ஒரு கவிதையோடு – தாஜ் சிறுகதை

அந்தக் கவிதை, திரும்பத் திரும்ப என் மறுவாசிப்பை கேட்டுக் கொண்டே இருக்கிறது. பல கவிதைகளை பல்வேறு இதழ்களில் பல்வேறு நேரங்களில் பல்வேறு  நிலைகளிலும் கூட  வாசித்திருக்கிறேன். வேறெதுவும் இந்த அளவில் மறுவாசிப்பை கேட்டதில்லை. நல்ல கவிதை என்பது, மனதை என்னவோ செய்யும். சிந்தனையில் விஸ்வரூபம் காட்டும். எத்தனை நாட்கள் கழித்து அதை தொட்டாலும், முதல் வாசிப்பின் போது கிளைத்த அதே உணர்வுகள் விரியும். இந்தக் கவிதை அப்படியொன்று! என் கவிதை வாசிப்பில் தட்டுப்பட்ட அபூர்வம்!

இந்தக் கவிதையின் வசீகரமும் அது தரும் ரசனையும் நமக்கு கிளர்ச்சியை தருவதாகவே இருக்கிறது. என்றாலும், நிதர்சனமான வாழ்வில், கருகத் தொடங்கி இருக்கும்  தன் பக்கங்களை நம் முன் விரிக்கும் அந்தக் கவிஞரின் சோகம் கொஞ்சமல்ல! வாசிப்பவனின் யோசிப்பில் அழுத்தம் தருவதாகவும் இருக்கிறது. பிரச்சனையின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை, மேலும் திருப்பிப் பிடித்து இன்னொரு குறுக்கு வெட்டில் பிளந்து காட்டும் கவிஞரின் ஆளுமை கண்டு, அவரது சோகத்தையும் மறந்து கவிதையைத் தூக்கி வைத்து குதூகலிக்கத் தோன்றுகிறது.

கவிஞர் அர்த்தப்படுத்தும் அதே பாங்கில், அந்தக் கவிதையை நான் அணுகிய போது, வார்த்தைகளுக்குள் வெடித்துக் கிளம்பும்  அர்த்தபாவங்கள்  திரண்டெழுந்து, என் தலைக்கு மேல் கேள்விக் குறியாய் என்னைப் பார்க்க நின்றது. என்னிடம் பதில் இல்லை. நான் அத்தனை பெரிய ஆளும் இல்லை! என் போதாமை எனக்கு தெரியும்.  என் அனுபவம்  என்பது, வெறும் வெளியுலகம் சார்ந்தது. அந்தக் கவிதை பேசும் உலகம், தீர்க்கமான அக உலகம்! அதை எழுதிய கவிஞர் ஒரு பெண்! என் நேர் எதிர் வட்டம்! பெண்ணின் அக உலகம் ஆணுக்கு சிக்குவது கஷ்டம்! இயற்கையின் முரணை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

முன்னிரவில் , அந்தக் கவிதையோடு இத்தனைக்கு ஸ்பரிசித்து சல்லாபித்திருக்கக் கூடாது. வாசிப்பில் மனம் நாட்டம் கொண்டு லயித்திருந்தாலும், அதற்கும் ஓர் எல்லை உண்டு. சுதாரித்திருக்க வேண்டும். தூக்கம் தொலைந்து விட்டது. கண் அசரும்வரை இந்தக் கவிதை என்னைவிட்டு அகலாது. அது காட்டும் இறுக்கம் அப்படிதான் இருக்கிறது. கட்டிப் பிடித்து உச்சி முகராத குறை! கண்ணாவது அசருவதாவது!  

