எம்.ஆர். ராதா (F.C.F)

பொட்டி பொட்டியாய் பழைய தமிழ் படங்கள் வைத்திருக்கும் பொதக்குடி நண்பரிடம் ,’ஊட்டி வரை உறவு’ கிடைத்தால் எடுத்து வையுங்கள்’ என்று சொல்லியிருந்தேன். டி.எஸ்.பாலையாவின்  ரசிகன் நான்.  ‘தில்லானா மோகனாம்பாள்’ சினிமாவில் சிவாஜி முறைக்கும் போதெல்லாம் ‘டக்’கென்று அவர் தலையைத் தொங்கப்போட்டுக் கொள்ளுவதை நினைத்துக் கொள்ளுங்கள். சிரிக்காமல் இருந்து விடுவீர்களா? ‘ஊட்டி வரை உறவு’ படத்திலும் மனுசன் விலாநோகச் சிரிக்க வைத்திருப்பார். தன் மகள்தான் கே.ஆர்.விஜயா என்று சொல்ல இயலாமல் அவர் தவிக்கும் தவிப்பு – அந்த நடுங்கும் குரலில் – பிரமாதமாக இருக்கும். அம்மாவின் ஸ்டைலான டான்ஸ் வேறு இருக்கே அதில். (ப்ரியாமணி அல்லது ஸ்வேதா மேனனைச் சொன்னால் ‘எடு வெளக்கமாற’ என்பாள் அஸ்மா. எனவே விஜயாம்மா. ரொம்ப சேஃப். அம்மா யாரு, அம்ம்ம்மா!)

தேடினேன் வந்தது..

‘உங்க ஆள் நடிச்ச படம் வந்துடிச்சி’ என்று சொன்னாரே நண்பர் என்று நேற்றிரவு வாங்கப் போனால் இது! கண்ணதாசன் தயாரித்து கதாநாயகனாக சந்திரபாபு நடித்த – ‘கவலையில்லாத மனிதன்’. படம் தயாரித்ததே பெரிய கவலையாகப் போய்விட்டது என்பாராம் கண்ணதாசன். விசுவநாதன் – ராமமூர்த்தி இசையில், ‘பிறக்கும்போதும் அழுகின்றாய்’, ‘காட்டில் மரம் உறங்கும்’, ‘சிரிக்கச் சொன்னால் சிரிப்பேன்’ போன்ற திகட்டாத பாடல்களைக் கொண்ட இந்தப் படத்தில் டி.எஸ். பாலையா இருக்கிறார்தான். ஆனால் யார் தன்னுடன் சேர்ந்து நடித்தாலும் அவர்களை ஓரம்கட்டிவிடும் ‘ஹராத்து’ ராதாவும் (பலேபாண்டியாவின் ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ பாட்டு ஒரு உதாரணம். ‘நடிகர்திலகம்’ மவுத்! யாராச்சும் யூ-டியூப் சுட்டியைக் கொடுங்கப்பா) இருந்தார்.  நான் மோகன்லாலை வியந்தால் லாலேட்டன் , ராதாவையல்லவா வியக்கிறார்! சரி, ‘கவலையில்லாத மனிதன்’ஐ எப்போதோ நான் பார்த்த ஞாபகம். அதை திரும்ப இப்போது பார்த்தபோதுதான் எம்.ஆர்.ராதாவின் படிப்பை கவனிக்க முடிந்தது.

எம்.ஆர். ராதா

நிறையதான் படித்திருக்கிறார் நம் எம்.ஆர்.ராதா.

