படிக்கக்கூடாத தாஜ் கதை

இப்படித்தான் தலைப்பு வைக்கச் சொன்னார் தாஜ். அப்போதுதான் வாசகர்கள் படிப்பார்களாம். ‘பயப்படுற ஒன்னெ கபக்குன்னு தொட்டுட்டா, பொசுக்குன்னாயிடும்! ‘ என்றெல்லாம் வரிகள் வருகிற கதை. பயப்பட வேண்டாம். கதையைத்  தொட்டுப்பார்க்கலாம். படிக்கவும் செய்யலாம். ‘திரும்பத்… பம்ருதி தி  ரு  ப்  ப  தி’ கதையேதான் . ஆனால் இது முழுப்பிரதி. ‘காப்பி’ என்ற வார்த்தை மட்டும் 25 முறை வரும் பிரதி!

**

கவிஞர் தாஜ்

திரும்பத்… பம்ருதி தி  ரு  ப்  ப  தி  !! ( அசல் பிரதி )
– தாஜ்

“பேரு ருக்குமணி. ருக்கு.. ருக்குன்னு செல்லமா கூப்புடுறாங்க. தகப்பனாருக்கு எல்.ஐ.சி.ல வேலை. பேரு பழனி, கொஞ்சம் குள்ளம். அக்கம் பக்கமெல்லாம் அவரை ஜப்பான் என்கிறாங்க. அப்படின்னாதான் அவங்களுக்கும் வெளங்குது! பொண்ணோட அம்மா நெடுநெடுன்னு சுத்தபத்தமா நம்ம பக்கத்துக்காரங்க மாதிரி! பேரு அகிலா. வெளுத்த நீலத்துல வீட்டுக்கு வர்ணம்! வாசலடி இடது பக்கமா தழைச்ச முருங்க மரம். எதிர்ல மூணாவது குறுக்குத் தெரு! காம்பௌண்ட்ல தெருக் குத்தலுக்கு பிள்ளையார்! கவனம்பா, எல்லாம் அடையாளத்துக்காகதான் சொல்றேன். ஞாயிற்று கிழமை சாய்ந்திரம் நாலு  நாலரைக்கெல்லாம் நீ வருவேண்ணு சொல்லிட்டு வந்திருக்கேன். கட்டாயம் போயிட்டு வா. விலாசத்தை எழுதி  தந்திருக்காங்க தரேன். பொண்ண எனக்கு புடிச்சிருக்கு. எனக்குப் புடிச்சி என்ன செய்ய, உனக்கு புடிக்குனுமே! இதோ பாருடா திருப்பதி, உனக்கு பொண்ணு தேடியே பாதி உடம்பா போயிட்டேன். இந்தப் பொண்ணேயும் வேணாம்னு சொன்னேயோ, இப்போதைக்கு உனக்கு கல்யாணம் நடக்குமுன்னு தோணல!”

“என்னம்மா என்னென்னமோ சொல்றே? லோகத்துல பொண்ணுங்களே அத்துப் போயிட்டா மாதிரி! அப்படி இப்படி திரும்ப முடியல.. திபுதிபுன்னு அலையுறாளுங்க! நீ விலாசத்த கொடு.” “அதுக்கு சொல்லலடா, பார்க்கற பொண்ணுங்களை எல்லாம் வேணாமுன்னு சொல்லிட்டே இருந்தா,  ஊரும் உலகமும்  உனக்கு வேறபேரு  கட்டிடும்! கூசாம பேசும்!  உங்க அப்பா இறந்து போனதுகப்புறம் உன்னையும், உன் தங்கையையும் படாத பாடுப்பட்டு வளர்த்தேன்! அதெயெல்லாம் நம்ம சாதி சனம் பார்க்காது, பொம்பள வளர்த்த வளர்ப்பு எப்படி இருக்கு பாருன்னு? கேலியும், கிண்டலுமா பேசுவாங்க! அவப்பேரு எதையும் வாங்கித் தந்துடாதே! ஜாக்கிரதைப்பா!”  “என்னம்மா நீ ஒரேடியா பயம் காட்டுற!”  “பின்னே என்னடா, வட ரங்கத்துல பார்த்த பொண்ணு அத்தனை அம்சமும் பொருந்தி இருந்தா! அவ, பி.இ.கம்யூட்டர் படிச்சிருக்கான்னு சொல்லியே வேணான்டே!” “நான் பி.எஸ்.சி கம்யூட்டர் சயின்ஸ். அவ, பி.இ.கம்யூட்டர்ன்னா, ஃபிரண்ட்ஸ் எல்லாம் கேலிப்பண்ணமாட்டாங்க?” “அதெல்லாம் பண்ணியிருக்க மாட்டாங்க. ரெண்டுமே அதே படிப்புதானேடா! ஒனக்கு மதிப்பு குறைச்சிடுன்னு தோணியிருக்கும், வேணானுட்டே! அந்தப் பொண்ணுக்கு, அந்த மாசமே வேற இடத்துல கல்யாணமாகி போன மாசம் ரெட்ட குழந்தையும் பெத்துகிட்டா! சரி, தாம்பரம் கிழக்குல பார்த்த பொண்ணுக்கென்ன? அவளும் உன் டிகிரிதான்!” “அவளுக்கு இடுப்பு அநியாயத்துக்குப் பெருசும்மா! ராஜஸ்தானிங்க மாதிரி!” “பெரிசா இருந்தா என்னடா? அதுபாட்டு இருந்துட்டுப் போது. அதுக்காக.. வேணான்றதா? அரபு நாட்டுக்கு போய் வந்துகிட்டு இருக்கிற ஒருத்தன், அதுதான் எடுப்பா இருக்குன்னே அவள கல்யாணம் செய்துகிட்தா கேள்வி!  ம்.. நீ கொடுத்து வைக்கல!” “அட, விடும்மா.” “சரி போகட்டும், மங்கலாப் புரத்துல பார்த்தோமே அந்தப் பொண்ணு வீடு பங்களா கணக்கா இருந்துச்சு! பொண்ணும் ராணி மாதிரி இருந்தா!”

