அல்லாஹ்வுக்கு கோரணி !

‘அல்லாஹ்வுக்கு வவ்! வவ்!!’ என்றுதான் தலைப்பிட்டிருந்தார் ஹமீது ஜாஃபர். ஆட்டுபவர்கள் அடிப்பார்களென்று அடியேன் மாற்றிவிட்டேன். அறியவும். இதுபோன்ற விவாதங்களில் ஈடுபட எனக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. வாழ்வே அந்தரத்தில் ஆடிக்கொண்டிருக்க இதெல்லாம் என்ன?  விரலாட்டம் சம்பந்தமாக ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் ‘வார்த்தை’ இதழில் எழுதிய செம கிண்டல் கதையைக்கூட  இங்கு பதிவிடாத காரணமும் அதுதான்.  மாற்றுக்கருத்துள்ள சகோதரர்கள் பின்னூட்டமிட்டால் (இந்த வார்த்தையே முதலில் சரியில்லை) நானா பதில் சொல்வார் என்று நினைக்கிறேன். வான்கோவின் கடிதங்களை நாளை பதிவிட வேண்டும், என்னை விடுங்கள்.

*

அல்லாஹ்வுக்கு கோரணி !
ஹமீது ஜாஃபர்

சுமார் இருபது இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்பு அதாவது அரபு நாட்டுக்கு வருவதற்கு முன்பு ஊரில் அது எந்த ஊராக இருந்தாலும் சரி பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதால் குறிப்பாக இமாம் ஜமாத்தில் தொழுதால் ஒரு அமைதி கிடைத்தது; தொழுதோம் என்ற உணர்வு ஏற்பட்டது; அந்த உணர்வு அடுத்தத் தொழுகைவரை நீடிக்காவிட்டாலும் ஒரு மணி நேரமாவது நிலைத்து நின்றது.

ஆனால் இன்று, அரபு நாட்டிலும் சரி அல்லது சொந்த நாட்டிலும் சரி எந்த பள்ளியில் ஜமாத்தில் நின்று தொழுதாலும் அமைதி துளிகூட ஏற்படுவதில்லை. பின்பு தொழுத உணர்வு எப்படி ஏற்படும்? காரணம் நீண்ட நாட்களாகப் புலப்படவில்லை.

நம் நாட்டில் எந்த பள்ளியிலும் ஏஸி கிடையாது, தரையில் கார்பெட் கிடையாது. ஆனால் அரபு நாட்டில் கார்பெட்டும், ஏஸியும் இல்லாத பள்ளி கிடையாது. குழுக் குழுவாக நின்று – முட்டியும் நெற்றியும் தரையில் அழுந்தாமல் – தொழுதாலும் அமைதி கிடைப்பதில்லை. ஏன், ஏன்? என்ற கேள்வி உறுத்தியது.

இனிமையான கிராஅத் உயர்ந்த ஆடியோ சிஸ்டத்தில் செவிகளில் விழும்போது மனத்தில் ஏற்படுகிற அமைதி கடைசியில் கலைந்து பறந்தோடிவிடுகிறது. வெளியே வரும்போது தொழுதோம் என்ற உணர்வைவிட இரண்டு முட்டு முட்டிவிட்டு வந்தோம் என்ற உணர்வே மேலோங்கி நிற்கிறது! காரணம்? கவனச் சிதறல். பக்கத்தில் நின்று தொழுகுகிறார்களே அவர்களின் காருண்ய செயல்களால்தான் இந்த கவனச்சிதறல் ஏற்படுகிறது என்ற உண்மை விளங்கியது.

தொழுகையில் ஒவ்வொரு செயலுக்குமே ஓவ்வொரு அர்த்தம் உள்ளது. ‘தொழுவதற்கு பள்ளிக்குச் செல்வதானால் வேகமாக செல் ஆனால் பரபரப்போடு அல்ல; அமைதியாக ஒளு செய்துவிட்டு சுன்னத்துத் தொழு, அது ஃபர்ளு தொழுகைக்கான மனப்பான்மையை ஏற்படுத்தும்; கவனம் சிதறாமல் ஃபர்ளு தொழுகையை முடி; பிந்திய சுன்னத்தை தொழு, அது அடுத்தத் தொழுகைவரையிலான மனப்பான்மையை உண்டாக்கும். அப்படி உண்டானால் நீ தொழுதாய் என்று அர்த்தம்.” என்று எங்கள் ஹஜ்ரத் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் இன்றோ….?

