திரும்பத்…பம்ருதி திருப்பதி!! – தாஜ்

‘மத்தவங்க எழுதுனத போட்டுக்கிட்டே இருந்தா எப்படி? நீயும் எதாச்சும் எழுதுய்யா, படிச்சி நாளாச்சி..’ என்று சொன்ன தாஜ் , கையோடு ஒரு கதையையும் அனுப்பி வைத்தார்! போடனுமாம். பாடகி ****ஐ போடனும் என்று நினைத்துக்கொண்டிருந்தவன் முடிவை மாற்றிக்கொண்டேன். இதோ அந்தக் கதை. இது ஆரம்பம்தான். மற்ற பகுதிகள் பிறகு வருமாம். c  o   m   i   n   g     s  o  o   n என்று போடச் சொன்னார். கதை ஜாலியா இருக்கு. நகைச்சுவை நன்றாக வரும் அவருக்கு. ‘நீங்க எழுதச் சொல்லுறீங்க.. என் பொண்டாட்டி வாழக்கா கேக்குறா!’ என்றவர். படிங்க. நானும் எதாவது இங்கு எழுதவேண்டும். ஆனால் எழுதவா விடுகிறது அரபு நாட்டு வாழ்க்கை?

திரும்பத்.. பம்ருதி திரும்ப சஃபர்…

**

கவிஞர் தாஜ்

திரும்பத்… பம்ருதி தி  ரு  ப்  ப  தி  !!
தாஜ்

**

“பேரு ருக்குமணி. ருக்கு.. ருக்குன்னு செல்லமா கூப்பிடுறாங்க. தகப்பனாருக்கு எல்.ஐ.சி.ல வேலை. பேரு பழனி, கொஞ்சம் குள்ளம். அக்கம் பக்கமெல்லாம் அவரை ஜப்பான் என்கிறாங்க. அப்படி சொன்னாதான் அவரை எல்லோருக்கும் விளங்குது! பொண்ணோட அம்மா நெடுநெடுன்னு சுத்தபத்தமா நம்ம பக்கத்துக்காரங்க மாதிரி இருக்காங்க! பேரு அகிலா. வெளுத்த நீலத்துல வீட்டு வெளிசுவத்துக்கு வர்ணம்! வாசஅடி இடது பக்கமா தழைச்ச முருங்க மரம். வீட்டுக்கு எதிர்ல மூணாவது குறுக்குத் தெரு! தெருக் குத்தலுக்குன்னு காம்பௌண்ட்ல பிள்ளையார். கவனம்பா.”

**

“இதோ பாருடா திருப்பதி, உனக்கு பொண்ணு தேடியே பாதி உடம்பா போயிட்டேன். இந்த பொண்ணேயும் வேணானுட்டேயோ, இப்போதைக்கு உனக்கு கல்யாணம் நடக்குமுன்னு தோணல!”

**

“சரி, தாம்பரம் கிழக்குல பார்த்த பொண்ணுக்கென்ன? அவளும் உன் டிகிரிதான்!” “அவளுக்கு இடுப்பு அநியாயத்துக்குப் பெருசும்மா,  ராஜஸ்தானிங்க மாதிரி!” “பெரிசா இருந்தா என்னடா? அதுபாட்டுக்கு இருந்துட்டுப் போவுது. அதுக்காக…. வேணான்றதா? அரபு நாட்டுக்கு போய் வந்துகிட்டு இருக்கிற ஒருத்தன், அந்த இடுப்புத்தான் எடுப்பா இருக்குன்னு அவள கல்யாணம் செய்துகிட்டதா கேள்வி!  ம்… நீ கொடுத்து வைக்கல!”

**

“இந்தப் பொண்ணு நாம பார்த்த பொண்ணுங்க எல்லாத்தையும் விட லெட்சனமா அம்சமா இருக்கா! ஜாதகமும் பிசிறில்லாம பத்துக்குப் பத்தும் பொருந்துது! இவ மருமகளா நம்ம குடும்பத்துக்கு வந்தா, ஐஸ்வரியம் குவியுமுன்னு ஜோசியரும் சொல்றாரு! நீ நல்லா இருந்தா..கண்ணுக்கு அழகு!”

**

தில்லை அந்த செக்ஸனில் போர்மேன். இரவில் தூங்கப் போகும் முன் அவன் பிதற்றும் ‘அழகான பொண்ணேப் பார்த்தா… அவளோடு படுக்கனுன்னு தோணுதே ஏன்?’ ரக அசல்  பிதற்றல்களை திருப்பதியால் சகித்துக் கொள்ளவே முடியாது. போதாதென்று, அவனது காதல் அழிச்சாட்டியங்களுக்கும் காது கொடுக்க வேண்டும். இழுத்துப் போர்த்திக் கொண்டானோ.. அவ்வளவுதான்!