“ராணிங்க காலமெல்லாம் முடிச்சுப் போச்சுமா.” “சும்மா இருடா, அவகிட்ட தேவையே இல்லாம எந்த நடிகர் நடிச்ச படம் புடிக்குன்னு? கேட்டே. அஜித்துன்னா. உனக்கு அது பிடிக்கல. விஜய்யினு சொல்லி இருந்தா சந்தோஷமாயிருப்பே. உன் கிறுக்கு தனத்திற்கு எல்ல இல்லாமதான் போச்சு! இப்படி, நீ செஞ்சதிலேயே பெரிய அடாவடிதனம்னா ஐயன்குடி பொண்ண பார்த்து பிடிச்சிருக்குன்னு சொல்லியப் பிறகும் வேணான்னே பாரு அதாண்டா! காப்பி கொண்டு வந்து வைக்கிறப்போ, குசு வந்தா அவ என்ன செய்வா? ‘பிசுக்கு’ங்குற சப்தம்லாம் ஒரு காரணமாடா? ஞாபகம் வச்சுக்கோ, உனக்கும் ஒரு தங்கச்சி இருக்கா!” “சரிதாம்மா சும்மா இரு”

“என்ன சும்மா இரு! பொம்பளைங்கள சாதாரணமா நெனைக்காத. இப்படியே நீ செய்துகிட்டு இருந்தேன்னு வையி, எவகிட்டயாது சரியா படுவே! ‘பொம்பளைங்க பாவம் பொல்லாதது, ஏழு தலைமுறைக்கு ஆட்டும்ன்னு’ எங்கப் பாட்டி சொல்லுவாங்க, ஜாக்கிரதை!” “எத்தனை தரம்மா இதெ சொல்லிட்டு இருப்பே?” “இல்லடா, இப்பவும் அப்படி ஏதாவது ஏடா கூடமா நீ செஞ்சுவச்சிடக் கூடாதேன்னுதான் சொல்றேன்.” “நடக்காது. போதும்மா” “இப்படி நீ உறுதியா சொல்றதால ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க, இந்தப் பொண்ணு நாம பார்த்தப் பொண்ணுங்க எல்லாத்தையும் விட லட்சணமாவும் அம்சமாவும் இருக்கா! ஜாதகமும் பிசிரில்லாம பத்துக்குப் பத்தும் பொருந்துது! இவ மருமகளா வந்தா, குடும்பத்துக்கு ஐஸ்வரியம் குவியுமுன்னு ஜோசியரும் சொல்றாரு! நீ நல்லா இருந்த… கண்ணுக்கு அழகு!”
 
புரோக்கர் சிதம்பரம் தந்த ஜாதகத்தை எடுத்து கொண்டு ஜோசியரைப் பார்த்துவிட்டு, இன்று காலை காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு வந்தாள் புவனேஸ்வரி. பெண் வீட்டு விலாசத்தை தேடிப் பிடித்து பெண்ணையும் பார்த்து வந்தாள். அவளுக்கு திருப்தியாக இருந்தது.

பையனிடம் தகவல் சொல்லிப் போக நினைத்து அவன் கம்பெனி குடியிருப்பு வாசலில் காத்திருந்து, தகவலைச் சொன்னதோடு, பழசையெல்லாம் கிளறப் போய் அவனிடம் வாங்கி கட்டிக் கொண்டாள். மடித்ததோர் காகித துண்டை, இடுப்பில் இருந்து உருகி மகனிடம் தர, அவன் பிரித்துப் பார்த்தான். ‘பழனி, 31,ஏழாவது குறுக்குதெரு, வீரபத்திரன் காலணி, வானவன் பேட்டை. மவுண்ட் மேற்கு’ என்றிருந்தது. இந்த அலுவலகர் குடியிருப்பு கிண்டி எக்ஸ்டென்சனில் இருக்கிறபடியால். விலாசம் சொல்லும் வீரபத்திர காலணி பக்கம்தான்! அவனது மன ஓட்டத்தை உணர முடிந்தவளாய் “ஆட்டோவில போயிடு. ரொம்பப் பக்கம். போறப்போ நான், வழி தெரியாம சுத்திகிட்டு லேட்டா போனேன். வரும்போது ஆட்டோ ஏறி சுருக்க வந்துட்டேன்.” என்றாள்.

அவனது ரூம்மேட் தில்லை அப்போது வந்தவன், அந்த அம்மாவை ஏற்கனவே பாத்து பழகி இருப்பதால், ரொம்பவும் நலம் விசாரித்தான்.

அவளும் அவனிடம் பாசம்பொங்க பேசினாள். “வரேம்மா” என்றுவிட்டு உள்ளே போனான். திருப்பதிக்கு அவனைப் பிடிக்காது. ரூம்மேட் என்பதற்காக வேறு வழியில்லாமல் பேசி பழகிக் கொண்டிருக்க வேண்டிய நிர்பந்தம். ‘சென்னை கம்யூட்டர்ஸ்’ கிண்டிப் பிரிவில்தான் இருவருக்கும் வேலை. தனது கம்பெனி கான்ட்ராக்ட் செய்திருக்கும் நிறுவனங்களில் முடங்கிப் போகும் கம்யூட்டர்களை முடுக்கி உயிரூட்டும் பணி! தில்லை அவன் செக்ஸனில் போர்மேன். இரவில் தூங்கப் போகும் போதெல்லாம், ‘அழகான பொண்ண பார்த்தா.. அவளோடு உடனே படுக்கனுன்னு தோனுதே ஏன்?’ என்பது மாதிரியான அசல் பிதற்றல்களை திருப்பதியால் சகித்து கொள்ளவே முடியாது. போதாதென்று, அவனது காதல் அழிச்சாட்டியங்களுக்கும் காது கொடுக்க வேண்டும். இழுத்து போத்திக் கொண்டானோ.. அவ்வளவுதான்!   

 “ஏம்மா இருந்துவிட்டுப் போயேன், நான் வேண்டுமானால் சிந்தாரிப் போட்டை சித்தி வீட்டில் கொண்டு போய் விடுகிறேன். நாளைக்கு நீ போகலாம்” என்றான். “இல்லடா நான் ஊர் போயாகனும். உன் தங்கச்சி பவானி ஒரு மாதிரியா ஆயிட்டுவரா! ஜிமுஜிமுன்னு மினுமினுப்பு கூடிக்கிட்டு இருக்கு! எப்ப வேணுமானாலும் அவள் உட்காரலாம்! நான் கிட்டேயே இருக்க வேண்டிய நேரம்! இல்லேனா, ஏடா கூடமா எதாவது ஆயிடும்” “பவானி இப்பத்தானேம்மா ஏழாவது படிக்கிறா!” “போடா போக்கத்தவனே. காலம் போறபோக்கு உனக்கு எங்கே புரியப் போகுது!” “சரிசரி நீ கிளம்பு.” “திருப்பதி… கிட்டக்க வா, தில்லைய பார்க்கிறதுக்கு ஜெய்ஜான்டிக்கா, நல்லப் பிள்ளையாவும் தெரியிறான்! உன்னை விட, சம்பளமும் அதிகம்னு வேற சொல்லியிருக்கே..” “அதனால..?” “பவானிக்கு பொருந்தி வருவான்னு தோணுது! பேசிப்பாறேன்டா” “அம்மா.. உனக்கு அறிவே கிடையாது. முதல்ல கிளம்பு.”. சத்தம் காட்டிவிட்டு உள்ளே போனான்.