அடைத்து கிடந்த வாயிற்கதவை திறந்தேன். விரைந்து வந்தக் காற்று அதன் குளுமையோடு தழுவிக் கொண்டது. வாசல் முகப்பில் படர்ந்திருக்கும் மல்லிகை வளைவில் மொட்டுக்கள்  பூவாகிக் கொண்டிருக்கிறது. மதி மயக்கும் சுகந்தம்! அழுத்தமான வாசனை நடுநிசி தாண்டிதான்! மேற்கு வானத்தில் எழுந்து மிதக்கும் முழுமையற்ற நிலா இப்போது என் பின்னால்!  தெருவைக் கடந்து ரோட்டில் ஏறி, கிழக்குப் பார்க்க நடந்துக் கொண்டிருக்கிறேன்.

மாலை பெய்த மழையில், ரோடெல்லாம் ‘பளிச்’! ஒளிபட்டு சிதறல் காட்சிகள் திடீர் புதுமை!  தெரு விளக்குகளும் முகம் கழுவிய பிரகாசம்.  ரோட்டை விட்டு,  இடது புற இறக்கத்தில் இறங்கி நீண்டு நடந்தேன். ஈரம்கண்ட மண்பாதை, கால் வாங்காது வழிவிட்டது புண்ணியம்! மழைத் தாங்கி சிலிர்த்தடங்கிக் காட்சி தரும் ஓரத்து செடிகளின் மலர்ச்சி காண இதமாக இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரமும் சூழ்கொண்ட பசும் தாள்கள்! நிலவொளியில் மின்னும் அதன் ஒய்யாரம் ஆயிரம் அழகு! பசுமை கடலின் பெருக்கம் கண்டு விரிந்தன என் கண்கள்!

குறுக்கிடும் சின்ன ஓடையைத் தாண்டி, வலது திருப்பத்தில், கன்னி வாய்க்காலூடே செல்லும் அகல வரப்போடு நடந்தால், எதிர் வரும் களமும் அதையொட்டிய இறக்கத்தில் மூணே முக்கால் நஞ்சைக் காணியும் என்னுடையதாக இருந்தது. களத்தின் தெற்க்கு மூலையில், வடக்குப் பார்த்த ஐய்யனார்! பட்டா கத்தியோடு குதிரை மேல்! கீழ் பரப்பில்  உயரம்  எடுத்து  பீடம். இடது புற வாக்கில் ஐயனாரை நிழலூட்டிக் காக்கும் வேம்பு. பல நூறு கிளைகளும்,  பல்லாயிர இலைகளுமாக பருத்துப் பெருத்த பிரமாண்டம்! அதனூடே, பார்வையில்  அந்தக்  குறைநிலா காட்சியாகிக் கொண்டிருந்தது. முத்துப் பல் காட்டி, தெரிந்தும் மறைந்தும் விளையாடும் விளையாட்டை தீர கண்டு ரசித்தேன். வலது புறம் உயர்ந்து நிற்கிறது இரண்டு பனை!  கொஞ்சம் தள்ளியோர் பாம்புப் புற்று! ஸ்தலம் பூராவும் பழக்கப்பட்ட இடம்தான்.

காணியோடு காணியாக இங்கே இருந்த என் நஞ்சை இப்போதும் இங்கேதான் இருக்கிறது. ஆனால், அது என்னிடம்தான் இப்போது இல்லை. அது தந்தக் கொடையால்  பல ஆண்டுகள் சாப்பிட்டு வந்தது போக, பின்னொரு ஆண்டில் அதையே சாப்பிட்டு விட்டேன்.  காணி கைமாறிப் போவதற்கு முன் , ‘கண்டு முதல்’ பருவங்களில் இப்படி இருளில் இங்கே வர வேண்டி வரும். வரவும் வருவேன். பல வருடங்களுக்குப் பிறகு வருவதென்பது இப்போதுதான்! இந்த ஸ்தலத்தைச் சுற்றி இருக்கும் இருநூற்றிச் சொச்ச வேலி நஞ்சைக் காணியை, நடுநிசி தொடங்கி, விடிலுக்கு முன்வரை காவல் காத்து, காபந்து செய்யும் குதிரை வீர ஐய்யனாரைப் பற்றிய சாகசங்களை, பெரிசுகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது குறித்து அப்போது கிளைத்த வியப்பு இப்போதும் என்னில் உண்டு! இன்றைக்கு அந்த ஐய்யனாரை பார்க்க, நெகிழ்ச்சியாக இருந்தது!

