கூத்தாநல்லூர் சாபு வீட்டு கோணிகிராப் பொட்டி

முந்தைய லிஸ்டில் அந்த ’78 RPM ரிக்கார்டு’ மட்டும் தடிமனாக இருந்தது. கவனித்தீர்களா? அது சகோதரர் சடையன் அமானுல்லாவின் எழுத்துத் திறனை இங்கே சொல்வதற்குத்தான்!  இப்போது ‘சமநிலைச் சமுதாயம்’ இதழில் அவர் பணியாற்றுவதாக அறிகிறேன். நல்லது. ‘லிஸ்ட்’  வெளியான அடுத்த சில மணி நேரத்தில் தங்கள் வீட்டு ‘பொட்டி’ பற்றி அவர் எழுதியதை  கீழே தந்திருக்கிறேன். (வேர்ட்பிரஸ் இன்று ரொம்பவும் உதைக்கிறது. உடைந்த பத்திகளை ஒட்டவைத்துப் படியுங்கள். ) நன்றி.

*

கோணிகிராப் பொட்டி

ஊரில் ‘மொதமொதக்கா நம்பூட்டுக்குத்தான் ‘கோணிகிராப் பொட்டி’
வந்ததென பாட்டி மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லி மகிழ்வாள். அந்த ‘கோணிகிராப்’ பொட்டியில் நானே அதிகதிகமாக பாட்டு, கதை வசனம் கேட்டிருக்கிறேன். வீரபாண்டிய கட்ட பொம்மன் கதை வசனம்,  மனோகரா கதை வசனம், சிட்டுக் குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? பாடல், அவள் செந்தமிழ்த் தேன் மொழியாள். பாடல் நாகூர் ஹனீபா காலத்திற்கு முந்தைய
அல்லது சம காலத்து பாடகர் கலிபுல்லாவின், ‘பூரண சந்திரன் போலவே பேரொளி எங்கும் வீசவே பார் மீதே தோன்றினார்.. யா ரசூலுல்லாஹ்’ போன்ற இசைத்தட்டுக்கள் பல கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் ஊரில் தாத்தா வீட்டிற்கு சென்றிருந்த போது மாமி(அத்தை)யிடம் ‘அதெல்லாம் என்னவாயிற்று’ எனக்கேட்டபோது, ‘ஒடஞ்சது பாதி ஒடெயாதது பாதியாக எல்லாம் பரண் மேல் கெடக்கிறதென்றார்கள். ‘பார்க்கவேண்டுமே’ என்றேன். அதெல்லாம் ‘ஒனெக்கெதுக்குப்பா இப்போ’ என மறுத்த போது, ‘இல்லை அவசியம் பார்க்க வேண்டுமென ஆயத்தமான போது, விட்டால் மருமகனே பரணில் ஏறி விடுவானோ என்ற பயத்தில், ‘சரி சரி வேலைக்காரன் வரட்டும் எடுத்துத் தரச் சொல்கிறேன் என்பதையும்
பொருட்படுத்தாது கைலியை வரிந்து கட்டிக் கொண்டு ஏணி மேல் ஏறிவிட்டேன்.

பரண் என்றுதான் பேர் இது போன்ற இடத்தை பம்பாயில் வாடகைக்கு விட்டால் பல லட்சம் மாத வாடகையே கிடைக்கும். பார்வையை சுழல விட்ட போது, நடை வண்டி, மூணுகால் சைக்கிள், பழைய லாந்தர் விளக்குகள், பெரிய பெரிய
வெங்கல பூஜாடிகள். ரசம் போன நிலைக் கண்ணாடிகள், ஊஞ்சல்கள், சைஸ்வாரியாக ட்ரன்க் பெட்டிகள், படிக்கல், தராசு, மரக்கால், முக்காலி இப்படி பல வகைகள். பெட்டி பெட்டியாக திறந்து பார்த்ததில், ஜரிகை மாலைகள், கம்பியில் கோக்கப் பட்ட “பொத்த காசு” எல்லாம் கிடைத்ததே தவிர கோணிகிராப் பெட்டியும் இசைத் தட்டுகளும் கிடைக்க வில்லை. கடைசியாக இருந்த ஓர் பெட்டியில் அந்த கோணிகிராப்பும், இசைத்தட்டுகளும்
கிடந்தது. வேலைக்காரனை விட்டு கோணிகிராப்பை எடுத்துக் கொள்ளலாம் எனவென்னி, இசைதட்டுகளை மட்டும் எடுக்க முற்பட்டபோது, சில புத்தகங்களும் தென்பட்டது. எல்லாம் இஸ்லாமிய புத்தகங்கள். அடுத்து பாதி கரையானால்
அரிக்கப்பட்ட ஒரு பொத்தகம். அது ‘மணிக்கொடி’ கையில் தூக்கிய போதே பொல பொலவென பொத்தகம் கொட்டி விட்டது. மிஞ்சிய இரு பக்கத்தில் ஒரு கதை ‘ முதலைச்சட்டை” என்ற பெரிய் எழுத்து விக்கிரமாதித்தன் சைசில் அதுவும் பாதிப்பக்கத்தில், மீதி இடத்தை ‘ சனடோஜன்’ மாத்திரை விளம்பரம் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. மணிக்கொடி படிக்க கொடுப்பினை இல்லை.