***

1st November 2009
ஞாயிற்று கிழமை.
02.30 pm

“சார்…. சார்!”
“டார்லிங், வாசலில ஒரு பையன் நிக்கிறான்.. பாருங்க” வீட்டுக்காரம்மா சப்தம் கொடுத்த நாழிக்கு, ஒருவர் வெளியே வந்தார்.
“எஸ் சன், என்ன வேணும்? டொனேசன்னா… நோ! ஒன்லி ஃபார் சர்ச்!”
“நோ.. நோ.., மிஸ்டர் பழனி….”
“ஸாரி, ஐஆம் பால் பிறாண்டோ! லண்டன்லெ முப்பத்தி மூணு வருஷம் சர்வீஸ்!”
“இல்ல சார்…. ஜப்பான்…”
“நோ ஜப்பான்; லண்டன், லண்டன்!” 
“ஸாரி சார்! இது வீர பத்ரன் காலனி, ஏழாவது குறுக்குத் தெருதானே?”
“எஸ். வீர பத்ரன் செவந்த் கிராஸ்தான்.”
“எதிருல்ல தெரியுறது மூணாவது குறுக்கு ரோடு தானே?”
“ம்ஹும், இல்ல, செகெண்ட்!”
“இல்ல…, நான் இங்க பொண்ணுப் பார்க்க வந்தேன்”
“நவ் ஐ அண்டர்ஸ்டாண்ட்! அதான் கன்ஃபியூஸ்! ஜஸ்ட் வெய்ட்.” என்றவர், “மோனிகா…” வென அழைத்தார்.
“எஸ்… பாப்பா…” உள்ளிலிருந்து பதில் குரல் கேட்டது.
“ஆர் யூ ரெடி ஃபார் மேரேஜ்?”
“நோ… பாப்பா. இட்ஸ் ஓல்ட் ஃபேஷன்!”
“ஸாரி ஸன், மை டாட்டர் ஸம் திங் டிஃபரண்ட்!”
“லண்டன் சார், வாசலடியில இருப்பது முருங்க மரம்தானே?”
“அஃப் கோர்ஸ்”
“டோர் நம்பர் முப்பத்தி ஒண்ணு தானே?”
“நோ சன். இது பதிமூணு! அதோ… அங்கே ஒரு முருங்க மரம் தெரியுது பாரு… அங்கேயிருக்கு 31, நீ ‘மீன்’ பண்ணிய மூணாவது கிராஸ் ரோடு கூட எதிர்லதான்!” 
“ஐஆம் ரியலி ஸாரி… லண்டன்!”
“நோ ஃபிராபளம்! ஐ நோ யுவர் ஹரிபரி! வயசுல நானும் அப்படிதான்! பொண்ணு பார்க்கவா? கோ அஹெட். கங்ராட்ஸ்..!”
“தேங்ஸ்! இதென்ன சார், கேட்ல வேளாங்கண்ணி மாதா படம்!”
“தெரு குத்தலுக்கு! திருஷ்டி பெரிய டேஞ்சர்”

மூணாவது கிராஸ் ரோட், எதிர்புற வாசலடியில் முருங்கை மரம், வெளுத்த நீலச்சுவர், டோர் நம்பர்-31, காம்பௌண்ட் சுவற்றில் பிள்ளையார் மட்டும் மிஸ்ஸிங். ஆனால், வாசல் மெயின் கேட்டின் மேல்தட்டில் நாகூர் தர்ஹா! அதன் அடியில் மந்திரித்து பதிக்கப்பட்ட தகடு! அவனுக்கு குழப்பமாக இருந்தது. நாகூர் தர்ஹா படம் சில இந்துக்களின் வீட்டில் இருப்பதுதான்! இந்த தகடும் கூட அப்படிதான்!

ஆனால், ‘தெரு குத்தலுக்கு தர்ஹா படம்’ என்பது புதுசு என்று தோன்றியது. ஒரு சமயம்… இந்தப் படம் கூடுதல் நிவாரணமாக இருக்குமோ?’ அவன் மனதிற்குள் தெளிவற்ற அலை.