ஐய்யனாரின் அடியில், நேர்எதிர் திசைப் பார்க்க அமர்ந்து, அவரது பீடத்தில் சாய்ந்தேன். மனம் சிலாகித்துக் கொண்டிருந்த அந்தக் கவிதை, தகிப்பாய் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. இப்போது அதன் ரசனையையும் மீறி, அந்தக் கவிதையில் கவிஞர் கொண்டிருக்கும் வேதனை குறித்த யோசிப்பு விரிந்தது. அவரது இருப்பின்  செய்திகளை இதற்கு முன் பல்வேறு  கோணத்தில் அறிய வந்திருக்கிறேன். அந்தக் கவிஞர் சிற்றிதழுக்கு அளித்திருந்த நேர்காணல் வழியாகவும்,  அவரது கவிதைத் தொகுப்பில் அவரைப் பற்றி அவரே எழுதி இருந்த குறிப்புகளின் வழியாகவும் அது சாத்தியமானது. அவரது கவிதைத் தொகுப்பிற்கு விமர்சனம் எழுதிய ஒருவர், கவிஞரின் கவிதைகளை ஆய்வுசெய்த வகையில் கவிஞரின் வாழ்க்கை/ அதனூடான அவரது இயலாமை/ முடக்கப்பட்ட அவரின் உரிமை இன்மை என பலவற்றைக் கண்டு எழுதியிருந்தார். நான் அறிய வந்த இந்தப் பின்புலங்களோடுதான் இந்தக் கவிதையை நெருக்கம் கொண்டேன். 

நடுநிசி தாண்டியப் பொழுது. குறை நிலா உச்சி வானத்திலிருந்து கிழக்கே நவிக்கொண்டிருந்தது. தென்றலின் வருகை அபரிமிதமாக, குதிரை கழுத்து மணியில் ஒலி  சலசலத்தது. வேப்பம் பூக்கள் பொலபொலவென உதிர. தென்றலோடு காற்றின் உக்கிரத்தின் சப்தம் பெரிதானது. ஐதீகப்படி, குதிரை வீரன் கிளம்பியிருக்க வேண்டும்! இருந்த இருப்பில் இருந்த படிக்கு நானும் எதிர்த் திசையில் அந்தக் கவிதையோடு சஞ்சாரம் செய்யத் துவங்கினேன். நெருக்கமான அச் சஞ்சாரத்தில், வாய் திறவாமல் கேட்ட கேள்விகளுக்கு, காதோரம் தட்டாமல் பதில்  தொடர்ந்தது! பறவாது பறக்கும் அனுபவம் அது!

“நீங்க என்னை அழைத்தீர்களாயென்ன?”
“ஆமாம், உங்களது கவிதை ஒன்றை அசைப் போட்டுக் கொண்டிருக்கிறேன். உங்களோடு பேசினால், அது குறித்த சந்தேகங்களை களையலாம் என நினைத்தேன்!”
“ம், சரி! எந்த கவிதையில் என்ன சந்தேகம்?”
“கவிதை எழுதுகிறேன் என்று, ஏன் இப்படி உங்களை நீங்களே பிறாண்டிக் கொள்கின்றீர்கள்?”
“இதுதான் சந்தேகமா?”
“கொஞ்சம்தான் பேசுங்களேன்.”
“கவிதை என்பது, தகிக்கும் எண்ணங்களின் பதிவாகத்தான் காலம் காலமாக இருந்து வருகிறது. வாஸ்தவத்தில், என் மூத்த கவிஞர்களிடம்தான் இந்தக் கேள்வியை கேட்ட பிறகே என்னை நீங்கள் கேட்டிருக்க வேண்டும்! அது சரி, நீங்கள் யார்?”