**

“இல்லடா நான் ஊர் போயாகனும். உன் தங்கச்சி பவானி ஒரு மாதிரியா ஆயிட்டுவரா! ஜிமுஜிமுன்னு மினுமினுப்பு கூடிக்கிட்டு இருக்கு! எப்ப வேணுமானாலும் அவள் உட்காரலாம்! நான் கிட்டேயே இருக்க வேண்டிய நேரம்! இல்லேன்னா, ஏடாகூடமா எதாவது ஆயிடும்” “பவானி இப்பத்தானேம்மா ஏழாவது படிக்கிறா!”

**

“திருப்பதி… கிட்டக்க வா, தில்லைய பார்க்கிறதுக்கு ஜைஜாண்டிக்கா, நல்லப் பிள்ளையாவும் தெரியிறான்! உன்னை விட, சம்பளமும் அதிகம்னு வேற சொல்லியிருக்கே….” “அதனால…?” “பவானிக்கு பொருந்தி வருவான்னு தோணுது! பேசிப்பாரேன்டா” “அம்மா…. உனக்கு அறிவே கிடையாது. முதல்ல கிளம்பு.”

**

1st November 2009
ஞாயிற்று கிழமை.
02.30 pm

**

“எதிர்லெ தெரியுறது மூணாவது குறுக்கு ரோடு தானே?”
“நோ, இது ஷெகண்ட்! இதோ பாருப்பா, வாசல் கேட்ல, தெருக் குத்தலுக்கு வேளாங்கண்ணி மாதா! ஓகே… என்ன சங்கதி சொல்லு.”
“இல்ல…, நான் இங்க பொண்ணுப் பார்க்க வந்தேன்”
“ஓ… அதான் கன்ஃப்யூஸ்! நவ் ஐ அண்டர்ஸ்டாண்ட்! மோனிகா…இங்கே வா, ஒரு பையன் வந்திருக்கான்”
“எஸ்… பப்பா…”
“ஆர் யூ ரெடி ஃபார் மேரேஜ்?”
“நோ… பப்பா. இட்ஸ் ஓல்ட் ஃபேஷன்!”
“ஸாரி தம்பி, மை டாட்டர் ஈஸ் ஸம்திங் டிஃபரண்ட்!”

**

“இந்த தெருவுல எல்லா பாஷை பேசுறவங்களும் இருக்காங்க போலிருக்கே பாய்!”
“தெரு கடைசில இரண்டு கொரியன்காரன் கூட இருக்கிறான்! ஹுண்டாயில வேல! அதுக்கும் எதிர்லேயே அதே ஹுண்டாயில வேலை பார்க்கிற மலேசிய சீனக்காரன் குடும்பம் இருக்கு. மலேசிய தமிழ்ப் பொண்ணத்தான் நிக்காஹ் பண்ணியிருக்கான். பெரிய ஐயப்பன் பக்தன்! பித்துக்குளி முருகதாசு ‘கானா’லாம் பாடி கலக்கிட்டு இருக்கான்!. ‘தமிழ்ப் பேசும் சீனன்! உளவாளியா இவன்?’னு ஒரு மாசத்திற்கு முன்னாடிகூட நக்கீரன்ல செய்தி போட்டானேப்பா! நீ விசாரிக்கிற ஜப்பான் பாய் பக்கத்து வீடுதான். 31-A”

**

“குருவியா… பறந்துட்டு வர வேலையா? புரியலிங்கலே!”
“இந்த பேஜார் புடிச்ச வேலைப் பற்றி எனக்கும்தான் புரியலை! பத்து பாஸ்போர்ட்ட வைச்சிகிட்டு மாரடிக்கிறேன்! ஒரு மாசம் காசு பார்த்தா…. ஒரு மாசம் ஜெயில பார்க்க வேண்டியிருக்கு! அஞ்சு வேளையும் நமாஸ் பண்ணுறேன்! ம்… என்ன செய்ய? அப்பவே ஒழுங்கா ஸ்கூலுக்கு போயி, நானும் உன் படிப்ப படிச்சிருந்தேனா இன்னைக்கி உட்காந்த இடத்துல சம்பாதிச்சிருக்கலாம்! திருப்பதி.., அல்லா நம்மள கண்திறந்துப் பார்க்கலைப்பா! எட்டாங்கிளாஸ் போதும்னுட்டான்!”
“பாய்… அது என்ன அஞ்சு வேளை தமாஷ் பண்றேங்கிறீங்க?”
“அது தமாஷ் இல்லப்பா… ‘நமாஸ்’. பிரேயர் என்பாங்களே அது!
“ஸாரி பாய்…”
“பரவாயில்லை பேட்டா… நம்ம ஆம்பூர் டமில், டமில்காரங்களுக்கு புரியாதுதாப்பா!”