“சார்……”
கசகசவென பழைய புடவையை சுற்றிக் கொண்டு வாசல் வெய்யலில் உட்கார்ந்திருந்த வயதான அம்மா அவனை நிமிர்ந்துப் பார்த்து, “கோன் ஹே…?” என்றாள்.
நாழிக்கெல்லாம் உள்ளிருந்து ஒருவர் வந்து, “நானி, ஜாவ் அந்தர். என்ன வேணும் உங்களுக்கு?”
“இது முப்பத்தி ஒண்ணாம் நம்பர் வீடுங்களா?”
“ம்..!”
“இது மிஸ்டர்.பழனி வீடுதானே?”
“கோன்.. பழனி? இது பாய் வீடு!”
“இல்ல பாய், ஜப்பான் வீடு!”
“ஓ.. நம்ம ஜப்பான் பாய் வீடுங்களா?”
“ஜப்பான், பாய் இல்லீங்க!”
“என்ன தம்பி தமாஷ் பண்ணுற. பாய்ன்னா அண்ணன்! எதிர் வீட்டு நாயுடு, ஒரு தெலுங்குகாரர்! அவரையும் நான் பாயின்னுதான் கூப்பிடுவேன். நாங்க உருது பேட்டா…, அண்ணன ‘பாய்’யின்னுதான் கூப்பிடுவோம்!”
“இந்த தெருவுல எல்லா பாஷை பேசுறவங்களும் இருக்காங்க போலிருக்கே பாய்!”
“தெரு கடைசில இரண்டு கொரியன்காரன் கூட இருக்கிறான்! ஹுண்டாயில வேல! அதற்கு எதிர்லேயே, அதே ஹுண்டாயில வேலைப் பார்க்கிற மலேசிய சீனக்காரன் குடும்பம் இருக்கு. மலேசிய டமில்ப் பொண்ணேத்தான் நிக்காஹ் பண்ணியிருக்கான். பெரிய ஐயப்பன் பக்தன்! பித்துக்குளி முருகதாஸ் கானாலாம் பாடி கலக்கிட்டு இருக்கான்! ‘தமிழ்ப் பேசும் சீனன்!! உளவாளியா இவன்??’னு ஒரு மாசத்திற்கு முன்னாடிகூட நக்கீரன்ல செய்தி போட்டானேப்பா! நீ விசாரிக்கிற ஜப்பான் பாய்.. பக்கத்து வீடுதான். 31-A” “ஓ…!”என்றபடி அம்மா தந்துபோன விலாசத்தை பிரித்துப் பார்த்தான். முப்பத்தி ஒண்ணுதான் தெரிந்தது. கவனித்த போது, மடிப்பில் ‘A’ சிதைந்திருந்தது.
“ஸாரி… பாய்.”
“பரவாயில்லைப்பா, தம்பி.. பாயிக்கு சொந்தமா?”
“ஆமாம். ஆனா இப்போ இல்ல!”
“ம்… இன்னைக்கி மாப்பிள்ளைப் பையன் வரதா சொல்லிகிட்டு இருந்தாங்க! நீங்கத்தானா அது! பேட்டா பேரு என்ன?”
“திருப்பதி! இங்கே கிண்டியில இருக்கிற ‘சென்னை கம்யூட்டர்ஸ்’-ல் வேலை!”
‘அப்போ.. ஜப்பான் பாயிக்கு மாப்பிள்ளைப் பையனா வரபோறிங்கன்ன… எனக்கும் நீங்க மாப்பிள்ளைதான்! ருக்கு, நம்ம பேட்டி! அவ பொறந்ததுலேந்து தெரியும்! என் கண்ணு முன்னால தான் வளர்ந்தா! சின்னப் பிள்ளையா இருக்கிறப்போ, வீட்ல போட்டு விடுற ஜட்டிய கழட்டி கையில எடுத்துக்கிட்டு அலைவா! நான்தான் இழுத்து அடிச்சி மாட்டிவிட்டு அனுப்புவேன்! திருப்பதி பேட்டா… நீங்க நெருங்கி வந்துட்டிங்க. என் பேரு நாகூர் மீரான்! ஜானி பாயின்னு கூப்பிடுவாங்க. பூர்வீகம் ஆம்பூர். குருவியா இருக்கேன்! சிங்கப்பூர், துபாய்ன்னு பறந்துட்டு வர வேலை!”
“குருவியா பறந்துட்டு வர வேலையா? புரியலிங்கலே!”
“இந்த பேஜார் புடிச்ச வேலைப்பற்றி எனக்கும்தான் புரியலை! பத்து பாஸ்போர்ட்ட வைச்சிகிட்டு மாரடிக்கிறேன்! ஒருமாசம் காசு பார்த்தா.. ஒருமாசம் ஜெயில பார்க்க வேண்டியிருக்கு! ஐஞ்சி வேளையும் நமாஸ் பண்றேன்! ம்… என்ன செய்ய? அப்பவே ஒழுங்கா ஸ்கூலுக்கு போயி, நானும் உன் படிப்ப படிச்சிருந்தேனா இன்னைக்கி உட்காந்த இடத்துல சம்பாத்தியம் பார்த்திருக்கலாம்! திருப்பதி.., அல்லா நம்மல கண்திறந்துப் பார்க்கலைப்பா! எட்டாங்கிளாஸ் போதும்னுடாரு!”
“பாய்… அது என்ன ஐஞ்சு வேளை தமாஷ் பண்றேன் என்கிறிங்க?”
“அது தமாஷ் இல்லப்பா.. நமாஸ்.. பிரேயர் என்பாங்களே அது!
“ஸாரி பாய்…”
“பரவாயில்லை பேட்டா… நம்ம ஆம்பூர் டமில், டமில்காரங்க எல்லாருக்கும் புரியாறதில்லைப்பா!” என்றவர், பக்கத்து வீட்டுவாசலில் நைட்டியில் நின்ற பெண்ணைப்பார்த்து,”பாபா கிதர்?” என்றார்.
“பார்கயா. பாபா”
“ஐஸா கி….”
“ஐஸாகி… ன்னா?” என்ன அர்த்தம் என்று கேட்டான் திருப்பதி.
“அப்படியான்னு அர்த்தம்!”
“அது யாரு… அந்த வீட்டு வேலைக்காரப் பொண்ணா? உங்க பாஷையெல்லாம் பேசுது!”
“க்யா பேட்டா…! அது.. மேரா பேட்டி! துமாரா… ருக்கு!”
“ஐஸா கி!”
“உர்து ஆயா! உர்து ஆயா!”

பக்கத்து வீட்டுக்குப் போனான். அந்த வீட்டு வாசலடியிலும் முருங்கை மரம்! சொல்லப் போனால், அந்த ஏழாவது குறுக்குத் தெருவின் பாதிவீட்டு வாசலில் முருங்கை மரம் இருந்தது. எதிரே மூணாவது கிராஸ் தெருவை கூறும் மஞ்சள் பலகை! காம்பௌண்ட் சுவற்றில் கண்திருஷ்டி கழிக்கும் பிள்ளையார்! கேட்டைத் திறந்து உள்ளே காலடி வைத்து “சார்…..” என்றான். “யார் நீங்க? உங்களுக்கு என்ன வேண்டும்?” நைட்டியில் இருந்த ருக்கு, தடதடதடத்தாள். கிட்டத்தில் அவளைப் பார்த்த அவனுக்கு பேச்சே வரவில்லை. அம்மா, இவளது அழகை குறைத்து சொன்னதாகப் பட்டது. “மம்மி….” என்று ருக்கு உள்கட்டைப் பார்க்க குரல் கொடுத்தாள். “ஏன்டி எதையோ பார்த்து மிரண்டு போனமாதிரி கத்துறே, நான் அடுப்படியில் கைவேலையா இருக்கிறேன்ல!”