“உருப்படாதவன்!”
“பெயரா? நன்றாக இருக்கிறது! கவிதையில் நாட்டங்கொண்டவராக இருப்பதால் அப்படியோர் முடிவிற்கே வந்து விட்டீர்களா!””யாருக்காக கவிதை எழுதுகின்றீர்கள்?”
“ம், எனக்காக?”
“பிரசுரத்திற்கும் அனுப்பி வைத்துவிட்டு, இப்படி சொல்கின்றீர்களே?”
“நீங்கள் என் வாசகரா? எந்தக் கவிதை குறித்து என்னிடம் பேச நினைக்கின்றீர்கள்?”
“குடும்பப் பெண்ணாய் வாக்கப்பட்ட வீட்டில் வலம் வரும் கஷ்டத்தை குறித்து, நீங்கள் எழுதி இருக்கும் சமீபத்திய கவிதையைப் பற்றி.”
“என் கவிதைகள் பெரும்பாலும் அதைப் பற்றியேதானே பேசுகிறது!”
“அதுவும் சரிதான். ‘வளர்ப்பு பிராணிகளுக்கு உள்ள சுகந்திரம்கூட எனக்கில்லை’ என்று முத்தாய்ப்பு வைத்திருக்கும் கவிதையைப்பற்றி பேச நினைக்கிறேன்! அதன் தலைப்பு கூட ‘மலரின் அந்திமம்’ என்று நினைவு!”
“அந்தக் கவிதை நன்றாகவா இருந்தது? எனக்கு திருப்தி தராத கவிதை! ரெண்டொரு திருத்தம் கூட அதில் செய்யணும் என நினைத்திருந்தும், பிரசுரத்திற்கு அனுப்பி விட்டேன்!”
“தீர்க்கமாகத்தானே இருந்தது! பக்கத்து வீட்டு நாயோடு எதிர் வீட்டு நாய், நாள் தவறாமல் புணர்வதை அந்தக் கவிதையில் ஏன் அப்படி மாய்ந்து மாய்ந்து குறிப்பிட்டு இருக்கின்றீர்கள்?”
“முயற்சிகளை, முழு சுதந்திரத்தை குறிக்கும் குறியீடு அது! நீங்க ‘மீன்’ பண்ணுகிற மாதிரி செக்ஸியெல்லாம் கிடையாது!”
“நினைக்கும் தோறும் நீங்கள் இறந்துப் போக, உங்களை நீங்களே தோட்டத்தில் புதைத்து, அதன் மீது ஒவ்வோர் பூச்செடிகளாக பதிய வைத்து, அவைகள் பூப்பதை  அழகுப்  பார்ப்பதாக கவிதைக்குள் பேசுகின்றீர்களே, அத்தனைக்கா உங்கள் வாழ்க்கை உங்களுக்கு கஷ்டம்?”
“என் வாழ்க்கை கஷ்டம், எனக்கானது! பதிவு செய்து பார்வைக்கு வைத்து விட்டதற்காக ரொம்பவும் உணர்ச்சி வயப்படாதீர்கள். வாசகன் என்பவன்  பதிவை மட்டும் ரசிப்பதுவே உசிதம்! அதை விட்டு எழுதியவனை திருப்பிப் போட்டும் பார்க்கக் கூடாது. என் கஷ்டம் என்பது எங்கவூர் பச்சை மலை பெரிசு! அதில் உருண்டு உருண்டு  தினைக்கும்  ரணமாகி அவஸ்த்தைக் கொள்வதென்பது நிஜம்! ஓர் சின்னத் திருப்பத்தில் அது எனக்கு ஒன்றுமில்லை என்றும் போகலாம். கவிஞன் கஷ்டம் கொள்வதற்காக வாசகராகிய  நீங்கள்  சஞ்சலப்பட தொடங்கினால், அதற்கு முடிவே இருக்காது. முடியவும் முடியாது. ஆமாம், உங்கள் பெயர் என்ன?”
