கண்களையும் இரு விரல்களால் அழுத்திப்பிடித்துக்கொண்டு அமைதியாக இருந்தேன்.

என்னைப் பார்த்த அவன், உஹும்.. அவன் என்று சொல்லக்கூடாது, வேலை வாங்கிக் கொடுத்ததே அவர்தான் , அதனால் மரியாதையாகத்தான் சொல்லனும்.

“ஏன் தலையெ தொங்கப்போட்டுக்கிட்டு உட்காந்திருக்கே? வேலை கிடைக்கலையே என்ற பிரச்சனையா? இல்லெ கையில் காசில்லை என்ற கவலையா?”

“அதெல்லாம் ஒன்னுமில்லெ, வேலை கிடைக்காதது ஒருபக்கமிருந்தாலும் என் குடும்பப் பிரச்சனை தலைதூக்கி நிக்கிது.”

“குடும்ப பிரச்சனை யாருக்குதான் இல்லெ?” கவலையெ விடு, ஒனக்கு ரெண்டு நாள்ளெ வேலை சரியாயிடும், எல்லாம் ஞான் பறஞ்சு சரியாக்கி வச்சிருக்கேன். இந்தா ச்சாயா குடி, புகை  வலிக்கின பழக்கமுண்டோ?”

‘இல்லையண்ணா’ என்று சொல்லியவாறு அவர் கொடுத்த ச்சாயாவை மெதுவாக உறிஞ்சினேன். அந்தச் சாயா என் மனப்பாரத்தை இறக்குவதுபோல் இருந்தது. அவர் பேசிய முறை, உபசரிப்பு, அனுசரிப்பு இவை அவர்மீது அன்பை ஏற்படுத்தியது. அவருடைய பேச்சிலிருந்து விரைவில் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது.

அவர் சொன்னது போல் இரண்டு நாட்களில் வேலை கிடைத்தது, அதுவும் அவர் வேலை பார்க்கும் கம்பெனியிலேயே, ஆனால் சம்பளம்தான் கட்டை. ஹெல்பர் வேலைதானே அதுக்கு அதிகமாவா கொடுக்கப்போகிறார்கள்? தமிழ் நாட்டில் என் கீழே இரண்டு ஹெல்பர் இருந்தார்கள். இங்கு அப்படியே தலைகீழாகிவிட்டது. என்னசெய்வது, நிலைமையை நினைத்து வெட்கத்தைப் பார்க்காமல் வேலை செய்தேன்.

வசதி குறைவாக இருந்ததால் ராமகிருஷ்ணன் ரூமிலிருந்து வாட்ச்மேன் ரூமிற்கு மாறினேன். நாட்கள் கடந்தன. இரண்டுபேருக்குமே ஷிஃப்ட் டூட்டி, அதனால் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது. எப்படி இருந்தாலும் மாதத்தில் இரண்டு மூன்று நாட்கள் ஒன்றாக இருப்போம்.

நான் அங்கு இருந்தவரை அவரை சேட்டா என்று அழைப்பேன். சில சமயங்களில் பிரியமாக அண்ணாச்சி என்று அழைப்பேன். மாதங்கள் இரண்டுமூன்றாகியும் அவர் எந்த ஊர், பெயரன்ன என்பதை கேட்டுக்கொள்ளவில்லை. ஒரு நாள் நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோது மெதுவாக பேச்சை ஆரம்பித்தேன்.

“சேட்டா இத்தனை நாளாகியும் நிங்கள்ட பேர் எந்தா என்று பறைஞ்சில்லல்லோ?”

“நீ தமிழிலேயே பேசு, எனக்கும் தமிழில் பேச ஆசை. என்னோட பேர் மத்துக்குட்டி கோவிந்தன்நாயர். எல்லொரும் மாத்துக்குட்டி என்று என்னை அழைப்பார்கள். எனது ஊர் முண்டக்காயம், கோட்டயம் டிஸ்டிரிக்ட். நான் இங்கு வந்து ஏகதேசம் பத்து கொல்லம் ஆச்சு. என்டெ  ஃபேமிலி நாட்டுலெ இருக்கு, மூனு மக்கள் இருக்கு, இரண்டு ஆண் ஒரு பெண். படிச்சுக்கொண்டிருக்கு. மூனு மாசத்துக்கு ஒரு முறை நாட்டுக்குப் போய்ட்டு வருவேன். நீ பாவப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவன் என்று ராமகிருஷ்ணன் சொன்னான், ஒன்னோட ஃபேமிலி பத்தி எனக்கு எதுவும் தெரியாது உனக்கு இஷ்டமிருந்தால் சொல்லேன்.”

என்னில் அமுக்கி வைத்திருந்த குமுறல்கள் சோகங்கள் பொங்கிக்கொண்டு வெளிவரத் தொடங்கின. மனதில் கவலைகள் இருந்தால் யாரிடமாவது சொன்னால் மனபாரம் குறையும் என்று சொல்வார்கள். ஆனால் நான் யாரிடமும் எதையும் சொல்வதில்லை. அவர் ஒரு சகோதரன் போல் பழகிவந்ததால் என்னையும் மீறி சொல்ல ஆரம்பித்தேன், இல்லை இல்லை கொட்ட ஆரம்பித்தேன்.

ஒரு நிமிடம் மவுனமாக இருந்துவிட்டு, “சேட்டா, என்ட நாடு(ஊர்) சிரகாங்கிழி,  நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன், எனக்கு ஜான்சன் என்ற ஒரு தம்பி உண்டு. இப்பொ அவன் படிச்சிக்கிட்டு இருக்கான். என் அச்சன் ஒரு ஒதவாக்கரை. ஒழுங்கா வேலைக்குப் போமாட்டார்,

பார்ட்டி ஆபீஸ் அது இது என்று எங்காவது போய்விடுவார். குடிக்காம வீட்டுக்கு வந்ததே இல்லை, அவர் விருப்பத்துக்கு சேறு கறி இல்லையென்றால் அம்மாவை அடிப்பார். கட்சிக்கொடி பிடிப்பதே அவருக்கு வேலை, கட்சிக்காக குடும்ப சொத்தை அழித்தார்.

முன்பெல்லாம் பணிக்கர்தான்  தலைவர். அவர் எது சொன்னாலும் கரக்ட் என்பார், அவரைப் பத்தி யாராவது தப்பாகப் பேசினால் அடிச்சுடுவார். இவரை பயன்படுத்தி பார்ட்டிக்காரர்கள் ஆதாயம் தேடிக்கொள்வார்கள். அது இவருக்கு தெரியாது, சொன்னாலும் கேட்கமாட்டார். அம்மா எவ்வளவோ சொன்னாங்க. ஊஹும், அம்மாவுக்கு அடி ஒதை கெடச்சதுதான் மிச்சம்.

இவருடைய போக்கு அறிஞ்சு அம்மா எதும் சொல்வதில்லெ எவ்வளவு நாளைக்குத்தான் ஒதை வாங்கும்? சோத்துக்கு வழி இல்லாதபோது என் மாமா அதாவது அம்மாவோட அண்ணன் ஒதவி செய்வார். சில சமயங்களில் அம்மா எங்காவது கூலி வேலை செஞ்சுட்டு வரும். 

நான் அப்பொ சின்னபையன் . ஸ்கூல் போய்ட்டு வருவேன்.

ஒரு நாள் காலை நேரம், வூட்டுக்கு நாலஞ்சு பேர் வந்தாங்க, அவங்க எப்போதும் வர்ரவங்கத்தான்,  வந்து என் அச்சனை கூப்பிட்டாங்க, இவரும் ஒன்னும் சாப்பிடாம எங்கே போறேன் எதுக்குப் போறேன்னு சொல்லாமல் பார்ட்டி ஆபிஸுக்குப் போறேன்டு சொல்லிப்புட்டு போய்ட்டார்.  ஒரு வாரம் வரை ஆளைக்காணோம். எங்களுக்கு சந்தேகம் வந்துடுச்சு. பார்ட்டி ஆபிஸ் போய் விசாரிச்சா அவங்க ஒரு மாதிரியா பேசினாங்க, அங்கே போயிருப்பதாக இங்கே போயிருப்பதா மளுப்புனாங்க, என்னமோ தலைவரைப் பார்க்க திருவனந்தபுரம் போயிருப்பதாக சொன்னாங்க. அம்மாவுக்கு சந்தேகம் வந்துடுச்சு. மாமாவை அழைச்சிக்கிட்டுப் போய் போலிஸ் ஸ்டேஷன்லெ கம்ப்ளெய்ண்ட் கொடுக்கலாமென்று போனபோதுதான் அங்கே எங்க வாழ்க்கையிலே இடி விழும்னு தெரிஞ்சது. அவரை ஒரு கொலை கேஸில் மாட்டிவிட்டிருப்பது தெரியவந்துச்சு. இரண்டு மூனு மாசத்துக்கு முன்னாலே நடந்த கொலை கேஸுலெ தேடிக்கிட்டிருந்த குற்றவாளின்னு சொல்லி திருவந்தபுரம் செண்டரல் ஜெயில்லெ அடச்சிட்டாங்க. இதெ கேட்டதும் அம்மா ஆடிப்போயிட்டா. சோத்துக்கே வழி இல்லாமலிருக்கும்போது கேஸு நடத்த பணத்துக்கு எங்கே போவோம்?

பார்ட்டி ஆபிஸ் அது இதுன்னு அலெஞ்சதுதான்  மிச்சம். ஒரு நாயிண்ட மவனும் ஒதவி செய்யலெ. எங்களெ கொலக்காரன் குடும்பம்னு ஊர் சொல்ல ஆரம்பிச்சிடுச்சு. அம்மா அழுது அழுது ஓடானாள், நானும் பள்ளிக்கூடம் போறதை நிறுத்திட்டேன். எதாவது கூலி வேலை செய்யலாம்னா ஒரு பயலும் சேத்துக்கமாட்டேன்டாங்க. வேறு வழி இல்லாம இருந்த ஊட்டை மாமா கிட்ட கொடுத்துட்டு நாங்க கோயம்புத்தூர் வந்துட்டோம். என்று சொல்லிக்கொண்டே குலுங்கிக் குலுங்கி அழுதேன்.

சமைக்க சென்ற அந்தப்பன் என் கதையெ கேட்டுபுட்டு அப்படியே அசந்துபோய் நின்றார். அவர் கண் கலங்கி இருந்தது. என்னை அப்படியே ஆரத்தழுவி என் முதுகைத் தடவியவாறு சகோதரா மேலே கர்த்தாவு இருக்கிறார் கவலைப்படாதே என்று ஆறுதல் சொன்னார். அது எனக்கு இதமாக இருந்தது. ஒரு தந்தையின் அரவணைப்பில் இருப்பதுபோல் இருந்தது.