ருக்கு, உள்கட்டுக்குப் போனபடி பேசியது அவனுக்கு கேட்டது. “மம்மி வாசலில் ஒருத்தர் மீசையெல்லாம் வைச்சிட்டு பேச மாட்டாம நிக்கிறார்!” “இன்னேரத்தில யாரு?” “அப்பாவை பார்க்க வந்திருப்பாரோ என்னவோ!” “தள்ளு நான் போய் பார்க்குறேன். நீ மசமசன்னு நிக்காதே. டையமாயிட்டு இருக்கு சிக்கிரம் புதுச எடுத்துக்கட்டிக்க.., தம்பி… என்ன வேணும் உங்களுக்கு? ஓ…. நீங்க காஞ்சிவரம் புவனேஸ்வரி மகன்தானே? அப்படியே ஜாடை தெரியுதே! உள்ளே வாங்க.” அவன் வீட்டுக்குள் நுழைந்தான். “யாரும்மா அவரு?” “போடி உள்ள, மாப்பிள்ளைப் பையன்டி!” “மீசெல்லாம் வைச்சிருக்காரேம்மா!” “அதனால!” “பயமா இல்ல உனக்கு?” “பெரிய பயத்த கண்டுட்டா, நாங்ளெல்லாம் காணாத பயமா! பயப்படுற ஒன்னெ கபக்குன்னு தொட்டுட்டா, பொசுக்குன்னாயிடும்! அப்புறமா யோசிக்கிறப்போ, இதுக்கா பயந்தோமுன்னும்கூட தோனும்.” “இல்ல மம்மி” “போடி, போய் டிரஸ் பண்ணிக்கங்கறல்ல!”

உயரம் குறைவான, அப்பா வயது ஆசாமி ஒருவர், கையில் மார்க்கெட் பையுடன் வாசலிலிருந்து அடுக்களைப் பக்கம் ஓட்டமும் நடையுமாக விரைந்தார். திருப்பதி ஹாலில் இருந்ததை அவர் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அடுக்களையில் மனைவியோடு அவர் பேசும் பேச்சு கேட்டது. தெளிவான உச்சரிப்பு. கணீர் குரல். “அகிலா…” “மெல்லப் பேசுங்க. ஹாலில் யார் உட்கார்ந்து இருக்கிறதுன்னு பார்த்தீங்களா?” “பார்த்தா போச்சு. நீ மார்கெட் சாமானெல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்க!” “வாழைக்கா வாங்கியாந்திகளா?” “கொஞ்சம் வேகமாதான் பேசேன், என்ன கேட்டே?” “வாழைக்காங்க… வாழைக்கா…!” “அதுக்குன்னு ஏன்டி இப்படி கத்துற! ம்…வாங்கியாந்துருக்கேன். இல்லைன்னா விடுவியா? இரெண்டு நாளைக்கு முன்னாடி வாங்யாந்தது என்னச்சு?” “அது முனை பழுத்துப் போயிடுச்சிங்க. பஜ்ஜிக்கு சரிபடாது. சாமான்களை நான் சரிபார்த்துக்கிறேன். போயி , வந்திருக்கிற மாப்பிள்ளை பையன்ட்டெ பேசிட்டு இருங்க.”

“ஏன்தான் இப்படி சத்தமா பேசித் தொலைக்கிறீங்களோ! அவரு என்ன நினைப்பாரு!” ருக்கு இடையில் புகுந்து பெற்றோர்களைக் கடிந்துகொள்ள, பழனி தன் மனைவி சொன்னதை சரியாக காதில் வாங்கிக் கொள்ளாமல் நேரே ஹாலுக்கு வந்தார்.   

“நீங்க என் ஃபிரண்ட் வைத்தீஸ்வரன் அனுப்பிய ஆளா? பாலிசி எடுக்க இரண்டு பேற அனுப்பி வைக்கிறேன்னு சொன்னார், இன்னொரு ஆள் வரலை போலிருக்கு. நல்லா கேட்டுக்கங்க, எனக்கு நேரம் இல்லை. மாப்பிள்ளைப் பையன் வறார். இப்ப நான் சொல்லப் போறது நீயூ ஸ்கீம்! உதாரணமா நீங்க மூணு லட்சத்துக்கு ‘மணிபேக்’ பாலிசி எடுத்துக்கிறீங்கன்னு வைங்க, ஆறு மாதத்திற்கு பதினைந்தாயிரம் பிரிமியம் கட்டனும். வருஷத்திற்கு இரண்டு தரம். மொத ரெண்டு பிரிமியத்தை உங்களுக்காக நானே கட்டிடுவேன். அப்புறம் நீங்க அதிலேயே லோன் எடுத்தே கட்ட தொடங்கிடலாம்! இந்த ஸ்கீம், உங்களுக்கு லாபகரமானது! ஈஸி அண்ட் கம்ஃபர்டபிள்! என்ன, நான் சொல்றது ஏதாவது புரியுதா?” அவன் மௌனமாக உட்கார்ந்திருந்தான். அவனது நினைவு, ருக்குவின் அழகை ஆராதித்துக் கொண்டிருந்தது!

தொடந்து அவர் பேச முயன்றபோது, உள்ளிருந்து மனைவியின் குரல் கனத்து வந்தது. “செத்த உள்ள வாங்களேன்” “உள்ள கூப்பிடுறாங்க, இத மட்டும் கேட்டுக்கங்க, இந்த ஸ்கீமுக்காக, நீங்க ஏன் இரண்டு பிரிமியம் கட்டுறீங்கன்னு? கேட்காதிங்க. அது தொழில்

ரகசியம்! சரியா? இதோ வறேன்.”

“ஏங்க… அந்தப் பையனை யாருன்னு நினைத்து பேசிட்டு இருக்கிங்க?”
“ஏன்… என் கிளைண்டா வரபோறவர்!”
“மண்ணாங்கட்டி, நம்ம பொண்ணுக்கு மாப்பிள்ளையா வரபோறவர்! 
“மாப்பிள்ளைப் பையனா!? என்கிட்ட இத, முதலிலேயே சொல்றதுகென்னா?”
“சொல்றதுகென்னவா.. மாப்பிள்ளை பையனிடம் பேசிட்டு இருங்க’ன்னு சொன்னேனே! காதுயென்ன… செவிடாவே போயாச்சா?”
“வரவர டாடிக்கு மேனர்ஸே இல்லாம போச்சு மம்மி! அவர் கிட்ட இன்சூரன்ஸைப் பத்தி பேசுது! அவரு என்ன நினைப்பார்?” ருக்குவும்

அம்மாவோடு சேர்ந்துக் கொண்டாள். “இதான் சாக்குன்னு அம்மாவும் பொண்ணும் என்னை வறுத்து எடுக்காதிங்க. மாப்பிள்ளைப் பையனை நான் சமாளிச்சுகிறேன்.”
“அதுக்கில்ல டாடி…”
“சரி சரி, நான் டிஃபன எடுத்துட்டுப் போறேன், அப்புறமா நீ காப்பி எடுத்துட்டு வா.”