இப்போது ‘பிட்சா” வைத்து தருகிறார்களே அம்மாதிரி சதுரமான சிவப்பு அட்டைப்பெட்டியில் இசைத்தட்டுகள் இருந்தன. கையிலே அள்ளிக் கொண்டு ஏணியருகே வந்திருப்பேன். மணிக்கட்டிலே சுளீரென்ற ஒரு வலி . வலி தாங்க முடியாமல் பெட்டியை நழுவ விட்டதில் இசைத்தட்டுகள் கீழே விழுந்து சுக்கு நூறாகியது. பெட்டியிலிருந்து பெரிய தேள் ஒன்று ஓடி மறைய இடம் தேடிக்
கொண்டிருந்தது.

எப்படியோ வலியைத் தாங்கிக் கொண்டு பரனிலிருந்து இறங்கி விட்டேன். ஆளாளுக்கு வைத்தியம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதிலொன்று, கிராமபோன இசைத்தட்டை ‘உரைத்து’ கொட்டு வாயில் தடவினால் வலி போய்விடுமாம். உடைந்த தட்டை எடுத்து அம்மிக்கல்லில் உரைக்க ஆரம்பித்து
விட்டாள் ஒரு வேலைக்காரி.

‘அதெல்லாம் சரி வராது மாப்ளே, இப்ப பாருங்க வலி பறந்தோடி விடும்’ என ஒரு சொந்தக்காரர், சைக்கிளை எடுத்து வந்து நிப்பாட்டி, அருகே வாளி நிறைய தண்ணீரை வைத்து, சைக்கிள் ‘டைனமோ’ விற்கு செல்லும் ஒயரை பிரித்து வாளித்தண்ணீரில் விட்டு,’ மாப்ளே கையை வாளியில் விடுங்கள்’ எனச் சொல்லி சைக்கிள் வீலை சர் சர்ரென்று சுற்றினார்.டைனமோவின்
மின்சாரம் தண்ணீரில் பாய்ந்ததும், விர்ரென்று மின்சாரம் கையில்
தாக்கியதில் வலி தெரியவில்லை, ஆனால் கையை வாளியிலிருந்து வெளியில் எடுத்தால் பழையபடி வலி. இதற்கிடையில், மாமி அவரைப் பார்த்து , “ஏண்டா உனக்கு கூறு மாறியாப் போச்சு கரண்ட்ல் கையை வுட்டா, ரத்தம் சுண்டிப்
போயிடுங்ற புத்தி தெரியாமப் போச்சே உனக்கு, போடா போய்
பள்ளிவாசல்லேருந்து லெப்பையை கூட்டி வா, அவர் வந்து ஓதி ஊதினால் எல்லாம் சரியாப் போயிடும் என” விரட்டினாள்.