சற்றே அமைதியடைந்த நான் பாத்ரூம் சென்று முகத்தைக் கழுவிவிட்டு மேலே தொடர்ந்தேன்.

கோயம்புத்தூர் வந்த நாங்கள் எங்க தூரத்து உறவினர் ஒருவர் மூலமா பாக்டரி ஒன்றில் அம்மாவுக்கு வேலை கெடச்சிது. ஆபிஸை கூட்டிப் பெருக்கனும், கார்டனுக்கு தண்ணீர் ஊத்தனும், அதான் வேலை.  அப்புறம்  கொஞ்ச நாள்லெ மேனேஜர் ஊட்டுக்குப்போய் பத்து பாத்திரம் தேச்சிட்டு வந்துச்சு. அவங்க வூட்லெ மிஞ்சிர சாப்பாட்டை கொண்டுவரும் நாங்க மூனுபேரும் சாப்பிடுவோம். கொஞ்ச நாள்லெ மேனேஜர்கிட்ட சொல்லி எனக்கு அதே பாக்டரியில் வேலை வாங்கி கொடுத்துச்சு அம்மா. அங்கெதான் நான் தொழில் கத்துக்கிட்டேன்.

நானும் அம்மாவும் சம்பாதிக்கிற காசுலெ தம்பியை படிக்க வச்சோம். ஆனால் அச்சனுடைய கேஸை நடத்த எங்களால் முடியாமல் போய்விட்டது. அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்தார்கள். அப்பாமீதிருந்த வெறுப்பில் நாங்கள் யாரும் போய் பார்க்கவில்லை. தம்பியுடைய படிப்பிலெ நான் ரொம்ப கவனமாக இருந்தேன். அடிக்கடி ஸ்கூல் போய் அவன் எப்படி படிக்கிறான் என்று கேட்டுட்டு வருவேன். அப்பொத்தான் அந்த ஸ்கூல்லெ இருந்த டீச்சருக்கும் எனக்கும் காதல் தொடங்கினிச்சு. நாளுக்கு நாள் ஆலமரமாக வளர்ந்துச்சு.

அவ பேரு ரோஸி, ரொம்ப அழகா இருப்பாள் ஆங்கிலோ இந்தியன், பூர்வீகம் கொச்சின், அவளோட அச்சன் ரயில்வேயில் வேலை செஞ்சிக்கிட்டுருக்கார் அதனாலெ அவங்க கோயம்புத்தூர்லேயே தங்கிட்டாங்க.  நாங்க சிரியன் கத்தோலிக். ஆரம்பத்திலே எனக்கொரு பயம், அவ படிச்சவ, டீச்சர் ஞான் படிக்கலெ அது எனக்கொரு உறுத்தலா இருந்துச்சு. அவ அதெப்பத்தி நெனைக்கலெ ஆனா அவ வூட்டுலெ பெரிய எதிர்ப்பா இருந்துச்சு. அவளொட உறவுகாரப் பையன் ஆஸ்திரேலியாவில் இருக்கானாம் அவனுக்கு கட்டிவைக்கனும்னு அவளோட அப்பன் ஒரே நிலையா இருந்தான், என்னெ மிரட்டினான், அம்மா பயந்தாங்க ஆனா சம்பாதிக்கிற நம்பிக்கையிலேயும்  அவ கொடுத்த தைரியத்திலேயும்  அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் . இப்பொ ஒன்னரை வயசுலெ ரெஜினா என்ற பெண் கொச்சு ஒன்னு இருக்கு.

“இப்பொ ஏன் அந்த வேலையை உட்டுபுட்டு இங்கே வந்தே?”

“ராமகிருஷ்ணன் என் சின்ன வயசு சினேகிதன். நானும் அவனும் ஒன்னா படிச்சோம். அவன் பம்பாய் வந்தபிறகு ஒரு நாள் என்னை சந்திக்க கோயம்புத்தூர் வந்தான் அப்போதுதான் சொன்னான், நீ பாம்பாய் வந்துடு அங்கே இதெவிட நல்ல சம்பளம் கிடைக்கும் தவிர துபை குவைத் போன்ற கல்ஃப் கண்ட்ரிக்குப்போக நிறைய வாய்ப்பு கிடைக்கும் என்று. கல்யாணத்துக்குப் பிறகு ரோஸியை அவ அப்பன் சேர்த்துக்கலெ அவ எங்ககூடத்தான் இருக்கிறாள். அதனால் ரோஸியை விட்டுட்டு வர மனசில்லை. நான் பாத்துக்கிறேன் நீங்க போங்கன்னு அவதான் என்னெ ஊக்கப்படுத்தினாள்.”

“சரி, பம்பாய் வந்துட்டே வேலையிலும் சேந்தாச்சு சம்பளத்தைப் பார்க்காமல் லட்சியத்தை அடையும் வரை மனம்தளராமல் வேலை செய். குருவாயூரப்பன் ஒருபோதும் கைவிடமாட்டார்” என்று என்னை மேலும் ஊக்கப்படுத்தினார்.

நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன, நான்கைந்து முறை ஊருக்கும் சென்று வந்துவிட்டேன், ஒரு நாள் எதிர்பாராத திருப்பம் ஏற்படும் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆம், அன்று முடித்துக்கொடுக்கவேண்டிய ஒரு வெளிநாட்டு ஆர்டரை கிடப்பில் போட்டுவிட்டு போய்விட்டார் என்னுடைய மேலாளர். அன்று மாலை டூட்டி முடியும் நேரத்தில் பாக்டரி மேனேஜர் ‘எங்கே அந்த ஃபினிஷ்டு ப்ராடக்ட்?’ என்று கேட்க ஃபோர்மேன் நெளிய ஆரம்பித்துவிட்டார்.

‘சார் இன்று அவன் வரவில்லை, நாளை எப்படியும் கொடுத்துவிடலாம்’ என்று இழுத்தபோது ‘உன்னை சஸ்பெண்டு செய்துவிடுவேன், இன்று அது வேண்டும். உன் அப்பன் – அந்தவெளிநாட்டுக்காரன் உட்கார்ந்திருக்கான், இந்த ஆர்டர் கிடைக்காமல் போனால் பல லட்சம் நஷ்டமாகும் நீ கொடுப்பியா?’ என்று ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பித்துவிட்டார்.

அபோது நான் மெதுவாக, “சார் நீங்க அனுமதி கொடுத்தா இன்னும் மூனு மணி நேரத்துலே முடிச்சு தந்திடறேன்” என்று பவ்யமாகக் கேட்டேன். “ஒ கே, கேரிஆன்” என்று சொல்லிவிட்டு இந்த வேலை முடியும் வரை இந்த செக்க்ஷனில் யாரும் வீட்டுக்குப் போகக்கூடாது என்று கடுமையான உத்திரவு போட்டுவிட்டு தன் ஆபீஸுக்குப் போய்விட்டார்.

குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே அந்த வேலையை முடித்து கொடுத்துவிட்டேன். கம்பெனியின் ரெப்புடேஷனைக் காப்பாற்றியதற்காகவும் செய்துக்கொடுத்த அந்த வேலை நேர்த்தியாக அமைந்திருந்ததாகவும் அதனால் அந்த ஆர்டர் போட்டிகளுக்கிடையில் நமக்கே கிடைத்துவிட்டதாகவும் சொல்லி என்னை பாராட்டிவிட்டு கொஞ்சம் பணமும் பரிசும் கொடுத்து அந்த பிரிவுக்கு சூப்பர்வைசராக பதவி உயர்வு செய்துவிட்டார்கள். இது இரண்டு மாதங்கள் கழித்து நடந்தது.

இரண்டாண்டுகள் உருண்டோடின, நானும் பல முறை கோயம்புத்தூர் சென்று அம்மாவையும் மனைவி மகளையும் பார்த்துவிட்டு வந்தேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும் சொந்த ஊருக்கு சென்று அங்கேயே தங்கிவிடும்படி அம்மாவிடம் சொல்வேன். இந்த வேலையைவிட்டுப் போக மனமில்லை தவிர நம்மை இந்த அளவுக்கு உயர்த்தியது இதுதான் என்று சொல்லி என் வாயை அடக்கிவிடுவார். என் மனைவியும் வேலையில் இருந்ததால் நான் வற்புறுத்தி சொல்லவில்லை.

வாட்ச்மேன் வேலைப் பார்த்த மாத்துக்குட்டி அண்ணாச்சி பதவி உயர்வு பெற்று ஆபிஸில் மேனேஜருக்கு உதவியாளராக இருந்தார். என்றாலும் எங்களுக்குள் எந்த விரிசலும் இல்லை, நாங்கள் ஒன்றாகவே தங்கியிருந்தோம். அவர் ‘மூடு’ நன்றாக இருந்தால் கம்பெனியின் வளர்ச்சி பற்றி சொல்வார், யார் யாருக்கு சம்பளம் கூடும், ப்ரமோஷன் கிடைக்கும் என்று என்னிடம் மட்டும் சொல்வார். காரணம் அவர் சொல்லும் செய்தி எதனையும் வெளியில் சொல்லமாட்டேன், என் ஆப்த நண்பன் ராமகிருஷணன் உள்பட என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.

ஒரு நாள்! “இந்தா இந்த மிட்டாயை சாப்பிடு” என்று குஜராத்தி சேட் கடையில் வாங்கி வந்த பாதாம் அல்வாவைக் கொடுத்தார்.

“என்ன அண்ணாச்சி! இன்னைக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கீங்க, எதாவது விஷேசமா? ஸ்வீட்டெல்லாம் கொடுக்கிறீங்க, எதாவது ப்ரமோஷன்…..” என்று இழுத்தேன்.

“அதெல்லாம் ஒன்னுமில்லேப்பா! ஒரு சந்தோஷமான செய்தி! கேட்டா நீயே அசந்து போய்டுவே” என்றார்.

“அப்படி என்னாண்ணா சந்தோஷமான செய்தி?” என்று சந்தேகத்துடன் கேட்டேன்.

“நீ எனக்கு என்னத்தருகிறாய் என்று சொன்னால் அந்த செய்தியை ஒனக்கு சொல்றேன். ஆனால் அது உன் சம்மந்தப்பட்டதுதான்” என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்தார்.

ஆபிஸில் வேலை செய்கிறவராச்சே எதோ நல்ல விஷயமாகத்தான் இருக்கும் என்று இருப்புக்கொள்ளாமல், “சரி நீங்கள் என்ன கேட்கிறீர்களோ அதை நான் வாங்கித்தாறேன் சொல்லுங்கள்” என்றேன்.

“உன்னிடம் பாஸ்போர்ட் இருக்கிதா? இல்லேன்னா உடனே எடு, நீ கூடிய விரைவில் வெளிநாடு போகப்போகிறாய்” என்றார்.