**

“வாழைக்கா வாங்கியாந்திகளா?” “ம்… வாங்கியாறலைன்னா விடுவியா என்ன? ரெண்டு நாளைக்கு முன்னாடி வாங்யாந்த வாழைக்கா என்னச்சு?” “அது முனை பழுத்துப் போயிடுச்சிங்க. பஜ்ஜிக்கு சரியா வராது. சாமான்களையெல்லாம் நான் சரிபார்த்துக்கிறேன், போயி வந்திருக்கும் மாப்பிள்ளை பையன்ட்டெ பேசிட்டு இருங்க.”

**

“நல்லா கேட்டுக்கங்க, எனக்கு நேரம் இல்லை. மாப்பிள்ளைப் பையன் வறார். இப்ப நான் சொல்லப் போறது நீயூ ஸ்கீம்! உதாரணமா நீங்க மூணு லட்சத்துக்கு பாலிசி எடுத்துக்கிறீங்கன்னு வைங்க, ஆறு மாதத்திற்கு பதினைந்தாயிரம் பிரிமியம் கட்டனும். வருஷத்திற்கு இரண்டுதரம். மொத இரண்டு பிரிமியத்தை உங்களுக்காக நானே கட்டிடுவேன். அப்புறம் நீங்க அதிலேயே லோன் எடுத்தே கட்ட தொடங்கிடலாம்! இந்த ஸ்கீம், உங்களுக்கு லாபகரமானது! ஈசி அண்ட் கம்ஃபர்டபிள்! என்ன, நான் சொல்றது ஏதாவது புரியுதா?”

**

மாப்பிள்ளைப் பையனைப் பார்க்க வந்திருந்த எதிர் வீட்டு அம்மா, நேரே சமையல்கட்டுக்குப் போய்… “அம்மாவும் மொவளும் ஏன்டீ இப்படி சிரிக்கிறீங்க? பொண்ண மறுபடியும் பார்க்க ஆசைப்படுறான் புள்ள! அதைச் சொல்ல வெட்கப்பட்டுகிட்டு மறுபடியும் ‘காப்பி’ங்கிறான்! புரிஞ்சிகிட்டு கொடுத்தனுப்புவியா…”

**

ருக்கு காப்ஃபி எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்த போது, அங்கே திருப்பதி இல்லை. அவளது அப்பா தினமணியில் கவிழ்ந்திருந்தார். “எங்க டாடி அவரு?” “பையன் இங்கதானே நின்னான்!” வாசல்வரை போய் சுற்றும் முற்றும் பார்த்து திரும்பி வந்தவர் உதட்டைப் பிதுக்கியபடி, “ஸம் திங் ராங்…!” என்றார்.

**

1st November 2009
ஞாயிற்று கிழமை.
04.45 pm

“ஸார்……”

**

நன்றி : தாஜ் / தமிழ்ப்பூக்கள் | E-Mail : satajdeen@gmail.com

5 பின்னூட்டங்கள்

 1. Taj said,

  08/02/2010 இல் 12:44

  ஆபிதீனை நான் எழுதச் சொன்னது வாஸ்தவம்.
  அவரது மொழி அவரே அறியாத அற்ப்புதம்.
  இப்போது, அவர் பக்கங்களில் எவர் எழுதுகிறபோதும்
  முன் குறிப்பு எழுதுகிறாரே அந்த எழுத்தை அல்ல நான் குறிப்பிடுவது.
  இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்
  அவரது ‘கடை’ படித்து நான் கவிழ்ந்தேன் பாருங்கள்… அதை!!

  நான் எழுதச் சொன்னதாக குறிப்பிட்டு இருக்கிறார் சரி.
  எது குறித்து என்று சொன்னாரா என்றால் இல்லை!

