தொழுகையும் துன்னூன் மிஸ்ரியும்

மௌலவி எஸ். அப்துல் வஹாபு பாகவி அவர்களின் ‘இறை வணக்கம்’ நூலிலிருந்து.  இமாம் கஸ்ஸாலியின் ‘இஹ்யா’வில் ஒரு பகுதியான ‘அஸ்ராருஸ் ஸலாத்’ஐ (தொழுகையின் ரகசியங்கள்) அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நூல் அது.
*

துன்னூன் மிஸ்ரியிடம் ஒருவர் தன் குறையை எடுத்துக் கூறினார்.

‘என்ன செய்வது என்றும் எனக்குத் தெரியவில்லை; காரணம் என்ன என்றும் புரியவில்லை’ என்று பீடிகை போட்ட அந்த மனிதர் தனக்கு எதிரில் அமைதியாக உட்கார்ந்திருந்த ஞானப் பழத்தைச் சில வினாடிகள் பார்த்தார்.

‘செய்தியைச் சொல்லுங்கள்’

சற்றுப் பதற்றத்துடன் நின்று கொண்டிருந்த அந்த மனிதர் தொடர்ந்தார்.

‘நான் வேளை தவறாமல் தொழுது வருகிறேன். சமீபக் காலத்தில் ஒரு தொழுகையைக் கூட விட்டதாக எனக்கு நினைவிலில்லை. ஆனால் சில நாட்களாக என் தொழுகையில் வெறுக்கத்தக்க மாறுதலை நான் பார்க்கிறேன். தொழ வேண்டிய நேரம் வந்ததும் என் மனதில் ஒருவிதமான சங்கடம் தோன்றுகிறது. மனத்தை அடக்கிக்கொண்டு தொழுகையில் ஈடுபட்டால், தொழுகையின் பகுதிகளில்  சிலவற்றை எனக்கே தெரியாமல் நான் விட்டுவிடுகிறேன். சில நேரங்களில் ஒரு ரக்அத் முடிந்ததும் அது இரண்டாம் ரக்அத் என்று தோன்றுகிறது’

என்று கூறிய அந்த மனிதர் சற்றுத் தயக்கத்துடன் தன் மனத்திலுள்ள எண்ணத்தைக் கூறி முடித்தார்.

‘இறைவனிடம் மன்னிப்புக் கேட்கிறேன். தொழுகை என்றதும் என் மனதில் ஒருவிதமான வெறுப்புத் தோன்றுகிறது. இந்த நிலைமை எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இந்த வெறுப்பை என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. எனக்குக் காரணமும் தெரியவில்லை. பரிகாரமும் புரியவில்லை!’

ஞானியின் வினா அமைதியாக வெளி வந்தது. ‘இந்த நிலைமை சில நாட்களாகத்தான் உனக்கு இருக்கிறது என்று கூறினாயல்லவா? முன்பெல்லாம் உனக்குத் தொழுகையில் வெறுப்புத் தோன்றவில்லையா?’

‘இல்லை. அப்போதெல்லாம் நான் தொழுகையில் விருப்பத்தைக் கண்டேன். என் மனத்தில் வெறுப்போ அலுப்போ தோன்றியது கிடையாது’

‘தொழுகையில் உனக்கு எத்தனை நாட்களாக வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது?’

‘தொழுகையில் எனக்கு வெறுப்புத் தோன்றுகிறது என்று சொல்வதற்கே நான் பயப்படுகிறேன். இறைவன் என்னை மன்னிக்க வேண்டும். ஏறக்குறைய 20 நாட்களாக இந்தத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்’

‘இருபது நாட்களுக்கு முன்னர் ஏதேனும் குறிப்பிடத்தக்க சம்பவம் நடந்திருக்கிறதா?’

சற்று யோசித்துப் பார்த்துவிட்டு அந்த மனிதர் பதிலளித்தார். ‘அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் சென்றமாதம் காய்க்கறிகள் விற்பனை செய்யும் நோக்கத்தில் ஒரு கடை வைத்தேன்’

ஞானியின் முகம் பளிச்சிட்டது. ‘தொழுகையில் வெறுப்பு ஏற்படுகிறது என்று சொன்னாயல்லவா? இந்த வெறுப்பினால் தொழுகையை நீ விட்டது உண்டா?’