“இருக்கிறது. இப்படி மொட்டையா சொன்னா எப்படி? எனக்கு ஒன்னும் விளங்கலெ. நான் அதுக்கான முயற்சி எடுக்கவே இல்லையே”  என்றேன்.

“தம்பி! நீ ஒன்னும் முயற்சிக்க வேண்டாம் அதிஷ்ட லஷ்மி ஒன்னெ தேடிக்கிட்டு வாராள்.”

“இப்படி சஸ்பென்ஸ் வச்சுப் பேசாதீங்க, கொஞ்ச விவரமா சொல்லுங்க” என்றேன்.

“ஒன்னுமில்லேப்பா ஒரு மாசத்துக்கு முன் நம்ம ஆபிஸ்லே மீட்டிங் நடந்துக்கொண்டே இருந்துச்சு, அன்னைக்கு வந்த வெள்ளைக்காரனும் கூட ஒரு அரபியும் வந்து நம்ம மொதலாளியோட ரொம்ப நேரம் பேசினாங்க. இது இரண்டுமூனு நாள் நடந்துச்சு. நம்ம மேனேஜரும் கலந்துக்கிட்டார். இரண்டு நாளைக்கு முன் சில ஃபைல்கள், சில ரெக்கார்டுகள் கேட்டார். நான் எல்லாம் எடுத்துக்கொடுத்தேன்.

போறப்போக்கைப் பார்த்தா கல்ஃப் கண்ட்ரியில் நம்ம கம்பெனி பிராஞ்சு தொறக்கிற மாதிரி தெரியுது. இங்கேந்து சில பேரை அழைச்சிக்கிட்டுப் போறாங்க அதுலே நீயும் ஒருத்தன். பேச்சு அடிபடுது அதனாலெ நீ ரெடி ஆயிக்கோ. இது உனக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியமாக இருக்கட்டும். ராமகிருஷ்ணனுக்குக்கூடத் தெரிய வேண்டாம்” என்றார்.

இதை கேட்டதும் எனக்கு வானத்தில் பறப்பதுபோல் இருந்தது, கற்பனையில் உலாவினேன், மகிழ்ச்சியில் வானத்தின் எல்லைக்கே போய்விட்டேன். அவருடைய இரண்டு கைகளையும் எடுத்து கண்களில் ஒத்திக்கொண்டபோது என்னையும் அறியாமல்  கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

“ஏய், ஏய்!  என்ன ஆச்சு உனக்கு? இது ஒரு இன்ஃபர்மேஷன்தான், இதுக்கே இப்படியானா…? அமைதியா இரு எல்லாம் அந்த குருவாயூரப்பன் துணை” என்று என்னை ஆசுவாசப்படுத்தினார்.

அதன்பிறகு இரண்டுமூன்று மாதம் எந்த தகவலுமில்லை. ஆனால் என் கற்பனை மட்டும் ஓயவில்லை, தவிர எனக்குள்ளே ஒரு வைராக்கியம் உருவாகியது. எங்கள் குடும்பத்தை யார் யாரெல்லாம் அவமதித்தார்களோ அவர்கள் முகத்தில் கரியை பூசவேண்டும்; கிராமத்தில் தலை நிமிர்ந்து வாழவேண்டும்; எல்லோரும் மூக்கில் விரலை வைக்கவேண்டும்; அதைவிட பார்ட்டி ஆபிஸை அவமானப் படுத்தவேண்டும். அதற்கு நிறைய காசுவேண்டும்; நான் பணக்காரனாக வேண்டும் என்று என் உள்ளத்தில் உருவான எண்ணத்தை அடக்கிவைத்துக்கொண்டிருந்தேன்.

திடீரென்று ஒரு நாள் ஜெனரல் மேனேஜர் என்னை ஆபிஸிற்கு அழைத்தார், அங்கு சென்றபோது என் கூட வேறு வேறு பிரிவுகளில் வேலை பார்ப்பவர்கள் பதினைந்துபேர் நின்றுகொண்டிருந்தனர். அங்கிருந்த எங்களை ஒருமுறை பார்த்தார். அந்த பார்வை இவர்கள் பொருத்தமானவர்கள்தானா என்பதுபோல் இருந்தது. பிறகு மெதுவாக தொண்டையைக் கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார். “உங்களை நான் இங்கே வரவழைத்ததன் காரணம்…. என்று இழுத்துவிட்டு,  இங்கே சுமார் முன்னூறு தொழிலாளிகள் வேலை செய்கின்றனர் அவர்களில் பதினைந்து பேரை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு பெரிய வேலையை ஒப்படைக்க இந்த கம்பெனி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நீங்கள் அந்த வேலைக்கு உத்திரவாதமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்” என்று பீடிகையைப் போட்டவாறு எங்களை ஏறிட்டுப்பார்த்தார்.

அவருடைய அந்தப் பார்வை என்ன சொல்கிறீகள்? என்று கேட்பதுபோலிருந்தது. நாங்கள் எல்லோரும் கோரஸாக நிச்சயாமாக இருப்போம், அதுமட்டுமல்ல கம்பெனியின் புகழுக்கு எந்தவகையிலும் களங்கம் கற்பிக்கமாட்டோம் என்று சொன்னோம்.

எங்கள் வாக்கைக் கேட்டு புன்முறுவலித்தவராக தொடர்ந்தார், “நாம் கூடிய விரைவில் வெளிநாட்டில் காலடி வைக்கப்போகிறோம். அரபு எமிரேட்டில் நம்முடைய கிளை ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறோம், அதற்கான இடம் மற்ற வசதிகள் எல்லாம் பார்த்தாகிவிட்டது, இங்கே வந்திருக்கும் உங்கள் அனைவரையும் முதல் பிரிவாக அங்கே அனுப்ப இருக்கிறோம். நீங்கள் அங்கே சென்று வெளிநாட்டு ஆர்டர்கள் அனைத்தையும் செய்யவேண்டும். அந்த நாட்டின் சட்டத்திட்டத்திற்குட்பட்டு உங்கள் சம்பளம் மற்ற வசதிகள் எல்லாம் மாற்றி அமைக்கப்படும், எனவே உங்கள் அனைவரின் பாஸ்போர்ட்டை நாளை என்னிடம் சமர்ப்பிக்கவும்” என்றார்.

மறு நாளே பாஸ்போர்ட்டை சமர்ப்பித்துவிட்டு பதினைந்து நாட்கள் லீவு வாங்கிக்கொண்டு கோயம்புத்தூர் சென்றேன் இந்த நல்ல செய்தியை அம்மாவிடமும் மனைவியிடமும் பகிர்ந்தேன். அத்துடன் அம்மாவை கோவையில் நீடிக்க விரும்பவில்லை எனவே படித்துக்கொண்டிருக்கும் தம்பியை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு மனைவியையும் அம்மாவையும் சொந்த ஊருக்குப் போக வற்புறுத்தினேன். அம்மா மறுத்தார்கள் தவிர இப்போது அவசரப்பட்டுப் போகக்கூடாது, நீ அங்கு சென்று முதல் சம்பளம் வாங்கியபிறகு போகிறேன் என்று முடிவாக சொல்லிவிட்டார்கள். நான் மட்டும் ஊருக்கு சென்று மாமாவைப் பார்த்து அரபு நாடு போகும் விசயத்தை சொல்லிவிட்டு அம்மாவை மீண்டும் இங்கேயே குடியமர்த்தும்படியும் சொல்லிவிட்டு பம்பாய் திரும்பினேன்.

பம்பாய் திரும்பிய உடனேயே மாத்துக்குட்டியிடம் அரபு நாடு போகும் விசயம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டேன். விசா வேலைகள் நடந்துக்கொண்டிருக்கின்றன, அவை வந்தவுடன் விமான டிக்கட் எடுத்துவிடுவார்கள் எல்லாம் பத்து இருபது நாட்களில் முடிந்துவிடும், நீ இந்த மாதமே போகும்படியாக இருக்கும் என்றார்.

அவர் சொன்னதிலிருந்து என் மனம் வானில் பறக்க ஆரம்பித்தது ஒவ்வொரு நாளும் அப்படி இருக்கவேண்டும் இப்படி செய்யவேண்டும் என்று எதிர்கால வாழ்க்கையைப் பற்றி கற்பனைப் பண்ணிக்கொண்டே இருந்தேன். என் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த மாத்துக்குட்டி அண்ணாச்சி, “ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்” என்று கேட்டார்.

“இல்லை எப்போதும்போல்தான் இருக்கிறேன், ஆனால் உங்களை விட்டுட்டுப் போறோமே என்ற கவலைதான்” என்று ஒரு பொய்யை சொன்னேன்.

“இதோ பார் என்னை நினச்சா இங்கே வந்தாய், எதோ வந்தாய் பழகினோம் இப்பொ நீ வெளிநாடு போறாய், அங்கே வேறு ஆட்கள் பழக்கம் ஏற்படும் இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம்” என்று அறிவுரை சொன்னார். எனக்கல்லவா தெரியும் நான் எதை நினைத்துக் கனவு கண்டுகொண்டிருக்கிறேன் என்று.