ஜமாத்தில் நின்று தக்பீர் கட்டியவுடன் ஒரு சின்ன டான்ஸ்; காலை அகட்டி அருகிலுள்ளவர் கால் சுண்டுவிரலில் உராய்ந்து கொண்டிருக்கும்படி செய்வார்கள். ஏனென்று கேட்டால் இருவருக்கிடையில் இடைவெளி இருந்தால் அங்கு ஷைத்தான் நிற்பானாம்! இவர் செயலில் ஷைத்தனியத் உள்ளது என்று இவருக்கே தெரியவில்லை, என்ன செய்வது? ஒருவரோடு ஒருவர் நெருங்கி நில்லுங்கள் என்பது ஹதீஸ். ஏன்? உங்களுக்கிடையில் நான் பணக்காரன் நீ ஏழை; நான் உயர்ந்த ஜாதி நீ தாழ்ந்த ஜாதி என்ற ஏற்றத்தாழ்வு (ஷைத்தானியம்) ஏற்படாமலிருக்க. ஆனால் இங்கு நடப்பதோ? இடையில் ‘கேப்’ விழுந்தால் அங்கு ஷைத்தான் நின்று குசும்புப் பண்ணுவான் அதற்கு இடம் கொடுக்கக்கூடாது, எனவே இருகால்களையும் அகட்டி நில்! இப்படி இரண்டுபேர் அகட்டி நின்றால் எந்த அளவுக்கு இடைவெளி விழும் என்பதை நீங்களே கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.

இதைவிட பெரிய கூத்து வேறொன்று.. சாதாரணமாக இது சின்னப் பிள்ளைகளிடம் இருக்கும். மிட்டாய் போன்று இனிப்பு எதாவது தின்றால், நாங்க முட்டாய் திங்கிறோமே! ஒனக்கில்லையே! வவ்வவ்வொ.. என்று கையை உயர்த்தி விரலை மடக்கி ஆட்டிக்கொண்டு கோரணி காண்பிப்பார்கள். இது குழந்தைகளுக்கே உரிய இயற்கை குணம். இது நம்மாள்களிடமும் இருக்கிறது. ‘அத்தஹயாத்’தில் விரலை ஆட்டுவது. ஹதீஸில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று தெரியாமலே செய்வது.

தொழுகை ஏற்படுத்திய காலக்கட்டத்தில் பல தெய்வக்கொள்கை இருந்தது. அப்போது அல்லாஹ் ஒருவன் என்பதை தனக்குத் தானே உணர்த்திக்கொள்வதற்காக ‘அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று சொல்லுமிடத்தில் விரலை உயர்த்திக் கொண்டார்கள். இது ரசூலுல்லாஹ் செய்தார்கள், செய்து காண்பித்தார்கள்.

ஹதீஸில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? ‘முஸ்லிம்’ஹதீஸில் (http://www.ummah.net/Al_adaab/hadith/muslim/had4.html)விரலை உயர்த்தினார்கள்,(ஹதீஸ் எண்: 1201,1203,1204)  என்று எழுதப்பட்டுள்ளது. அரபியில் இருக்கும் இந்த ஹதீஸ் ‘முஸ்லிம் எண்:579; நஸாயி எண்:1270; அபுதாவுது எண்:989’ ஆகிய கிதாபுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

‘உயர்த்தினார்கள்’ என்ற வார்த்தையை ‘ஆட்டினார்கள்’ என்று பொருட்படுத்திக்கொண்டு ஆட்டிக்கொண்டிருக்கின்றர். சிலர் வேகமாக ஆட்டுகின்றனர், வேறு சிலர் மெதுவாக ஆட்டுகின்றனர், இன்னும் சிலர் விரலை மடக்கி மடக்கி நீட்டி ஆட்டிக்கொண்டிருக்கின்றனர்.  இதில் என்ன frequencyயில் ஆட்டுவது என்று விளங்கவில்லை. சிலர் இருப்பிற்கு வந்தவுடனேயே ஆட்டுகின்றனர், சிலர் இடையில் தொடங்கி கடைசிவரை ஆட்டுகின்றனர், சிலர் இடை இடையே நிறுத்தி நிறுத்தி ஆட்டுகின்றனர்.