“தாஜ்”
“தாஜண்ணா,  நான் ஏகப்பட்ட சஞ்சலங்களோடு வாழ்வது உண்மைதான்.”
“ஓ…”
“ஓ…. வா? என்னன்னு கேட்க மாட்டீங்களா?”
“கவிஞர்களது சஞ்சலங்கள் வாசகனுக்கு வேண்டாம் என்பதாக இப்பத்தானே பாடம் எடுத்தீங்க!”
“அது பொதுவா சொன்னது. எனக்காக இப்ப, நீங்க என்னன்னு கேட்கலாம்.”
“சரி சொல்லுங்க, என்ன?”
“தாஜண்ணா… நான் ஏன் வாழணும்?”
“வாழ்ந்துதான் ஆகணுன்னு நான் சொன்னேனா என்ன? சாகத் தெரியலையோ என்னவோ!”
“நோ நோ… எனக்கு சாகணும்!”
“ஆஹா பேஷா, செத்தும் போகலாமே! நாள் நட்சத்திரமெல்லாம் குறிச்சாச்சா?”
“குட்டிப் பையனை நினைச்சாதான் பாவமா இருக்கு?”
“யாரது? உங்கப் பையனா? வீட்டில் உள்ளவர்களெல்லாம்  ஆம்பிள பிள்ளைத்தான் வேணுமுன்னு உன்னை நச்சரிச்சப்போ, முட்டி மோதி, பெத்தப் பிள்ளைதானே? அது குறித்து நீயோர் சிறுகதை எழுதியிருந்ததை படித்திருக்கிறேன்!”
“பரவாயில்லையே, என்னைப் பற்றி நிறைய தெரிஞ்சு வைச்சிருக்கீங்களே?”
“இன்னும் கூட தெரியும். நம்ம ‘மீடியா’காரனுங்க செய்திய கொண்டு வந்து கொட்டுறாங்களம்மா…”
“என்னது அம்மாவா? காலேஜில படிச்சு முடிச்ச ஃபீலிங்கே இன்னும் எனக்கு மாறல! அதுக்குள்ளாகவே என்னை அம்மா ஆக்கிட்டிங்களே!”
“ஸாரி! காலேஜ் லைஃப்ல கடைசியா பார்த்த படம் எது , ‘ஔவையாரா’, ‘சந்திரலேகாவா’?”
“இல்ல…, ‘ஆலம் ஆரா’!”
“நீங்க என்ன பொய்யா சொல்லப் போறீங்க!”
“தாஜண்ணா… அடிபடுவீங்க.”
“சாகப் போற நேரத்தில வயசுக்காக யாராவது வருத்தப் படுவாங்களா சொல்லுங்க?”
“இப்படி ‘வாங்க’, ‘போங்கன்னு’ பேச வேணாம்! நாமத்தான் இப்ப ஃபிரண்ட்ஸ்ஸா ஆயிட்டோமே!”
“எப்ப?”
“இப்போ!”
“ஆமாவா… ‘டி’ போட்டுப் பேசட்டா?”
“அநியாத்துக்கு லொள்ளு. ‘நீ’, ‘வா’, ‘போ’ போதும்”
“கவிதை எழுதுற பொம்பளைங்களை எல்லாம் ஆம்பிளைங்களும் இப்படி கரிச்சுக் கொட்டுறீங்களே… உங்களுக்கெல்லாம் ஏன் எங்களது கஷ்டமே புரிய மாட்டேங்குது?”
“அதைப் பற்றித்தான் ஆம்பிளைக் கவிஞர்கள் எழுதுறாங்களே!”