பதிவு – 2

இப்படி தினம் தினம் கனவு கண்டுகொண்டிருந்த அந்த நாளும் நெருங்கியது. முதல் கட்டமாக நாங்கள் ஐந்துபேர் ஏர்இந்தியா விமானத்தில் புறப்பட்டோம். முதன்முறையாக விமானப் பயணம், சொகுசான இருக்கை, குளு குளு ஏசி, புன்னகை மாறாத பணிப்பெண்களின் வரவேற்பு. விமானம் புறப்பட்ட சற்று நேரத்தில் பரிமாறப்பட்ட ருசிமிக்க உணவு, அந்த உணவின் மயக்கத்தில் என்னையறியாமலே கண் அயர்ந்தேன்

என்னருகே யாரோ இருப்பதுபோல் உணர்ந்தேன்,  பார்த்தபோது அழகிய இரண்டு மங்கைகள் பார்ப்பதற்கு ஒரே தோற்றத்துடன் இரட்டைப் பிறவிகள் போல் இடமும் வலமுமாக நின்று என்னையே பார்த்துக்கொண்டிருக்கின்றனர்; நான் ஓர் அழகிய ஆசனத்தில் அமர்ந்திருக்கிறேன்;  அது பழங்கால ராஜாக்கள் அமரும் ஆசனம்போல் ஆனால் ஒடுக்கமாக ஒரு ஆள் மட்டும் அமரும் அளவில் இருக்கிறது, சிகப்பு நிறத்தில் மெத்தைப் போடப்பட்டு தங்கத்தினால் இழைக்கப்பட்டிருக்கிறது. அது சிம்மாசனமா, இல்லை மயிலாசனமா என்று புரியவில்லை. ஆனால் அமருவதற்கு சுகமாக இருக்கிறது. அந்த மங்கைகள் இருவரும் சுமார் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க வனப்பும் அழகுமுள்ளவர்களாக இருக்கின்றனர்; பதினான்காம்பாக்கத்து நிலவுபோல ஒளிர்கின்ற முகம், கண்களிலே ஒருவித காந்தக் கவர்ச்சி, படர்ந்த நெற்றி, சிவந்தக் கன்னங்கள், அந்த கன்னங்களைப் பிரிக்கும் அளவான மூக்கு, செக்கச்செவேலென்ற கோவைப்பழத்தையொத்த இதழ்கள், நீண்ட கேசம், மொத்தத்தில் கண் இமைக்காது பார்த்துக்கொண்டே இருக்கத்தோன்றும் முகம். முகம் அப்படியென்றால் கழுத்து… அதை எதனுடன் ஒப்பிடுவது? பிடித்துவைத்தார்போல், அதில் முகத்தைப் பதியவைத்து முகர்ந்துகொண்டே இருக்கலாம். பரந்த நெஞ்சில் கவிழ்த்து வைத்த இரண்டு தங்கக் கலசங்கள்; குறுகிய சமவெளிபோல் வயிற்று பிரதேசம், மொத்த உருவத்தையும் வருணிக்க வார்த்தைகள் இல்லை. ரோசாப்பூ நிறத்திலிருந்த அவர்கள் கையில் தங்கத்தாம்பாளத்தில் வெள்ளிக்கிண்ணத்தில்  ஒருவர் கையில் பாலும் ஒருவர் கையில் தேனும் வைத்து ஏந்தியவாறு என்னை அருந்த வேண்டினர். நான் வேண்டாம், நீங்கள் யார் என்று கேட்டேன். அவர்களோ எந்த பதிலும் சொல்லாமல் ஒரு புன்முறுவலை உதிர்த்துவிட்டு இது வேண்டாமென்றால் பழரசம் அருந்துங்கள் என்றனர். அப்போதுதான் அவர்கள் குரலைக் கேட்டேன். குயில் கூவுவதுபோலிருந்தது.

வேண்டாம் என்று கையால் சைகை செய்தேன். நீங்கள் அருந்தித்தானாகவேண்டும் என்றனர். நீங்கள் யாரென்று சொல்லாதவரை எதையும் அருந்தமாட்டேன் என்றேன். அவர்களோ விடுவதாக இல்லை. என்னருகில் அமர்ந்து அணைத்தவண்ணம் ஒரு குழந்தைக்கு பாலூட்டுவதுபோல் பருக வைத்தனர்.

அந்த ஸ்பரிசம் என்னைத் திக்குமுக்காடவைத்தது; என்னை நான் மறந்தேன், அவர்கள் கொடுத்த அந்த ரசத்தை மெதுவாக அருந்தினேன் அவர்கள் கொடுத்த அந்த பழரசம்.. எந்தப் பழத்தின் ரசம் என்று புரியவில்லை;  தனி சுவையாக இருந்தது. சுவையின் இன்பத்தில் இன்னும் வேண்டும் என்று கேட்டபோது அதே புன்முறுவலுடன் கண் சிமிட்டிவிட்டு நகர்ந்தனர். அவர்கள் வானில் மிதந்து செல்வதுபோல் தோன்றியது.

அவர்கள் நடந்துச்சென்ற அழகை ரசித்துக்கொண்டிருந்தபோது திடு திடு என்ற ஒரு உலுக்கல், கண் விழித்துப்பார்த்தபோது துபை பன்னாட்டு விமான நிலையத்தில் தரை இறங்கி ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தது நாங்கள் பயணித்த விமானம். பக்கத்திலுள்ள பயணிகள் இறங்க ஆயத்தப் படுத்திக்கொண்டிருந்தனர். ஒரு வினாடியில் நான் சுதாரித்துக்கொண்டாலும் கனவிலிருந்து வெளிவர மனம் மறுத்தது.

விமானத்தை விட்டிறங்கி இமிக்ரேஷன் செக் அப் கவுண்டரை நோக்கி நடந்தபோது எதோ பளிங்கு மாளிகையில் நடப்பது போன்றிருந்தது. அந்த அளவுக்கு பல நிறங்களில் சலவைக் கற்களால் இளைத்து வைத்திருக்கிறார்கள். நாங்கள் வெளியே வந்தபோது எங்களை அழைத்துச் செல்வதற்காக பஸ் சகிதமாக கம்பெனி பிரதிநிதி காத்திருந்தார். அது இரவு நேரம் எங்கு பார்த்தாலும் மஞ்சள் மஞ்சேளென்று சோடியம் விளக்குகள் இரவை பகலாக்க முயற்சித்துக்கொண்டிருந்தன. ஒரு மணி நேர பயணத்துக்குப்பின் ‘ஜபல் அலி’ என்ற இடத்தை அடைந்தோம். அங்குதான் எங்கள் கம்பெனி இருந்தது. நடு இரவாக இருந்ததால் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று படுத்துவிட்டோம். படுத்தாலும் அந்த காட்சி என் கண்முன்னே ஓடிக்கொண்டிருந்தது, எப்போது உறங்கினேன் என்று தெரியாது. காலையில் விழித்தபோது விமானத்தில் கண்ட கனவு என் நெஞ்சைவிட்டகலாமல் பசுமையாகவே நிலைத்திருந்தது.

மறுநாள் நாங்கள் ஃபாக்டரிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம், அங்கு ஏற்கனவே இருபதுபேர் இருந்தனர். அவர்களெல்லாம் அங்கேயே வேலைக்கு சேர்க்கப்பட்டவர்கள் என்று பின்னால் தெரிந்துக்கொண்டேன். எங்களுக்கு வேலைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. எனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை அதிக சிரத்தை எடுத்து மிக கவனமாக செய்துவந்தேன். அதனால் எனக்கு நல்லபெயர் கிடைத்தது மட்டுமல்ல சில குறிப்பிட்ட வேலைகளை என்னிடம் கொடுத்தனர்.  முகம் சுளிக்காமல் பாராது வேலை செய்துவந்தேன்.

நாங்கள் இருந்த இடம் நகர்புறத்தை விட்டு அறுபது எழுபது கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது, அது ஒரு தொழில் நகரம்; அப்போதுதான் அது வளர்ந்துக்கொண்டிருந்தது. பல நிறுவனங்கள் புதிதுப்புதிதாக முளைத்துக்கொண்டிருந்தன; எங்கு பார்த்தாலும் கட்டுமானப் பணிகள் நடந்துக்கொண்டிருந்தன; ஹோட்டல்களோ மற்ற கடைகளோ கிடையாது; அங்கொன்றும் இங்கொன்றுமாக கேண்டினும் சிறிய அங்காடிகள் ஒன்றிரண்டும் இருந்தன. அவற்றில் எல்லா சாமான்களும் கிடைக்காது, அவ்வப்போது தேவைக்குத் தட்டுமுட்டு சாமான்கள் வாங்கிக்கொள்ளலாம்; அதுவும் விலை அதிகம். அவர்களும் நகரத்திலிருந்து வாங்கிவருவதால் அந்தவிலை. அடிக்கடி நகரத்திற்குப் போகும் வாய்ப்பு குறைவாக இருந்தது. வெள்ளிக்கிழமை வார லீவு, அன்றுதான் செல்லமுடியும். போன புதுதில் நகரை சுற்றிப்பார்த்தேன்

கம்பெனி முன்செலவுக்குப் பணம் கொடுத்திருந்ததால் தேவையான சாமான்கள் வாங்கிக்கொண்டேன். பெரும்பாலனவர்கள் சிட்டிக்குச் செல்வார்கள் நான்மட்டும் அவசியம் இருந்தால்மட்டும் செல்வேன். தேவையில்லாமல் போனால் நிச்சயமாக அனாவசிய செலவு ஆகுமென்பதால் போவதே இல்லை. எதாவது தேவைப்பட்டால்  யாரிடமாவது வாங்கிவரச் சொல்வேன்.
 
முதல் மூன்று மாத சம்பளத்தைச் சேர்த்து ஊருக்கு அனுப்பி குடும்பத்தை சொந்த ஊருக்குப் போகும்படி சொன்னேன். அம்மாவுக்கு வேலையை விட்டுவர மனமில்லை, தவிர மனைவியின் டீச்சர் உத்தியோகமும் போகும், இரண்டு வருமானம் நின்றுவிடும் என்று அம்மா யோசித்தார்கள். என்னுடைய வற்புறுத்தலில் தம்பியை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு அம்மாவும் மனையும் மகளும் எங்கள் கிராமத்தை அடைந்தார்கள்.  ஆரம்பத்தில் அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் பல பிரச்சினையை ஏற்படுத்தினார்கள்; கொலைகாரக் குடும்பம், ஓடிப்போனவள் என்றெல்லாம் அவமானப்படுத்தினார்கள்; என் மனைவியை சட்டைக்காரி அது இது என்று இளக்காரமாகப் பார்த்தார்கள். என்னுடைய வளர்ச்சியைக் கண்டு அவர்களின் வாய் ஓய்ந்து எங்களிடம் உறவு கொண்டாட வந்தார்கள். அம்மாவும் மனைவியும் அவர்களுக்கு சமயம் பார்த்து சரியான பதிலடிக் கொடுத்தார்கள்.

எங்களுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு என் மனைவி டியூசன் சொல்லிக்கொடுத்தாள், மாமாவின் உதவியினால் ஆறு மாதத்தில் என் மனைவிக்கு பக்கத்து டவுனில் அதே டீச்சர் வேலை கிடைத்தது. என் ஒரே கனவு எங்கள் கிராமத்திலேயே நான் பெரிய பணக்காரனாகவேண்டும் என்பதுதான். அதனால் இரவு பகல் பாராது உழைத்தேன். எந்த வேலை கொடுத்தாலும் முகம் சுழிக்காமல் செய்து வந்தேன். அதனால் என் சம்பளம் அதிகரித்து வந்தது. தொடர்ந்து பதினைந்து ஆண்டுகள் இரவு பகல் பாராது வேலை செய்து வந்தேன். இந்த பதினைந்தாண்டுகளில் ஐந்து முறை ஊர் சென்று வந்தேன். என் பேங்க் பேலன்ஸ் அதிகரித்துக்கொண்டே வந்தது. என் வீட்டை புதுப்பித்தேன். ஒரு பகுதியில் மாமா ஒரு பேங்க் உத்தியோகஸ்தரை குடி அமர்த்தினார். அதனால் எங்கள் வருமானம் இன்னும் பெருகியது.  கையிலிருந்த பணத்துடன் பேங்கில் சிறிது லோனும் வாங்கி அருகில் குறைந்த விலைக்கு வந்த  ரப்பர் எஸ்டேட் ஒன்றை என் மகள் பெயரில் வாங்கினேன். அச்சன் ஜெயிலிலேயே இறந்துவிட்டதாக செய்தி வந்தது. அந்த அதர்ச்சியோ என்னவோ அம்மாவுக்கு சுகவீனம் தொடங்கியது. அச்சன் எவ்வளவு கெட்டவராக இருந்தாலும் என்னைப் பெற்ற அச்சனல்லவா எனக்கும் அதிர்ச்சியாகத்தானிருந்தது.