அவன் மௌனத்திலிருந்து விடுபட்டு, வீட்டின் உள்கட்டை அடிக்கடி பார்த்தபடிக்கு இருந்தான். ருக்கு தென்படவே இல்லை. அவள் நேரில் வந்தால் கூட, அவளது கண்களை பார்த்து பேசமுடியும் என்று தோன்றவில்லை. அவளது அழகு.. கண்களை கூச வைத்துவிடும்! அவளை வாசலில் வைத்து, கடைக் கண்ணால் கண்ட போது, பெரிதாக விரிந்து அடங்கிய அவளின் புருவ நெளிவுகள் இன்னும் தன்னை சிதைத்துக் கொண்டிருப்பதாகப் பட்டது அவனுக்கு.

பழனி, அவன் அருகில் வந்தமர்ந்து, “உங்களை யார் என்று தெரிந்துக் கொள்ளாமல் வேறு வேறு சங்கதிகள்… நிறைய பேசிட்டேன்.” என்றார்.
“என்ன பேசினிங்க?”
“என்ன பேசினேனா…! எல்.ஐ.சி.ல பாலிசி எடுக்கறதப் பத்தி! ஈஸி அண்ட் கம்ஃபர்டபிள் ஸ்கீம் பற்றி!”
“அப்படியா? நான் பாலிசி எடுக்க வரலையே! நீங்க… ருக்குவோட ஃபாதர்தானே?”
“சரியா போச்சு!”  – அவர் திருதிருவென்றுன்னு விழித்தார். “எஸ். ருக்கு ஃபாதர்தான்! ஐஆம் பழனி.” என்றார்.
“நீங்க மதுரைப் பக்கமா?”
“ஆமாம்…. எப்படி தெரியும்?”
“பழனி, மதுரை பக்கம்தானே!”
பழனி வாய்விட்டு சிரித்தார். அடுக்களையில் இருந்தும் சிரிப்பு எழுந்தது. “என்ன இப்படி உளறிக் கொள்கிறார்கள்! மாமனாருக்கு ஏற்ற மருமகன்தான்!” என்றவாறு அகிலா திரும்பவும் சிரிக்க, “ஐ லைக் போத் ஆஃப் தெம்” என்றாள் ருக்கு. 

“ஸ்வீட்ல கைவைச்சுட்டு டிஃபன் சாப்பிடுங்க. வாழைக்கா பஜ்ஜி நம்ம வீட்டு ஃபேவரைட்!” 
“ருக்கு காப்பி எடுத்துட்டு வருமா?”
“வருவா! சாப்பிடுங்க. ஃப்ஸ்ட் கிளாஸா டிகாக்சன் இறங்கி, டிகிரி காப்பி போடறதுல அவள தட்டிக்க வேற ஆள் கிடையாது! சாப்பிடுங்க. என்ன… பி.எஸ்.சி.ல, மேத்ஸ் பேப்பர் பாக்கி வைத்திருக்கா, ஃபிரண்ட்ஸோட அரட்டை அடிப்பா, டி.வி.ல தமிழ்ப்படம் பார்ப்பா, விஜய் படன்னா சோறு தண்ணி வேணாம்! சுத்தபத்தமா இருக்கனுன்னு ஆசைப் படுவா! உடம்ப ஸ்லிம்மா வைச்சிக்க யோகால்லாம் உண்டு! கொஞ்ச நாள் கராத்தே கிளாசுக்கு போய் நிறுத்திட்டா. காலை அகலமா விரிச்சு பிராக்டிஸ் பண்ண முடியலன்னுட்டா.”

திருப்பதிக்கு ருக்குவை நெருக்கத்தில் பிடித்துப் போனது. தான் எதிர்ப் பார்க்கும் பெண் இவள்தான்! இவளேதான்! “காப்பி”, அவன் எதிரே ருக்கு பட்டு சுரிதாருக்குள் நின்றாள்! அவளின் அழகு சிலிர்க்க வைத்தது அவனை! திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும் அழகாகப்பட்டது! மீண்டும், “காப்பி” என்றாள். டிரேயிலிருந்து அதை அவன் எடுத்து, நேர் பார்வை செய்ய, தயங்கி தயங்கி நிமிர்ந்த போது… அங்கு அவள் இல்லை. போய்விட்டிருந்தாள். காப்பி குடித்து தீர்ந்ததுமே… அவளைப் பார்க்க, அவன் மனம் அவனை கிள்ளியது. தனது மீசையைப் பார்த்து பயந்து, அம்மாவிடம் அவள் புலம்பியது நினைவுக்கு வர, கலக்கம் மேவியது அவனுக்கு.

எப்படியேனும் அவள் தனக்கு வேண்டுமென்ற நினைவாக நெளிந்தான்.

“ஏதாவது பேசுங்க தம்பி…” என்றார் பழனி.
ருக்குவை திரும்பவும் பார்க்க பரபரத்து கொண்டிருந்த அவன், “காப்பி” என்றான்!
பழனி முகத்தில் புன்னகையின் ரேகை. “நான் சொன்னேல்ல நம்ம வீட்டு காப்பி நல்லா இருக்குன்னு! ருக்கு இன்னொரு காப்பி எடுத்தா” என்றார்.
சமையல் கட்டில் சரளமாக சிரிப்பொலி எழுந்து அடங்கியது.
மாப்பிள்ளைப் பையனைப் பார்க்க வந்திருந்த எதிர் வீட்டு அம்மா, நேரே சமையல் கட்டுக்குப் போய்…”அம்மாவும் மொவளும் ஏண்டீ இப்படி சிரிக்கிறீங்க? பொண்ண மறுபடியும் பார்க்க ஆசைப்படுறான் புள்ள! அதைச் சொல்ல வெட்கப் பட்டுகிட்டு திரும்பவும் காப்பிங்கிறான்! புரிஞ்சிகிட்டு கொடுத்தனுப்புவியா… அதை விட்டு, கிக்க பிக்கேன்னு சிரிச்சா என்னடி அருத்தம்? காப்பி கொடுத்தனுப்பு சீக்கிரம்! இதோ பாருடி ருக்கு, காப்பி கொடுத்தச் சீருக்கு ஓடியாந்திடாதே… என்ன புரியுதா? ஆற அமர நின்னு நல்லா பேசிட்டு வா.” என்றாள்.