இதற்கிடையில் நாட்டுவைத்தியருக்கு ஆள்விட்டு அவரும் வந்து விட்டார். கொட்டிய இடத்தை கையால் தடவி, நாடியையையும் பிடித்து பார்த்து விட்டு, ‘செனைத்தேள்’ ( வயிற்றில் குஞ்சுள்ள) கொட்டியிருக்கிறது, விஷம் அதிகம். சூரணம் தருகிறேன், மூன்று நாள் மூன்று வேளை சாப்பிட்டால், விஷம் இறங்கி
விடும் என சூரணத்தை சீனி, மிளகு இரண்டிலும் கலந்து பொடியாக்கி சாப்பிட வைத்து , அவர் கிளம்பும் போது சூரணம் சாப்பிடும் மூன்று நாளைக்கும் கருவாடு, மீன், கத்த்ரிக்காய் சாப்பிடக் கூடாது என கண்டிப்பாக சொல்லிப்
போய்விட்டார். ( ஊரில் நாட்டு மீன் சாப்பிடும் ஆசையிலும் மண்) நேரம் ஆக ஆக வியர்த்துக் கொட்டியது. சரிப்பட்டு வராது எனத் தெரிந்து, டாக்டரைப் பார்க்கக் கிளம்பி விட்டேன். டாக்டரிடம் ஊசி போட்டுக் கொண்டு வந்த பிறகே வலி கொஞ்சம் குறைந்த மாதிரி ஓர் பிரமை. கீழே விழுந்து உடைந்த கிராமபோன் இசைத்தட்டை கையிலெடுத்து பார்த்தேன். ‘வீரபாண்டிய கட்டபொம்மன் – கதை வசனம் 3ம் பாகம் ‘ என எழுதியிருந்த்தது.

இது நடந்த மூன்றாம் நாள் சென்னைக்குப் புறப்பட்டு வந்து விட்டேன். ஒரு வாரம் கழித்து, வீட்டுக்காரி, ‘ஏங்க… பீச்சுக்கு போயிட்டு வரலாமா?’ எனக் கேட்டாள். நான் கூப்பிடும் போதல்லாம் முகத்தைச் சுளிப்பவள், வலிய
வந்து கூப்பிடுகிறாளே என்ன வில்லங்கமோ தெரியவில்லை, ஏனென்று கேட்டு வைத்தேன். ” சும்மா போய்ட்டு அப்படியே வரும்போது மீன் வாங்கி வரலமென்றாள்” . மீனுக்குத்தான் தூண்டில் போடுவார்கள், இவள் மீனைச்சொல்லி
நமக்கு தூண்டில் போடுகிறாளே என மனதிற்குள் சொல்லிக் கொண்டு தம்பதி சமேதராக பீச்சிற்கு புறப்பட்டோம்.

பீச்சிலே உட்கார்ந்து பேசிமுடித்து கிளம்பும் நேரத்தில் ‘மசக்கைக்காரிக்கு’ ஆசை வருவது போல் சுண்டல் சாப்பிடலாமே என்றாள். வழக்கம்போல தலையாட்டி விட்டு சுண்டல்காரனைத் தேடிச் சென்றபோது, நடைபாதை கடையொன்றில் நல்ல
கூட்டம், இருவருமாகவே எட்டிப் பார்த்தோம்.

கடைபோட்டிருந்தவர், காடாவிளக்கு உஷ்ணத்தில் பழைய கிராமபோன் இசைதட்டை காட்டி கையாலெயே வளைத்து நெளித்து, பல வடிவங்களில் அழகான தட்டைகள உருவாக்கி அதற்கு பலவண்ணம் தீட்டி காசாக்கிக் கொண்டிருந்தார்.
சாப்பாட்டு மேசையில் வைக்க நமக்கும் நாலு தட்டை வேண்டும் என வீட்டுக்காரி கேட்க, கடைக்காரர் அங்கு அடுக்கி வைக்கப் பட்டிருந்த இசைத்தட்டுகளைக் காட்டி, உடைசல், விரிசல், இல்லாமல் நல்லதாக நீங்களே ‘செலக்ட்’ செய்து தா சார், ‘தட்டு’ செய்து தருகிறேனென்றார். வீட்டுக்காரி ஏதோ தேங்காய் வாங்குவது போல தட்டித் தட்டி ‘செலக்ட் செய்து ‘இசைத்தட்டுகள கடைகாரர் கையில் கொடுப்பதற்கு முன் ஆர்வக் கோளாறால் எந்தப் பாடலின் இசைத் தட்டு எனப் படித்தப் போது, நான்கு
இசைத்தட்டுகளிலும் ‘வீரபாண்டியக் கட்டபொம்மன் கதை வசனம்’ என்றிருந்தது.

*

நன்றி : சாபு (சடையன் அமானுல்லா) , ராயர் காப்பி கிளப்

*

இன்னும் :

Gramophone record – பற்றி wikipedia சொல்வதைப் பார்த்துவிட்டு வலையுலகின் ‘கலகல’ ஜவஹரின் ‘இசைத்தட்டு ஜோக்ஸ்’!ஐயும் சும்மா பாருங்கள்.

1 பின்னூட்டம்

  1. A.Baskaran said,

    30/05/2010 இல் 11:17

    Really interesting but bitter truth


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s