அம்மாவை பல டாக்டர்களிடம் காண்பித்தும் பலனில்லை, சுகவீனம் அதிகரித்துக்கொண்டே போனது. என்னை ஊர் வரும்படி என் மனைவி தபால் எழுதினாள் போனிலும் சொன்னால் என் பணத்தாசை வந்தால் செலவாகும் தவிர எனது சம்பளம் நஷ்டப்படும், நான் ஊர்வருவதற்கு செலவாகும் பணத்தைக்கொண்டு அம்மாவை இன்னும் நல்ல டாக்டரிடம் காண்பிக்கலாம் என்று சொன்னேன். பலன்?

அம்மாவின் நேரம் முடிந்தது. நான் அவசர அவசரமக ஊர் புறப்பட்டு வந்தேன்.  எங்கள் வீட்டில் குடியிருக்கும் அந்த பேங்க் ஊழியர் ராஜேஷின் குடும்பம் எனக்குப் பக்கத்துணையாக இருந்து எல்லா காரியங்களையும் முடித்தனர்.  மாமாவுக்கு வயதாகிவிட்டதால் முன்புபோல் ஓடியாடி வேலை செய்ய முடியவில்லை. இப்போதெல்லாம் அவரால் நடப்பதுகூட சிரமமாக இருந்தது. அம்மாவின் மறைவுக்குப் பிறகு பெரிய பாதுகாப்பை இழந்ததைபோல் உணர்ந்தேன்.

ஆம், இப்போது மனைவிக்கும் மகளுக்கும் துணை யாருமில்லை. ராஜேஷின் குடும்பம் உதவிக்கு இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. தம்பி படித்துமுடித்துவிட்டு பெங்களூரில் ஒரு பேங்கில் வேலையிலிருந்ததால் அவனாலும் இங்கே இருக்கமுடியாது. மாமா, தம்பி, மனைவி மூவரிடமும் ஆலோசனை நடத்தினேன். என்னை இங்கேயே தங்கிவிடும்படி மாமாவும் தம்பியும் வற்புறுத்தினார்கள், ஆனால் மனைவி ரோஸி இப்போது வேண்டாம் இன்னும் கொஞ்சம் பணமும் நகையும் சேர்த்துக்கொண்டு தங்கிவிடலாம் அதுவரை நீங்கள் மீண்டும் செல்லுங்கள் என்றாள். அவள் சொல்படியே மீண்டும் என் பணியைத் தொடங்கினேன். மதம் ஒரு முறை போனில் பேசினேன். ஒன்னரை ஆண்டுகள் கழித்து ஊர் திரும்பியபோது என் மகள் நன்றாக வளர்ந்திருந்தாள்.  அம்மாவையும் மகளையும் பார்த்தால் அக்கா தங்கை என்றே சொல்வார்கள் அப்படி என் ரோஸி அவ்வளவு செழுமையாக இருந்தாள். எங்கள் வருமானம் நான் எதிர்பார்த்ததைவிட அதிகமகாவே இருந்தது. என் லட்சியம் நிறைவேறும் நாள் நெருங்கிக்கொண்டிருந்தது, இனி அங்கே இருப்பதில் அர்த்தமில்லை எனவே இன்னும் ஓராண்டில் நிரந்தரமாக தங்கிவிட முடிவு செய்து இந்த நல்ல செய்தியை ரோஸியிடம் சொல்லிவிட்டு ஒரு சுனாமி வரப்போவது தெரியாமல் மீண்டும் மகிழ்ச்சியுடன் பயணமானேன்.

ஆறேழு மாதங்கள் ஓடின, அடிக்கடி போனில் பேசுவேன். ரோஸியிடம் பேசும்போது  எந்த சலனமுமில்லாமல் மகிழ்ச்சியுடனேயே பேசுவாள், ஆனால் மகள் ரெஜினா மட்டும் எதோ தயக்கத்துடன் பேசுவதுபோல் தோன்றியது. ஓரிருமுறை கேட்டபோது ஒன்றுமில்லை என்று சொல்லிவிடுவாள். என்னுடைய லட்சியத்தை அடையக்கூடிய நிலைக்கு வந்துவிட்டேன். இப்போது என்னுடைய  பேங்க் பேலன்ஸ் பதினைந்து லட்சத்தைத் தாண்டியது. எல்லாம் ரோஸி பெயரிலேயே இருந்தது. அதுமட்டுமல்லாமல் ரப்பர் எஸ்டேட்டிலிருந்து வரும்

வருமானமும் அவள் பெயரிலேயே இருந்தது. வீட்டு நிர்வாகம் முழுவதையுமே அவள் கவனித்து வந்ததால் பணம் முழுவதும் ரோஸியிடமே இருந்தது.

திடீரென்று ஒரு நாள் ரெஜி போன் பண்ணி எப்போது வருவீர்கள் அப்பா என்று கேட்டாள். இன்னும் ஒரு மாதத்தில் வருவதாக சொன்னேன். எவ்வளவு சீக்கிரமாக வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரமாக வாருங்கள் என்றாள். அவள் குரலில் பதற்றம் தெரிந்தது, ஏன் என்று கேட்டதற்கு எல்லாம் நேரில் பேசிக்கொள்ளலாம் என்று மட்டும் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள். நானும் என் கம்பெனியில் சொல்லி எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு என்னுடைய சேமிப்பு மற்றும் கிராஜுவிட்டி பணத்தை வாங்கிக்கொண்டு புறப்படத் தயாரான செய்தியை ஒரு வாரத்திற்கு முன்பே தெரிவித்தேன்.

துபை பன்னாட்டு விமான நிலையம், புதிதாகக் கட்டப்பட்ட டெர்மினல் 3 ல் நண்பர்களுக்கு பிரியா விடை கொடுத்துவிட்டு  விமான நிலையத்தில் உள்ளே நுழைந்தேன். அது விமான நிலையமா சொர்க்க பூமியா என்று தெரியாத அளவுக்கு இத்தாலிய மார்பிள்களும் பெல்ஜியக் கண்ணாடிகளினாலும் இழைத்து வைத்திருந்தார்கள். ஒரு பக்கம் வாழ்வளித்த இந்த நாட்டை விட்டுப் போகிறோமே என்ற கனத்த இதயத்துடனும் மறுபக்கம் அழகிய மனைவி மகளுடனும் என்றென்றும் வாழப்போகிறோமே என்ற மகிழ்ச்சி உணர்வுடனும் வாக்வேயில் ஊர்ந்து மின் படிகளில் உயர்ந்து விமானத்தை அடைந்து என் இருக்கையில் அமர்ந்தேன். கண்கள் கனத்தன அந்தக் காட்சி நினைவுக்கு வந்தது, சற்று நேரத்தில் விமானம் உறுமியவாறு விண்ணை நோக்கி உயர்ந்தது.

இருபத்தைந்து ஆண்டுகள்! கண் மூடி கண் திறப்பதற்குள் உருண்டோடி இருக்கின்றன, என்னவோ நேற்று வந்ததுபோல் தோன்றியது.

எத்தனை மாற்றம்! நான் வரும்போது வெறும் கட்டடங்களைத் தவிர வேறு ஒன்றுமில்லாமல் இருந்தது, ஆனால் இப்போது எத்தனை ஷாப்பிங் மால்கள்; பாலையாக, திடலாகக் கிடந்த இடங்களெல்லாம் சோலையாக, பல்லடுக்கு மாடி கட்டிடங்களாக மாறி இருந்தன; இன்னும் மாறிக்கொண்டும் இருக்கின்றன. ஏன் நான் வந்தபோது எங்கள் கம்பெனியுடன் சேர்த்து ஒன்றிரண்டு நிறுவனங்கள்தான் இருந்தன, ஆனால் இப்போது கண்ணாடிகளாலான அலுவலகங்கள், சிறிய பெரிய பன்னாட்டு நிறுவனங்கள், பல கப்பல்கள் ஒரே நேரத்தில் நிறுத்தத்தக்க பெரிய துறைமுகம்; எல்லாப் பொருள்களும் கிடைக்கத்தக்க ஹைப்பர் மார்க்கட்டுகள், பன்னாட்டு உணவு வகைகளை அள்ளித்தரும் உணவு விடுதிகள்; அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் அளவுக்கு ஒரு பெரிய நகரமாக; சொர்க்க பூமியாக மாறி இருந்தது.

பதிவு – 3

என்னில்தான் எத்தனை மாற்றம்? முன்பு பம்பாயாக இருந்த மும்பைக்கு வரச்சொன்ன ராமகிருஷ்ணன்; தன் ரூமில் தங்கவைத்து வேலை வாங்கிக் கொடுத்து என் முன்னேற்றத்தில் அக்கறைக் கொண்ட மாத்துக்குட்டி அண்ணாச்சி; துன்பத்தின் உச்சத்திலிருந்தபோது உறுதுணையாக இருந்த மாமா; கோயம்புத்தூரில் ஆதரவளித்த தூரத்து உறவினர்; மாறாத அன்பை ஊட்டிய என் ரோஸி; என் ரோஸியை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடவேண்டும்! இந்தியாவில் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றி காண்பிக்க வேண்டும்; குறிப்பாக தாஜ் மஹாலுக்கு அழைத்துச் சென்று ஷாஜஹான் மும்தாஜ்மீது வைத்திருந்த ஒப்பில்லா காதலின் நினைவு சின்னத்தைக் காண்பிக்கவேண்டும் என்று எண்ணம் ஓடிக்கொண்டிருந்தபோது நெடும்பாசேரி விமானத்தாவளத்தில் விமானம் இறங்கியபோதுதான் சுய நினைவுக்கு வந்தேன். உடமைகளை எடுத்துக்கொடு வெளியே வந்தபோது தம்பி ஜான்சன் மட்டும் நிற்பதைக் கண்டேன்; என் கண்கள் அங்குமிங்கும் சுழன்றதைக் கண்ட அவன் ரோஸியும் ரெஜினாவும் வரவில்லை என்றான். ஏன் என்று கேட்டதற்கு காரில் போகும்போது பேசிக்கொள்ளலாம் என்று ஒரே வார்த்தையில் பதிலலித்துவிட்டு என்னை வேகமாக அழைத்துக்கொண்டு சென்றான். காரும் விரைவாக சென்றது, வழியில் எதுவுமே அவன் பேசவில்லை, ‘என்னப்பா காரில் போகும்போது பேசலாமென்றாய் ஒன்றும் சொல்லாமல் வருகிறாயே! ஏன் ரோஸி சுகமில்லாமல் இருக்கிறாளா? இல்லை ரெஜிக்குத்தான் சுகமில்லையா?’ என்றேன். அப்படி எல்லாம் ஒன்றுமில்லை, இன்னும் சிறிது நேரத்தில் வீடு வந்துவிடும் நீங்களே தெரிந்துக்கொள்வீர்கள் என்று புதிர் போட்டான். எதோ நடந்திருக்கிறது  இன்னும் பத்துபதினைந்து நிமிஷத்தில் வீடு வந்துவிடும் போனால் தெரிந்துவிடும் என்று அமைதியாக இருந்தேன்.