பாக்ஸிங் பயிற்சி செய்துகொண்டிருக்கும் அண்ணன் ராதாவிடம் பட்டதாரி தம்பி சந்திரபாபுவின் அட்வைஸ் இது : ‘முதல்லெ பணக்காரனா ஆவனும்டு சொன்னே, அப்புறம் அறிவாளியாவனும்டு சொன்னே, அப்புறம் இப்ப ‘பாக்ஸர்’ ஆவனும்ங்குறே… எதுதான் உனது லட்சியம்? தனக்கா வாழாம பிறத்தியாருக்காக வாழனுமண்ணே’

‘போடா! லட்சியத்தைப் பத்தி பேசுறான். சீசனுக்கு தகுந்தபடிதாண்டா இப்ப லட்சியம். இப்ப (பாக்ஸிங்லெ)தாண்டா சீசன். இதுலெ கலைஞன் நான். பாக்ஸர் கலைஞன்!’ என்று சொல்லியபடி ராதா சந்திரபாபுவை குத்தும்போது அப்பா பாலையா ‘அடேய்.. அடேய்..’ என்று ஓடிவந்து , ‘ஏண்டா அவனை அடிக்கிறே’ என்று கேட்கிறார். எகத்தாளமாக பதில் சொல்கிறார் ராதா : ‘ஒண்ணுமில்லே ஃபாதர். என்ன நெனைச்சிக்கிட்டான் நம்மளை? நான் ஒருநாளைக்கு ஆயிரம் கொள்கையை க்ரியேட் பண்ணுறேன். இவன் வந்து என்கிட்டேயே கொள்கை பேசுறான். டேய்…’

‘ஏண்டா அவன்ட்டெ போயி கொள்கையைப்பத்தி பேசுறே?’ . சந்திரபாபுவிடம் பாலையா கடிந்துகொள்கிறார்.

‘நான் என்னப்பா சொன்னேன்? தனக்காக வாழக்கூடாது; பிறத்தியாருக்காக வாழனும். அதுலெதான் சந்தோஷம் இருக்கு’ண்டுதானே சொன்னேன்’

‘இத சொன்னியா? அது ஒண்ணு போதுமே. கர்மம்!. டேய்.. கொள்கையைப் பத்தி நான் சொல்றேண்டா’

சந்திரபாபு அவர் தோளில் நட்போடு கைபோடுகிறார்!

‘டேய்.. எடுறா கையை, எடுறா கையை! பிறத்தியாருக்காக வாழக்கூடியவனுக்கு தனக்குண்டு ஒரு வயிறு இருக்கப்படாதுடா’

ராதா (அப்பாவுக்கு ஒரு செல்லக் குத்து விட்டபடி) : ‘கரெக்ட் ஃபாதர்! கரெக்ட். நல்லா சொல்றே! ‘நம்ம ட்ராக்குக்குத்தான் வர்றே…’

‘டே அப்பா.. உன் கொள்கைக்கு நான் வரவா? என்னா ஆகும்டு தெரியிமுல்லெ? மண்சட்டியத்தாண்டா தூக்கனும், மண்சட்டிய. டேய் பசங்களா… கொள்கையைப்பத்தி எங்கிட்டே கேளுங்க. எப்படியாவது பணத்தை சம்பாத்தியம் பண்ணனும். அத அப்டியே , அப்டியே பெட்டிக்குள்ள வச்சி பூட்டனும். அதுதாண்டா கொள்கை. தெரிஞ்சிக்குங்க. ‘

‘பாடுபட்டுத் தேடி பணத்தைப் புதைத்து வைத்த கேடுகெட்ட மானிடனே கேள்..’ – அப்பாவைச் சுட்டியபடி சந்திரபாபுவின் சித்தர்பாணி பாட்டு வருகிறது.

‘நிறுத்துடா! என்னடா பாட்டுல பதில் சொல்றே? டே.. உங்களைச் சொல்லி குத்தமில்லேடா… நான் உங்கள படிக்க வச்சேன் பாரு.. அது என் மேலே முட்டாள்தனம். பெரீ…ய வக்கீல்வேலைக்கு படிச்சவரு. இவரு( ராதாவை சுட்டிக்காட்டி)..’ என்று பாலையா இழுக்கும்போது ராதா பெருமையாக தன்னைச் சொல்லிக் கொள்கிறார் தான் ஒரு ‘F.C.F’ என்று.