ருக்கு காப்பி எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்த போது, அங்கே திருப்பதி இல்லை. அவளது அப்பா தினமணியில் கவிழ்ந்திருந்தார். “எங்க டாடி அவரு?”
“பையன் இங்கதானே நின்றார்!” வாசல்வரை போய் சுற்றும் முற்றும் பார்த்து, திரும்பி வந்தவர் உதட்டைப் பிதுக்கியபடி, “ஸம் திங் ராங்…!” என்றார்.

*

1st November 2009
ஞாயிற்று கிழமை.
04.45 pm

“சார்……”

“வாங்க… வாங்க.. உங்களைத்தான் தேடிகிட்டு இருக்கோம்! முக்கா மணி நேரமா ஒண்ணும் புரியாம குழப்பமோ குழப்பம்! எங்க போனிங்க? பக்கத்துல யாராவது தெரிஞ்சவங்க இருக்காங்களா? டிரஸ் மாறியிருக்கு! அதென்ன முகத்தில மீசைய வேறு காணோம்?”

பழனி பிடிபடாத முகப்பாவனையில் திருப்பதியைப் பார்த்தவராகப் பேசினார். சமையல் கட்டிலிருந்து ஆர்வமோ ஆர்வத்துடன் ருக்கு, அவளது மம்மி, எதிர் வீட்டு அம்மா எல்லோம் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் வியப்பின் அடுக்காய் கேள்விகள் நிறைய இருந்தது. ஆனால் கேட்கத்தான் முடியவில்லை அவர்களால்!
 
“நீங்க என்ன சொல்றிங்கன்னு விளங்கல… முன்னாடி நான் இங்கே வந்தேனா? மீசை வைத்திருந்தேனா? என்ன வேடிக்கையிது? இப்பதானே நான் வறேன்! அம்மா என்னை, நாலு நாலரைக்கெல்லாம் இங்கே போய்வரச் சொன்னாங்க… கொஞ்சம் லேட்! பட்.. நீங்க சொல்றது புரியலை!” என்றான் திருப்பதி! யாருக்கும் அவன் வார்த்தைகளில் நம்பிக்கை வரவில்லை. பழனி மீண்டும் ஒரு முறை, நடந்த நிகழ்வுகளை வரிசை கிரமமாய் தெளிவு படுத்திக் கொண்டே வந்தார்! கடைசி நிகழ்வை அழுத்தமாய் சொன்னார். “நீங்க சங்கோஜம் பார்க்காம இன்னொரு காப்பி கேட்டிங்க.. ரைட்? ருக்கும் காப்பி எடுத்துட்டு வந்தா, உங்களோடு பேசனுன்னும் ஆர்வமா இருந்தா.. ஆனா, நீங்க மிஸ்ஸிங்!” “ஒரு காப்பி குடிச்சிட்டு, இன்னொரு காப்பி கேட்டேனா? நானா? நோ.. நோ…! யாரோ வந்து உங்களுக்கு டார்ச்சர் கொடுத்திருக்காங்க! பை த பை, உங்கப் பொண்ணு ஆர்வமா பேச வந்தது என்பதை கேட்க சந்தோஷமா இருக்கு. அப்படி பேசுறதுதான் சரி. இப்போ காப்பியோடு வரபோது பேசினா போச்சு.” என்று திருப்பதி சொல்ல,  குழப்பமானார் பழனி. “ருக்கு காப்பி கொண்டா!” யென மகளிடம் சப்தம் கொடுத்தவருக்கு, பக்கத்து வீட்டு பாயிடம் கலந்து பேசினால் தேவலாம் போல் தோன்றியது.

“மம்மி…” “என்னடி?” “ஐ சே சம் திங்!” “நேரம் தெரியாம ஏண்டி… நச்சரிக்கிற! சீக்கிரம் காப்பி கொண்டு போ” “நான் காப்பி கொண்டு போக மாட்டேன்! எனக்கு அந்த மீசை வச்ச திருப்பதியைத்தான் பிடிக்குது! இந்த ஆளை நோ!” “நீ என்ன பைத்தியமாடி? கொஞ்ச முன்னே, மீசையைக் கண்டு பயமா இருக்குன்னு சொன்னே! இப்ப என்னடான்னா… அந்த  மீசைவச்சிருந்தவனைப் பிடிக்குதுன்னு சொல்ற?” “நீதான் மம்மி லூஸு மாதிரி பேசுற! நான் பயந்தேங்கிறது சரிதான்! ஆனா, பயம் என்கிறது வேற, பிடிச்சிருக்கு என்பது வேற.” “இதோ பாரு… ருக்கு, இரண்டு பேரும் ஒரே ஆள்தான்! பையன் மீசையில்லாம வந்திருக்கிற சூட்சமம்தான் புரியில!” “என்னான்னு எல்லாமே எனக்குப் பட்டு போச்சு” என்றாள் எதிர் வீட்டு அம்மா! “சொல்லுங்க.. ஆண்டி” என்று ருக்கு படபடக்க, “உங்க அனுபவம் இந்த சுத்து வட்டதில யாருக்கு வரும்! தயங்காம பளீச்சின்னு சொல்லுங்க மன்னி!”ன்னு அவள் அம்மாவும் ஆர்வம் காட்டினாள்.

“பையன் தங்கமானவன்! அவன, அவனது யோசனைகள்தான் படுத்துது! நல்லா கேட்டுக்கங்க, என்று ஆரம்பித்து, யூகித்தவைகளைச் சொல்லி, அத்தனைக்கு இவ மேல அவனுக்குப் பிரியம்!” என்று முடித்தாள் எதிர் வீட்டு அம்மா. “யோசிச்சா நீங்க சொல்றது சரின்னுதான் தோணுது மன்னி!” என்றாள் ருக்குவின் அம்மா! அவர்கள் பேசியதைக் கேட்ட ருக்கு, “அப்படியா சங்கதி! இப்ப பாருங்க என் கூத்த!” என்று கிளம்பினாள். அவளது அம்மாவும், எதிர் வீட்டு அம்மாவும் ஒத்தக் குரலில்,”என்னடி செய்ய போறே?” “ம்… காப்பி கொண்டு போகப் போறேன்!” என்றாள்.