வீட்டை அடைந்ததுதான் தாமதம் “அப்பா” என்று என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள் மகள். ”ரெஜி உள்ளே போ, என்ன வந்ததும் வராததுமா” என்று தம்பி அதட்டினான்.

“என்ன? என்ன விஷயம்?” என்றேன் பதட்டத்துடன்.

“நீங்கள் பயணக் களைப்பிலிருக்கிறீர்கள், முதலில் முகம் கால் கழுவிவிட்டு வாருங்கள் உட்கார்ந்து அமைதியாகப் பேசலாம்” என்றான்

தம்பி.

“அப்பா! மோசம்போயிட்டோம்பா” என்று என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு தேம்பித்தேம்பி அழுதாள். அவள் சொன்னதும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது, என்னவென்றே புரியவில்லை. இதற்கிடையில் என் சாமான்களை  எல்லாம் காரிலிருந்து இறக்கி வைத்துவிட்டு வாசற்கதவை சாத்திவிட்டு வந்தான் ஜான்சன்.

விவரிக்க இயலாத மன அழுத்ததுடன் பதறியவாறு “என்ன சொல்றே?” என்றேன்.

“அம்மாவைக் காணவில்லை; ஓடிப்போயிட்டாப்பா” என்று சொல்லிவிட்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள். எனக்கோ உலகம் முழுவது இடிந்து என் தலையில் விழுவதுபோல் இருந்தது. தம்பியைப் பார்த்தேன், விம்மிக்கொண்டே ஒரு கவரை என்னிடம் கொடுத்தான்.

பிரித்துப் பார்த்தபோது ‘யாரும் என்னைத் தேடவேண்டாம், நான் புது உலகத்தை நோக்கிப் போகிறேன் – ரோஸி’ என்று எழுதியிருந்தாள்.

அய்யோ! நான் என்ன பாவம் செய்தேன் என்று சொல்லிக்கொண்டே மூர்ச்சையாகிவிட்டேன். சற்று நேரத்தி கண் விழித்துப் பார்த்தபோது அங்கு மாமா, மாமா குடும்பத்தார் எல்லோரும் நின்றுக்கொண்டிருந்தனர். என்னை ஆசுவாசப் படுத்தி சோபாவில் உட்காரவைத்துவிட்டு மாமா பேச ஆரம்பித்தார்.

“தம்பி, நம்மை எல்லாம் ஏமாற்றிவிட்டு ரோஸி ஓடிப்போயிட்டாப்பா; இப்படி செய்வாள் என்று கொஞ்சங்கூட எதிர்பார்க்கலை; நம்ம குடும்பத்தை அவமானப் படுத்திட்டாப்பா” என்றார் நா தழுதழுக்க.

“அவ கொஞ்ச நாளாவே சரியாயில்லெ, ஒன் அம்மா செத்ததிலிருந்து அவளோட நடத்தையிலெ மாத்தம் வந்துடுச்சு, ஆனா யாருக்கும் தெரியாது; அந்த பேங்க்காரன்கூட சிரிச்சு சிரிச்சுப் பேசிக்கிட்டிருப்பா; யாரும் சந்தேகப்படும்படியா நடந்துக்கலெ; எனக்கு முன்னெமாதிரி அடிக்கடி இங்கே வரமுடியலெ, தவிர உன் மவ காலேஜ் போயிடுவா அது அவளுக்கு சாதகமா போயிடுச்சு. இப்பொ அவனையும் காணோம் எனக்கு என்னவோ அவன் தான் இந்த காரியத்தை செஞ்சிருக்கான் என சந்தேகமா இருக்கு” என்றார் மாமா.

“போலிஸிலெ கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டிங்களா?”

“இல்லெ, இது நடந்து மூனு நாள்தான் ஆவுது. நம்ம குடும்ப கௌரவத்தையும் பாக்கனும் அதனால நீ வந்தபிறகு செஞ்சுக்கலாமென்று இருந்திட்டோம்.”

அதுவரை அழுதுக்கிட்டிருந்த ரெஜினா பேச ஆரம்பித்தாள்.

“அப்பா, இப்பொ ஒரு ஆறு மாசமாத்தான் அம்மாவுடைய போக்குலெ வித்தியாசம் வர ஆரம்பிச்சது; அந்த பேங்க்காரன் ராஸ்கல் ராஜேஷுக்கும் அவன்பொண்டாட்டிக்கும் கடந்த ஒரு வருஷமா அடிக்கடி சண்டை வந்துக்கிட்டிருந்துச்சு, அவளுக்கு கொடுக்கவேண்டியதை சரியாக கொடுக்கலெ போய் உன் அப்பன்கிட்டெ வாங்கிக்கிட்டு வான்னு திட்டுவான், அடிப்பான். அம்மாகிட்டெ சொல்லி அழுவா. அவனோட தொல்லை தாங்கமுடியாம பொறந்த வூட்டுக்குப் போயிட்டா.  ஒரு வாரம் இஞ்சி திண்ட கொறங்கு மாதிரி இருந்தான் அப்புறம் எல்லாருடனும் சகஜமா பேச ஆரம்பிச்சான், அம்மாகிட்டெ அடிக்கடி பேசுவான். நான் காலேஜ் போறதுனாலெ இங்கே என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியாது. அவன் தனியா இருந்ததினாலெ சோத்துக்கு கஷ்டப்படுறான் என்று அம்மா சோறு ஆக்கி கொடுப்பா; மொதல்லெ கேரியர்லெ வச்சு கொடுத்துடுவாள் அவன் எடுத்துகொண்டுபோய் அவன் போர்ஷனில் சாப்பிடுவான். பிறகு அம்மாவே கொண்டுபோய் கொடுக்க ஆரம்பிச்சா.”

“இதெல்லாம் நீ ஏன்னு கேக்கலையா?”

“கேட்டேன், பாவம் நமக்கு ஒதவியா இருப்பவரு அவர் தனியா கஷ்டப்படுறாரு என்று சொல்லிட்டா. இதெ நான் பெரிசா எடுத்துக்கலெ, ஆனா அம்மாவோட நடவடிக்கை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சுத்து. ”

“எதை வச்சு சொல்றே?”

“மொதல்லெ எல்லாம் கேரியரைக் கொண்டுபோனா வச்சுட்டு உடனே வந்துடுவா இப்பொ அவன் சாப்பிட்டு முடிக்கிறவரை இருந்து பாத்திரத்தை எடுத்துக்கிட்டு வர ஆரம்பிச்சா, பிறகு அவளோட பேச்சு, அவ பண்ற ட்ரஸ், ஸ்கூல் போகும்போது அந்தாள்கிட்டெ டாட்டா சொல்லிட்டுப் போற விதம், இதெல்லாம் வித்தியாசமா இருந்துச்சு; இதல்லாம ராத்திரிலெ அவ பெட்லேந்து காணாமப்போய்டுவா, ஒரு நாள் தூங்கிறது மாதிரி நடிச்சு எங்கே போறான்னு பார்த்தேன், அவன் ரூமுக்குப் போயிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வற்றது தெரிஞ்சது, அதுக்குப்பிறகுதான் உங்களுக்குப் போன் பண்ணி எப்போ வாரீங்கன்னு கேட்டேன்.”

“ஏன் நீ அப்பவே என்னிடம் சொல்லியிருக்க வேண்டியதுதானே?”
 
“இதெ உங்க கிட்டெ சொல்லத்தான் போன் பண்ணினேன், பேசிக்கிட்டிருந்தப்ப அம்மா வந்துட்டா அதனாலெ ஒன்னும் சொல்லமுடியலெ, நீங்களும் ஒரு மாசத்லெ வாரேன்னு சொன்னதாலெ மறுபடியும் போன் பண்ணலெ.”

“இப்படி பேசிக்கிட்டிருந்தா… அடுத்து ஆக வேண்டிய காரியங்களை பாரு” என்றார் மாமா.

நான் தம்பியுடைய முகத்தைப் பார்த்தேன்.

“அண்ணா, மொதல்லெ போலிஸ்லெ ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டு பேங்க்கிற்குப் போய் அவனைப் பத்தி விசாரிப்போம், தவிர அண்ணியுடைய அக்கவுண்ட்டில் காசுகீசு இருக்கான்னு செக் பண்ணுவோம்” என்றான் தம்பி.

தம்பி சொன்னபடி போட்டா சகிதம் போலிஸில் கம்ப்ளெயிண்ட் கொடுத்துவிட்டு பேங்க்கிற்க்குப் போய் விசாரித்ததில் அவன் பத்து நாளைக்கு முன் வேலையை ராஜினாமா செய்து விட்டதாக சொன்னார்கள். அக்கவுண்ட்டை செக் பண்ணியதில் சிறுகச்சிறுக கணக்கிலிருந்த பதினைந்து லட்சத்தையும் எடுத்துவிட்டதாகவும், கேட்டதற்கு எதோ சொத்து வாங்குவதற்காக பணம் தேவை என்று சொன்னதாகச் சொன்னார்கள். லாக்கரை திறந்துப் பார்த்தபோது எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அதில் மகள் பெயரிலான  டாக்குமெண்டைத்தவிர வேறு ஒன்றுமில்லை நகை முழுவதையும் எடுத்து காலியாக்கிவிட்டு ஒரு லட்டர் டாக்குமெண்டின்மேல் வச்சிருந்தாள். பிரித்துப் பார்த்தபோது ‘நகை முழுவதும் எனக்கு சொந்தம்’ என்று எழுதி வைத்திருந்தாள். ஆக அவள் திட்டம்போட்டே என்னை ஏமாற்றி இருக்கிறாள் என்பது ஊர்ஜிதமானது.