F.C.Fஆ? பார்த்துக்கொண்டிருந்த நான் சந்திரபாபுவோடு சேர்ந்து முழிக்கும்போதுதான் ராதாவிடமிருந்து ‘டக்’கென்று விடை வந்தது:

‘ஆமா.. Fourth Class Fail….’

அட! எனக்கு எங்க ஊர் தர்ஹாலைன் கடைக்காரர் ஹாஜித்தம்பிதான் நினைவிற்கு வந்தார். அவர்தான் ‘ஹாஜித்தம்பி (L.F.S)’ என்று விசிட்டிங் கார்டில் எல்லாம் போட்டிருப்பார். இப்போது குழம்பியபோது போலவே அப்போதும் குழம்பினேன். (எப்போதும் குழம்புவேன், அது வேறு). என்னபடிப்பு அது கேட்கவும் தயக்கம். இதுகூட தெரியவில்லையா என்று யாராவது கேட்டால் இருக்கும் கொஞ்சநஞ்ச மானமும் என்னாகிறது?

இப்போது விசாரித்தபோதுதான் தெரிந்தது. 

Lucky Fancy Store -ன் சுருக்கமாம் அது!

**

சுட்டி : எம்.ஆர்.  ராதா – விக்கிபீடியா

6 பின்னூட்டங்கள்

 1. sureshkannan said,

  12/01/2010 இல் 07:58

  //Lucky Fancy Store//

  :-))) நீங்கள் எழுதியதே “பார்த்த’ அனுபவத்தைக் கொடுத்தது.

  • 12/01/2010 இல் 09:51

   நன்றி சுரேஷ்கண்ணன். இங்கே கூட வருவீங்களா?! சந்தோஷம். நான் உங்களுடைய சினிமா விமர்சனங்களின் ரசிகன். ஆமாம், அதென்ன ‘பார்த்த’? நான் அதைமட்டும்தான் பார்த்தேன் என்று அர்த்தமா?

   • sureshkannan said,

    12/01/2010 இல் 15:05

    //இங்கே கூட வருவீங்களா?//

    என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்? நகல் செய்ய முடியாத உங்களின் பிரத்யேக நகைச்சுவையின் தொடர்ந்த வாசகன் நான்.

    //அதென்ன ‘பார்த்த’? //

    நீங்கள் பாலையா, சந்திரபாபு, எம்.ஆர்.ராதா சம்பந்தப்பட்ட காட்சிகளை விவரித்திருந்த விதம், நானே அதை வீடியோவாக பார்த்த உணர்வை ஏற்படுத்தியது.

 2. nagoori said,

  12/01/2010 இல் 08:43

  சென்ற மாதம் ராதிகாவும், சரத்குமாரும் பஹ்ரைன் வந்திருந்தார்கள். ராதிகாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரது தந்தையாரைப் பற்றிய நினைவு கூர்ந்தேன். திருச்சி சங்கிலியாண்டபுரத்தில்தான் எம்.ஆர்.ராதாவின் வீடு. தென்னங்கீற்றால் வேய்ந்த பந்தலுக்கு கீழே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது நாங்கள் நின்று வேடிக்கை பார்ப்போம். “என்ன பசங்களா! லூட்டி அடிக்க கிளம்பிட்டீங்களா?” என்று குசலம் விசாரிப்பார்.

 3. 13/01/2010 இல் 04:59

  எம்.ஆர்.ஆர் எம்.ஜி.ஆரையே ஓவர் டேக் செய்வார், ஒரு படத்துல கூட நடிப்புங்கறதே தெரியாது, அந்த நடிப்பை கம்பேர் பண்ணினா சிவாஜிட நடிப்பு கூட கிட்டே வர முடியாதுங்கறது என்னோட கருத்து.

 4. 05/09/2010 இல் 11:08

  நீயே உனக்கு என்றும் நிகரானவன் :


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s