அறியாதது அறிந்த அப்துல்லா இப்னு உமர் (ரலி)

செல்லமகன் நதீமுக்கு…

வாப்பாவும் மகனும் சேர்ந்து இதுபோல் வயலின் வாசிக்கலாம்; வாழ்வை புரட்டிப்போடும் ‘சஃபர்’ மட்டும் செய்யக்கூடாது! நாளை மறுநாள் வரப்போகும் உனது 17ஆம் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள். இஸ்லாத்தின் இரண்டாம் கலீஃபாவான உமர் (ரலி) அவர்களின் மதநல்லிணக்க வழிமுறை பற்றி சென்றமுறை உனக்குச் சொன்னேன். இந்தமுறை அவர்களின் அறிவார்ந்த மகனார் அப்துல்லா இப்னு உமர் (ரலி) பற்றி சொல்லப் போகிறேன். ‘The Good One, son of the Good One’. அவர்களைப் போல் பெருமானாரின் அடிச்சுவட்டை அட்சரம் பிசகாமல் பின்பற்றியவர்கள் யாரும் இருக்க முடியாது. அன்னை ஆயிஷா நாயகத்தின் கூற்று இது. அதுமட்டுமல்ல , அப்துல்லா இப்னு உமர் அவர்கள் மிகச்சிறந்த நீதிமான். எப்போதும் ஏழைகளுக்கு உதவியவர். கண்ணியத்தின் இருப்பிடம். அடக்கத்தின் உறைவிடம். பேரறிவாளராக இருந்தும் கொஞ்சமும் பெருமை கொள்ளாதவர். எனவே நாம் பின்பற்றவேண்டிய மகத்தான ஞானி. ஒரேயொரு சம்பவம் சொல்கிறேன். மதவெறி இல்லாது வாழ்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தன் நிறைகுறைகளை அறிந்து இறைவனின் நேசத்தைப் பெறுவது என்று எடுத்துக்காட்டும் சம்பவம்.

ஒரு சமயம் அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்களை ஒரு மனிதர் அணுகி ஏதோ ஒரு விஷயம் பற்றிக் கேட்டார். ‘நீங்கள் கேட்டதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே..’ என்று உண்மையைச் சொன்ன அப்துல்லா இப்னு உமர் (ரலி) , அந்த மனிதர் போன பிறகு சந்தோஷம் தாங்காமல் கைகளைத் தட்டிக்கொண்டு தனக்குள் சொல்லிக்கொண்டார்களாம் : ‘உமரின் மகனிடம் – அவனுக்குத் தெரியாத ஒரு விஷயம் பற்றி – கேட்கப்பட்டபோது அவன் தனக்குத் தெரியாது என்றே சொன்னான்!’

சமயம் கிடைக்கும்போது  (கண்டிப்பாக +2 பரீட்சை முடிந்தபிறகு!) இங்கே சென்று அவர்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்.

பிறந்த நாள் முத்தங்கள்.

ஆபி வாப்பா

6 பின்னூட்டங்கள்

 1. 18/02/2010 இல் 16:36

  அன்புள்ள ஆபிதீன், நதீமுக்கு 17 வயதாகப்போகிறது, அல்லது ஆகிவிட்டது என்ற தகவல் கொஞ்சம் எனக்கு ஆச்சரியமூட்டுகிறது. அதே சமயம், இவ்வளவு காலம் குடும்பத்தைப் பிரிந்து இருக்கும் வேதனை பற்றியும் சொல்லாமல் சொல்கிறது. இந்த விஷயத்தில் உமக்கு அறிவும் துணிச்சலும் போதாது என்றே நினைக்கிறேன். நீர் நினைத்திருந்தால், இந்தியாவிலேயே நிச்சயமாக ரோட்டி, கப்டா அவ்ர் மகானை உம் குடும்பத்துக்குக் கொடுத்திருக்க முடியும்.

  இல்லையெனில் இப்படி கட்டுரைகள்தான் எழுதிக் கொண்டிருக்க முடியும்.

  கூடிய விரைவில் ஊரில் செட்டில் ஆகும் வழியைப் பாரும். அது பற்றி யோசியும். வழி பிறக்கும்.