வீட்டிற்கு வந்ததும் மகளை அணைத்துக்கொண்டு அழுதேன். எல்லாம் என் அறிவீனத்தால் வந்தது, பணத்தை மட்டும் குறியாக வைத்து மனைவி மக்களைப் பார்க்காமல் இருந்தது; அவளுடைய உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளாமலிருந்தது; பணம் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் என்று முட்டாள்தனமாக நம்பியது; எல்லாம் என்னை எமாற்றிவிட்டது. சிறுவனாக இருந்தபோது அப்பாவால் அவமானம், இப்போது இவளால் அவமானம் என்ன செய்வது என்று புரியாமல் புலம்பினேன். பல இடங்களுக்கு அலைந்தேன்,

அவனுடைய தாய்வீடு என்று சொல்வதற்கு எதுவுமில்லை அவனது மனைவியின் வீட்டிலும் விசாரித்தில், குடும்பத்தில் யாருமில்லை படித்திருக்கிறான் நம்முடன் இருப்பான் என்று நம்பி பொண்ணைக் கொடுத்தற்கு இந்த நிலமைக்கு ஆளாக்கிவிட்டான், அவனுடன் எந்த தொடர்பும் இல்லை என்று ஆத்திரத்துடன் பேசினார்கள். அவனுடைய நண்பர்கள் வட்டாரம், இவளுடைய வீடு என்று பல இடங்களில் தேடியும் எந்த பலனுமில்லை. எங்கே இருக்கிறார்கள் என்ற சிறு தகவல்கூட கிடைக்கவில்லை. போலிஸில் கொடுத்த கம்ப்ளையிண்ட்டுக்கு எந்த பதிலுமில்லை. ஆறு மாதமாக நான் அலையாத இடமில்லை. அவமானத்தால் வெளியில் தலை நிமிர்ந்து நடக்கமுடியவில்லை, சில நேரத்தில் தற்கொலை செய்துக்கொள்ளலாமா என்றுகூட  தோன்றியது. ஆனால் அது முட்டாள்தனம்; நாம் வாழப்பிறந்தவன் எந்த நிலையிலும் வாழ்ந்துக்காட்ட வேண்டும் என்று உறுதியுடன் இருந்தேன்.

கையிலிருந்த பணத்தைத் தவிர பேங்கில் பணமும் இல்லை மகளுக்காக சேர்த்த நகையுமில்லை. யாருக்காக இல்லாவிட்டாலும் என் மகளுக்காக வாழ்ந்தாக வேண்டும். மகள் பெயரில் வாங்கியிருந்த ரப்பர் எஸ்டேட்டை விற்று அவளுடைய கல்யாணம் முதல் எல்லா காரியங்களையும் செய்துவிடலாம். அவளுடைய படிப்பு முடியவேண்டும் அதுவரை நான் காத்திருக்கவேண்டும்; இதற்கிடையில் அவர்கள் இருவரையும் அங்கே பார்த்தேன் இங்கே பார்த்தேன் என்று செய்திகள் வந்துகொண்டிருந்தன. ரெஜியை மட்டும் தனியாக விட்டுவிட்டு அலையமுடியாது எனவே மாமாவிடம் ஒப்படைத்துவிட்டு கேள்விப்படும் இடங்களிலெல்லாம் தேடி அலைந்துக்கொண்டிருந்ததுதான் மிச்சம். ஏமாற்றத்தைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் நம்பிக்கையைக் கைவிடவில்லை. நிச்சயமாக மாட்டுவார்கள் என்று ஆறு மாதமாக அலைந்துக்கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் மாத்துக்குட்டியின் காதில் போட்டிருந்த தகவல் வீன் போகவில்லை. ஒரு நாள், அவர்கள் மும்பையில் இருக்கிறார்கள் உடனே புறப்பட்டு வந்தால் பிடித்துவிடலாம் என்ற தகவல் மாத்துக்குட்டியிடமிருந்து வந்ததுதான் தாமதம் உடனே நான் புறப்பட்டுவிட்டேன்.

மாத்துக்குட்டி என்னை வரவேற்க சத்ரபதி சிவாஜி டெர்மினலில் காத்திருப்பது ட்ரெயினிலிருந்தபடியே பார்த்துவிட்டேன். ட்ரெயின் நின்றதுதான் தாமதம் மாத்துக்குட்டி மாத்துக்குட்டி என்று கத்திக்கொண்டே அவனை நோக்கி ஓட ஆரம்பித்தேன். அவரும் என்னைக் கண்டுகொண்டார், பல நாள் பிரிவு ஒருவரையொருவர் ஆரத் தழுவிக்கொண்டபோது நான் அடக்கி வைத்திருந்த சோகம் கொப்பளித்துக்கொண்டு வெளியே வந்தபோது குலுங்கிக் குலுங்கி அழுதேன்.

என்னை ஆசுவாசப்படுத்தி அழைத்துக்கொண்டு வெளியே வரும் சமயத்தில் முற்றிலும் எதிர்பாரத விதமாக ஒருவன் கன்னாபின்னாவென்று துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருப்பதையும் பலர் அலறியடித்துக்கொண்டு தலைத்தெறிக்க சிதறியடித்துக்கொண்டு ஓடுவதையும்  பார்த்தபோது ஒன்றுமே புரியவில்லை. அடுத்த வினாடி என் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்தது. அருகிலுள்ள பெரிய தூணில் மறைந்து தப்பித்துக் கொள்வதற்காக மத்துக்குட்டியைப் பிடித்து ஒரே தள்ளாகத் தள்ளிவிட்டு அவன்மீது சாயவும் ஒரு குண்டு என் இடது விலாவைத் துளைக்கவும் சரியாக இருந்தது. “அம்மா….” என்று அலறியபடியே விழுந்ததுதான் தெரியும், அதன்பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

சற்று நேரத்தில் உணர்வு வந்ததுபோலிருந்தது. அது உணர்வா இல்லை புத்துணர்ச்சியா? புரியவில்லை. நான் முன்பைக்காட்டிலும் தெளிவாகவும் அழகுடனும் காணப்பட்டேன். என் எதிரில் சில உடல்கள் வரிசையாக கிடத்தப்பட்டிருந்தன, அதில் என்னைப்போன்ற உருவமுள்ள ஒரு உடலை தனியாக வைத்திருந்தனர்;  வெள்ளைத் துணியால் முழுவதும் போர்த்தப்பட்டு முகம் மட்டும் திறந்து வைத்திருந்தனர். அருகே மாத்துக்குட்டி தன் வாயை சிறிய துவாளையால் பொத்திக்கொண்டு விம்மிக்கொண்டிருந்தார்; “அய்யோ, அப்பா என்னை அனாதையாக்கிட்டுப் போயிட்டீங்களே..” என்று ரெஜினா அலறிக்கொண்டிருந்தாள்; தம்பி ஒரு மூலையில் நின்றுகொண்டு ஏதேதோ சொல்லி புலம்பிப் புலம்பி அழுதுக்கொண்டிருந்தான். கூடவே சில போலிஸ் அதிகாரிகளும் நின்றுக்கொண்டிருந்தனர்.

எனக்கோ எதுவும் புரியவில்லை! நான் இங்கே முழுமையாக நிற்கிறேன், என்னைப்போன்றிருக்கும் யாருடையோ உடம்பைப் பார்த்து இவர்கள் ஏன் அழுகிறார்கள்? ‘ரெஜி, நான் இங்கே இருக்கேண்டா, நீ அழாதே! என்னைப் பார்; தம்பி… ஜான்சன், உன் அண்ணன் இதோ இருக்கேன் என்னைப் பார்’ என்று கத்துகிறேன் ஒருவரும் பார்க்கவில்லை. நான் சத்தம்போடுவது அவர்கள் காதில் விழவில்லையோ? 

மாத்துக்குட்டி அண்ணாச்சி நீங்களாவது அவர்களிடம் சொல்லுங்கள் என்று அவரருகில் சென்று சற்று உறக்கவே சொல்கிறேன், அவரும் எதுவும் நடக்காததுபோல் இருக்கிறார்.

நான் கொஞ்ச நேரம்தானே மயக்கமாக இருந்தேன் அதற்கேன் இவ்வளவு களோபரம்? ரெஜியும் ஜான்சனும் எப்போது மும்பை வந்தார்கள்? என்று என்னையே நான் கேட்டுக்கொண்டிருந்தபோது ஒரு போலிஸ் அதிகாரி மாத்துக்குட்டியைப் பார்த்து, “சார் ஒரு வாரம் ஆகப்போகிறது, பாடியை இங்கேயே அடக்கம் பண்ணுகிறீர்களா இல்லை ஊருக்கு கொண்டுப்போகிறீர்களா?” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

ஜான்சன் குறுக்கிட்டு “நாங்கள் ஊரிலேயே எல்லா காரியங்களையும் செய்கிறோம், நீங்கள் கொண்டுபோவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துத்தாருங்கள்” என்று சொல்லிக்கொண்டிருந்தான். இங்கு என்ன நடக்கிறது? இந்த போலிஸ்காரர்கள் யார்? இவர்கள் எங்கே வந்தார்கள்? ஒன்றுமே புரியவில்லை; நான் குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில் என்னருகே இருவர் வந்து நின்றனர், நேர்த்தியான வெள்ளை உடுப்பு அணிந்திருந்தனர்; அவர்களை முன் எப்போதும் பார்த்ததில்லை; வந்தவர்கள் என்னை வாருங்கள் என்று பணிவுடன் அழைத்தனர்.

எங்கே என்று எனக்கு கேட்கத் தோன்றவில்லை; அவர்கள் முகம் வசீகரமாகவும் ஒளி பொருந்தியதாகவும் இருந்தது, உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் போலும் என்று என் மனதில் பட்டதால் எதுவும் பேசாமல் பின்னால் சென்றேன்.