‘உண்டு. இரண்டு அல்லது மூன்று தொழுகைகளை விட்டிருக்கிறேன்’

‘தொழுகையை நிறைவேற்றாதபோது அந்த நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தாய்?’

‘வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கடையை அலங்கரிப்பதில் அக்கறை செலுத்திக் கொண்டிருந்தேன்’

‘அந்த அக்கறை இப்போதும் உனக்கு இருக்கிறதா?’

‘நிறைய இருக்கிறது. இரவில் கூடக் கடையைப் பற்றிய நினைவு மாறுவதில்லை’

‘தொழுது கொண்டிருக்கும்போது இந்த நினைவு உனக்கு ஏற்படுகிறதா?

‘ஆம்’ என்று பதில் வந்தது.

அந்த ஞானக் கடலின் அறிவுரை தெளிவுரையாக வெளிவந்தது.

‘மனிதனுக்கு இறைவன் இரண்டு கண்களையும் இரண்டு காதுகளையும் கொடுத்திருக்கிறான். கையையும் காலையும் கூட இரட்டையாகத்தான் அவன் அளித்திருக்கிறான். ஆனால் எந்த மனிதனுக்கும் இரண்டு உள்ளங்களைக் கொடுக்கவில்லை. உனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உள்ளத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அக்கறைகள் ஒரே நேரத்தில் ஆழமாக வேரூன்ற முடியாது. உனக்கு தொழுகையில் வெறுப்பு ஏற்படுவதற்கு, வியாபாரத்தில் உனக்கு இருக்கிற ஆழ்ந்த அக்கறை – ஆசைதான் காரணம். இந்த அக்கறை, தொழுகையில் ஏற்கனவே இருந்த அக்கறையை அழித்து விட்டது. ஏனெனில் நீ பின்னதை விட முன்னதை வலிமைப்படுத்தி விட்டாய்.  தொழுகையில் வெறுப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று தெரிகிறதா? மீண்டும் உனக்குத் தொழுகையில் வெறுப்பு விருப்பம் ஏற்பட வேண்டுமானால், அதற்கு இரண்டு காரியங்களில் ஒன்றை நீ அவசியம் செய்ய வேண்டும். ஒன்று, நீ தொடங்கியிருக்கும் வியாபாரத்தை விட்டுவிட வேண்டும். அல்லது, வியாபாரத்தை விடத் தொழுகையில் அதிக அக்கறை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்’

– ஞானி துன்னூன் மிஸ்ரியின் கருத்து, இறை வணக்கத்தில் ஈடுபடுகிற பெரும்பாலோருக்கு நல்வழி காட்டும் என்று எண்ணுகிறேன். வியாபாரம் செய்யக்கூடாது என்பது அவரது கருத்தல்ல. எனக்கும் அந்தக் கருத்து கிடையாது. வர்த்தகத்தை விட வணக்கத்தில் அதிக அக்கறை இருக்க வேண்டும் என்பதே ஞானத்தின் போதனை. எல்லா விதமான முன்னேற்றத்திற்கும் இறை வணக்கம் துணை செய்கிறது என்பதை அனுபவத்தில் கண்ட சிலரில் நீங்களும் ஒருவராக இருந்தால், இங்கே இதற்கு மேல் விரிவாக எழுத வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது. உணர்ந்து கொண்டவர்களுக்கு உணரப்பட்ட செய்திகளை உணர்த்திக்காட்ட முற்படுவது அர்த்தமில்லாத செயலாகும்.

*

1 பின்னூட்டம்

  1. 16/03/2010 இல் 08:18

    மர்ஹபா

    இதை, இதை தான் உங்களிடமிருந்து எதிர் பார்த்தேன்.தூள்மா

    நண்பன்
    M அப்துல் காதர்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s