  வாசகர்களுக்கு தெரியுமோ என்னவோ….
  நாகூர் ஆன்மீகத்திற்கு பேர்போன மாதிரியே
  இசைக்கும் பேர் போன ஸ்தலம்.
  இசையின் நாடி பிடித்து அறியும்
  பல வித்தகர்களை நான் அறிவேன்!
  இந்திய இசைகள் பலவற்றின்
  துடிப்புகள் அவர்களுக்கு அத்துப்படி.
  அரபிய, மேலைய, கீழைய இசைகளும்
  தெரிந்தவர்களாக
  அவர்கள் தங்களை வளர்த்து கொண்டு
  இருப்பதையும் அறிவேன்!
  சுருக்கமாகச் சொன்னால்
  அவர்களில் ஒருவர் நம் ஆபிதீன்!!
  அதற்காக அவர் தன் வாழ்வின்
  ஒரு பகுதியை காவு தந்ததையும் அறிவேன்.

  இன்றைக்கு ரஹ்மான், இசைக்காக
  உலக அளவிலான பல பட்டங்களை
  பெற்றுக் கொண்டிருக்கிறார்…
  அவர் அதற்கு எந்த அளவில் சரி என அறிய
  என்னை மாதிரி இசை ஏழைகள்
  ஆபிதீனை கேள்விகளோடு பார்ப்பது
  சரியென்றே நினைக்கிறேன்.

  அப்படித்தான் அவரைப் பார்த்து…
  எழுதுங்க தலைவரே என்றேன்.
  மாட்டேன் என்கிறார்!
  மாறாய் காரணங்கள் எழுதுகிறார்.
  காரணங்கள் தாகத்தை ஆற்றுமாயென்ன?
  சொல்லுங்கள் வாசகர்களே
  யாருக்கு வேணும் காரணங்கள்.
  இதைப் படிக்கும் யாராவது எனக்காக
  அவருக்கு ஓர் மெயில் எழுதுங்கள்.
  முதலில் எழுதும் வாகருக்கு
  நிலவில 60க்கு 40 அடியில் ஓர் மனை வாங்கி
  என் செலவிலேயே பட்டாவும் செய்து தருகிறேன்.
  – தாஜ்

 2. ஜெயக்குமார் said,

  08/02/2010 இல் 13:47

  சரி,சரி, கதை எங்க?

 3. 09/02/2010 இல் 06:45

  //நிலவில 60க்கு 40 அடியில் ஓர் மனை வாங்கி..//
  ‘TajWin’ ரியல் எஸ்டேட் வியாபாரம் நிலவு வரைக்கும் போயிடிச்சா? கம்பெனி விளம்பர போர்டில் சானியாமிர்சாவை நீங்கள் வைத்தபோதே நினைத்தேன். வாழ்க! அதுபோகட்டும், ஜெயக்குமாருக்கு சீக்கிரம் பதில் சொல்லுங்க தாஜ் சார்.

 4. M ABDUL KHADER said,

  10/02/2010 இல் 15:19

  //அப்படித்தான் அவரைப் பார்த்து…எழுதுங்க தலைவரே என்றேன்.
  மாட்டேன் என்கிறார்! மாறாய் காரணங்கள் எழுதுகிறார்//

  Taj sir, intha payyanai (abedheenai than) vidatheergal, ippadi than dabaippar, eppadiyavathu amukkungal. muttaiyavathu kidaikkum.
  anbudan
  M A KHADER

 5. தாஜ் said,

  13/02/2010 இல் 14:17

  அன்புடன்…
  காதர்

  நம்ம ஆபிதீனின் உயரம் நமக்குத் தெரியும்!
  அவரது எழுத்துக்கு இன்றுவரை உரிய இடம்
  கிடைத்ததா? என்றால்…
  இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
  தவிர, அவர் எழுத்து களவாடப் பட்டதில்,
  சமூக கோபமும்/
  தொடர்ந்து எழுத்துலகின் மீது கோபமும்/
  பிறகு எல்லாவற்றின் மீது கோபமுமாக….
  கடைசி கடைசியாக…
  ‘எதிலும் அர்த்தமில்லை வாதியாக’
  வழ்கிறார்.
  அதனால்தான் என்னவோ
  நானும் நீங்களும்
  இப்படி இன்னும் பலரும்
  வைக்கும் கோரிக்கைகள்
  அர்த்தமற்று விடுகிறது.
  என்ன செய்ய?
  காலம் எல்லா மனிதர்களையும்
  கசக்கித்தான் பிழிகிறது!
  நம்புங்கள் ஆபிதீன் என்றால்…
  யோசிக்கிறேன் என்று
  இன்னும் ‘பிறாண்டிக் கொள்கிறார்.’

  காதர்…
  உங்களுக்கு தெரிந்து
  ஜனியூனான
  தாயத்து
  மந்திரித்து கட்டுபவர்கள்
  யாரேனும்
  இருந்தால் சொல்லுங்கள்.
  பிளீஸ்.

  – தாஜ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s