அந்த இடத்தைவிட்டு வெளியே வந்ததும் நான் பறப்பதுபோல் உணர்ந்தேன். மும்பை நகரம் முழுவதும் தெரிந்தது; கேட் வே ஆப் இந்தியா, மலபார் ஹில், ஜூஹு கடற்கரை எல்லாமே தெரிந்தன. மரைன் டிரைவில் என்னவள் ரோஸியும் அவனும் கையைக் கோர்த்துக்கொண்டு ஜாலியாக நடப்பதைப் பார்த்தவுடன் என் ரத்தம் கொதித்தது. அடியே துரோகி, சண்டாளி, காமுகி என்னை விட்டுட்டா அவன் கூட சுத்துகிறாய்? டேய் ராஜேஷ்! புலையாடி மவனே, ராஸ்கல் என் மனைவியை அபகரித்துக்கொண்டா ஊர் சுத்துகிறாய்? உங்கள் இரண்டுபேரையும் என்ன செய்கிறேன் பார்; வெட்டி கண்டதுண்டமாக்குகிறேன் என்று பலம் கொண்டமட்டும் கத்திக்கொண்டே அவர்கள்மீது பாயத்துடிக்கிறேன் முடியவில்லை. மேலே உயர்ந்துகொண்டே போகிறேன். என் நிலை மாறுவதைப் பார்த்த அந்த இருவரும் இடமும் வலமுமாக இருந்து அரவணைத்துக்கொண்டனர். அவர்களைப் பார்த்து அந்த சண்டாளிகளைக் கொல்லவேண்டும்; அவள் என் மனைவி, அந்த ராஸ்கல் அவளுடைய கள்ளக்காதலன் தயவு செய்து என்னைப் போகவிடுங்கள்; என்னை விட்டுவிட்டு அவர்களைப் பிடித்துத்தாருங்கள் ப்ளீ…ஸ் என்று கெஞ்சுகிறேன். அவர்களோ எந்த சலனமும் இல்லாமல் புன்முறுவலித்தவாறு என்னை அணைத்தபடி மேலே உயர்கின்றனர்.

சற்று நேரத்தில் தாஜ்மஹால் தெரிந்தது; டெல்லி தெரிந்தது; ஹவ்ரா பாலம் தெரிந்தது; ஏன் இந்தியா முழுவதுமே தெரிந்தது. எனக்கோ ஒரு பக்கம் துக்கம், ஒரு பக்கம் ஆச்சரியம்; ஒரு பக்கம் குழப்பம், ஒரு பக்கம் மகிழ்ச்சி; விவரிக்கமுடியாத உணர்ச்சியில் தவித்துக்கொண்டிருந்தபோது இந்த பூமி முழுவதுமாக தெரிந்தது. நீல உருண்டையில் ஆங்காங்கே பல நிறங்களில் வண்ணம் பூசி அதில்  வைரக்கற்களைப் பதித்துவைத்து அவற்றிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள் மின்னிக்கொண்டிருக்க பூமி மெதுவாக சுழன்று வருவதைப் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. எந்த பிடிப்புமில்லாமல் அந்தரத்தில் அதை யார் சுழலச் செய்தது? எப்படி சுயமாகச் சுழல்கிறது?

யோசித்துக்கொண்டிருந்தபோது…. பெரிய கோளமாகத் தெரிந்த பூமி சுறுங்கிக்கொண்டே வந்து சிறிய புள்ளியாக மாறி மறைந்தது. ஆனால் சிறியதும் பெரிதுமாக பல வண்ணங்களில் உருண்டையாகவும் ஒழுங்கற்ற வடிவத்திலும் பல கோளங்கள் எங்களைக் கடந்து வேகமாகப் போய்க்கொண்டிருந்தன.

முற்றிலும் நினைத்துப் பார்க்க முடியாத நிலையில் திடீரென ஒர் இருண்ட நிலை புகைமூட்டம் போன்ற எதோ ஒன்று அதனுள்ளே இருப்பது போன்ற உணர்வு; ஒர் உலுக்கல், உணர்ச்சிப்பெற்றேன்.

ஒரு இடம்!, அது மாளிகையா? இல்லை அரண்மனையா? இல்லை பூஞ்சோலையா? இல்லை வேறு எதுவுமா? எப்படி சொல்வது? வார்த்தைகள் கிடைக்கவில்லை! அங்கு எங்களை, அல்ல அல்ல என்னை வரவேற்க பலர் காத்திருந்தனர். அடைந்ததுதான் தாமதம், இரண்டு சிறுவர்கள் பூங்கொத்து கொடுத்தனர்;  அருந்துவதற்கு பானம் கொடுத்தனர், அது முன்பு அருந்தியதைப் போன்றே இருந்தது; சுவையிலும் நிறத்திலும் எந்த மாற்றமும் தெரியவில்லை. வேறு சிலர் என்மீது பண்ணீர்போன்ற நறுமனம் கமழும் ஒன்றை தெளித்து அழைத்துச்சென்றனர்.

முற்றிலும் புதிய இடம், புதிய உணர்வு, புதிய மனிதர்கள் புரியாத நிலையில் சிக்கித்தவித்துக்கொண்டிருந்தபோது இரண்டு தேவதைகள் என்னருகே வந்தனர். நான் விமானத்தில் பார்த்த அதே நங்கைகள், அதே புன்முறுவல், அதே உடை; நீங்கள் இங்கே……. என்று நான் இழுத்தபோது அவர்களருகே இன்னும் சில பெண்கள் இருப்பது தெரிந்தது, எல்லொரும் ஒரே மாதிரியாக இருந்தனர். இது எங்கள் உலகம்; நீங்கள் புதிதாக வந்திருக்கும் எங்கள் விருந்தாளி; இது உங்களுக்காக உருவாக்கப்பட்ட மாளிகை; இங்குதான் நீங்கள் தங்கப்போகிறீர்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது நான் இடைமறித்து எவ்வளவு நாளைக்கு? என்று கேட்டபோது அவர்கள் சிரித்தனர். அந்த சிரிப்பு வெண்கலத் தாம்பாளத்தில் முத்துப் பரல்களை உருட்டிவிட்டது போலிருந்தது.

”ஏன் சிரிக்கிறீர்கள்? நான் எதாவது தவறாக கேட்டுவிட்டேனா? அப்படி ஒன்றும் கேட்கவில்லையே?”

”இல்லை, நீங்கள் இன்னும் பழமை மாறாமலே இருக்கிறீர்கள்! நாங்கள் விருந்தாளி என்று சொன்னது இன்று வந்து நாளைபோகும் மனிதருக்கல்ல, என்றென்றும் தங்கப்போகும் மனிதருக்கு.”

”என்றென்றுமென்றால்…?”

”என்றென்றுமென்றால் எப்போதும், சதாகாலமும்; இது புதிய உலகம், நீங்கள் புதிய மனிதர். இங்கு உங்களுக்கு எல்லாமே, நீங்கள் விரும்புவது அனைத்தும் கிடைக்கும்; உங்களுக்குப் பணிவிடை செய்ய இதோ பணிப்பெண்கள், விரும்பியபோது விரும்பிய உணவு, விரும்பிய பொழுதுபோக்கு எல்லாம் கிடைக்கும். அதுமட்டுமல்ல நினைத்த இடத்திற்கு நொடிப்பொழுதில் சென்றுவரமுடியும்; காலம் எல்லை இவைகள் கிடையாது; இரவு பகல், கிழக்கு மேற்கு, நாள் வருடம் என்று எதுவும் கிடையாது; எல்லாவற்றுக்கும் இது அப்பாற்பட்டது.”

”அப்படியானால் அது?”

”அது கடந்துபோன ஒன்று; அது நிழல்; அது அழிவது; அதில் காலம் எல்லை, மாதம் வருடம், இரவு பகல், கிழக்கு மேற்கு, பிறப்பு இறப்பு, இளமை முதுமை எல்லாம் உண்டான ஒரு கனவு வாழ்க்கை. அது ஒரு தாழ்ந்த நிலை, அங்கு மீண்டும் செல்லமுடியாது.”

அவர்கள் சொல்லச்சொல்ல என் கண்கள் விரிந்தன. நான் நம்பமுடியாத நிலையில் இருப்பதை உணர்ந்த அவர்கள் ”அங்கே பாருங்கள் நீங்கள் விரும்பியவர்களைப் பார்க்கலாம்” என்று ஒரு பகுதியைக் காட்டினர்,

அங்கே அம்மா தெரிந்தார். அவர்கூடா யார்யாரோ இருந்தனர். அம்மா என்று கூவ முயற்சித்தபோது ஒலி எழவில்லை. இன்னொரு பக்கம் காந்தி, நேரு, பெரியார் போன்றோர் இருந்தனர்; வேறொரு பக்கத்தைக் காண்பித்தபோது அங்கே இசை வித்தகர்கள் இருந்தனர்.

பிஸ்மில்லாஹ் கான் தெரிந்தார் அவருடைய ஷெனாய் இசை ஒலித்தது; உஸ்தாத் விலாயத்கானைப் பார்த்தபோது அவருடைய சிதார் இசை ஒலித்தது; இன்னொரு பக்கம் உஸ்தாத் அல்லாரக்கா ‘ரூபக்’ தாளத்தில் தப்லாவை இசைக்க நுஸ்ரத் ஃபத்தேஹ் அலிகான் ‘எமன்-கல்யாண்’ ராகத்தில் கஜல் ஒன்றை பாடிக்கொண்டிருந்தார்.

எல்லோருமே ஹிந்துஸ்தானி வித்வான்கள், எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் வேறு யாருமில்லையா? என்று யோசித்தபோது இந்தப்பக்கம் பாருங்கள் என்று ஒரு பகுதியைக் காட்டினர்.

அங்கே செம்மங்குடியின் கீர்த்தனைக்கு குன்னக்குடி வாசித்துக்கொண்டிருந்தார், இன்னொரு இடத்தில் காருக்குருச்சியாரும் ஷேக் சின்னமவுலானாவும் ஆனந்த பைரவியில் பொழிந்துகொண்டிருந்தனர்.

எல்லாம் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன போலிருந்தாலும் நான் விரும்பியது மட்டுமே என் செவிகளில் ஒலித்தது. நான் பிரமிப்பிலிருந்து மீள முடியாமலிருந்தபோது அந்த இருவரும் என்னை மீண்டும் சுய நிலைக்கு கொண்டுவந்தனர்.
 
ஏகாந்தத்தில் இருப்பதை உணர்ந்தேன். என்னையும் அவர்களையும் தவிர வேறு எதையும் காணமுடியவில்லை. அவர்களை மீண்டும் பார்த்தேன், அந்த பால்போன்ற முகம், களங்கமில்லா புன்முறுவல், மயக்கவைக்கும் பார்வை, இனிமையான குரல்… அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். ‘நீங்கள் விரும்பியது எந்த நேரத்திலும் கிடைக்கும், இந்த பணிப்பெண்கள் எப்போதும் உங்கள்கூடவே இருப்பார்கள்’ என்று சொல்லியவாறு “க்ளுக்”கென்று சிரித்துவிட்டு மறைந்தனர்.

அந்த குளிர்ந்த உணர்விலிருந்து மீள முடியவில்லை. நான் என்னையே பார்த்தேன், நான் யார்? என் பெயர் என்ன? எனக்குப் புரியவில்லை. ஆனால் நான் மட்டுமே இருக்கிறேன்; நானாகவே இருக்கிறேன்; ஆம் சுயமாக இருக்கிறேன்.

(முற்றும்)

*

நன்றி : ஹமீது ஜாஃபர்
மின்னஞ்சல் : manjaijaffer@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s