“எழுதுறாங்கத்தான். ஆனா, பொண்டாட்டி சரியா படுக்கலை என்கிறதுக்கெல்லாம் எழுத மாட்டாங்க!”
“நாங்க மட்டும் என்ன எழுதுறோம் அப்படி?”
“படுக்கிறதை, படுக்காததை, படுத்த புருஷன் இரண்டு தடவையோடு திரும்பிப் படுத்துக்கிறதை, என்று எதை விட்டீங்க! அத்தனையையும் பச்சைப் பச்சையால எழுதுறிங்க!”
“சே, நானெல்லாம் அப்படி எழுத மாட்டேன்.”
“இரண்டு நாள் படுக்க தவறின ஐம்பது வயசு புருஷனைப் பற்றி, நாற்பத்தி ஐந்து வயசு பொண்டாட்டி ஏக்கமும் பசலையும் கொண்டு கவிதை எழுத தொடங்கிடுறாங்ன்னா எப்படி? மார்க்கண்டேயனா மனுஷன்? சரி, நீயே சொல்லு ஒரு புருஷன் எத்தனை வருஷத்துக்கு பொண்டாட்டிக்கிட்டே படுத்துகிட்டே இருக்க முடியும்? அப்படியே அவன் படுக்கணுன்னு  ஆசைப்பட்டாலும் இயற்கை இடம் தருமா?”
“அய்யோ அண்ணா… புரியாம பேசாதிங்க. அதெல்லாம் குறியீடாக இருக்கும்!”
“இதோ பார் பொண்ணு, ‘மஹாகவி’ பிரம்மராஜன் கிட்ட கவிதைப் படிச்சவன் நான். இந்த ‘உதார்’ எல்லாம் வேணாம். ‘என் யோனி விரியுது!’ என்கிறதையும்  குறியீடாக பார்  என்கிறாயா? இதைவிட நுட்பமான குறியீடு வார்த்தைகள் தமிழில் இல்லையா என்ன?”
“பொம்பளைங்க நாங்க எத்தனை யுகமா உதாசீனப் படுத்தப்பட்டுக்கொண்டே கிடக்கிறோம் தெரியுமா! எங்களை ஏன்னு கொஞ்சமாவது திரும்பிப் பார்த்ததா இந்த ஆண்வர்க்கம்? அவர்களை திரும்பிப் பார்க்க வைக்கவும், கத்தவும் கதறவும் வைக்கத்தான் இந்தமாதிரியான சின்னச் சின்ன யுக்திகள்!  ‘பொதிக்கிட்டு போயிடுவா பொம்பள!’ என்கிற திமிரான சிந்தனை இப்ப உடைப்படுதில்ல!”
“நீ சொல்றதுல நிஜமும் இருக்கு வீம்பும் இருக்கு! எந்த ஆம்பள பொம்பளைங்கப் பின்னாலே அலையில சொல்லு? இல்ல, எந்த ஆம்பிள பொம்பளைகிட்ட  அடிப்பட  ஆசைப்படல சொல்லு! எல்லாத்தையும் அடக்கி ஆளணும் என்று உபதேசிக்கிற சாமியாருங்க கூட பொம்பளைங்களிடம்தானே விழுறானுங்க! சாம்ராஜியங்கள்  விழுந்த கதையெல்லாம் கூட  இருக்கு! மீடியா, சினிமா என்று எல்லாமே உங்கள முன்வைத்துதானே வியாபாரமே நடத்துது! இதெல்லாம் பொம்பளைங்கள திரும்பிப் பார்க்காத செயலா? சமூகத்துல, பொம்பளைங்களோட  பவர் என்னன்னு தெரியாம பேசுற நீ!”
“தாஜண்ணா… வேணுமின்னே குதர்க்க வாதம் செய்றீங்க! ஆம்பிளைங்க மாதிரி எது வேணுமுன்னாலும், எங்கே வேணுமுன்னாலும் சுதந்திரமா பொம்பிளைங்களால செய்ய முடியுதா? சுத்த முடியுதா சொல்லுங்க? பத்து மாசம் சுமக்குறோமே அதன் வலி முழுசா தெரியுமா இவங்களுக்கு?”