இந்த ஆட்டல், அருகிலிருப்பவர் கண்ணில் படாமல்  இருக்கமுடியாது. மன ஓர்மையுடன் தொழும் ஒருவருக்கு இந்த கடைசிநேர ஆட்டல் கவனத்தை சிதறடித்து தொழுத நிறைவு இல்லாமலாக்கிவிடுகிறது.

ஒரு நண்பரிடம் கேட்டேன், “ஏம்பா இப்படி ஆட்டுறீங்க?”

“அது ஹதீஸ்லெ இருக்கு.”

“எந்த ஹதீஸ்?”

“எந்த ஹதீஸுண்டு தேடிப்பாத்து சொல்றேன்.”

“அது தப்பா இருக்கலாமில்லையா?”

“ஒன்கிட்டெ மனுசன் பேசுவானா? ஹதீஸ்னா புரிஞ்சுக்கனும், வந்துட்டான் கேள்வி கேட்க…” என்று என்னை வசைபாடினார் அந்த நண்பர்.

வேறொருத்தர் சொன்னார், ‘ஷைத்தானை விரட்டுகிறார்களாம்’.  எந்த ஷைத்தானை என்று தெரியவில்லை. ஷைத்தானை விரட்டுவதுபோல் எனக்குத் தோன்றவில்லை மாறாக ‘அல்லாவுக்கு வவ் வவ்’ காண்பித்து, ஷைத்தானைக் கூப்பிடுவதுபோல் தோன்றுகிறது. இதை சொன்னால் அவர் என்னை வெட்டிப்போட்டு விடுவார், ஆகவே பேசாதிருந்துவிட்டேன்.

இந்த கூத்து எங்கே உற்பத்தியானது என்றால், இந்த அரபு நாட்டில்தான். இங்கு உற்பத்தியாகி எல்லா நாட்டிற்கும் இறக்குமதி ஆகிக்கொண்டிருக்கிறது. எல்லாம் பெட்ரோலிய டாலர்களுக்கே வெளிச்சம்!

**

நன்றி : ஹமீது ஜாஃபர் | E-Mail : manjaijaffer@gmail.com

5 பின்னூட்டங்கள்

 1. nagoorumi said,

  28/02/2010 இல் 07:33

  மிக அருமையான பதிவு ஹமீது ஜாஃபர் அவர்களே, உங்கள் துணிச்சலுக்கு என் பாராட்டுக்கள். ஆட்டுவோர் ஆட்டட்டும், அது ஹதீஸில் உள்ளது என்று சொல்லி போற்றுவோர் போற்றட்டும், எல்லாம் ஆட்டம் நிற்கும்வரைதானே? ஆட்டுவிப்பவன் அவன் தானே?!

  ஆடாத, ஆட்டாத
  நாகூர் ரூமி

 2. 28/02/2010 இல் 08:54

  கையே இல்லாதவர்கள் பாவம், ஏனெனில் அவர்களால் ஆட்டுபவர்கள் சொல்வது போல் தொழவே முடியாது, “என்னை எவ்வாறு தொழ கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்” என்ற ஹதீஸை முன்வைப்பவர்கள் இவர்களுக்கு எப்படி தொழ சொல்லி கொடுப்பார்கள்?

  • ஹரன் பிரசன்னா said,

   28/02/2010 இல் 13:10

   ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரனின் கதை நன்றாக இருந்தது. அதைக் கேட்டுப் பதிவிடுங்கள்.

   • abedheen said,

    01/03/2010 இல் 05:49

    விரைவில் பதிவிடுகிறேன் பிரசன்னா. என்னை ஒருவழி பண்ணிவிட்டுத்தான் நீங்கள் ஓய்வீர்கள் போல. நன்றி!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s