  வேதனையுடன்
  ரஃபி

 2. Abdul Qaiyum said,

  18/02/2010 இல் 16:47

  பண்டிதர் ஜவஹர்லால் நேரு 1928-ஆம் ஆண்டு மஸ்ஸூரியில் இருந்த தனது 10 வயது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் “Letters to Indira” என்ற தலைப்பில் அழியாத காவியம் ஆகிவிட்டது.

  நீங்களும் ரோஜாவை வைத்துக் கொண்டு பெரிய ஆளாக ஆகிவிட்டால் உங்களுடைய இந்தக் கடிதங்களும் “Aaabi Vaappa’s Letter to his son” என்று பிரபலமாகி பெரும் தொகை ராயல்டியும் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது.

 3. 20/02/2010 இல் 14:46

  அன்பு ஆபிதீனுக்கு,

  உங்கள் செல்ல மகனின் 17 வது பிறந்த நாளுக்கு நீங்கள் எழுதிய பாசமிக்க கடிதம் கண்டு மகிழ்ச்சி. உங்கள் ரெண்டு பேருடைய போட்டோவையும் வைத்து பார்க்கும் போது நீங்களே 20 வயது பையன் மாதிரி தானிருக்கிறீர்கள்.

  ரபி சொல்வது போல் -இந்த விஷயத்தில் உமக்கு அறிவும் துணிச்சலும் போதாது- என்றால் நீர் ஏன் உமது மனைவியையும் பிள்ளைகளையும் உம்முடனே அழைத்துக்கொள்ள கூடாது. மாத்தி யோசியும்.

  நினைவிருக்கா நாமெல்லாம் மனைவியின் குரல் கேட்கவென்று தொலைபேசி செலவழித்த காலங்கள் என்று ஒன்று உண்டு. அந்த செலவை இங்கு வைத்து சமாளித்து கொள்ளுமே. எல்லாம் முடிந்தா போய் சேர்ந்து வாழனும்.

  நதீம் எத்தனாவது படிக்கிறார். அன்பு மகனுக்கு செல்ல முத்தங்களுடன் பாசமிகு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  அப்துல் காதர்
  தம்மாம்-சவுதி அரேபியா

 4. 21/02/2010 இல் 05:51

  ரஃபி, கய்யூம், காதருக்கு நன்றிகள். ‘ஏன் முடியவில்லை?’ என்பதைத்தான் இத்தனைகாலம் சஃபர் கதைகளாக பல வடிவில் எழுதிக்கொண்டிருக்கிறேன். ‘முடிந்தது’ என்று எழுத முயற்சிக்கிறேன். துஆ செய்யுங்கள்.

 5. தாஜ் said,

  23/02/2010 இல் 07:32

  அன்புள்ள நதீம்….

  உன்னை வாழ்த்த
  தாமதித்து விட்டேன்.

  யாருடைய புத்திமதியும்
  உனக்கு வேண்டாம்.

  நீ
  இந்த ஜனரேஸனின் மாணவன்.
  படிப்பில் இருந்து…
  சம்பாதியம் வரை..
  எங்கள் காலத்து
  சபிக்கப்பட்டவர்களைவிட
  நீ
  நிறைய அறிந்திருக்க வாய்புண்டு.

  எல்லா வெற்றிக்கும்
  வானே எல்லை.
  உனக்கு
  நீதான் எல்லாம்.

  வாழ்த்துக்கள்.
  – தாஜ்

 6. 20/07/2010 இல் 10:40

  //வாப்பாவும் மகனும் சேர்ந்து இதுபோல் வயலின் வாசிக்கலாம்; வாழ்வை புரட்டிப்போடும் ‘சஃபர்’ மட்டும் செய்யக்கூடாது!//

  சரியாகச் சொன்னீர்கள் ஆபிதீன் நானா!

  இந்தப் பாழாய்ப்போன “ஸஃபர்” எமது தலைமுறையோடு தொலைந்து போகட்டும்; இனி வரும் தலைமுறையாவது சொந்த-பந்தங்களோடு இருக்க ஆவன செய்யட்டும்!

  எழுத்தோடு நிறுத்திவிடாமல், களத்தில் இறங்கி அதற்கான வழிவகைகளை செய்துகொடுப்போம் நாம்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s