“ஆம்பிளைங்க கிட்டே கேட்டா, இந்த உலகத்த இன்னைய வரை கட்டி எழுப்பிய மொத்த வலியையும் சொல்வான்! பொழுது போய்க்கிட்டு இருக்கு, நாம கவிதையைப் பற்றி  பேசலாம். பேசலாம்தானே?
“ம்…”
“அந்தக் கவிதையில எனக்கு பிடிச்ச இன்னொரு வரி, ‘நெருடும் உளைச்சலின் அலையிரைச்சல்’ என்கிறதுதான். அப்படியென்ன உனக்கு ஓயாத உளைச்சலும், கவலையும்?”
“அப்படி இல்லாமலா எழுதி இருப்பேன்?!”
“நான் அறிஞ்ச வகையில, உன் குடும்பத்துக்கு அழியாத சொத்து இருக்கு! காசு, பணம் இருக்கு! அப்புறம் என்ன கவலை உனக்கு?”
“அய்யோ… மட அண்ணா, சொத்தும், காசுபணமும் நம் கவலையை போக்குமுண்னு யார் சொன்னது உங்களுக்கு? அதுவே கதின்னு தேடுகிறவர்களுக்கு வேணுமானால் கொஞ்ச காலத்திற்கு அது மகிழ்வைத் தரலாம்! எல்லோரது கவலையையும் எல்லா காலத்துக்கும் போக்க அதுயென்ன சர்வரோக சஞ்சீவி நிவாரணமா? அதிகம் போனால் வயிற்றுப் பசியை போக்கிக் கொள்ளலாம். மனப்பசியை? ஒரு குண்டுமணி அளவுக்கு கூட அதால நிவர்த்தி செய்ய முடியாது. என் பார்வையில் சிரிக்கும் ஒரு மல்லிகை மொட்டு தருகிற  சந்தோஷத்தை  அதனால் தர முடியுமாண்ணா?”
“தெளிவாதானே பேசுறே! நீ சொல்றது எல்லாம் இன்னொரு பக்கத்து சரிகள்தான்! மறுக்க முடியாது. மேலே சொல்லு.”
“என் பொண்ணு அப்பா செல்லம். சின்னவயசிலிருந்தே, எது வேணும் என்றாலும் அப்பா கிட்டே வாங்கிக்கொள்வா. கல்லாபெட்டி அவர்தானே! நம்ம குடும்ப அமைப்பும் அப்படிதானே இருக்கு. அப்பா செல்லமாவே வளர்ந்து, அவர் செல்லமாவே படிச்சா! யூ.கே.ஜி, எல்.கே.ஜி யில் தொடங்கி இஞ்ஜினியர்வரை ஃபஸ்ட் கிளாஸ்தான்! இப்போ இன்னொரு மாநிலத்துல  உயர்ந்த உத்தியோகம்! சந்தோஷமாதான் இருக்கு.  ஆனா, அவளுக்கு அம்மாவின் அர்த்தமோ, அம்மாவோடான அன்னியோனியமோ தெரியாலேயே போயிடுச்சு!  மொத்தத்துல அவளுக்கு நான் அன்னியமாயிட்டேன்!”
“ஸாரி பொண்ணு, போதும். தாங்க முடியலை.”