அவளது அப்பா வெளியே போய் இருந்தார். பக்கத்து பாய் வீட்டில் அவரது பேச்சு குரல் கேட்டது. திருப்பதி ருக்குவின் வருகைக்காக பரப்பரப்பில் இருந்தான். ருக்கு, காப்பியோடு ஹாலுக்கு வந்தாள். அவளை நேருக்கு நேர் சலனமற்றுப் பார்த்தான் அவன், அவளது அழகு தன்னை அறைவதாக உறுத்தல். சுதாரித்தவனாக, மீண்டும் அவளைப் பார்த்தான். “காப்பி!” என்றாள். அதை எடுத்தபடி “நன்றி” என்றான்.

“நான் உங்களோடு கொஞ்சம் பேசனும்!” “பேசலாமே!” “உங்க பேரு?” “திருப்பதி!” “முதலில் வந்தவரும் தன் பெயரை திருப்பதின்னுதான் சொன்னார்!” “ஸாரி, அது எனக்குத் தெரியாது!” “மீசை மட்டும் இருந்தா நீங்க அவரை மாதிரியே இருப்பிங்க!” “அவன் சிரித்தபடியே அப்படியா!” என்றான். “அந்த மீசை ரொம்ப அழகா இருந்துச்சு!” அவன் அதிர்ந்தவனாக, “என்ன சொல்றீங்க?” “அவரு மீசை ரொம்ப அழகா இருந்துச்சுன்னு” “அப்படின்னா?” “அந்த மீசையோடு அவரை பிடிச்சிருந்துச்சுன்னு அர்த்தம்!” என்று அவள் சொல்லவும் அவன் முகத்தில் சலன ரேகைகள் தாறுமாறாய் கிளைக்க, வேர்வைப் பூத்துவிட்டது. சமையல் கட்டிலிருந்து எதிர் வீட்டு அம்மாவும், ருக்குவின் அம்மாவும் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டபடிக்கு நடப்பை ஆர்வமாய் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

“என்ன நீங்க மாற்றி பேசுறிங்க!” என்றான் திருப்பதி. “என்ன மாற்றிப் பேசுறேன்?” என்றாள் ருக்கு. “இல்ல, பொதுவா பெண்களுக்கு மீசைன்னா பிடிக்காது, பயப்படுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்” என்று இழுத்தான் அவன். “அது எனக்குத் தெரியாது. ஆனா, பயத்தைப் பற்றி பொதுவா ஒரு கான்செப்ட் இருக்கு! ‘பயப்படுறத கபக்குன்னு தொட்டுட்டா, பொசுக்குன்னாயிடும்!’ என்பாக! எனக்கு மீசை பிடிக்கும்!

ஸ்பெஷலி திருப்பதி மீசை!” என்று அவள் சொல்ல, அவள் அம்மா நமுட்டு சிரிப்பு சிரித்தாள். “ஸோ, உங்களுக்கு மீசை வைத்த திருப்பதியைத்தான் பிடிக்கும்?” “எஸ்…!” என்று அதற்கு அழுத்தமும் தந்தாள். அவன், அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்தப்படி, “ருக்கு….,பிளீவ் மி  நான்தான் அவன்!” என்றான்.

அந்நேரம் அவளது அப்பா உள்ளே வந்தவர், இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கண்டு, பேசாது சுவற்றோரமாக நின்றுவிட்டார். பின்னாடியே, பக்கத்து வீட்டு பாயும், அவரைத் தொடர்ந்து லண்டனும் வந்தார். வாசலில் திபு திபுன்னு கூட்டம். பிரஸ்காரர்கள்கூட வந்திருப்பதாக பேசிக் கொண்டார்கள்! “டி.வி. மீடியாவும் கூடவே வந்திருக்கு!” என்றார் ஒருவர். “இந்த சம்பவத்தை லைவா காமிக்கிறோனம்னு ‘ஆஜ்தக்’காரங்க பர்மிஷன் கேட்கிறாங்க!”ன்னு இன்னொருவரின் குரல்! பக்கத்து வீட்டு பாய் திருப்பதியைப் பார்த்து, “க்யா திருப்பதி..?” என்றார். “மை சன் , உன்ன நல்லவன்ல நினைத்தேன்! இப்போ என்னன்னமோ சொல்றாங்களே சன்!” யென கோபம் தொனிக்க லண்டன் கேட்டார்!

அவன் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. “ருக்கு, ப்ளீவ் மீ, நான்தான் அவன்! மீசையைப் பார்த்து நீ பயப்படுவதா நெனச்சி அத செரைச்சிட்டு வந்தேன்.” என்றான்! “நான் அவனில்லைன்னு சொன்னது?” எனக் கேட்டாள் ருக்கு. “உண்மையை சொல்ல வெட்கப்பட்டு, டபுள் ஆக்ட் எடுத்தாச்சு. நான் அவனில்லைன்னு சொல்றத தவிர வேறு வழி?” என்றான். சமையல் கட்டிலிருந்து சப்தம் வந்தது, “போதும் உள்ளே வா… ருக்கு” “இதோ வரேன் மம்மி…” “நிஜத்த சொன்னதுக்கு தேங்ஸ்! போயிட்டு… என் திருப்பதியா வாங்க!” “மீசையோடவா?” “ம்,,,” “யோசனைப் பண்ணுங்க ருக்கு, குறைஞ்சது ஒரு மாசமாவது ஆகுமே!” என்றான் பாவமாக. “மேரா பேட்டா அச்சா!” என்று ருக்குவிடம் பாய் கூற, “ஐஸா கி!” என்றான் திருப்பதி. பாய் அவனை கட்டித்தழுவி சிரிக்க, எல்லோரும் சிரித்தார்கள், ருக்கு சிரித்தபடி உள்ளே ஓடினாள். மீடியாக்காரர்கள் ஒருமித்த குரலில்,”பொண்ண வெளியே அனுப்புங்க, ஒரு ஷாட் எடுத்துக்கனும்!” என்றார்கள்.

**

நன்றி : தாஜ் / தமிழ்ப்பூக்கள்

E-Mail : satajdeen@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s