“இல்லண்ணா, கேளுங்க. என் பொண்ணை மாதிரி பையனை  நான் இழந்துடலை! லேட்டா பொறந்ததுனாலயோ என்னவோ பாசத்தைப் பொழிஞ்சி,  என் நிழலுலேயே வைச்சுகிட்டது  நல்லதாப் போச்சு. அவனுக்கு டீயூசன் டீச்சர், கெய்ட், ஃபிரண்ட், பிலாசஃபர் எல்லாமே நான்தான்! இன்னைக்கும் அப்படிதான். பொண்ணு மாதிரி தூர போயிடாம, பையன் அம்மான்னு ஆயிட்டான்! ஏற்கனவே வீட்ல நான் மட்டும்தான் வெஜ், இப்போ அவனும் வெஜ்! வீட்டுக்கு இது சரியா புரிய வந்ததில் இருந்து, மொத்த வீடுமே குய்யோ முய்யோங்குது.  ‘வீட்டுக்கு வாரிசா இருக்கிறதே இந்த ஒரே ஆண் பிள்ளைதான்!  இந்தப் பிள்ளையை  விஜிடேரியனாக்கிடா எப்படி?  வத்தலும் தொத்தலுமா ஆகிடமாட்டானா’ன்னு குதிக்கிறாங்க. நான் எதுவும்  பேசறது இல்லை.”
“பரவாயில்லையே! நான் என்னவோல நினைச்சேன்! சாதிச்சுகிட்டுதான் இருக்கே”
“எழுதுறவள்னா என்ன ‘பைத்தியமா? அப்படிதானே மொத்த வீடும் நினைச்சாங்க. இப்ப அது இல்லன்னு ஆயிடுச்சில. ஆனா மனசுக்குள்ள சின்னபயமும் உறுத்தலும் இருந்துகிட்டே இருக்கு. என் பையன் வத்தலும் தொத்தலுமா அவுங்க சொல்றது மாதிரி ஆயிடுவானோன்னு! அது நிஜமில்லைத்தானேணா!”
“பயப்படாதே. அப்படியெல்லாம் ஒன்னும் ஆகிவிடாது.”
“கல்யாணம் ஆன காலத்தில் இருந்து, அந்த வீட்ல என் இஷ்டமுன்னு எதுவும் கிடையாது. படுன்னா படுக்கனும், பெத்துக்கன்னா பெத்துக்கனும்! சின்ன விசயங்களில் கூட அவுங்க இஷ்டப்படிதான் நடக்கனும்! ‘பட்டுப் புடவை கட்டிக்க’, ‘மேக்காப் பண்ணிக்க’, ‘நகை நட்டெல்லாம் போட்டுக்க’, ‘கார்ல போ கார்ல வா’ன்னு எனக்கு எப்பவும் கட்டளை கட்டளைதான்! நச்சரிச்சுட்டே இருந்த என் குடும்பத்து பெரிசுங்க, இன்னைக்கு என் பையனுக்காக என்னை சுத்தி சுத்தி வந்து பொளம்புறத பார்க்கவும், ரொம்பவும் ரசிக்கிறேன்ணா.”
“சரி, டைமாச்சு! சூரியன் விழிக்கிற நேரம். இன்னும் கொஞ்ச நேரத்தில் பள்ளிவாசலில் பாங்கு சொல்லிடுவாங்க. அதற்கு முன்னாலே ஐய்யனார் காவல முடிச்சுட்டு வந்து குந்தனும்! பேய் இரைச்சலா காத்து வீசுது! மரத்து கிளை இலையெல்லாம் அநியாயத்துக்கு சலசலக்குது! குதிரை கழுத்து மணி சப்தம் வேற கேட்குது. நீ கிளம்பு. நான் புறப்படனும்.”
“நான் எங்கே கிளம்புறது?
“ஏன்?”
“நீ கிளம்பினாதானே நான் கிளம்ப முடியும்!”
“புரியிற மாதிரி பேசு! கவிதை எழுதுற மாதிரிப் பேசாதே! நீ கிளம்ப, நான் ஏன் கிளம்ப வேண்டும்?”
“அய்யோ…. உன் உள்ளேதானே நான் இருக்கிறேன்!”

*

நன்றி : தாஜ் / தமிழ்ப்பூக்கள்
மின்னஞ்சல் : satajdeen@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s